கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 70 
 
 

மனத்தில் புழுக்கமாக இருந்த ஒரு வேதனையான சூழ்நிலையில் மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர் அவளை அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகம் பதிவதாக அமைந்திருந்தது.

அந்த மன நிலையில், அந்தச் சூழ்நிலையில் அவளுடைய அறிமுகம் இதமாகவும், மனப் புழுக்கத்தைத் தணிப்பதாகவும் இருந்தது. உணர்வில் உல்லாசத்தைக் கலந்தது. “இவள் மாதவி, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள். உங்கள் விசிறி.” அவளிடமிருந்து மனத்தைக் கிறங்க அடிக்கிற ஒரு புன்னகை, ஒரு கை கூப்பல் ஆகியவை இந்த அறிமுகத்தோடு உடன் நிகழ்ந்தன. அவளே அழகாக இருந்ததால், புன்னகையும் கைகூப்பலும் அந்த அழகை அதிகமாக்கிக் காண்பித்தன.

“ரசிகை என்று சொல்லுங்கள். விசிறி என்ற வார்த்தை எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சினிமா நாடக அன்பர்கள் வேண்டுமானால் அப்படிச் சொல்லிக் கொள்ளட்டும்; இலக்கியத்திற்கு விசிறிகள் வேண்டாம், ரசிகர்கள்தாம் வேண்டும். ரசிகன் கண் மூடித்தனமானவன் இல்லை; ஆனால் விசிறி கண் மூடித்தனமானவன்.”

“உங்கள் எழுத்துக்களைப் பொறுத்தவரை இவளும் கண்மூடித்தனமானவள் தான்.”

அவருடைய அறிவு இந்தக் கண்மூடித்தனத்தை வெறுத்தது. உணர்வு அதை விரும்பி வரவேற்றது.

“உங்கள் எழுத்துக்களை விமர்சனம் செய்ய முயலுபவர்களோடு, செய்பவர்களோடும் கூட இவள் சண்டை போட்டிருக்கிறாள்.”

“சண்டைகள் சந்தைகளில் நடக்கலாம். ஆனால், இலக்கியத்தில் எவ்வளவு பெரிய கருத்து வேறுபாடானாலும், அது அபிப்ராய பேதம் என்ற எல்லையைத் தாண்டிச் செல்ல முடியாது; செல்லக் கூடாது.”

“உங்கள் மேலுள்ள அபரிமிதமான பிரியத்தின் காரணமாக உங்களை எதிர்ப்பவர்களே இருக்கக் கூடாது என்று நினைக்கிற அளவுக்குப் பிடிவாதம் உள்ளவள் இவள்.”

கேட்பதற்குக் கர்வமாக இருந்தது அவருக்கு. அறிவுக்கு உவப்பளிக்காத இந்தக் குருட்டுப் பக்தி-உணர்வுக்கு இதமாக இருந்தது.

அடுத்த தடவை முதலில் அறிமுகப்படுத்திய நண்பர் இல்லாமல், மாதவியே. கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் போது தானாக அவரைத் தேடிக் கொண்டு வந்தாள்.
அவர் எழுதிப் புத்தகமாக வெளிவந்திருந்த புதிய நாவலின் பிரதி ஒன்றைத் கையோடு விலைக்கு வாங்கிக் கொண்டு வந்திருந்தாள்.

“இதில் உங்கள் கையெழுத்து ஒன்று வேண்டும்.”

“எல்லாப் புத்தகங்களும் வாங்கி வைத்திருக்கிறீர்களா?”

“உங்கள் புத்தகங்கள் எல்லாவற்றையும் கையெழுத்தோடு சேர்த்து வருகிறேன் இதற்கு முன் உங்களிடம் அறிமுகம் இல்லாமலே பல பொது இடங்களிலும், கூட்டங்களிலும் உங்களிடம் கையெழுத்தை வாங்கியிருக்கிறேன். அறிமுகமான பின் இப்போதுதான் உங்களிடம் நேரில் கையெழுத்து வாங்குகிறேன்.

“வேறு யார் யாருடைய புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்கும்?”

“மற்றவர்களுடைய எழுத்துக்களைக் கிடைத்தால் படிப்பேன். படிப்பதோடு விலைக்கு வாங்கி அலமாரியில் சேர்ப்பது உங்கள் எழுத்துக்களை மட்டுந்தான்.”

இவள் அப்படிக் கூறியது மிகவும் பிடித்திருந்தது. இப்படி ஒரு பதிலைத்தான் அவர் அவளிடமிருந்து எதிர்பார்த்தார். ஆனாலும் நேர்மாறான சொற்களை அப்போது அவருடைய வாய் பேசியது.

“ஒரு விசிறி கண்மூடித்தனமாகவீர வணக்கம் புரியலாம். ரசிகைக்கு அது கூடாது. ரசனைக்குரிய எல்லாவற்றையும் சமதிருஷ்டியோடு பார்க்க வேண்டும்.”

“நான் ரசிகையாக இருக்க விரும்பவில்லை. உங்களுடைய கண்மூடித்தனமான வசிறியாகவே இருக்க விரும்புகிறேன்.”

புழுக்கத்தைத் தணித்து இதம் அளிக்கும் தென்றலாக இந்தப் பதில் அவரைக் குளிர்வித்தது.

விமர்சகர்களின் தாக்குதல், எதிரிகளின் புகைச்சல், எழுத்தினால் தொட முடியும் உயரத்தை வாழ்க்கைக் கவலைகளால் இழக்கும் வேதனை. எல்லாவற்றிலிருந்தும் தம்மை மீட்டு ஆசுவாசப்படுத்தும் காற்றை அந்த ‘விசிறி’ தனக்கு மட்டுமே அளிக்கத் தயாராயிருந்தது என்ற எண்ணமே அப்போது அவர் கர்வப்பட்டுக் கொள்ளக் காரணமாயிருந்தது.

வெளி உலகத்துக்கு ஜனநாயகம், பெருந்தன்மை, சமத்துவம் பொது நோக்கு விருப்பு வெறுப்பின்மை எல்லாவற்றையும் தாராளமாக எழுதுகிற, பேசுகிற பிரமுகன் அத்தனை பேருக்கும் அந்தரங்கமாக இப்படி ஒரு கண்மூடித்தனமான விசிறிதான் தேவை இப்படி விசிறிகளுக்குத்தான் அவர்கள் உள்ளூரத் தவிக்கிறார்கள். இந்த விசிறிகள் தங்களை மட்டுமே குருட்டுத்தனமாக வழிபடவேண்டும் என்ற சர்வாதிகார ஆசைதான் அவர்களைக் கீறிப் பார்த்தவர் உள்ளே தெரியும். ஆனால் வெளியே பேசும்போது “வீர வணக்கம். தனிநபர் வழிபாடு, தனிநபர் ஆதிக்கம் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று நாகரிகமாகப் பாசாங்கு செய்ய ஒவ்வொருவரும் கற்றிருக்கிறார்கள். அவரும் அதைக் கற்றிருந்தார். தங்களை மட்டுமே புகழ்கிறவர்கள் மேல் புகழப்படுகிறவர்களுக்கு ஒர் இனிய அக்கறையே ஏற்பட்டு விடுகிறது.

மூன்றாவது முறை அவள் அவரைச் சந்தித்தது அவருடைய அலுவலகத்தில் அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக் காரியாலயத்தில் அவருடைய ஏ.சி. அறையில் அச் சந்திப்பு நடந்தது.

அன்று அவள் வேண்டும் என்றே சாரமில்லாத கேள்விகளாகக் கேட்பதாக அவருக்குத் தோன்றியது.

“கதை கட்டுரைகளுக்குப் பத்திரிகைகளில் எந்த விகிதாசாரத்தில் சன்மானம் கொடுக்கிறீர்கள்?”

“ஒவ்வொரு பத்திரிகை ஒவ்வொரு மாதிரி கொடுக்கிறது. ஒரு காலத்தில் எங்கள் பத்திரிகையில் ஒவ்வோர் இதழிலும் வெளியாகிற சிறந்த கதைக்கு ஒரு பவுன் கொடுத்து வந்தோம். இப்போது பவுன் விலை ஏறிவிட்டது. வருஷத்துக்கு ஒருமுறை மட்டும் மிகச் சிறந்த கதைக்கு ஒரு பவுன் கொடுக்கிறோம்.”

“பத்திரிகைகளில் போட்டிகள் வைக்கிறார்களே? போட்டிகளின் மூலம் நல்ல கதைகளோ நல்ல எழுத்தாளர்களோ கிடைப்பதுண்டா?” .

“உண்டு என்றும் சொல்வேன், இல்லை என்றும் சொல்வேன். சாதாரணமாக நமக்குத் தபாலில் கிடைக்கும் பிரமாதமான கதைகளும் இருக்கும். பிரமாதமாக அறிவிக்கப்பட்டுச் சாதாரணமான தேர்வைப் பெறும் போட்டிகளும் இருக்கும். போட்டியா? போட்டியில்லையா என்பது அல்ல முக்கியம். எழுதுகிறவனுக்கு எழுத்து என்பது பசியாகவும் தாகமாகவும் அடக்கமுடியாத உணர்வாகவும் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் தேறாது.”

பேச்சு இப்படியே தொடர்ந்தது.

அந்த வாரம் வெளியாகியிருந்த அவரது புதிய சிறுகதையைப் பற்றி அவள் ஏதாவது பிரஸ்தாபித்துப் புகழ்வாள் என்று எதிர்பார்த்தார் அவர், அவள் அதைப் பார்த்தாகவோ, படித்ததாகவோ காண்பித்துக்கொள்ளவில்லை. வேறு லெளகீகங்களையே மேலும் விசாரித்துக் கொண்டிருந்தாள்.

அநாவசியமாக அவள் தம்மை எதிர்பார்க்கவும், ஏங்கவும், காக்கவும் வைக்கிறாள் என்று அவருக்குத் தோன்றியது.

“புகழை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும் பழுத்த ஞானிகூட அந்த விநாடிகளில் சாதாரணச் சிறுபிள்ளையாகி விடுகிறான். புகழை எதிர்பார்த்து ஏங்காத சிறுபிள்ளைகூட அந்தக் கணத்திலேயே அந்த விநாடியிலேயே பழுத்த ஞானி ஆகிவிடுகிறான் என்கிற தத்துவம் அவருக்கு ஞாபகம் இருந்துங்கூட அவளுடைய அழகில் இளமை பொங்கும் அந்த விசிறி அவரைக் கோமாளி போலப் பித்துப் பிடித்துப் போகச் செய்திருந்தாள். அவள் விசாரணையிலிருந்து மீண்டும் தம்மைப் புகழ இருக்கும் நிமிஷங்களுக்காகக் காத்திருந்தபடியே அந்தச் சாரமற்ற விசாரணைகளைப் பொறுத்துக் கொண்டிருந்தார் அவர். அவளோ அவருடைய ஏக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமலே சாரமற்ற கேள்வியைக் கேட்டாள்.

“உங்களுக்கு ஃபுல்ஸ்கேப் பேப்பரில் எழுதப் பிடிக்குமா? அதையே இரண்டாக மடித்து எழுதப் பிடிக்குமா?”

“பேப்பர் முக்கியம் இல்லை. எழுத வேண்டும் என்கிற உணர்வுதான் முக்கியம் அந்த உணர்வு வரும்போது, முழுத்தாள், அரைத்தாள், ஒன்ஸைட் பேப்பர், எது கிடைத்தாலும் எழுதிவிடுவேன்.”

“மூட் வந்தால்தான் எழுதுவீர்களா?”

“செய்ய இயலாமையை நியாயப்படுத்தவும், செய்யத் தவறியவற்றுக்குக் காரணம் கற்பிக்கவும் சினிமாக்காரர்கள் கற்பித்த வார்த்தை அது.”

“எங்க காலேஜ் ட்டுடன்ஸ் யூனியனில் கவிதைப் போட்டி என்று வைத்திருக்கிறார்கள். ஒரு வாரமாக எழுத முயற்சி செய்கிறேன், முடியவில்லை.”

அவருக்குச் சுரீரென்று தன்னுடைய இயலாமையைச் சொல்வதற்குமுன் அவள் தம்முடைய மனநிலை பற்றி விசாரித்திருக்கிறாள் என்பதையே அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது. அந்த சமப்படுத்தல் அவருக்குக் கொஞ்சம் எரிச்சல் ஊட்டியது. ஆனால் ‘விசிறி’ என்பதற்காகப் பொறுத்துக் கொண்டார். ஆசை வெட்கமறியாது என்பார்களே? அப்படி வெட்கத்தை விட்டுவிட்டு அவரே அவளைக் கேட்டார்.

“என்னுடைய சமீபத்தியக் கதையை நீங்கள் இன்னும் படிக்கவில்லை போல் இருக்கிறதே!”

“இல்லை; ஒரு வாரமாக வேலை அதிகம். கொஞ்சம் நேரம் கிடைச்சதும் படித்து விடுவேன்.”

இந்தப் பதிலும் அவருக்கு அவ்வளவாகத் திருப்தியளிக்கவில்லை. எழுத்துக் களைப் படிப்பதைவிட அவளுக்கு வேறு ஒரு வேலை இருக்க முடியும் என்பதையே அவரால் ஏற்க முடியவில்லை.

முதல் இரண்டு சந்திப்புகளில் அவள் காட்டிய குருட்டுப் பக்தியும் அந்நியோன்யமும் அவரை அப்படி ஆக்கி வைத்திருந்தன. புகழ்கிறவரின் அடிமைத்தனத்தைவிட அபாயகரமானது புகழப்படுகிறவரின் அடிமைத்தனம். புகழப்படுகிறவனே புகழ்கிறவரிடம் அடிமைப்படுவது பரிதாபகரமானது. அவர் அப்போது இப்படிப் பரிதாபகரமான நிலையில் இருந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து அவள் அவரை நான்காவது முறையாகச் சந்திக்க வந்தாள். அப்போது வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது.

கையில் ஒரு கற்றைக் காகிதங்களுடனும் பைண்டு செய்த நோட்டுப் புத்தகங்களுடனும் வந்திருந்தாள்.
தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்கள் விசிறிக்கு நீங்கள் உதவி செய்யணும்”

“என்ன செய்ய வேண்டும்?”

“இது காலேஜ் போட்டிக்கு நான் எழுதிய கவிதை. இதெல்லாம் நான் பல சமயங்களில் எழுதிய கதைகள், குறுநாவல்கள். சிரமத்தைப் பாராமல் நீங்க கொஞ்சம் படிச்சுத் திருத்திக் கொடுக்கணும்.”

பற்றிக் கொண்டு வந்தது அவருக்கு. ‘நான் இவளுக்கு புக் ரீடரா என்ன?’ என்ற எரிச்சலோடு எண்ணிக் கொண்டே அதை முகத்தில் காட்ட முடியாமல் அசடு வழிய முகமலர்ந்து சிரித்தார். எதிரிகளைவிட விசிறிகள் அபாயகரமானவர்கள் என்று புரிந்தது அவருக்கு தம்முடைய கதையைப் படித்தது பற்றி அவள் ஏதாவது கூறுவாள் என்று எதிர்பார்த்தது வீணாயிற்று.

அவள் தன் கவிதையை அவர் திருத்திக் கொடுத்து வாங்கிக் கொள்வதற்காகக் காத்திருந்தாள். “மத்ததை எல்லாம் நீங்க அப்புறமாகக்கூடப் படிச்சுக் கொள்ளலாம். கவிதை மட்டும் கொஞ்சம் அவசரம், போட்டிக்குக் கொடுக்கணும்.”

கவிதையைப் பிரித்து அவள் முன்னிலையிலேயே படிக்கத் தொடங்கினார். ‘செந்தமிளில் கவிபாட ஸிந்தித்தேன்’ என்று கவிதை ஆரம்பமாகியது. ‘தமிழ்’ என்பதற்கு எந்த எழுத்துச் சரியானது என்பதுகூடத் தெரியாமல் எழுதப் புறப்பட்டுவிட்ட அந்த விசிறியை அவர் ஏறிட்டுப் பார்த்தார்.குறை சொன்னால், என் மேல் உங்களுக்குப் பொறாமையா, ஸார்? என்று மேலும் தன்னோடு அவளைச் சமப்படுத்திக் கொண்டு அவமானப்படுத்திக் கொச்சையாக்கிவிடுவாளோ என்று பயமாயிருந்தது அவருக்கு அதனால் அவளை எதுவும் கேட்கவில்லை.

அது ஏசி அறையாயிருந்தும் வெளியே மழைக் குளிர்ச்சி இருந்தும் திடீரென்று புழுக்கம் அதிகமாவது போல் உணர்ந்து குளிர்ச்சித் திரிப்பானை அதிகமாக்கினார். அவர் முகத்தில் வியர்த்துவிடும் போலிருந்தது.

முதல் தடவையாக விசிறி அருகே இருந்தும் அதிலிருந்து காற்று வராமல் புழுக்கம் மட்டுமே வருவதை உணர்ந்தார் அவர்.

– நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.

NaPa2 'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *