வேண்டா வரம்




(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒட்டுக்குடியாக அந்த வீட்டுக்குப் போனபொழுது மூன்று குடித்தனங்களுக்கும் மூன்றும் வீடுகூட்டிகள் இருப்பது தெரிந்தது. பூங்காவனம் கொல்லைப்புறத்தாருக்கு வேலை செய்து வந்தாள். ராணியம்மா முன்புறத்தில் இருந்தவர்களுக்கு வேலை செய்தாள். எங்கள் வீட்டுக்கு வேண்டாவரம் வேலை செய்தாள். பெயர் மாத்திரம் விநோதம் என்று சொல்லி நிறுத்திவிட முடியாது. ஆளும் விநோதமாகத்தான் இருந்தாள். இடையன் பூச்சியைப்போல, இல்லை, பழுத்துப்போன பூவன் தாற்றைப்போல இருந்தாள். அப்படியே தூக்கிக் கூடையில் வைத்துவிடலாம்!

“உனக்கு என்ன வயசு இருக்கும்?” என்றேன்.
“ஒம்பது நூறு இருக்குமுங்க.”
“ஒன்பதா?தொண்ணூறா, ஒன்பது நூறா ?”
“தெரியாதுங்க.”
அவளுக்குத் தொண்ணூறு வயசு இருக்கலாம்; நூறும் இருக்கலாம்; மேலும் இருக்கலாம். ஒரு ஜீவனுக்கு வயசு என்பது ஏது?
“ஏன் கிழவி, உன் பெயர் என்னவென்று சொன்னாய்?”
“வேண்டாவரம் இன்னேனுங்க.”
“இது எப்பொழுது வைத்த பெயர்?”
“ஏனுங்க?”
“இல்லை, இவ்வளவு கிழவியாகி எதற்காக இருக்க வேண்டும்? வேண்டாவரமாகி ஆயுள் ஆளைக் கொல்லுகிறதே என்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறாயோ என்று பார்த்தேன்.”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. எங்க ஆயா வெச்ச பேருதாங்க. எனக்கொண்ணும் குறைச்சல் இல்லீங்க. மவராசரு, அவருமட்டும் போயிட்டாரு. மவன், மருமவள், பேத்தி எல்லாம் உண்டுங்க. கண், காது, சாமி புண்ணியத்திலே நல்லா இருக்குங்க. அப்பறம் ஓங்களைப்போல மவராசங்க வீடு இருக்கவே இருக்கு. வேறே என்னங்க? மவராசருக்கு முன்னே மஞ்சள் குங்குமத்தோடே போயிருந்தா நல்லாத்தான் இருந் திருக்கும். நிழலும் நீரும் குடுத்துவச்சமட்டும் இருந்து தானே ஆவணும்?”
அவளுடைய பேச்சில் ஆத்திரமோ அலுப்போ இல்லை. தீர்மானமான தெளிவு தொனித்தது. இருந்த போதிலும், வேண்டாவரத்தையும், அவள் வீடு கூட்டிப் பிழைக்க வேண்டிய நிலையில் இருந்ததையும் என்னால் பொருட்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
வாழ்வின் கொடுமை மனத்தில் தைத்தால்தான் ஈரம் சுரக்கும். வீட்டு நிழலில் இருக்கும் பெண்களுக்குத் தங்கள் துன்பந்தான் தெரியும். வாழ்வின் கொடுமை களைப்பற்றிய ஆராய்ச்சி தேவை இல்லை.
எனவே ஒரு நாள், கிழவியை என் மனைவி கோபித்துக் கொண்டபொழுது நான் வியப்படையவில்லை.
“இப்படித்தான் பத்துப் பாத்திரம் தேய்க்கிறதா?” “ஏனுங்க?” என்றாள் கிழவி.
“கரி அப்படியே இருக்கே!”
“இருக்காதுங்களே. செங்கல்லை இடிச்சு, சாம்ப லோடெ பெரட்டி அல்ல பாத்திரத்தை விளக்கி இருக்கிறேனுங்க.’
“இதோ பாரு, இதோ பாரு, இதோ பாரு. இங்கே என்று குண்டானைக் கொண்டுவந்து ஏழெட்டு இடங்களைக் குறிப்பிட்டுக் காட்டினாள், என் மனைவி.
கிழவி குண்டானை வாங்கிக் கண்ணருகில் கொண்டு போய், காக்காயைப்போலத் தலையைச் சாய்த்துப் பார்த்து விட்டுச் சொன்னாள்: “கரி இல்லிங்க. குண்டானிலே இருக்கிற பள்ளம்”
மனைவிக்குக் கோபம் அதிகமாகிவிட்டது.
“பள்ளமும் இல்லை, மலையும் இல்லை.உன் கண்னை வச்சுப் பார்த்துவிட்டு மறுபடியும் தேய்.’
“தேக்கறேங்க. அப்படிச் சொன்னாச் செய்யறேன்’ என்று கிழவி குண்டானை எடுத்துக்கொண்டு முற்றத் துக்குப் போய்விட்டாள். சிறிது நேரத்துக்கெல்லாம் பாத்திரத்தைத் தேய்த்துக்கொண்டு வந்து வைத்துவிட்டு ஆயாசத்துடன் கீழே உட்கார்ந்தாள். பெண்களுக்குக் கோபம் வைக்கோல் துரும்பில் நெருப்புப் பிடித்தாற் போலத்தான்; உடனே அணைந்துவிடும். என் மனைவிக்கு என்ன தோன்றிற்றோ என்னவோ, ஒரு தம்ளர் காபியைக் கொண்டுவந்து கிழவிக்குக் கொடுத்தாள். காபியைச் சாப்பிட்டுவிட்டுக் கிழவி சொன்னாள்; “பூங்காவனம், ராணியம்மா மாதிரி நான் கறார்ப் பேர்வழி இல்லிங்க. குடுக்காட்டிச் சம்மந்தி ஊட்டுக்காரங்கமாதிரி கோவிச்சுக் கிட்டுப் போக. நமக்கு அதெல்லாம் கட்டிவராதுங்க. இல்லாட்டி ஜட்ஜ ஊட்டுலே முப்பது வருசமா வேலை செய்ய முடியுங்களா?”
“பின் ஏன் அந்த வீட்டை விட்டு விட்டாய்?’ என்றாள் என் பெண்ணில் ஒருத்தி.
“அவரு பின்ஜின் வாங்கிக்கிட்டாரு. என்னைப்போல் ஒரு தோட்டக்காரனையும் நிறுத்திப்பிட்டாங்க.
“அப்பொழுது ஜட்ஜே வீடு கூட்டிக்கிறாரா? தோட்டத்துக்குத் தண்ணீர் ஊத்துகிறாரா?” என்று குறுக்குக் கேள்வி கேட்டாள்.
“தின்ன மண்ணுக்குத்தானே சோகை? அதைப்பத்தி எல்லாம் நமக்கென்ன? எனக்குப் பின் ஜின் அவரு குடுக்கணும் இங்குறீங்களா?”
நிதானமான, அழுத்தமான கோபதாப மற்ற கிழவி யின் பேச்சிலும் குரலிலும் தீயணைக்கும் மருந்துப் புகையின் நெளிவு சுளுவு நிறைந்திருந்தது.
அன்று முதல் இரண்டு மூன்று நாட்கள் கொடுத்து விட்டுப் பிறகு கொடுக்கவில்லைபோல் இருக்கிறது. கிழவி கேட்டாளாம், “ஒரு வாய் டிகாக்சன் இருந்தால் கொடுங்களேன், பால் இல்லாவிட்டால் போகிறது; மயக்கமாக வருகிறது” என்றாளாம். கிழவியின் முகம் எல்லாம் வேர்த்து வடிவதைக் கண்டு காபி கொடுத்தேன் என்றாள் என் மனைவி. எனக்கு ஆட்சேபம் இல்லை என்று சொல்லி விட்டேன். அதுமுதல் அவளுக்குக் காலையில் காபி கொடுப்பதென்ற எழுதாக்கிளவி வீட்டில் அமைந்து விட்டது.
பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக் கூடத்தில் ஒரு பாயும் தலையணையும் போட்டுப் படுத்துக் கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் ஓய்வெடுத்துக்கொள்ளும் விதம் இது.
முற்றத்தில் கிழவி பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். அவள் வேலை செய்வதைப்பற்றி ஏற்கனவே குழந்தைகள் என்னிடம் வர்ணித்திருக் கிறார்கள். கிழவிக்கு ஜலதரங்கம் வாசிக்கத் தெரியும் என்பது உனக்குத் தெரியுமா என்று பெரிய பையன் முன்பு ஒரு தரம் கேட்டபொழுது எனக்கு எதுவும் விளங்கவில்லை. இன்றைத் தினந்தான் விளங்கிற்று. ஒரு பாத்திரம் மாறி மற்றொன்று கீழே விழுந்துகொண்டோ சரிந்துகொண்டோ இருந்தது. இதனால் பலவித ஓசைகள் எழுந்தன. கிழவியின் ஜலதரங்கம் புரிந்துவிட்டது.
“கிழவி லேசுப்பட்டவள் அல்ல. அவள் மலைப் பாம்பு’ என்று என் பெண் ஒரு புதிர் போட்டாள் ஒரு நாள்.
“அப்படி என்றால்?”
“மலைப்பாம்பை உனக்குத் தெரியாதா? தெரியா தென்றால் என் புத்தகத்தைப் படித்துப் பார். என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டாள் அவள்.
எனக்கு அவள் புத்தகத்தைப் படிக்க நேரம் இல்லை. ஆனால் இன்று புத்தகத்தின் மூலத்தைக் கவனித்த பொழுது எல்லாம் தெரிந்துவிட்டது.
காலை ஏழரை மணிக்குப் பாத்திரம் தேய்க்க முற்ற தில் இறங்கிய கிழவி, சரியாகப் பத்து மணிக்குத்தான் கரை ஏறினாள்; அதாவது, அந்தப் பத்துப் பாத்திரங்களை பத்து என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டென் பது ஞாபகம் இருக்கட்டும் – அந்தப் பத்துப் பாத்திரங் களை விளக்கிக் கரையேற அவ்வளவு நேரம் பிடித்தது! மலைப்பாம்பைப் பார்த்தாகி விட்டதென்று எண்ணிக் கொண் டிருக்கும்பொழுது கிழவி கேட்டாள்.
“பத்துக் கரியோடு பத்து நிமிசத்திலே ஆச்சு இன்னு ராணியம்மாவைப்போல வேலை செய்யறதிலே என்ன புண்யமுங்க?”
ஜலதரங்கம் முடிந்த பிறகு மலைப்பாம்பு தாழ்வா ரத்தின் ஓரத்தில் வந்து சுருண்டு படுத்துக்கொண்டது.
“என்ன கிழவி, மணி பதினொன்றாச்சே: வீட்டுக்குப் போகிறதில்லையா?”
“போனாலும் ஒண்ணுதான்; போகாட்டியும் ஒண்ணு தான்’ என்று கிழவி அலட்சியமாகப் பதில் கூறினாள்.
“ஏன்?”
“மருமவ சரி இல்லிங்க. நினைச்சாச் சோறு போடுவா. இல்லாட்டிச் சொறி நாய் மாதிரி விளுந்து புடுங்குவா. போறதைவிடப் போகாமே இருக்கிறதே மேலுங்க.”
“ஆனால் காலையிலே இருந்து ஒன்றுமே சாப்பிடவில்லையா?”
“இங்கே காபி சாப்பிட்டேனே அதான்.”
“அப்பொழுது சாப்பிடுகிறாயா?”
“ஒங்க கொணத்தை நெனைச்சாலே வவுறு நெறைஞ்சு போயிடுது.”
என் அடிமனத்தை அளந்து, அகங்காரத்தை நுட்ப மான முறையில் சிகரமேற்றிய கிழவியின் தந்திரம் எனக்கு விளங்காமல் இல்லை. இருந்தாலும் பெண் தன்மை யைக் கிண்டல் செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் என் சுபாவம் சும்மா இருப்பதில்லை.
“அம்மா அப்படி இல்லையா?” என்றேன்.
அம்மா என்ற வார்த்தையைக் கேட்ட என் மனைவி சமையல்கட்டிலிருந்து கூடத்துக்கு வந்து இடுப்பில் ஒரு கையை வைத்துக்கொண்டு ஆரம்பித்தாள்.
“என்னை என்ன வையறா கிழவி?”
“அன்னபூரணிமாதிரி இருக்கீங்க. ஒங்களை வைய எனக்குப் பைத்தியமா?”
என் மனைவிக்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது.
“இது உங்கள் விஷமமா? பாவம்! கிழவிக்குத்தான் எத்தனை தொல்லை! சாப்பிடுகிறாயா கிழவி?”
கிழவி ஆட்சேபிக்கவில்லை. அது முதல் கிழவிக்கு எங்கள் வீட்டில் சாப்பாடுகூடக் கிடைக்க ஆரம்பித்து விட்டது.
சில சமயம் இங்கேயே சாப்பிடுவாள். மற்றச் சமயங் களில் எடுத்துக்கொண்டு போய்விடுவாளாம். மருமகளுடன் சண்டை என்று ஏற்பட்ட பிறகு மத்தியான்னம் வீட்டுக்குப் போக வேண்டிய அவசியம் என்ன? வெயிலில் போக வேண்டிய தேவை என்ன? சாயங்காலம் என்றால் வேலைகளைச் செய்து முடித்துவிட்டுப் படுத்துக்கொள்ளப் போகிறாள் என்று நினைக்கலாம். வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்குவதனால் மருமகளுக்கு நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடாது, தூங்குவதற்கு வீட்டுக்குப் போவது நியாயம். ஆனால் உச்சி வெயிலில் போய்விட்டு எதற்காக நடையை இரட்டிப் பாக்கிக்கொள்ள வேண்டும்? அது தான் எனக்குப் புரியவில்லை.
இப்படியே சில நாட்கள் கழிந்தன. ஒருநாள் என் மனைவி சொன்னாள்: “இந்தக் கிழவிக்கு மாத்திரம் பாசம் அதிகம்.”
“என்ன அப்படி?”
“சோறு தண்ணி போடாத போனால் மகன் என்ன, மருமகள் என்ன, பேரன் பேத்தி என்ன வேண்டிக்கிடக் கிறது? நாள் தவறாமல் வெயிலிலே வீட்டுக்குப் போய், பேரன் பேத்திகளைப் பார்க்காமல் போனால் தலை வெடிச் சுப் போகிறதாம்! சாதம் கீதங்கூட அங்கேதான் கொண்டு போறாப்போல இருக்கிறது. “நேற்றைக்கு ஒரு பழம் புடைவையைக் கொடுத்தேன், குளிர் கிளிர் இன்னாப் போத்திக்கொள்ளட்டும் இன்னு. கிழவி வழக்கம்போல் வீட்டுக்குப் போனாளாம். மருமகள் கேட்டாளாம்: ‘தினம் வீட்டை உருமத்திலே ஒரு வாட்டி, ராத்திரி ஒரு வாட்.டி வந்து பாத்தூட்டுப் போறியே, அது பறந்து போயிடுமா? இல்லாட்டி நாங்க வித்துச் சாப்பிட்டுருவமா?’ இன்னு கேட்டாளாம். கிழவி என்ன பதில் சொல்வாள்? பதில் பேசாமல் நான் கொடுத்த புடைவையை நாலா மடிச்சுப் போட்டுப்படுத்துக்கிறதற்காக உட்கார்ந்தாளாம். ‘கேக்கற துக்குப் பதில் சொல்லாமெ என்ன விறைப்பு வந்துடிச்சு? மொதலாளி ஊட்டிலே புடவை கிடைச்சுப் போன பெருமையா?’ இன்னூட்டுப் புடைவையை எடுத்து ரண்டாக் கிழிச்சு ஓட்டுமேலே எறிஞ்சுட்டாளாம். அதுக்கும் பதில் பேசாமெ கிழவி வெளியே போயிட்டா ளாம். அந்த மகாலட்சுமியை ஒரு தரம் பார்க்கணும் போல இருக்கு” என்றாள்.
“வேண்டாவரம் எத்தனையோ உலகத்தில் இருக் கிறது. அதுதான் அதிகம். இவள் மகன் என்னதான் செய்கிறானாம்?” என்றேன்.
“கேட்டால் காளி அவனைக் கிழிச்சு மாலையாகப் போட்டுக்கொண்டு விட மாட்டாளா?”
“அவன் ஒரு பக்தன்போல் இருக்கிறது. ஒரே உறவு டன் திருப்தி அடைபவன்தானே பக்தன்?”
“அந்தத் தத்துவமெல்லாம் எனக்குத் தெரியாது.எல் லாம் தலைவிதி!” என்று மூன்று விரலால் தன் தலையைத் தட்டிக் காண்பித்தாள்.
இந்தச் செய்தியைக் கேட்டது முதல் அந்த மகா லட்சுமியைப் பார்த்துப் பேசவேண்டுமென்ற விநோத மான ஆசை எனக்கும் மூண்டுவிட்டது. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண் டிருந்தேன்.
ஒரு நாள் விடுமுறை வந்தது. கிழவியின் வீட்டைப் பார்த்துவிட்டு வருவோம் என்று சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டேன். ஒரு சந்து வழியாகப் போனபொழுது ஒரு காட் சியைக் கண்டு திகைப்படைந்தேன். கிழவி ஒரு கிளப் வாசல் திண்ணையில் ஒரு காலை நீட்டிக்கொண்டு எதையோ புடைத் துக்கொண்டிருந்தாள். அவள் என்னைப் பார்க்கவில்லை. பளிச்சென்று எனக்கு ஒரு ஞாபகம் வந்தது. மத்தியான்ன வேளைகளில் ஒரு வேளை இங்கேதான் வந்து ஏதாவது தட்டு முட்டுக் காரியங்களைச் செய்கிறாளோ என்னவோ? பெரிய வேலை ஒன்றும் நிச்சயமாய்ச் செய்துவிட முடியாது. வயிற்றுக் கொடுமையுடன் வகையற்ற குடும்பமும் வேண்டாவர மாகிய தீர்க்காயுளும் சேர்ந்துவிட்டால், ஒட்டகமாக இருந்தாலன்றி வாழ்வு வேப்ப இலையாய்த்தான் இருக்கும் என்ற எண்ணம் மிதந்தது. ஒட்டகத்தின் ஞாபகம் எப் படியோ
என்னை மிருகக்காட்சிச் சாலைக்கு இழுத்துக் கொண்டு போய்விட்டது. வாழ்வில் காணும் புண்ணுக் கெல்லாம் இயற்கைதானே மருந்து? காடுதானே வைத்திய சாலை?
மறுநாள் கிழவி வீட்டுக்கு வந்தபொழுது நான் கேட் டேன் : அந்தச் சந்துக் கிளப்பில் வேலை செய்கிறாயா என்ன?”
கிழவிக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“இல்லே. நீங்க பாத்தீங்களா?”
“ஆமாம். நேற்று என்னவோ திண்ணையில் புடைத் துக்கொண் டிருந்தாயே.”
“ஆமாங்க ; எதுனாச்சும் இப்பிடிச் சில்லறை வேலைங் களும் செய்யறேன். இல்லாட்டிப் பொழைக்க முடியுங் களா?”
வாஸ்தவந்தான் என்று என் மனம் ஆமோதித்த போதிலும் மருமகளை மறந்துவிட்டாயே என்றது.
மறுநாள் கிழவியின் வீட்டுக்குப் புறப்பட்டேன். கிழவி இருக்கமாட்டாள்; மருமகளைப் போய் விசாரித் தால் அவள் கட்சியையும் கண்டுகொண்டுவிடலாம் என்ற நினைப்பு.
கிழவியின் வீட்டுவாசலண்டை போனதும் நின்று விட்டேன். பதினாலு அடிக்கு மேல் அகலம் இருக்காது; ஓட்டு வீடு. அங்கும் இங்கும் ஒடு புரண்டு கிடந்தது. எப்படி உள்ளே நுழைவது என்று யோசித்துக்கொண் டிருந்தேன். நல்ல வேளையாக வீட்டிற்குள்ளிருந்து இரண்டு பெண்கள் வாசற்புறம் வந்தார்கள். இருவருக் கும் மூன்று நான்கு வயசு வித்தியாசம் இருக்கலாம். பெரியவளுக்குப் பன்னிரண்டு வயசு இருக்கலாம். இரண்டு பேரும் ஒரே மாதிரிப் புடைவையைச் சுற்றிக் கொண்டிருந்தார்கள். கிழவிக்கு என் மனைவி கொடுத்த புடைவையை மருமகள் கிழித்துப் போட்டுவிட்டதாகச் சொன்னது ஞாபகம் வந்துவிட்டது.
வீட்டுவாசலில் ஏறி, “இதுதானே வேண்டாவரத் தின் வீடு?” என்று கேட்டேன்.
“ஆமாங்க. என்ன வேணும்? அப்பாயி ஊட்டிலே இல்லிங்களே. நீங்க யாரு?”
“இல்லாட்டிப் போகட்டும். ஒங்க அம்மாவைக் கூப்பிடேன்.”
“யார் அம்மா?”
“ஒங்கம்மாதான்.’
“எங்கம்மாவா? யாரு, எங்கம்மாவா? நீங்க ஊடு தட்டுக்கிட்டு, கேக்கறாப்போல இருக்குதே. நீங்க யாரைப் பாக்குறீங்க?’
“வேண்டாவரம் வீடுதானே இது?’
“ஆமாம்.”
“அவுங்க, ஒங்க அப்பாயிதானே?”
”ஆமாம்”
“உங்களுக்கு அம்மா இருக்குதல்ல, அதைக் கூப்பிடு.’ “எங்கம்மா இல்லீங்களே!”
“எங்கே போயிருக்கு?”
”அது செத்து அஞ்சாறு வருசமாச்சே. ஒங்களுக்குத் தெரியாதுங்களா?”
எனக்கு விவரிக்க முடியாத அதிர்ச்சி ஏற்பட்டது.
“உங்கள் அப்பா—”
“அவர்தான் பைத்தியம் பிடிச்சு எங்கேயோ ஓடிப் பூட்டாரே.”
என் அதிர்ச்சி பூகம்பம் ஆகிவிட்டது. குழந்தைகளை ஊன்றிப் பார்த்தேன். உடம்பும் முகமும் அரைப் பட்டினிக் களை. அவர்களுடன் மேலே பேச முடியவில்லை. சொல்லொணாத ஆத்திரத்தோடு வீட்டுக்குத் திரும்பி னேன். சாகப்போகிற கிழவியின் அண்டப்புளுகு இரவு முழுவதும் என் தூக்கத்தில் குறுக்கிட்டுக்கொண்டே இருந்தது.
மறுநாள் காலையில் கிழவி வழக்கம்போல் வந்தாளே ஒழிய முகத்தில் தெளிவு இல்லை. பாத்திரங்களை எடுத் துக்கொண்டு என் பக்கம் திரும்பாமல் போய்விட்டாள்.
“ஏன் கிழவி, உங்க வீட்டை நான் நேற்றுப் பார்த் தேனே” என்றேன்.
கிழவியின் முகத்தில் மறைந்திருந்த கலவரம் கொடி மின்னல் போல் தோன்றி நெளிந்து மறைந்தது. ஆனால் அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
“உன் மருமகளைக் கண்டு சண்டைப் பிடித்தேன்.”
பாத்திரங்கள் தேய்ப்பதை விட்டுவிட்டு, என் அருகில் வந்து,கூனி இருந்த உடம்புக்கு ஒரு கையால் முட்டுக் கொடுத்துக்கொண்டு கிழவி ஒரு விநாடி நின்று என்னைப் பார்த்தாள்.
“மருமவளைப் பார்த்துட்டு வந்தூட்டீங்களா? என் பேத்திங்க நேத்து ராவைக்குச் சொன் னாங்க-யாரோ ஒத்தரு என்னை உருமத்திலே வந்து விசாரிச்சாங்கன்னூட்டு. நீங்கதானா?”
“ஆமாம், ஏன் கிழவி, மகன், மருமகள் என்று என்ன என்னவோ பொய் சொல்லிவிட்டாயே; சொல்லலாமா?”
“கூடாதுதானுங்க, நீங்க மவராசராய் இருப்பீங்க. சொல்கிறேன் கேளுங்க. எங்கே அம்மாவைக்கூடக் காணும்?”
“எங்கேயாவது பக்கத்து வீட்டுக்குப் போயிருப்பாங்க.”
“அதான் பார்த்தேன். ஜட்ஜ வீட்டை விட்டதுலே யிருந்து நான் எங்கேயும் வேலை செய்யாமெத்தான் இருந் தேன். மருமவ போனதுகூடப் பெரிசாத் தோணல்லை. மவன் மூளை கலங்கி ஓடிப்பூட்டப்பறம் என்னாலே சும்மா இருக்க முடியல்லே. இந்த ரெண்டு பேத்திங்களுக்கும் சோறு போடணுமே. மருமவளும் அநாதி; நானும் அநாதி. ஊடு கூட்டிப் பிழைக்க ஆரம்பிச்சேன். ஒரு ஊட்டிலே நெசத்தைச் சொல்லி வேலை கேட்டேன்; குடுத்தாங்க. ஒரு நாள் வேலை செய்யறப்போ பாத்திரம் ஒண்ணு கைதவறி விழுந்து விரிசல் கண்டுச்சு. அம்மாவுக்கு என் மேலே கெட்ட கோபம். ‘கெயவி,இங்கே நீ வேலை செஞ்சி பேத்திங்களைக் காப்பாத்தறது போதும். தினம் ஒரு பாத்திரத்தைப் போட்டு உடைக்க இங்கே பாத்திரக் கடை இல்லை. நீ போயிட்டு வா இன்னுட்டாங்க. நான் கெஞ்சினேன். ஒழைச்சுப் பொழச்சு அதுங்களைக் காப் பாத்தித்தானே ஆகணும்? ஏதோ கைதவறிடுச்சு இன் னேன். பேத்திங்களை வேலை செய்யச் சொல்லேன் இன் னாங்க. அவ்வளவுதான். இந்தப் பேத்தீங்களைப் பாத் தீங்களே-இவுங்க வேலை செஞ்சா நாங்க பொழைக்க முடியும்? அப்பொத்தான் நெசத்தைச் சொல்லாமெ இருந்தா பாவம் கிழவின்னு இரக்கப்படுவாங்கன்னு தோணிச்சு. இந்த வயசிலே என் வேலைக்காக யாருங்க வச்சுப்பாங்க? அதிலே இருந்து இப்படிப் பொழுதை ஓட்டிக்கிட்டு வர்றேன். பெசகுதாங்க. வேறே வழி?”
பதில் சொல்ல நான் வாயைத் திறக்குமுன் என் மனைவி வெளியிலிருந்து உள்ளே நுழைந்தாள்.என்னை யும் கிழவியையும் அவநம்பிக்கையுடன் ஒரு தரம் பார்த் தாள்.
கிழவி. வீடு வாசல் பிள்ளை, குட்டி என்றால் இப் படித்தான் இருக்கும். போய்க் காரியத்தைப் பார்’ என்றேன்.
“கிழவி என்ன சொல்கிறாள்?” என்றாள் மனைவி. “எல்லாம் அவள் மருமகள் புராணந்தான்.”
மனைவி சமையற்கட்டுக்கும் கிழவி முற்றத்திற்கும் போய்விட்டார்கள். ஒட்டகத்தையும் வேப்பமரத்தையும் பற்றிய நினைப்பு என்னைப் பிடித்துக்கொண்டு விட்டது.
இதற்குப் பிறகு கிழவி ஒரு வாரந்தான் வீட்டுக்கு வேலை செய்ய வந்தாள். பூவன்தாறு உதிர்ந்துவிட்டதோ அல்லது வேறு யார் வீட்டிலாவது நுழைந்திருக்கிறதோ தெரியவில்லை.
– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |