கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2025
பார்வையிட்டோர்: 1,391 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தூனே தெய்வம் என்ற எண்ணம் அந்தக் கல்லுக்கு. ஆனால் உலகத்திலே ஏதாவது ஓர் அதிசயச் செயலைச் செய்தாலொழிய ஜனங்கள் வணங்கமாட் டார்கள்; வழிபாடு இல்லை என்றால் தெய்வத் தன்மை ஏது? 

அது என்றும் வெயிலிலே மினுக்கவில்லை; நில விலே பளபளக்கவில்லை. 

ஜோவென்று அடைமழை கொட்டினாலும் சரி, எலுமிச்சம் பழங்களைப் போன்ற பனிக்கட்டிகள் பொழிந்தாலும் சரி, அதன் மௌன விரதம் எப்போ தும் கலையவில்லை. 

அக்கம்பக்கத்திலுள்ள கூரிய கற்கள், “சுத்த எருமை மாடுடா நீ!” என்று அதை நையாண்டி செய்யும். 

யாரோ கவணால் எறிந்த கல் ஒன்று விர்ரென்று அதன் பக்கத்திலேயே பாய்ந்து சென்றது; ஆனால் அது தன் இடத்தை விட்டுச் சிறிதும் அசையவில்லை. 

சந்திரகாந்தக் கல் உருகுவதை அது ஒரு தடவை பார்த்தது. ஆனால் தான் மட்டும் ஒரு க்ஷணங்கூட உருகவில்லை. 

கவாயத்துப் பழகும் சிப்பாயைப்போல, கால புருஷன் முன்னால் அடிவைத்துச் சென்றுகொண்டே இருந்தான். 


ஒரு நாள் சில கைதிகள் அவ்வழியே போய்க் கொண்டிருந்தார்கள். வெயில் தழல்போல எறித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இளைப்பாறுவதற்காக அந்தக் கல்லின் அருகே மரநிழலில் உட்கார்ந்தார்கள். ஒரு கைதி பாடவும் ஆரம்பித்துவிட்டான். அந்தப் பாட்டுக்கு ராகமா தாளமா, எதுவும் இல்லை.ஆயினும் அதைக் கேட்டு எல்லாக் கைதிகளும் ஆனந்தத்தில் மூழ்கினர். அவர்களைக் காத்து வந்த சிப்பா யும் தன்னை மறந்து அந்தப் பாட்டில் லயித்து விட்டான். 

அது ஒரு காதற் பாட்டு. “தோழி,நான் முன்பு இரும்பாக இருந்தேன்; ஆனால் உன் ஸ்பரிசம் பட்ட வுடனே என் வாழ்க்கை பொன்னாகிவிட்டது” என்கிறான் காதலன். 

பாட்டைக் கேட்கும் ஜோரிலே, ஒரு கைதி தன் கையில் இருந்த மண்வெட்டியை லேசாக மேலே தூக்கித் தரையில் மெதுவாக வீசினான். ‘கண் என்ற ஓசை கேட்டது. அதைக் கேட்டு யாவரும் அந்தப் பக்கம் பார்த்தபோது, அந்த மண்வெட்டி மஞ்சளாகத் தென்பட்டது! முதலில் ஒருவன், பிறகு இரண்டாமவன், மூன்றாவது ஆசாமி-இப்படியாக ஒவ்வொருவனும் தன் மண்வெட்டியை அந்தக் கல் லிலே படும்படி வைத்தான். ஒவ்வொரு மண்வெட்டி யும் பொன்னாயிற்று.”தெய்வம்!தெய்வம்!” என்று எல்லாக் கைதிகளும் ஆனந்தத்தினால் கூச்சலிட்டனர். 

இரும்பைப் பொன்னாக்கும் அந்த ரஸகுளிகை யைப் பெறுவதற்காக ஒவ்வொரு கைதியும் போராட ஆரம்பித்தான். அரைமணி நேரத்துக்கு முன்பு இசை விருந்து நடந்துகொண்டிருந்த இடத்தில் இப்போது அலறும் சப்தம் காதில் விழுந்தது. அந்தக் கைதிகள் யாவரும் தமக்குள் ஒருத்தன் தலையை இன்னொருவன் மண்வெட்டியால் பிளக்கும்வரைக்கும் சண்டையிட்டு, மரணத்தை எதிர்பார்த்தவர்களாய்த் தரையிலே சாய்ந்து கிடந்தனர். சிப்பாய் அந்தக் கல்லை மெது வாக எடுத்துத் தன் பையிலே போட்டுக்கொண்டான். 


சிப்பாயின் மனைவி அரிவாளை அந்தக் கல்லிலே உரைத்துப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட் டாள்; அந்த ஆசையை அவளால் அடக்க முடிய வில்லை. 

பொன் அரிவாளை வீட்டிலே வைத்துக்கொண்டு என்ன செய்வது? சிப்பாய் அதைப் பொன் வாணிக னிடம் எடுத்துக்கொண்டு போனான். 

ஒவ்வொரு வியாபாரியும் அந்தப் பொன்னின் மாற்றைப் பார்த்தான். அசல் பத்தரை மாற்றுத் தங்கம்! ஆயினும், ஒவ்வொருவனுக்கும் மனத்தில் சந்தேகம் உதித்தது : ‘குபேரனுடைய வீட்டிலே கூடப் பொன் அரிவாள் இராதே! அப்படி இருக்க, இந்த நாடோடிச் சிப்பாயிடம் அது எப்படி வங் தது?’ என்று. 

ஒவ்வொருவனும் அந்தப் பொன் அரிவாளை இரும்பின் விலைக்குக் கேட்க ஆரம்பித்தான். சிப் பாய்க்குக் கோபம் வந்துவிட்டது. கடைசியில் ஒரு வியாபாரி போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டரை அழைத்து வந்தான். அரிவாளைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துப்போனார்கள்; சிப்பாயை அறைக்குள்ளே அடைத்து வைத்தார்கள். 

பளார் – பளீர் – பளார்! 

சாட்டையால் அடித்தார்கள்; ஆனால் சிப்பாய் சிரித்துக்கொண்டிருந்தான். முதுகுத் தோல் உரிந்து மாமிசம் சக்கை சக்கையாகத் தொங்கியது; ஆனால் அவன் ஊசி போட்டுத் தைத்தாற்போலத்தன் வாயைத் திறக்கவே இல்லை. 

அவனுடைய மனைவியை அவன் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினார்கள். மீண்டும் சாட்டை யடி தொடங்கியது. 

ரத்தத்திலே தோய்ந்த சதைத் துணுக்குகள் இங் கும் அங்கும் பறந்தன. அந்த அம்மாளின் உறுதியும் பறந்தது.மடியிலே கட்டியிருந்த கல்லை ஸப் இன்ஸ் பெக்டரை நோக்கிச் சுழற்றி எறிந்துவிட்டு, இந்தா ருங்கள் அந்தப் பூதம்! என் கணவரை விடுவியுங்கள்!” என்று கூவினாள். 

அவளுடைய முட்டாள்தனத்தை நினைந்து ரஸ குளிகை மனத்துக்குள்ளேயே சிரித்தது. தெய்வத்தை யாராவது பூதம் என்று சொல்வார்களா? 

அவள் வீசி எறிந்த கல் ஸப் இன்ஸ்பெக்டரின் மண்டையில் பட்டது. தலையிலிருந்து ரத்தம் பெருகு வதைப் பொருட்படுத்தாமலே, அவன் சட்டைப் பையிலிருந்து சாவிக்கொத்தை எடுத்தான். ஒவ் வொரு சாவியையும் அந்தக் கல்லில் தேய்த்ததுமே பொன்னாயிற்று. தலையில பட்ட காயத்தைப்பற்றி அவனுக்கு நினைவே இல்லை! 

ஸப் இன்ஸ்பெக்டரின் வீட்டில் அவனுடைய தம்பிகள் இருவர் இருந்தனர். 

முதல் தம்பி ரஸகுளிகையை எடுத்து, இரும்பாலாகிய ஒவ்வொரு வஸ்துவின் மீதும் தேய்த்தான். ஆணிகள் பொன்னாயின ; ஜன்னல் கம்பிகள் பொன் னாயின ; பூட்டுக்கள் பொன்னாயின. ஸப் இன்ஸ் பெக்டரின் வீடு குபேரநகரத்துப் பொன்வீடு ஆயிற்று! தன் வீட்டுப் பொற்கதவைப் பெருமிதத் தோடு பார்த்துக்கொண்டே, ‘வீட்டிலுள்ள எல்லாப் பொருள்களும் பொன்னாயின. இனி இந்த ரஸகுளி கையால் என்ன உபயோகம்? அடடா! என் உடலும் இரும்பாக இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருக் கும்! இந்தக் குளிகையைத் தேய்த்து அதையும் நான் பொன்னாக்கிவிட்டிருப்பேனே !’ என்று அந்தத் தம்பி யோசிக்கலானான். வீட்டில் பொன்னாக்கக்கூடிய பொருள் வேறு ஏதும் இல்லையே என்று அவன் வருத்தமுற்றான். அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது! 

மற்றொரு தம்பியின் மனைவிக்கு வேறு எண்ணம் உண்டாயிற்று. வீட்டிலுள்ள எல்லாப் பொருள்களும் பொன்னாயின. இருந்தாலும், ரஸகுளிகை மூத்த மைத்துனனுடைய வசத்தில் இருப்பதனால், ஜனங்கள் என் கணவனைவிட அவனுக்குத்தான் என்ன ஆனாலும் அதிக மரியாதை கொடுப்பார்கள்’ என்று அவள் எண்ணினாள். 

பொறாமையினால் அவள் தவியாகத் தவித்தாள். ஒரு நாள், மூத்த மைத்துனனுக்குக் கொடுத்த பாலில் மெதுவாக விஷம் கலந்துவிட்டாள். மறுநாள், அவள் மூத்த மைத்துனனைக் கொலை செய்தாள் என்ற வழக் கின் விசாரணையைக் கேட்பதற்காகக் கோர்ட்டில் அசாத்தியமான கும்பல் கூடிவிட்டது. 

நியாயாதிபதியின் முன்பு, எல்லோருக்கும் எளிதிலே தென்படும்படி ஒரு சிறு கல் ஏன் வைத்திருக்கிறது என்பது யாருக்கும் புரியவில்லை. 

ஸப் இன்ஸ்பெக்டரின் தம்பிமனைவி, தான் விஷமிட்டதை ஒப்புக்கொண்டாள். 

“இந்தச் செயலில் உனக்கு உதவி செய்தது அவள் யார்?” என்று நியாயாதிபதி கேட்டார். அந்தக் கல்லைச் சுட்டிக் காட்டினாள். அவர் வியந்தார். அவள் அழுதுகொண்டே அந்தக் கல்லின் வரலாற்றைக் கூறினாள். 

அந்தக் கல் பட்டவுடனே இரும்பு பொன்னாகிறது!  

ஒரு நிமிஷமாவது அந்தக் கல் நமக்குக் கிடைக் காதா!’ என்ற எண்ணம் அங்கே கூடியிருந்த ஒவ் வொருவர் மனத்திலும் தோன்றிற்று. 

நியாயாதிபதி திவ்ய திருஷ்டி வாய்ந்தவர் என்று எல்லோருக்கும் நம்பிக்கை உண்டு. அவர் என்ன தீர்ப்புச் செய்கிறாரோ என்பதிலேயே ஒவ்வொருவர் கவனமும் இருந்தது.

ரஸகுளிகையை ஆசையோடு பார்த்துக் கொண்டே “கல்லுருவத்திலே உலகில் தெய்வம் நடமாடுவது வழக்கம். இந்தத் தெய்வத்தை நான் என் வீட்டிலேயே வைத்துப் பூஜை செய்கிறேன் என்றார் நியாயாதிபதி. 

“நான் கல் அல்ல ; நான் தெய்வம் அல்ல; நான் ராக்ஷஸன்!” என்று கூவியது ரஸகுளிகை. 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *