விசித்திர கிராமத்திற்கு வருகை புரிந்தவன்





ஏற்கனவே இங்கு வந்திருக்கிறோம் எனத் தோன்றிற்று. நிறையத் தடவை வந்து பழக்கப்பட்டது மாதிரி இருந்தது. முதல் தடவையாக வருகிற இடத்தில் இப்படித் தோன்றுவது எதனாலென்று புரியவில்லை. இப்படித்தான் சில சமயம், முதல் முறை பார்க்கிற பரிச்சயமற்ற மனிதர்களைக் கூட பழக்கப்பட்டவர் மாதிரித் தோன்றும்.
இங்கே எதற்காக வந்தேனென்று நினைத்துப் பார்த்தான். நினைவுக்குள் அதற்கான பதில் கிடைக்கவில்லை. நின்றபடியே யோசனை. இங்கிருந்து போய் விட்டால் நல்லது. போகத் திரும்பினான். இதுவரை அவனுக்குப் பின்னாலிருந்து, இப்போது முன்னாலாகிவிட்ட, அவன் வந்த வழியில் அவனை நோக்கி சுவடுகள் வந்தன. அவன் நடந்து வந்ததுதான் அது. திகைத்தான். செருப்போடுதான் வந்தான். இப்போது எப்படி சுவடுகள் வெறுங்கால் பதிவுகளாயின? அதுவும் சிவப்பும் மஞ்சளும் கலந்து கூழ் மாதிரி… ஐயோ!
குனிந்து பார்த்தான். வெறுங்கால்கள்தான். பேண்ட் முனைக்குக் கீழே பாதம் முழுதும் அவன் சுவடுகளில் தெரிந்த அதே மஞ்சளும் சிவப்பும். கொதக் கொதவென ரத்தமும் சீழும். அதிலிருந்து துர்நாற்றமடித்தது. நாவின் அடியில் உமிழ் நீர் சுரந்தது. எச்சில் வாயை நிறைத்தபோது அதைத் துப்பலாமா விழுங்கலாமா என்ற யோசனை. வாய்க்குள்ளிருப்பதும் சீழ்தானோ எனும் அளவு நாற்றமடித்தது. விழுங்காமல் துப்பி விடவேண்டும், காறித் துப்பினான். பச்சை நிறத்தில் சளி மாதிரி கெட்டியாய் வந்தது. வாந்தி வருவது போல குமட்டியது.
அப்போதுதான் கவனித்தான், வேலியோரம் குவியல் குவியலாக காய்ந்தும் ஈரமானதாயும் மலங்கள் அடுத்தடுத்து இருந்தன. ஓர் இடத்தில் தோசை அளவு பெரிதாக, ஒழுங்கற்ற வடிவில், திரவம் போல. யாருக்கோ வயிற்றுப் போக்கு. உற்றுப் பார்த்தபோது மல வண்டுகள் காய்ந்த மலத்தைப் பின்னங்காலில் பின்பக்கமாக உருட்டிப் போய்க்கொண்டிருந்தன. வண்டுகளிலிருந்து முகத்தைத் திருப்பினான். வந்த வழியில் திரும்பிப் போக விரும்பாமல் வந்த வாக்கிலே நடந்தான்.
திரும்பிப் பார்க்கவில்லை. சுவடுகளில் இன்னும் சீழும் உதிரமும் இருக்குமோ என்ற பயம். பொழுது மங்கலாயிருந்தது. அநேகமாக அது காலை நேரமாகவோ அல்லது சாயத்திரமாகவோ இருக்கும். சற்றுத் தள்ளி இடதுபுறம் வேலி ஓரத்தில் ஓர் உருவம் எழுந்தது. ஓர் எட்டு முன்னால் வந்து இடுப்பு வரை சுருட்டியிருந்த சேலையைக் கீழே விடவும், அது பெண்ணென்று புரிந்துகொண்டு, வேகமாகக் கடந்தான். கடந்த வாக்கிலேயே அந்த உருவம் அவளுடையதுதானா என்று சந்தேகமும் வந்தது. அடையாளம் காணத் திரும்பியபோது அவள் பாதி குனிந்த வாக்கில், பழையபடி புடவையை மேலே ஏற்றியிருந்தாள். அப்படியே அவள் உட்கார்கிறபோது அவ்வளவு பெரிய பட்டக்ஸ் அவளுக்கு மட்டும்தான் என்று பட்டது. யாராவது பார்த்து விடப்போகிறார்களே என்று பார்வையை விலக்கி நடை தொடர்ந்தான்.
நடப்பது சிரமமாயிருந்தது. பாதை குறுகலாகி இட்டேறியாகிவிட்டிருந்தது. நிலா வெளிச்சம் திட்டுத் திட்டாக அவன் மீதும் பாதையிலும். ஏதோ அமானுஷ்ய சப்தம் க்ரூம் – க்ரூமென்று பிரமை போல காதில் கேட்டது. அதைச் செவிமடுத்தபடி நடந்தான். சப்தம் பலமாகிக்கொண்டே வரவும், அது ஏதோ ஒரு மூச்சிறைப்பு என்றுணர்ந்தான். இப்போது பின்னால் திப்பிரு திப்பிரு என யாரோவோ ஏதோவோ ஓடி வருகிற சப்தம். அவன் திரும்பிப் பார்த்து, இருளில் உருவம் காணாமல், பயந்து ஓடத் துவங்கினான்.
ஓட முடியவில்லை. மண்ணிலிருந்து காலைப் பெயர்த்து எடுக்கவேண்டியதாயிற்று. ஒவ்வொரு தப்படிகளுக்கும், அவன் தப்பிக்கவுமில்லாமல், அவனைத் துரத்துகிற அது அவனைப் பிடிக்கவும் இல்லாமல்…
அவனுக்கு பயமாயிருந்தது. தூரத்துவது பேயாக இருக்குமோ?
‘ச்சே-ச்சே! அதெல்லா சுத்தப் பொய்யி. பேயாவது ஒன்னாவது!’ தன்னைத் தானே சமாதானப்படுத்த முயன்றான். கருத்த அருவமான அது அவனை எட்டிப் பிடித்ததும் அதுவே போதுமென விலகிவிட்டது.
யாரோ அவனுக்கு சுட்ட மக்காச்சோளம் தந்தார்கள். நிறையப் பேர் வட்டமாக சுற்றி உட்கார்ந்தபடி மக்காச்சோளம் தின்பதைப் பார்த்தான். அவர்களில் ஒருவர்தான் தனக்கும் மக்காச்சோளம் தந்திருக்க முடியும். அவர்களுடன் உட்கார்ந்தான். அவர்களெல்லாம் கன்னங்கரேலென, தின்னும்போது பற்கள் மட்டும் வெளுப்பாய்த் தெரிய இருந்தனர். ஆதிவாசிகளோ?
எழுந்து செங்குத்தான உயர்ந்த மண் திட்டில் நடந்தான். மலையேற்றம் போல் கயிறு கட்டி ஏறவேண்டிய நிலையைத் தன்னால் கையால் பற்றிக்கொள்ளவுமில்லாமல் சுலபமாக நடக்கமுடிகிறதே என ஆச்சரியித்தபடி, உயரத்தில் நின்று பார்த்தான். எதிரே பள்ளத்தில் 80 டிகிரி சாய்வில் மண்பாதை. சைக்கிள்களில் பள்ளிச் சீருடைப் பையன்களும் பெண்களும் சரிவில் இறங்கிக்கொண்டிருந்தனர். எப்படி ப்ரேக் பிடிப்பார்களோ?
“இங்க என்னடா பண்ணிட்டிருக்கற?” என முதுகில் அறை விழுந்தது.
புறங்கையால் முதுகைத் தேய்த்தபடி திரும்பிப் பார்த்தான். காக்கி ட்ரௌசர் – வெள்ளை சட்டை அணிந்த ஆறாம் வகுப்பு இப்ராஹிம். இவனெப்படி வந்தான்? தான் வளர்ந்து உயரமாகி, மீசையெல்லாம் வந்து, 23 வயது வாலிபன் ஆன பிறகும், தன்னோடு படித்தவன் இன்னும் அப்படியே இருக்கிறான். இப்போதும் ஆறாம் வகுப்புதான் படிக்கிறானோ?
அவிழ்ந்த லுங்கியை இறுக்கியவாறு ரயில் பாதையை அடைந்தான். தண்டவாளத்தின் மீது நடப்பது அவனுக்குப் பிடிக்கும். செருப்பைக் கழற்றி கையில் பிடித்தவாறு, தண்டவாளத்தின் மீது சமநிலை செய்து நடந்தான். சமநிலை தவறி இரண்டு தடவை இறங்கவேண்டியிருந்தது. யாரோ சின்னப் பையன் எதிரே பேருந்தை ஓட்டிக்கொண்டு வந்தான். தண்டவாளத்தில் பேருந்து ஓட்டக் கூடாதென்று யாரேனும் அவனுக்கு சொல்லக்கூடாதா? படிக்கட்டில் நிற்கும் நடத்துநராவது?
“ஹாய், அங்கிள்! வர்றீங்ளா?”
“இல்ல, சதீஷ்! நடந்தே வந்தர்றன், போ!”
அந்தப் பையனின் பெயர் அதுவாகத்தானிருக்கும். இப்போதைய குழந்தைகள் மிகுந்த சுட்டிகள். அதிலும் இந்த சதீஷ் மிக அசாதாரணம். நகரப் பேருந்தை ஏழு வயதுச் சிறுவன் ஓட்டுவது சாதாரணமா என்ன?
“சார், சார்… நில்லுங் சார். உங்குளுக்கு நாகாலாந்துல ஒரு லச்சம் உளுந்திருக்குதுங் சார்!”
“எனக்கா?! நான் லாட்டரி சீட்டே வாங்கறதில்லியே…!?”
“இல்ல சார். பேப்பர்ல உங்க போட்டோ கூட போட்டிருக்கான் பாருங்க. இந்தாங்க சார் பணம்.”
ஒவ்வொரு நோட்டும் ஓர் அடி நீளத்தில், பத்து நோட்டுகள் இருந்தன. அதில் பத்தாயிரம் என எண்ணிலும் எழுத்திலும் அச்சிடப்பட்டிருந்தது.
– நடுகல், நவம்பர் – டிசம்பர், 1994.
கதாசிரியர் குறிப்பு:
இதழிலும், சிறுகதைத் தொகுப்பிலும் விசித்திர நகரத்திற்கு வருகை புரிந்தவன் என்ற தவறான தலைப்பில் இடம்பெற்ற இக் கதை இங்கு, நகரத்திற்கு என்பதற்கு பதிலாக கிராமத்திற்கு என்னும் சரியான சொல்லோடு இடம்பெறுகிறது. வாசகர்கள் இதையே இறுதிப் பாடமாகக் கொள்ளவும்.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |