வித்தியாசமான பாம்பு
(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டுப் படியில் கால் வைக்கும் போதுதான் அன்று மாலை மதுராவின் பிறந்ததின வைபவத்திற்குப் போகவேண்டுமென்று சியாமளா காலையில் கூறியது நினைவிற்கு வந்தது. காய்ச்சலால் ஒருவார காலம் படுத்திருந்து விட்டு, அன்றுதான் பணியகத்திற்குப் போய்த் திரும்பியிருந்தேன். உடல் ஒரே அசதியாக இருந்தது.
“சியாமளா ஆயத்தமாக இருட்பாள். இனியும் அலைய முடியாது. மகன் திவாகரனுடன் சியாமளாவை அனுப்பி வைப்பது தான் நல்லது….”
ஒரு தீர்மானத்துடன் உள்ளே சென்று உடை மாற்றும்வரை என் மனைவி என் கண்ணில் படாதது ஆச்சரியத்தைத் தருகிறது.
நேரத்துடன் வரவில்லையென்ற கோபமோ? தனது கோபத்தை, கவலையை இப்படித்தான் அவள் வெளிப்படுத்துவது வழக்கம்.
தேநீருடன் உள்ளே வந்தாள் மகள் ரம்யா.
“என்ன அம்மாவைக் காணேல்லை.. என்ன. நடந்தது?”
“..உங்களுக்கு நடந்தது தெரியாதே அப்பா? அந்தப் பாம்பை அடிச்சுச் சாக்கொல்லிப் போட்டினம்…”
“எந்தப் பாம்பை?”
எனக்கு எதுவுமே புரியவில்லையென்பதை என் கேள்வி மகளுக்குப் புலப்படுத்தியிருக்கும்.
“அம்மன் கோயிலிலை இருந்ததே. அதுதான் அம்மா ஒரே கவலையாயிருக்கிறா அவ வெள்ளி, செவ்வாயெல்லாம் போய் கும்பிடுகிறவவெல்லே…” மகள் விளக்கினாள்.
“அது அரசமரத்திலை தானே இருக்கிறது. கோயிலுக்குள்ள போய் மரத்திலை ஏறி அதை என்னண்டு சாக் கொல்லிச்சினம்?”
என் மனதிலேற்பட்ட சந்தேகம் வாய் வழியே வந்தது.
“அது வெளியிலை வந்திருக்கு. அந்த ஆலமரத்தடியிலை தான் அடிச்சுப்போட்டிருக்கு…”
“ஆர் அடிச்சுப்போட்டது?”
“உவங்கள் சிவாவையள் தான் அடிச்சுப்போட்டிருப்பினம்” என் கேள்விக்குப் பதில் கூறிக்கொண்டே சியாமளா உள்ளே வந்தாள்.
“அம்மா எப்பவும் அவங்களிலைதான் குற்றஞ்சாட்டுவா..” என்று குற்றஞ்சாட்டிக் கொண்டே தாயை தொடர்ந்து மகன் திவாகரன் பின்னே வந்தான்.
“அவங்களுக்கு உதுதானே வேலை” சியாமளா தீர்மான மாகவும் கோடமாகவும் சொன்னாள்.
“ஏன் அடிச்சவங்கள்?” நான் குறுக்கிட்டேன்.
“ஏன் அடிச்சது? ஆர் அடிச்சது? எண்டு ஒண்டும் தெரியா தப்பா. அம்மா சும்மா சொல்லுறா” ரம்யாவின் பதிலைக்கேட்டதும் சியாமளாவில் எனக்குக் கோபம் வந்தது.
“காணாததைக் கண்டமாதிரிச் சொல்லி வீண்வம்பை விலைக்கு வாங்குறீர்” காரம் என் சொற்களில் குடியேறியிருந்தது.
ஒரு நாளைக்கு உண்மை வெளியிலை வருந்தானே. இருந்து பாருங்கோ… அவங்களுக்கு அதிலை நம்பிக்கையில்லை”
“அவை சொல்லுறதும் சரிதானே அம்மா. பாம்பு பாம்புதான். நீங்கள் பால் வார்த்தாலும் அது தன்னுடைய இயல்பான குணத்தைக் காட்டி கடிக்கக்கூடும்…”
திவாகரன், சிவா முதலிய தன் நண்பர்களின் கருத்துச் சரியென வாதிட்டான்.
“அந்தப் பாம்பைக் கண்ணாலை கூடப் பார்த்திருக்க மாட்டாய்.. அதைப்பொல்லாத பாம்பெண்டு எப்பிடிச்சொல்லுறாய்?”
அந்த தெய்வீகப் பாம்பு பல நன்மைகள் செய்த பாம்பு. அது யாருக்கும் தீங்கு செய்யாது.. என்று உறுதியாக நம்பிய சியாமளா, மகனுடன் வாதிட்டாள்
“அது கோயிலிலை நல்ல பிள்ளையாய் இருந்துதோ என்னவோ என்னைப் பொறுத்தவரை அது எத்தனையோ பேரைக் கடிச்சுச் சாக்கொல்லியிருக்கும். இப்பகூட வெளியிலை போய் என்ன செய்ய நினைச்சுதோ?”
திவாகரன் அதைக் தீங்கு செய்யாத பாம்பென்று தாயைத் திருப்திப்படுத்துவதற்காகக் கூடக் கூறத் தயாரில்லை.
நான் ஆற அமர இருந்து, தேநீர் அருந்தி முடித்தும் அவர்களது விவாதம் முடிந்தபாடாக இல்லை.
“சரி, பாம்பு செத்துபோச்சு, அது செத்ததுக்கும் உங்களுக் கும் ஒரு தொடர்புமில்லை. வீணாய் ஏன் சண்டை போடுறியள்?” அவர்களது விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முயன்றேன்.
“சும்மா நாகத்தைக்கொண்டாலே கூடாது. இது கோயில் பாம்பு… ஊருக்கு என்ன நடக்கப் போகுதோ?”
சியாமளாவின் மனத்திலிருந்த பயமும் கவலையும் குரலிலும் கலந்து வெளிவந்தன.
“பைத்தியக்காரக் கதை கதைக்காதையுங்கோ. விஷ நாகத்தை ஊருக்குள்ளை வளர்க்கிறதுதான் கேடு. எங்கையோ பழக்கப்பட்ட நாகமாக்கும் அதாலை சனத்தோடை நல்ல பாம்பு மாதிரிப் பழகியிருக்கு… ஆனால் நச்சுப்பல்லு இல்லாமல் போயிருக்காது.” திவாகரன் தீர்மானமாகச் சொன்னான்.
“ஓமம்மா.. நஞ்சுப்பல்லை பீடுங்கினாக்கூட பிறகும் வளரு மாம்” ரம்யாவும் அண்ணா பக்கந்தான் என்பது போலக்கூறினாள்.
“மற்றப் பாம்புகளை நீங்கள் என்னவேணுமெண்டாலும் செய்யுங்கோ.. இந்தப் பாம்பு ஒருதருக்கும் ஒண்டும் செய்யேல்லை யெண்டதுக்காகவேனும் கொல்லாமல் விட்டிருக்கலாம். என்ன மனுசரப்பா!! செத்ததுக்காக கவலைப்படுகிறது கூட பிழையெண்ட மாதிரி அப்போதை தொடங்கி இந்தப் பொடியன்…”
சியாமளாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
இந்த அளவுக்கு அவளை உணர்ச்சி வசப்பட வைக்குமள விற்கு இருந்ததால் அந்தப் பாம்பு வித்தியாசமானது தானோ?
நான் சிந்தனை வயப்பட்டேன்.
– சஞ்சீவி, 10-10-1998.
– கணநேர நினைவலைகள் (சிறுகதைத்தொகுதி), முதற் பதிப்பு: சித்திரை 2001, பிரணவன் வெளியீட்டகம், கோப்பாய், ஸ்ரீலங்கா.
November 26, 2026