கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2026
பார்வையிட்டோர்: 265 
 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3

பெங்களூரு சென்று அடைந்ததும் கல்லூரியில் லீவுக்கு அப்ளை பண்ணி விட்டு செந்தில் வேலூருக்கு புறப்பட்டு விட்டான். வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தான் அவன் தாயார் அனுமதிக்கப் பட்டிருந்தார். மூச்சு முட்டல் ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை பண்ண வேண்டிய சூழ்நிலை. இன்சூரன்ஸ் இருந்தது. ஆனாலும் முன்பணம் போட வேண்டுமே. நல்ல வேளையாக மூன்று பிள்ளைகளும் செலவைப் பகிர்ந்து கொண்டனர்.

அடுத்த வாரமே அறுவை சிகிச்சைக்கான நாள் குறிக்கப்பட்டு விட்டது.

மூன்று நாட்களில் செந்திலின் தாயாரின் முகத்தில் தெளிவு தெரிந்தது. பிள்ளைகள் மூவரையும் கூப்பிட்டார்.

” ஏன்பா, இந்த செலவு அவசியமா இப்போ? இன்னிக்கோ நாளைக்கோ நான் போகத்தான் போறேன். இந்த பணம் இருந்தால் உங்கள் வருங்காலத்துக்கு உதவும் இல்லையா?’ என்று அந்த அம்மாள் நிறுத்திய போது செந்தில் உடைந்து தான் போனான்.

அந்த அம்மாள் மூன்று பிள்ளைகளிடமும் தெள்ளத்தெளிவாகக் கூறி விட்டார்.

“நான் இன்னமும் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியாது. அப்பாவின் சொத்தை நான்கு பங்காக பிரித்துக்கொள்வோம். உங்களைக் கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன் என் செல்லங்களா” என்று தன் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

“என் பங்கு நான் இருக்கும் வரை ஒருவருக்கும் சுமையாக இல்லாமல் இருப்பதற்கு” என்று முடித்தார்.

“என்னம்மா நீங்க, எங்களை பத்து மாதம் சுமந்த நீங்க, இப்படி பேசலாமா?” என்று செந்தில் தாயிடம் முறையிட்டான்.

இதன் பின்னர் நாட்கள் ஓடினதே தெரியவில்லை.

இவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர்களது தாயார் நோய்வாய்ப்பட்ட மாதிரி இருந்தது.

அறுவை சிகிச்சை முடிந்து அவர் வீட்டிற்கு திரும்பி விட்டார். செந்திலின் இளைய அண்ணி மாமியாரைப்பார்த்துக்கொள்ளும் பொறுப்பை வலிய ஒத்துக்கொள்ள, நிலைமை சுமுகமாகப்போயிற்று எனலாம்.

சொத்து நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

ஆளாளுக்கு இருபத்தி ஐந்து லக்ஷம். செந்திலின் தாயாரின் பேரில் வங்கியில் தனி அக்கௌன்ட் தொடங்கி மாதா மாதம் வட்டி வரும்படி செய்தாகி விட்டது.

இரண்டு மாதம் ஓடினதே தெரியவில்லை.

நிர்மலா பரிகாரங்களை ஸ்ரத்தையாகச் செவ்வனே செய்து வந்தாள்.

பரணியின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. டெங்கு வந்து அவள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்க, செந்தில் போய் பார்த்து விட்டு வந்தான்.

செந்தில் வேலைபார்த்த கல்லூரியில் அவன் அக்கல்லூரியில் இருந்து விடை பெற வேண்டிய நாளும் வந்து விட்டது. அப்பாவின் சொத்து வந்து விட்டது . அதனால், செந்தில் வேறு வேலையைப்பற்றி கவலைப் படவில்லை.

மரம் வெச்சவன் தண்ணி விடாமலா போய் விடுவான் என்று செந்திலின் தந்தை அடிக்கடி கூறுவது உண்டு.

நிர்மலாவின் வருமானம் அடுத்த மூன்று மாதத்திற்கு போதும்.

“நிர்மலா, கல்லூரியில் நாளை தான் எனக்கு கடைசி நாள். உனக்கு வருத்தம் ஒன்றும் இல்லையே? என்னிடம் வேறு வேலை இல்லை” என்றான் செந்தில், குரலில் வருத்தம் தொனிக்க.

“என்னங்க இது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்வார்கள். இப்போது தானே பரிகாரம் செய்ய ஆரம்பித்து இருக்கிறோம். நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?” என்றாள் நிர்மலா.

“என்ன?” அவளைக்கேள்விக்குறியுடன் பார்த்தான் அவன்.

” நீங்க இன்னமும் இரண்டு நாட்களில் ஜோலார்பேட்டை போறீங்க. சின்ன அண்ணியிடம் சொல்லி விட்டு அம்மாவை இங்க அழைத்து வரீங்க. அம்மா நம்ம கூட இருக்கட்டும். உங்களுக்கும் மனதிற்கு ஆறுதலாக இருக்கும். வீட்டில் உட்கார்ந்தபடியே நீங்க வேலைக்கு அப்ளை பண்ணுங்க. உங்களுக்கு நிச்சயமாக வேலை கிடைக்கும் – உங்கள் திறமைக்கேற்ற வேலை. இது உறுதி.

விடாமுயற்சி பலனளிக்கும் செந்தில். நெ து சுந்தரவடிவேலு என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?”

“என்ன?”

“தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கையில் முன்னுக்கே வர முடியாது.

நீங்க முதலில் ஒரு நல்ல ஜிம்மில் சேருங்க. உடம்பைப்பார்த்துக்கோங்க. த்யானம் பண்ணுங்க. வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்”.

அடுத்த ஒரு மாதம் என்ன செய்வது என்பதற்கான திட்டம் தயார்.

அந்த கல்லூரியில் பிரிவு உபசார விழா முடிந்து செந்தில் பைக்கை உதைத்து கேட்டின் வாசலில் வந்து நின்ற போது இனம் தெரியாத ஒரு உவகையும் நிம்மதியும் அவனைத் தொற்றிக்கொண்டது.

சிறையில் இருந்து ஒரு கைதி வெளி வரும் போது, அந்த கைதியின் மனநிலை தான் செந்திலிடமும் தென்பட்டது.

விடுதலை… விடுதலை … சுதந்தரம் ….செந்திலின் வாய் தானாக முணுமுணுத்தது.

சஹாக்கர் நகரை நோக்கி செந்தில் பயணிக்கையில் நிர்மலா அவனிடம் சொல்லப்போகும் நல்ல சமாச்சாரத்தை (நீங்களே ஊகிக்கலாம்) அவன் அப்போது எதிர்ப்பாத்திருக்க வாய்ப்பில்லை.

(முற்றும்)

உபரி த் தகவல்: நிர்மலாவின் தந்தை அவரிடம் இருந்த நிலத்தையெல்லாம் வித்து விட்டு நிர்மலாவிற்கும் அவள் தங்கைக்கும் சரிபாதியாக பிரித்துக்கொடுத்து விட்டார். கிட்டத்தட்ட ஆளுக்கு ஒரு கோடி. ஆனால், நிர்மலா சொல்லப்போகும் தகவல் இதை விட முக்கியமானது. என்ன ஊகித்து விட்டீர்கள் தானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *