வாடகைக்(கா)கு வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 27, 2025
பார்வையிட்டோர்: 4,417 
 
 

ஆவடி பஸ் நிறுத்தத்தில் ஒரு விளம்பரம்:

வேலை தேடுவோர் வாருங்கள் எங்களிடம் பகுதி நேர வேலை வாய்ப்பு. அன்றைய வேலைக்கு அன்றே வேலைக்கேற்ற கமிஷன் தரப்படும் , தவிர மாதாந்திர சம்பளம் தனியாக தரப்படும். தொடர்பு கொள்க: 92………41.

வேலை தேடுவோர் பட்டியலில் உள்ள நடேசன் தன் நண்பன் விச்சுவிடம் டேய் அந்த விளம்பரத்தை பாருடா!! அதில் உள்ள நம்பருக்கு கால் பண்ணுடா என்கிறான். ஏன் நீ பண்ணு என்கிறான் விச்சு.

டேய் நீ என்னை விட நல்ல விவரம் தெரிஞ்சவன், பட்லர் இங்கிலிஷ்ல வேறு நல்ல பேசுவே, போன் பண்ணி பாருடா, 3 மாசமா ரூம் வாடகை கொடுக்கல்ல, அந்த வீட்டு ஓனர் சொட்டை தலையன் கிட்ட இந்த மாதம் சேர்த்து 4 மாத வாடகை ரூ 4000/- ம் அடுத்த மாதம் 5 ந் தேதி கண்டிப்பாக தருவதாக கூறியுள்ளோம் அதுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. நாம சரியா சாப்பிட்டே 2 நாள் ஆகுது. கொஞ்சம் தயவு பண்ணுடா….

சரி சரி நானே பண்றேன் உன் வால்யுமை குறைத்து பேசு, பஸ் ஸ்டேண்டில் நிற்கிறோம்ன்றத மறந்துட்டு பேசற.

அங்கே பார் அவங்க எல்லாம் நம்மையே பார்க்கிறாங்க என்றான் விச்சு.

Sorry டா என்றான் நடேசன்.

விச்சு விளம்பரத்தில் உள்ள நம்பருக்கு போன் செய்கிறான்.

Hello I am vichu, Call you from Ambattur, I see your vilambaram , you wanted graduates for part time job. Please tell me details. I will come to your place and attend the face interview.

மறுமுனையில் : Hello நீங்க தமிழிலேயே பேசலாம்.

Oh உங்களுக்கு இங்கிலிஷ் தெரியாதா no problem நான் தமிழ்லேயே பேசறேன்.

மறுமுனையில்: Hello I know English well, but I don’t understand your Buttler english . உங்களுக்கு என்ன details வேண்டும் ?

விச்சு போனை கையால் மூடிக்கொண்டு டேய் நடேசா அவங்களுக்கு English ல திருப்பி பேச தெரியாதாம் … கிணத்திலருந்து பேசறாயான்னு என்னை கேட்கிறாங்க ..என்ன தமிழிலேயே பேச சொல்றாங்க.

எப்படி ? என் English spoken knowledge? காலரை தூக்கி விட்டு கொள்கிறான் விச்சு.

அப்படியா விச்சு, சரி போனை கொடு நானே அவங்க கிட்ட தமிழில் பேசறேன்,

நடேசன் போனை வாங்கி பேசுகிறான். Hello என் பெயர் நடேசன் , நான் B.Com., பட்டதாரி. உங்க விளம்பரத்தை பார்த்தேன் உங்க முகவரி கொடுத்திங்கன்னா என் original certificates எடுத்துக் கொண்டு இன்டர்வியுக்கு நேரில் வருகிறேன்.

மறுமுனையில் : hello நடேசன் இதுக்கு முன்னாடி பேசியது யாரு?

என் நண்பன் விச்சு மேடம், அவனும் வேலை தேடி வருகிறான் மேடம் , ஏன் மேடம் எதுக்கு கேட்க்கிறிங்க?

மறுமுனையில் : வேலை தேடும் போது இது போல பட்லர் இங்கிலிஷ்ல பேச கூடாது. உங்களுக்கு தெரிந்த மொழியில் பேசி பின்னர் அவர்களிடம் ஒன்று இரண்டு இங்கிலிஷ் வார்த்தைகள் பேசலாம்.

இதை உன் நண்பனிடம் நான் கூறியதாக கூறுங்கள்.

நடேசன் விச்சுவை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறான்…

மறுமுனையில் : சரி விஷயத்துக்கு வருகிறேன். நீங்கள் இன்டர்வியூக்கு எங்களிடம் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. போனிலேயே உங்களுக்கு இன்டர்வியூ நடத்துகிறேன். உங்களுக்கு போக்குவரத்து செலவும், நேரமும் மிச்சமாகும்.

தாங்கள் என்ன படித்துள்ளீர்கள் , வயது என்ன , அனுபவம் என்ன என்று எதுவும் கேட்க மாட்டேன்.

தங்களுக்கான வேலை என்னவென்றால், தாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் தங்களுடைய பகுதியில் எங்கெல்லாம் வீடு காலியாக உள்ளது என்று விவரமாக விசாரிக்க வேண்டும். முக்கியமாக அங்குள்ள அபார்ட்மெண்ட்டுகளில், தனி வீடுகளில் Tolet board மாட்டியிருந்தாலோ அல்லது விற்பனைக்கு இருந்தாலோ அதனை பற்றி அங்குள்ளவர்களிடம் வீட்டின் உரிமையாளர் பெயர், அவரது முகவரி, போன் நம்பர் , வீட்டின் விவரம் அதாவது Single, double bed room or trouble bed room, எத்தனை sq.ft என்ற விவரங்களை விசாரித்து வீட்டின் முகப்பில் நீங்கள் நின்று போட்டோ எடுத்து எங்களுக்கு whatappல் அனுப்ப வேண்டும். அவ்வளவுதான்!!!

நாங்கள் எங்களிடம் வீடு வாடகைக்கு அல்லது விற்பனைக்கு வேண்டி பதிவு செய்துள்ள நபர்களிடம் தாங்கள் அனுப்பிய தகவலை அவர்களிடம் தெரிவித்து அவர்களுக்கு தேவைபடும் பட்சத்தில் அவர்களிடம் ஒரு தொகையை கமிஷனாக பெற்றுக் கொள்வோம். அதிலிருந்து தான் உங்களுக்கு கமிஷன் மற்றும் சம்பளம்தருவோம்.

தவிர தாங்கள் தெரிவித்த விவரங்கள் சரியானது தானா என எங்களுடைய Marketing Supervisor களை கொண்டு விசாரிக்க செய்வோம். விவரங்கள். சரியாக இருக்கும் பட்சத்தில் ரூ.1000/- உடனடியாக அன்றோ அல்லது மறு நாளோ உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவோம்.

மற்றும் மாதந்தோறும் குறைந்த பட்சம் 10 முதல் 15 வீடுகளின் விவரங்களை தாங்கள் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அப்படி தெரிவிக்கும் விவரங்கள் சரியானதாக இருக்கும் பட்சத்தில் தங்களின் வங்கி கணக்கிற்கு மாத சம்பளமாக ரூ. 30,000/- த்தை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி அன்று அனுப்பி விடுவோம்.

இது மட்டுமின்றி தாங்கள் தங்களது நண்பர்களையோ, உறவினர்களளையோ இந்த வேலையில் சேர்த்து விட்டால் ஒரு நபருக்கு ரூ.2000/- போனஸ் தொகை, தங்களுக்கு கிடைக்கும்.

எனவே தாங்கள் விருப்பட்டால் தங்களின் பெயர் , முகவரி , passport size போட்டோ , போன் நம்பர், வங்கி விவரங்களை எங்களின் WhatsApp number க்கு அனுப்பவும். தங்களின் பெயரில் விசிட்டிங் கார்டு தயார் செய்து தங்களின் முகவரிக்கு courier ல் அனுப்பி விடுவோம். தங்களுக்கு விசிட்டிங் கார்டு, ID card கிடைத்தவுடன் தாங்கள் தங்களின் வேலையை ஆரம்பிக்கலாம்.

இது போல் அலுவலகம், அலுவலக நேரம், அலுவலக போக்குவரத்து செலவு ஏதுமின்றி பகுதி நேரத்தில் மாதந்தோறும் ரூ. 50,000/- வரை சம்பாதிக்க அருமையான வாய்ப்பு வேறு எங்கும் கிடைக்காது.

“அதிர்ஷ்ட வாய்ப்பு ஒரு முறை தான் கதவை தட்டும்
தட்டுகின்ற நேரத்தில் கதவை திறக்க வேண்டும்”

உங்களுக்கு இப்போது தட்டுகிறது.

விருப்பம் இருந்தால் உடனே எங்களுக்கு உங்களின் விவரங்களை WhatsApp ல் தெரிவியுங்கள்.

நாளை முதல், ஏன் இன்றே, இப்பொழுதே, இந்த நிமிடத்தில் இருந்தே கூட உங்களுக்கு வருமானம் ஆரம்பமாகும் நீங்கள் எங்களிடம் வேலைக்கு சேரும் பட்சத்தில்……

மனதிற்குள் ஆஹா என்ன அருமையான வார்த்தைகள் ஆஹா….

சரி மேடம் நான் என் நண்பனிடம் நீங்கள் கூறிய விவரங்களை கூறுகிறேன். முடிந்தால் நாங்கள் இருவரும் இன்றே எங்கள் விவரங்களை அனுப்பி விடுகிறோம். நன்றி மேடம்.

நடேசன் போனில் கேட்டவற்றை விவரமாக விச்சுவிடம் கூறுகிறான்.

விச்சு யோசிக்கிறான். டேய் எப்படி டா…….? இது சாத்தியமா……….?

டேய் விச்சு!!!! ஓரு நாளைக்கு ஆளுக்கு ஒரு வீடு தேடி பார்த்தால் கூட இரண்டாயிரம் கிடைக்கும் .

டேய் விச்சு என்னிடம் Bike உள்ளது. இருவரும் சேர்ந்து ஒரு ஏரியாவுக்கு போவோம். காலை முதல் ஒவ்வொரு தெருவாக, அபார்ட்மெண்ட்டாக ஏறி இறங்கி தேடி பார்ப்போம் என கூறுகிறான் நடேசன்.

“முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்”

சரி நல்ல வேலை கிடைக்கும் வரை செய்து பார்ப்போம் என்றான் விச்சு.

இருவரும் அப்போதோ மிக்க சந்தோஷத்துடன் சரி ஓரூ டீ சாப்பிட்டுட்டு போன் செய்யலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர்.

நடேசனே போன் செய்து வேலையில் சேர விருப்பம் தெரிவிக்கிறான்.

பின்னர் அவர்களின் இருவர் விவரங்களையும் WhatsApp ல் அனுப்பி வைக்கின்றான்.

மறுநாளே அவர்களின் பெயர், போட்டோ, அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் முகவரி, மற்றும் தொலைபேசி எண்ணுடன் Visiting card & ID card *DREAM HOUSE AGENCY*, எனவும், அவர்கள் தங்கியிருக்கும் வீட்டு முகவரியிலே இயங்குவதாக பிரிண்ட் செய்யப்பட்டு இருவரின் போட்டோவுடன் courier- ல் அவர்களின் முகவரிக்கு தனி தனியாக வருகிறது.

Courier – ல் வந்த விசிட்டிங் கார்டு, ID card பார்த்தவுடன் இருவருக்கும் மிகவும் சந்தோஷம்.

மறுநாள் இருவரும் தங்களின் ID Card ஐ கழுத்தில் மாட்டிக்கொண்டு ஏதோ Software company ல் வேலை கிடைத்தது போன்ற நினைப்புடன் வண்டியை நகர்த்தி start செய்கிறான் விச்சு.

வண்டி start ஆக வில்லை. வண்டி எடுத்து பல மாதங்கள் ஆகிறது. நடேசா வண்டியில் plug spanner எடுத்து plug ஐ clean. பண்ணி போடு வண்டி start ஆகும் என்கிறான் விச்சு.

Plug clean செய்து போட்டும் வண்டி start ஆகவில்லை. நடேசா வண்டியில் பெட்ரோல் இருக்கா பாரு என்கிறான் விச்சு. உட்கார்ந்து கொண்டே என்னை வேலை வாங்கு என முனவுகிறான் நடேசன்.

பெட்ரோல் டேங்க் திறந்து பார்க்கிறான் நடேசன். அடடா விச்சு பெட்ரோல் இல்லடா

என்ன செய்யலாம்?

ஒரு தண்ணி பாட்டில் எடுத்துக்கோ நடேசா , ரோடில் பைக்கில போறவங்ககிட்ட லிஃப்ட் கேட்டு பெட்ரோல் பங்க் இறங்கி பெட்ரோல் வாங்கின்னு மறுபடியும் நம்ம வீட்டு பக்கமா பைக்கில வரவங்க கிட்ட லிஃப்ட் கேட்டு வந்துடு . Thatsall

டேய் எனக்கு வர கோபத்துக்கு….. மனதிற்குள் விச்சுவை திட்டுகிறான் நடேசன்….

சரி என்ன பண்றது, வாடகை கொடுக்கணும் சாப்பிடணும் அதுக்கு பணம் வேணுமே… போய் பெட்ரோல் வாங்கின்னு வர்றேன்னு கிளம்புகிறான் நடேசன்….

பெட்ரோல் வாங்கி வந்து வண்டியில் ஊற்றி start செய்கிறான் நடேசன், பைக் start ஆகிறது. மணி இப்பவே 12 ஆகுது. பசிக்குதுடா ….

நடேசா உங்கிட்ட பணம் இருக்கா சாப்பிட்டு போலாமா.

வாடா விச்சு வந்து வண்டியில் ஏறுடா டைம் ஆகுதுடா

நடேசா பைக்கை நான் ஓட்டேறேன்டா என்றான் விச்சு.

சரி வாடா.

இருவரும் தெருகடையில் நடேசனிடம் இருக்கும் பணத்தில் ஆளுக்கொரு பரோட்டா மட்டும் சாப்பிட்டு விட்டு ஓரு வழியாக 2.00 மணிக்கு கிளம்புகின்றனர்.

நடேசா வழியில் Tolet board இருந்தா சொல்லு வண்டியை நிறுத்துரேன் என்றான் விச்சு. நீ சொல்றதுக்கு முன்னாடியே பார்த்து கொண்டு தான் வரேன். வண்டியை ஒழுங்கா ரோடை பார்த்து ஓட்டு என்றான் நடேசன்.

விச்சு, விச்சு வண்டியை நிறுத்துடா நிறுத்துடா அங்கே பாருடா அம்பத்தூரில் 2400 sq.ft. தனி வீடு வாடகைக்கு உள்ளது . தேவைபடுபவர்கள் தொடர்பு கொள்ளவும் 91…..86.

விளம்பரத்தை படித்த பின் இருவரும் அந்த வீட்டிற்கு செல்வதற்கு முன் அந்த விளம்பரத்தை விச்சு கிழித்து விடுகிறான். டேய் விச்சு ஏண்டா அதை கிழித்தே என்று நடேசன் கேட்க,

டேய் வேறு எவனாவது இதை பார்த்து விட்டு நமக்கு முன்னே போய் வீட்டின் விவரம் கேட்டு நம் ஏஜன்சியில் கூறிவிட்டால் நமக்கு கமிஷன் கிடைக்காதே எப்படி என் ஐடியா.

டேய் விச்சு நீ மூளை காரன் டா என்றான் நடேசன்,

இருவரும் அந்த வீட்டிற்கு செல்கின்றனர்.

நடேசா நீ அந்த வீட்டிற்கு சென்று விவரங்களை கேள், நான் அங்கே இருக்கிற அபார்ட்மெண்ட் வாட்ச்மேனிடம் அங்கு வீடு ஏதாவது காலி இருக்கிறதா என கேட்டு பார்க்கிறேன் என்றான் விச்சு .

நடேசன் அந்த வீட்டில் உள்ள காலிங் பெல்லை அழுத்த ஒரு பெரியவர் வந்தார். நடேசன் அவரிடம் தன் ID card காட்டினான் தன்னைப்பற்றியும் தன் Dream Home Agency பற்றியும் விளக்கமாக கூறினான்.

பெரியவர், நடேசன் பேசுவதில் சந்தோஷமடைந்து தன் பெயர் கோவிந்தன் என்றும் இந்த வீடு அவர் தனது வருமான சேமிப்பில் வாங்கியதாக கூறி மற்றும் வீட்டு விவரங்களை விவரமாக கூறி வீட்டை சுற்றி காட்டினார். தான் மட்டுமே வீட்டில் இருப்பதாகவும் அடுத்த வாரம் வெளிநாட்டில் உள்ள தன் மகளிடம் செல்ல போவதாகவும் திரும்பி வர 5 ஆண்டுகள் ஆகலாம் என கூறினார். அதற்குள் வீட்டிற்கு வாடகைக்கு நல்ல ஆள் வர வேண்டும் என்றார்.

அனைத்தையும் எழுதிக்கொண்ட நடேசன் தன் விசிட்டிங் கார்டு ஒன்றை அவரிடம் கொடுத்தான். பெரியவர் கோவிந்தன் நடேசனுக்கு காபி கொடுத்தார்.காபி குடித்து விட்டு பெரியவர்க்கு நன்றி கூறி விட்டு வெளியே வந்து Dream home agency க்கு போன் செய்தான்.

பெரியவர் தன்னிடம் கூறிய விவரங்களை நேரில் வந்து விளக்கமாக கூறுவதாக கூறினான். ஆனால் ஏஜன்சியில் உள்ள பெண் உங்களுக்கு எதற்கு வீண் சிரமம், நீங்கள் போனிலேயே கூறுங்கள் நான் record செய்து கொள்கிறேன் என்றாள். அவன் பெரியவர் கூறிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான். நடேசன் கூறிய விவரங்களை கேட்ட ஏஜன்சியினர் நடேசனை வெகுவாக பாராட்டி விட்டு முதல் கேன்வசிங் என்பதால் WhatsAppல் details வந்தவுடன் உடனடியாக ரூ.1000/- + ம் மற்றும் நண்பன் விச்சுவை சேர்த்து விட்டதற்காக போனஸ் 2000 ஆக மொத்தம் 3000/- அவன் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைப்பதாக கூறி உடனே பணத்தை அனுப்பியும் விட்டனர். எல்லாம் 1 மணி நேரத்தில் முடிந்ததை எண்ணி மிகவும் சந்தோஷம் அடைந்தான் நடேசன்.

விச்சு அப்போது வருகிறான். அவனும் ஒரு வீட்டின் விவரங்களை கேட்டு வாங்கி வருகிறான். நடேசன் நடந்ததை கூற விச்சுவும் ஏஜன்சிக்கு போன் செய்து தான் பெற்ற வீட்டின் விவரங்களை WhatsApp செய்கிறான்.

விச்சுவை வெகுவாக பாராட்டிய பின்னர் ரூ.1000/- அவனது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

இருவருக்கும் தலை கால் புரியவில்லை. டேய் நடேசா நாளையிலிருந்து காலை 6.00 மணிக்கெல்லாம் கிளம்பிடனும், குறைந்த பட்சம் ஆளுக்கு 2 வீடாவது கண்டு பிடித்து 4000/- சம்பாதிக்கணும். ஒரு நாளைக்கு 4000/- மாதத்திற்கு 1,20,000/- சம்பளம் ஆளுக்கு 30000/- மொத்தம் 1,80,000/- ஆஹா அருமை டா என்றான் விச்சு.

அதே நேரத்தில் அந்த பெரியவர் கோவிந்தன் வீட்டிற்கு Dream Home Agency இருந்து வருவதாக கூறி வாடகைக்கு வீடு கேட்டு கணவன் மனைவி என இருவர் அந்த வீட்டிற்கு வந்து Dream home Agency யில் தங்களின் வீடு வாடகைக்கு இருப்பதாக சொன்னதாகவும் கூறி பெரியவரிடம் மிகுந்த மரியாதையுடன் பேசி வாடகை அட்வான்ஸ் விவரங்களை கேட்க, அவர்களிடம் பெரியவர் கோவிந்தன் மாத வாடகை ரூ.20,000/-எனவும் அட்வான்ஸ் 6 மாத வாடகை என்று கூற இவர்கள் மறுப்பு எதுவும் கூறாமல் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு சம்மதம் என்று கூறி நாளை வந்து அட்வான்ஸ் தந்து விட்டு அக்ரிமெண்ட் போட்டு கொள்கிறோம் பெரியவரே என கூறி சென்றனர்.

மறுநாள் அவர்கள் வந்து அட்வான்ஸ் தொகையை பெரியவர் கோவிந்தனிடம் கொடுத்து கையோடு கொண்டு வந்த வாடகை ஒப்பந்தம் பத்திரத்தில் 11 மாத வாடகை ஒப்பந்தம் எனவும் மாத வாடகை ரூ.20,000/- அட்வான்ஸ் 6 மாத வாடகை எனவும் தவிர மாத வாடகையை மாதந்தோறும் 5ம் தேதிக்குள் பெரியவர் கோவிந்தன் கேட்டு கொண்ட படி அவரது வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக குறிப்பிட்டிருந்தனர். மற்றும் அவசியமான சில கண்டிஷன்களை அவர்களாகவே குறிப்பிட்டிருந்தனர். இதனை அவசர அவசரமாக படித்து பார்த்த பெரியவர்க்கு ரொம்ப சந்தோஷம். கையோடு கொண்டு வந்த அட்வான்ஸ் தொகையை ரூ.1,20,000/- த்தை அவரிடம் கொடுத்து 2 வாடகை ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பம் பெற்று கொண்டனர். அவர்கள் எதிர் பார்த்தபடியே பெரியவர் கோவிந்தன் ஒரு அக்ரிமெண்டை மட்டுமே படித்து பார்த்தார்.

பெரியவர் அவர்களிடம் நான் நாளை காலையில் வெளிநாடு செல்கிறேன். என்னிடம் 2 சாவிகள் உள்ளன.

எனவே நீங்கள் இன்றே 1 சாவி வாங்கி கொள்ளுங்கள் என்று கூற அவர்களும் ஒப்புக் கொண்டு ஒரு சாவியை வாங்கி கொண்டனர். பெரியவர்க்கு நன்றி கூறி இருவரும் கிளம்பினர்.

ஏஜன்சி அலுவலகத்தில் மறுநாள், hello சங்கர் சார் நீங்கள் கேட்ட படியே அம்பத்தூரில் கோவிந்தன் என்பவரின் 2400 sq.ft. தனி வீடு விற்பனைக்கு உள்ளது. ஒரு சதுர அடி ₹2500/- வீதம் மொத்த விலை ₹.60,00,000/- ஆகிறது. எங்களின் கமிஷன் 2% ₹.1,20,000/- ஆகிறது. வீட்டு உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். வீட்டின் சாவி என்னிடம் தான் உள்ளது. எங்களை விற்பனை செய்ய சொல்லி Power of attorney கொடுத்துள்ளார் . Demand அதிகமாக உள்ளது. 50% அட்வான்ஸ் தொகை ரூ.30 இலட்சத்துடன் நாளை காலை 10 மணிக்கு வந்தால் நேரில் அழைத்து சென்று காண்பிக்கிறேன். ஒரு வாரத்திற்குள் தங்களின் பெயரில் ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். இதற்கு சம்மதம் எனில் மேற்கொண்டுபேசலாம்.

இல்லையெனில் வேற ஒருவர் கேட்டுள்ளார். அவருக்கு மாலையில் கை மாறி விடும்.

மறுமுனையில் சார் நாளை காலை நீங்கள் கேட்ட படியே அட்வான்ஸ் தொகையுடன் வருகிறேன். பணம் தயாராக உள்ளது. வீட்டை நானும் என் மனைவியும் பார்த்த பின் வீடு பிடித்திருந்தால் அட்வான்ஸ் 50% தந்து விடுகிறேன் என்றார் சங்கர்.(

ஏஜன்சியினர் : சங்கர் சார் மறுபடியும் கூறுகிறேன் ஏகப்பட்ட டிமாண்ட் உள்ளது. கட்டாயம் நாளை காலை 10 மணிக்கு அம்பத்தூரில் உள்ள கணேஷ் பவனுக்கு வந்து விடுங்கள். நீங்கள் எங்கள் அலுவலகத்திற்கு வர வேண்டாம். எங்கள் Authorised person அங்கே வந்து விடுவார். அங்கிருந்து சென்று வீட்டை பார்க்கலாம், என்ன சரிதானே,

சரி என்றார் சங்கர்.

“வாடகைக்கு கிடைத்த வீடு விற்பனைக்கு தயாராகிறது”

அப்பாவிகள் விச்சுவும் நடேசனும் மறுநாள் மறுபடியும் காலியாக உள்ள வேறு வீட்டின் விவரங்களை சேகரிக்க தயாராகின்றனர்.

வேலூர் டி.சீனிவாசன் என் பெயர்: D. சீனிவாசன் வயது: 65 (02.1960) பணி: ஓய்வு பெற்ற்வர் Mobille No: 9382899982 தற்போதைய முகவரி: சென்னை  email ID : mvdsrinivasan@gmail.comமேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *