ருசி கண்ட பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 2,393 
 
 

(1980ல் வெளியான படத்தின் திரைக்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திரைக்கதை, வசனம் : இயக்குநர் பஞ்சு அருணசலம்.

மேடு பள்ளங்கள் நிறைந்த கிராமத்துப் பாதையில் ஒரு குதிரை வண்டி வருகிறது.

உள்ளே சாவித்திரி உட்கார்ந்திருக்கிறாள், எதையோ பறிகொடுத்துவிட்ட சோகம் முகத்தில் இழைகிறது.

குதிரை வண்டி ஒரு வீட்டு வாசலில் நிற்கிறது. சாவித்திரி இறங்கி வீட்டுக்குள் போகிறாள்.


சாவித்திரியின் கோலத்தைப் பார்த்து அம்மா லட்சுமி காரணம் கேட்கிறாள்.

நடந்ததைச் சொல்லி அழுகிறாள் சாவித்திரி.


சாவித்திரி வாந்தி எடுக்கிறாள். அவள் கர்ப்பமுற்று இருக்கிறாள் என்று புரிகிறது லட்சுமி அம்மாளுக்கு.


சாவித்திரி ஒரு பாறையின் மீது அமர்ந்து, தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எண்ணிப் பார்க்கிறாள். அந்தக்காட்சிகள் அவள் மனத்திரையில் தெரிகின்றன.


இந்துமதி ஆதிமூலம் என்னும் தம்பதியர் நடத்தும் ஓர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு சாவித்திரி ஒரு டிராவல் ஏஜன்ஸியில் வேலை பார்க்கிறாள். மாலை மணி ஐந்து அடித்தால், அவளை அழைத்துப் போகக் காதலன் ரமேஷ் காருடன் காத்திருப்பான். சாவித்திரி அவனோடு புறப்படுவாள். இது வாடிக்கையான சம்பவம்.

சாவித்திரியும் ரமேஷும் உயிருக்கு உயிராய்க் காதலித்தார்கள்.

என் நெஞ்சம் உன்னோடு,
உன் நெஞ்சம் என்னேடு!

என்று அத்தியோன்யமாய்ப் பாடித் திரிந்தார்கள்.

ஒரு நாள் ஆபீஸ் வாசலில் ரமேஷின் கார் நின்றிருந்தது. சாவித்திரி ஆவலுடன் ஓடிவந்தாள்.

காரில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள், சாவித்திரிக்கு ஆச்சரியம்.

புதியவளின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சாவித்திரி காரில் புறப்பட்டாள்.

ரமேஷும் அவகும். வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் கார் வந்து நின்றது. சாவித்திரி ரமேஷோடு பழகுவதைக் கண்டிக்கிறாள் புதியவள். அவள் பெயர் கல்பனா.

கல்பனா: முன்பின் தெரியாத ஆம்பிளை கிட்டே ஒருத்தி நெருங்கிப் பழகினா… ஒண்ணு அவ விபசாரியா இருக்கணும்! இல்லை முட்டாளா இருக்கணும், நீ யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

சாவித்திரி: அம்மா! வார்த்தையை அளந்து பேசுங்க. ரமேஷும் நானும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம்.

கல்பனா: ஏற்கனவே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட அவரு உன்னையும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் வேறே செஞ்சாரா?

சாவித்திரிக்கு அதிர்ச்சி, ரமேஷ் கல்யாணம் ஆனவன் என்ற உண்மை அவளுக்கு இப்போதுதான் புரிகிறது.

சாவித்திரி: சத்தியமா இதெல்லாம் எனக்குத் தெரியாது.

கல்பனா: தெரிஞ்சிருந்தா?

சாவித்திரி: நான் அவருகூடப் பழகியிருக்க மாட்டேன்.

சாவித்திரியின் பழைய நினைவுகள் கலைகின்றன.


சாவித்திரியின் வயிற்றிலிருக்கும் கருவைக் கலைக்க மனமில்லாத தாய் லட்சுமி சாவித்திரியை அவளுடைய மாமா வீட்டில் வைத்துப் பிரசவம் பார்க்கிறாள்.

பிரசவத்தில் சாவித்திரி மயங்கிக் கிடக்கும் நேரம், குழந்தையை எடுத்துச் சென்று வீரய்யா என்பவனிடம் ஒப்படைத்து வளர்த்து வரும்படி சொல்கிறாள் லட்சுமி அம்மாள்.

லட்சுமி: வீரய்யா! உன்னை எதுக்கு வரச் சொன்னேன் தெரியுமா? இந்தக் குழந்தையை வளர்க்கிற பொறுப்பை உங்கிட்டே ஒப்படைக்கப் போறேன்.

வீரய்யா: ஏனம்மா இது யார் குழந்தை?

சாவித்திரியின் மாமா: எனக்குத் தூரத்துச் சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தி பிரசவத்தில் செத்துப் போயிட்டா. அவகுழந்தை.

லட்சுமி: இப்ப உன் பொண்டாட்டியும் பச்சப் புள்ளக்காரிதானே? தாய்ப்பால் கொடுத்து வளர்க்க வசதியா இருக்குமேன்னு தான் இந்த யோசனைய எங்க அண்ணன் கிட்டச் சொன்னேன்.

சாவித்திரியிடம் குழந்தை இறந்தே பிறந்தது என்று பொய் சொல்லிச் சமாளிக்கிறாள் லட்சுமி.

வீரய்யா குழந்தையைத் தன் மனைவி செல்லாயியிடம் கொடுக்கிறன்.

செல்லாயி பணத்தாசை பிடித்தவள். ஆரம்பத்தில் மறுத்த அவள், குழந்தையை வளர்த்து வந்தால் பணம் கிடைக்கும் என்று தெரிந்ததும் சம்மதிக்கிறள்.


வழக்கம் போல் சாவித்திரியைத் தேடி வந்த ரமேஷ் அவள் வேலையை ராஜினமாச் செய்துவிட்டுப் போய்விட்டாள் என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைகிறான்.

சாவித்திரியின் ஊர் எது என்றே அவனுக்குத் தெரியாது. செய்வதறியாது தவிக்கிறான்.


சாவித்திரியைக் குமார் என்பவனுக்குக் கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறர்கள் லட்சுமியும், அண்ணனும்.

சாவித்திரியின் மனச்சாட்சி கல்யாணத்துக்கு இடமளிக்கவில்லை. அம்மாவிடம் எதிர்த்து வாதாடுகிறாள்.

சாவித்திரி: என்ன நிலைச்சுக்கிட்டும்மா நீ இந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினே? என் கதை முழுக்க உனக்குத் தான் தெரியுமே.

லட்சுமி: சாவித்திரி! ஏதோ அறியாமத் தவறு நடந்து போச்சு. அதை நாமதான் திருத்திக்கணும்.

சாவித்திரி: ஒரு தவறை மறைக்கிறதுக்கு இன்னொரு தவறு செய்றது ஒரு நாளும் நியாயம் ஆகிடாதும்மா.

லட்கமி: தவறு சரிங்கிறதெல்லாம் நாம எடுத்துக்கிறதை பொறுத்துத்தான்ம்மா இருக்கு.

சாவித்திரி: இல்லையம்மா. இந்தக் கல்யாணம் நடந்தா என் வாழ்நாள் பூராவும் நான் முள்ளு மேலே நிக்கிறமாதிரி இருக்கும். இந்த அக்கினிப் பரீட்சை எனக்கு வேண்டவே வேண்டாம்.

லட்சுமி: சாவித்திரி நீ படிச்சவ. ஒரு தாயோட மனசைப் புரிஞ்சுக்கம்மா. நான் எதுக்காக இவ்வளவு பாடு படறேன். உன் நல் வாழ்வுக்காகத் தான், எனக்குப் பொண்ணா பிள்ளையா வேறு யாரு இருக்கா? அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுக் கண்குளிரப் பார்க்கறதுக்கு?

இந்தக் கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கலேன்னா நான் எதுக்காக உயிரோட வாழணும்? உன் விருப்பப்படியே செய்.

சாவித்திரி தன் நிலையை விட அம்மாவின் நிலையை நினைத்து வருந்துகிறாள்.

குழப்பத்தில் தவிக்கிறாள்.


சாவித்திரியின் குழந்தை கீதா என்ற பெயரில் வீரய்யா வீட்டில் வளர்கிறது.

செல்லாயியின் கொடுமைக்கு ஆளாகித் தவிக்கிறது.

லட்சுமி வந்து பார்க்கும் நேரத்தில் மட்டும் செல்லாயி கீதாவை அன்பாக நடத்துவது போல் நடிக்கிறாள்.


ரமேஷும், கல்பனாவும் ஒரு கார் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

விபத்தில் கல்பனா இறந்து போகிறாள்.


சாவித்திரிக்கும், குமாருக்கும் கல்யாணம் நடந்து முதலிரவு அறையில் சந்திக்கின்றனர்.

குமார்: சாவித்திரி! புருஷன்தான் தன்னுடைய உலகம், புருஷன்தான் தன்னுடைய வாழ்வு. எல்லாமே அவன்தான்னு நவநாகரிகப் பெண்கள் நினைக்கிறதே இல்லை. அதனாலதான் ஒரு கிராமத்துப் பெண்ணான உன்னை என் மனைவியா நான் தேர்ந்தெடுத்தேன்.

சாவித்திரிக்குத் திக் என்று இருக்கிறது. என்ன பதில் பேசுவது?

சாவித்திரி: இந்த நிமிஷம் முதல் என் உடல், பொருள் ஆவி மூணையும் உங்களுக்கே சமர்ப்பணம் பண்ணிட்டேன். இனி என் வாழ்வும், தாழ்வும் உங்க காலடியில்.

காலில் விழுந்து கண்ணீரில் கரைகிறள்.


காலங்கள் சிரிக்கின்றன. சாவித்திரி – குமார் தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அவளுக்கும் வயது நான்கு ஆகிறது. குழத்தைக்குச் சித்ரா என்று பெயர்.

நடந்ததை யெல்லாம் ஒன்றேடு ஒன்று மூடிச்சுப் போட்டுப் பார்த்து, கீதா சாவித்திரியின் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகிக்கிறாள் செல்லாயி. இந்த ரகசியத்தை வைத்துக் கொண்டு லட்சுமி அம்மாளிடம் பணம் பறிக்கத் திட்டம் வகுக்கிறாள். கணவன் வீரய்யாவைத் தூண்டி விடுகிறாள்.

வீரய்யா கீதாவை அழைத்துக்கொண்டு சாவித்திரி வீட்டுக்கு வருகிறான்.

அவனையும், கீதாவையும் பார்த்ததும் லட்சுமி அம்மாளுக்கு அதிர்ச்சி.

லட்சுமி: வீரய்யா நீயா?

வீரய்யா: ஆமாம்.

லட்சுமி: நீ இப்ப எதுக்கு வந்தே? நான் தான் உனக்கு அப்பப்ப பணம் கொண்டு வந்து கொடுக்கிறேனல்ல.

வீரய்யா: கொடுக்கிறீங்க. என் பொஞ்சாதி இருக்காளே அவ ஒரு பிசாசு, உங்க பேத்தியைப் படாத பாடு படுத்தறா… பேத்திங்கிறது எப்படித் தெரியும்னு பார்க்கிறீங்களா? எப்படித் தெரிஞ்சா என்ன?

அப்போது சாவித்திரியும், குமாரும் வருகிறார்கள்.

சாவித்திரி: யாரும்மா இது?

லட்சுமி: வீட்ல வேலை செய்யறதுக்குச் சின்னப் பொண்ணா வேணும்னு சொல்லி யிருந்தேன். அதான் வீரய்யா கூட்டிக் கிட்டு வந்திருக்கு.

சாவித்திரி: ஏய் குட்டி! ஒழுங்கா வேலை செய்வியா?

வீரய்யா: எல்லா வேலையும் செய்யுங்க. நல்ல புள்ளை. இதபத்தி அம்மாவுக்கு ரொம்ப நல்லாத் தெரியும்.

லட்சுமி: சாவித்திரி! எங்கயோ அவசரமா வெளியே புறப்பட்டுக்கிட்டு இருக்கீங்க போலிருக்கு. நீங்க போங்க. மத்ததெல்லாம் நான் பேசிக்கிறேன்.

சாவித்திரியும். குமாரும் புறப்படுகின்றனர். அவர்கள் போனதும் வீரய்யா லட்சுமி அம்மாவை மிரட்டிப் பணம் வாங்கிச் செல்கிறான்.


லட்சுமி அம்மாள் கீதாவுக்கும், சித்ராவுக்கும் ஒரே தட்டில் சோறு ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.

அதைச் சாவித்திரி பார்த்து விடுகிறாள்.

சாவித்திரி: அம்மா! என்னம்மா இது! சிதராவுக்கும் வேலைக்காரக் குட்டிக்கும் ஒரே தட்டில் வச்சு சோறு ஊட்டி விடறே, சித்ராவுக்கு உடம்புக்கு ஏதாவது வந்துச்சுன்னா?

லட்சுமி: அது…வந்தும்மா… கீதா சாப்பிட்டாத்தான் நானும் சாப்பிடுவேன்று சித்ரா அடம் பண்ணினா.. அதான்…

சாவித்திரி: என்னமோ செய். நீ செய்றது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலே.

லட்சுமி கண் கலங்குகிறாள்.


லட்சுமி அம்மாள் கீதாவிடம் பிரியமாக இருப்பதையும், வீரய்யாவுக்கு அடிக்கடி பணம் கொடுப்பதையும் சந்தேகிக்கிறாள் சாவித்திரி.

சாவித்திரி: ஏன்ம்மா! பணம் கொடுத்த தெல்லாம் பத்தாதுன்னு கையில் கிடக்கிற வளையலையும். கழுத்திலே கிடக்கிற செயிலையும் கழட்டிக் கொடுக்கிற அளவுக்கு வீரய்யாவுக்கும் உனக்கும் என்னம்மா உறவு?

லட்சுமியின் இதயத்தில் ஈட்டி பாய்ந்தது போல் இருக்கிறது.

லட்சுமி: என்ன வார்த்தை பேசிட்டே?

நீ நினைக்கிற மாதிரி இல்லேம்மா.

கீதா..உன் குழந்தை!

இந்த உண்மையைக் கேட்டதும் சாவித்திரி அதிர்ந்து போகிறாள்.

அதிர்ச்சியில் லட்சுமி இறந்துபோகிறாள்.


கீதா தன் குழந்தை என்று தெரித்ததும், அவளிடம் அதிகமாக அன்பு காட்டுகிறாள். வேலைக்காரப் பெண்ணிடம் மனைவி அளவுக்கு அதிகமாக அன்பு காட்டுவதைக் கவனிக்கிறான் குமார்.


சாவித்திரியின் நினைவாகவே சுற்றித் திரிந்த ரமேஷ் ஒரு நாள் கடற்கரையில் சாவித்திரியைச் சந்திக்கிறான்.

தன்னை மறந்துவிடும்படி சொல்கிறாள் சாவித்திரி.

இரவு, வெளியூர் சென்றிருந்த கணவன் குமார் திரும்பி வரப்போகும் நேரம்.

ரமேஷ் குடி போதையில் வீட்டுக்குள் நுழைகிறான். சாவித்திரியிடம் பலாத்கார முறையில் நெருங்குகிறான்.

போராடுகிறாள் சாவித்திரி, வேறு வழியின்றிப் பக்கத்தில் இருந்த ஃப்ளவர் வாஸை எடுத்து அடிக்கிறாள்.

ரத்த வெள்ளத்தில் சாய்கிறான் ரமேஷ். சாவித்திரி கொலைக் குற்ற உணர்வுடன் தவிக்கிறாள்.

பின்னர்,

ரமேஷின் உடலைக் காரில் தூக்கி வைத்துக் கொண்டு போய், சாலை ஓரத்து மரம் ஒன்றில் மோதியது போல் காரை நிறுத்திவிட்டு வந்து விடுகிறாள்.

தவித்துக்கொண்டு சாவித்திரி உட்கார்த்திருக்கிறாள். காலிங் பெல் அலறுகிறது. கதவைத் திறக்கிறாள்.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

ரமேஷின் உடலைக் காரிலிருந்து இறக்கு எடுத்து வருகிறான் குமார், டாக்டருக்கு போன் செய்கிறான்.

சாவித்திரி தெருப்பின் மேல் நிற்கிறாள்.

குமார்: என்ன சாவித்திரி பயந்துட்டியா! வர்ற வழியிலே ஒரு மரத்திலே கார் மோதி நின்னதைப் பார்த்தேன். இறங்கிப் பார்த்தா இவன், இவன் என் காலேஜ் ஃபிரண்ட்.

சாவித்திரி: அப்படியே ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அட்மிட் பண்ணி யிருக்கலாமே.

டாக்டர் வருகிறார், ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார்.

ரமேஷ் கண் விழித்துப் பார்க்கிறான், குமார் சாவித்திரியை அவனுக்கு அறிமுகப் படுத்துகிறான், ஆக்ஸிடெண்ட் ஆனதுக்குக் காரணம் கேட்கிறான்.

குமார்: ரமேஷ்! இப்படியா குடிச்சுட்டுக் கார் ஓட்டறது? அப்படி என்னடா உனக்குக் கவலை?

ரமேஷ்: எனக்கு யாரும் இல்லை. என் மனைவி இறந்துட்டா, நான் அனாதை.

குமார்: இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே?

ரமேஷ்: இல்லை குமார்! நான் ஒருத்திய காதலிச்சேன். அவ என்னை மறந்துட்டு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா.

குமார் அப்போ அவளை நினைச்சுத்தான் குடிக்கிறியா

ரமேஷ்: இல்லே! அவளை மறக்கத்தான் குடிக்கிறேன். முடியலே.

சாவித்திரிக்குத் தர்மசங்கடமாகி விடுகிறது.

சாவித்திரி: இப்ப அவரு அடிபட்டிருக்காரு, ரெஸ்ட் எடுக்கட்டுமே. காலையில பேசிக்குவோம்.

குமார்: ரமேஷ்! நல்லாத் தூங்கு. உன் காதல் கதையைக் காலையில பேசிக்கலாம்.

ரமேஷ் எங்கே தனக்கும். அவனுக்கும் இருந்த காதல் தொடர்புகளைக் கணவனிடம் சொல்லிவிடுவானோ என்று சாவித்திரி ஒவ்வொரு நிமிடமும் தவிக்கிறள்.


லட்சுமி அம்மாள் உயிருடன் இருந்த வரை அவளை மிரட்டிப் பணம் பறித்து வந்த வீரய்யா. இப்போது சாவித்திரியை மிரட்டிப் பணம் பறிக்க வருகிறான்.

வீரய்யா சாவித்திரியை மிரட்டுவதையும், அவள் தவிப்பதையும் பார்த்த ரமேஷ் வீரய்யா மீது கோபம் கொள்கிறான். அவனுக்குத் தேவையான பணத்தைத் தான் தருவதாகச் சொல்லி ஒரு தனி இடத்துக்கு அழைத்துச் செல்கிறான்.

இனி நீ சாவித்திரி வீட்டுப் பக்கம் போகக் கூடாது. அவளுக்கு எந்த தொல்லையும் கொடுப்பதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று வீரய்யாவைக் கண்டிக்கிறான்.

வீரய்யா முரட்டுத்தனமாகப் பேசவே அவனை அடிக்கிறான். அப்போது வீரய்யா ஒரு கிணற்றுக்குள் விழுந்து இறந்து போகிறான்.


ரமேஷ் தன் ஊருக்குப் புறப்படுகிறான். அவனை வழியனுப்ப சாவித்திரி, குமார், குழந்தைகள் அனைவரும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருக்கின்றனர். அப்போது,

சித்தா: அப்பா: எனக்குப் பழம் வாங்கித்தா

குமார்: நீ மாமா கிட்ட இரு. நான் போய் வாங்கிட்டு வந்திடறேன்.

குழந்தையை ரமேஷிடம் கொடுத்துவிட்டுக் குமார் போகிறான்.

இப்போது,

ரமேஷும் சாவித்திரியும் குழந்தைகளோடு நிற்கிறார்கள்.

அப்போது,

ரயிலிலிருந்து இறங்கி இந்துமதி வருகிறாள், ரமேஷும் சாவித்திரியும் கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது என்று எண்ணிக்கொள்கிறாள் இந்துமதி.

இந்துமதி: சாவித்திரி! ரமேஷ்! நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா. கங்கிராஜுலேஷன்ஸ்!ஏனம்மா எனக்கு ஒரு இன்விடேஷன் அனுப்பியிருக்கக் கூடாதா?

இதைக் கேட்டபடி குமார் வருகிறான்.

சாவித்திரி தடுமாறிப் போகிறாள்.

சாவித்திரி: மேடம்! இவர்தான் என் ஹஸ்பண்ட் குமார்.

குமாரை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறாள். இந்துமதி ஒரு மாதிரி பூசி மழுப்புகிறாள்.

அப்போது,

ஆதிமூலம் வருகிறார்.

ஆதிமூலம்: சாவித்திரி!… ரமேஷ் பின்னாலேயே நீ சுத்திக்கிட்டுத் திரிஞ்சது வீண் போகலே.

விவரம் புரியாமல் பேசுகிறார்.

ஆதிமூலம்: லேட் ஆனாலும் எப்படியோ ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க… உன் பேர் என்ன பாப்பா!

கீதா: கீதா!

ஆதிமூலம்: உன் பேரு?

சித்ரா: சித்ரா.

ஆதிமூலம்: கீதா – சித்ரா. இந்துமதி! பார்த்தியா சித்ரா அவங்க அம்மா சாவித்திரி சாயல். கீதா அப்பா ரமேஷை அப்படியே உரிச்சு வச்சிருக்கு.

குமார் அங்கிருந்து விருட்டென்று போகிறான்.

சாவித்திரி குழந்தையை எடுத்துக் கொண்டு பின் தொடர்கிறாள்.

ரமேஷ் ஸ்தம்பித்து நிற்கிறான்.


வீட்டுக்கு வந்த குமாருக்குப் பழைய சம்பவங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. கீதாவிடம் சாவித்திரி அன்பாகப் பழகியது. வீரய்யா பேசியது, ஆதிமூலம் பேசியது. இவைகளைக் கொண்டு,

கல்யாணத்துக்கு முன்பே சாவித்திரிக்கும் ரமேஷக்கும் பிறந்த குழந்தைதான் கீதா என்று முடிவுக்கு வருகிறான்.

குமார்: கல்யாணத்துக்கு முன்னமேயே குழந்தை பெத்தவ நீ. கொஞ்சம் ஏமாந்தாக் கொலை செய்யக் கூட அஞ்ச மாட்டே. போ! போயிடு! சும்மா போக வேண்டாம். கொஞ்ச நாள் என்கூட விபசாரியாத் தொழில் நடத்தினியே, அதுக்கு உனக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக்கிட்டுப் போ! நீ ரமேஷுக்குப் பெத்த சனியனையும் கூட அழைச்சுக்கிட்டுப் போய்த் தொலை!

சாவித்திரி : நான் ரமேஷைக் காதலித்தது உண்மை. எங்களுக்குள்ளே எந்தத் தப்பான உறவும் ஏற்பட்டதில்லை. நான் நிரபராதி. நான் சொல்றதைக் கேளுங்க.


சாவித்திரி தனக்கு நேர்ந்ததை – இரவும் பகலும் அவளைத் துன்புறுத்தி வரும் ஒரு சம்பவத்தைக் கூறுகிறாள்: பல காலத்துக்கு முன் ஓர் இரவு. மழையிலிருந்து தப்ப ஒரு விடுதியில் ஒதுங்கும்போது, விடுதிக் காப்பாளன் பரிவுடன் அவளை, மழையில் நனைந்த உடைகளைக் கழற்றிப் பிழிந்து உலர வைத்துக் கொள்ள ஓர் அறைக்குள் அனுப்புகிறான். மின்சாரத தடை. இருட்டுப் அச்சமயம் திடீரென்று ஒருவன் அவளை அணுகிப் பலவந்தமாக அவள் கற்பைச் சூறையாடி விடுகிறான். இருட்டில் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. ஆனால் விடுதிக் காப்பாளனிடம் பணம் கொடுத்து விட்டுச் செல்லும் அவன் ஸ்கூட்டர் நம்பர் மட்டும் பளிச்சென்று ஒரு மின்னல் ஒளியில் அவளுக்குத் தெரிந்தது. மறக்க முடியாத வேதனையுடன் நெஞ்சில் பதிந்து விட்ட அந்த ஸ்கூட்டர் நம்பரைச் சொல்கிறாள் சாவித்திரி.

அந்த நம்பர் குமாருக்கு நன்கு பரிச்சயமானதுதான்! ஏனெனில் கல்யாணமாவதற்குச் சில தினங்கள் முன்பு அவன் விற்றுவிட்டது அவனுக்குச் சொந்தமான அதே ஸ்கூட்டர்தான். அன்று இரவு அந்த விடுதிக்கு வந்து அவளை அனுபவித்ததும் அவனேதான்! இதை உணர்ந்த குமார் இன்று தெய்வச் செயலாகத் தன் மனைவியாகி விட்டிருக்கும் அவளிடம் மன்னிப்பு வேண்டுகிறான். சாவித்திரியின் மனச் சுமையும் இறங்குகிறது.

அப்போது வீரய்யாவைக் கொன்றதாக ரமேஷைப் போலீசார் கைது செய்துள்ள செய்தி வருகிறது. சாவித்திரியின் நல் வாழ்வுக்காக ரமேஷ் செய்துள்ள தியாகத்தைப் பார்த்து நெகிழ்கிறான் குமார்.

கணவன் – மனைவியிடையே மறுபடி துளிர் விடும் அன்புக்குக் குழந்தைகள் துணை நிற்கின்றன.

– 22-06-1980

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *