மேடைகளைச் சுற்றி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: September 15, 2025
பார்வையிட்டோர்: 69 
 
 

(2022ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 9-10 | காட்சி 11-12

பதினொன்றாம் காட்சி

(மேடையில் பேருந்து நிறுத்தம் போன்ற அமைப்பு. பேச்சாளர் இராசமாணிக்கம் நின்று கொண்டிருக்கிறார். மேடையின் வலப்பக்கத்திலிருந்து எழில் வருகிறான்)

எழில் : வணக்கம். அண்ணே. ஏன் பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டு கூப்பிட்டு அனுப்பறீங்க. நீங்க உழைச்ச கட்சி ஆபீஸ் அண்ணே. வர்றதுக்கு ஏன் தயங்கறீங்க…?

இராசமாணிக்கம் : வாங்க… சௌக்கியமா…? பந்தத்தை அறுத்துகிட்ட அப்புறம் அந்த இடத்துக்குப் போகக் கூடாது. உங்களுக்கு எல்லாம் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது இல்லையா.?

எழில் : என்னவோ நீங்க மனசுல நெனச்சா நெனச்சதுதான். சரி. பார்க்கணும்னு சொன்னீங்களாமே அண்ணே என்ன விஷயம்?

இராசமாணிக்கம் : கட்சி ஆபீஸ்கிட்ட இருக்கிற இந்த பஸ் ஸ்டாப்ல நிழற்கூரை இல்லையே. அரசாங்கம் வைக்கலேன்னா நாமாவது வைக்கலாம் இல்லே…

எழில் : இதை சொல்லத்தான் கூப்பிட்டீங்களா…?

இராச மாணிக்கம்: கோபிச்சுக்காதீங்க.

எழில் : வாங்க. அங்க நிழல்ல போய் பேசலாம். கட்சி ஆபீஸுக்கு வாங்கன்னா வரமாட்டேங்கறீங்க. (மேடையின் டப்பக்கத்தில் நின்று பேசுகிறார்கள்)

எழில் : இருங்க. டீ சொல்லிட்டு வர்றேன்.

இராசமாணிக்கம் : வேணாம். வெயில் வேளை.

எழில் : சரி. மோர் சொல்லிட்டு வர்றேன். இருங்க. (எழில் சற்றுநேரத்தில் திரும்புகிறான்.)

இராசமாணிக்கம் : ஜோசப் மாணிக்கம் மூத்த நிர்வாகி ஆயிட்டாரு. ஆதவன் மாவட்டச் செயலாளர் ஆயிட்டாரு. கபீர் பிசினெஸ்ல மும்முரமா இறங்கிட்டாரு. நீங்கதான் ஐசலேட் ஆயிட்டீங்க.

எழில் : மிகப்பெரிய கண்டுபிடிப்பா இருக்கே. இதைச் சொல்லி குத்திக்காட்டத்தான் என்னை வரச் சொன்னீங்களா….

இராசமாணிக்கம் : உங்களை நிர்க்கதியா விட்டுட்டாங்கன்னு சொல்ல வந்தா… கோபம் பொத்துகிட்டு வருது. சரி அதை விடுங்க. ஃபேமிலிய ஃபேமிலிய விட்டுட்டு தனியா ரூம்ல இருந்து கஷ்டப்படறீங்களே…

எழில் : பர்சனல் விஷயத்தைப் பேசாதீங்க. பர்சனல் விஷயம் எல்லாருக்கும் வெளியில சொல்லிக்கறா மாதிரி இருக்காது. சிலருக்கு சொன்னாலும் வெட்கம் சொல்லா விட்டாலும் துக்கம்ங்கற நிலைமை… அதைக் கிளறாதீங்க.

இராசமாணிக்கம் : இல்லே. உங்க மனசைப் புண்படுத்தணும்ங்கற நோக்கம் எனக்கு இல்ல. உங்க மனைவி எனக்குப் பொண்ணு மாதிரி…

எழில் : புது ட்விஸ்ட்டா இருக்கே… மரகதத்தை தத்து எடுத்துக்கிட்டீங்களா… அண்ணே சாரி…. மாமா…

இராசமாணிக்கம் : நீங்க சொன்னா மாதிரி சொன்னாலும் வெட்கம் சொல்லாவிட்டால் துக்கம்

எழில் : புதிர் போடாதீங்க.

இராசமாணிக்கம் : சினிமா கதை மாதிரி ட்விஸ்ட்தான். மரகதத்தோட அம்மா எங்க அண்ணனோட இரண்டாவது மனைவி. சமீபத்துலதான் எனக்கு இந்த விவரமெல்லாம் தெரிய வந்தது….

(ஒரு சிறுவன் மோர் தருகிறான்)

எழில் : இந்தாங்க. மோர் குடிங்க. அதிர்ச்சிமேல அதிர்ச்சியா இருக்கே. உங்களுக்கு இரண்டு அண்ணிங்க. அரசியல் வாதி கதைன்னாலே இப்படித்தானா… மாமனார் ஜெயசந்திரன் உங்களுக்கு அண்ணன்ங்கறது எனக்குத் தெரியாது. மன ஸ்தாபத்தாலே அப்பாவும் அம்மாவும் பிரிஞ்சுட்டாங்கன்னுதான் மரகதம் சொன்னா… இரண்டாவதா வாழ்க்கைப்பட்டிருக்காங்க மாமியார் சொர்ணங்கறது எனக்குத் தெரியாது. ரெண்டு பேரும் மறைச்சுட்டாங்க பாருங்க..

இராசமாணிக்கம் : எங்க அண்ணன் எங்க அண்ணன் காலமான அப்புறம்தான் எங்களுக்கே தெரிஞ்சுது. அங்க ரெண்டு பேரும் வந்தப்பதான்….

எழில் : நல்லா இருக்குதுங்க கதை. என்ன நெஞ்சழுத்தம் பாருங்க. மாப்ளை என்கிட்ட மாமனார் போனது பத்தி தகவல் கூட சொல்லல பாருங்க.

இராசமாணிக்கம் : குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. நடந்ததை எல்லாம் கெட்ட கனவா நெனச்சு மறந்துடுங்க. மரகதத்தோட சேர்ந்து வாழுங்க.

எழில் : அவதான் சொன்னா, என் குடும்பத்தை நான் பார்த்துக்கிறேன். நீங்க உங்க வழியைப் பார்த்துகிட்டு போங்கன்னு.

இராசமாணிக்கம் : புருசன் பெண்டாட்டிக்குள்ள வர்றது சண்டை கோபம் வர்றது சகஜம் தானே…எழில்

எழில் : சரி. நீங்க சொல்றா மாதிரி வாய் வார்த்தைய மன்னிச்சிடலாம். என் குழந்தை தேன்மொழிய டிவி ஷோல என்னைப் பத்தி தப்பு தப்பா பேச வைச்சாளே… பதினோரு வயசுப் பொண்ணு என்னைப் பத்தி பேசினதைப் பார்த்த ஆளுங்கள் எல்லாம் என்னைக் கேள்விமேல கேள்வி கேட்டகறாங்க. எங்கப்பா பொறுப்பில்லாதவர் கட்சி வேலைன்னு சுத்தி குடும்பத்தைக் கவனிக்கலைன்னு சொல்லுதேங்கறாங்க. என்னதான் கோபம் இருந்தாலும் நான் பெத்த குழந்தையை எனக்கு எதிரா திருப்பி விட்டு சந்தி சிரிக்க வைக்கறத மன்னிக்க முடியுமா? சொல்லுங்க.

இராசமாணிக்கம் : ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே. பெண்களை நம்ம கையில வெச்சுக்கத் தவறிட்டா இப்படி எல்லாம் நடக்கும். நடந்ததை மறந்திடுங்க. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லைங்கறது கண்ணதாசன் பாடல் வரி. வைரவரி

எழில் : நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை ஒத்துக்கறேன். புதுசா நீங்க கண்டெடுத்து இருக்கிற மகள்கிட்ட அதைச் சொல்லி பாருங்க. எல்லாருக்கும் லைஃப் ஸ்மூத் ஸெய்லிங் ஆ இருக்கறது இல்ல… அந்த கொடுப்பினை இல்லேன்னா வாழும் வரை போராடனும் போராடனும் எதிர் நீச்சல் போடணும். இன்னிக்கு முப்பது வயசுல குடும்ப வாழ்க்கை பொது வாழ்க்கை, பிசினெஸ் எல்லாத்துலேயும் நான் தோத்து இருக்கலாம். ஏமாந்து போயிருக்கலாம் பலமான குத்து விழும்போதும் நான் குத்துச் சண்டை மேடையிலதான் இருப்பேன். அய்யோ விட்டா போதும்னு ஓட மாட்டேன். நெருக்கடிகளைச் சந்திக்கறவங்களப் பார்க்கும்போது நல்லா இருக்கறவங்களுக்கு நக்கலா இருக்கும். யுத்தத்துல நான் வாளை கீழே போட மாட்டேன். ஜெயித்தாலும் தோத்தாலும் வீரன் வீரன்தான்.

இராசமாணிக்கம் : உணர்ச்சி வசப்படாதே. எழில்.

எழில் : நான் உணர்ச்சிவசப்படலே. கேட்டிலும் துணிந்து நில்னு பாரதியார் சொல்லி இருக்காரு. என்கிட்ட போர்க்குணம், போராட்ட குணம் குறையலேங்கறதை சொன்னேன். உங்களுக்குத் தெரியாததா? மகாபாரத யுத்ததுல கர்ணனுக்குத் தேரோட்டறதுக்கு மன்னன் சல்லியனை நியமிச்சான் துரியோதனன். தேரோட்டி மகனுக்குத் தேரோட்டணுமான்னு சல்லியன் அரை மனசோட ஒத்துக்கிட்டான். தேரோட்டும் போதெல்லாம் கர்ணன்கிட்ட அவனைப் பத்தி குத்தலும் கிண்டலுமா பேசி அவன் மனசைப் புண்படுத்தி உள்ளம் குன்ற வெச்சான். சிறுமைப்படுத்தப்பட்ட மாவீரன் கர்ணனோட கெட்டிக்காரக் தனம் மங்க ஆரம்பிச்சுது. வேலைய செய்ய முடியலை. மண்ணுல போதாக்குறைக்கு தேர்ச்சக்கரம் அமுங்கிச்சு. அதை எடுக்க நான் வரமாட்டேன் அது என் வேலை இல்லேன்னு சல்லியன் போய்ட்டான். அர்ஜூனன் கர்ணனை கொலை செஞ்சான் தேர்ச்சக்கரத்தை எடுக்கும்போது, கர்ணனை கொலை செஞ்சது அர்ஜுனன் இல்ல. யோசனை சொன்ன கிருஷ்ணன் இல்ல. சல்லியனே னாட சுடு சொற்கள். குத்தல்பேச்சு இதுக்குப் பேரு தேஜோபங்கம். ஒவ்வொருத் தருக்கும் ஆயிரம் பிரச்சினை இருக்கும். பிரச்சினையில ஜெயிக்காதவனை தேஜோபங்கம் பண்ணி ஐசலேட் பண்ணுவாங்க ஜெயிச்சப்புறம் எல்லாரும் வருவாங்க. நீங்க சொன்னா மாதிரி நானும் ஒரு கண்ணதாசன் பாட்டு சொல்றேன் யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க… என்காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க… டான்னு ஒங்கள நான் சொல்லல. பாட்டைத்தான் சொன்னேன். வரேன் அண்ணே சாரி வரேன் மாமா. (எழில் போகிறான்) (இராசமாணிக்கம் வருத்தமான முகத்துடன் நிற்கிறார். சில நிமிடங்கள் கழித்து அங்கிருந்து செல்கிறார்.)

(மேடையின் இடப்பக்கத்திலிருந்து மீனா அந்தப் பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்கிறாள். சற்று நேரத்தில் ஆதவன் அங்கே வருகிறான்)

ஆதவன் : மீனா. நீ ஏன் பஸ்ல போகணும்? வா கார்ல போகலாம். கட்சி ஆபீஸ் வேற பக்கத்துல இருக்கு. மானத்தை வாங்காதே.

மீனா : பஸ்ல போனா மாவட்டச் செயலாளரின் காதலி பஸ்ஸில் பயணம் செய்கிறாள்ன்னு மீடியால நியுஸ் போடுவாங்க. உங்களுக்கு அதுலயும் மைலேஜ் கிடைக்குமே.

ஆதவன் : தாங்க்ஸ் என்னோட காதலிங்கறதை ஒத்துக்கறே. பெரிய மனசுதான்.

மீனா : மத்தவங்க பார்வையிலன்னு சொன்னேன்.

ஆதவன் : இதோ பார். நான் எத்தனை நாள் உனக்காக காத்திருக்கணும்? நான் நேர்மையானவன்னு நிரூபிக்க என்ன செய்யணும்? சொல்லு. இத்தனை வளர்ச்சியும் முன்னேற்றமும் என் கெட்டிக்காரத்தனத்தாலேன்னு நீ நம்ப மாட்டியா?

மீனா : இதோ பாருங்க. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்தது இந்நாடுன்னு பாடி இருக்காங்க. நீங்க அப்பா அம்மா சண்டையில அம்மா பக்கம் சாய்ஞ்சு அப்பாவை விரட்டி விட்டுட்டீங்க. தம்பதிகளை அதுவும் பெற்றோர்களைப் பிரிச்சு வைக்கறது பாவம் இல்லயா?…

ஆதவன் : அதைப் பத்தி எல்லாம் நீ பேசாதே. அது எங்க குடும்ப விஷயம்….

மீனா : அதைப் பத்தித்தான் நான் பேசுவேன். இதோ பாருங்க. ரெண்டு நிபந்தனை. ஒண்ணு அப்பா அம்மாவை சேர்த்து வைங்க. அவங்க ரெண்டுபேர் தலைமையில தங்கச்சி கல்யாணத்தை நடத்துங்க. கட்சிக் காரங்களைக் கூப்பிட்டு நடத்தாதீங்க. ரெண்டாவது எங்க அம்மா சத்தியமா நான் சம்பாதிச்சதெல்லாம் நேர்வழி சம்பாத்யம்தான்னு சொல்லுங்க. ஐ.டி. கம்பெனி வேலைய விட்டுடறேன். அதுக்கு அப்புறம் நீங்க சொல்லும்படி எல்லாம் ஆடறேன். அடுத்த முகூர்த்தத்தலேயே கல்யாணம் பண்ணிக்கலாம்.

ஆதவன் : இதோ பார். நிபந்தனைகளின்பேரில்தான் நம்ம காதல், கல்யாணமா மாறணுமா? இது என்ன வியாபாரமா?

மீனா : வியாபாரம்னு தான் வெச்சுக்கங்களேன். நல்ல நோக்கம் இருக்கு இல்ல இந்த பேரத்துல?

ஆதவன் : உனக்கு காதலைப் பத்தியும் புரிய வைக்க முடியாது. கல்யாணத்தைப் பத்தியும் புரிய வைக்க முடியாது. உன் மனசை யாரோ குழப்பி வைச்சிருக்காங்க. நீயே தெளிஞ்சாதான் உண்டு. நான் வரேன். வெய்யிலேயே ரொம்ப நேரம் நிற்காதே. மூளை குழம்பிடும். (ஆதவன் செல்கிறான்)

மீனா : (தனக்குத்தானே) இவங்க இஷ்டத்துக்கு ஆடுவாங்களாம். யாரும் கேள்வி கேட்கக் கூடாதாம். எங்க போயிடப் போறாரு. பார்ப்போம். மீனா நெனச்சா நெனச்சது தான். பஸ் வந்துடுச்சே.

(திரை)

பன்னிரெண்டாம் காட்சி

(பின்னணியில் பூங்கா போன்ற அமைப்பு. பெஞ்சு போன்ற திண்ணை இருக்கிறது. காலை நேரம். கபீர் நடைப்பயிற்சியை முடித்து விட்டு அங்கே வந்த அமர்கிறான். மேடையின் இடப்பக்கத்திலிருந்து ஒரு சிறுமி வருகிறாள். கபீர் அருகில் நிற்கிறாள்)

சிறுமி அங்கிள். நீங்கதானே கபீர்தாஸ் அங்கிள்… குட்மார்னிங்…

கபீர் : குட் மார்னிங் ஆமாம் செல்லம். நீங்க யாரு?

சிறுமி : எழில் அமுதன் எங்க டாடி என் பேர் தேன்மொழி….

கபீர் : எழில் பொண்ணா நீங்க.க்யூட்டா இருக்கீங்க.

தேன்மொழி : இன்னிக்கு ஸ்கூல்ல பேச்சுப் போட்டியில பாட்டுப் போட்டியில் நான் பரிசு வாங்கப் போறேன்.எங்க அப்பாவை நீங்க வரச் சொல்றீங்களா சாயந்திரம் ஸ்கூலுக்கு நான் பரிசு வாங்கறதை அப்பா பார்க்கணும்னு ஆசையா இருக்கு.

கபீர் : எழில் பொண்ணு நீ எனக்கும் பொண்ணு உன் ஆசைய நிறைவேத்தி வைக்கணும். ஆனா, நீ அப்பாவைப் பத்தி உலகம் முழுக்க பார்க்கற டிவி நிகழ்ச்சில தப்பா பேசினியாமே. டிரைவர் கண்ணன் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாரு. டாடி எப்படி வருவாரு?

தேன்மொழி : நான் செஞ்சது தப்புதான். டாடிய மன்னிச்சிடச் சொல்லுங்க. நான் போன் போட்டா எடுக்க மாட்டேங்கறாரு. (அழுகிறாள்)

கபீர் : தேனு அழாதே. உங்க அப்பன் ஆபீசுக்கு வருவான். பேசி அனுப்பி வைக்கறேன். நானும் வரேன். போதுமா… தேன்மொழி : தாங்க்ஸ் அங்கிள். (கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்)

கபீர் : இந்தா ஐநூறு ரூபாய் வெச்சுக்கோ. உனக்கு கொடுக்க வேறு எதுவும் இல்ல இப்ப. அதனால்தான், குழந்தைங்களை வெறும் கையோட அனுப்பக் கூடாது . வாங்கிக்க. யோசிக்காதே.

 தேன்மொழி : வேணாம். அங்கிள். நீங்க அப்பாவை நிகழ்ச்சிக்கு அழைச்சுகிட்டு வந்தா அதுவே போதும்.

கபீர் : இவ்வளவு அறிவு அப்ப இருந்திருக்கணும் இல்ல. சரி போய்ட்டு வா. பார்த்துபோ…

தேன்மொழி : தாங்க்ஸ். பை அங்கிள்…

(தேன்மொழி போகிறாள். மேடையின் வலப் பக்கத்திலிருந்து வீணா வருகிறாள்)

வீணா : வணக்கம். சார். என்ன பரிவு பாசம்… அன்பு… சின்னப் பொண்ணுகிட்ட காட்டற அன்பை இந்தப் பெரிய பொண்ணுகிட்ட காட்ட மாட்டேங்கறீங்களே. உங்களுக்காகவே காத்துகிட்டு இருக்கேன்.

கபீர் : நீ மாவட்டச் செயலாளரின் தங்கை. நான் இப்ப வட்டச் செயலாளர் கூட இல்ல…. உங்க அண்ணன் உனக்கு ஏத்த இணையைத் தேடித்தருவாரு. கவலைப்படாதே.

வீணா : அரசியல்ல கட்சி பதவி இல்லேன்னா என்ன… நீங்கதான் பிசினெஸ்ல மும்முரமா கில்லியா இருக்கீங்களாமே…. மனசு ஒடிஞ்சு இருந்த உங்களுக்கு டானிக் கொடுத்தது யார் தெரியுமா?

கபீர் : நீதான்ங்கறது எனக்குத் தெரியும்.

வீணா : அதுக்கு வாய் நிறைய ஒரு தாங்க்ஸ் கூட சொல்ல மாட்டேங்கறீங்க. கடன் கேட்க வந்த ஆள் கிட்ட பேசறா மாதிரி பேசறீங்க.

கபீர் : வீணா… வீணா மனசுல ஆசைய வளர்த்துக்காதே…. வீணா : என்னங்க… உங்களைத் தேடி வரேன்…ஸ்ரீதேவியா விரட்டலாமா?…

கபீர் : உனக்கு இன்னொரு பேர் ஸ்ரீதேவியா….?

வீணா : ஸ்ரீதேவிங்கறது மகாலட்சுமிக்கு இன்னொரு பேர்..

கபீர் : வலிய வந்த ஸ்ரீதேவிய எட்டி உதைக்காதேன்னு வாங்களே…

வீணா : உதைச்சுத்தான் பாருங்களேன். அப்பப்பா…. ஒரு அழகான பொண்ணு உங்களுக்காக இப்படி துடிக்கும்போது கல்யாணத்தை பண்ணிக்கிட்டு ரொமான்ஸ் பண்ண வேணாமா? என்ன ஆள் நீங்க?

கபீர் : ரொமான்ஸ் கல்யாணத்துக்கு அப்புறம்தானா?…

வீணா : அப்ப ஒத்துக்கிட்டீங்களா… உலகத்துல எட்டு மாதம் கழித்து லவ் ப்ரொபசல் ஒத்துகிட்ட லவ்வர் நீங்களாதான் இருப்பீங்க…

கபீர் : சினிமால எல்லாம் சொல்றாங்களே… நீ விரும்புற பொண்ணவிட உன்னை விரும்புற பொண்ண கட்டிக்கன்னு.

வீணா : கட்டிக்கறீங்களா…..? பார்வையப் பாரு… கல்யாணம் கட்டிக்கறீங்களா…?

கபீர் : இப்ப அதைத்தானே சொன்னேன். கட்டிக்கறேன். அதான் கல்யாணம் கட்டிக்கறேன்னு சொன்னேன். அண்ணனை வீட்ல வந்து பார்த்து பேசச் சொல்லு.

வீணா : ஒரே ஒரு வேண்டுகோள்.

கபீர் : என்ன ஒன்னோடு கடற்கரைக்கு வரணுமா… சினிமா தியேட்டருக்கு வரணுமா… ஹோட்டலுக்குப் போகணுமா?

வீணா : மீனாவையும் ஆதவனையும் சேர்த்து வைக்கணும் நீங்க….

கபீர் : இது வேறயா…. முதல்ல இன்னிக்கு பிரிஞ்சு இருக்கிற என்னோட எழில் குடும்பத்தை சேர்த்து வைக்கிறேன். அப்புறம் மீனா ஆதவனை சேர்த்து வைக்கிறேன்…. ஒங்க அப்பா அம்மாவை…

வீணா : அவங்கள சேர்த்து வைக்கவேண்டியது என்பாடு. நம்ம காதல் கூடி வர்ற நேரத்துல…

கபீர் : பிரிஞ்சு இருந்த ஜோடிங்க எல்லாம் ஒண்ணா சேர்றாங்களா…. இவங்ககிட்டேந்து எல்லாம் ஒரு பாடம் கத்துக்கணும்…

வீணா : என்ன…

கபீர் : பிணக்குகளுக்காக கணக்கையே குளோஸ் பண்ணிக்கக் கூடாது.

வீணா : இப்ப ஏன் நெகட்டிவ்வா பேசறீங்க…

கபீர் : அதுக்காக நீ முறைச்சுக்காதே மீனா மாதிரி… சரி எனக்கு நெறய வேலை இருக்கு வரேன். (எழுந்து நிற்கிறான்)

வீணா : வாழ்த்துக்கள் குட்லக்…

கபீர் : பிசினெஸ்லயா? மண வாழ்க்கையிலா…?

வீணா : ரெண்டுலத்துலயும்தான். காதலி வாழ்த்து சொல்றேன். கை கொடுக்க மாட்டீங்களா?…..

கபீர் : என் கைய ஒன்கிட்ட கொடுத்திட்டா… நாம என்ன பேசறோம்னு ஒட்டு கேட்க அப்பாவை அங்க நிறுத்தி வைச்சுட்டு இங்க வந்து நிற்கறே. கை குலுக்க முடியுமா? நல்லவேளை நான் ரொமான்ஸ் பண்ணலே.

வீணா : (திரும்பிப் பார்க்கிறாள்) அய்யிய்யோ… அவரு வந்தது எனக்குத் தெரியவே தெரியாது. ப்ராமிசா… நம்புங்க.

கபீர் : இப்படித்தான் ஆரம்பிக்குது ஜோடிகள் நடுவே பிரச்சினை புரியுதா… நான் ஒண்ணும் தப்பா நெனக்கல வரேன்….

வீணா : சரி….

(கபீர் போகிறான்)

(காட்சி மாற்றம்)

(விளக்குகள் அணைகின்றன. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் விளக்குகள் ஒளிர்கின்றன. மேடையின் பின்னணியில் புதுமணத் தம்பதிகளுக்கு அமரர் முத்துராஜன் குடும்பத்தினர் வழங்கும் விருந்து என்ற பதாகை காணப்படுகிறது. மல்லிகை கையில் மைக்கை வைத்துக் கொண்டு பேசுகிறாள்)

மல்லிகை : இங்கு எங்களுடைய அழைப்பின்பேரில் வருகை தந்துள்ள அனைவருக்கும் முதற்கண் என்னுடைய வணக்கங் களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் வீட்டில் சுப நிகழச்சிகளை ஒரு வருட காலம் நடத்தக்கூடாது அதனால் தான் என் தந்தையாருடன் பழகிய மண வாழ்க்கையில் அடி யெடுத்து வைத்தவர்களுக்கு இந்த ஹோட்டலில் விருந்து அளிக்கிறேன். என் தந்தையார் இருந்திருந்தால் கண்டிப்பாக விருந்து அளித்திருப்பார். அவர் இல்லாததால் அந்தப் பணியை நான் ஏற்றிருக்கிறேன். என்னுடைய அழைப்பை ஏற்று விருந்துக்கு வந்துள்ள அனைவரையும் வருக வருக என்று வரவேற்பதில் பெருமை அடைகிறேன். இப்பொழுது என் கணவர் டாக்டர் குணாளன் அவர்கள் சில வார்த்தைகள் பேசுவார்கள்.

குணாளன் : (கையில் மைக்கை வாங்கிக் கொண்டு) விருந்துக்கு அழைத்து விட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து விடப் போகிறார்கள். அனைவருக்கும் வணக்கம். இல்லறத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் கபீர்தாஸ் வீணா, ஆதவன் மீனா ஜோடிகளுக்கு எனது மாமாவின் குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழில் அமுதன் தம்முடைய மனைவியாருடனும் மகளுடனும் விருந்துக்கு வருகை தந்துள்ளார் அவருக்கு நன்றி. மேலும் இங்கே வந்துள்ள ஜோசப் செல்வம், ராசமாணிக்கம் ஆகிய பெரியவர்களுக்கும் ஆதவனின் பெற்றோருக்கும் கபீர்தாஸின் பெற்றோருக்கும் நன்றி. குழந்தைகளுட டன் வந்து கலகலப்பை உண்டாக்கி உள்ளவர் களுக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் திருமணத்தின்போது தம்பதிகளுக்கு வாழ்த்து கூறியிருப்பீர்கள். இருந்தாலும், இப்பொழுதும் அவர்களுக்கு வாழ்த்து கூற வேண்டுகிறேன். உங்கள் ஆசிகள் அவர்களுடைய இனிமையான இல்லற வாழ்வுக்கு அடித்தளமாக அமையட்டும். மல்லிகா அவ்வளவுதானே….

குரல் : எல்லாம் அவங்க கிட்ட கேட்டுத்தான் பேசுவீங்களா….

குணாளன் : ஆமாங்க. மனைவிக்கு மரியாதை கொடுக்கறவன் நான். அதுல தப்பு இல்லை. மனைவிக்கு மரியாதை கொடுக்காட்டாதான் தப்பு.

(கரவொலி)

(மல்லிகை குணாளன் அருகில் வந்து அருகில் வந்து காதில் ஏதோ கூறுகிறாள்)

குணாளன் : சரி. புதுமணத் தம்பதியரான ஆதவன்மீனா, கபீர்தாஸ்வீணா ஆகியோரையும் எழில் அமுதன் குடும்பத் தினரையும் இங்கு எங்கள் அருகே வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

(ஜோடிகள் வருகின்றனர். எழில் அமுதன் அவனுடைய மனைவி மகளுடன் பின்னால் வருகிறான்)

குணாளன் : எங்கள் மாமாவின் குடும்பத்தின் சார்பில் மணமக்களுக்கு கல்யாணப் பரிசை மல்லிகை வழங்குவார்….

(மல்லிகை பரிசுப் பொருளைத் தர புதுத்தம்பதிகள் பெற்றுக் கொள்கின்றனர்.)

(கரவொலி)

குணாளன் : நான் என்னுடைய மருத்துவமனையைக் கவனித்து வருகிறேன். என் மனைவி அங்கே என்னுடன் பணியாற்றி வருகிறாள். எனது மைத்துனர் பரத் முத்துராஜன் சமூக சேவைப் பணிகளை ஆற்றி வருகிறார். எனவே, முத்துராஜன் அவர் களுடைய வர்த்தக நிறுவனங்களுக்கு தலைவராக அதாவது சேர்மனாக இருக்கும் என் மனவிை, அந்த நிறுவனங்கள் சுற்றி அனைத்தையும் நெறிப்படுத்தி அன்றாடம் கவனித்து நிர்வகிப்பதற்காக எழில் அமுதன் அவர்களை நிர்வாக இயக்குநராக தேர்ந்தெடுத்துள்ளார். முத்துராஜன் அவர்களுக்கு எழில் அவர்கள் ஆற்றிய தொண்டுக்கு கைம்மாறாக அல்ல எழில் இந்தப் பணியை சிறப்பாக செய்வார் என்பதால் அவரை தேர்ந்தெடுத்துள்ளார். அவரது பெயரை பரிந்துரைத்தவர் கபீர்தாஸ் அவர்கள். நிர்வாக இயக்குநர் நியமனம் அடங்கிய உறையை மல்லிகை எழிலிடம் கொடுப்பாள்….

(மல்லிகை நீங்களே கொடுங்கள் என்று சைகை காட்டுகிறாள்) நானே தர வேண்டும் என்று என் மனைவி விரும்புவதால் எழில் அவர்களிடம் உறையை ஒப்படைப்பதில் பெருமை அடைகிறேன்.

(எழில் தயக்கத்துடன் பெற்றுக்கொள்கிறான்)

குணாளன் : நீங்க ஜமாய்ப்பீங்க. தூள் கிளம்புங்க. ஆல் தி பெஸ்ட். குட்லக். வாழ்த்துக்கள். கை தட்டுங்க சார் எல்லாரும்.

(கரவொலி) (மலர்க்கொடி வருகிறாள்)

குணாளன் : நன்றி. எழில் வாழ்வில் வெற்றிகளைக் குவிக்க உங்கள் கரவொலி உறுதுணை புரியும் என்பதில் ஐயமில்லை. அதோ மலர்க்கொடி வந்து கொண்டிருக்கிறார். அடுத்த கல்யாண சாப்பாடு அவங்களோடதுதானே…

(மல்லிகை மீண்டும் கணவனின் அருகே வந்து பேசுகிறாள்)

குணாளன் : இதையும் நான் தான் அறிவிக்கணுமா… இன்று சின்னத்திரை நட்சத்திரமாகத் திகழும் மலர்க்கொடி அவர்கள், என் மைத்துனர் பரத்முத்துராஜனை கரம்பிடிக்க உள்ளார். இதுவும் காதல் கடிமணம். அந்தத் திருமண விருந்துக்கு நீங்கள் ஓர் ஆண்டு காத்திருக்க வேண்டும். சரி, இந்த விருந்து தயாராக இருக்கிறது அனைவரும் உண்டு மகிழ வேண்டுகிறேன். நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன் நலமே சூழ்க. உலகில் அமைதி நிலவட்டும்.

(திரை)

(முற்றும்)

– மேடைகளைச் சுற்றி (நாடகம்), பதிப்பாண்டு: 2022, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *