விதியை வெல்வோம் தோழி!




(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரஞ்சனா வீட்டின் புழக்கடை வழியே நுழைந்து, குளித்து, வேறு உடைமாற்றி, படுக்கையில் சரிந்தாள்.
“சூடா ரசம் சாதம் இருக்கு. அப்பளம் கூட பொரிச்சுட்டேன், சாப்பிடேன் ரஞ்சனா” என்று மாமியார் கூறியது கேட்காதது போலக் கிடந்தாள்.
மூத்த அம்மையாருக்கு மருமகளின் மன வேதனை புரிந்தது.
“இத்தனை இள வயசுல விதவையாகணும்றது நீலாவோட விதி. நாம மாற்ற முடியுமா? இத்தனை நாளு இவளையும், குழந்தையையும் தாங்கினவன் விபத்துல இல்லாம போயாச்சு. ரோட்டுல எத்தனை கிழம் கட்டைங்க ஊர்ந்து போவுது. வாரி இவள் மேலே ஏன் மோதணும்.. ? விதி.”
அத்தைப் பேச்சுக்கு, ரஞ்சனாவிடம் எந்தச் சலனமும் இல்லை. அவளுக்கு நீலாவை மிகவும் பிடிக்கும்.
‘ஐந்தடி உயரத்தில் செப்புச் சிலை மாதிரி இருக்கிற அவ உடம்பை மறந்திடுங்க. வெள்ளையும், சிவப்பும் பதமாக் கலந்த அந்த நிறத்தை விடுங்க. முழங்காலை இடிக்கற பின்னல், அழகு அத்தனையையும் மீறி என்ன கல்மிஷமில்லாத ஒளி அந்த நீலா முகத்துல… இல்லைத்தை? கபடேயில்லாத கண்ணும் சிரிப்புமா, 26 வயசுல இப்படி ஒரு பொண்ணு இருக்கறது அபூர்வம் அத்தை’ என்று பலமுறை சொல்லி ரசித்திருக்கிறாள் ரஞ்சனா,
அந்த அழகிய நீலா இப்போது விதவையாகி, வேதனையைக் கூடமுழுதுமாக உணர முடியாதபடி, விக்கி விறைத்து தன் 3 வயது பெண்ணைக் கட்டியபடி முடங்கிக் கிடந்ததைப் பார்த்து ஊரே உருக, ரஞ்சனாவைப் பற்றிக் கேட்க வேண்டுமா?
நேற்று காலை விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு ஓடிய ரஞ்சனா, இப்போது தான் வீடு திரும்பியிருந்தாள். “ஏம்மா ரஞ்சனா, நீ இரண்டு வாய் சாப்பிட்டுட்டு நீலாவுக்கும் கொஞ்சம் சாப்பாடு எடுத்துப் போறியா? குழந்தை என்ன சாப்பிட்டுச்சோ?”. இம்முறை மாமியாரின் பேச்சுக்குப் பலன் இருந்தது. எழுந்து சாப்பிட்ட ரஞ்சனா, பத்தே நிமிடத்தில் கேரியருடன் வெளியே விரைந்தாள்.
அன்றிரவு கணவனிடம் பேச்சை ஆரம்பித்தாள் ரஞ்சனா.
“நாம நீலாவுக்கு ஏதாவது செய்யணுங்க”
“எப்ப என்ன உதவினாலும் வந்து கேட்கட்டும்”.
”ம்ப்ச்… இதையேதான் எல்லாரும் சொல்றாங்க. அந்தச் சின்னப் பொண்ணு ‘உதவி உதவி’ன்னு ஒவ்வொரு வாசலா வந்து நின்னு புலம்பணுமா?”
“ஏன் ஆத்திரப்படற?”
“பின்ன? சுழலில் சிக்கிய தெப்பம் போல, அவ ஒண்ணும் புரியாம குழம்பற நேரமிது. என்ன உதவி தனக்குத் தேவைன்னு கூட அவளுக்குத் தெரியலை…”
மாமியார் அங்கலாய்ப்பாய்க் குறுக்கிட்டார்கள்.
“இத்தனை இள வயகல இது கொடுமை – பாவம் நீலாப் பொண்ணு,”
“எல்லாரும் இதையே தான் சொல்றாங்கத்தை. இன்னிக்குச் சாப்பாட்டை அவள் சொந்தக்காரங்க ஏதோ பாத்திருந்தாலும், நீலா சாப்பிட்டுருக்கல. நான் போய் இரண்டு வாய் சாப்பிட வைத்தேன். இரண்டு நாளில இவங்கெல்லாம் போன பிற்பாடு…?”
”உறவுக்காரங்க ஏதாவது செய்வாங்க.”
“நீலாவுக்கு அப்பா அம்மா இப்போ இல்லை. இரண்டு அக்காமாரும் வட நாட்டுல…”
”ம். யோசிப்போம்” என்ற கணவர், படுக்கையறைக்குள் நுழைந்து விட, ரஞ்சனா கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.
நீலாவின் அழகிய களங்கமில்லா முகம், அவள் மனதில் ஆடியது. அந்த முகத்தைக் கப்பியிருந்த துக்கத்தை, ‘இனியென்ன’ என்ற அச்சத்தை மாற்ற வேண்டும் என்று ரஞ்சனாவின் மனம் அசுர விழிப்புடன் அலைந்தது.
“டீச்சர் வேலை ரொம்ப பாந்தமாயிருக்கும். ஆனா, நீலா B.A. முடிக்கலையே”
“கணவர் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் வேலை பார்த்தவர். ஆக அங்கும் இவளுக்கு வாய்ப்பில்லை”
“வீட்டிலிருந்தே பலகாரம், பட்சணம் என்று ஆரம்பிக்கச் சொல்லலாமா?”
நீலாவின் கணவன் அவளைப் பூ போலத் தாங்கியது நினைவிலாடியது. வாயல் புடவைகளை அலுங்காது கட்டி எப்போதும் ‘பளிச்’சென்று இருப்பாள் நிலா. பொருத்தமான ரவிக்கை, உள்ளங்கழுத்தில் ஒரு மணி என்று அவளத்தனை நறுவிசாக உடுத்தும் கலை வெகு சிலருக்கே கைகூடும். இனி அப்படிப் பார்த்து, உடுத்தி, புன்னகையுடன் இருப்பாளா நீலா?
இருக்க வேண்டும்!
அவளை நம்பியும் ஒரு சிறு ஜீவன் உண்டே.
அந்நேரத்தில் தான் அந்நினைப்பு பொறியாய்க் கிளம்பியது. ரஞ்சனாவின் அண்ணன் கல்கத்தாவில் ரெயில்வே அதிகாரி. அண்ணி அடிக்கடிச் சொல்வாள்.
‘இங்கே கிடைக்கற காட்டன் புடவைங்க அத்தனை அழகு ரஞ்சி. உடுத்தியிருக்கறதே தெரியாத அளவு மெல்லிசு. நான் ஹோல்சேலில், மொத்தமா வாங்கி அனுப்பறேன். நீ அங்கே விற்றுப் பாரேன்’
ரஞ்சனாவிற்குச் சதா தோட்டம்தான். நட, களையெடுக்க, பூ பறிக்க, தொடுக்க, பிஞ்சு கத்திரிகளை அண்டை வீடுகளுக்கு விநியோகிக்க – என்று நேரம் போய் விடும். ஆக, ‘ஐயே… எனக்கு அதிலெல்லாம் ஆர்வமில்லை அண்ணி’ என்று மறுத்து விட்டாள்.
‘டோனகாலி, டாக்கா. சரிகை புடவைங்கன்னு, பருத்தியிலேயே எத்தனை தினுசுங்க’ – சிலாகித்துச் சொல்வதோடல்லாது அண்ணி, வகைக்கொள்றாய் ரஞ்சனாவிற்கு வாங்கியும் வருவாள்.
‘புடவை பிரமாதமாயிருக்கு’
‘எங்கே வாங்கினீங்க?’
‘கல்கத்தாவா? அதானே புது தினுசாயிருக்குன்னு பார்த்தேன். எனக்கு இரண்டு வருவிச்சுத் தர முடியுமா?’
இப்படியெல்லாம் பாராட்டு கிடைத்தாலும், அவற்றை வாங்கி விற்று அண்ணி சொல்வது போல மாதம் 1500, 2000 பார்க்கும் எண்ணம் அவளுக்குக் கிளம்பவேயில்லை.
இப்போது கிளம்பியது?
புடவைகளை ரெயில் மூலம் அண்ணாவை அனுப்பச் சொல்ல வேண்டியது. இங்கு மருத்துவக் கல்லூரியைத் தவிர்த்து நான்கு பெண்கள் கல்லூரிகள் – பல பள்ளிகள் – அலுவலகங்கள், இங்கெல்லாம் சேலைகள் அடங்கிய இரண்டு பைகளோடு போக வேண்டியது. நீலாவிற்குத் துணையாகச் சில வாரங்கள் தானும் கூடப் போகலாம்.
பிறகு தொழில் பிடிபட்டவுடன் நிலாவின் வீட்டு முன் பகுதியையே சிறு கடையாக மாற்றி விடவாம். ஒரு அலமாரி வாங்க வேண்டும். அவளுக்கு வரும் இன்ஷியூரன்ஸ் பணத்தில் 5000-த்தை இதில் முதலீடு செய்து மீதியை எப்.டி.-ல் போடணும்.
முதலில் இப்புதுமையான வேலைகளைப் பற்றி ஒரு கவர்ச்சியான போர்டு செய்யணும்.
மனதில் அலையலையாய் எண்ணங்கள் கிளம்ப, ரஞ்சனாவிற்குள் தெம்பு வந்தது. முடங்கிக் கிடக்கும் தோழியைத் தூக்கி நிறுத்த முடியும் என்ற தைரியம் வந்தது.
விதியே என்று பிறரைச் சார்ந்து கிடக்காமல், நீலாவை நிமிர்ந்து வாழச் செய்ய முடியும் என்ற தெளிவு பிறந்தது.
‘ஐயோ பாவம். கடவுள் இப்படிச் சோதிக்க வேண்டாம்’ என்பதைத் தவிர உருப்படியாகச் சொல்ல, செய்ய காரியங்கள் கிடைத்து விட்ட திருப்தியில் எழுந்து படுக்கப் போனாள் ரஞ்சனா!
– உயிர்நாடி, 1992.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.