மௌனம் தலை காக்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 100 
 
 

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எத்தனை தடவை அப்பாவை உறுக்கிக் கேட்பாள், சொல்லிவிடுங்கள். ‘உண்மை வெல்லும் என்று?’ ‘யாருக்ககுப் பயப்பட வேண்டும்? அப்போதெல்லாம் அப்பாவின் மௌனம் அவளுக்கு எரிச்சலை, கோபத்தை மூட்டும்.

வெயில் கட்டது. கண்களைத் திறக்கக் கூசியது. முழங்கால்கள் வலித்தன. நெருப்புத் தணலை உடல்மீது வீரியது போல எரிவு… ‘எல்லாரும் ஐ.சி.யுடன் கிறவுண்டுக்கு வாங்கோ…!’ என்று அவர்கள் சொல்லியதும் மக்களுடன் மக்களாய் கூடிய கூட்டத்தைப் பார்க்க அழுகை வந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டான். உள்ளத்தினுள் எரிமலை எழுத்து மடிந்தது. ‘ரவுண்ட் அப்’ என்று எத்தனை தடவை சுற்றிவளைப்பு நடக்குது. மக்களுக்கான போராட்டம், மக்களை விடுவிப்பதற்கான போராட்டம்… வானொலி, பத்திரிகை முழங்குகிறது. மாறாக வதைபடுவது மக்களல்லவா?

‘புன்னகை கூட மறுதலிக்கப்படுகிறது இங்கு…வானம் கருக்கட்டினாலும் மழை வரவேண்டும் என்பதில்லை, வராமலும் போகலாம். வாக்குறுதிகள் தரப்படும். மறுதலிக்கலாம்….’

நடு வெயிலில் முழங்காலில் உட்கார வைத்துவிட்டு அடையாள அட்டையைத் தரும்படி கேட்டவனிடம் ‘நேற்றும் உன்னிடம் தானே காட்டினேன்.. ஞாபகம் இல்லையா?’ என்று கேட்கவேண்டும் போலிருந்தது. முழங்கால் வலித்தது சுள் சுள்ளென்று…

போன வாரம்கூட வீட்டிற்கு வந்து ஆசையாய் வளர்த்த ரோஜாச் செடிகளை, பூத்திருந்த செல்வந்திப் பூக்களை அழித்து, ‘ஆயுதம் தேடுகிறோம்’ என்றபடி… கோழிக் கூட்டையும் பிரித்து… ஏமாற்றத்துடன்… படுத்திருந்த நாய்க்கும் தலையில் துவக்குப் பிடியால் அடித்துவிட்டு வெளியேறினர். ‘புலி வந்தால் மெசேஜ் தர வேணும்’ கடைசியாக வெளியேறியவன் சொன்னான், பார்ப்பதற்கு வயது அதிகம் இல்லை என்றாலும் பயங்கரமானவனாகத் தெரிந்தான். ‘ம்.. உள்ளுக்குள் குமைந்தாள்.

வாலைச் சுருட்டி கால்களுக்குள் புதைத்தபடி கத்திக் கத்தி ஓடிய நாயை பரிதாபமாகப் பார்த்தாள். அது ஓடிப் போய் கோழிக் கூடிருந்த பக்கம் கொட்டியிருந்த சாம்பலுக்குள் தன்னைக் கிடத்திப் புரன்டது. பூக்கள் சிதறி.. பூட்ஸ் கால்களில் மிதிபட்டிருந்த பூச் செடிகள்… ஆசையாக போன மாரியில் கலைச்சோலை வாத்தியாரிட்ட வாங்கி தட்ட பூச்செடிகள்… கொத்தி எருப்போட்டு அடிக்கடி கை வலிக்க தண்ணீர் அள்ளி ஊற்றி வளர்த்தவருக்குத்தானே தெரியும் வேதனை.

ஐ.சி யைப் பார்த்தபடி அவளையே முறைத்தபடி நின்றவனைப் பார்த்து உமிழ்ந்து துப்ப வேண்டும் போலிருந்தது. விழுங்கிக் கொண்டான். தூரமாய் முகமூடி அணிந்தபடி ஒருவன் அவர்கள் காட்டுபவர்களைப் பார்த்து ஆம் அல்லது இல்லையென தலையாட்டியபடி வந்தான். அவனும் ஒரு தமிழ்த் தாய்க்குப் பிறந்திருப்பான். தமிழர் விடுதலை என போராட்டத்திற்கு முன்வந்திருப்பான்.இப்போது துரோகியாகிப் போனான்.

‘காக்கை வன்னியன் இன்னும் சாகவில்லை’ யாரோ முணுமுணுப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தான். பழகிய முகமாய் இல்லை…. சிரித்தால் அவர்கள் துன்புறுத்தல் அதிகமாகலாம். யாருடனும் சிநேகமாகக சிரிக்க முடியவில்லை. அலுத்துக் கொண்டாள். அருகிலிருந்தவளும் உள்ளூர என்ன நினைத்தானோ பயத்துடன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள். பதினைந்து வயதிருக்கலாம். இரட்டைப் பின்னல் பின்னி சுற்றி கறுத்த ரிபன் கட்டியிருந்தாள். நெற்றியில் இலைவடிவ பொட்டு இட்டிருந்தாள்.

தூரமாய் ஒரு பெண்ணை ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். ‘யார் அவள்?’ ‘யார் பெற்ற பெண்?’ மனது அடித்துக் கொண்டது. புலி என சந்தேகித்துக் கைது செய்யப்பட்டிருக்கலாம். ‘பாவம் அந்தப் பெண் குயில் குரல் இழப்பா… சிறகு உதிர்வாள்… மயிர் நீர்ப்பின் உயிர் வாழாக் கவரிமான் ஆவாள் அல்லது சைனட் குப்பி அடிப்பாள் இதுதானே நடைமுறை. வெயில் இன்னமும் சுட்டது. அடுப்பில் வைத்த உலைத் தண்ணீர் வற்றி அடிப்பிடிச்சுப் போயிருக்கும்… எம் வாழ்க்கையைப் போல.

கதனின் ஞாபகம் வந்தது. நல்ல நண்பனாக, நல்ல ஆசிரியனாக இருந்தான், டியூட்டரி வீடு என இருந்தவன். ஊரில் அப்பாவி என்று சொன்னால் அது கதனாகத்தான் இருக்க முடியும். வேலை விடயமாக தாண்டிக்குளம் தாண்டி கொழும்பு போக முயற்சிக்கையில் கைது செய்யப்பட்டான். புலி என சந்தேகிக்கப்பட்டு சுட்டு வீதியில் எறியப்பட்டிருந்தான். உடல் காகத்திற்கு பரிசாகக் கிடைத்தது. உடைந்து உட்கார்ந்தவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. விழிகள் பொழிந்தன. ‘நல்ல வேலை கிடைக்கட்டும் திருமணம் செய்து கொள்கிறேன்’ வலது கரத்தைப் பார்த்தாள். கையிலடித்து சத்தியம் செய்து புறப்பட்டவனின் மரணச் செய்தி மட்டும் காற்றில் வந்தது.

அப்பா கூடப் புகையிலை கட்டி கொழும்பு போய் வந்தவர்தான். வழமையாக வாங்கும் சிங்கள் வியாபாரியாஸ் நையப் புடைத்து அனுப்பப்பட்டபோதுதான் பொறுமை இழத்தார். ‘நீயெல்லாம் புலிக்கு காசு குடுக்கிறதா?’ ‘இல்லை.’ ‘பொய் சொல்லுறது, எங்கட காசு எடுத்து அங்க குடுக்கிறது’ முதலாளி சத்தம் போட்டான்.

“கஸ்டப்பட்டுப் பயிர் வளர்த்து அதைப் பதப்படுத்தி அதிக கூலி கொடுத்து இங்க வந்து குறைந்த லாபத்திற்குத் தருகிறோம். இப்படி சிறுகச் சிறுகச் சேர்த்துத்தான் எங்கட பிள்ளையளை வளர்க்க வேண்டியிருக்குது. குமருகளைக் கரைசேர்க்க வேண்டியிருக்குது’ அப்பா அழுதே விட்டார்.

“இப்பகூட உங்களப் பொலிசில பிடிச்சுக் குடுப்பம் தெரியுமா? எங்கட ஆமியை அங்க கொல்லுறீங்க’ அவனின் கண்கள் சிவந்திருந்தன. அவனிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா?

இராணுவம் ஏன் சாகிறது? ஏன் சாகடிக்கப்படுகிறார்கள்? 58 இலிருந்து அடிவாங்கி, செத்து காயப்பட்டு ஏமாற்றப்பட்டுப் போன தமிழினத்தின் சாபம், அதன் வேக்காடுதானே ஒவ்வொரு ராணுவத்தினரையும் சாகடிக்கிறது. எத்தனை அப்பாவி இளைஞர்கள் தமிழன் என்பதால் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்? எத்தனை யுவதிகள் இராணுவத்தினரிடம் தங்களை இழந்திருக்கிறார்கள்? எத்தனை தாய்கள்..? தந்தைகள்…? பிறகு உங்கள் பாஷையில் அவர்கள் பயங்கரவாதிகள். புலிகள்… சொல்ல நினைத்தார்.

‘மௌனம் தலைகாக்கும்’ மௌனமாய் நடந்தவர் ஊர் வரைக்கும் வாய் திறக்கவே இல்லை. பணம் பெறவும் முடியவில்லை.

‘உவங்கள் இப்பிடி எங்களை அடிச்சுச் சாக்காட்டிறதைப் பார்த்தால் தமிழினமே இருக்காது போல’ பாக்கியக்கா அடிக்கடி சொல்லுவா. அண்மையில்தான் தன் மகனை போராளியாய் இழந்தாள். மனுஷிக்கு என்ன நெஞ்சழுத்தம், மகன் இழந்த கவலை சிறிதும் முகத்ததில் தெரியாது. மகளும் இயக்கத்துக்குப் போட்டுது. மனம் பொறுக்காது ஒருநாள் கேட்டேவிட்டாள்.

‘என்ன பிள்ளை செய்யிறது, ஒரு பக்கத்தால கடலாலை அடிக்கிறான், ஷெல்லால அடிக்கின்றான், ஹெலியால அடிக்கிறான், கொழும்புக்குப் போனால் பிடிக்கிறான், அறிசி காய்கறி வாங்க வழியில்லை. உயிர் வாழ்ந்து என்னத்துக்கு? 83 கலவரத்திலை மனுசனை இழந்திட்டன். போன முறைகூட கறண்ட் பிடிக்க கொழும்புக்குப் போகேக்கை ஆரோ சொல்லிப்போட்டினம். ஆமி பிடிச்சு என்னை நல்லா வாங்கிவிட்டுத்தான் விட்டுது ‘குழி விழுந்த கண்கள் குழமாகி விட்டிருந்தன. இழப்புக்கள்தான் எத்தனை? மருதடிப் பிள்ளையார் பொறுமையிழந்து திரும்பியிருந்ததாம். ஏன் இப்ப உவங்கள் கோயிலை இடிக்கேக்கை தண்டனை குடுக்க, மாட்டுதாம். தெய்வமும் வலிமை இழந்ததோ? முகமிழந்து போதல்தான் தமிழனின் தலைவிதியோ? நாங்களும் மனிதர்கள்தானே” கேட்க நினைத்தாள். அப்பாவின் முகம் வந்து தடுத்தது. ‘வாய்க்கு வாய் காட்டாதை, தண்டனை கூடக் கிடைக்கும். நட்பாய் இராதை… பட்டும் படாமலும் வாழப்பார். எங்கட தலையெழுத்து எனப் போய்க்கொண்டிரு’.

‘அப்பா! உங்களால் முடிந்திருக்கிறது. இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலையில், உங்கள் முடிவு இதுவாகத் தானிருக்கும். எனக்கு வாழ வேண்டும் என்ற வைராக்கியம் முக்கியம், எங்களிடம் ஒற்றுமை வந்துவிட்டால் இவங்கள் தூசுக்குச் சமம் என்ற வீராப்பு முக்கியம்’

சந்தி வெளியில் அனாதைப் பிணமாய் கிடந்த நாதன், பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாலா. தற்கொலை எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம்… நெஞ்சு வலித்தது. பேசு என்று மனம் துடித்தது. ‘பேசத் தெரிந்த உனக்கு ஆயுத பாஷை ஏன் புரியயவில்லை? சோதியா டியூசன் கிளாசில் சொன்னாள், இப்போது அவளும் இல்லை. தலையாட்டியின் தலையாட்டலில் நிறையப்பேர் இராணுவ வண்டிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். தன் முன்னாலும் தலையாட்டி வருவான். தலையாட்டுவான். இராணுவக் கரங்கள் கைகளை இறுக்கும், இழுத்து வண்டியில் வீசுவார்கள். மோதி மூலையில் வீழ்ந்து, தலையில் காயப்பட்டு, குருதி வடியும். அப்பா தலையிலடித்து அழுவார். மகள் சிதைந்து போனது கேட்டு தற்கொலை செய்து கொள்ளலாம். அப்பாவைப் பார்த்தாள். தூரத்தில் நின்றிருந்தார் மௌனமாக. உதடு காய்ந்திருந்தது. அவரின் விழிகள் நிறையப் பேசியதை உணர முடிந்தது அவளால்….

கைது செய்ய்யலாம், வள்முறைக்கு ஆளாக்கலாம், விடுதலை செய்யப்படலாம், இல்லையெனில் உயிருடன் ரயர் போட்டுக் கொழுத்தப்படலாம். அதுவும் இல்லையெனில் தெருவில் வைத்தே கட்டுக் கொல்லப்படலாம்… துப்பாக்கி முனை நெஞ்சில் அழுத்த பூமிக்கு வந்தாள். தலையாட்டியும் அவர்களுடன் நின்றிருந்தான்.

“தலையாட்டாதே… பிளீஸ்! என்னை உன் தங்கை என நினைத்து விட்டு…இந்த இராணுவத்துக்குத் துணை போகாதே ‘நீயும் தமிழன் எனில்… மண்ணை விற்காதே” விழிகள் தலையாட்டியின் விழிகளைப் பார்த்துக் கெஞ்சின. ஓங்கிக் குத்த வேண்டும் என்றும் ஒரு கணம் நினைத்தாள்.

‘மௌனம் தலை காக்கும்’ அப்பா சொல்வது கேட்டது. ‘நடப்பது நடக்கட்டும்’ கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள். கண்ணீர் சூடாய் இறங்கியது.

– ஈழமுரசு, 22 – 28 ஓகஸ்ட் 1996.

MullaiAmudhan எழுத்தாளர் முல்லை அமுதன் கல்லியங்காடு, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வருகிறார். அவர் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார்.புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல தளங்களிலும் கால் பதித்தவர். வருடந்தோரும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *