வேண்டாத வேலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 105 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணன், சேகர், நாகராஜன், மூவரும் இப்போது ஒரு வழியாகக் காலேஜில் சேர்ந்துவிட்டார்கள். மூன்று பேருமே பி.ஏ. எகனாமிக்ஸ் எடுத்திருந்தார்கள்.

பள்ளியிலேயே மூவரும் என் சி சியில் சேர விரும்பினார்கள், ஆனால் அப்போது உயரம் போத வில்லை என்று அனுப்பிவிட்டார்கள். அவர்களை வேண்டாம் என்று சொன்ன லெப்டினன்டிடம் என்சிசியில் சேராமல் விடுவதில்லை என்று சவாலும் விட்டார்கள்.

கல்லூரியில் நுழைந்த உட னேயே என் சி சியில் சேர்ந்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்களுடைய அதிர்ஷ் டம், பி யு சிக்கு என் சி சி இல்லை யென்று சொல்லிவிட்டார்கள்.

இப்போதுதான்அவர்களுக்கு என் சி சி ரூமை அணுகும் தகுதி வாய்த்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் நோட்டீஸ் போர்டைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். ஒரு நாள்…

“என் சி சியில் சேரவிரும்பும் மாணவர்கள் இன்று மாலை 4 மணிக்கு என் சி சி ஆபீஸுக்கு வர வேண்டும்” என்ற போர்டு கண்ணன், சேகர், நாகராஜனின் கருத்தைக் கவர்ந்தது.

என் சி.சி ஆபீஸுக்கு அவர்கள் அரை மணி முன்னதாகவே (வகுப்பு முடிந்து விட்டதால்) வந்து விட்டார்கள்.

கரெக்டாக நாலு மணிக்குக் கல்லூரி மணி அடித்ததும் என் சி சி ஆபீஸுக்குக் காப்டன் வந்து சேர்ந்தார். வேறு பல மாணவர்களும் வந்திருந்தார்கள்.

கசேநா நண்பர்கள் காப்டனிடம் சென்று கேட்டபோது அவர், “போய் நோட்டீஸ் போர்டை ஒழுங்காகப் பாருங்கள்!” என்று சீறினார்.

வெறுப்புடன் நோட்டீஸ் போர்டைப் பார்த்த அவர்கள் திகைத்தார்கள். அவசரத்தில் முன்பு படித்தபோது குறிப்பு என்று ஒன்று இருந்ததையே அவர்கள் கவனிக்கவில்லை. இப்போது கூர்ந்து படித்தார்கள். அதில்

“இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மட்டும்” என்று இருந்தது.

மூவரும் முகத்தில் ‘டெவலப்பர்’ வழிய வீடு திரும்பினார்கள்.

ஒரு வாரம் கழிந்தது. கசேநா நண்பர்கள் என் சி சி தியானத்தைச் சற்று மறந்திருந்த சமயம்.

“முதலாண்டு மாணவர்கள் என்சி சி யில் சேர விரும்பினால் சேரலாம்|’

இந்த அறிக்கை அவர்கள் மனத்தை மீண்டும் என் சி சியின் பக்கம் திருப்பியது.

கண்ணனும் நாகராஜனும் ஆரம்பத்தில் ‘பிகு’ செய்து கொண்டார்கள். இறுதியில் வழக்கம் போல் சேகரின் தூண்டுதலுக்கு இணங்க என் சி சி ரூமை நோக்கி நடந்தார்கள்,

முக்கியமான சில பரிசோதனைகள் முடித்த பிறகு மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுடைய சந்தோஷத்துக்கு அளவே யில்லை. ஒரு வழியாக மூவரும் ‘கரெக்ட் சைஸ்’களின் கொடுக்கப்பட்ட ‘கிட்’களுடன் வீடு வந்தார்கள்.

என் சி சியில் சேர்ந்தாயிற்று! இனி, துணிகளை ‘வாஷ்’ செய்து ‘கஞ்சி’ தோய்த்து இஸ்திரி போடும் வேலையை லாண்டிரிக்கு விடுவதா அல்லது தாமே மேற்கொள்வதா என்று மூவரும் யோசித்தார்கள்.

“வாஷிங் அலவன்ஸ் கொடுத்தாலும் அதை வீணக்கறது நல்லதில்லே. நாமே இந்த வேலைகளைச் செஞ்சால் பணம் சேமிக்கலாம். லாண்டிரியில் கொடுத்தால் அத்தனை ணத்தையும் அவனுக்கே அல்லவா கொட்டி அழணும்?” என்று நாகராஜன் விஷ(ய)த்தைத் தொடங்கி வைத்தான்.

“நாம் இது மாதிரி வேலைக்குப் புதிசு. மேலும் இது நம்மோட சொத்து இல்லை. சர்க்காரோட சொத்து. நாம் ஜாக்கிரதையா இந்த டிரஸ்ஸை ‘ரிடர்ன்’ செய்தாகணும். அலவன்ஸ் கொடுக்கறது யூனிஃபாரம் வாஷ் பண்ணத்தானே? அதை ஏன் நாம் மிச்சம் பிடிக்கணும்?” என்று சேகர் ‘அட்வைஸ்’ கொடுத்தான்.

“போடா பொழைக்கத் தெரியாதவனே! நாமே வாஷ் செஞ்சா செலவு கொறைச்சலாத் தான் ஆகும். நமக்கு வாபம் நிச்சயம் இருக்கும். நீ வேணும்னா லாண்டிரியிலே கொடு. நாங்களே எங்க டிரஸ்ஸை வாஷ் செய்துக்கப் போறோம்!” என்றான் கண்ணன்.

“நான் அட்வைஸ் கொடுத்த தோடு சரி! உங்க கிட்டே என் யூனிஃபாரத்தைக் கொடுத்து மாட்டிக்க மாட்டேன்!” என்றான் சேகர்.

“போடா! லாண்டிரியில் கொடுத்தா முதல்லே ஏழு நாட்களில் தர்றேன் என்பான். அப்புறம் போனா மழை என்பான். பிறகு சரியாக் காயலே என்பான், இப்படியே தாட்டிடுவான்!” என்றான் கண்ணன்.

அடுத்த நாள் அவர்களுக்கு விடுமுறை. அந்த விடுமுறையை என் சிசி யூனிஃபாரத்துக்காகச் செலவிடுவது என்று தீர்மானித்தார்கள், கண்ணனும் நாகராஜனும்.

“மொதல்லே என்னென்ள வேணும்னு லிஸ்ட் கொடு. வாங்கிடலாம்!” என்றான் கண்ணன்.

“பார் சோப் 2, ஐவ்வரிசி 1 கிலோ, ராபின் ப்ளு 1 பாக்கெட்” என்று அடுக்கினான் நாகராஜன்.

எல்லாப் பொருள்களையும் வாங்கினான் கண்ணன். ஒரு கிலோ ஜவ்வரிசியைப் பெரிய அண்டாவில் போட்டு ஒரு வாளித் தண்ணீரைக் கொட்டி அடுப்பில் வைத்துக் காய்ச்சினார்கள்.

ஜவ்வரிசி சரியாக வெந்து குழைவதற்கு முன்னாலேயே அண்டாவை அடுப்பிலிருந்து இறக்கி வீட்டார்கள்.

மேற்கண்ட விஷயங்களில் சேகர் தலையிடவே யில்லை. அவன் இவர்கள் இப்படி அல்லல்படுகிற வேளையில் ‘மைக்ரோ எகனாமிக் தியரி’ படித்துக்கொண்டிருந்தான்.

உடனே உடுப்புகளை இஸ்திரி செய்து மடித்து வைத்து விட வேண்டும் என்ற அவசரத்தினால் தன் உருப்படிகளை அண்டாவிலிருந்த கொதிக்கும் ஜவ்வரிசிக் கஞ்சியில் அமிழ்த்தினான், அமிழ்த்திய வேகத்தில் கையை உதறிக்கொண்டு வெளியே எடுத்தான். ‘ஆஊ..’ என்று அலறினான். அவள் கைகள் இரண்டும் சூடு தாங்காமல் கன்றிச் சிவந்திருந்தன.

உடனே, கைகளைக் குளிர்ந்த நீரில் கழுவித் தேங்காய் எண்ணெயைத் தடவினான். சேகரின் பேச்சைக் கேட்காமல் போனது குறித்துப் பெரிதும் வருந்தினான்.

கண்ணன் விட்டுச் சென்ற ‘பணி’யை நாகராஜன் தொடர்ந்தான். ஆனால் முன் ஜாக்கிரதையாகக் கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு துணிகளை அந்தக் குச்சியினால் அண்டாவுக்குள் அமிழ்த்தினான்.

யூனிஃபாரங்கள் நநல்ல ஸ்டிஃப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்ததால் அவற்றை இரண்டு மணி நேரம் ஜவ்வரிசிக் கஞ்சியில் ஊறவைத்தான்.

யூலிஃபாரங்களை நல்ல ஸ்டிஃப்பாகப் போட்டுக்கொண்டு சென்றால் உடனே ‘கார்பொரல்’ கிரேடு வந்துவிடும் என்று கண்ணனும் நாகராஜனும் நினைத்தார்கள், பேராசைதானே?

உருப்படிகளை வெயிலில் வைத்து வீட்டு ‘ஹாய்’யாகச் சேரில் சாய்ந்து கொண்டான் நாகராஜன். சிறிது நேரங் கழித்து அவன் எழுந்திருக்க முயலும் போது அவதுடைய சட்டையை எதுவோ மாட்டி இழுந்தது.

சட்டையைச் கழற்றியபடி சேரைப் பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி. அவனுடைய ஷர்ட் சேருடன் ஒட்டிக்கொண்டிருந்தது. கண்ணன் கையைச் சுட்டுக் கொண்டு அண்டாவிலிருந்து கையை வெளியே எடுத்து உதறினான் அல்லவா? அவன் கையில் அப்பியிருந்த ஜவ்வரிசி சேரின் முதுகில் ஒட்டிக்கொண்டிருந்தது. நாகராஜன் அடுத்தாற்போல் அந்தச் சேரில் உட்கார்ந்ததால் அவன் சட்டை சேரின் முதுகோடு ஓட்டிக் கொண்டு விட்டது. பாவம்!

இந்தச் சமயத்தில் அங்கே சேகர் எழுந்து வந்தான். நடந்து கொண்டிருந்த அமர்க்கணங்களைப் பார்த்து அவனுக்குச் சிரிப்புத் தான் வந்தது. சேரில் தண்ணீரை விட்டுப் பக்குவமாக நாகராஜனின் சட்டையை அவன் மீட்டுக் கொடுத்தான்.

வெளியில் உலர்த்தியிருந்த சட்டை, பான்ட்டுகள் காய்ந்து விட்டனவா என்று பார்க்கப்போன நாகராஜனுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி! உலர்த்தப்பட்டிருந்த யூனிஃபாரங்கள் சாக்குகளைப்போல் விறைப்பாக கிரிஸ்ப்பாக இருந்தன. மேலும் இஸ்திரி போட்டால் துண்டு துண்டாக வந்து விடுவன போல் தெரிந்தன. அவ்வளவு கஞ்சி அவற்றில் ஏறியிருந்தது!

இந்த நிலையில் சேகர் அவற்றைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். தன் பேச்சைக் கேளாமல் நண்பர்கள் கூத்தடிப்பதைக் காண அவனுக்கு வெறுப்புக்கூட வந்தது.

“டேய்! இப்போ இதுக்கு என்னடா செய்யறது? வேறே யூனி ஃபாரத்துக்கு எங்கேடா போறது? இதே டைப்பில் எங்கேடா துணி கிடைக்கும்?” என்று கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள், கண்ணனும் நாகராஜனும்.

“இதுக்கெல்லாம் ஏண்டா கவலைப்படறீங்க? இதே டைப் துணி தானே வேணும்? சைதாப்பேட்டையிலே எனக்குத் தெரிஞ்ச நெசவுக்காரன் இருக்கான். அவன் கிட்டே இதே கலர்லே பாவு வாங்கி வந்து நாமே நெசவு செய்துட்டாப் போச்சு! லாபம் இல்லைன்னா என்ன பிரயோஜனம்? துணியை நெய்ததுக்கு அப்புறம் நாமே தெச்சுடலாம்! உங்க வீட்டிலேதான் மிஷின் இருக்கே! நாம் எதுக்குத் தையல்காரனுக்கு வீணாத் துட்டு அழணும்?” என்று இளக்காரமாகப் பேசிக் கொண்டே போனான் சேகர்.

கண்ணனும் நாகராஜனும் பிரமித்து விட்டார்கள், சேகர் என்ன இவ்வளவு வாருகிறானே என்று.

கண்ணன், “டேய்! அப்போ நீ சொன்னதை நாங்க கேக்கலை. இனிமே நீ சொல்றபடி நடக்கிறோம்!” என்றான்.

“அதுதான் சொல்லிட்டேனே. பொழைக்கத் தெரியணும்டா!” என்று கண்ணனின் வார்த்தைகளையே திருப்பினான் சேகர்.

“டேய், இப்போ நீ ஐடியா மன்னன்! ஐடியா கொடு!” என்றான் நாகராஜன்.

நாகராஜன் வைத்த ஐஸில் மனம் உருகிய சேகர், “இந்தத் துணிகளை எல்லாம் நன்றாகத் தண்ணீரில் நனைத்துப் பிழிஞ்சு உலர்த்திவிடு. காஞ்சதுக்கு அப்புறம் மரியாதையா லாண்டரிக்காரன் கிட்டே அர்ஜென்ட் வாஷுக்குக் கொடு. முதல் பரேட் இப்போதைக்கு இருக்கிறதாத் தோணலை!” என்று ஐடியாவைச் சொன்னான்.

அதுவரை ஐடியா இல்லாமல் இருந்த நண்பர்கள் இருவரும் ஐடியா கிடைத்ததும், “பெரிய ஐடியா மன்னர்! யாருக்கும் தெரியாததைச் சொல்லி விட்டார்! நீ கணக்கெழுதத்தான் லாயக்கு. அதுவும் நஷ்டக் கணக்கு!” என்றார்கள்.

”உங்க நஷ்டக் கணக்கு எழுத ஸி. ஏ. படிச்சவனாலும் முடியாது. எவ்வளவு நஷ்டம்! எவனாவது நல்ல ஜி. ஏ. வைப் பார்த்துக் கொண்டு வந்து விடறேன். என்னை எதிர்பார்க்காதீங்க!” என்று கோபமாய்த் தன் சைக்கிளுடன் கிளம்பினான் சேகர்.

சேகர் இப்படிச் சொல்லிவிட்டுப் போனதும் கண்ணனின் ஆத்திரம் நாகராஜன்மேல் திரும்பியது.

“முட்டாள்! உன் பேச்சைக் கேட்டு என் யூனிஃபாரமும் போச்சு!” என்று ஆரம்பித்தான். அதற்கு மேலும் அங்கிருந்தால் ஆபத்து என்று வீட்டுக்கு ‘நைஸாக’ ஓட்டம் பிடித்தான் நாகராஜன்.

கண்ணன் ஒன்றும் தோன்றாமல், சூட்டினால் கன்றிய தன் கைகளையும், அண்டா நிறைய மிச்சம் இருந்த ஜவ்வரிசிக் கஞ்சியையும், உதறிவிட்டு ஓடும் நாகராஜனையும், டேபிளிலிருந்த ‘மானிடரி தியரி, மைக்ரோ எகனாமிக் தியரி, ஹிஸ்டரி ஆப் எகனாமிக் நாட்’ புத்தகங்களையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன் பாடத்தையாவது படித்திருக்கலாம் அல்லவா?

– 01-12-1971, கண்ணன் இதழில் வெளியானது.

என்.சந்திரசேகரன் சந்திரசேகரன் (நரசிம்மன்) அவர்கள் புகழ்பெற்ற தென்னிந்திய இந்து பிராமண வழக்கறிஞர்கள் குடும்பத்தில் அரியலூரில் பிறந்தார். மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம்(1976) பெற்று சமூக விஞ்ஞானி ஆவதற்குத் தொடர்ந்தார். கல்லூரியின் சிறந்த ஆல்ரவுண்ட் மாணவருக்கான டாக்டர்.எம்.நஞ்சுண்டராவ் தங்கப் பதக்கம் வென்றார். பார்வை: நான் என்னை ஒரு தலைவர், வழிகாட்டி, ஆலோசகர், வழி கண்டுபிடிப்பாளர், பிரச்சனை தீர்வு காண்பவர், பேச்சுவார்த்தை நடத்துபவர், ஆராய்ச்சியாளர், பொருளாதார…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *