விடியட்டும் பார்ப்போம்…!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 4, 2025
பார்வையிட்டோர்: 895 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன கதைஞரே! நீண்ட நாட்களாகத் தங்களது சிருஷ்டிகள் எதையுமே பத்திரிகைகளில் காணோமே? கற்பனை வறண்டு விட்டதா? அல்லது வசனங்களுக்குப் பஞ்சமேற்பட்டு விட்டதா?” எனக்கேட்டு லண்டனிலிருந்து இவனது கல்லூரி நண்பன் ‘சடையப்பன்’ அண்மையில் இ வனுக்குக் கடிதம் ஒன்று எழுதியிருந்தான். 

“தங்களைப் போல், எண்பத்து மூன்று ஆடிக்கலவரம் முடிந்த கையோடு ‘அகதி’ அந்தஸ்து பெற்று சீமை சென்றிருந்தால், சூழ்நிலை இடர்கள், இடையூறுகள் ஏதுமின்றி பாதுகாப்பாக, நிம்மதியாக இருந்து சிறுகதைகள் என்ன தொடர்கதைகளையே நான் படைத்திருப்பேன்” என ஆரம்பித்து ‘சடையப்பன்’ பாணியிலேயே பதில் எழுத இவன் நினைத்திருந்தாலும், அதனை நடைமுறைப் படுத்தவில்லை. 

சதா அச்சத்துடனும், ஏக்கத்துடனும், நிம்மதியின்றி, ஆளடையாள அட்டையையே ஆத்மாவாக்கி நெருக்கு வாரங்களுடன் விரக்தி நிலையில் வாழ்ந்து கொண்டு எழுதுவதற்காகப் பேனா பிடிப்பதென்பது முடிகிற காரியமா? இது எத்தனையோ கிலோமீட்டர்களுக்கு அப்பால் அந்நியப்பட்டிருக்கும் சடையப்பனுக்குப் புரியாததில் வியப்புற ஏதுமில்லை. 

1990ம் ஆண்டு ஆனி மாதத்திற்குப் பிறகு இவனால் உருப்படியாக எதையும் எழுதவே முடியவில்லை. அந்தளவிற்கு இவனது மனம் ஆடிப்போய்விட்டது. கதைகள் எழுத எனத் தாள்களை எடுத்து பிள்ளையார் சுழி போட முன்பே வானொலியிலிருந்தோ, அல்லது வேறு ‘மீடியா’ வாயிலாகவோ வந்து சூழும் செய்திகள் கற்பனையை மழுங்கடித்துவிடும். போராட்ட தேசத்திலிருக்கும் மனைவி, பிள்ளைகள் பற்றிய சிந்தனை மூளையைச் சூழ்ந்து கொண்டு குழப்பும். 

“நாட்டிலே நடைபெறும் சம்பவங்கள், மனதுக்கு இதமானதாக இல்லாதிருப்பதும், விடியலைத் தேடும்போது தூர ஒரு விடிவெள்ளிதானும் புலப்படாத போதும் எப்படி ஒரு கதைஞனால் ஆரோக்கியமான பிரசவங்களைப் பிரசவிக்க முடியும்?” என சடையப்பனுக்குப் பதில் எழுத வேண்டுமென இவன் நினைத்தாலும், பதிலுக்கு அதிரடியான கதையொன்றை எழுதி சடையப்பனை அசத்தினால் என்ன? என்று இவனது மனம் அங்கலாய்க்காமலும் இல்லை. 

‘அறுபதுகளில் புரையோடிப் போயிருந்த பிரச்சினைகளையே இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே? ஏன் சமகாலங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எரியும் சம்பவங்களை உங்கள் படைப்புகளில் படம் பிடித்தால் என்ன?’ என எண்பதுகளின் பிற்பகுதியில் வெளியான இவனது கதை ஒன்றைப் படித்துவிட்டு வாசகர் ஒருவர் அதே பத்திரிகையில் கேள்விக்கணை தொடுத்த பின், இனி எழுதும்போது சமகாலத்தை ஒட்டியே எழுத வேண்டுமென இவன் சிந்தித்துக் கொண்டான். 

அப்படியாயின் கதையில் எப்படிச் சமகாலத்தைப் பிரதிபலிப்பது? அரசியல்வாதிகளைப் போல வெறுமனே பிரச்சனைகளைச் சொல்லிவிட்டு, தீர்வுகள் எதையுமே முன் வைக்காது நழுவி விடலாமா? ‘பார்வையாளனாக இல்லாது பங்காளனாகவும் இருப்பதே ஒரு கதைஞனின் கடமை’ என எங்கேயோ வாசித்ததாக இவனுக்கு நினைவு. ஆனால், இவன்பாட்டிற்குப் பங்களிப்பிற்காக எதையாவது எழுதிப் பின்னர் அது பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாகிவிட்டால்? நானூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் தன் இரு மழலைகளினதும் ஞாபகம் வரவே ‘ஏன் வீண் வம்பு என அந்த எண்ணத்தினையும் கைவிட்டுவிட்டான். 

சரி போகட்டும், காதல் கதை ஒன்று எழுதலாமா? “என்ன சார் அந்த நாள் தொட்டு இந்தநாள் வரையில் இந்தக் கதாசிரியர்களுக்குக் காதல் தேசத்தைத் தவிர வேறு எந்த தேசமுமே கண்களில் தெரிவதில்லையா?” என யாராவது விமர்சகர்கள் கேட்டுவிட்டால்? அதுவும் புத்தகம் போட்டு, அறிமுக விழாக்கள் எல்லாம் வைத்துப் பிரபலம் பெற்று விட்ட பின்பு இவையெல்லாம் தேவைதானோ? 

“மச்சான்! இண்டைக்கு எப்பிடியாவது ஒரு கதை எழுதவேணும். ‘பிளீஸ்’ என்னைக் குழப்பாதை!” 

அறைக்குள் நுழைந்ததும் நுழையாததுமாகக் கட்டிலில் படுத்திருந்த ‘றூம்மேற்’ ரஞ்சித்திற்கு இவன் சொன்னான். 

“நீ பாட்டுக்கு எதையாவது கிறுக்கிப் போட்டுக் கொண்டு போய் பேப்பருக்கு குடுக்க அதைப் பார்த்துப்போட்டு ‘எடிற்றர்’ கதையிலை கனதி இல்லை எண்டு சொல்லிப் போட்டார் எண்டால் ‘நோண்டியாப்’ போயிடும். அதனாலை வேலோன், கதை எழுதும்போதே ‘பைல் கவர்’ மாதிரி ஏதாவது கனத்த தாளிலை எழுத ஆரம்பி. அப்பத்தான் கதை நல்ல கனதியாக இருக்கும். உனக்குத்தானே நீ வேலைசெய்யிற அச்சகத்திலையே வேண்டிய மாதிரியாக் கனதியான ‘பேப்பர்கள்’ எல்லாம் எடுக்கலாம். – சட்டெனக் கட்டிலை விட்டெழுந்து துவாயை எடுத்துக்கொண்டு ‘பாத்ரூமை’ நோக்கிச் சென்றவாறே ரஞ்சித் சொன்னான். 

ரஞ்சித் எப்போதுமே இப்படித்தான். “தங்கள் பிரசவம் தாங்கள் எழுத ஆரம்பித்த எண்பதுகளின் ஆரம்பத்தினைப் போல் ஆரோக்கியமானதாக இல்லையே?” என வாசகி எவராவது இவனுக்கு எழுதிய கடிதம் ரஞ்சித்தின் கண்களில் பட்டுவிட்டால் போதும். “உங்கள் பிரசவம் ஆரோக்கியமானதாக அமைய வேண்டுமென்றால் கருவுற்றிருக்கும் போது சத்துணவு அருந்துங்கள். அல்லது அருகில் உள்ள வைத்தியரிடம் ஆலோசனை பெறுங்கள்’- என வானொலியில் ஒலிபரப்பாகும் ‘வைத்தியரைக் கேளுங்கள்’ நிகழ்ச்சி பாணியில் குரல் தருவான். 

அவன் கிடக்கட்டும். இப்போ… கதைக்கென்ன கருவைத் தேர்ந்தெடுக்கலாம்? ஓ! இளம் தம்பதிகள் வடக்கிலும் தெற்கிலுமாகப் பிரிந்திருப்பதால் ஏற்படும் பாலியல் பிரச்சினை பற்றி பிய்த்து உதறலாமா? “என்ன மச்சான் வழமைபோல இதுவும் உன்ரை வரலாறோ?” எனக் கதையைப் படித்துவிட்டு ரஞ்சித் கேட்டு விட்டானென்றால்… “ஓம்! என்ரை வரலாறு மட்டுமல்ல. என்னை ஒத்த மத்திய தர வகுப்பு இளைஞர்களின் சமகால வரலாறு” என வேண்டுமென்றால் ரஞ்சித்திற்குச் சொல்லி விடலாம். ஆனால், கதை இவனது மனைவி சாந்திக்கும் எட்டி “என்னப்பா கன்றாவிக் கதை இது?” என அவள் கேட்டுவிட்டாள் என்றால்….. ஏற்கனவே நெரிசல் பஸ்சில் சுகம் காணும் இளைஞனது கதையையும் ‘புளுபிலம்’ பார்க்கப்போன பையனது கதையையும் எழுதப்போய், “என்ன இவை எல்லாம் தங்களோடை அனுபவங்களோ?” என சாந்தியிடம் முறையாக வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவிற்கு வரவே…. 

“இந்த முறை ஆரைப்பற்றி வேலோன் கதை எழுதப் போறாய்?” உடலைத் துவாயினால் உலர்த்தியவாறே ரஞ்சித் உள்ளே நுழைந்தான். 

“உன்ரை கதையைப் பார்த்தால் நான் என்னவோ ஊரா வீட்டுக் கதையைத்தான் எழுதிவாறன் எண்ட மாதிரியெல்லாமோ இருக்கு?” 

“பின்னை என்ன மச்சான்? ‘அந்த நாள் ஞாபகம்’ முதல் ‘விடியலுக்கு முன்… ‘ வரைக்கும் உன்ரை கதையிலை வாற கதாநாயகியின் உண்மைப் பெயர்களை பட்டியல் போட்டுச் சொல்லட்டே?” 

‘ஓகே..! ஓகே..! சரி… இந்தமுறை நான் சொல்லப் போற கதை கொஞ்சம் வித்தியாசமானது. 

“என்ன… அப்ப இது சரித்திர காலத்துக் கதையோ?” 

“இல்லை… சமகாலக் கதையைத்தான் நான் சரித்திரமாக்கப் போறேன்”. 

“கிழிஞ்சுது போ……! ஆலாபரணங்கள் பண்ணி அறுக்காமல் கதையைச் சொல்லித் தொலை.” 

“அது ஒரு இளம் தம்பதி. கல்யாணம் செய்து மூன்றோ அல்லது நான்கோ வருசங்கள் தான். அவனுக்குக் கொழுப்பிலை வேலை.” 

“மச்சான் அவன் எங்கை அச்சகத்திலைதானே வேலை?” 

“சீரியஸா கதை சொல்லக்குள்ளை செந்திலை மாதிரி குறுக்காலை வராதை. ஆட்டுக் கிடாய் வாயா! அவன் கொழும்பிலை வேலை. பொருளாதாரக் கஷ்டத்தாலை அவனாலை கொழும்பிலை குடும்பத்தோடை இருக்க முடியாத நிலைமை. கடந்த வருடங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவையாவது குடும்பத்தைச் சென்று பார்த்து வருவான். ஆனால், தொண்ணூறாம் ஆண்டு ஆனிக்குப் பிறகு அவனாலை அப்படிச் சென்று வரமுடியாத இக்கட்டு. ஒரு வருச இடைவெளியின் பின் அவன் கடந்த கிறிஸ்மஸ்சிற்குத்தான் ஊர் சென்றான். அந்தத் தடவை அவன் பயணத்திலை பட்ட கஷ்டங்களையும், அவனைப் பிரிந்து தனியாகத் தான் மட்டும் அங்கிருப்பதையும் மனதிருத்தி அவனது மனைவி இப்படிக் கூறுகிறாள். ‘இந்த நிலைமையிலை இப்பிடி நாங்கள் அங்கையும், இங்கையும் இருக்கிறதாலை என்ன நன்மை? பேசாமல் உந்தக் கண்டறியாத வேலையை ‘றிசைன்’ பண்ணிப் போட்டு வாங்கோ. வாழ்வோ, சாவோ ரண்டுபேரும் ஒண்டாகவே கடைசி மட்டும் இங்கையே இருப்பம்’ எண்டு.”

”பள்ளி அறை கொள்வதிலும், பரமனடி சேர்வதிலும், பக்கத் துணையிருப்போம்! என்டதை உன்ரை கதாநாயகி தான் ஒழுங்கா விளங்கியிருக்கிறாள் போலை கிடக்கு.” 

“பரதேசி நாயே! இப்ப நான் என்ன வில்லுப்பாட்டோ நடத்துறன்…. பக்கப்பாட்டு பாடிக்கொண்டிருக்கிறாய்…., அது போக இப்ப, எதிலை விட்டனான்? ம்…. அவன் பிறகும் கொழும்புக்கு வேலைக்குத் திரும்புகிறான். ஊரிலை மனைவி சொன்னது இவனது மனதிலை மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. அவனாலை தொடர்ந்தும் கொழும்பிலை இருக்க முடியவில்லை. ஒரு முடிவுக்கு வருகிறான். ஒரு சில நாட்களில் வேலையை ‘றிசைன்’ பண்ணிவிட்டு ஒரேடியாகவே ஊர் திரும்புகிறான். ஊர் சென்று அங்கு அவன் ஏதோ ஒரு சிறு வேலையில் சேர்ந்து கொள்கிறான்.”

“என்ன வேலை மச்சான்? சைக்கிளிலை நாகர் கோவிலுக்கு வந்து விறகு கட்டிக்கொண்டு போற வேலையோ?” 

“உனக்கெண்டால் அதுக்கும் லாயக்கில்லை… கதை சொல்லக் கை கதை குடுத்தால் இனி உதைதான் கண்டியோ? நாட்கள் நகர்கின்றன. ஒரு நாள் இரவு திடீரென்று அவனது வீட்டு முகட்டில் பலத்த சத்தத்துடன் ‘ஷெல்’ விழுந்து வெடிக்கிறது. விடிந்ததும் பார்க்கையில் அந்த இளம் தம்பதிகளும் இரண்டு குழந்தைகளும் இரத்த வெள்ளத்திலை பிணமாகக் கிடந்தனர்.”

“நெஞ்சத்தைப் பிழிந்து விட்டீர்கள் எழுத்தாளரே! சபாஷ் முடிவாக… இந்த சிருஷ்டி மூலம் தாங்கள் சமூகத்திற்குச் சொல்ல வந்த சேதிதான் என்ன?”- நக்கீரன் பாணியில் ரஞ்சித் வினவினான். 

“அதை உய்த்தறிகிற பொறுப்பை வாசகர் கையிலை விடப்போறேன்.” 

“பை த வே…. உன்னுடைய கதையைக் கேட்ட பிறகுதான் எனக்கு ஞாபகமே வருகுது. இவன் அழாப்பல் ரவி நேற்றுத்தான் ஊரிலையிருந்து வந்தவனாம். இண்டைக்கு மத்தியானம் சாப்பிடப்போன இடத்திலை ஆமர் ஸ்றீற் சந்தியிலை வைச்சு ஆளைக் கண்டான். எங்கடை பக்கமெல்லாம் சாமானுகளெல்லாம் தலைதெறிச்ச விலையாம். ஒரு கிலோ அரிசி ஐம்பது ரூபாவாம், ஒரு கிலோ மாவு நாற்பது ரூபாவாம், சீனி கிலோ அறுபதுக்கும் தட்டுப்பாடாம். மரக்கறி ஒவ்வொண்டும் காக்கிலோ இருபத்தைந்து ரூபாவாம். அத்தோடை எங்கடை பக்கத்திலை ஒரே ‘ஷெல்’ அடியாம்…”- தூரத்தில் எங்கோ வானொலியில் செய்தி சொல்வதற்கு முன்பாக ஒலிக்கும் வாத்திய இசை அமங்கல ஒலியாக இவன் செவிப்பறையில் வந்து விழுகிறது. 

சொல்லியவற்றை முடித்துவிட்டு ரஞ்சித் இவன் முகத்தைப் பார்க்கிறான். திறந்து வைத்திருந்த பேனாவை மூடி, தயாராக வைத்திருந்த வெற்றுத் தாள்கள் மேல் போட்டுவிட்டு, இவன் தன் கட்டிலில் சரிகிறான். 

“நாங்கள் இஞ்சை மூண்டு நேரமும் மூக்குமுட்ட விழுங்கிப் போட்டிருக்கிறம். அங்கை அதுகள் என்ன பாடோ தெரியேல்லை” தெளிவாகப் பிடிபடாத பீ.பீ.சி. அலை வரிசையாக வார்த்தைகள் இழுபட்டன. 

“ஓ…! அண்ணனுக்கு அண்ணி, பிள்ளைகளின்ரை ஞாபகம் வந்திட்டுது போலை.”- அன்றைய நிகழ்வுகளைப் பதிவதற்காகத் தனது ‘டயறி’யை கையிலெடுத்தவாறே ரஞ்சித் சொல்கிறான். 

“ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாகக் கழிச்சிப் போட்டு நாங்கள் ‘டயறியி’லை அதைப் பதிஞ்சு வைக்கிறம். ஆனால் விடிஞ்ச பொழுதை எப்பிடிக் கழிக்கப்போறம் எண்டு அதுகள் அங்கை ஏங்கித் தவிக்குதுகள், முழுசுதுகள். 

“நல்ல ‘மூட்’டிலை வந்த உன்னை தேவையில்லாத கதையளைச் சொல்லி நாசமாக்கிப் போட்டன். அதுசரி கதை எழுதவேணும் எண்டு அச்சகத்தாலை வந்த உடனை நாண்டு கொண்டு நிண்டாய். இப்ப என்ன ஒரேடியாகவே சரிஞ்சிட்டாய்.” 

“மச்சான், கவியரசரே ஒரு இடத்திலை சொல்லியிருக்கிறார். அது இது சாய்ஞ்சு போனால் ஏதாவது ஒண்டாவது செய்யலாம். ஆனால் இந்த மனம் சாய்ஞ்சு போனால் என்ன செய்யலாம். எண்டு…. எனக்கு இப்ப ‘மூட்’ இல்லையடாப்பா… நீ உதை முடிச்சுப் போட்டு ‘லைட்’ டை ஒஃப் பண்ணிப் போட்டு படு. பிறகு, விடியட்டும் பார்ப்போம்…!” 

மறுபக்கம் திரும்பி கட்டிலிலிருந்த ‘ரேப் ரெக்கோடரை’ ‘ஓன்’ பண்ணி விடுகிறான். அரிச்சந்திர புராணத்து மயான காண்டத்தில் வி.வி. வைரமுத்துவின் குரல் உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. “விதியே…! உனக்கொரு முடிவில்லையா? உன் வேலைக்குமே ஓர் அளவில்லையா?” 

– வீரகேசரி வாரவெளியீடு, 1991. 

– விடியட்டும் பார்ப்போம்..!, முதற் பதிப்பு: மாசி 1997, பதிப்புரிமை: திருமதி இ.சாந்த குமாரி, கொழும்பு.

– திக்கற்றவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *