விஷம் வைத்துக் கொல்லப்பட்ட பதினேழு ஆங்கிலேயர்கள்





காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
தமிழில்: சுகுமாரன்
நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வாடை இருந்தது என்பதைத்தான். அவர் அதை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும் யாருக்கும் புரியாது. பியூனஸ் அயர்சிலிருந்து வரும் அந்தக் கப்பலில் போர் முடிந்த பின்பு முதல்முறையாகச் சொந்த நாட்டுக்குத் திரும்பும் இத்தாலியர்கள் நிரம்பியிருந்தார்கள். எனினும் எழுபத்திரண்டாம் வயதில் உறவினர்களையும் சொந்த மண்ணையும் விட்டுக் கொந்தளிக்கும் கடலில் பதினெட்டு நாள்கள் பயணித்த அவருக்குப் பெரும் தனிமையோ பயமோ இழப்புணர்வோ எதுவும் தோன்றவில்லை.
விடியற்காலையிலிருந்தே கரை விளக்குகள் தெரிந்துகொண்டிருந்தன. பயணிகள் வழக்கத்தைவிடச் சீக்கிரமாக எழுந்திருந்தார்கள். புத்தாடைகளை அணிந்துகொண்டு கரையிறங்கியதும் நேரக்கூடிய நிச்சயமின்மைகளை யோசித்து மனம் கனத்துக்கொண்டிருந்தார்கள்.
அதனால் கப்பல் தளத்தில் அந்தக் கடைசி ஞாயிற்றுக் கிழமைக்கு மட்டும் மொத்தப் பயண நாள்களில் கிடைக்காமற்போன அசலான ஞாயிற்றுக்கிழமைத் தனம் வாய்த்திருந்தது. திருப்பலிப் பூசையில் கலந்துகொண்ட வெகு சிலரில் திருமதி புருடென்ஷியா லினெரோவும் ஒருவர். ஏறக்குறைய இரங்கலுக்குரிய உடைகள் அணிந்து கப்பலில் நடமாடிக்கொண்டிருந்த அவர் வழக்கத்துக்கு மாறாக, இன்று கெட்டியானதும் தளர்ந்ததுமான பழுப்பு நிற ஆடையை அணிந்திருந்தார். புனித பிரான்சிசைப் போல ஒரு கயிறையும் இடுப்பில் கட்டியிருந்தார். புனித யாத்திரிகருடையது போலத் தோற்றம் தராத புதிய முரட்டுத் தோல் செருப்புகளை அணிந்திருந்தார். அது ஒரு முன்னோட்டமாக இருந்தது. ரோமாபுரிக்குப் போய்ப் போப்பாண்டவரைத் தரிசிக்கக்கூடிய பயணம் தனக்கு ஆசீர்வதிக்கப்படுமானால், மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் பாதத்தை மறைக்கும் உடைகளையே அணிவேன் என்று கடவுளுக்கு அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த ஆசீர்வாதம் இப்போதே கிடைத்துவிட்டதாகவும் நினைத்தார். திருப்பலிப் பூசை முடிந்தவுடன் கரீபியக் கடலின் புயற்காற்றுகளைச் சமாளிக்கும் தைரியத்தைக் கொடுத்ததற்கு நன்றிக்கடனாகப் பரிசுத்த ஆவிக்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். ரியோஹாச்சாவில் காற்று வீசியடிக்கும் வீட்டில், இப்போதும் தன்னைப் பற்றி நினைத்துக் கனவு கண்டு உறங்கும் ஒன்பது பிள்ளைகளுக்காகவும் பதினான்கு பேரக் குழந்தைகளுக்காகவும் அவர் பிரார்த்தித்துக்கொண்டார்.
காலையுணவை முடித்துக்கொண்டு மேல்தளத்துக்குப் போனபோது கப்பல் வாழ்க்கையே மாறியிருந்தது. ஆண்டிலிசிலிருக்கும் வசீகரமான சந்தையிலிருந்து இத்தாலியர்கள் வாங்கிக் குவித்த சாமான்கள் நடன அறையில் அடுக்கப்பட்டிருந்தன. மதுவருந்தும் அறையில் பெர்னாம்-புக்கோவிலிருந்து கொண்டுவரப்பட்ட மக்காக்கஸ் குரங்கை அடைத்துவைத்திருந்த ஒரு வார்ப்பிரும்புக் கூண்டும் இருந்தது. ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தின் நேர்த்தியான காலைப்பொழுது அது. வெளிச்சம் ஒரு புனிதமான வெளிப்படுத்தல் என்று தோன்றச் செய்கிற போருக்குப் பிந்தைய அருமையான ஞாயிற்றுக்கிழமை. சலனமில்லாத நீரில் நோயாளியின் கடினமான சுவாசம்போல அந்தப் பெரிய கப்பல் நகர்ந்துகொண்டிருந்தது. அஞ்சௌ பிரபுக்களின் கோட்டை மங்கலான உருவமாக அடிவானத்தில் தெரியத் தொடங்கியது. ஆனால் கப்பல் தளத்தில் நின்றிருந்த பயணிகளிடம் தொலைவில் தெரிந்த பரிச்சய முகங்களை அடையாளம் கண்டுகொண்ட பாவனை இருந்தது. சில பயணிகள் தெளிவாகத் தென்பட முடியாதவர்களுக்கு நேராக விரல்களைச் சுட்டிக்காட்டித் தெற்கத்திய மொழிகளில் மகிழ்ச்சியுடன் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். கப்பல் பயணம் முழுவதும் எல்லாருடனும் நட்பு பாராட்டியிருந்த திருமதி புருடென்ஷியா லினெரோவுக்குத்-(பெற்றோர் நடனத்தில் பங்கேற்றிருக்கும்போது, குழந்தைகளைக் கவனித்துக்கொண்டார், கப்பலின் தலைமை அதிகாரியின் சட்டையில் பித்தானைத் தைத்துக்கொடுத்தார்) – திடீரென்று அவர்கள் எல்லாரும் அந்நியர்களாகவும் மாறிப்போனவர்களாகவும் தெரிந்தார்கள். இந்த வெப்ப மண்டலத்தில் தோன்றிய வீட்டைப் பிரிந்த ஏக்கத்திலிருந்து தப்பிக்க அவருக்கு உதவிய கூட்டுணர்வும் மானுட இதமும் மறைந்துபோயிருந்தன. கரை கண்ணில்பட்டதும் கடலுடன் தோன்றியிருந்த முடிவற்ற காதல் முடிந்துபோனது.
இத்தாலியர்களின் வாயாடித்தனம் பற்றித் திருமதி புருடென்ஷியா லினெரோவுக்கு அதிகம் தெரியாது. பிரச்சினையின் காரணம் கிடப்பது மற்றவர்களின் மனத்திலல்ல; தன்னுடைய இதயத்தில்தான் என்று நினைத்தார். சொந்த ஊருக்குத் திரும்புகிறவர்களின் மத்தியில் தான் மட்டுமே வெளிநாட்டுப் பயணி என்று நினைத்தார். ஒவ்வொரு கப்பல் பயணமும் இப்படித்தான் இருக்கும் என்றும் யோசித்தார். கப்பல் தளத்தில் கம்பிமீது சாய்ந்துகொண்டு கடலின் ஆழத்தைப் பார்த்தபடி அதில் மூழ்கி மறைந்த உலகங்களைப் பற்றி யோசித்தார். வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு வெளி நாட்டுக்காரியாக இருப்பதன் வேதனையை உணர்ந்தார். திடீரென்று பக்கத்தில் நின்றிருந்த அழகிய பெண்ணின் கூச்சல் அவரை நிலைகுலையச் செய்தது.
“அம்மா அம்மா இங்கே பாருங்கள்” என்று கடல் நீரைச் சுட்டிக்காட்டிக் கத்தினாள். அது மூழ்கி இறந்துபோன ஒருவனின் பிணம். திருமதி புருடென்ஷியா லினெரோ பார்த்தார். பிணம் மல்லாந்து கிடந்தது. நடுத்தர வயதினன். வழுக்கைத் தலை. விடியற்காலை வானத்தின் நிறத்தில் திறந்து கிடந்த சந்தோஷமான கண்கள். மாலை விருந்துக்குப் போகிறவனின் உடையணிந்திருந்தான். விலை உயர்ந்த ஷூக்களைப் போட்டிருந்தான். சூட்டில் ஒரு வாடாத கார்டேனியாப் பூ செருகியிருந்தது. வலது கையில் பரிசளிப்புத்தாள் சுற்றிய ஒரு சதுரமான பொட்டலத்தைப் பிடித்திருந்தான். வெளிறிய இடதுகை விரல்கள் டையின் முடிச்சைப் பற்றியிருந்தன. மரணவேளையில் அவனுக்குப் பற்றிக்கொள்ளக் கிடைத்தது அது மட்டுமாக இருந்திருக்கலாம்.
“ஏதாவது திருமண விருந்தில் கலந்துகொண்டிருக்கும்போது, தவறி விழுந்திருக்கலாம். கோடைக்காலங்களில் அப்படி நடப்பது இங்கே சாதாரணம்” என்று கப்பல் அதிகாரிகளில் ஒருவர் சொன்னார்.
அந்தக் காட்சி தற்காலிகமானதாக இருந்தது. ஏனெனில் அதற்குள் கப்பல் நடுக்கடலில் நுழைந்திருந்தது. தவிர துக்கந் தராத வேறு சில விஷயங்கள் பயணிகளின் கவனத்தைப் பின்னுக்கு இழுத்திருந்தன. ஆனால் திருமதி புருடென்ஷியா லினெரோ இறந்துபோன அந்த மனிதனைப் பற்றியும் அவனுடைய நீளமான கோட்டு அலைகளில் மோதிக்கொண்டிருந்ததைப் பற்றியும் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தார்.
கப்பல் துறைமுகத்துக்குள் நுழைந்ததும் உடைசலான ஒரு படகு கப்பலின் மூக்கைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோக வந்தது. யுத்தத்தில் நாசமடைந்து போயிருந்த ஏராளமான கப்பல்களின் சிதிலங்களாலும் படகுகளின் சிதிலங்களாலும் கடல் நிரம்பியிருந்தது. துருப்பிடித்துக்கொண்டிருந்த சிதைவுகளுக்கிடையில் கப்பல் நகர்ந்தபோது, தண்ணீர் எண்ணெய் வடிவமாக மாறியது. ரியோஹாச்சாவில் மதியம் இரண்டு மணிக்கு அடிக்கிற வெயிலைவிட உக்கிரமான வெப்பம். குறுகிய கால்வாயின் மறுபக்கம் நேப்பிள்ஸ் நகரம் பதினோரு மணி வெயிலில் மின்னியது. நகரத்தின் கனவுத்தோற்றமுள்ள அரண்மனைகளும் பழைய சாயமடித்த குடிசைகளும் குன்றின்மேல் நெருக்கியடித்து நிற்பது தெரிந்தது. அப்போதுதான் கலங்கிய தண்ணீரிலிருந்து சகிக்க முடியாத துர்வாடை எழுந்தது. பின்னர் தன்னுடைய வீட்டு வாசலில் நின்றபோது தான் உணர்ந்த அழுகிய நண்டுகளின் நாற்றம் அதுவென்று திருமதி புருடென்ஷியா லினெரோவுக்குப் புரிந்தது.
இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது, பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பயணிகள் படகுத்துறையில் முண்டியடித்து நின்ற கூட்டத்தில் தங்களுடைய உறவினர்களை அடையாளம் கண்டார்கள். அவர்களில் அதிகமும் நடுத்தர வயதைத் தாண்டிய பெரிய மார்பகங்கள்கொண்ட கிழவிகளாக இருந்தார்கள். இரங்கலுக்குரிய ஆடைகள் அவர்களை மூச்சுத் திணறச் செய்வனவாகத் தோன்றின. அவர்களுக்கு மிக அழகான குழந்தைகள் இருந்தார்கள். அவர்களும் எண்ணிக்கையில் அதிகம். அவர்களின் இளம் கணவர்கள் உழைப்பாளிகள்; மனைவி வாசித்த பிறகே பத்திரிகை வாசிக்கும் தொந்தரவு தராத ஜீவிகள். கடுமையான வெக்கையிலும் கனவான்களான வழக்குரைஞர்கள்போல உடையணிபவர்கள்.
திருவிழா போலிருந்த அந்த ஆரவாரத்துக்கு இடையில் பிச்சைக்காரனின் மேற்சட்டை மட்டுமே அணிந்திருந்த கிழவன் தன்னுடைய கோட்டுப் பாக்கெட்டுகளிலிருந்து ஏராளமான கோழிக்குஞ்சுகளை இரண்டு கைகளாலும் எடுத்துச் சுற்றிலும் வீசினான். நொடி நேரத்தில் அவை படகுத்துறை முழுவதும் பரவின. கீ கீ என்று கத்திக்கொண்டு பைத்தியம் பிடித்தவை போல ஓடித்திரிந்தன. அது மந்திரவித்தை என்பதனால் மனிதர்களால் மிதிபட்டும் கோழிக்குஞ்சுகளில் பெரும்பாலானவை தப்பிப்பிழைத்தன. ஆனால் அது ஒரு மந்திரவித்தை என்பது மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. வித்தைக்காரன் தன்னுடைய தொப்பியைக் கவிழ்த்துவைத்தான். ஆனால் கம்பிக்கு அப்பால் நின்றிருந்தவர்களில் ஒருவரும் அவனுக்கு ஒரு நாணயத்தைக்கூடப் போடவில்லை. தன்னைக் கௌரவப்படுத்துவதற்காகத்தான் அந்த மந்திர ஜாலம் என்று நினைத்த திருமதி புருடென்ஷியா லினெரோ அதில் வசீகரிக்கப்பட்டார். அதை ரசிக்க ஆரம்பித்தார். அதனால் படகுத்துறையையும் கப்பலையும் இணைக்கும் பாலம் எப்போது பொருத்தப்பட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை.
திடீரென்று கடற்கொள்ளைக்காரர்களின் தாக்குதல்போல ஒரு மனிதப் பிரவாகம் கரையிலிருந்து கப்பலுக்குள் புகுந்தது. ஆரவாரக் கொண்டாட்டத்துடன் உள்ளே மோதி நுழைந்த வெங்காய வாடை வீசும் கூட்டம் திருமதி புருடென்ஷியா லினெரோவைத் திணறச் செய்தது. சுமை தூக்குவோர் முட்டிமோதிக்கொண்டு சாமான்களை எடுக்கும் சந்தடியில் கைகலப்பில் ஈடுபட்டார்கள். இந்த நெரிசலில் சில கோழிக்குஞ்சுகளுக்கு நேர்ந்த வெட்கங்கெட்ட ரீதியிலான மரணம் தன்னையும் பற்றிக்கொள்ளுமோ என்று அவர் பதறினார். அந்த நேரத்தில்தான் மூலைகளில் இரும்புப் பட்டைபோட்ட தன்னுடைய மரப்பெட்டிமேல் பயமில்லாமல் உட்காரவும் ஆரம்பித்தார். இந்த அவிசுவாசிகளின் ஊரில் நிகழும் விபத்துகளுக்கும் சச்சரவுகளுக்கும் எதிராக அவர் நிறையப் பிரார்த்தித்தார். சந்தடிகளெல்லாம் ஓய்ந்ததும் கப்பலின் தலைமை அதிகாரி அவரைத் தேடிவந்தார். நடன அரங்கில் கைவிடப்பட்டு மீந்திருந்த ஒரே நபர் அவர்தான்.
“இனி இங்கே யாரும் வரமாட்டார்கள் எனத் தோன்றுகிறது” என்று நட்பு நிரம்பிய குரலில் சொன்னார். “நான் உங்களுக்கு ஏதாவது உதவ வேண்டுமா?” என்று கேட்டார்.
“நான் தூதருக்காகக் காத்திருக்கிறேன்” என்றார் திருமதி புருடென்ஷியா லினெரோ. அது உண்மைதான். அவர் புறப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே அவருடைய மூத்த மகன், அம்மா வரும் விவரத்தை நேப்பிள்ஸ் தூதராக இருக்கும் தன்னுடைய நண்பனுக்குத் தந்தி மூலம் தெரிவித்திருந்தான். துறைமுகத்திலேயே அம்மாவைப் போய்ப் பார்க்க வேண்டுமென்றும் தொடர்ந்து ரோமில் அம்மாவின் பயணத்துக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டிருந்தான். அம்மா வரும் கப்பலின் பெயரையும் வந்துசேரும் நேரத்தையும் தெரிவித்திருந்தான். தவிரவும் அம்மா புனித பிரான்சிசின் தோற்றத்தில் இருப்பார் என்பதையும் நினைவுபடுத்தியிருந்தான். ஏற்கனவே செய்திருந்த இந்த ஏற்பாடுகளில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லாமலிருந்தது. எனவே கப்பற் பணியாளர்களின் பகலுணவு இடைவேளை நெருங்கியிருந்தபோதும், தலைமை அதிகாரி இன்னும் சிறிது நேரம் அவர் அங்கேயே உட்கார்ந்திருக்க அனுமதித்தார். அப்போதே நாற்காலிகளையெல்லாம் மேஜைமீது எடுத்து அடுக்கி முதல் தளத்தின் தரையைக் கழுவிச் சுத்தம்செய்யத் தொடங்கியிருந்தார்கள். ஈரமாகிவிடாமலிருக்கப் புருடென்ஷியாவின் பெட்டியை அவர்கள் பல இடங்களிலும் மாற்றி மாற்றி வைக்க வேண்டியிருந்தது. எந்த உணர்ச்சி மாற்றமும் இல்லாமல் திருமதி புருடென்ஷியா லினெரோ இடம் மாறி மாறி உட்கார்ந்து தன்னுடைய பிரார்த்தனையைத் தொடர்ந்துகொண்டிருந்தார். கடைசியில் பணியாளர்கள் அவரை வெளியே லைஃப் போட்டுகளுக்கு மத்தியில் உட்காரவைத்தார்கள். இரண்டு மணி வாக்கில் தலைமை அதிகாரி மறுபடியும் அவரை அங்கே பார்த்தார். முரட்டு உடையணிந்து வியர்வையில் ஊறி ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருந்த அவருக்கு நம்பிக்கையற்றுப்போயிருந்தது. அழாமலிருக்க அதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
“நீங்கள் இப்படிப் பிரார்த்தித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை” என்று முன்பிருந்த தோழமை வறண்டுபோன குரலில் அதிகாரி சொன்னார். “ஆகஸ்டு மாதத்தில் கடவுள்கூட விடுமுறையில் போய்விடுவார்” என்றார்.
வெயில் காலத்தில் இத்தாலியில் சரிபாதி மக்களும் கடற்கரையில்தான் இருப்பார்கள்; குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் என்று சொன்னார் அதிகாரி. பொறுப்பை வைத்துப் பார்த்தால் தூதர் விடுமுறையில் போயிருக்க முடியாது. எனினும் திங்கள்கிழமைவரை அவருடைய அலுவலகம் திறந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் திருமதி புருடென்ஷியா லினெரோ நியாயமாகச் செய்யக் கூடியது ஏதாவது ஒரு ஹோட்டலில் அறையெடுத்து இரவு நிம்மதியாகத் தூங்கிவிட்டு மறுநாள் தூதருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளுவது மட்டுமே. தொலைபேசிக் குறிப்பேட்டில் நிச்சயமாக அவருடைய எண் இருக்கும். இந்த அறிவுரையை ஏற்றுக்கொள்வதைத் தவிர திருமதி புருடென்ஷியாவுக்கு வேறு வழியில்லை. இமிக்ரேஷன், கஸ்டம்ஸ், அந்நியச் செலாவணி எல்லாவற்றிலும் அந்த அதிகாரி அவருக்கு ஒத்தாசை செய்தார். டாக்சி வரவழைத்துக் கொடுத்ததுடன் அவரைக் கௌரவமான ஹோட்டலில் கொண்டுபோய்விட வேண்டுமென்றும் டிரைவரிடம் சொல்லியிருந்தார்.
சவ ஊர்தியின் லட்சணங்களுடனிருந்த அந்த டாக்சி, ஆள் நடமாட்டமில்லாத தெருக்கள் வழியாக ஊர்ந்து நகர்ந்தது. அந்த ஆவி நகரத்தில் தானும் டிரைவரும் மட்டுமே உயிரோடிருப்பதாகத் திருமதி புருடென்ஷியா லினெரோவுக்குத் தோன்றியது. தெருக்களில் கொடிக் கம்பிகளில் ஆவிகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்ததாகத் தோன்றியது. இத்தனை ஆவேசத்துடனும் வாயாடித்தனத்துடனும் பேசுகிறவன் போப்பாண்ட வரைப் பார்ப்பதற்காகக் கடல் கடந்து வந்திருக்கும் தனிமைப் பயணியான தன்னைத் துன்புறுத்தமாட்டான் என்று அவர் நினைத்தார். வளைந்து நெளிந்து கிடந்த தெருக்கள் வழியான பயணம் அவர்களை மறுபடியும் கடற்கரைக்கே கொண்டுவந்து சேர்த்தது. பளீரென்ற நிறங்களில் சாயமடிக்கப்பட்ட சிறிய ஹோட்டல்கள் இருந்த பளீரென்ற கடற்கரை வழியாகக் கார் நகர்ந்தது. அந்த ஹோட்டல்களில் எதன் முன்னாலும் நிற்காமல் ஓடிய கார் பெரும் பகட்டெதுவுமில்லாத ஒரு ஹோட்டல் வாசலில் நின்றது. ஏராளமான பனை மரங்களும் பச்சை நிறப் பெஞ்சுகளுமிருந்த பூங்காவின் மத்தியில் இருந்தது அந்த ஹோட்டல். டிரைவர் பெட்டியைக் காரிலிருந்து எடுத்து நிழல் படர்ந்த நடைபாதையில் வைத்தான். திருமதி புருடென்ஷியா லினெரோவின் சந்தேகத்தைப் பார்த்து அதுதான் நேப்பிள்ஸில் மிகக் கௌரவமான ஹோட்டல் என்று உறுதியாகச் சொன்னான்.
அழகானவனும் இரக்கமுள்ளவனுமான ஒரு பணியாள் பெட்டியைத் தோளில் தூக்கிக்கொண்டு அவரை ஹோட்டலுக்குள்ளே அழைத்துச் சென்றான். அவரை அழைத்துக்கொண்டு லிப்டில் நுழைந்தவன் ஒரு புக்கினிப் பாடலை உரக்கப் பாடத் தொடங்கினான். புதுப்பிக்கப்பட்ட ஒன்பது தளங்களிலும் ஒன்பது ஹோட்டல்கள் இருக்கும் கௌரவமான கட்டடம் அது. லிப்ட் சட்டென்று மேலே ஏறத் தொடங்கியதும் திருமதி புருடென்ஷியா லினெரோவுக்குத் தானொரு கோழிக் கூண்டுக்குள் அகப்பட்டுக்கொண்டது போன்ற மனக்குழப்பம் ஏற்பட்டது. எதிரொலி எழும்பும் சலவைக்கல் படிக்கட்டுகளுக்கு மத்தியில் மேலே போனபோது, வெவ்வேறு விதமான மனிதர்களை அவர்களின் தனிமையான சூழ்நிலைகளில் அவரால் பார்க்க முடிந்தது – வீட்டுக்குள்ளே இருந்ததனால் கிழிந்த உள்ளாடைகள் அணிந்திருந்தவர்கள், ஏப்பமிட்டவர்கள் என எல்லாரையும். லிப்ட் மூன்றாம் மாடியில் ஓர் உலுக்கலுடன் நின்றது. பணியாள் தன்னுடைய பாட்டை நிறுத்திவிட்டு லிப்டின் கதவைத் திறந்தான். குனிந்து வணங்கி அவருடைய இடம் வந்துவிட்டது என்றான்.
ஹோட்டலின் தளத்தில் வர்ணக் கண்ணாடிகளாலும் நிழற்செடிகள் வைத்திருந்த தாமிர ஜாடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தாலான கௌண்ட்ருக்குப் பின்னால் கிறக்கமாகத் தெரிந்த ஒரு பதின் பருவத்தினனைப் பார்த்தார். பார்த்த உடனேயே அவருக்கு அவனைப் பிடித்துப்போயிற்று. ஏனெனில் அவருடைய கடைசிப் பேரனைப் போல அவனுக்கும் அழகான சுருட்டை முடியிருந்தது. ஒரு வெண்கலத் தகட்டில் பதிக்கப்பட்டிருந்த அந்த ஹோட்டலின் பெயரும் அவருக்குப் பிடித்திருந்தது. அங்கே பரவியிருந்த கார்பாலிக் அமிலத்தின் வாசனை பிடித்திருந்தது. அங்கே தொங்கவிடப்பட்டிருந்த பெரணிச் செடிகளைப் பிடித்திருந்தது. அங்கே நிலவிய அமைதி, சுவர்க் காகிதத்தில் செய்திருந்த சித்திர வேலைப்பாடுகள் எல்லாம் அவருக்குப் பிடித்திருந்தன. ஆனால் லிப்டை விட்டு வெளியே வந்ததும் அவருடைய மனம் அமுங்கிப்போனது. குட்டைச் சராயும் கடற்கரைச் செருப்பும் அணிந்த ஆங்கிலேய சுற்றுலாப் பயணிகளின் கூட்டமொன்று நீண்ட வரிசையிலிருந்த சாய்வு நாற்காலிகளில் தூங்கிக்கொண்டிருந்தது மொத்தம் பதினேழு பேர். பதினேழு பேரும் ஒரே ஆளின் பதினேழு பிரதிபிம்பங்கள் போலக் கிடந்தார்கள்.
ஒன்றேபோலத் தோற்றமளித்த எல்லாரையும் திருமதி புருடென்ஷியா லினெரோ எந்த வித்தியாசமும் தென்படாமல் ஒரு முறை பார்த்தார். கசாப்புக் கொட்டடியில் வரிசையாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட பன்றி மாமிசம் போல வெளிர் சிவப்பான அந்தக் கால்கள் மட்டுமே அவருடைய பார்வையில்பட்டன. கௌண்டரை நோக்கி அடுத்த எட்டு வைக்காமல் லிப்ட் பக்கமாகத் திரும்பி நடந்தார் அவர்.
“வேறு மாடிக்குப் போகலாம்” என்றார்.
“சாப்பாட்டு அறையுள்ள ஒரே இடம் இதுதான்” என்றான் பணியாள்.
“அது பரவாயில்லை” என்றார்.
பணியாள் அதை ஏற்றுக்கொண்டதாகச் சமிக்ஞை செய்துவிட்டு அவருடன் லிப்டில் நுழைந்து கதவை மூடினான். ஐந்தாம் தளத்திலிருக்கும் ஹோட்டலுக்கு வந்து சேரும்வரை மீதிப் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தான். அந்த ஹோட்டலில் எதுவும் சீராக இருக்கவில்லை. அதன் உரிமையாளர் அருமையாக ஸ்பானிஷ் மொழி பேசத் தெரிந்த ஸ்பிரிங்க் போன்ற நடுத்தர வயதுப் பெண்மணி. ஹோட்டல் வரவேற்பறையில் யாரும் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கவில்லை. அங்கே சாப்பாட்டு அறையும் இருக்கவில்லை. ஆனால் அங்கே தங்கியிருந்தவர்களுக்குப் பக்கத்திலிருக்கும் உணவகத்திலிருந்து குறைந்த செலவில் உணவைக் கொண்டுவந்து தருவதற்கான ஏற்பாடுகளை ஹோட்டல் செய்திருந்தது. எனவே, அன்றைய இரவை அங்கே கழிப்பதென்று திருமதி புருடென்ஷியா லினெரோ தீர்மானித்தார். ஹோட்டல் உரிமையாளரின் பேச்சும் இணக்கமும் மட்டுமல்ல வரவேற்பறையில் படுத்துத் தூங்கும் எந்த ஆங்கிலேயனின் சிவந்த தொடைகளையும் பார்க்க வேண்டியிராது என்பதும் அவரை அங்கேயே தங்கிவிடத் தூண்டியது.
பிற்பகல் மூன்று மணியானதும் அவர் ஜன்னல் திரைகளை இழுத்துவிட்டார். அறைக்குள் மங்கலான வெளிச்சம் மறைவான தோப்பின் குளிர்ச்சியைத் தேக்கிவைத்திருந்தது. அழுவதற்குப் பொருத்தமான இடம். அறைக்குள் தனித்துவிடப்பட்டதும் திருமதி புருடென்ஷியா லினெரோ கதவை மூடித் தாழிட்டார். குளியலறைக்குள் புகுந்து அன்றைக்கு முதன்முதலாக ஒன்றுக்கிருந்தார். மெல்லிய பீச்சலாக இடைவெளி விட்டுப் பெருகிய மூத்திரக் கழிப்புக்குப் பிறகு அந்தப் பயணம் முழுவதும் அவர் இழந்துவிட்டிருந்த சுயம் திரும்பக் கிடைத்ததுபோல உணர்ந்தார். அதன் பிறகு அவர் செருப்புகளைக் கழற்றினார். இடுப்பில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்தார். பிறகு அகலமான அந்த இரட்டைக் கட்டிலில் இடது பக்கமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு அடக்கிவைத்திருந்த கண்ணீர் வெள்ளத்தைத் திறந்துவிட்டார்.
ரியோஹாச்சாவை விட்டு அவர் வெளியே தங்குவது இதுதான் முதன் முறை. பிள்ளைகள் திருமணம் முடிந்து தனியாக வாழத் தொடங்கிய பிறகும் செருப்புப் போடாத இரண்டு இந்தியப் பெண்களின் உதவியுடன் நடைப் பிணமாகக் கிடந்த கணவரைப் பராமரித்தபோதும் அவர் தனியாகத்தான் இருந்திருக்கிறார். ஆனால் முதல்முறையாக வீட்டைவிட்டு விலகியிருப்பது இப்போதுதான். அவர் வாழ்நாளில் நேசித்த ஒரே ஆண் மகனும் முப்பது வருடங்களுக்கு மேலாக நினைவிழந்து கிடப்பவருமான கணவனின் உடல் கிடந்த படுக்கையறைக்கு எதிரிலிருந்த அறையில்தான் அவருடைய வாழ்க்கையின் பாதியும் கழிந்திருந்தது. இளமைக் காலத்தில் காதலைக்கொண்டாடிய அதே அறையில் அதே ஆட்டுத்தோல் படுக்கையில் அந்த உடல் கிடந்திருந்தது.
கடந்த அக்டோ பரில் உயிருள்ள பிணமாகக் கிடந்த அவர் திடீரென்று கண்விழித்தார். குடும்ப நபர்களை இனங்கண்டுகொண்டார். ஒரு புகைப்படக்காரரை அழைத்துவரச் சொன்னார். துருத்திவைத்த உலை மாதிரியான பழைய காமிராவையும் வீட்டுக்குள் படமெடுப்பதற்கான மக்னீஷியம் தகடையும் வைத்திருந்த ஒரு கிழவனை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். எந்த மாதிரியான புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்பதையும் நோயாளிதான் முடிவு செய்தார்.
“வாழ்க்கை முழுவதும் அன்பையும் மகிழ்ச்சியையும் எனக்குக் கொடுத்த புருடென்ஷியாவுக்காக ஒன்று” என்றார். முதல் படம் மக்னீஷிய வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது.
“என்னுடைய அருமை மகள்கள் புருடென்சிடாவுக்கும் நடாலியாவுக்குமாக இரண்டு” என்றார். அவையும் எடுக்கப்பட்டன.
“அடுத்த இரண்டும் என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேருக்கும். தங்களது அன்பாலும் நியாய உணர்வாலும் இந்தக் குடும்பத்துக்கு உதாரணமாக இருப்பவர்கள்” என்றார். புகைப்படக்காரர் வீட்டுக்கு ஓடிப்போய் பிலிமும் காகிதமும் எடுத்துவர வேண்டியதாகும் வரையும் படமெடுப்பது நீண்டது. மாலை நான்கு மணியானதும் மக்னீஷியச் சுடரின் புகையும் புகைப்படமெடுப்பதற்காகவும் எடுத்த புகைப்படங்களை வாங்குவதற்காகவும் நிரம்பியிருந்த உறவினர்களின் கூட்டமும் படுக்கையறைக்குள்ளிருந்த காற்றைச் சுவாசிக்க முடியாததாக்கியிருந்தது. அதற்குள் படுக்கையில் கிடந்த நோயாளிக்கு நினைவு தப்பியது. கப்பலின் மேல்தளத்திலிருந்து விடைபெறும் ஒருவரைப் போல ஒவ்வொருவருக்கும் கையசைத்து வாழ்விலிருந்து விடை பெற்றுக்கொண்டார்.
எல்லாரும் நம்பியதுபோல அவருடைய மரணம் அந்த விதவைக்கு ஆறுதலாக இருக்கவில்லை. நேர்மாறாகப் பெரும் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். அவரைச் சமாதானப்படுத்தத் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பிள்ளைகள் கேட்டார்கள். ரோமுக்குப் போய்ப் போப்பாண்டவரைப் பார்க்க விரும்புவதாக அவர் பதில் சொன்னார்.
“நான் தனியாகவே போய்க்கொள்ளுகிறேன். புனித பிரான்ஸிசின் உடையில். அப்படி ஒரு வேண்டுதல் இருக்கிறது” என்று அவர்களிடம் தெரிவித்தார்.
கணவரைப் பராமரித்துக்கொண்டிருந்த காலத்தில் அவருக்கு மிஞ்சியிருந்த ஒரே ஆறுதல் அழுவதிலுள்ள மகிழ்ச்சி மட்டுந்தான். கப்பலில் அவருடைய காபினைப் பகிர்ந்துகொண்டவர்களில் மார்செய்ல்ஸ்வரை பயணித்த கிளாரிசின் இரண்டு கன்னியாஸ்திரீகளும் இருந்தார்கள். யாரும் பார்க்காமல் அவர் குளியலறைக்குப் போய் அழுவார். அதனால் ரியோஹாச்சாவை விட்டு வந்த பின்பு நேப்பிள்ஸ் ஹோட்டலுக்குள் புகுந்த பிறகே மனநிறைவுடன் அழ அவரால் முடிந்தது. அடுத்த நாளும் அவர் தொடர்ந்து அழுதுகொண்டிருந்திருக்கலாம். ஆனால் மறுநாள் அவர் ரயிலில் ரோமுக்குப் போக வேண்டியிருந்தது. ஏழு மணிக்கெல்லாம் ஹோட்டல் உரிமையாளர் கதவைத் தட்டித் தாமதிக்காமல் பக்கத்திலுள்ள உணவகத்துக்குப் போகவில்லையென்றால் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தார்.
பணியாள் அவருடன் வந்தான். கடலிலிருந்து மெல்லிய காற்று வீசத் தொடங்கியிருந்தது. ஏழு மணி வெயிலிலும் சில குளியல்காரர்கள் கடற்கரையில் இருந்தார்கள். திருமதி புருடென்ஷியா லினெரோ செங்குத்தாகவும் குறுகலாகவும் இருந்த தெருக்களில் பணியாளைப் பின்தொடர்ந்தார். ஞாயிற்றுக்கிழமை அரைத்தூக்கத்திலிருந்து நகரம் அப்போதுதான் விழிக்கத் தொடங்கியிருந்தது. கடைசியில் நிழல் பரவியிருந்த குடில் போன்ற உணவகத்துக்கு வந்துசேர்ந்தார்கள். மேஜைகளில் சிவப்புக் கட்டங்கள் போட்ட விரிப்புகள் இருந்தன. கூஜாக்களில் பூக்களைச் செருகிப் பூ ஜாடிகளாக வைத்திருந்தார்கள். அந்தக் காலை வேளையில் அவருடன் சாப்பிடுவதற்கு அந்த உணவகத்தின் பணியாள்களும் பணிப்பெண்களும் மட்டுமே இருந்தார்கள். பின்னால் ஒரு மேஜையருகில் அப்பாவிப் பாதிரியார் ஒருவர் வெங்காயத்தைக் கடித்துக்கொண்டு ரொட்டியைத் தின்றுகொண்டிருந்தார். திருமதி புருடென்ஷியா லினெரோ நுழைந்ததும் எல்லாருடைய பார்வையும் அவருடைய தவிட்டு நிற உடைமீது பதிந்தது. ஆனால் அது அவரைப் பாதிக்கவில்லை. மற்றவர்களின் கேலியும் தன்னுடைய பாவ பரிகாரத்தின் பாகம் என்று அவருக்குத் தெரியும். ஆனால் அங்கே பார்த்த அழகான பணிப்பெண் அவருக்குள் இரக்கத்தை உண்டாக்கினாள். அவள் அழகாக இருந்தாள். மாநிறம். அவள் பேச்சே பாடுவதுபோல இருந்தது. போருக்குப் பின் இத்தாலியில் நிலைமைகள் மோசமாகியிருக்க வேண்டும். இல்லையென்றால் அவளைப் போன்ற ஒருத்தி எதற்காக உணவகத்தில் பணிப் பெண்ணாக வேலைசெய்ய வேண்டும்? ஆனாலும் பூக்கள் நிரம்பிய அந்தக் குடில் அவருக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பகல் நேரப் பதற்றங்கள் போக்கடித்திருந்த அவருடைய பசியைத் தூண்டிவிடப் பே இலைகள் போட்ட ஸ்டூ வாசனையால் முடிந்தது. நீண்ட நாள்களில் முதல்முறையாக அவருக்கு அழ வேண்டுமென்ற ஆசையில்லாமலிருந்தது. இருந்தாலும் ஆசைப்பட்டதுபோல அவரால் சாப்பிட முடியவில்லை.
மாநிறமான அந்தப் பணிப்பெண் அன்பாகவும் பொறுமையாகவும் இருந்தபோதும், அவளுடன் கருத்துப் பரிமாற்றம் நடத்த அவரால் முடியவில்லை என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் ரியோஹாச்சாவில் கூண்டுகளில் வைத்து வீட்டில் வளர்க்கப்படும் ஒருவகைப் பாடும் பறவைதான் அங்கே கிடைக்கும் மாமிச உணவாக இருந்தது. மூலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பாதிரியார் மொழி பெயர்ப்பாளராக மாறி அவருக்கு உதவினார். விஷயங்களை அவருக்குப் புரியவைக்க முயன்றார். ஐரோப்பாவில் அப்போதும் போர்க் கால நெருக்கடிகள் தீர்ந்துவிடவில்லை என்றும் இந்தப் பறவைகளின் இறைச்சி சாப்பிடக் கிடைப்பதே அதிசயமென்றும் சொன்னார். ஆனால் அவர் அந்தத் தட்டைத் தள்ளி வைத்தார்.
“என்னைப் பொறுத்தவரை இதைச் சாப்பிடுவது என்னுடைய குழந்தைகளைத் தின்பதுபோல” என்றார்.
அதனால் கொஞ்சம் சேமியா சூப்பையும் பன்றி மாமிசம் சேர்த்து வேகவைத்த பூசணித் துண்டுகளையும் கல் மாதிரி இருந்த ஒரு துண்டு ரொட்டியையும் உண்டு அவர் திருப்திப்பட வேண்டியிருந்தது. சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, பாதிரியார் அவருடைய மேஜைக் கருகில் வந்து தர்மத்தின் பேரால் தனக்கு ஒரு கப் காப்பி வாங்கித்தரும்படி கேட்டுக்கொண்டே அவரருகில் உட்கார்ந்தார். யூகோஸ்லாவியரான அவர் பொலிவியாவில் ஊழியம் செய்தவர்.
அவர் திக்கித் திக்கி ஸ்பானிய மொழி பேசினார். திருமதி புருடென்ஷியா லினெரோவுக்கு அவர் எந்தவிதமான தெய்வாம்சமும் இல்லாத சாதாரண மனிதராகவே தோன்றினார். அவருடைய கைகள் பிய்ந்து போன அசுத்தமான நகங்களுடன் அருவருப்பாக இருந்ததைக் கவனித்தார். தவிர அவருடைய சுவாசத்தில் வெங்காய வாடை ஒரு குணம்போல நிரந்தரமாக இருந்தது. இருந்தாலும் அவர் தேவ ஊழியம் செய்பவர். அதுமட்டுமல்லாமல் வீட்டைவிட்டு இவ்வளவு தொலைவில் தன்னுடைய மொழியில் பேசக்கூடிய ஒருவரைப் பார்த்ததே மகிழ்ச்சிக்குரியது என்று தோன்றியது.
தானியக் கிடங்குகளிலிருந்து வந்த இரைச்சல் அவர்களைச் சுற்றி வந்து தொந்தரவு செய்தும் அவர்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். பக்கத்து மேஜைகளில் ஆள்கள் வந்து நிறைந்துகொண்டிருந்தார்கள். திருமதி புருடென்ஷியா லினெரோவுக்கு ஏற்கனவே இத்தாலியைப் பற்றி ஓர் அபிப்பிராயம் உருவாகிவிட்டிருந்தது. அவருக்கு இத்தாலி பிடிக்கவில்லை. அங்குள்ள ஆள்கள் கொஞ்சம் முறைகேடர்கள் என்பது ஒரு காரணம். பாடும் பறவைகளைத் தின்றதால் இன்னும் கொஞ்சம் அதிகம். ஆனால் இறந்த மனிதனைத் தண்ணீரிலேயே மிதக்கவிடும் தந்திர புத்திக்காரர்கள் என்பதுதான் முக்கியமான காரணம்.
பாதிரியார் காப்பியுடன் திருமதி புருடென்ஷியா லினெரோவின் செலவில் ஒரு கிராப்பாவையும் வாங்கிக்கொண்டு அவருடைய அபிப்பிராயம் மேலோட்டமானது என்பதைப் புரியவைக்க முயன்றார். போர்க் காலங்களில் நேப்பிள்ஸ் வளைகுடாக்களில் மிதக்கும் சடலங்களைக் கண்டுபிடித்து அடையாளம் காணவும் மரியாதையுடன் அடக்கம் செய்யவும் தேவையான ஏற்பாடுகள் இருக்கின்றன.
“இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான் என்பதை நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்தாலியர்கள் கற்றுக்கொண்டார்கள். அதனால் அதை எவ்வளவு சிறப்பாக வாழ முடியுமோ அப்படி வாழ முயல்கிறார்கள். அதனால் அவர்கள் வாயாடிகளாகவும் கணக்குப் பார்க்கிறவர் களாகவும் மாறிவிட்டார்கள். அதே சமயம் அதுதான் அவர்கள் மத்தியில் கொடூரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறது” என்று முடித்தார் பாதிரியார்.
“ஆனால் அவர்கள் கப்பலை நிறுத்தவே இல்லையே?” என்றார் திருமதி புருடென்ஷியா லினெரோ.
“துறைமுக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பதுதான் அவர்கள் வேலை. இதற்குள் அவர்கள் அந்தச் சடலத்தை எடுத்துக் கடவுளின் பெயரால் நல்லடக்கம் செய்திருப்பார்கள்” என்றார் பாதிரியார்.
இந்த விவாதம் இருவர் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
திருமதி புருடென்ஷியா லினெரோ சாப்பிட்டு முடித்திருந்தார். அப்போதுதான் எல்லாச் சாப்பாட்டு மேஜைகளும் நிறைந்திருந்ததை உணர்ந்தார். பக்கத்திலிருந்த மேஜைகளில் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சில ஜோடிகள் உணவருந்தாமல் முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். பின்னால் பாருக்குப் பக்கத்தில் உள்ளூர்வாசிகள் சிலர் பகடை விளையாடிக்கொண்டும் நிறமில்லாத ஒயினைக் குடித்துக்கொண்டுமிருந்தார்கள். அந்தச் சுவாரசியமில்லாத நாட்டுக்கு வரத் தனக்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறது என்று திருமதி புருடென்ஷியா லினெரோ புரிந்துகொண்டார்.
“போப்பாண்டவரைப் பார்ப்பது சிரமமென்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டார்.
“கோடைக் காலமாக இருந்தால் அது சுலபமாக இருந்திருக்கும்” என்றார் பாதிரியார். காண்டோ ல்ஃபோ கோட்டையில் கோடைக் காலத்தைக் கழிப்பதற்காகப் போப்பாண்டவர் வந்திருந்தார். ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகலுக்குப் பிறகு உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வரும் புனித யாத்திரீகர்களுக்கு அவர் பொதுதரிசனம் கொடுப்பது வழக்கம் என்று சொன்னார் பாதிரியார். அதற்கான அனுமதிக் கட்டணம் ரொம்ப மலிவு. இருபது லிராக்கள்.
“ஒருவரின் பாவமன்னிப்பைக் கேட்க எவ்வளவு கட்டணம்?” என்று கேட்டார் திருமதி புருடென்ஷியா லினெரோ.
“பரிசுத்தத் தந்தையானவர் யாருடைய பாவ மன்னிப்பையும் கேட்கமாட்டார்” என்றார். கொஞ்சம் புரளிபோல “அரசர்கள் போன்ற சிலரைத் தவிர” என்றும் சொன்னார்.
“தூரத்திலிருந்து வரும் என்னைப் போன்ற ஒரு அப்பாவியை உதாசீனம் செய்வது ஏனென்று எனக்குப் புரியவில்லை” என்றார்.
“சில அரசர்கள், அவர்கள் அரசர்களாக இருந்தபோதும் காத்திருந்தே இறந்துபோயிருக்கிறார்கள்” என்றார் பாதிரியார். பிறகு, “சொல்லுங்கள் புனிதத் தந்தையை நேரில் பார்த்துப் பாவமன்னிப்புக் கோருவதற்காகவே தனியாக இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் கொடிய பாவம் செய்திருக்க வேண்டும். இல்லையா?” என்று கேட்டார்.
திருமதி புருடென்ஷியா லினெரோ ஒரு நொடி யோசித்தார். முதல்முறையாக அவர் புன்னகைத்ததைப் பாதிரியார் பார்த்தார்.
“தேவ மைந்தனின் தாயே! அவரைச் சும்மா பார்த்தாலே எனக்குத் திருப்தி” என்று உயிரிலிருந்து எழுந்தது போன்ற பெருமூச்சுடன் சொன்னார்.
“அது என் வாழ்நாள் கனவு.”
உண்மை என்னவென்றால் அவர் இன்னும் பயத்துடனும் துக்கத்துடனுந்தான் இருந்தார். அந்த உணவகத்தைவிட்டு வெளியேற விரும்பினார், அதேபோலத் தாமதமில்லாமல் இத்தாலியைவிட்டும் எதிர்பார்ப்பில் ஆழ்ந்திருக்கும் அந்தப் பெண்மணியிடமிருந்து தனக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைத்தாயிற்று என்று பாதிரியார் யோசித்திருக்க வேண்டும். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு இன்னொரு மேஜைக்கு அருகில்போய் அங்கிருந்தவர்களிடம் தர்மத்தின் பேரால் தனக்கு ஒரு கப் காப்பி வாங்கித் தரும்படி இரந்துகொண்டிருந்தார்.
உணவகத்திலிருந்து வெளியே வந்தபோது, திருமதி புருடென்ஷியா லினெரோ மாறிப்போயிருந்த நகரத் தைப் பார்த்தார். ஒன்பது மணிக்கும் அவ்வளவு சூரிய வெளிச்சம் இருந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதே நேரம் மாலைக் காற்றை அனுபவிக்கத் தெருக் களில் இறங்கியிருந்த கூட்டத்தின் ஆரவாரம் அவரைப் பயமுறுத்தியது. ஏராளமான வெஸ்பா ஸ்கூட்டர்களின் கிறுக்குத்தனமான இயந்திர ஓசைகள் வாழ்க்கையைச் சகிக்க முடியாததாக்கின. திறந்த மார்பைக் காட்டியபடி அவற்றை ஓட்டும் ஆண்களின் இடுப்பைக் கட்டிக் கொண்டு அழகிகள் உட்கார்ந்திருந்தார்கள். தொங்கிக் கொண்டிருந்த பன்றி இறைச்சிகளுக்கும் தர்பூசணிப் பழங்கள் அடுக்கியிருந்த மேஜைகளுக்கும் நடுவில் தாறுமாறாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.
அது ஒரு திருவிழாக் கோலமாக இருந்தது. ஆனால் திருமதி புருடென்ஷியா லினெரோவுக்கு அது ஓர் அபாயமாகத் தோன்றியது. அவர் வழி தவறி ஒழுங்கீன மான ஒரு தெருவுக்கு வந்துசேர்ந்திருந்தார். வாசலில் சிவப்பு விளக்குகள் பொருத்திய ஒரே மாதிரியான வீடுகள்; அவற்றின் முன்னால் ஒப்பனை செய்து மௌனமாகக் காத்திருந்த பெண்கள். அந்தக் காட்சி அவரைப் பயத்தில் நடுங்கச் செய்தது. நன்றாக உடுத்துக் கையில் கனமான மோதிரம் அணிந்து டையில் வைரம் பதித்திருந்த ஒருவன் சிறிது தூரம் அவரைப் பின்தொடர்ந்து வந்தான். முதலில் இத்தாலியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலுமாக என்னவோ சொல்லிக்கொண்டே வந்தான். பதில் கிடைக்காமல் போனதும் சட்டைப் பையிலிருந்து ஒரு கத்தைப் பட அட்டைகளை எடுத்து அதில் ஒன்றை அவரிடம் காட்டினான். அதை ஒரு தடவை பார்த்ததுமே தான் நரகத்தில் நடந்துகொண்டிருப்பதாக அவர் உணர்ந்தார்.
பெரும் பயத்துடன் அவர் அங்கேயிருந்து ஓடினார். தெரு முடிந்த இடத்தில் அந்தி மாலைக் கடல் தெரிந்தது. ரியோஹாச்சா துறைமுகத்தில் பழக்கப்பட்டிருந்த அதே அழுகிய நண்டுகளின் வாடை துளைத்தது. அத்தோடு அவருடைய இதயம் அதன் இடத்துக்குத் திரும்பியதாகத் தோன்றியது.
ஆள் நடமாட்டமில்லாத கடற்கரையோரமிருந்த சாயமடித்த ஹோட்டல்களையும் சவ ஊர்திகளையும் விரிந்த வானத்தில் முதல் நட்சத்திர வைரத்தையும் அவரால் அடையாளங் காண முடிந்தது. நடுக்கடலில் அவர் வந்த பிரம்மாண்டமான கப்பல் தனியாக நின்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பலுக்கும் தனக்கும் இப்போது எந்தத் தொடர்புமில்லை என்று அவருக்குத் தோன்றியது. தெருமுனைக்கு வந்ததும் இடது பக்கமாகத் திரும்பப் பார்த்தார். ஆனால் மக்கள் கூட்டத்தைப் படை வீரர்கள் தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தார்கள். அவருடைய ஹோட்டல் கட்டடத்தின் முன்னால் வரிசையாக ஏராளமான ஆம்புலன்ஸ் வண்டிகள் கதவைத் திறந்துவைத்துக் காத்திருந்தன.
கால் கட்டை விரலில் ஊன்றி நின்று ஆள்களின் தோள்களுக்கு மேலிருந்து அவர் எட்டிப்பார்த்தார். அந்த ஆங்கிலேயப் பயணிகளைத் திருமதி புருடென்ஷியா லினெரோ மறுபடியும் பார்த்தார். அவர்களை ஒவ்வொருவராக ஸ்டிரெட்சரில் கொண்டுவந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் அசைவில்லாமலிருந்தாலும் கௌரவமானவர்களாக இருந்தார்கள். இரவு உணவுக்கான உடையில் ஒருவரே பல படிகளாக இருப்பதுபோல இருந்தார்கள். பிளானல் டிரௌசர்கள், குறுக்குக் கோடுகள் போட்ட டை, டிரினிட்டி கல்லூரியின் இலச்சினை பதித்த அடர்ந்த நிறக் கோட்டுகள். அவர்களை வெளியே கொண்டு வருவதைப் பார்த்து அண்டையிலிருப்பவர்கள் தங்களுடைய மாடிகளிலிருந்தும் தடுத்து நிறுத்தப்பட்ட மக்கள் தெருவிலிருந்தும் எண்ணிக்கொண்டிருந்தார்கள் – ஒரு விளையாட்டு அரங்கிலிருந்து கொண்டுவரப்பட்டதுபோலப் பதினேழு சடலங்கள். ஒரு ஆம்புலன்ஸில் இரண்டு என்று ஏற்றப்பட்ட பின்பு சைரன் ஒலித்துக்கொண்டு ஆம்புலன்ஸுகள் நகர்ந்தன.
மனம் பேதலிக்கச் செய்யும் இந்த அனுபவங்களால் அதிர்ந்துபோன திருமதி புருடென்ஷியா லினெரோ, மற்ற ஹோட்டல்களில் தங்கியிருந்த விருந்தினரால் நிரம்பிய லிப்டில் ஏறி மேலே போனார். லிப்டுக்குள்ளே இருந்தவர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டிருந்தார்கள். மூன்றாம் தளத்தைத் தவிர எல்லாத் தளத்திலும் ஆள்கள் இறங்கினார்கள். திறந்து கிடந்த அந்தத் தளத்தில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. கௌண்டருக்கு அருகில் யாரும் இல்லை. அவர் பார்த்தபோது, வெளிர்சிவப்புத் தொடைகள் தெரியப் பதினேழு ஆங்கிலேயர்கள் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த வரவேற்பறையின் சாய்வு நாற்காலிகளில் இப்போது யாருமில்லை. ஐந்தாம் மாடியில் ஹோட்டல் உரிமையாளர் கட்டுப்படுத்த முடியாத ஆவேசத்துடன் விபத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
“எல்லாரும் இறந்துவிட்டார்கள்” என்று ஸ்பானிய மொழியில் சொன்னாள். “அவர்கள் செத்துப்போனது இரவு உணவுடன் சாப்பிட்ட சிப்பிச் சூப்பில் விஷம் கலந்திருந்ததனாலாம். யோசித்துப் பாருங்கள். ஆகஸ்டு மாதத்தில் சிப்பிச் சூப்”
அந்தப் பெண்மணி அறைச் சாவியைத் திருமதி புருடென்ஷியா லினெரோவிடம் கொடுத்துவிட்டு அவரைக் கவனிக்காமல் மற்ற விருந்தாளிகளுடன் அவளுடைய மொழியில் சொன்னாள்: “இங்கே உணவகம் இல்லாததனால் தூங்குவதற்காகப் படுப்பவர்கள் உயிரோடு எழுந்திருக்கிறார்கள்.” தொண்டைக்குள் சிக்கிய கண்ணீர் முடிச்சுடன் திருமதி புருடென்ஷியா லினெரோ, அறைக்குள் புகுந்து கதவை மூடித் தாழிட்டார். அதற்குப் பிறகு சிறிய எழுத்து மேஜையையும் சாய்வு நாற்காலியையும் தன்னுடைய பெட்டியையும் இழுத்துக் கதவையொட்டித் தடுப்புச் சுவர்போலப் போட்டார். ஒரே நேரத்தில் அநேகக் கொடூரங்கள் நடந்த ஒரு நாட்டிலிருந்து பாதுகாப்புத் தேடியே அந்தத் தடுப்புச் சுவரை ஏற்படுத்தியிருந்தார். பிறகு விதவைக்குரிய இரவு உடையை அணிந்து படுக்கையில் மல்லாந்து படுத்தார். விஷமருந்தி இறந்த பதினேழு ஆங்கிலேயர்களுக்காக ஜெபமாலையை உருட்டிப் பதினேழுமுறை பிரார்த்தித்தார்.
(ஏப்ரல் 1980)