பாதை மாறிய பயணம்

0
தின / வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
முதல் வெளியீடு: 1990
இணைய வெளியீடு: November 15, 2026
பார்வைகள்: 427
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் போகவேண்டிய பஸ்ஸைத் தவறவிடக் கூடாதே என்ற அவசரத்தில் வேகமாக நடந்து கொண்டிருக்கிறேன். பகற் பொழுதிற்குரிய கலகலப்பும் சுறுசுறுப்பும் அடங்கிக் கொண்டிருக் கிறது. அதுவும் விரைந்து செல்ல அனுசரணையாக அமைகிறது. 

ஆனால் இப்படி அவசர அவசரமாக பகலவனுடன் போட்டி போட்டுக் கொண்டு, நாங்கள் பகல் வேலைகளை முடித்துக் கொள்வதனாலேயே இப்படி பஸ்ஸிற்கு அவசரப்பட வேண்டி யிருக்கிறது. முன்பென்றால் இரவு படக்காட்சி முடிந்து வருபவர் கள் போகக் கூட பஸ்கள் இருக்குமே. 

சாவகச்சேரிச் சந்தையின் மாடிக்கட்டடத்தை அடைந்ததும் கண்கள் பஸ் நிலையத்தை நோக்குகின்றன. சாவகச்சேரி மானிப்பாய் பஸ் நிற்குமிடம் வெறுமையாகக் கிடக்கிறது. 

கைக்கடிகாரத்தைப் பார்க்கிறேன். நேரம் 5.15ஐ அண்மித்துக் கொண்டிருக்கிறது. பஸ் வரவேண்டிய நேரம். 

சாவகச்சேரி மருதனாமடம் மினிபஸ் நிற்குமிடத்தைப் பார்க்கிறேன். அங்கும் வெறுமைதான். மினிபஸ் ஐந்து மணிக்கே போயிருக்குமோ? 

என் கால்கள் வேகத்தை நழுவவிட்டு, ஆற அமர நடக்க ஆரம்பிக்கின்றன. கண்கள் சுற்றுப்புறக் காட்சிகளை மேயத் தொடங்குகின்றன. 

“ரஞ்சனாஸில் தொங்கிய வண்ண வண்ண உடைகளை இரசித்து, “செல்வ”த்தில் றோல்ஸும் முடிந்து வடை மட்டும் மீதமிருப்பதைக் கணக்கெடுத்து, குறிஞ்சியில் அசைந்தாடிய உடைகள் மீது கண்கள் தாவும் போது, என்னைத் தாண்டி வீதியிலே சென்றது. எங்கள் பாதை மினி பஸ் தான். 

“ஏன் இந்தப் பக்கத்தால் வருகிறார்கள்? ஓ! மில்லில் அரிசி மூடை ஏற்றி வருகிறார்களோ, ஐந்து மணிக்குப் போக வேண்டிய மினி பஸ், பஸ்நிலையத்தை ஒரு நோட்டம் விட்டு விட்டுப் பறந்துவிடுவார்கள்”. 

மனத்தோடு சேர்ந்து கால்களும் அவசரப்படுகின்றன. மினிபஸ் சாவதானமாக நிற்பது தெரிகிறது. “ஐந்தேகாலுக்குப் போக வேண்டியர்களாக்கும், பஸ் வந்தபின் அதை முந்திக் கொண்டு ஓடுவார்கள்”. 

நான் மினி பஸ்ஸினுள் ஏறி அமர்ந்து கொள்கிறேன். “பஸ் புறப்படக் கூடாது” என்ற ஏக்கம் போய்விட பஸ் உடனே புறப்பட வேண்டும்” என்னும் அவதி என்னுள் ஏறி அமர்ந்து கொள்கிறது. வட பிரதேச போக்குவரத்துச் சபை பஸ் வருகிறதா என் வீதியைப் பார்க்கிறேன். “பஸ் வந்தால் மினி பஸ் புறப்படும்” என்றொரு எதிர்பார்ப்பு. 

“இதென்ன இன்னுமொரு இதே பாதை மினிபஸ் வருகிறதே” நான் வியக்கிறேன். 

“டேய், வாறான்டா, சண்டை பிடிக்கப் போறான். கெதியாய் பஸ்ஸை எடு” நடத்துனர் மினி பஸ்ஸில் ஏறிக் கொண்டே சொல்ல, சாரதி அவசரமாக பஸ்ஸில் ஏறுகிறார். 

கண்ணிமைக்கும் நேரத்தில் வீதியின் குறுக்கே தாண்டி அந்த மினி பஸ்ஸும் நானிருந்த மினி பஸ்ஸின் அருகில் வந்து நிற்கிறது. 

“நீங்கள் என்ன நேரம் போகவேணும்? இன்னும் நிற்கிறியள். நான் ஐஞ்சேகாலுக்குப் போக வேணும் பின்னாலை பஸ்ஸும் வரும். சனம் முழுதும் அதிலை பொயிடும்.” அதன் சாரதி பாயாத குறையாகக் கோபத்துடன் இரைகிறார்.

“அரிசி மூடை ஏத்தப்போனம். சந்தர்ப்பங்களை நழுவவிட ஏலுமே?” இதன் சாரதி பதில் சொல்கிறார். 

“அரிசி மூடை ஏத்தலாம் நேரத்துக்குப் போயிருக்க வேணும். சட்டப்படிதான் என்னவும் செய்ய வேணும்”. 

“நாங்கள் போறம். நீங்கள் நிண்டு வாங்கோ” இதன் சாரதி சமாளித்துப் புறப்படப் பார்க்கிறார். 

“நிண்டு வாறதோ? பின்னாலை பஸ்வரும் முறைப்படி போகவேண்டியது நான். ஆனபடியால் நான் போறன். நீங்கள் நிண்டு வாங்கோ” 

அந்த மினி பஸ் திரும்பி வருவதற்கிடையில் நான் இருந்த மினிபஸ் புறப்படுகிறது. 

“வசதி வரேக்கை நாங்களும் உழைக்கத்தானே வேணும். கொஞ்சம் பிந்தின உடனே அவற்றை கதையைப் பார்த்தியளே?” நடத்துனர் கூறுகிறார். 

“உவரை அப்போதை அரிசி மூடை போடக் கேட்டனான். கனக்க டிமாண்ட் பண்ணினார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தெரியாதவன். கதையைப் பாரன்” ஒருவர் தன் கோரிக்கை நிறைவேறாத கோபத்தைத் தீர்த்துக் கொள்கிறார். 

மினிபஸ் சாவகச்சேரி பெற்றோல் நிலையத்தைக் கடந்து சிறிது தூரஞ் சென்றதும் வீதிச் சீர்கேடு அதன் வேகத்தைக் குறைக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற மினிபஸ் முந்தி விடுகிறது. இடையே மறித்த ஓரிரு பிரயாணிகளை ஏற்ற அது நிற்கவில்லை. அவர்களை ஏற்றிக் கொண்டதால் இந்த மினிபஸ் மேலும் பின் தங்குகிறது. 

“அவர் ஆக்களை ஏத்தினால் தெரியும்” நடத்துனர் கறுவிக் கொள்கிறார். 

எங்கள் பாதைக்குரிய அரசாங்க பஸ் சாவகச்சேரி நோக்கிச் செல்வதை நான் அவதானிக்கிறேன். 

“இவங்கள் பஸ்ஸோடை போட்டி போட்ட காலம் போய், தங்களுக்குள்ளே போட்டி போடுகினம்” ஒரு பிரயாணி அலுத்துக் கொள்கிறார். 

அரசாங்க பஸ்கள் மட்டும் ஓடிய அந்தக் காலம் என் நினைவில் வருகிறது. சில பாதைகளில் அத்தோடு சில தட்டி வான்களும் ஓடிய காலம் அது. அப்போதும் அரசுக்கும் இவர்களுக்குமிடையில் போட்டிதான். ஆனால் இவர்களின் ஆக்கிரமிப்பு இன்று போல் அன்றில்லை. 

“தனியார் மினி பஸ் சேவை ஆரம்பமாகி, படிப்படியாக அதிகரித்தபோது, அரசின் ஆதிக்கம் பல பகுதிகளில் இல்லா மலே போய்விட்டது. இவர்களிடையே போட்டியும் மனவேற்றுமை யும் இருந்தாலும் அரசை எதிர்ப்பதில் இவர்களிடையே ஒற்றுமை இருந்தது. இப்போது எல்லாம் போய், தங்களுக்குள்ளேயே போட்டி போடுகிறார்களே” என எண்ணிக்கொண்டேன். 

வயிரவர் கோவிலடியில் அந்த மினிபஸ் நின்ற பிரயாணி களை ஏற்றுவது கண்ணுக்குப் புலப்பட்டது. 

“அந்தா ஆக்களை ஏத்துகிறான்கள்” சாரதி கோபத்துடன் கூறுகிறார். 

“இவை எப்பிடி ஏத்துவினம்” நடத்துளரும் சேர்ந்து முறைக்கிறார்.  

“கைதடி மட்டும் ஆரும் ஏத்தலாம். கதையை விடுங்கோ’ ஒரு பிரயாணி சமாதானம் செய்ய முற்படுபவர் போலக் கூறுகிறார். மினி பஸ் சட்டதிட்டங்கள் அறிந்தவர் போலும். 

“அது சாவகச்சேரி யாழ்ப்பாணம் ஓடுகிறவை ஏத்தலாம். இவை எப்படி ஏத்துவினம்? அதிலை ஏறின அவ்வளவு பேரையும் இறக்க வேணும்” நடத்துனர் அதில் ஏறிய ஒரு பாவமுமறியாத பிரயாணிகளைக் கறுவிக் கொள்கிறார். 

“இவையின்ரை போட்டியில் எங்கையாவது மோதி எங்க ளைச் சாகக் கொல்லப்போறாங்கள்” என ஒரு மூதாட்டி கவலைப் படுகிறார். 

கைதடிப் பாலத்தைக் கடக்கும்போது இரண்டிற்கும் இடைவெளி குறைகிறது. இனி அதை இவர்கள் முந்தக்கூடும். 

“பஸ் வருகிறதா?” எனத் திரும்பிப் பார்கிறேன். அதைக் காணவில்லை. இவர்களின் போட்டி அதற்குச் சாதகமாக அமையப்போகிறது. 

கைதடிச் சந்தியிலும் எங்கள் மினி பஸ்ஸினுள் சிலர் ஏறிக் கொள்கிறார்கள். 

இது மிகுந்த சிரமப்பட்டு, முன்னே போவதை அண்மித்து விடுகிறது. 

இடைவிடாத ஹோர்ன் எங்கள் காதைப் பிளக்கிறது. 

“அவன் ரைம்கீப்பரிட்டை போய்க் கதைக்கப்போறான்” 

“நாங்களும் போய்க் கதைக்க வேணும்.” 

கோப்பாய்ப் பாலத்தைக் கடந்து போகும்போது பாலத்தின் சீர்கேடு வேகத்தைக் குறைக்கிறது. 

இராணுவம் தங்கள் ஆதிக்க எல்லைக்குட்படாமல் மக்கள் இந்தப் பாதையால் போய்வருவதைத் தடுக்க வெடி வைத்துப் பிரித்த அந்தப் பாலம், எத்தனையோ பேர் எவ்வளவோ முயன்று சீர்செய்தும் “எங்களை இனி யாராலும் இணைக்க முடியாது” என்று சவால் விடுவது போல் பழுதுற்றுக் கிடக்கிறது. அதைப் பயன்படுத்தி இது அந்த பஸ்ஸை முந்தி இடைமறித்து நிற்கிறது. 

“டேய் நீ எப்பிடியடா ஆக்களை ஏத்துவாய்?” 

“நான் தான் முறைப்படி ஓட வேண்டிய நான், விரும்பி, ஏறுகிறவையை ஏத்துவன்” 

“இறக்கடா ஆக்களை” 

“முடியாது” 

“எங்கடை பஸ்தான் சட்டப்படி ஓடுது. இதிலை ஏறாமல் அதிலை ஏறியிருக்கிறியள். பிரச்சினை இருக்கு.” 

பஸ்ஸிலேறும் ஆட்களை மிரட்டும் தொனியில் மினி பஸ்ஸிலிருக்கும் ஆட்களும் மிரட்டப்படுவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. 

சண்டையிட்டுக் கொண்டே இரண்டும் புறப்படுகின்றன. 

என் கண்கள் கடலைப் பார்க்கின்றன. 

காலையில் போகும்போது உதய சூரியனின் ஒளியில் தூரத்தில் தங்கமயமாகக் காட்சி தந்து மனதைக் கவர்ந்த கடல் அந்திப் பொழுதிலே இரத்தக் கடல் போல் எனக்குத் தெரிகிறது. காலையில் அலையெறியாமல் அமைதியாகக் கிடத்த கடல், பகல் முழுவதும் கதிரவனின் தகிப்பிலோ என்னவோ அமைதி யிழந்து அலைமோதுகிறது. 

“எதிர்ப்படும் காட்சியும் ஏறும் பஸ்ஸும் கூட எம் இன்றைய நிலையை ஏன் எனக்கு நினைவூட்டுகின்றனவோ?” என நான் எண்ணிக் கொள்கிறேன் 

கோப்பாய்ச் சந்தியில் ஹோர்ன் கதரியும் நேரக் குறிப் பாளரைக் காணவில்லை. இரண்டு பஸ்களும் பருத்தித்துறை வீதி யில் திரும்புகின்றன. 

“இதென்ன பஸ் மருதனாமடம் போகுமெண்டு ஏறினால் யாழ்ப்பாணம் போகுது?” 

இந்தத் திசை திருப்பத்தை எதிர்பார்சிக்காத பிரயாணிகள் அதிர்ந்து போயிருக்கின்றனர். 

கோப்பாய் பெற்றோல் நிலையத்திற்கருகில் இரண்டு பஸ் களும் தரிக்கின்றன. 

“அண்ணை, இவன் என்ன நேரம் சாவசகச்சேரியிலையிருந்து வெளிக்கிட்டவன் கேளுங்கோ” 

“இவர் ஏன் என்னை முந்திக் கொண்டு பஸ் எடுத்தவர் எண்டு கேளுங்கோ” 

முறைப்பாடுகள் தொடங்குகின்றன. 

“டேய் சனத்தைக் கொண்டுபோய் விடவேண்டிய இடத்திலை விட்டிட்டு நீங்கள் மட்டும் வந்து சண்டையைப் பிடியுங்கோ” நேரக்கட்டுப்பாட்டாளர் கூறுகிறார். 

இந்த அறிவுரை காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. 

“அவையைக் கொண்டு போய் விடலாம். எங்கடை பிரச்சினைக்கு ஒரு முடிவு சொல்லுங்கோ” 

சண்டை தொடர்கிறது. 

தான் போக வேண்டிய பாதையில் அரசாங்க பஸ் ஜம்மென்று செல்வதை நாம் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

– வீரகேசரி, 01-04-1990.

– கணநேர நினைவலைகள் (சிறுகதைத்தொகுதி), முதற் பதிப்பு: சித்திரை 2001, பிரணவன் வெளியீட்டகம், கோப்பாய், ஸ்ரீலங்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *