வெண் சுருட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 1,918 
 
 

அவள் பெயர் ‘மான்சி’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். குதிக்கால் உயரமான செருப்பு அணிந்திருந்தாள். அவள் போட்டிருந்தது,ஜீன்ஸ் பேண்ட்தான் என்றது அதன் நிறம். அவளும் நல்ல நிறம்தான். அவள் கண்களின் கருவிழி செம்பழுப்பு நிறத்தில் இருந்ததால் அவள் தமிழ் நாட்டு பெண் கிடையாது என உறுதிபட சொல்லிவிடலாம். அவள் பேசும் தமிழ் இந்தி கலந்து இருந்தது. சுடிதாரும்,அதன் மேல் துப்பட்டாவும், உதட்டுச் சாயமும், தன் கைவிரல்களில் நீண்ட அலைபேசியை கவ்விக் கொண்டும், வாயில் சூவிங்கம் மென்று கொண்டு நின்ற அவள் லாவகம் எந்திர இரைச்சலையும் நிறுத்திவிட்டு அவளை, வா! மகளே வா! என வரவேற்க வேண்டும் போல் துடிப்பு இருந்தது. அவள் வந்து சிறிது நேரத்திற்க்கெல்லாம் அவளின் ஏஜெண்ட் அவளை அறிமுகம் செய்துவிட்டு ஓடிப் போனான். அன்று மேற்பார்வையாளனாக பாண்டி இருந்தான்.

தன் ஆள்காட்டி விரலை நீட்டி “ஜாடு லேக்கி ஆவ்” – என்றான் பாண்டி.அவளும் சிறிதும் தயங்காமல் அவன் காட்டிய திசையில் இருந்த விளக்குமாறை எடுத்துக் கொண்டு வந்து நின்றாள்.

“ஜாடு கரோ!”-என்று சொல்லிவிட்டு எந்திரங்களுக்குள் தன்னை மறைத்துக் கொண்டான் பாண்டி. அவள் அத்தனை பெரிய தொழிற்சாலையை மனம் கோணாமல் பெருக்கி தள்ளினாள். பாண்டிக்கு அவள் மீது கோபம் இருந்தது. அதனால் தொழிற்சாலையை துப்புரவு செய்த பின் அவளை எந்திரத்தின் அருகில் நிற்க வைத்து ‘என்ன நடக்கிறது பார்’- என்று சொல்லிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க போய்விட்டான். தொழிற்சாலையை ஒரு சுற்று சுற்றிவிட்டு அவள் அருகில் வந்த போது அவள் அந்த எந்திரத்தில் வேலை செய்ய தொடங்கி இருந்தாள். பாண்டி, சிறிது நேரம் அதை கவனித்துவிட்டு போய்விட்டான்.

மறு நாள் காலையிலும் அவள் தொழிற்சாலைக்குள் வரும் போது அவளை, சுத்தமாக பெருக்கிவிடும்படி உத்தரவு பிறப்பித்தான். அவளோ எந்த கர்வமும் இல்லாமல் பெருக்கிக் கொண்டிருந்தாள். முதலாளி, உள்ளே வந்தவுடன் வாசலில் நின்று சிறிது நேரம் கவனித்துவிட்டுத்தான் அவர் அறைக்குள் போவார். மான்சி பெருக்குவதை பார்த்துவிட்டு கைதட்டி பாண்டியனை அழைத்தார். பாண்டியன் ஓடிவந்து அவர் முன் நின்றான்.

“கீழ்படிதலை சோதிக்கத்தான் கம்பனிய பெருக்க சொல்றோம். இன்னைக்கும் அந்த பொண்ணுக்கு ஏன் அந்த வேலைய கொடுத்த. மெஷின்ல வேல செய்யதான் பதினைஞ்சாயிரம் சம்பளம் தர்றேன்!” – என்று கோபமாக திட்டிவிட்டு அவர் அறைக்குள் போய் விட்டார். அவள் முன் பாண்டியை திட்டியதால் அவனுக்கு அவமானமாக இருந்தது.

உணவு உண்ணும் அறையில் முத்துராஜ் கேட்டான், “என்னடா மாப்ளே அந்த பொண்ண உனக்கு பிடிக்கலையா?”

“டேய், நான் வர்ற ரயிலுலதான் அவளும் வர்றா. ஜன்னலோரமா உக்காந்து சிகரெட் பிடிச்சிக்கிட்டு இருந்தா. முதல் நாள் நான் யாருனு அவளுக்கு தெரியாது. ஆனா, ரெண்டாவது நாள் அதே பெட்டியில என் முன்னால சிகரெட் பிடிச்சிக்கிட்டு வந்தாடா. சூப்ரவைசர்னு கூட மதிக்கல்ல அவ…!” – என்றான் பாண்டியன்.

“டேய், மாப்ளே ரயிலுல சிகரெட் பிடிக்க கூடாதுனு டி.டி.ஆர்தான் சொல்லனும்டா. நீ ஏன் சொல்ற. சரக்கே அடிக்கிறாங்கே…!”-என்றான் முத்துராஜ்.

“டேய், பொம்பள அவ. எப்படி நம்ம முன்னால…..?”-பாண்டியன்.

“டேய், நீ தமிழ் கலாசாரத்த பேசுற. அந்த பொண்ணு ஒரிசா.அவங்க ஊர்ல இது சகஜம். கம்பனிக்குள்ள ஒழுக்கத்த பாரு. அவ வெளியே எப்படி இருந்தா உனக்கு என்ன?”-முத்துராஜ்.

இருபது வருடங்களுக்கு முன்பே மான்சியின் குடும்பம் ஒடிசாவிலிருந்து தமிழ் நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்துவிட்டார்கள். அரக்கோணத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி உள்ள ‘மின்னல்’, என்ற கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில்தான் அவர்களுக்கு வேலை. குறைந்த கூலி.அதிக நேர வேலை. ஓலை குடிசைதான் அவர்கள் வீடு. மாதத்திற்கு ஒரு மூடை மைதா மாவும் அரை மூடை உருளை கிழங்கும்தான் அவர்களுக்கு தரப்படும் உணவு. கொத்தடிமை வாழ்க்கை. மான்சி அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தாள்.

நிர்வாகம் தரும் பதினைஞ்சாயிரம் சம்பளத்தில் மூவாயிரம் எடுத்துக் கொண்டு மீதி பன்னிரெண்டாயிரம்தான் அவளுக்கு கொடுப்பான் அவளுடைய ஏஜென்டு. அவன் பீகாரி. ஒவ்வொரு மாதமும் அவனுக்கு வருமானம்தான்.ஆனால், அவளுக்கு எட்டு மணி நேர வேலை இல்லை. பன்னிரெண்டு மணி நேரம் உழைக்க வேண்டும்.வளர்ந்துவிட்ட பாரதம் இன்னும் தொழிற் துறையில் குறுகிய நிலையில்தான் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் பல துறைகளும் அமைச்சர்களும் இருக்கிறார்கள்தான். அந்தந்த மாநிலத்தில் தொழிலை விரித்தி செய்து மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தர வேண்டும். உள்நாட்டு அகதிகள் போல் வந்து வேலை செய்வதால் உள்நாட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிப் போனது. படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்து வருவது போய், ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று வருபவர்களை உள்நாட்டு அகதிகள் என்று சொல்லலாம்தானே.

மான்சி தன் வீட்டிலேயே சிகரெட் குடிப்பவள்.அவள் அம்மா பீடி குடிப்பாள். அவள் பாட்டி சுருட்டு குடிப்பாள்.அவள் தந்தைக்கு புகையிலை வேண்டும். அவர்களுக்குள் எந்த பேதமும் கிடையாது.

உயர் மட்ட சாலைக்கு இணையாக இரண்டு பக்கமும் தரைச் சாலை செல்கிறது. அங்குதான் மான்சியின் தொழிற்சாலையும், அதன் அருகிலே தனியார் மருத்துவக் கல்லூரியும் உள்ளது. சிறிது தூரம் நடந்து சென்றால் ஒரு பன்னாட்டு தேநீர் விடுதியும் உள்ளது. தி போன்டா மேன் கம்பெனி என்று அதற்கு பெயர். அங்கு எப்போதும் மாலையில்தான் வியாபாரம் பரபரக்கும். ஆமாம், தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள் எல்லோரும் கூடி பேசும் இடம்தான் அது. எண்ணெயில் பக்கோடா நுரைக்கும் மணம் நாசியை துளைக்கும். அதோடு சிகரெட் புகையும் சுற்றுச் சூழலை மாசு படுத்திக் கொண்டிருக்கும். ஆண்-பெண் பேதங்களின்றி புகைத்துக் கொண்டும் கதைத்துக் கொண்டும் இருப்பார்கள்.மாணவர்கள், சொந்த ஊரில், சொந்த தெருவில், சொந்த வீட்டில் கன்னியமாக இருப்பவர்கள் பல மைல்களுக்கு அப்பால் வந்தவுடன் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பதை சிறிது நேரம் அங்கு அமர்ந்து தேநீர் சுவைத்துக் கொண்டே பார்த்தால் புரியும்.

“மச்சி, ஆட்டோவுல வந்து இறங்குறது உங்க அப்பா அம்மாதானே?” – என்றாள் சக மாணவி. “நாளைக்கிதானே வர்றேனு சொன்னாங்க!”- என்று சொல்லிக் கொண்டே திரும்பி பார்த்தவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவள் தந்தையும் தாயும்தான் ஆட்டோவுக்கு பணம் தந்து கொண்டிருந்தார்கள். தன் கையிலிருந்த சிகரெட்டை தூக்கி போட்டுவிட்டு கடைக்குள் ஓடி வாயை கொப்பளித்துவிட்டு வாசனை பாக்கை வாங்கி மென்று கொண்டவளை சக மாணவ,மாணவிகள் சிரித்து கேலி செய்தார்கள். சில நேரங்களில் இ.சிகரெட்டை தன் விரல்களில் வைத்து அபிநயம் காட்டும் பெண்பிள்ளைகளை சாலையில் விரைந்து செல்லும் வாகனங்கள் கூட நின்று வேடிக்கை பார்த்து செல்லும்.

முத்துராசு, அந்த இளம் வயதிலேயே பெண்களோடு விகற்பமில்லாமல் சரளமாக பழகுவதற்கு கற்றுக் கொண்டிருந்தான். ஆண்-பெண் உறவுகளில் காலம்காலமாக கட்டமைக்கப்பட்டுள்ள ஆண்களையே மையப்படுத்திக் கொள்ளும் ஆதிக்க பார்வைகளில் இருந்து சற்று விலகி பெண் தொழிலாளியும் தன் சக தோழியே என உணர்ந்து கொண்டான் பாண்டி. சில மாதங்களுக்குள்ளேயே பாண்டியும், முத்துராசும், மான்சியும் நல்ல நண்பர்களாக மாறியிருந்தார்கள்.அவர்கள் மூவரும் பணி முடிந்து தேநீர் விடுதியில் அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டார்கள்.அப்படி அமர்ந்து பேசும் போது சரிசமதையாக மான்சியும் அமர்ந்து பேசினாள்.ஒன்றாகவே புகைத்தார்கள்.வெண் சுருட்டை எத்தனை முறை தூக்கிப் போட்டாலும் சரியாக பிடித்துக் கொண்டது அவள் உதடுகள்.ஒரு போதும் தன் சுண்டுவிரலை இழக்கவில்லை அவள். ‘பெண் ஆட்டம்’, தொடங்கி வெகு காலம் ஆகிவிட்டது. ஆனாலும்,அவர்களின் தொடர் பேச்சு அனிச்சையாகவே நல்ல முடிவை நோக்கி நகர்ந்தது.

அன்றும் தொழிற்சாலையில் வேலை முடிந்து தேநீர் கடை முன் வந்து அமர்ந்தார்கள் பாண்டியனும் முத்துராஜ்ம். ‘சிகரெட் ‘-என்றான் முத்துராஜ். வேண்டாம் என்று சொல்லிவிட்டான் பாண்டியன். மான்சியும் அங்கு வந்து சேர்ந்தாள். அவள்தான் பாண்டிக்கும் முத்துராஜ்க்கும் சிகரெட் எடுத்துக் கொடுத்தாள். இருவரும் வாங்கிக் கொண்டார்கள். மான்சிதான் பற்றவைத்தாள். பின்பு மூவரும் கையை உயர்த்தி சத்தியம் செய்து கொண்டார்கள். “நாங்கள் இனி புகைக்க மாட்டோம்! புகைப்பதில் ஆண் பெண் பேதம் பார்க்க மாட்டோம்!”-என்று உரக்க சொன்னார்கள். புகைந்து கொண்டிருந்த மூன்று வெண்சுருட்டுகளும் வானில் வீசப்பட்டது.மத்தாப்பு சிதறல்களாக மாறி மண்ணில் விழுந்தது. முத்துராஜ்க்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு பாண்டி தன் இரு சக்கிர வாகனத்தை கிளப்பினான்.ரயிலடிக்கு. மான்சி ஓடிப் போய் பின் இருக்கையில் அமர்ந்து அவன் தோளை இறுக பற்றிக் கொண்டாள்.

“போகலாம் அண்ணா!”- என்றாள்.

– இக்கதை கல்வெட்டு பேசுகிறது மாத இதழில் மே,2025, பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *