யானை லொத்தி
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 28, 2024
பார்வையிட்டோர்: 1,964
(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பிரம்மாண்டமான கல்யாணம். பிரம்மாண்டம் என்பதற்கு என்ன அளவு? எத்தனை கன அடி? பிரம்மாண்டமான கூட்டம், பிரம்மாண்டமான படம், பிரம்மாண்டமான ஊழல். பெரிய என்று கொள்ளலாமா? எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும்? எருமையை விட யானை பெரிது எனில், யானை பார்த்திராதவனுக்கு உத்தேசமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்..
இப்படிச் சொல்லலாமா?

பெருந்துறை கோழிப் பண்ணையில் இருந்து மூவாயிரம் கோழிக்கால்கள் வந்தன என்று. கோழிக்கால் எனில் லெக் பீஸ்,
மேலும் சொல்லலாமா, வாணியம்பாடியில் இருந்து மட்டன் பிரியாணி செய்வதற்கு மூன்று திரு நம்பி அணிகள் வந்தன என்று.
இன்னும் சொல்லலாமா, விருதுநகர் பரோட்டா பதினைந்தாயிரம் எண்ணங்கள் போடுவதற்கு மாஸ்டர்கள் தவிர்த்து கொத்தனார்களும் சித்தாள்களும் கமட்டுக்காரர்களும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் என.
கந்தரப்பமும் பால்பணியாரமும் செய்வதற்கு என கானாடுகாத்தானில் இருந்து சமையல்காரர்கள் வந்திருந்தார்கள் எனலாமா?
நாஞ்சில் நாட்டு அவியலுக்கென்றே தாழக்குடியில் இருந்து மூன்று பேர் வந்திருத்தனர் எனலாமா?
திருநெல்வேலி இருட்டுக்கடையில் இருந்து வெண்ணெய்த் தாளில் சுருட்டப்பட்டு 25 கிராம் அல்வாப் பொட்டலங்கள் பத்தாயிரம் வந்தன எனலாமா?
அதென்ன கணக்கு, கோழிக்கால்கள் 3000, அல்வாப் பொட்டல சுருட்டு 10000 எனக் கேட்பது புரிகிறது. எல்லாவற்றுக்கும் கணக்கு இருக்கு! கவிதை என்பதும் காலக்கணக்குதான்!
கல்யாண விருந்தில் மூன்று தரப் பிரிவுகள். சிறைச்சாலைகளில் இருப்பது போல, A வகுப்பு, B வகுப்பு, C வகுப்பு. குற்றவாளிகளின் அரசியல் – சமூக-பொருளாதார சமச்சீரின்படி. மூன்று தனித்தனிப் பந்திகள்.
மன்னர்கள், சிற்றரசுகள், குறுநில மன்னர்கள், ஜமீந்தார்கள், பாளையப்பட்டுக்காரர்கள், பெரும் பண்ணையார்கள் A பிரிவு. அவர்தம் தளகர்த்தர்கள், மந்திரிகள், மதகுருக்கள், அவைப் புலவர்கள், அரண்மனை மருத்துவர்கள், பொருநர்கள், பாணர்கள் B பிரிவு. தேரோட்டிகள், தரகர்கள், வாயிற்காவலர், அடப்பம் தாங்கிகள், வெண்சாமரம் வீசுவோர், கொற்றக்குடை பிடிப்போர், மேளக்காரர்களின் உதவிகள், ஆபத்துதவிகள், தலைவா என்றும் அண்ணே என்றும் விளிப்பவர்கள், தாசர்கள், தாசிகள் C பிரிவு.
வரும் விருந்தினர் எப்படி அவர்தம் பந்திகளை அடையாளம் கண்டு நுழைவார்கள். ஆநிரைகளா அவர்கள், வழக்கமாகச் சென்று அடையும் தொழுவத்தினுள் புகுந்து கொள ?
இதெல்லாம் அழைப்பிதழ் அச்சிடுவதில் கால்கொள்கின்றன. A பிரிவுக்கு 2000 அழைப்பிதழ்கள். ஒரு அழைப்பிதழின் பெறுமதி ரூ. 340. முகப்பில் இருக்கும் கடவுள் படத்தைப் பிசிறின்றிக் கத்தரித்துத் தொழுகை இடத்தில் வைக்கலாம். அப்பம், அரவணை படைக்கலாம். B பிரிவுக்கு 7000 அழைப்பிதழ் கள். இதன் அடக்கவிலை ரூ. 210 தேவியர் மூவரும் வெற்றிலை பாக்கு பழம் பூவுடன் நேரில் அழைப்பதைப் போல, C பிரிவுக்கு 3000 அழைப்பிதழ்கள், அடக்கவிலை ரூ. 70. அதை மோசம் என்றிட இயலாது. யானை படுத்தக் கிடந்தாலும் நிற்கும் எருமை உயரம் இருக்குமல்லவா? A பிரிவு மும்பையிலும் B பிரிவு சென்னையிலும் C பிரிவு கோவையிலும் அச்சானது.
எல்லா அழைப்பிதழ்களிலும் Admit Two என அச்சிடப்பட்ட அஞ்சலட்டை அளவிலான குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது. A பிரிவுக்கு தங்க நிற அட்டை, Hall I எனும் குறிப்புடன், B பிரிவுக்கு வெள்ளி நிற அட்டை, Hall II எனும் குறிப்புடன் C பிரிவுக்கு செம்பவழ நிற அட்டை, Hall III எனும் குறிப்புடன்.
நேரில் சென்று அழைப்பு வைக்கையில், A பிரிவினருக்கு வெள்ளித் தாலத்தில் வெற்றிலை, பாக்கு, பாதாம், முந்திரி, அக்ரூட், கிஸ்மிஸ் பொட்டலங்களுடன் அழைப்பிதழும் நிகர மதிப்பு நாற்பதினாயிரம் B பிரிவினருக்க நிறுவனங்களின்
நிர்வாகிகள் அழைப்பிதழ் எடுத்துப் போனார்கள். எவர்சில்வர் தட்டம், வெள்ளி குங்குமச் சிமிழ், வெற்றிலை பாக்கு, அரைகிலோ மிட்டாய், அழைப்பிதழ் நிகரமதிப்பு நானூறு ரூபாய்.C பிரிவினருக்கு ஓட்டுநர்கள் போனார்கள். எவர்சில்வர் தட்டில் வெற்றிலை பாக்கு, உதிரி சாக்லேட்டுகள், பிஸ்கட் பாக்கட், அழைப்பிதழ் நிகர மதிப்பு தொண்ணூறு ரூபாய்.
Hall I, Hall II, Hall III கொண்ட கல்யாண மண்டபங்கள் கோவை மாநகரில் யாண்டு உள என வினவலாம். கோவையில் இருந்து அவிநாசி போகும் தேசிய நெடுஞ்சாலையில், மருத்துவக் கல்லூரி கடந்ததும், இடது பக்கம் ஒரு சாலை பிரியும். இரண்டு கிலோமீட்டரில் நிரந்தர தொழிற்கண்காட்சி வளாகம். நிரந்தரக் கட்டடங்களுடன். மேலும் மூன்று அரங்குகள் வேண்டு மானாலும் வாடகைக்குக் கிடைக்கும். எத்தனை ஆயிரம் கார்கள் வந்தாலும் இடம் தரும். இத்தனையும் ஏன், மிகச் சாதாரணமான தமிழ்மொழி ஞானஸ்நானம் பெற்று செம்மொழி ஆனதே இங்கு மாநாடு நடத்தப்பட்ட போதுதான்.
அப்போ மணமக்கள்!
அவர்களுக்கென்ன? பட்டத்து இளவரசரும் இளவரசியு மாக அவர்கள் நின்று காட்சி கொடுப்பார்கள், மைதானத்தில் போடப்பட்டிருந்த மோட்டுக் காமணத்தின் மணமேடையில்.
மோட்டுக் காமணம் என்றால் – கமுக மரத்தூண்கள் பச்சை மூங்கில் குறுக்கு நிரைகள். தெங்கம்புதூரில் இருந்து லாரியில் வந்த தென்னையோலைக் கட்டுக்கள். தோரணவாயிலில் செவ்வாழைக்குலை, கமுகம் குலை, நுங்குக்குலை, உலத்திக்குலை, கூந்தற்பனை ஓலைகளும் குலைகளும். காமணத்தின் ஓலை நிரைசல் எங்கும் சளவோலை வரிந்து வரிந்து செருகப் பட்டிருந்தன. தோரணங்களாக ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, எலுமிச்சைகள் கயிற்றில் கோர்க்கப்பட்டுத் தொங்கிக்கொண்டிருந்தன.
மணமேடையோ, பூங்காவனம், நீரூற்று, தடாகம், அன்னங்கள், பூந்தூற்றல், வண்ண ஒளிச் சிதறல், வாசனைத் தூவல்கள் மணமேடையின் விதானத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் குரல்வளையில் இருந்து ஒடிக்கப்பட்டு, நூலில் கோர்க்கப்பட்டு தொங்கிக் கிடந்தன.
நெடுஞ்சாலையில் இருந்து, உள் சாலையில் திரும்பியதும், சாலையின் இருமருங்கும் வண்ணக் குழல் விளக்குகள், தலைக்கு மேல் முல்லை – மல்லிகைப் பந்தல் போல் சரவிளக்குகள். ஒவ்வொரு குழல் விளக்கு கால்களிலும் வருக வருக எனக் கை கூப்பி மணமகனின் பெற்றோர், மணமகளின் பெற்றோர். இன்முகத்துடன், பல் தெரியச் சிரித்தபடி..
நான்கு குழல்விளக்குக் கால்களுக்கு ஒருமுறை மணமக்கள், ஐரோப்பிய சூட்டில் ஒரு படம். வடநாட்டு ஆடைகளுடன் ஒன்று. சரிகை வேட்டி, சட்டை, தோள்துண்டு, பட்டுப் புடவை யுடன் ஒன்று. கேரளப் பாணியில் மணமகள் சரிகை முண்டும் நேரியதும், மணமகன் கோடி வேட்டி, தோள் பொதிந்து மூடிய நேரியதுமாக ஒன்று. சீனத்துப் பாணி உடைகளுடன் ஒன்று. நீச்சல் உடையில் கூட ஒரு போஸ்டர் வைத்திருக்கலாம், வாலிப வயோதிக அன்பர்களின் மகிழ்ச்சிக்காக… நெடுஞ்சாலை திரும்பியதுமே, கார்கள் அன்னக் கூட்டம் போல அசைந்து சென்றன போக்குவரத்து ஒழுங்கு செய்ய, பாதுகாப்பு கண்காணிப்புக்கு என நாலைந்து காவல்துறை ஜீப்புகளும், நிலைப்படை வாகனங்களும் இரண்டு நட்சத்திர, மூன்று நட்சத்திர, அசோகச் சின்ன அடையாளங்களுடன் அநேகம் அதிகாரிகள்.
கம்ப ராமாயணத்தில், பால காண்டத்தில், கடிமணப் படலத்தில் இராமன் – சீதை கல்யாணம் காண வருபவர் பற்றி ஒரு பட்டியல் தருவான் கம்பன்.
தேர்மிசை வருவாரும். சிவிகையில் வருவாரும்.
ஊர்தியில் வருவாரும். ஒளிமணி நிரை ஓடைக்
கார்மிசை வருவாரும். கரிணியில் வருவாரும்.
பார்மிசை வருவாரும் பண்டியில் வருவாரும்
என்று சொல்வதன் வரிசை, தேர்மீது வருபவர்கள், பல்லக்கில் வருபவர்கள், பிற வாகனங்களில் வருபவர்கள், ஒளி நிறையும் மணிகள் பதித்த முகபடாம் அணிந்த மேகம் போல் கரிய ஆண் யானை மேல் வருபவர்கள், பெண் யானைமேல் வருபவர்கள், பூமியின் மேல் நடந்து வருபவர்கள், வண்டிகளில் வருபவர்கள்…
VVIP களுக்கு என மணமேடையின் இடதுவசம் முன்னுரிமையில் மேடைமேல் ஏறி, வெறுமனே மணமக்களுக்கு கை குலுக்கியோ, பூச்செண்டு கொடுத்தோ, கைக்கடக்கமான சின்னஞ்சிறு செப்புக்களில் பொற்காசுகளோ, பொன்னாபரணங் களோ, வெள்ளித் தம்ளர் தட்டு கும்பாக்களோ கொடுத்து, வீடியோவுக்கும் புகைப்படத்துக்கும் அட்டகாசமாய்ச் சிரித்து விட்டு இறங்கிக் கொண்டிருந்தனர். பூங்கொத்துகளை மறுநாள் காலை லாரி கொண்டு மாற்ற வேண்டியதிருக்கும்.
இரண்டாம் பிரிவு எப்போதுமே நடுவாந்திரம் – அந்தாந்தரம். சும்மா எப்படிக் கல்யாணத்துக்குப் போவது என்று நாணப்பட்டு, கிப்ட் பேலசுகளில் போய் பட்ஜட்டுக்குத் தகுந்தாற்போல வால் கிளாக், பிளாஸ்டிக் படங்கள், இயற்கைக் காட்சிகள் என்று பிளாஸ்டிக் சாமான்களாக வாங்கி, கிப்ட் பேக்கிங் செய்து தூக்கிச் சுமந்து நடப்பவர்கள்.
பரிசை, …இதன் பெயர் பரிசென்று சொன்னால் என் பெயர் மைக்கேல் சோலகோவ், கொடுத்து விட்டுக் கீழே இறங்கி விட்டால் தொந்தரவு இல்லாமல் சாப்பிட முடியும். இல்லா விட்டால் கைப்பிள்ளை போல் அதை இடது தொடைமீது வைத்துக் கொண்டு, இடது கையால் அணைத்துப் பிடித்துக் கொண்டு, சாப்பிட வேண்டும். தண்ணீர் எடுத்துக் குடிக்கவும் எச்சில் கைதான். முதலில் மணமக்களைப் பார்த்துவிட்டால் தீர்ந்தது சோலி!
C பிரிவினர் பெரும்பாலும் தனியாக அழைப்பு இல்லாமல் முதலாளிகளின் காரோட்டிகள். அவர் தவிர நிறுவன ஊழியர்கள், சிப்பந்திகள், கைத்தடிகள், பொட்டு கனகன் வெட்டு வீரையன் – மொட்டை முருகேசன் ரயிலடி நந்தன் பாலத்தடி பரமு – கடாவெட்டு கார்த்திக் – ரயில் கிராசிங் ரத்னம் வேல்கம்பு கார்த்தி ஆசிட் அம்மையப்பன் – முட்டை போண்டா முஸ்தபா – கத்திரி செபாஸ்டின் முதலாய ஆபத்துதவி களும் அவர் கீழே இயங்கும் அடிப்பொடிகளும். ‘ந பாபம் ந புண்யம் சிவோகம் சிவோகம்..’
அவர்களுக்கு மேடை ஏறி இறங்குகிற சள்ளை எல்லாம் இல்லை. 54 அங்குல தொலைக்காட்சிப் பெட்டிகளில் சிசி சானலில் பார்த்துக்கொண்டே சாப்பிடலாம். அல்லது சாப்பிட்டுக் கொண்டே பார்க்கலாம். மேடையில் சிறு தெய்வங்களே போன்று தோன்றிப் பிரகாசிக்கும் நடிக நடிகையர் பெயர் கூவி ஆர்ப்பரிக்கலாம்.
சொந்தமாகச் சம்பளம் கொடுத்து நியமித்துக் கொண்ட கரடிப் படையினர், நடிக நடிகையருக்கு இடமும் வலமும் பின்புறமும் ஆளொதுக்கி நடந்தனர். கையில் மூன்றடி நீளத்தில் பளபளக்கும் கருந்தடி. உள்துறை அமைச்சகம் நினைத்தால் அவர்களுக்கு 1.MG அல்லது Ak-47 தரலாம். அமைச்சர் பெருமகன்களைப் போல அரும்பெரும் உயிர்தானே அவர்களது உயிர்களும்?
இடதுசாரிகளால் கொண்டாடப்படுகிற திரைப்பட இயக்குநர் ஒருவர் வந்தார், நகரத் தோழர் குழாம் சூழ, நரசிம்ம வர்ம பல்லவனின் தர்பாரில் இருந்து இறங்கி நேரே வருவதைப் போன்று பாடலாசிரியர் ஒருவர் வந்தார். கரடிப் படையினர் போல, ஆனால் சீருடை அணியாமல் அவர் மன்றப் பொறுப் பாளர் அணிவகுத்து வந்தனர். எளிய மக்களாலும் தானாக அடையாளம் காண இயலுகிற வில்லன்கள், நகை நாயகர், இளைய நாயகர்… நடிகையரோ எனில், இடது முன்னுரிமைப் படிகளில் ஏறியதும், அகில உலகமும் தனக்காகவே திரண் டுள்ளனர் எனும் பாவனையில் இரண்டு கைகளையும் உயர்த்தி உயர்த்தி அசைத்தனர். நமக்கும் கைக்கிடை பார்த்தால் ஒரு சென்மம் தீரும்தானே!
உள்ளூர் அமைச்சர், முன்னாள் அமைச்சர், நகர மேயர், தரகுத் தலைவர், ஆளும் கட்சி -எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், ஏதோ பைசா மாநாடு நடப்பது போல் இருந்தது. பைசா எனில் காசு என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். PYSSA அதாவது Patha Yathra Samrakshan Samithi Andholan. அதில் என்ன மாநாடு என்றால் இருக்கிறது ஐயா! தனி ஈழம் பெறுவதற்காக, ராமேசுவரத்தில் இருந்து பாதயாத்ரையாக யாழ்ப்பாணம், கண்டி கதிர்காமம், நுவரேலியா, அனுராதபுரா போகிறவர்களின் மாநாடு என்று பொருள்.
மதிவாணன் எப்படியும் A பிரிவு அழைப்பாளன் இல்லை. எம்.ஏ., எம்.ஃபில், பி.எச்டி படித்துவிட்டுத் தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக மாதம் எட்டாயிரம் சம்பளம் வாங்குகிறவன் எப்படி A பிரிவுக்கு கனவு காண இயலும்? சத்தியமாய் B பிரிவில் வருவதற்கான யோக்கியதை கூடக் கிடையாதுதான்.கல்யாணப் பெண்ணின் அப்பா ஞாபகம் வைத்துக்கொண்டு அனுப்பி இருப்பார் என்று நம்ப மதிவாணன் மதி இழந்தவன் அல்ல.
தலைவரின் துதிபாடிகள் எவரும் நினைவு வைத்துக் கொண்டு அனுப்பி இருக்கலாம். அல்லது சுசீந்திரம் தேர் நிலைக்கு நின்றதும் பீடிக் கம்பனிக்காரன் பீடிக்கட்டுக்களை வாரி இறைப்பது போல இறைக்கப்பட்டதில் ஒன்று வந்து சேர்ந்திருக்கலாம். குடும்ப அட்டைக்கு இலவசத் தொலைக் காட்சிப் பெட்டி போல எனலும் ஆகும்.
குறைத்தும் மதிப்பிடுவானேன்? மதிவாணன் நகரின் இலக்கியப் புள்ளிகளில் ஒருவன். அதிகம் வளர்த்தாமல் சொன்னால் கவிஞன். அது ஒன்றுதான் இருப்பதிலேயே மேல் வலிக்காத சோலி. தலைவரின் தர்ம ஸ்தாபனம் ஒன்று நடத்திய சவியரங்கம் ஒன்றில் பங்கேற்றுப் பாடி இருக்கிறான். நிலவொளி யில் எனும் பொதுத்தலைப்பில், களவெடுக்கலாம் என்னும் துணைத்தலைப்பு. நகரம் கொஞ்சமாய் அவன் பெயரையும் அறியும். கல்லூரி ஆசிரியனாய், கவிஞனாய், விழாத் தொகுப்புரையாளனாய்…
அழைப்பிதழ் வந்ததும் முதலில் கொஞ்சம் உவகை ஏற்பட்டது. ஆகா! நம்மையும் பொருட்படுத்தி… என்ன பெருந்தன்மை… யோசித்தபோது சஞ்சலமும் ஏற்பட்டது.
‘அங்க நம்மளை யாருக்குத் தெரியும்? அந்தக் கூட்டமான கூட்டத்தில் தலைவரைப் பாத்து ஒரு கும்பிடு கூடப் போட முடியாது! கோடானு கோடியிலே குப்பனைக் கண்டதாரு? ஆனா, போகாமலும் முடியாது… தப்பா நெனச்சுக்கிடுவா.. வெறுங்கையோட போக முடியுமா? நம்ம மாதிரி சாதாரண ஆளா இருந்தா கவர்லே நூறு ரூவா போட்டுக் குடுத்திரலாம். நாப்பது கோடி ரூவா செலவழிச்சு கழிக்கப்பட்டவருக்கு நூறு ரூவாவின் எடம் என்ன? இல்லாட்டாலும் சும்மா எப்பிடிப் போயி கை குலுக்கீட்டு வாறது? சவம் கொறச்சலுல்லா? புத்தகக் கடையிலே போயி, நூறு ரூவாய்க்கி ஒரு புக் வாங்கி குடுத்திர லாம்… ஆனா தலைவரு தினகரன் மட்டும்தான் படிப்பாரு மகளுக்கு தமிழே தெரியுமோ என்னவோ? மருமகன் கதை யாரு கண்டா?’
எவனும் படித்துவிட்டுப் போகிறான் என்றெண்ணி, ‘வானமே நீ வாய்க்குள் வா’ என்றொரு சுயமுன்னேற்றப் புத்தகம் வாங்கினான். வானம் என்ன ஆண்குறியா என்றொரு குதர்க்கக் கேள்வியும் பிறந்தது! அழகிய பன்னாட்டுப் பெண்களின் படங்களுடன், கெட்டி அட்டை, பார்க்க கௌரவமாகத்தான் இருந்தது.
அழைப்பிதழுடன் வெள்ளி நிற அட்டை ஒன்று 4″ x 3″ அளவில் பின்னடிக்கப்பட்டிருந்தது. Hall ll, Admit -II. இன்னொரு வரை எங்கிருந்து தேட? என்னதான் நெகிழ்ந்து, உருகி, கண்ணீர் மல்கி, காமம் செப்பி குறுஞ்செய்தி அனுப்புகிறவன் என்றாலும் கல்யாணத்துக்கு கூப்பிட்டால் துணைக்கு வருவார்களா எவரும்?
பிரதான நுழைவாயிலிலேயே பெரிய ஃப்ளெக்ஸ் பேனரில் மணமக்கள் அரங்கு, Halls 1, II, III, கார்பார்க்கிங், Drop & Pick-up, கிச்சன் என்றெல்லாம் விளம்பரங்கள் இருந்தன. தனியொரு பந்தலில் வீணை, புல்லாங்குழல், வயலினில் திரை இசை கானங்கள்.
இரண்டாம் பிரிவு பந்தி அரங்குக்கு மதிவாணன் நடக்கும் போது கூடவே ஒருவர் வந்தார். சுயசாதி அபிமானத்தில் கேட்டான்
“ஒண்ணாமத்த ஹால் விவிஐபிகளுக்கு போல்ருக்கு…’
“ஆமா! பாண்டிச்சேரியிலே இருந்து டெம்போ நிறைய சரக்கு வந்திருக்கு. பத்தும் பத்தாததுக்கு மாஹியிலே இருந்தும் விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா, ஜின், வைன்.. அரங்கின் நாலு மூலையிலும் பார்…”
“கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா, கீதையின் நாயகனே’
எனக் காற்றில் மிதந்து வந்தது கானம்.
“நீங்க தப்பா எட்டிப் பாத்தேளா?” என்றான் மதிவாணன்.
“ஆமா.. உள்ள விடலே… ரொம்பக் கொண்டாட்டமா குடிச்சுக்கிட்டு இருக்கா ஆணும் பெண்ணும்… நாடு நல்லா முன்னேறிப் போச்சு.. மீன் பிங்கர் சிப்ஸ், சிக்கன் 65, சமோசா, பருப்பு வடை, பக்கோடா, ஊறுகாய் எல்லாம் சைடுக்கு. நடுமத்தியிலே பஃபே டின்னர். விருதுநகர் பரோட்டா, நான், தந்தூரி ரொட்டி, புல்கா, மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, நவ்ரத்தன் காஷ்மீரி புலாவ், எட்டுத் தினுசு கிரேவி, ஆறுவகை ஐஸ்கிரீம், எட்டுவகை இனிப்புகள், பழ சாலட்…”
“இவ்வளவு வெவரமா உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” பக்கத்தில் நடந்து வந்தவர், ரேஷன் கார்டு சைசில், ஒரு கையடக்கப் புத்தகத்தை எடுத்தக் காட்டினார், பாக்கெட்டில் இருந்து.
“கீழே கெடந்தது…என்னண்ணு எடுத்துப் பார்த்தேன்.”
வாங்கிப் பார்த்தான் மதிவாணன். Hall – A, Group – 1, Menu என்று முகப்பில் அச்சிடப்பட்டிருந்தது. அழகான மதுப் புட்டி களையும் உணவுத் தட்டங்களையும் அழகிகள் ஏந்திக் கொண்டிருப்பதான படங்கள். முட்டுக்குமேலே குட்டைப் பாவாடைகளும் முண்டா பனியன்களும் அணிந்திருந்தனர். மதிவாணனுக்கு, முதுபெரும் எழுத்தாளர் ஒருவரை சந்தித்துப் பேசியது நினைவுக்கு வந்தது. பல பத்தாண்டுகளுக்கு முன்பு, பரிசு ஒன்று வாங்க சென்னைக்குப் போயிருந்தபோது, செல்வந்தரான அவரது வாசக நண்பர் இரவு விருந்துக்கு அழைத்திருந்தாராம். அவரது மனைவி பரிமாறியபோது எழுத்தாளருக்கு வாந்தி வருவது போலிருந்ததாம். அஜீரணமாக இருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு காரணம் அதுவல்ல, வாசக நண்பரின் மனைவி, ஸ்லீவ்லெஸ் அணிந்து பரிமாறியதுதான். அவனுக்குத் தோன்றியது நாட்டில் அநேக சிறு உணவு விடுதிகளில் பரிமாறுவோர் முண்டாபனியன் அணிந்து, சமயங்களில் அது கூட இல்லாமல் விளம்புகிறார்கள். அப்போதெல்லாம் வாந்தி வந்ததில்லையா? கேட்க முடியாது, முதுபெரும் எழுத்தாளர்.. மெனு புத்தகம் சுவாரசியமாக இருந்தது. சைனீஸ், மொகலாய், தாய், மெக்சிகன், கான்டினெண்டல், வட இந்தியன், தென் இந்தியன் எனும் தலைப்புக்களில் பாடப்புத்தகம் போன்ற தகவல்களுடன். தாய்லாந்து, சீனா, மெக்சிகோவில் இருந்து எல்லாம் கல்யாணத்துக்கு வந்திருப்பார்கள் போலும் என்று எண்ணிக்கொண்டான்.
Hall – llஐ அடைந்தபோது, உள்ளே பந்தி போய்க்கொண்டு இருந்தது. மொகலாய உடை அணிந்த பரிமாறுவோர். குட்டைப் பாவாடை – முண்டா பனியன் அழகி ஒருத்தி கூடத் தென்பட வில்லை. ஏமாற்றத்துடன் போய் அமர்ந்தான் மதி. பெரிய தாட்டு இலை போட்டு பரிமாறினார்கள். உணவுப் பண்டங்கள் வந்தன, வந்தன, வந்துகொண்டே இருந்தன, இலையின் விளிம்பு வரை Hall – [11 யில் இதைவிட சில அயிட்டங்கள் குறைவாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டான். பெரும்பாலும் நாட்டு வழக்கில் அதை டிரைவர் பந்தி என்மனார் செல்வர்.
அப்பம் தின்னவா குழி எண்ணவா, எனக் கேட்டு சிந்தனையை மாற்றி, குலுக்கிக் குலுக்கிக் கட்ட ஆரம்பித்தான் மதி.
பெரிய வளாகம் அது. பன்னாட்டு இயந்திரக் கண்காட்சி கள் நடத்தப்படும் வளாகம் எனில் சும்மாவா? எத்தனை கார்கள், வேன்கள், பஸ்கள் வந்தாலும் தாங்கும். செம்மொழிக்கே மாநாடு நடந்த இடம் எனில் வழக்குண்டோ? நல்லவேளையாக, பரமசிவன் – பார்வதி திருமணத்தின்போது கூடிய தேவர், அசுரர், அரக்கர், பூதகணங்கள் எடை தாங்காமல் வடகோடு தாழ, தென்கோடு உயர, எடையை சமன் செய்ய கவுண்டர் வெயிட்டாக கடல் குடித்த குடமுனியை தென்னாட்டுக்கு அனுப்பியதைப்போல் எவரையும் தில்லிக்கு அனுப்பத் தேவை இருக்கவில்லை.
சாப்பிட்டு வெளியே வந்ததும் பையொன்று தந்தனர். பரிசுப் பொருளோ பலகாரப் பாக்கெட்டு. Hall-1ல் சாப்பிட்டவர் பெரிய கட்டைப் பை கொள்ளாதபடி திணிக்கப்பட்டிருந்ததை டிரைவர் சுமக்க நடந்து போனார்கள். டிரைவர் பந்தி வாசலையும் கவனித்தான் மதிவாணன். கவிஞன் அல்லவா? அவனுக்குக் கொடுத்ததை விடவும் சிறிய பை மேலும் தாம்பூலம் வைத்திருந்த இடத்தில்,சாப்பிட்டவருக்கு எல்லாம் புத்தம் புது மொட மொடக்கும் ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் வழங்கிக் கொண்டிருந்தனர். பாகிஸ்தானி நோட்டாக இருக்க
வாய்ப்பில்லை. அவ்வளவு வெளிப்படையாகச் செய்வார்களா என்ன?
வீட்டில் நின்று புறப்பட்டு நெடுநேரம் ஆயிற்று. வயிறு முங்க சாப்பிட்டது. மதிவாணனுக்கு தொண்டைக்குழி வரை விருந்தும்,மனம் நிறைய கவிதையும் பிளாடர் ததும்ப சிறுநீரும்.. ஒவ்வொரு அரங்கிலும் கை கழுவும் இடத்துக்குப் பக்கத்திலேயே மூத்திரப் புரைகள் இருந்தன. கை கழுவி வந்ததும் இலவசமாகத் துண்டு வாங்கப் போன அவசரத்தில் பெய்ய மறந்து போயிற்று
கார்கள் நிறுத்தும் இடத்தில் கடைக்கோடியில் இருள் கப்பிக் கிடந்தது. எட்டுப்பத்து இணைக் காமுகர் மறைவாய் நின்று சிலம்பிக்கொண்டிருந்தனர். ஓரமாய்ப் போய் சிறுநீர் கழித்துத் திரும்பி நடந்தான். பாம்பு ஊர்ந்து போகும் பயத்தில் வெளிச்சம் தேடி நடந்தான்.
பெரிய கருப்பு நிற பென்ஸ் காரில் சாய்ந்தபடி, டிபன் பாக்சில் இருந்து கரண்டியால் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரைக் கவனித்தான். ஐம்பத்தைந்து வயதிருக்கும். வெள்ளை பேண்ட், வெள்ளை டிரைவர் கோட். தொப்பி, சீட்டில் கிடக்குமாக இருக்கும். எந்த சீமானின் சாரதியோ?
மதிவாணன் இயல்பாகக் கேட்டான்.
“என்னங்க, சாப்டுறீங்களா?”
“ஆமாந் தம்பி.. உள்ளே போயி ரெண்டு மணிநேரம் ஆச்சு.. முங்கக் குடிச்சுக்கிட்டு எப்ப வாறாரோ? எனக்கு சுகர் உண்டு. பசிக்கதுல்ல?”
“அங்க டிரைவர் பந்தீண்ணே தனியா நடக்குதுங்க.. நல்ல சாப்பாடு…ஐந்நூறு ரூவா பக்ஷஸ். தாம்பூலப் பை எல்லாம் தராங்களா..போகலியா?”
“அதைப் போயித் திங்கதுக்கு மண்ணைத் திம்பேன் தம்பி. நாப்பது வருசம் மிந்தி, கெணவதியிலே கார் ஒர்க்ஷாப்லே நானும் இந்தச் கம்பப் பய தலைவரும் ஒண்ணாதான் பேரிங் கழுவினோம்… இண்ணெய்க்கு இந்தப் போடு போடுதான்… கூப்பிடாம நாம் போயித் திம்பனாக்கும். அவனுக்க சோத்தை? கோடி குடுத்தாலும் போவனா? அருவருத்த சோத்துக்கு விருவிருத்த பட்டினி மேல், தெரியுமா?’
“கஷ்டப்பட்டு உழைச்சு மின்னுக்கு வந்திருக்காரு..’
“ஆமாமா… கஷ்டப்பட்டுதான் மணல் அள்ளுதான்.. அதைவிடக் கஷ்டப்பட்டுதான் பொறம்போக்கு மலையைத் தோண்டி வெட்டி எடுக்கான்.. ரொம்ப ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் செம்மரம், தேக்கு, ஈட்டி, சந்தனம் வெட்டிக் கடத்துனா… அந்தக் கஷ்டம் நாம பட முடியுமா?”
“ஆனா ஆட்டு மந்தை சாஞ்ச மாரியில்லா பெரிய மனுசன் அம்புட்டுப் பேரும் சாயானுவோ?”
“போய்த் திம்பானுகோ தம்பி, மானங்கெட்டவனுகோ! நமக்கு என்னத்துக்குத் தம்பி. நாய்ப்பீ நா நாழி?”
மதிவாணனுக்கு சற்று வயிற்றைப் புரட்டியதுபோல் இருந்தது. வேறொன்றும் இல்லை, எல்லாம் டால்டாவில் பொரித்த அசைவம் ஏகப்பட்டது தின்றதுதான்.
– உயிர் எழுத்து, நவம்பர் – 2012
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
