கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 72 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ரூபியக்கா உங்களுக்கு ஃபோன்” என்ற குரல் கேட்டு, செய்து கொண்டிருந்த வேலைகளை அப்படியே போட்டு விட்டு அடுத்த வீட்டுக்கு ஓடிச் சென்றாள் ரூபிணி. ரிசீவரை எடுத்தவள் ‘ஹலோ’ என்றாள். ‘ஹலோ’ சொன்ன மறுமுனைக் குரலை அடையாளம் கண்டுகொண்ட ரூபிணியின் முகம் கறுத்தது. அவன்தான் அவனேதான். உதட்டைக் கடித்துப் பொறுமை காத்தாள். அவன் தொடர்ந்தான். “என்ன ரூபிணி நான் கேட்டது…” 

“என்ன?” இது ரூபிணி. 

“அது தான்… அது ஒருநாள்… ஒருநாள்… ஒருமணி நேரமாவது… ப்ளீஸ்… நா வேற யாருகிட்ட கேட்பேன்?’ 

“ஹ்ஹஹ்ஹா…” ரூபிணியின் அலட்சியச் சிரிப்பை அவன் தனக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டான். 

“ரூபி … ரூபி ” அவன் உருகினான். அருகில் இருப்பவர்கள் புரிந்து கொள்ளக் கூடாதே எனத் தவித்தவள், சலனமற்ற முகத்தை வலிந்து ஏற்படுத்திக் கொண்டாள். “சொல்லுங்க சேர்” என்றாள். 

“என்ன சம்மதமா? நா மட்டுந்தான் வீட்ல இருக்கேன். வாரீங்களா? இல்ல நா அங்க வரவா?” 

“நா அவர்கிட்ட… அவர் உங்கள காணனும்னு சொன்னார் சேர்” பேச்சை மாற்றினாள்.. அவன் விடுவதாயில்லை. 

“யோசிச்சி சொல்லுங்க” டக்கென ரிசீவரை வைத்தவள் சிந்தனையுடன் நடந்தாள். வானம் கறுத்திருந்தது. மழை வருவதற்கான அறிகுறிகள் மிகத் துல்லியமாய்த் தெரிந்தன. 

மீண்டும் சமையலறைக்குள் நுழைந்த ரூபிணி கருகலின் வாசத்தில் கலங்கித்தான் போனாள். அடுப்பில் அவள் வைத்து விட்டுப் போன கறி தீய்ந்து தீர்ந்து போயிருந்தது. கடிகாரம் ஐந்து மணியை ஒலித்து ஓய்ந்தது. இன்னும் ஒருமணி நேரத்தில் கணவன் வந்து விடுவான். வரும் போதே ‘பசீ…’ என்று கூவிக் கொண்டுதான் வருவான். “பாவம் அந்த மனிசன் என்னதான் பண்ணும் காலையில் சுத்திக் கொடுத்த இடியப்பமும் வெறும் சொதியும் போதுமா? வேலை செய்யும் ஆம்பிளைக்கு?” எண்ணம் மனதைக்குடைய, கண்கள் காய்கறிக் கூடையைத் துளாவின. அது வெறுமையாய்ச் சிரித்தது. திடீரென்று ஞாபகத் பொறி சற்று மின்னி மறைந்தது. காலையில் சரசாக்கா கொடுத்த சீட்டுக் காசு இருக்கவேண்டும். கைகள் இயல்பாய் மல்லிப் போத்தலினுள் நுழைந்தன. ஐம்பது ரூபாய் இருந்தது. எடுத்துக் கொண்டு பக்கத்துக்கடைக்கு ஓடினாள். 

கத்தரிக்காயும், கறிமிளகாயும், கருவாடும் ‘அவருக்கு’ பிடிக்கும் என்று வாங்கிக் கொண்டு திரும்பினாள்.வாரி மழை பொழிந்து கொண்டிருந்தது. நனைந்த காகமொன்று ‘கரன்ட்’ கம்பி மீதமர்ந்து கம்மிய குரலில் கத்திக் கொண்டிருந்தது. ஓடி வந்தவள் அரக்கப்பரக்க மீண்டும் சமைக்கத் தொடங்கினாள். அவசரமாக ஓடும் உலக வாழ்வில் ரூபிணியும் ஓர் அங்கத்தவள். 

இளமை வேகத்தில் காதல் கொப்பளிக்க காதலொருவனைக் கரம் பிடித்தாள். காலம் பருகிய மூன்று வருட தாம்பத்திய வாழ்வில் இரண்டு பிள்ளைச் செல்வங்கள் பெண்ணும் ஆணுமாகப் பிறந்தன. வாடகை வீட்டு வாழ்க்கை சிக்கலாகி விட தாய்வீட்டில் தஞ்சம் புகுந்தாள். அத்தோடு கணவனுக்குப் பொறுப்பும் குறைந்தது. தாயோ விதவை. அவளுக்கோ இன்னும் இரண்டு பெண்களைக் கரை சேர்க்கும் பொறுப்பு. சிற்றுண்டிகள் செய்து கடைகளுக்குப் போட்டு வரும் வருவாயில் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறாள். இந்நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் குடும்பமாக வந்திருக்கும் மகளை ‘போ’ என்பதா? ‘இரு’ என்பதா? வசைபொழிந்து பின் வாரியணைக்கும் சராசரித் தாயாக அவளிருந்தாள். “நீயாக தேடிக் கொண்ட வாழ்க்கை தானே” என அவள் திட்டுவதில் என்ன தவறு? கணவனும் இரண்டு வருட வீட்டு வாசத்தின் பின் நேற்றுத்தான் ஆடைத் தொழிற்சாலையொன்றில் சுப்பவைசராக வேலைக்குச் சென்றுள்ளான். 

‘”டொக்… டொக்” கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. “அஸ்வினி… யாருன்னு பாருங்க” என்றாள் சமையல்கட்டில் இருந்தவாறே. கதவைத்திறந்த பிள்கைள் “டெடாடெடா” என்று கூவியபடி காலைக் கட்டிக் கொண்டன. “ம்க்கும்” எனத் தோளில் இடித்துக் கொண்ட தாயின் எள்ளலை அவள் கவனிக்காமலில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. “இன்றைய பொழுதை சமாளித்தாயிற்று” என எண்ணிய வாறே சமைத்தவற்றைப் பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் பரிமாறினாள். அதன்பின் வழமைபோல கணவனின் முணுமுணுப்பு, சிறு சச்சரவின் பின் எல்லோரும் உறங்கச் சென்றார்கள். அவளால் உறங்க முடியவில்லை. மனம் செக்கு மாடாய் ‘போன்கோலை’ப் பற்றியே சுற்றிவந்தது. 

எத்தனை விதமான மனிதர்கள்! யாரைத்தான் நம்புவது…? அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. எவ்வளவு மரியாதை வைத்திருந்தாள்? ‘சேர்’ ஆம் அவள் விபரம் தெரிந்த நாளிலிருந்து அவரை இப்படித்தான் அழைத்து வருகிறாள். ஐந்தாம் வகுப்பிலிருந்து க.பொ.த சாதாரண தரம் வரை அவரிடம் கல்வி கற்றிருக்கிறாள். “மகளுக்குச் சமமான என்னிடம் எப்படித்தான் கேட்க மனம் வந்ததோம்…” எண்ணம் தீயாய்ச் சுட்டது. அவள் மதிப்பு வைத்திருந்த அந்தப் பெரியமனிதன் ஒரு வாரமாக அவளை அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறான். எத்தனை நாள் திட்டமோ? அவர் நேரில் கேட்டபோது தான் அதிர்ந்து வியந்தாள். ‘அவ்வளவு கீழத்தரமாக அவர் கேட்பதற்கு எந்த வகையில் நான் காரணமானேன்?… வறுமையா?…” புரியாமல் குழம்பினாள். கணவன் புரண்டு படுப்பது தெரிந்தது. ‘இவனிடம் கூறாமல் இருப்பதே நல்லது’ என நினைத்தவளின் கைகள் அனிச்சையாய் கன்னங்களைத் தடவின. நேற்று அவன் வரும் போது வீட்டில் இருக்க வில்லை என்பதற்காக அறைந்தது, இன்னமும் வீக்கம் வற்றாமலிந்தது. அவளையுமறியாமல் ஒரு துளி கண்ணீர் பொத்தெனத் தலையணையில் விழுந்து, புதைந்து காணாமல் போனது. இரவுகளில் தானே யாருக்கும் தெரியாமல் அழ முடிகிறது. பகலில் அழுதால் யாராவது ஏனென்று கேட்பார்கள். பதில் சென்னாலும் சொல்லா விட்டாலும் பலகதைகள் ரெக்கை கட்டும். வீண் வம்பேன்? சுயமாய் அழுது சுயமாய்த் தீர்வு காண்பதே சுபம் 

திடீரென அந்தக் கவிதை வரிகள் நினைவில் மீண்டன. 

‘இரவுகள் இனிமையானவை தான்… 
ரணப் பெண்களின் வேதனைகளைச் 
சீழ்கட்டித் திரையிடுவதால்!….” 

எத்தனை பொருத்தமான வரிகள்! கூடவே கவிதையின் சொந்தக்காரியும் நிழலாய் விரிந்தாள். அவள் வேறு யாருமல்ல ரூபிணியின் உயிர்த்தோழி மதிவதனிதான். பெயருக்கேற்றாற்போல் மதிநுட்முடையவள். எவ்வளவு சுதந்திரமானவள்! ரூபிணியின் முகம் சட்டெனப் பிரகாசித்தது. அவள் தான் சரி… உடனே அவளைக் காணவேண்டும் போலிருந்தது. எப்படியாவது அவளிடம் இதைக் கூறிவிடவேண்டும். அவள்தான் இதற்கு மிகச் சரியான தீர்வைக் கூறக் கூடியவள். நம்பிக்கைக் கீற்றில் பாதை கண்டுபிடித்த வழிப்போக்கன் போல நிம்மதியாய் உறங்கிப் போனாள். நம்பிக்கை தானே ஏழைகளின் தும்பிக்கை ! கனவில் அம்மன் வந்தாள். 

அது ஒரு மலையகக் கிராமம். ஒரு காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களாக இருந்த லயன்கள் பிரதான வீதியை அண்மித்திருப்பதால் அபிவிருத்தி அடைந்து நாகரீகக் கிராமமாக மாறிவிட்டது. ஐம்பது வருடங்கள் ஊரை ரொம்பத்தான் மாற்றின. லயன்கள் மறைந்து நகரத்துப் பாணியில் கடையோடு இணைந்த வீடுகளாகிவிட்டன. பின்புறமிருந்த மாட்டுக்கொட்டகைகளும் வீட்டுத் தோட்டங்களும் குடியிருப்புக்களாகி ஆரவாரித்தன. கோவில்களும், பள்ளி, தேவாலயம், பன்சல என்பனவும் இலங்கையின் பிரதான மக்கள் யாவரும் அங்கு வாழ்வதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன. மொத்தம் முப்பது கடைகள் மட்டுமே இருந்த அக் கடைவீதியில்… பாதி கொம்யூனிகேஷன்களும் அடகுக் கடைகளுமாக இருந்தன. கடந்த ஒருவருட காலத்திற்குள் திறக்கப்பட்டிருந்த மக்கள் வங்கியும் கிராமிய வங்கியும் அடகுச் சேவையை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருந்தன. நாகரீக வளர்ச்சி கண்டும் அறியாமையில் உழலும் வாடிக்கையாளர்களிடம் சேமிப்பை எதிர்பார்த்தது வங்கிகளின் தோல்விதான். அரச வைத்தியசாலை ஒன்றும் தபாலகமும் அமைந்திருந்தன. மொத்தத்தில் அந்தக் கிராமத்தைச் சுற்றி அமைந்தி ருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலார்களின் தேவைகளை எழுபத்தைந்து வீதம் பூர்த்தி செய்யும் வகையில் வளர்ச்சி கண்டிருந்தது கிராமம். 

இரவெல்லாம் பெய்த மழை காலையில் ஓய்ந்திருந்தது. அந்தப் பெருவீதி கழுவித் துடைத்தது போல சுத்தமாகக்கிடந்தது. கதிரவன் உச்சி நோக்கி ஏறத் தொடங்கியிருந்தான். அன்று சனிக்கிழமை என்பதால் வீதியில் நெரிசல் குறைவாக இருந்தது. வாகனங்களும் நிதானமாக வழுக்கிக் கொண்டிருந்தன. வீதியோரம் ஒரு நாய் குப்பைகளைக் கிளறியபடி ஹோட்டலில் கண்ணாடிப் பெட்டிகளில் அடுக்கப்பட்டிருந்த பழைய வடைகளை ஏக்கமாய்ப் பார்த்தது. 

“வணக்கம் சேர்” 

”வணக்கம் வணக்கம், என்ன சிவனு காலமயே…” 

“சேர் மகளுக்கு ஐடியங்காடுக்கு படம் கேட்டீங்க…” எனத் தலையைச் சொறிந்தவாறே படத்தை நீட்டினார் அந்த முதியவர். 

“ஆங்… சரி சரி நா கிராமசேவகர்கிட்ட சொல்லி இருக்கேன். ஃபோம் தந்தவுடன நிரப்புவமே… அடுத்த வெள்ளி வாங்க பாப்பம்” என்று பதிலிறுத்தவாறே அவசர அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்தார் அந்த சமூக சேவகர். வந்தவர் போய்விட்டார். மோகன்ராஜ் என்றால் அந்த ஊரில் தெரியாதவர்களே இருக்கமுடியாது. நாற்பத்தைந்து வயது கூட நிரம்பாத சமாதான நீதவான். சமூகசேவகர். பகுதி நேரமாக நகரப் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். 

அரசாங்கம் அவரை நியமித்து என்னவோ சிறந்ததொரு கல்விச் சேவையை எதிர்பார்த்துத்தான். மோகன் ராஜைத் தேடிவரும் அன்பர்களின் பிரச்சனைகளைச் செவிமடுத்துத் தீர்க்கவே அவரின் ஆயுள் போதாமல் இருந்தது. இந்நிலையில் இரண்டு பாடவேளைகளாவது கற்பிப்பதே அதிகம். டியுஷன் வகுப்புகள் மோகன்ராஜ் போன்றவர்களுக்குப் பெரும் சேவையாற்றின. அவற்றின் புண்ணியத்தால் அவரின் மாணவர்கள் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டிருந்தார்கள். ஊராரின் பார்வையில் நல்ல சமூக சேவகர். அவரின் சமூக சேவையால் ஆடைத் தொழிற்சாலைகள், கொழும்புக் கடைகள் என்று மலையக இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், காணி உறுதி என்று ஏராளம் சேவைகள் அவரால் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பலர் சொல்லிக் கொள்கிறார்கள். எனினும் அவர் லஞ்சம் வாங்குவதாகவும் உருப்படியாக எதுவும் செய்யமாட்டார் வீணாக காலம் தாழ்த்துவாரெனவும் குற்றம் சுமத்து வோரும் இல்லாமலில்லை. 

எது எப்படி இருப்பினும் ஊரில் அவருக்கென்று மதிப்பும் மரியாதையும் இருந்தன. எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான அவரின் இளம் மனைவி இரண்டாவது பிரசவம் முடிந்து தாய்வீட்டில் தங்கிவிட்டதால் அவர்பாடு திண்டாட்டம்தான். என்ன செய்வது? தனிமைத் தவிப்புத்தான். காலையில்தான் ரூபிணியி டமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பாவம் ரூபிணி அவளுக்குத்தான் எத்தனை பிரச்சனைகள். ஏதாவது உதவவேண்டும். என எண்ணிக் கொண்டவருக்கு புதிதாகத் திறக்கவிருக்கும் நூலகம் ஞாபகத்தில் உதித்தது. 

வாரிய கொஞ்ச முடியையும் சிரமப்பட்டு மேவி உச்சிக்கு கொண்டு வந்து வழுக்கை மறைத்து மறுகாது வரை கொண்டு சென்று முடித்தார். அது மறைவதாய் இல்லை. அக்கியுபஞ்சர் முறையில் முடிவளர வைக்க வேண்டுமென்ற எண்ணம் மறுகணமே நமுத்துப் போனது. இந்த முறையில் வழுக்கை நீக்கி முடிவளர்க்க நினைத்து தலையெல்லாம் சீழ்பிடித்து ஆஸ்பத்திரியில் கிடைக்கும் தியாகு ஞாபகத்தில் உதித்திருக்க வேண்டும் ‘சே…’ சீப்பை வீசிவிட்டு விரைந்து கதவு பூட்டு, சாவியை பக்கத்துக் கடையில் கொடுத்து, அடுத்த திருப்பத்தில் இருக்கும் ரூபிணியின் இல்லம் நோக்கி விரைந்தார். அவரின் மனக் கண்ணில் ரூபிணி நிழலாடினாள். 

தேவலோக ரம்பையே நேரில் வந்தாற் போன்றதொரு தோற்றம். நிலா முகத்தில் கதைபேசும் வண்டு விழிகள், கூரான நாசியும் வாளிப்பான சிவந்த தேகமுமாக பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு அழகை இயற்கை அவளுக்கு வாரி வழங்கியிருந்தது. இரண்டு பிள்கைள் பெற்ற பின்னும் கட்டழகு குலையாத இருபத்தேழு வயது தேவதையாக திகழ்ந்தாள். சுறுசுறுப்பும் துடுக்கான பேச்சும் கொண்டவள். ‘ஓடிஓடி உழைக்கணும்’ என்ற கூற்றை மெய்ப்பித்துக் கொண்டிருந்தாள். வேலையற்ற கணவனை வீட்டில் வைத்துக் கொண்டு கடைகளுக்குச் சிற்றுண்டிகள், உணவுகள் தயாரித்தும் டியுஸன் வைத்தும் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறாள். இந்த மாதம் தான் கணவன் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறான். 

கடை கடையாய் ஏறியிறங்கும் ரூபிணி மோகன் ராஜின் கண்களில் அடிக்கடிபட்டது வியப்பில்லைத்தான். அவரின் மனைவிக்கு பல சமயங்களில் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறாள். சோம்பேறி மனைவிக்கு ஓடியாடும் ரூபிணி வந்து போவது பேருதவியாக இருந்தது. அதனால் ரூபிணியின் குடும்பநிலை மோகன்ராஜ் குடும்பத்துக்கு ஓரளவு தெரிந்திருந்தது. அவளின் வறுமையும் அவளது கணவனின் சந்தேகக் குணமும் தான் இத்தனை துணிச்சலாக மோகன்ராஜை அவளிடம் அப்படிக் கேட்க வைத்தது. மனைவிக்கு உதவியவள் தனது தனிமைத் தாகத்தையும் தீர்ப்பாள் என ஏங்கிக் கொண்டிருந்தார். நெடுநாளாய்த்தான் அமைத்த வியூகம் இன்று முழுமையடைந்திருப்பதாகப்பட்டது. 

வீட்டை அண்மித்த போது உள்ளே பல பேச்சுக் குரல்கள் கேட்டன. மோகன் ராஜுக்கு குழப்பமாக இருந்தது. திருப்பிப் போய்விடலாமா என நினைத்து முடிக்கு முன்பே ஆளரவம் உணர்ந்து எட்டிப்பார்த்த மதிவதனி “வாங்க சேர்” என்றாள். அவருக்குள் இலேசாக நடுங்கியது. உள்ளே நுழைந்தவருக்கு மேலும் ஆச்சரியம். சுத்தமான அந்த வராண்டாவில் பெண்கள் பட்டாளம் ஒன்றே அமர்ந்திருந்தது. ரூபிணியை மட்டும் எதிர்பார்த்து வந்தவருக்கு இந்த சூழல் திகைப்பைக் கொடுத்தது. ஒரு மூலையில் வெள்ளைப் பூக்கள் தொடுத்த மாலையுடன் குத்துவிளக்கெரிந்து கொண்டிருந்தது. பக்கத்தில் நிறைகும்பம். என்ன நடக்கிறது என்பதை ஊகித்தறிய முடியாமல் விக்கித்துப் போனார். மதிவதனி அவருக்கு இருக்கை கொடுத்து உபசரித்தாள். 

அவர் அங்கு பிரசன்னமானதால் சிறிய இடை நிறுத்தத்தைத் தொடர்ந்து மீண்டும் தன் உரையை ரூபிணி தொடர்ந்தாள். மோகனப் புன்னகையை எதிர்பார்த்து வந்தவர் அவளின் எள்ளல் இளநகையால் வியர்த்து நெளிந்தார். அவருள் இருந்த காமன் கொஞ்சம் கொஞ்சமாக பொசுங்கிக் கொண்டிருந்தான். ஆறு வயது முதல் அறுபது வயது வரை படித்த, படிக்காத பெண்கள் அந்த வீட்டை நிறைத்திருந்தார்கள். தனியனாய் அவர் தவித்தார். 

ரூபிணியின் குரல் சன்னமாய் ஒலித்தது. “… பெண் என்றாலே காமக் கண் கொண்டு விழுங்க அலையும் நீசர்கள் நிறைந்த இந்த சமூகத்தில் நம்மை நாம் தான் காத்துக் கொள்ளவேண்டும். பெண்களின் நல்வாழ்வுக்காய் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும் இந்த மகளிர் அமைப்பு தொடர்ந்து பல செயற்றிட்டங்களை அமுல்படுத்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பல கைத்தொழில் பயிற்சி வகுப்புகள் மட்டுமன்றி தற்காப்புக்கலைப் பயிற்சி வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவ்வங்குரார்ப்பண வைபவத்தை சமூக சேவகரும், சமாதான நீதவானும் மதிப்புக்குரிய ஆசிரியருமான திரு மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில் நடத்துவதையிட்டுப் பெருமையடைகிறேன். இப்படியொரு காத்திரமான சேவையை ஆரம்பிக்க என்னைத் தூண்டிய அப்பெருமகனாரின் பங்களிப்பை என்றும் மறவேன்…” 

அவள் பேசப் பேச அவர் குறுகிக் கொண்டிருந்தார். அந்த வண்டு விழிகள் அத்தனையும் அவரை ஒரு சேர மொய்ப்பதாகப்பட்டது. குறுகுறுக்கும் அவர் மூளையும் உள்ளமும் குடையப்பட்டு குடையப்பட்டு அமுகிக் கொண்டிருந்தன. ஆழமறியாமல் வைத்த காலை முதலை கவ்வியது போலிருந்தது. அவரின் ஈனப்புத்தியில் எப்படிக் குத்திவிட்டார்கள் இந்தப் பெண்கள்! புண்ணாகிப் போன மூளையின் ஒவ்வொரு சொல்லும் அவரைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரே கேள்வி “அதை இவர்களிடம் கூறிவிட்டாளா?” என்பதாக இருந்தது. 

(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை)

ஆசிரியையாகக் கடமையாற்றும் வட்டவளையைச் சேர்ந்த செல்வி ஆ. புனிதகலா கடந்த பத்தாண்டு காலமாக எழுத்துலகில் தடம்பதித்துள்ளார். பெருமளவிலான கவிதைகளை எழுதி வரும் இவர் கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிறுகதைத்துறையிலும் ஆர்வம் கொண்டு ஆக்கங்களைப் படைத்துவருகின்றார். தினமுரசு, வீரகேசரி, தினகரன், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை வெளியீடுகளான கலையருவி, மதுரத்தமிழ், தேட்டம் ஆகியவற்றிலும் ஞானம், பெண், வடம் ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளிலும் இவரது கவிதை ஆக்கங்கள் பிரகரமாகியுள்ளன. திரு.அந்தனி ஜீவாவின் “குறிஞ்சிக் குயில்கள்’ கவிதைத் தொகுப்பில் இவரது கவிதையும் இடம்பெற்றுள்ளது. விபவி கலாசாரமையம் (2003) நடாத்திய சிறுகதைப்போட்டியில் ‘தீக்குள் விரலை வைத்தால்’ என்ற சிறுகதைக்கு பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளார். தினகரன் வாரமஞ்சரி நடாத்திய மானஸி முத்திரைச் சிறுகதைப்போட்டியில் 2004 நவம்பர்மாத முத்திரைச் சிறுகதையாக ‘பொழக்கத்தெரியாத பய’ என்ற இவரது சிறுகதை தெரிவு செய்யப்பட்டது. சமூகப் பிரக்ஞைமிக்க ஆக்கப்படைப்புகளை எழுதிவருகின்றார். 

– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *