யாசகம்




‘மதுர…குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டுப்படி ..’-பாடல் பேருந்து நிலையத்தையே கலங்கடித்துக் கொண்டிருந்தது. பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த வண்டியில் ஏறி ஜன்னல் பக்கமாக அமர்ந்து கொண்டோம். பேருந்தின் தரை குப்பையும்,அழுக்குமாக இருந்தது. நீல சாயம் பூசப்பட்ட மல்லிகையை வாங்கச் சொல்லி கூவிக் கொண்டிருந்தாள் ஒரு பெண். இஞ்சி மரப்பா விற்பனையும் நடந்தது. அரசு பேருந்து அனைவருக்கும் சொந்தம்தானே. எங்களின் கையை யாரோ தீண்டுவதாக உணர்ந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்த போது, ஒரு பெரியவர் எங்களிடம் உதவி கேட்கிறார் என்பது புரிந்தது. பர்சு தவறிவிட்டதாகவும் ஊருக்கு செல்ல வேண்டும் எனவும் சொல்லி, உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்று கோரினார். அவரை மேலும் கீழுமாக நன்றாக நோக்கினோம். அவர் உடுப்பு வெள்ளை சட்டையும் வெள்ளை வேட்டியும் நன்றாக கஞ்சி போட்டு தேய்க்கப்பட்டிருந்தது. ஒழுங்கு செய்யப்பட்ட மீசை. நெற்றியில் திருநீர் தீற்றல். எனது பர்சை எடுத்து அதிலிருந்து ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து கொடுக்கும் முன் என் நண்பர் முருகேசன் இரு பாரதி நான் தர்றேன் என்று சொல்லி ஐம்பது ரூபாயை தந்துவிட்டார். வாங்கியவர் மின்னலாய் மறைந்து போனார். அதன்பின் ஐந்து ரூபாய் குறைக்கச் சொல்லி வெள்ளரிக்காய் விற்பவனிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

“கத்தி, கத்தி ஏவாரம் செஞ்சா ஒரு நாளைக்கு நூறு ரூபாதான் கெடைக்கும் சாரு”-என்றான் சிறுவன். ஜேபியில் இருந்த சில்லறைகளை எல்லாம் எடுத்து தந்து வெள்ளரிக்காயை வாங்கிக் கொண்டோம். பேருந்து புறப்படுவதற்கு சில நிமிஷங்கள் முன் வந்து டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் நடத்துனர். சரியான சில்லறை கொடுக்க வேண்டும் என்பதால் நான் பேருந்தைவிட்டு கீழே இறங்கி எதிரில் இருந்த டீக்கடைக்கு ஓடினேன். என்னிடம் நூறு ரூபாயை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டும் சில்லறையை எண்ணிக் கொண்டும் உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தார் கடைகாரர்.
“என்ன பெருசு, இன்னைக்கு நல்ல ஏவாரமா?”
“எங்கப்பா நல்ல ஏவாரம். முன்ன மாதிரி இல்ல”.
-என்று சொன்ன பெரியவரை நன்றாக உற்றுப் பார்த்தேன். அதே பெரியவர். என்னையறியாமலே ஏனோ மனம் வெட்கப்பட்டது.
ஏமாற்றுவதற்கு பெயர் ஏவாரம்!
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தைவிட்டு புறப்பட்டுவிட்ட பேருந்தை ஓடிப் போய் பிடித்தேன். பேருந்து பாயின்டு டு பாயின்டு என்பதால் தேனியை நோக்கி விரைந்தது. அமைதியாக இருந்த என்னை உசுப்பிய முருகேசனிடம் நாங்கள் ஏமாந்த கதையை சொன்னேன்.
“விடு! இது டிஜிட்டலில் அரஸ்டு செய்து பணம் பறிக்கும் காலம்”-என்றார் முருகேசன். சிறு தொகைதான் அது ஏற்படுத்தும் மனக் காயம் ஆற சில நாட்கள் ஆகும்தானே!
பேருந்தின் தரையை சுத்தமாக துடைத்துவிட்டு கையேந்தினார் மாற்றுத்திறனாளி பெரியவர். நடத்துநர் முதல் எல்லோரும் சில்லறை தந்தார்கள். உழைப்புக்கான சன்மானம் அது. யாசகம் அல்ல.
நாங்கள் பத்து நாளைக்கு மேல் சந்திக்காமல் இருந்ததில்லை. வி.எம்.சாவடி தெருவில்தான் பாலகுருவின் மளிகைக் கடை இருக்கிறது. நானும் மகேசும், முருகேசனும் மாலையில் அவன் கடை முன் ஆஜராகிவிடுவோம். எந்த தலைப்பில் பேசினாலும் நான்கு பேரும் தடம் மாறாமல் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்போம். பேசும் சம்பவங்கள் இட்டுக் கட்டிய கதையாக இருக்க கூடாது என்பதும் அதில் உண்மை தன்மை இருக்க வேண்டும் என்பதும் எங்களுக்குள் எழுதப் படாத விதியாக இருந்தது. அன்று நாங்கள் பேசியது யாசகம் பற்றியதாக இருந்தது. முருகேசன்தான் முதலில் ஆரம்பித்தார். தேனி ரயில் நிலையத்தின் வெளியே எப்போதும் ஒரு பெரியவர் தன் உடம்பெல்லாம் வெள்ளை எனாமல் வர்ணம் தீட்டி கையில் ஒரு தடியுடன் அசையாமல் அசல் மகாத்மா போல் நின்று கொண்டிருப்பார். தினமும் அவரை பார்க்கலாம். அவரது தொழில் யாசகம் பெறுவதுதான். ‘மகாத்மாவின் தோற்றம் கூட ஒருவருக்கு வரும்படி வாங்கித் தருகிறது’-நான் சொல்லி நெகிழ்ந்தேன்.
மகேசும், பாலகுருவும் குருகுருவென பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்பு, மகேசுதான் தொடர்ந்தார். தன் அலுவலகம் செல்லும் பிரதான சாலையில் ஒரு முட்டுச் சந்து இருக்கிறது. அதில் அடி பருத்த வயதான கொன்றை மரம் இருக்கிறது. அது எப்போதும் போதையில் அசைந்து கொண்டே இருக்கும். பின்னே, தினமும் சரியாக பதினோரு மணிக்கு வந்துவிடுவான் ஒருவன். தன் இருசக்கர வாகனத்தை நிழலில் நிறுத்திவிட்டு வண்டியில் அமர்ந்தபடியே வெண் சுருட்டை கசக்கி அதில் இருக்கும் புகையிலை தூள்களை அகற்றிவிட்டு தன் சட்டை ஜேபியிலிருந்து கஞ்சா துகள்களை எடுத்து வெண் சுருட்டில் புகுத்தி நெருப்பை பற்ற வைத்து புகைப்பான். புயல் மழையிலும் கூட ‘அவனை’அங்கே பார்க்கலாம். மகேசு சொல்லி முடித்தவுடன் எல்லோரும் மகேசுவை பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் கேள்வி, இது அசாதரணம்மல்ல சாதாரணம் தானே என்று இருந்தது. மகேசு புரிந்து கொண்டு ‘அவனை, பல முறை பார்த்திருக்கிறேன் யாரிடமாவது பொய் சொல்லி யாசகம் கேட்டுக் கொண்டிருப்பான். விலை உயர்ந்த வாகனம் வைத்திருந்தும் வேலைக்கு செல்லாமல் புகைப்பதற்குக்கூட யாசகம் பெறுவது கவனிக்க கூடியதுதானே’-என்றார் மகேசு.
சிறிது மௌன இடைவெளிக்கு பின் எல்லோரும் என்னை பார்த்தார்கள். நான் மூன்றாவதாக தொடர்ந்தேன். நேற்று நான் எனது மூக்கு கண்ணாடியை கடையில் கொடுத்து சரி செய்துவிட்டு அதே பிரதான சாலையில் இருக்கும் தேநீர் கடை முன் வண்டியை நிறுத்தினேன். தேநீர் கடைக்கு சற்று தள்ளி எண்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். மழிக்காத முகம். பழைய சட்டையும் லுங்கியும் அணிந்திருந்தார். காலில் ஒரு தேய்ந்து போன ரப்பர் செருப்பு இருந்தது. நான் அவரை கவனித்த போது அவர் எனக்கு வணக்கம் சொன்னார். நான் அவருக்கு பதில் வணக்கம் சொல்லிவிட்டு தேநீர் கடைக்குள் சென்று தேநீர் பருகிவிட்டு பணம் தந்து மீதி சில்லறைகளை பெற்றுக் கொண்டு என் வண்டியை நகர்த்தினேன். இப்போது கடைக்கு முன் நிறைய வண்டிகள் நெருக்கமாக நின்றிருந்ததால் அந்த பெரியவர்தான் என் வண்டியை எடுக்க உதவினார். பின்பு அவர் நின்றிருந்த இடத்தில் போய் நின்று கொண்டு என்னை பார்த்தார். அவர் கண்கள் பஞ்சடைத்திருந்தது போல் இருந்தது. நான் என் வண்டியை சற்று தள்ளி நிறுத்திவிட்டு அவர் அருகில் வந்து என் கையிலிருந்த மீத சில்லறைகளை அவரிடம் கொடுத்தேன். வாங்க மறுத்துவிட்டார். என்னையே பார்த்துக் கொண்டிருந்தது அவரது கண்கள். அங்கு நின்று கொண்டிருந்தவர்களில் ஒருவர் என்னை பார்த்து ‘அவர்தான் இந்த பில்டிங்கு ஓனர்’-என்று சொன்னதும் எனக்கு சங்கட்டமாக போனது என்றேன். பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்பது இதுதானோ என்றேன். இப்போது மகேசும், முருகேசனும், பாலகுருவும் பலமாக சிரித்தார்கள்.
இரவு கவிழ்ந்திருந்தது. நாங்கள் புறப்படும் நேரம் சமீபித்துவிட்டது. பாலகுரு தன் கண்களால் எங்களுக்கு சமிக்ஞை காட்டினான். நாங்கள் எதிர் பார்த்திருந்த நபர் அங்கே வந்தார். ‘ஒரு சிசர்’-என்றார். பாலகுரு தந்துவிட்டு எங்களை எச்சரிக்கை செய்தான். அவர் தன் சட்டை ஜேபியிலிருந்து கத்தையான ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து அதில் ஒன்றை உருவி நீட்டினார். பாலகுரு வழக்கம் போல் சில்லறை இல்லை என்று சொன்னவுடன் ‘அப்பறம் தருகிறேன்’-என்று சொல்லிவிட்டு செல்ல முயன்றவரை இடை மறித்து ‘சில்லறை நான் தருகிறேன் கொடு நோட்டை’-என்று மகேசு சொன்னதும் சற்று தயங்கி ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டை அந்த மங்கிய வெளிச்சத்தில் நீட்டினார் நபர். அது அத்தனையும் வண்ண நகல் எடுக்கப்பட்ட ரூபாய் என்று தெரிய வந்தது. எங்கள் தெருமுனையில் எப்போதும் இட்லி வியாபாரம் செய்யும் ஆயாவும் சரியான நேரத்திற்கு அங்கு வந்து, பலதடவை செல்லாத நோட்டை தந்து உணவு அருந்திவிட்டு போன விசயத்தை கூறினாள். சிறிது நேரத்திற்கெல்லாம் காவல்துறை வாகனம் கடை முன் வந்து நின்றது. பத்திரமாக ஆசாமியை போலிசிடம் ஒப்படைத்துவிட்டு அவரவர் வீடு செல்ல தயாரானோம்.
உழைப்பின்றி பெறுவது யாவும் யாசகம்தானே!
– மலர்வனம் மின்னிதழில் அக்டோபர் 2021 ல், பிரசுரமானது.