வட்டத்திற்கு வெளியே…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 103 
 
 

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வானொலியின் வீணை இசையை ரசித்தபடி லலிதா, மடியில் கிடந்த உதிரி சுனதாம்பரத்தைத் தொடுத்துக் கொண்டிருந்தாள். குளித்த கையோடு தலைக்கு அம்மாசாம்பிராணி காட்டியதில் வீடு. பூராவும் மணத்தது. தேங்காய் எண்ணெயில் சட்னி தாளிக்கப்படும். மணத்தில், நாவு சுரந்தது. 

”ஆயா’ இன்னைக்கு மட்டம்தானா?” கேட்டாள்.

“வருவா லேட்டா” 

“தெரிஞ்சிருந்தா நான் பெருக்கி சுத்தம் பண்ணிட்டுக் குளிச்சிருப்பேன்.” 

அம்மா எட்டிப் பார்த்து, 

“அது கிடக்குது. போன மாசம் நான் வாங்கின ஆரஞ்சு நிற சுங்குடிச் சேலை பெட்டியிலே இருக்கு. எடுத்து கட்டிக்கோ. கனகாம்பரத்துக்கு மேட்சாயிருக்கும்,” என்றார். 

தாய்நாட்டின் பல இனிமைகளை மனதுள் சிலாகித்தபடி புடவையை உடுத்திக் கொண்டாள் லலிதா. 

நேற்றிரவு அவள் உட்கார்ந்து தைத்த கரும்பச்சை ரவிக்கை மட்டும்தான் சரியானஅளவு. மற்ற பழைய ரவிக்கை, ஐந்து கிலோ குறைந்த அவள் தோள்களில் தொளதொளத்து வழிந்தது. 

விமான நிலையத்தில் அவளைக் கட்டிக் கொண்டு ரெண்டு நிமிடங்கள் சந்தோஷத்தில் அழுத அம்மா கேட்ட முதல் கேள்வி, 

“சாப்பிடறியா இல்லையா?” என்பதுதான்! 

“எப்படித் தோணுது?” சிரித்தபடி கேட்டாள் மகள். 

மெலிந்திருந்தாலும், நிறமும். பொலிவும் கூடித்தானிருந்தன.

“சின்னப் பொண்ணாட்டமிருக்கே லலிதா,” என்றார் அப்பா சந்தோஷமாக. 

“கேக் செய்து விக்கறேன்… ரவிக்கைத் தைச்சுக் கொடுக்கறேன்னு அநாவசியமா வருத்திக்கற. அது தான் இப்படி மெலிஞ்சுட்டே” 

“மனோ பெரியவனாயிட்டான். வீட்டில வேலை அதிகமில்லையேம்மா. நல்லாயிருக்காம்மா?” 

புதுச்சேலையில் சின்ன பெண் போல கேட்ட மகளை நிமிர்ந்து பார்த்தாள் அம்மா. 

“அமெரிக்காவுல நீ புடவையே கட்டறதில்லையா? கொசுவம் தஸ்புஸ்னு நிக்குது.” 

“பருத்திப் புடவை, புதிசு வேறே.” லலிதா மழுப்பினாள்!

“தலையில இன்னும் ஈரம் தெரியுதுடி, காய வச்சுப் பின்னு, சாப்பிட வா.” 

தோட்ட வாசலைத் திறக்க யத்தனித்த யாரோ ‘சட்’டென்று பின் வாங்குவது தெரிய, லலிதா குரல் கொடுத்தாள். 

“யாரது?” 

முடியைக் கோதியபடி முன்னே போய் எட்டிப் பார்த்தவளின் கண்கள் யோசித்தன. 

பம்பையாய்ச் சுருண்ட முடியும், நெற்றி வடுவும்…

“சந்திரன் தானே நீ? என்னை நினைவில்லை….”

பதிலுக்குச் சிரிக்காமல் உருவம் பம்மியபடி நின்றது. 

‘இவனுக்கு வயது இருபத்து மூன்று இருக்குமா? மழிக்காத முகமும், கசங்கிய உடையுமாய் இப்படி நிற்பானேன்?’ 

”உள்ளே வாயேன்.’ 

“அம்மா, கடைக்குப் போகணும்னு சொன்னாங்க”

“அப்ப என் ஓடற?” சிரித்தாள். 

உள்ளே நழுவியவன், மூன்றாவது நிமிடம், பின் வழியாய் வெளியேறி விட்டான். 

சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களைக் கழுவியபடி கேட்டாள்.

“சந்திரனை நான் போன முறை வந்தப்பெல்லாம் பார்க்கவே இல்லையேம்மா.” 

“அவன் பெரியப்பா அவனைப் படிக்க வைக்கறேன்னு மதுரைக்கு கூட்டிட்டு போயிட்டார். பி.காம்., படிச்சான்..” 

“நல்லா வளர்ந்திட்டான். நம்ம மனோ இவனை விடவும் இரண்டு இஞ்ச் உசரமா இருப்பான்” 

“மாப்பிள்ளை நல்ல உயரமாச்சே. அடுத்த வருஷம் பிள்ளையைக் கூட்டிட்டு வா, உங்கப்பாவுக்கும். எனக்கும் சதா மனோக்குட்டி நினைப்புதான்.” 

“சாப்பிடறதுக்கு முன்னால அப்பாவை எங்கம்மா துரத்தினீங்க?” 

“ஹால் டியூப் லைட் மாத்தணும். தெரிஞ்ச ஒரு எலக்டீரிஷியன் பையன் உண்டு. அதான் போயிருக்காங்க.” 

“சாப்பிட்ட பிறகு போலாம்ல?” 

“பிந்தி போனா அவனைப் பிடிக்க முடியாது. ஏக வேலை அவனுக்கு. இப்போ மனோ பரீட்சையெல்லாம் முடிஞ்சிருக்குமில்லை?” 

 “ம். அடுத்த வாரம் வேலைக்குப் போகப் போறான்”

“ஸ்கூல் படிப்புக்கு என்ன வேலை?” 

“ஒட்டல்லம்மா, பரிமாறுற வேலை!” 

”சர்வரா?” – முதியவளின் முகம் நிறம் தப்பியது. 

“சின்ன ரெஸ்ட்ராரெண்ட்தாம்மா.” 

“ரெண்டு பேருமா சம்பாதிக்கறீங்களா?” 

“ம்.”

“குழந்தை மேற்கொண்டு படிப்பானா?” 

“பின்னே? மூணு மாசம் லீவு. சுயமா சம்பாதிக்கணும்னு பிரியப்படறான். அது அங்கே மாமூல்தான். வேண்டிய உடுப்பு, புத்தகம்னு வாங்கிக்குவாள். காசு அருமை புரியும். கட்டுப்பாடு வரும். தன்னம்பிக்கை கூடும். சந்திரனுக்கு சின்ன வேலை கூட ஏதும் கிடைக்கலியா?” 

“பி.காம். படிச்சிட்டு டேபிள் துடைக்கவா? ஊர் சிரிச்சிடும்.”

“ஆக நீங்க அவனுக்கு நல்ல புத்தி சொல்லலை!”

தாய்நாடு இனிமைதான். ஆனால், இங்கு முன்னாய் தைக்கும் வறட்டுக் கவுரவங்கள். போலி மான அவமானங்கள் அதிகம் எனத் துக்கத்துடன் நினைத்துக் கொண்டாள். பாத்திரங்களைக் தவிழ்ந்தவள், காய்கறி நறுக்க ஆரம்பித்தாள். 

அம்மா ஏதும் பேசவில்லை. 

”ஆள் வளர்ந்தாப் போதுமாம்மா? கூடவே திறமை, அனுபவம், தைரியம் எல்லாம் வளரணுமே! கம்மாயிருந்த இத்த இரண்டு வருஷத்துல சந்திரன் தன் சாப்பாடு, சட்டை, சமாச்சாரத்துக்குப் பிறரை எதிர்பார்க்காம இருந்திருக்கலாமே?”

“அதெல்லாம் உங்க ஊருல. ‘என் பையன் ‘சர்வர். உத்யோகத்துக்கு தயாராயிருக்கான்’ னு சொல்லி வைக்காதே.”

சற்று முன் அம்மா முகத்திலிருந்த குதுகலமும், பொலிவும் சுத்தமாய்த் துடைக்கப்பட்டிருந்தன. 

“அவன் வேலை கவுரவக் குறைவுன்னு நாங்க நினைக்கறது மனோவுக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவான்.” 

“என் பேரனைப் பத்தி நாங்கூடத்தாள் வருத்தப்படறேன்.”

“தப்பும்மா. தன்னம்பிக்கை கரைஞ்சு, கூனிக் குறுகித் திரியறது தப்பு. சமுதாய கேலிக்கு அஞ்சி ஏழைப் பெற்றோருக்குச் சுமையா நிக்கறது தப்பு. அலுங்காம, அழுக்குப்படாம, சம்பளம் வாங்கிடணும்னு பிடிவாதம் பிடிக்கறது தப்பு.” 

அரவமில்லாது சந்திரன், பில்லும் சாமானுமாய் வந்து நிற்க, லலிதா கப்பென்று வாய் மூடினாள். நன் பேச்சைக் கேட்டிருப்பானோ என்ற கேள்வியோடு அவன் முகத்தை ஆராய்ந்தவள் மனம் வலித்தது. 

“உன் மனசைப் புண்படுத்தணும்னு பேசலை சந்திரன், நீ வந்ததைக் கவனிக்காம… ஐ யாம் சாரி.” 

“சில புண்களைக் கீறித் திறந்தாத்தான் குணமாகும்க்கா”

சங்கடத்தைச் சமாளிக்க லலிதா படபடவெனப் பேசினாள். 

“என் கல்யாணத்தப்போ நீ பொடியன். உங்கம்மா விசேஷ நாட்கள்ல ஒத்தாசையா இங்கே வரப்போ, நீயும் வருவே. உங்கம்மா கிட்டேதான் மாலாடு, அதிரசம் எல்லாம் பிரமாதமா செய்யக் கத்துக்கிட்டேன். அமெரிக்காவுல அதுக்கு ஓக டிமாண்ட். ஐம்பது, நூறுன்னு ஆர்டர் வந்தபடி இருக்கும். அங்க உதவிக்கு யாரையும் எதிர்பார்க்க முடியாது. எல்லாம் நாமதான். வாரத்துக்கு சமைச்சுப் பிரிஜ்ல வச்சுடுவேன். தோட்டத்தைப் பராமரிக்க அப்பப்போ பக்கத்து வீட்டுப் பையன் உதவுவான், டாக்டருக்குப் படிக்கறான். மணிக்குப் பத்து டாலர் கொடுத்திடணும்.” 

“அங்கே வேலைவாய்ப்பு ஜாஸ்தி, அமெரிக்கா, நம்ப நாட்டை மூணு மடங்குப் பெரிசு. ஆனா, ஜனத்தொகை நம்மதுல் மூணுல ஒரு பங்குதான்.” படித்ததை ஒப்பித்தான் சந்திரன். 

“அங்கேயும் வேலை தேடுற அவதி உண்டுப்பா. ஆனா, இந்த வேலை வேண்டாம். கவுரவக் குறைச்சல்னு எந்த வேலையையும் ஒதுக்கற எண்ணம் கிடையாது.” 

“புரியுதுக்கா. இனி, கிடைக்கற வேலையில் புகுந்துக்கறேன். என் சாப்பாட்டுக்கு ஆனாலும் பரவாயில்ல தானே?” 

“நீ ஏன் வேலை தேடணும்? வேலை ஒண்ணை உருவாக்கு.” மேஜையைச் சுரண்டியபடி நின்றவன், மெல்ல நிமிர்ந்தான். மூச்சுக்கு முந்நூறு ‘அக்கா’ போட்டபடி அவள் பின்னாள் சுற்றிய சிறுவனின் ஜாடை, நன்கு தெரிந்தது. 

“அம்மா, போன தடவை நான் கொடுத்த வாக்குவம் கிளீனரை நீங்க உபயோகிக்கறது இல்லையா?” 

“அதும் பின்னால பிடிச்சிட்டு என்னால ஓட முடியலை லலிதா!” 

“பரண் மேலே போட்டு வச்சிருக்கீங்க?” 

சந்திரனின் உதவியுடன் அடுத்த பத்தாவது நிமிடம் கீழிறங்கியது அந்த க்ளீனர். மின்சார உயிர் தர, பல நாட்களின் புழுதிப் பசியோடு ‘உஸ்’சென்று தூசியைத் தேடி விழுங்கியது. செய்முறை விளக்கப் படத்தைக் காட்டி விளக்கினாள். ஆச்சரியத்தோடு பார்த்தவன், அதை இயக்க, அதனோடு இயங்கப் பழகினான். 

“ஜன்னல் கிரில்தூசெல்லாம் துடைக்கறதே இல்லையாம்மா?”

“விடுங்கக்கா. தலைக்குளிச்சு ஒட்டடை அடிக்கலாமா நீங்க?” அரை மணி நேரத்தில் வீடு பளிச் சென்றாகியது. 

வேலை முடித்து பெருமையுடன் சுற்றிலும் பார்த்தவன். ஈரத்துணி தேடி எடுத்து மின்விசிறிகளைத் துடைத்தான். 

“பரவாயில்லை சந்திரன் – விடு” 

“அது மட்டும் அழுக்கா தெரிஞ்சதுக்கா. அம்மாவுக்கு ஏறி துடைக்க முடியுமா…? அதான்.” 

சுத்தமாகத் துடைத்தான். 

“மூடிச்சாச்சுக்கா. துணியை இப்படி ஓரமா வைக்கட்டுமா?”

“ம்.நீசாப்பிடேன். நான் பாத்ரூமை கழுவி விட்டுட்டு வரேன்.”

“என்னக்கா ஒரு மாதிரி வாடை?” 

“பாத்ரூமெல்லாம் கறை. அது போக லோஷன் போட்டேன். அந்த வாசனைதான்.” 

“பாத்ரூம் கூட நீங்கதான் கழுவணுமாக்கா?” 

“ஒரு கஷ்டமுமில்லை. லோஷன் போட்டு லேசா தேய்ச்சு விட்டா கறை போயிரும்” 

அவள் செம்பு நீரை விசிறி பெருக்கித் தள்ள, தரை மின்னியது.

அவன் வீடு கிளம்புகையில் இருபது ரூபாயை நீட்டினாள். கூடவே ‘வாக்குவம் க்ளீனரை’யும் கொடுக்க அவன், 

“ஏதும் ரிப்பேராக்கா?” கேட்டான். 

”உன் புது தொழிலுக்கு என் மூலதனம். நம்ப காலனியில பெரிய, பழைய வீடுங்க நிறைய இருக்கு! பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் வேலைக்குப் போறாங்க. அவங்களுக்கு வீட்டைச் சுத்தப்படுத்த நேரம் இருக்காது. நீ ஒரு மணி நேரத்துல, தரை விரிப்பு, ஜன்னல் திரை எல்லாத்தையும் சுத்தம் பண்ணிடலாம்”. 

சந்திரன் அசையாது நின்றான். 

“அத்தனைத் தகுதியில்லாத வேலைன்னு நீ நினைச்சா… விட்டிடு.” 

“இல்… லக்கா… வந்து, இதும் விலை ஆயிரக்கணக்கில இருக்குமே. நா கொஞ்சம் கொஞ்சமா அம்மாகிட்ட கடனைக் கட்டிடலாமா…?” கேட்கும் போதே அவன் நெஞ்சும், விழிகளும் பொங்கின. 

இருவர் முகங்களிலும் புன்னகை விரிந்தது. 

“ஆரம்பமா இது…”அவள் தந்த இருபது ரூபாயை லலிதாவின் தாயிடம் நீட்டினான். 

“முத முதலா சம்பாதிச்ச காசு, உங்கம்மாகிட்டே கொடு போ!” அம்மா அதட்டினார். 

“பாத்ரூமுக்கு ஏதோலோஷன் போட்டீங்களே. அது பேருகூட எழுதித் தாங்கக்கா” 

“பெரிய வீட்டுக்கு 25 ரூபா. சின்ன வீடுகளுக்கு 15 ரூபாய் சார்ஜி பண்ணாப் போதாது?” 

“பழந்துணி கூடவே எடுத்திட்டுப் போயிடுறேன்”

“போகப் போக ‘ரேட்’டைக் கூட்டிக்கோ” 

“மின்சார சார்ஜ் அவங்களது தானே? இது போதும்க்கா.” உற்சாகமாய் பேசினான். 

“ஏண்டா சந்திரன், பியூஸ் போட, வாஷர் மாத்த கத்துக்கோ. மாமா அதுக்கு எத்தனைத் தடவை அலையுறாங்க. வர்ரவனுக்கு இருபதுக்குக் குறையாம கொடுத்தாகறது. அதை உனக்குக் கொடுக்கலாமே.” 

கண்களில் ஒளியும், தோள்களில் நிமிர்வுமாய் சந்திரன் வெளியேறினான். 

“லலிதா, ஓட்டல்ல நம்ப மனோக்குட்டி பரிமாறுற மாதிரி ஒரு போட்டோ எடுத்து அனுப்பி வை. நாலு பேர் பார்த்து திருந்தட்டும்.” என்ற தாயை சிரிப்பும், வியப்புமாய் பார்த்து நின்றாள் லலிதா! 

– தினமலர் வாரமலர், மே.1994.

– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *