விடியல் வெளிச்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2025
பார்வையிட்டோர்: 125 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சுகன்யா அழகாக வளர்ந்து வருகிறாள். ப்பா! ப்பா! ப்பா!ன்னு மகள் கூப்புடுவதுலே எனக்கு எல்லாமே மறந்து போவுது…”

கணவனின் கடித வரிகள். 

மனக்குருத்தில் அதிர்வுகள். 

கௌசல்யாவின் உடல் லேசாக நடுங்குகின்றது. 

அபுதாபியிலிருந்து நாடு திரும்புவதற்காக கௌசல்யா தயாராகிக் கொண்டிருந்த வேளையில் கடிதக் கட்டு கண்களில் பட்டுவிட்டது. 

அது அவளுடைய பொக்கிஷம். 

ஒவ்வொரு கடிதத்தையும் ஓராயிரம் முறை கண்கள் விழுங்கிவிட்டிருக்க ஒவ்வொரு சொற்களும் வரிகளும் மனபூமியில் ஆழமாக வேரோடியுள்ளன. 

கணங்களின் அசைவாட்டம் அவை. 

சீட்டுக்கட்டாக சரசரவென இழுத்துவிட்டுக் கொண்டபோது கடிதம் ஒவ்வொன்றினுள்ளும் முத்து முத்தாக அந்த வரிகள்.. 

கண்கள் மின்மினிப்பூச்சிகளாகச் சிறகடித்துப் படபடக்கும். 

‘சுகன், அழகாக வளர்ந்து வருகிறாள்!’

முதல்வரிகள் இவ்வாறுதான் தளிர்களாக முளைவிட்டிருக்கும். 

கண்களில் நீர் மணிகளின் பளபளப்பு.

‘என் மகள்! என் மகள்!? 

நெஞ்சம் அறைந்து கொள்ளும். 

கணவன், குழந்தைகள் அவர்களின் நினைவுகள் நெஞ்சிற்குள் அலைகளாகப் புரண்டெழ லக்கேஜின் அருகில் அமர்ந்து தலையைச் சாய்த்துக் கொள்கிறாள். கண்களில் பொங்கித் ததும்பிய நீர் வாய்க்கால்களாக நீண்டு கன்ன விளிம்பில் மழைத்துளிகளாக சட்டென உதிர்கின்றன. கை, முழங்கால், மடி அனைத்திலும் கண்ணீர் நனைவு. 

கால தேவன் எவ்வளவு வேகமாக நாட்களை விழுங்கித் தள்ளுகிறான். 

அபுதாபி வந்த மூன்று வருடங்கள் மூன்றே மின் வேகத்துடன் நாள்போல் மறைந்துவிட்டனவே. 

பறக்கும் விமானத்தில் சிலையென தியானம். வீடு, கணவன், குழந்தைகள் நினைவுகளில் நிழலாட்டம். 


கட்டுநாயக்கா விமான நிலையம்…! 

விமான தளத்தின் தெருவோரமாக சனங்களுடன் சனமாக ஜெகன் நின்றிருந்தான். சுகன், சதீஷ் இருவரும் ஜெகனின் கைகளைப் பிடித்தவாறு நின்று கொண்டிருக்கிறார்கள். 

கௌசல்யா வருவதைக் கண்ட ஜெகன், மெல்ல குனிந்து “அதோ! அம்மா வர்ரா” என்று கிசு கிசுத்தான். பிள்ளைகளின் காதுகளுக்கு மட்டும் அந்த ரகசிய முணு முணுப்பு ஒலித்தது. 

சுகனின் பிஞ்சு விரல்கள் தந்தையின் கால்களை அணைத்துக் கொள்கின்றன. 

அதில் ஒரு திகிலின் இறுக்கம். சதீஷ் கண்களை உருட்டினான். 

அதில் மிரட்சியின் சலனம். 

இரு கைகளிலும் பெட்டிகளைச் சுமந்துவரும் அம்மாவை நோக்கி சதீஷ் தயங்கித் தயங்கி முன்னேறினான். சுமைகளைக் கீழே வைத்த கௌசல்யா சதீஷை இறுக அணைத்தாள். அம்மாவின் இரும்புப் பிடிக்குள் திணறிய அவனுடைய கன்னங்களில் முத்த மழையின் வருஷிப்பு. 

சுகன்…! 

‘ஓ’ வென அலறுகிறாள். மாலை மாலையாகக் கண்ணீர் பொழிகிறது. “என்ட கண்ணு வாம்மா” என எவ்வளவோ கெஞ்சி அழைத்தும் ‘ஊம்கும்…’ ஏதோ அந்நியப் பெண்ணைக் கண்டது போல கதறி அழுகிறாள். 

பிரபஞ்சம் தலைகீழாகச் சுழல்கிறது. 

பிரமை தட்டி நிற்கிறாள் கௌசல்யா. 

கை கால்களில் சீவன் இல்லை. ஜீவன் கரைந்து வழிந்துவிட்டது. 

‘என்ன இது? என் குழந்தை ஏன் இப்படிப் பயப்படுது?’ 

மனத்தில் வேதனை அறுபட்ட சேவலாகிறது. 

ஜெகன் அசையாது நிற்கிறான். 

ஏதோ சோகமான ஓவியமாக, உட்குழிந்த கண்கள், சவரம் செய்யாத முகம், புன்சிரிப்பை இழந்த உதடுகள். வாழ்வில் அனைத்தையும் இழந்துவிட்டதான துயரம். கண்ணொளியின் கீற்று அஸ்தமன உலகில் புதைந்து விட்டிருக்கிறது. 

கணவனை இறுக அணைத்து முத்தமிட நெஞ்சத்தில் துடிதுடிப்பு – அப்படி நடந்து எவ்வளவு காலம்…. 

ஆண்டவனே! 

அவள் இதயத் தளிர் நடுங்க மனத்தில் ஆவலின் துளிர். 

“கௌசல் டெக்ஷக்ஷியில் ஏறு!” 

ஜெகனின் குரல் காதில் விழுகிறது. 

விம்மி விம்மி அழும் சுகனைத் தூக்கி, தலைக்கேசத்தை வருடிவிட்டவாறே ஆறுதல் கூறி எதுவித சுரத்தும் இல்லாத குரலில் அவன் கூறினான். 

மெதுவாக ஒலித்த அந்தக் குரலில் மூன்று வருடங்களுக்குப் பின்னர் கௌசல்யாவைச் சந்திக்கும் ஆனந்தமோ, பூரிப்போ ததும்பவில்லை. 


வெம்மையும் பிரகாசமுமான வெயில். 

டாக்ஷி வேகமாக ஓடுகிறது. மின்னலெனப் பின் விரைந்து மறையும் மரங்கள், கட்டிங்கள். அவற்றை வெறித்த நிலையில் கௌசல்யா. 

பின் சீட்டில் அவள் சாய்ந்திருக்கிறாள். கண்கள் வெளி உலகில் பதிந்து கிடக்கின்றன. 

‘அபுதாபியில் கழிந்துபோன வாழ்க்கைக் கதையை கணவனிடம் கொட்டித் தீர்க்க வேண்டும்.’ 

இருதய இலை துடிக்கிறது, தூண்டில் புழுவாக. 

“அப்பப்பா! எவ்வளவு பெரிய வீடு அது. ராஜமாளிகைதான் போங்க. எங்க பாபாவுக்கு (வீட்டின் சொந்தக்காரர்) எத்தனையோ அமெரிக்க கம்பனிகளில் பங்காம். பாபா பொல்லாத கில்லாடி. மூன்று பெண்டாட்டிங்க, அம்மாடி! எல்லோருமே ரதிகள்தான். எனக்கு அவ்வளவு வேலை ஒன்னும் இல்லீங்க. ரெண்டு கெழடுங்க, அடேயப்பா கெழடுகளா அதுக. வெஷமம் புடிச்சதுக. அதுகளப் பார்த்துக்கிறதுதான் அம்மா ஜோலி…” 

திடீரென ஏற்பட்டவொரு மனஉந்துதலில் கெளசல்யா மடமடவென கொட்டினாள். 

“ஆமா! இதையெல்லாம்தான் கசெட், கசெட்டாகப் பேசி அனுப்பினியே!” 

பேச்சை இடைமறித்து ஜெகன் பேசியதும் கௌசல்யாவிற்கு மகிழ்ச்சியாகவிருக்கிறது. கணவன் தனது பேச்சுக்கு செவிமடுத்துக் கொண்டிருக்கிறான் என்பதனால் ஆனந்தம் ஊற்றெடுக்கின்றது. 

ஜெகன் பேசியபோதும் ‘சரசர’வென வண்டியை விழுங்கிக் கொண்டிருக்கும் வீதியை அவன் கண்கள் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. இமைகளில் நிர்ச்சலனம். 

”சிறீலங்கா போறேன் என்று சொன்னதும் கெழடுகள் ரெண்டும் அழத் தொடங்கிற்று. போறது சரி, ஒரு மாசத்திலே அபுதாபி திரும்பிடனும் என்று சொல்லி ரிட்டேன் டிக்கட்டை வாங்கிக் கொடுத்துட்டாங்க….” 

நீரலைகள் உருள்வது போன்ற ஓசையுடன் கலகலவென நகைக்கிறாள் கெளசல்யா. 

சட்டென வண்டி குலுங்கியது. 

சக்கரம் பள்ளத்தில் இறங்கி ஏறியதால் அந்தக் குலுங்கல். அனைவரும் எம்பி, எழுந்து விழுகிறார்கள். 

குலுங்கிய வண்டி மறுபடியும் நேராகி விரைகிறது. ஜெகன் திரும்பிப் பார்த்தான். 

அப்பொழுதுதான் அவனுடைய கண்கள் மனைவியை முழுமையாகத் தரிசித்தன. ஏனோ அதில் துயரம் கலந்த விஷமத்தனமான வெறுப்பு. 

“ரிட்டேன் டிக்கட்டோடையா வந்திருக்க?”

“ஆமாங்க.” என்று மகிழ்ச்சியுடன் கூறியவள் வேகமாக முன்னால் நகர்ந்து ஜெகனின் தலைக் கேசத்தை மிருதுவாகத் தடவி விடுகிறாள். 

மடியில் அமர்ந்திருந்த சுகன்யா அப்பாவின் கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டாள். சின்னஞ்சிறு விழிகள் மிரட்சியடைந்த பறவையென அம்மாவை எடை போடுகின்றன. பிஞ்சு உதடுகளில் அழுகையின் நளின கோலம். 

‘ஏன் இப்படிப் பார்க்கிறாள்?’ என நினைவுச் சூழலில் சிக்குண்ட கௌசல்யாவின் கண்களில் நீர் பனிக்கிறது. 

நா லேசாகத் தள தளக்க, “அம்மா கிட்ட வாம்மா” என கைகளை நீட்டுகிறாள். 

குழந்தையின் முகம் வெடுக்கென மறுபக்கம் திரும்பிவிடுகிறது. ‘அம்மாடி! என்ன குழந்த இவ.’ 

இதயம் நொறுங்குகிறது. ஆ!வென்ற அதிர்வில் நடு நடுங்குகிறது. 

டாக்ஷியின் மின்னலோட்டம். 

மரங்கள், வீடுகள், வாகனங்கள் விரைவாகப் பின்நோக்கி மறைகின்றன. கௌசல்யாவின் கண்கள் அவற்றில் நிலைகுத்தி நிற்கின்றன. 


வீட்டில் அமர்க்களம். 

அக்கம் பக்கத்துச் சனமும் கௌசல்யாவின் நண்பிகளுமாக நிறைந்துவிட்டார்கள். ஒரே கேள்வி மழை. 

கௌசல்யா சலிக்கவே இல்லை. மாரி மழையாக சளசளவென அனுபவங்களைக் கொட்டிக்கொண்டே இருக்கிறாள். 

மூன்று வருடங்களாக மூட்டை மூட்டையாக நெஞ்சிற்குள் கட்டி வைத்திருப்பவைகளைக் கொட்டிவிட ஆவல். அவசர அவசரமாக வார்த்தைகள் சிதறலாகின்றன. ஜெகன் வந்திருப்பவர்களுக்கு குளிர் பானம் கொடுப்பதில் கவனமாகவிருந்தான். அனைவரையும் உபசரிக்க வேண்டும் என்ற தடுமாற்றம் அவனுக்கு. 

மகள் சுகன்யா….! 

சிறுமி ஜெகனை விட்டபாடில்லை. விரல்கள் இரண்டினை வாயினுள் நுழைத்துக்கொண்டு உதடுகள் உப்ப சூப்பியவண்ணம், இன்னொரு கையினால் தந்தையின் களிசான் முனையை இறுக்கமாகப் பிடித்தவாறே அவன் ஓடும் திசையெல்லாம் இழுபட்டுக் கொண்டிருக்கிறாள். 

இத்தனை அமர்க்களத்திலும் சதீஷைக் காணவில்லை. 

எங்கே போய்விட்டான். 

தூசி பறக்க மைதானத்தில் மும்முரமாக புட்போல் விளையாடிக் கொண்டிருந்தான். 

அம்மா மூன்று வருடங்களுக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து திரும்பவும் வந்து சேர்ந்தது அவனுக்கு ஒரு பெரிய விஷயமாக இல்லையோ? 

அபுதாபி புராணத்தின் கதா காலட்சேபம் முடிந்தபாடாய் இல்லை. 

கேட்டுக் கொண்டிருந்தவர்களின் கவனமெல்லாம் அவள் என்ன கொண்டுவந்தாள் என்பதிலே இருந்தது. விசேஷமாக தமக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றதும், காக்கைக் கூட்டமாக ஒவ்வொருவராக மெல்ல மெல்ல கலையலானார்கள். 

அந்திசாய்ந்து வருகிறது. 

உடைகூட மாற்றாமல் புராணம் பாடிக் கொண்டிருந்த கௌசல்யா களைத்துப் போனாள். கட்டிலில் லேசாகத் தலைசாய்ந்தவள் பிணம்போல் ஆழ்ந்த துயிலில் அடங்கிவிட்டாள். பல நாட்களின் தூக்கம் இதோ கிடைத்துவிட்டது என்பது போல ஒரு அசுரத் தூக்கம். 


இரவு சிறகுகளின் விரிசல். 

வானம் கன்றிச் சிவக்கிறது. அடிவானில் கடும் சிவப்பு இரத்தம். 

வீட்டு வாசலில் சிறுவர்களின் ஆலோலம். 

மைதானத்தில் சதீஷும் செய்யதும் சண்டை பிடிக்கிறார்களாம். 

வாசலில் சிறுவர்களின் கத்தல். 

ஜெகன் வெலவெலத்துப் போனான். 

மைதானத்தை நோக்கிப் பாய்ந்தோடினான். 

மைதானத்தில் தூசி மண்டலம் குண்டுவெடிப்பு புகை போல் எழுந்து கொண்டிருக்கிறது. அதன் நடுவில் சதீசும், செய்யதும் ஆக்ரோசமாகக் கட்டிப் புரண்டு கொண்டிருக்கிறார்கள். 

அட்டா, சண்டை பிடிப்பதில் இருவருமே அசகாயச் சூரர்கள்தான். கட்டிப் பிடிப்பதும் எட்டி உதைப்பதும், பற்களை நரநரவென கடித்தவாறு தாக்குவதும் ஆஹா! மூர்க்கமான சண்டை. 

சதீஷைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கோபத்தில் எகிறிக் குதிக்கும் அவனுக்கு சட்சட்டென இரண்டு தட்டுக்களைத் தட்டி இழுத்துக்கொண்டு போவதே ஜெகனுக்குப் பெரும்பாடாகி விட்டது. 

குழாயடிக்கு இழுத்துச் சென்று நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டு தேனீரையும் ஊற்றிக் கொடுத்தபோது கௌசல்யாவின் நினைவு வருகிறது. 

படுக்கை அறையினுள் எட்டிப் பார்த்தான். 

கட்டிலில் கைகால்களை விரித்துப் படுத்துக் கிடக்கும் கௌசல்யாவின் கோலம் நெஞ்சை துணுக்குறச் செய்கிறது. இதென்ன இப்படி ஆபாசமாகப் படுத்துக் கிடக்கிறாள். 

நெஞ்சக் குருத்தில் ‘திமுக்’கென ஓர் அடி விழுகிறது. ஊமை அடி. விண்ணென வேதனை. 

‘வேறொரு நாட்டில் அந்நிய ஆடவர் வசிக்கும் வீட்டில் மூன்று வருடங்களாக கௌசல்யா இப்படி அலங்கோலமாகவா தூங்கினாள்?’ 

நெஞ்சில் வெறுப்பான நீர்க்குமிழிகள். அருவருப்பான நீர்வட்டங்களின் சலனம். 

‘சே! சே! இவள் இப்படி…!’ 

சுவாமி விவேகானந்தர் மீது ஆழ்ந்த பற்றுடையவன் ஜெகன். அவர் படத்திற்கு விளக்கேற்றி விட்டு வெகுநேரம் வணங்கினான். கண்களில் நீர் ததும்பி பனிக்கிறது. அவனையே ஒட்டிக்கொண்டு நின்று விரல்களைச் சூப்பிக் கொண்டிருக்கும் சுகன்யா தலையைத் தூக்கி அப்பாவின் முகத்தைப் பார்க்கிறாள். விசும்பலின் ரேகைகள் அந்த முகத்தில் நெளிந்தோடுகின்றன. 

அப்பாவின் மனத்தடாகத்தில் ஏற்பட்டுள்ள சலனங்களை அவள் பிஞ்சு மனம் உணர்கின்றதா என்ன? 

இரவுச் சாப்பாட்டின்போது கௌசல்யாவைக் கூப்பிடுவதற்காக ஜெகன் படுக்கையறைக்குள் மறுபடியும் எட்டிப் பார்த்தபொழுது அவள் அதே அலங்கோல நிலையில் ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்கிறாள். 

அமைதியான அந்த அலங்கோல உறக்கம் அவனைப் பெருமூச்சு விடச் செய்கிறது. வெளிநாடு போவதற்கு முன்னர் அவள் ஒருபொழுதும் இவ்வாறு உறங்கியதை அவன் காணவில்லை. 

அந்த நாட்களில்…! 

வீட்டுக் கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு அவள் படுக்கை அறை வருகின்றபோது ஜெகன் நித்திரை உலகில் வெகுதூரம் பிரயாணம் செய்திருப்பான். 

விடியலில், 

அவள் தட்டியெழுப்புகின்றபோது அவன் விழிகள் விரியும். ஆவி பறக்கும் தேனீர்க் கோப்பையுடன் அவள் நிற்பதைப் புன்னகையுடன் பார்ப்பான். 

சில நாட்களில் நடுச்சாமங்களில் அவனுக்கு விழிப்பு வரும். அப்பொழுது அவன் காணும் காட்சி நெஞ்சை அறுக்கும். 

நிமிர்ந்து நீண்டு படுத்துக்கிடப்பாள் கௌசல்யா. சதீஷின் தலை அவள் நெஞ்சில் சாய்வாகச் சயனித்துக் கிடக்க, அவள் கால்களின் இடுக்கில் விரல்களைச் சூப்பியவாறே சுகன் குறட்டை விட்டுக் கொண்டிருப்பாள். கௌசல்யாவின் ஒரு கை சதீஷை இறுக அணைத்துக் கிடக்க மறு கை சுகனின் கால்களைப் பிடித்தவாறிருக்கும். 

‘எப்படி கௌசல்யாவால் இப்படித் தூங்க முடிகிறது?’ என ஜெகனின் மனம் தவிக்கும். குழந்தைகளை எடுக்க முனைகின்றபோது கௌசல்யா ‘திடுக்’கென விழித்து ‘என்னங்க!’ என்பாள். 

சதீஷும்,சுகனும் அம்மா குஞ்சுகள். அப்பா என்றால் இருவருக்கும் அலர்ஜிதான். 

அந்த வரலாறு மூன்று வருடங்களில் தலைகீழாகி விட்டதே! 

பெற்றோர், உறவினர் ஆகியோரின் உறவுகளை இழந்து வாழ்வில் இணைந்தவர்கள் கௌசல்யாவும் ஜெகனும். தனிக்குடித்தன வாழ்வில் சதீஷ் கிடைத்தபோது தொழில் பறிபோய்விட்டது. அதன் பின்னர் என்னென்னவோ செய்தும் வாழ்க்கைக் கடலில் கரையேற முடியவில்லை. 

அப்பொழுதுதான் வெளிநாடு செல்லும் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தோறும் ஏறி இறங்கினான். சுளை சுளையாக அவர்கள் கேட்ட தொகைகளை செவிமடுத்ததும் திக்குமுக்காடிப் போனான். இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது? அந்த எண்ணம் பறந்தோடி விடுகிறது. 

“ஏன் ஜெகன், கௌசல்யாவை ஹவுஸ்மேய்ட்டாக அனுப்பி வையேன். இரண்டு வருஷம்தானே!” என அவனுடைய நண்பன் ரகு சொன்னதும் ஜெகனுக்கு உடல் முழுவதும் திகுதிகுவென எரிதழல் பரவும் உணர்வு ஏற்படுகிறது. 

“இதுல என்ன பிழை ஜெகன். ஊரு உலகம் கேவலமாகப் பேசும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நாங்க பட்டினி கெடந்து சாக வேண்டியதுதான்!” 

யோசனைகள் பல இரவுகளும் பகல்களுமாக ஜெகனை அலைக்கழித்தன. ஒரு நாள் நடு இரவொன்றில் கௌசல்யாவைத் தட்டி எழுப்பிய ஜெகன், “கௌசல், வெளிநாடு போரியா?’ என நா தழு தழுக்கக் கேட்டான். 

நீரில் ததும்பிக் கிடக்கும் ஜெகனின் கலங்கிய கண்களை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்த கௌசல்யா அவன் நெஞ்சில் முகம் புதைத்து “போறேன்” என மெதுவாக முணுமுணுத்தாள். ஜெகனின் நெஞ்சில் அவள் கண்ணீரின் ஈரப்படிவுகள் ஊர்ந்தன. 


மார்கழிப் பனி. நனைந்த உலகம் அமைதி சயனத்தில். 

டாங்! டாங்! டாங்! டாங்! 

சுவர்க்கடிகாரம் நான்கு முறை அறைந்துவிட்டு ஓய்கிறது. 

கௌசல்யா விழித்துக் கொள்கிறாள். 

‘எங்கே இருக்கிறேன்?’ விழிகள் கேள்வியுடன் சுழல்கின்றன. 

‘அடேயப்பா, எப்படி ஒரு தூக்கம். இப்படி தூங்கி எவ்வளவு காலமாச்சி. முனகிக் கொண்டு நெட்டி முறிக்கிறாள். சில கணங்கள் கண்களை மூடி அபுதாபி நினைவுகளில் ஆழ்ந்துவிடுகிறாள். பனி மூட்டம் நீங்குவது போல் உணர்வுகளின் லயிப்பு… 

அபுதாபியில், 

அந்தப் பெரிய மாளிகையில் சொகுசான கட்டிலில் கை கால்களையெல்லாம் ஓர் அட்டை போல் சுருட்டி, சின்னச்சின்ன சத்தங்களுக்கெல்லாம் திடும்திடும்மென விழித்து, தூக்கம் இழந்து அவஸ்தையுடன் கழிந்துபோன இரவுகள்… தூக்கமில்லாமலே மூன்று வருடம்… இங்கே இந்த மூட்டைப் பூச்சிகள் நிறைந்த கட்டிலில் எப்படியொரு தூக்கம். கௌசல்யாவிற்கு அதிசயமாகவிருக்கிறது. அந்த அதிசய சுகானுபவத்தில் தன்னை மறந்து லயித்து கட்டிலில் கொஞ்சநேரம் அப்படியே கைகால்களை நீட்டி ஆசுவாசப்படுத்துகிறாள். 

மகள் சுகன்யாவின் முனகல் சப்தம் மெலிதாகச் செவிகளில் விழுகிறது. 

‘கொழந்தை ஏதும் கனா கண்டுட்டாளோ!’ என்ற அச்சம் மனத்தை வெருட்ட சட்டென கட்டிலிலிருந்து எம்பிக் குதித்தாள். 

அடுத்த அறையில் கணவனும் குழந்தைகள் இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். சுகனின் கைகள் ஜெகனின் கழுத்தைச் சுற்றிக் கிடக்கின்றன. அப்பா எழும்பி போய்விடக் கூடாது என்ற பயம் அதில் இருந்தது. உதடுகளில் லேசான நடுக்கம். ஏதோ முணுமுணுப்பு. 

கௌசல்யா மென்மையாகப் புன்னகைக்கிறாள். ‘குழந்தைகளை அன்போடும் அக்கறையாகவும் பார்த்துக் கொள்கிறார்.’ 

அவள் மனம் பூரிப்புடன் அசைபோடுகிறது. கண்களில் நீர் மணிகள் திரள்கின்றன. 

குழந்தையின் கரங்களை மெதுவாகத் தளர்த்தி 

கன்னத்தில் முத்தமிடுகிறாள். 

‘ஆ! சுகன்யா சிரிக்கிறாளே!’ 

கௌசல்யா பொங்கிப் பூரித்தாள். அடுத்த முத்தத்தை கன்னச் சதையைப் பிய்த்து பிடுங்குமாற்போல் பதிக்கிறாள். 

‘வீ லென்ற அலறல். 

வீட்டையே அதிரவைக்கும் வீறல் மின்னல் வேகத்தில் வெடித்துக் கிளம்புகிறது. 

ஜெகனும் சதீஷும் அலறியடித்துக் கொண்டு எழுந்து விடுகிறார்கள். 

மிரட்சியடைந்த ஜெகன் சட்டெனக் குழந்தையைப் கௌசல்யாவின் கன்னத்தில் பிடுங்கியெடுக்கின்றான். 

‘பளா’ரென பேய் அறை விழுகிறது. 

“தேவடியாளே! கொழந்தையை என்னடி செய்கிறாய்?” என அவன் அலறிய அலறலில் கௌசல்யா வெலவெலத்துப் போனாள். 

“என்ன சொன்னீங்க, தேவடியாளா?” அவள் நெஞ்சம் கதறக் கேட்டாள். 


மூன்று வருடப் பிரிவு, காதலில் இணைந்து தம்பதிகளான இருவர் வாழ்வில் எவ்வளவு பெரிய அந்நியத்தை ஏற்படுத்திவிட்டது. 

கௌசல்யாவால் உறங்க முடியவில்லை. முத்துச்சரம்போல் அவள் கண்களில் நீர் சுரந்து கொண்டேயிருக்கிறது. 

மார்கழி பனியில் ஊர்க்கோடியிலுள்ள கோயில் மணியோசை ஒலித்தபோது கௌசல்யாவின் அறையில் நெருப்பின் வெளிச்சம் தெரிகிறது. அவள் மறுபடியும் அபுதாபி செல்வதற்கென கொண்டுவந்த ரிட்டேன் டிக்கெட் அக்கினிக்கு இரையாகிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் கௌசல்யாவின் முகத்தின்மீது செந்தழலாக ஒளிபரப்புகிறது. 

– அன்னையின் நிழல் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 2004, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

கே.விஜயன் கே.விஜயன் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் 60களில் யாழ்ப்பாண இளம் எழுத்தாளர் சங்கம் நடத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதன் மூலம் எழுத்துலகில் தடம் பதித்துள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, தினகரன், மித்திரன் உட்பட அலைகடலுக்கு அப்பால் கணையாழி, தீபம், தாமரை, செம்மலர் என பல இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவரது விடிவுகால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள் ஆகிய இரு நாவல்களும் அன்னையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *