ரசனை
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 17, 2025
பார்வையிட்டோர்: 5,478

சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள எட்டு மாடி அலுவலக வளாகத்தின் எட்டாவது மாடியில் உள்ள ஜிகே குரூப் நிறுவனங்களின் அலுவலகம். மாலை நேரம் .
கணக்கு துறையில் பணிபுரியும் வாட்டசாட்டமான கட்டிளங்காளை இளைஞன் சதீஷ் , தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்தான். அருகில் மும்முரமாக கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருந்த ஒல்லியான பெண்மணியிடம் ‘ டீ குடித்து விட்டு வருகிறேன் ‘ என்று சொல்லி விட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் அவனுடைய காதலி உஷாவைத் தேடினான். அவள் இருக்கையில் இல்லை. காபி தேநீர் பானங்களை வழங்கிடும் இயந்திரங்கள் உள்ள கூடத்திற்கு வந்தான். அங்கே ஓர் ஓரத்தில் , மேசை அருகில் உயரமான , சிறிய நாற்காலியில் அவனுடைய காதலி , நீலநிற சூரிதார் அணிந்த, அழகான , ஒடிசலான தேகம் கொண்ட உஷா, கோப்பையில் பிடித்து வைத்த சூடான காபி ஆறட்டும் என்று காத்திருந்த வேளையில் கைபேசியில் வீடியோ பார்த்து அதில் ஆழ்ந்து போய் புன்னகை பூத்தபடி இருந்தாள். அவள் அருகில் வந்த சதீஷ் , அவள் என்னதான் பார்க்கிறாள் என்று எட்டிப் பார்த்தான்.
“இவங்க பேசறதை பார்த்து இப்படி விழுந்து விழுந்து ரசிக்கற சரியான மொக்கை இவங்க பேசறதையே பார்க்க முடியாது.. இதுல பட்டி மன்றத்துல பேசும் போது நடுவுல பாட வேற செய்வாங்க.. நல்ல வேளை நான் காதல்ல விழலைன்னு வேற சொல்லி சிரிப்பாங்க… ” என்றான் சதீஷ்.
உஷா, காதில் இருந்த கருவியைக் கழற்றி வீடியோவை நிறுத்தி விட்டு “என்ன சொன்னே” என்றாள்.
சதீஷ், மீண்டும் அதே வார்த்தைகளையே சொன்னான்.
“அவங்கள பத்தி சொன்னா உனக்கு என்ன.. அவங்க மொக்கைதானே ” என்று மேலும் பேசினான்.
“அவங்க யார்னு நெனச்ச?“ உஷா கேட்டாள்.
சதீஷ் “அவங்க உமா கார்மேகம் பேச்சாளர்” என்று பதில் சொன்னான்.
உஷா சொன்னாள் – “அவங்க எங்க அப்பாவோட பாசமலர் … என்னை வளர்த்த என்னோட அத்தை…“
சதீஷ், அழைப்பு வராத நிலையில் தன்னுடைய கைபேசியைக் காதில் வைத்துக் கொண்டு ‘இதோ வரேன் மேம்’ என்று கூறியபடியே அந்தக் கூடத்தை விட்டு வேகமாக வெளியேறினான்.
– அத்தை மடி மெத்தையடி, சின்னஞ்சிறு புனைகதைகளின் தொகுப்பு,
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
