மேடைகளைச் சுற்றி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: September 13, 2025
பார்வையிட்டோர்: 32 
 
 

(2022ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காட்சி 7-8 | காட்சி 9-10 | காட்சி 11-12

ஒன்பதாம் காட்சி

(மேடையில் பொதுக்கூட்ட மேடைபோன்ற அமைப்பு. உரைமேசை உள்ளது. சில நாற்காலிகள் வைக்கப்பட்டிருக் கின்றன. எழிலும் கபீரும் மேடையின் வலப் பக்கத்திலிருந்து வருகின்றனர். எழில் நாற்காலியில் உட்காருகிறான்.)

கபீர் : என்னய்யா. சோர்ந்து உட்கார்ந்துட்ட..

எழில் : ஆமாம். ஏன் கேட்க மாட்டீங்க. நாலு நாளா பிசாசு மாதிரி வேலை வாங்கிட்டீங்க. முடியல அண்ணே. முத்து ராஜனுக்கு கார் எமனா வந்துச்சு. நீங்க வேலைய வாங்கியே என்னை மேல அனுப்பிடுவீங்க போலிருக்குது.

கபீர் : இப்படி எல்லாம் நடக்கும்னு யாருக்கு தெரியும்யா… ஆனா, அவரோட இறுதி பயணத்துக்கு நீ பம்பரம் மாதிரி சுழன்று சுழன்று வேலை செஞ்சே. அசத்திட்டே.

எழில் : அதான் பம்பரம் இப்ப ஓய்ஞ்சு உட்கார்ந்திடுச்சு. கபீர் : இரங்கல் கூட்டம்ங்கற பேனர் வைக்கலையே பின்னாடி….

எழில் : போன் பண்ணியிருக்கேன். வந்து வைப்பாங்க. கபீர் : இப்ப எதுக்கு அவசரம் அவசரமா இந்தக் கூட்டம்ன்னு யோசிக்கற இல்ல…

எழில் : கேட்டா ராஜ தந்திரம்னுவீங்க. இப்பவே முத்து ராஜாவோட கோஷ்டிக்கு வாரிசு யாருன்னு தெரியப் படுத்திடணும் அதானே… ஆதவன் தானே அவருக்கு அடுத்த முக்கிய புள்ளி நம்ம கோஷ்டியில.

கபீர் : ஆதவன் என்னுடைய நண்பன்தான். இருந்தாலும் நான் கல்லூரியில படிக்கும்போதே கட்சிக்கு வந்தவன்…… எழில் : படிப்பைக் கோட்டை விட்டிருப்பீங்களே…

கபீர் : அதைத் கிளறாதே. நான்தான் சீனியர்… எனக்கு அப்புறம்தான் மாற்றுக் கட்சியிலேந்த நம்ம கட்சிக்கு வந்தான் ஆதவன். நான் இருக்கேன், ஜோசப் செல்வம் இருக்காரு நாங்க எல்லாம் சீனியர்ஸ் ஆனா…

எழில் : புரியது, பணபலத்தால ஆதவனோ வேறு யாரோ வந்துடக் கூடாதுங்கறதுக்காக முத்துராஜனோட பொண்ணு மல்லிகாவை கோஷ்டிக்குத் தலைமை ஏற்க வைக்கப் போறீங்க.

கபீர் : அதுல என்ன தப்பு இருக்குது…. சொல்லு,

எழில் : ஏங்க. முத்துராஜாவோட பொண்ணுங்கற ஒரு தகுதி போதுமாங்க…. கட்சித் தலைமை அவரை ஏத்துக்குமா?

கபீர் : நாம எல்லாம் தலையில் தூக்கி வைச்சுக் கொண்டாடினா… கட்சித்தலைமை ஏத்துக்கும் வேற வழி இல்ல தலைமைக்கு.

எழில் : அவங்க சடங்குகளை விடாமல் இறுதிக் காரியங்களை செய்யறவங்க. அம்மாவும் ஆஸ்பத்தியில இந்த நேரத்துல வெளிய வருவாங்களா… அதுவும் முத்துராஜா மறைஞ்சு நாலு நாள்தான் ஆகி இருக்குது…

கபீர் : கூப்பிட்டிருக்கோம். வருவாங்க.

எழில் : (சிரிக்கிறான்)

கபீர் : என்னய்யா சிரிக்கறே… இது இரங்கல் கூட்டம்யா…. யாராவது கவனிக்கப் போறாங்க.

எழில் : இந்தியாவுல முடியாட்சியில வாரிசு அரசியல் இருந்ததுன்னு படிச்சிருக்கேன். குடியாட்சியிலயும் வாரிசு அரசியல் வேரூன்றி இருக்கு பாருங்க…. அதைத் தூக்கிப் பிடிக்க உங்களைமாதிரி ஆளுங்க.

கபீர் : சிந்தனையாளன் மாதிரி பேசக் கூடாது.

எழில் : ஆமாம். நான் வேலை செய்யறதுக்குன்னு பொறந்த தொண்டன் அதை மறந்துட்டேன். மன்னிச்சிடுங்க. (விரக்தி தொனி)

கபீர் : நக்கல் பேச்சை விடு.. தொண்டர்கள் எல்லாம் வந்துட்டாங்க. மைக் செட் ஏற்பாடு செய். போ.

(சில நிமடங்கள் விளக்குகள் அணைந்து மீண்டும் எரிகின்றன. இந்தியமக்கள் கட்சி மூத்த நிர்வாகி முத்துராஜன் மறைவு இரங்கல் கூட்டம் என்கிற பதாகை பின்னணயில் இருக்கிறது. நாற்காலிகளில் ஆதவன், ஜோசப் செல்வம், மல்லிகை ஆகியோர் அமர்ந்து இருக்கின்றனர். கபீர் உரை மேசை அருகே நின்று பேசுகிறார்)

கபீர் : அனைவருக்கும் வணக்கம். பேச நா எழும்பவில்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. எங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாகவும் அரசியல் ஆசானாகவும் திகழ்ந்த மரியாதைக்குரிய முத்துராஜன் அவர்களின் அகால மரணம் தொண்டர்களாகிய எங்களை உலுக்கி விட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மனைவியார் விரைவில் குணம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இப்பொழுது அண்ணன் ஜோசப் செல்வம் அவர்கள் பேசுவார்கள்.

ஜோசப் : நான் கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது முத்துராஜன் அவர்களைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டு மனம் பதைபதைத்துப் போனேன். இறைவனின் விளையாடல்கள் நமக்கு புரிவதில்லை… இது போன்ற தருணங்களில் இறைவனை நினைக்காமல் இருக்க முடிவதில்லை. எங்களுக்கு எல்லாம் ஈடு செய்ய முடியாத இழப்பு. மல்லிகை அவர்களுக்கோ பேரிழப்பு. இந்த இழப்பைத் தாங்கிக் கொண்டு, முத்துராஜனின் பணிகளை மல்லிகை அவர்கள் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமர்கிறேன். நன்றி. ஆதவன் பேசுவார்.

ஆதவன் : நன்றி ஜோ அண்ணன் அவர்களே. ஜோ அண்ணன் அவர்கள், நா தழுதழுக்க முத்துராஜாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று குறிப்பட்டார்கள். அவை வழக்கமான சம்பிரதாய வார்த்தைகள் அல்ல. உண்மை அதுதான். எனக்கும் அண்ணன் முத்துராஜாவுக்கும் கருத்துவேறுபாடுகள் பூசல்கள் இருந்தாலும் கூட அவர் எனக்கு உடன் பிறவா சகோதரர். என்னை வாரி அணைத்து வாழ்த்துவார். அவரை நினைத்து என் மனம் துயரப்படுகிறது. நாம் அனைவரும் முத்துராஜா அவர்கள் விட்டுச் சென்ற சமுதாயப் பணிகளை ஆற்றுவதே அவருடைய ஆன்மாவை மகிழ்விக்கும். நன்றி. இப்ப யாரு பேசறாங்க… மேடமா?… மல்லிகை அவர்கள் உங்களிடையே உரை ஆற்றுவார். நன்றி.

மல்லிகை : அனைவருக்கும் வணக்கம். நான் மேடைப் பேச்சு பேசிப் பழகியவள் அல்ல. பள்ளியிலும் கல்லூரியிலும் பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டதில்லை. என்னை மேடை ஏறிப் பேச வைத்து விட்டார்கள் ஜோ அண்ணனும் கபீர் அண்ணனும். அவர்களுடைய அன்புக் கட்டளையைத் தட்ட முடியாமல் இங்கு உங்களிடையே பேச வந்துள்ளேன். நான் அரசியல்வாதியின் மகளாக இருக்கிறேன். ஆனால் எனக்கு அரசியல் தெரியாது. பொறியியல் பட்டதாரி. என் கணவர் மருத்துவர். என் அண்ணன் பரத் முத்துராஜன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு சென்றவர், உரிய நேரத்தில் வந்து சேர்ந்தார். அவருக்கும் அரசியலில் நாட்டமில்லை. உங்களுக்கு எல்லாம் ஒரு தகவலை நான் தெரிவத்துக் கொள்ள விரும்புகிறேன். என் தந்தையாரும் தாயும் ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் கார் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய வேளையில் அவர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்தவர் பேச்சாளர் இராசமாணிக்கம் அவர்கள். அரசியலிலிருந்து அவர் ஒதுங்க வேண்டிய நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ என் தந்தைதான் காரணம். ஆனால், அதை எல்லாம் மனதில் நினைக்காமல் எதேச்சையாக அங்கு வந்தவர், என்னுடைய பெற்றோரைக் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுத்தார் அண்ணன் இராசமாணிக்கம். என் தாயும் ஓட்டுநர் பைரவனும் பிழைப்பார்கள் என்ற செய்தியைக் கேட்க முடிகிறது. அதற்கு காரணம் இராசமாணிக்கம். நீங்கள் அனைவரும் அனுபவசாலிகள். வயதில் மூத்தவர்கள். இராசமாணிக்கம், முத்துராஜன் தம்பதியரைக் காப்பாற்ற ஓடோடிவந்தார் என்கிற தகவல் உங்களுக்குச் சொல்லும் மெஸேஜ் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது உட்கட்சிக் கூட்டம் என்பதால் இராசமாணிக்கத்தை அழைக்க முடியாது என்று ஜோசப் செல்வம் அண்ணன் போன்ற பெரியவர்கள் கூறி விட்டார்கள். இராசமாணிக்கம் அவர்களுக்கு நான் எப்படி நன்றிக்கடன் ஆற்றுவேன் என்பது புரியவில்லை. என் தந்தையார் முத்துராஜா அவர்களுடைய பணிகளை நான் முன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று இங்கு மேடையில் கூறப்பட்டது. என்னை வீட்டில் சந்தித்த கட்சித் தொண்டர்களும் அதே கோரிக்கையைக் கூறினார்கள். எனக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை அரசியல்வாதியின் மகள் என்பதைத் தவிர. மற்றொரு விதமான தொடர்பு நானும் ஒரு வாக்காளர் என்பதுதான். இதற்கு அப்பால் ஒன்றும் இல்லை. உங்களுக்கு கேப்டன் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் அல்லது கட்சி மேலிடம் முடிவு செய்யக் கூடும். என்னைப் பொறுத்தவரை நான் குணாளன் என்கிற மருத்துவரின் மனைவி. படித்தது பொறியியல். ஆனால் இன்று என் கணவருடைய மருத்துவமனையை நிர்வகித்து வருகிறேன். எங்கள் மருத்துவ மனையில் ஏழைகளுக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகள் அளிப்பது குறித்து பல ஆண்டுகள் கழித்து திரும்பி வந்த என் அண்ணனும் என் கணவரும் திட்டமிட்டு வருகின்றனர். அதை நடைமுறைப் படுத்தினால் அது ஒரு சமூகப் பணி. அதில் பங்கேற்கிறேன் என்கிற மனநிறைவு எனக்குக் கிடைக்கும். எனக்கு அதுபோதும். அன்னையைக் கவனிக்க வேண்டும் என்பதால் என் உரையை முடித்துக் கொண்டு விடைபெறுகிறேன். அனைவரும் என் மீது பொழிந்த அன்புக்கு நன்றி. என்னிடம் நீங்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புக்கு உரிய பதிலைச் சொல்லி விட்டேன் என்று நம்புகிறேன். வணக்கம். (மல்லிகை செல்கிறாள்)

கபீர் : நன்றி மல்லிகை அவர்களே. செல்லப்பா அவர்களின் தத்துவப் பாடல் இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. தொண்டர்கள் கலைந்து செல்ல வேண்டாம்.

(மேடையில் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. மேடையின் இடப்பக்கத்தில் மட்டும் ஒளி பாய்ச்சப்படுகிறது. கபீரும் ஜோசப் செல்வமும் நிற்கின்றனர்.)

ஜோ : என்னய்யா இப்ப போய் பாட்டு கச்சேரி.

கபீர் : பயப்படாதீங்க. ஜாலி பாட்டு பாட மாட்டாங்க. தத்துவப் பாட்டு மட்டும்தான் பாடுவாங்க. தமிழ் சினிமாவுல தத்துவப்பாட்டுக்கு குறைச்சல் இல்லையே.

ஜோ : அந்தப் பொண்ணு பேசி முடிச்சதும் கலைஞ்சு போகச் சொல்லியிருந்தா போயிருப்பாங்க. செல்லப்பாவுக்கு காசு கொடுக்கணும் அது ஒரு தண்ட செலவு.

கபீர் : நான்தான் கொடுக்கப்போறேன். உங்களுக்கு என்ன?

ஜோ : என்னய்யா இப்படி பேசறே. நீ கொடுத்தா என்ன நான் கொடுத்தா என்ன தண்ட செலவு தான். அது மட்டும் இல்ல. இப்ப அவங்கள உட்கார வைச்சுட்டே. பாட்டையா கேட்கப் போறாங்க. சலசலன்று பேசிக்கிட்டு இருப்பாங்க. ஆதவன் அவன் பங்குக்கு அடுத்த குரூப் லீடர்ன்று அவன் பேரைச் சொல்லச் செய்வான்.

கபீர் : அதுக்காக இருபது நிமிஷத்துல நிகழ்ச்சிய முடிக்க முடியுமா! இதுதான் உங்களுக்கு வருத்தம் தருதா?

ஜோ : அது மட்டுமா? அந்தப் பொண்ணு இராச மாணிக்கத்தைத் தூக்கி வெச்சுப் பேசுது. கட்சியில இல்லாதவனை பத்தி உட்கட்சிக் கூட்டத்துல ஏன் பேசணும்? நாமும்தான் தகவல் தெரிஞ்சு உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் நின்னோம். அங்கேயே தவம் கிடந்தோம்.

கபீர் : சரி அண்ணே. விடுங்க. நாம முதல்லேயே ட்யூட் பண்ணியிருக்கணும் என்ன பேசணும்னு சொல்லியிருக்கணும் நம்ம தப்புதான். இராசமாணிக்கம் பாராட்டுக்குரியவர்தான். அதை மறுக்க முடியாது இல்லையா?

ஜோ : என்னவோ போ… என் பேரனுக்கு உடம்பு சரியில்லை. நான் கிளம்பறேன். வரேன்.

கபீர் : சரி அண்ணே. (ஜோசப் பேசுகிறார்)

(வலப்பக்கத்திலிருந்து ஆதவன் வருகிறான்)

ஆதவன் : எங்கப்பா… ஜோ அண்ணன்? உன்கூட பேசிக்கிட்டு இருந்தாரே.

கபீர் : இப்பத்தான்யா போனாரு. பேரனுக்கு உடம்பு முடியலைன்னு போயிருக்காரு. நீ ஏன் அவரைத் தேடறே…

ஆதவன் : வாழ்த்து சொல்லத்தான்…

கபீர் : இரங்கல் மேடையில என்னய்யா வாழ்த்து?

ஆதவன் : நல்லதும் கெட்டதும் ஒண்ணாதானய்யா நடக்கும்.

கபீர் : என்னய்யா புதிர்போடறே?

ஆதவன் : கட்சித் தலைமை, ஜோசப் அண்ணனை மூத்த நிர்வாகியாக அறிவிச்சுட்டாங்க அதாவது முத்துராஜாவுக்குப் பதிலாக.

கபீர் : என்னய்யா இது ஆச்சரியம்…

ஆதவன் : அவருடைய நேர்மைக்கும் கட்சிக்கு அவர் இத்தனை வருஷம் விசுவாசமா உழைச்சதுக்கும் ரிவார்ட் கிடைக்கணும் இல்ல.

கபீர் : கிடைக்கணும். கிடைக்குமாங்கறது கேள்விக்குறியா இருந்தது.

ஆதவன் : நான் அந்த இடத்தைப் பிடிச்சுடுவேன்னு நீ நெனச்சிருப்ப.

கபீர் : உண்மையைச் சொல்லணும்னா அப்படித்தான் நெனச்சேன். ஜோ அண்ணனும் அப்படித்தான் நெனச்சாரு. மல்லிகாவை உட்கார வைச்சுடணும்னுதான் ஜோ அண்ணன் பிளான் போட்டு இந்தக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னாரு.

ஆதவன் : எனக்குத் தெரியாதாயா… இரங்கல் கூட்டத்துக்கு ஆஸ்பத்திரியில அம்மாவைக் கவனிச்சுகிட்டு இருக்கற பொண்ண வற்புறுத்தி வர வெச்சிருக்கிற போதே இந்தக் கூட்டத்தோட நோக்கம் எனக்குப் புரிஞ்சுது. நான்தான் மேலிடத்துல சொல்லி ஜோசப் செல்வத்துக்கு அந்தப் பதவியக் கொடுக்க வெச்சேன். நீ அவர்கிட்ட சொல்லாதே.

கபீர் : உன்னைப் புரிஞ்சுக்க முடியலையா… ஒவ்வொரு நேரத்துலையும் ஒவ்வொரு முகம் காட்டுறே…..

ஆதவன் : என்னையே என்னால புரிஞ்சுக்க முடியல. அப்பப்ப உணர்ச்சி வேகத்துல ஏதோ செய்யறோம். என்னவோ பேசறோம். நம்மள நல்லா புரிஞ்சுகிட்டவங்களுத்தான் நம்மளோட குணச்சித்திரம் என்னன்னு தெரியும்.

கபீர் : இத்தனை நாள் பழகியும் பழகியும் நான் உன்னைப் புரிஞ்சுக்கலேங்கறியா…

ஆதவன் : ஆமாம். இந்தமாதிரி இடத்துல மங்கல விஷயம் பேசக் கூடாதுன்னுவாங்க. இருந்தாலும் கேட்கறேன். என் தங்கச்சி மனசுல இருக்கற ஆளு நீதான்னு என் கிட்ட சொல்லாம மூடி மறைச்சே? என்னைப் புரிஞ்சுகிட்ட நண்பனா இருந்தா சொல்லி இருப்பே. குழப்பங்களைத் தவிர்த்து இருக்கலாம்.

கபீர் : நான் ஒன் தங்கச்சிய காதலிக்கல. அவ விருப்பம் தெரிவிச்சா. நண்பனோட தங்கையை காதலிப்பது தப்புங்கறது சில பேரோட கோட்பாடு. நீ அந்தக் கோட்பாட்டைக் கடைப்பிடிச்சா… என்ன செய்வது? நாம ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கணும். அதனால நான் மறுத்துட்டேன். இன்னொரு காரணம்.. அந்தஸ்து. நான் கட்சியில சீனியரா இருந்தாலும் என்னோட பிஸினெஸ்ல சம்பாதிக்கறதுதான் வருமானம். கட்சியால எனக்கு செலவுதானே தவிர வருமானம் இல்ல. நீ செழிப்பா இருக்கே. நான் சாதாரண நிலையில்தான் இருக்கேன். வசதியா வளர்ந்த பொண்ண திருப்திப்படுத்த முடியாது. இல்லையா?

ஆதவன் : சரி. நீ ஒன் மனசுல உள்ளதை சொல்லிட்டே ஆனா வீணா உன்னைத் தான் மனசுல ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. என்ன சொல்றே…

கபீர் : நீ அண்ணன். அவ மனசை மாத்தப்பாரு. நான் எதுவும் செய்ய முடியாது. இனிமேல் ஜோசப் அண்ணனும் உச்சாணிக் கொம்புக்குப் போயிடுவாரு. எழில் சொல்றா மாதிரி வேலை செய்யறதுக்கு மட்டும்தான் எங்கள மாதிரி ஆளுங்க ஏணியா இருக்கணும்.

ஆதவன் : தப்பு தப்பா நெனக்காதே. சில வியாபார வாய்ப்புகளை அப்படியே பிடிச்சுகிட்டு புத்தி கூர்மையோட கடினமா உழைச்சுத்தான் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கேன் அபாரமான கெட்டிக்காரத் தனத்தாலதான் மேல வந்திருக்கேன். வளர்ச்சியை வெச்சு முத்துராஜாவும் நானும் நேர்மைக்குப் புறம்பா குறுக்கு வழில கிடுகிடுன்னு உயர்ந்துட்டதா சில பேரு நெனக்கறாங்க. நீயும் அப்படித்தான் நெனக்கறே. மீனாவும் அப்படித்தான் சந்தேகப்படறா. எல்லா அரசியல்வாதியும் அப்படி இல்ல. லாபி பண்ணி பார்க்க வேண்டியவங்கள பார்த்து முடிக்க வேண்டியதை முடிக்கறதுக்கு கட்சி செல்வாக்கு சில சமயம் உதவும் அவ்வளவுதான்.

கபீர் : நானும் உன்னை மாதிரி பிஸினெஸ் தானே பண்றேன். வாடகை வீடு வாடகை ஆபீஸ்…

ஆதவன் : நீ போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு நெனக்கறே. அடிப்படைத் தேவைகளுக்கு மட்டும் சம்பாதிக்கறே. பணத்துப் பின்னால நீ அலையலே.

கபீர் : சோம்பேறியா இருக்கேன்ங்கறத நாசுக்காக சொல்றே. உன்னோட சர்டிபிகேட்டுக்கு தாங்க்ஸ். வரேன்.

(கபீர் கோபத்தில் வேகமாக நடைபோட்டு மேடையின் இடப்பக்கம் செல்கிறான். ஆதவன் கபீர் கபீர் என்று அழைத்தபடியே பின்னால் செல்கிறான்.)

(திரை)

பத்தாம் காட்சி

(மேடையில் மேடை நாடகக் காட்சி அமைப்பு. பின்னணியில் “நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அரங்கம் வீர அபிமன்யு நாடகம்” என்ற பதாகை வைக்கப்பட்டிருக்கிறது. மேடையில் யாரும் இல்லை. மேடையின் வலப்பக்கத்திலிருந்து எழில் வருகிறான். மேடையின் இடப்பக்கத்திலிருந்து மாரி வருகிறார்.)

மாரி : என்ன எழில். இது என்ன பொதுக் கூட்ட மேடையா? நாடக அரங்க மேடை. இங்கேயும் வந்துட்டீங்க.. நாடகம்தான் முடிஞ்சுடுச்சே. வீட்டுக்குப் போங்க.

எழில் : என்ன சார் விரட்டிறீங்க. அபிமன்யுவா நடிச்சவரு ரொம்பப் பிரமாதமா நடிச்சாரு. அவரைப் பாராட்டிட்டுப் போகலாம்னு வந்தேன். நீங்க என்ன இங்க அதிகாரம் பண்றீங்க…?

மாரி : நான்தான் இந்த நாடகத்தை ஆர்கனைஸ் பண்றேன். எழில் : ஈவென்ட் எல்லாம் நடத்தத் தெரியாதுன்னீங்க. துப்பறியறதுல போணி ஆகலேன்னு இதுல கிறங்கிட்டீங்க போலிருக்கு. சரி விடுங்க. நான் ஒப்பனை அறையில் அவரைப் பார்த்து நாலு வார்த்தை பாராட்டிட்டு வர்றேன்.

மாரி : அவுரு மேக் அப் கலைச்சுகிட்டு இருக்காரு. நாளைக்கு அலெக்சாண்டரா நடிக்கப் போறாரு அப்ப பாருங்க.

எழில் : ஏங்க டொனேஷன் கேட்க வந்த மாதிரி நாளைக்கு வான்னு சொல்றீங்க.

மாரி : டொனேஷன் வசூலிக்கறதுல நீங்க எல்லாம் மாஸ்டரா இருப்பீங்களே.

எழில் : என்ன சொல்றீங்க…

மாரி : ஒண்ணும் இல்ல. முறைக்காதீங்க. நீங்க பார்க்கத் துடிச்ச நடிகரு அதோ வர்றாரு பாருங்க.

(மேடையின் இடப்பக்கத்திலிருந்து கபீர் வருகிறான்)

எழில் : என்ன அண்ணே. நீங்களா இந்த நாடகத்துல ஹீரோ ஆக ஆக்ட் கொடுத்தீங்க? அடையாளம் தெரியலையே.

கபீர் : அடையாளத்தைத் தொலைச்சுட்டுத் தான் தேடிக்கிட்டு இருக்கேன்.

எழில் : என்ன சொல்றீங்க…. அண்ணே.

கபீர் : ஒண்ணும் இல்ல இரவு வெகு நேரமாயிடுச்சே. பெண்டாட்டி புள்ளைங்க காத்துக்கிட்டு இருப்பாங்க. போய்ட்டு வா. நாம அப்புறம் பேசலாம்.

எழில் : ஏன் அண்ணே அவங்க என்னை என்னிக்கோ தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. ஏன் விரட்டறீங்க. இவரும் போபோன்னு விரட்டறாரு. என்ன ஆச்சு? நீங்க இல்லாம கட்சி வேலைய செய்ய பிடிக்கவே இல்லை. இராச மாணிக்கமாவது சொல்லிட்டு அரசியலை விட்டு ஒதுங்கினாரு. நீங்க சொல்லாம கொள்ளாம ஒதுங்கிட்டீங்க. இப்ப ரொம்ப நாள் கழிச்சு ஆசையோட பேச வந்தவனை விரட்டறீங்க. ஒங்களத்தானே அண்ணே எனக்குத் தெரியும்? நீங்கதானே அண்ணே கட்சிக்கு இழுத்துக்கிட்டு வந்தீங்க?

மாரி : எழில் தம்பி. கபீர் களைப்பா இருக்காரு.

எழில் : பெரிய மனுஷன்னு பார்க்கறேன். ஏதாவது பேசிடுவேன். எங்க ரெண்டு பேருக்கு நடுவுல நீங்க யாரு குறுக்கால?

மாரி : சாரி. இல்லப்பா. அவரு டயர்டா. இருக்காரு அதான்…

எழில் : அதை அவர் சொல்லட்டும்.

கபீர் : அதான் சொன்னேன் இல்ல. இன்னொரு சந்தர்ப்பத்துல பேசலாம்னு.

எழில் : என்னங்க பேசறீங்க. திடீர்னு மேடை நாடக நடிகனாக வேண்டிய அவசியம் என்ன அண்ணே? என்ன இன்னொரு சந்தர்ப்பம்… இப்பவே சொல்லுங்க.

கபீர் : நிஜ வாழ்க்கையில நடிக்க முடியல. அதான் நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.

எழில் : என்ன அண்ணே. எதற்குமே கலங்காத நீங்க இப்படி விரக்தியா பேசறீங்க. என்ன நடந்தது உங்க மனக் குறைய என்கிட்ட சொல்லுங்க

(எழில், கபீரின் தோளைத் தொட்டுத் குலுக்குகிறான். கபீர் மயங்கி சரிகிறான்.)

மாரி : நான் சொன்னேன் இல்ல எழில் தம்பி. நீங்க கேட்கல இருங்க தண்ணீர் கொண்டு வர்றேன்.

(எழில், கபீரைத் தூக்கி உட்கார வைக்கிறான்.)

எழில் : மன்னிச்சிடுங்க. அண்ணே. என்ன அண்ணே நீங்க…

(மாரி திரும்பி வருகிறார். கபீரின் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்.)

மாரி : கபீர். கபீர்…

(கபீருக்கு நினைவு திரும்புகிறது)

கபீர் : என்ன ஆச்சு….

மாரி : ஒண்ணும் இல்ல தம்பி. இந்தாங்க தண்ணி குடிங்க.

கபீர் : குழுவுல எல்லாரும் போய்ட்டாங்களா….

மாரி : எல்லோரும் கிளம்பிட்டாங்க. தம்பி வாங்க. நாமளும் கிளம்ப வேண்டியதுதான்.

எழில் : மாரி சார். அண்ணனை நான் வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போறேன்.

மாரி : சரி பார்த்து பத்திரமா கூட்டிட்டுப் போங்க. மதுபானக் கடைக்கு அழைச்சுகிட்டுப் போயிடாதீங்க.

எழில் : வாங்க அண்ணே. எழுந்திருங்க போகலாம். இவுரு யாரு உங்க கதையில திடீர்னு என்ட்ரி கொடுத்திருக்காரு. ஜாஸ்தி பேசறாரு ஒண்ணும் புரியல. வாங்க.

(எழிலும் கபீரும் மேடையின் வலப்பக்கமாக செல்கின்றனர்) (சற்று நேரத்தில் மேடையின் வலப்பக்கத்திலிருந்து வீணா வருகிறாள்)

வீணா : மாரி சார். எங்க அவுரு….

மாரி : அவுருன்னா….

வீணா : கபீர் எங்கே….

மாரி : இப்பத்தான் வீட்டுக்குப் போறாரு…. எழில் அழைச்சு கிட்டுப் போறாரு…

வீணா : அழைச்சுகிட்டுப் போறார்னா….

மாரி : டயர்ட் ஆகி மயங்கி விழுந்துட்டாருப்பா. சாரி… விழுந்துட்டாரும்மா.

வீணா : நெனச்சேன். இந்த மாதிரி ட்ராமா அது இதுன்னு கூத்தடிச்சா…

மாரி : நீங்க ஏன் கிடந்து துடிக்கறீங்க….?

வீணா : உங்களுக்குத் தெரியாதா? ஏன் எரிச்சலைக் கிளப்பறீங்க? ஏன் இப்படி கூத்தடிக்கறாரு அவுரு?

மாரி : என்னன்னு சொல்றது? அந்தஸ்துல ரொம்ப தாழ்ந்து இருக்கோம்னு நெனப்பு. மனசைப் போட்டு அலட்டிக்கிட்டு இருந்தாரு. நான்தான் ஒரு மாற்றத்திற்கு இந்த நாடகத்துறைக்கு என் நண்பர் மூலம் அழைச்சுகிட்டு வந்தேன்.

வீணா : நல்ல காரியம் செஞ்சதா நெனப்பு போலிருக்கு உங்களுக்கு. குடியைக் கெடுத்திட்டீங்க.

மாரி : ஆமாம். நான் நாடக மேடைக்கு இழுத்துக்கிட்டு வரல்லேன்னா குடியைக் கெடுக்கற குடியில் போய் விழுந்திருப்பாரும்மா. நீங்க அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சா காலத்தைக் கடத்தாதீங்க. சீக்கிரம் பெரியவங்ககிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க. கட்சில ஆர்வம் காட்டறதில்ல பிஸினெஸ்லயும் ஏனோ தானோன்னு இருக்காரு. இது எல்லாம் நல்லது இல்ல.

வீணா : எதனால இப்படி…?

மாரி : ஒங்க அண்ணன் ஆதவன், கபீர் கிட்ட, நீ பணத்து பின்னால அலையாம இருந்துட்டேன்னு பேசியிருக்காரு. அவுரு ரோஷம் வருதான்னு பார்க்கலாம்னு நெனச்சு நல்ல நோக்கத்துல பேசியிருக்கலாம். பொருளாதார நிலைமைய உயர்த்திக்கற சாமர்த்தியம் இல்லாம போயிடுச்சுன்னு தன்னையே வெறுக்க என் கிட்ட புலம்பிகிட்டே இருந்தாரு. ஆரம்பிச்சுட்டாரு. என் டிஜக்டட்ஆ இருந்தாரு. நான்தான் அவருக்கு ஒரு டைவர்ஷன் இருக்கட்டுமேன்னு நாடகத்துல ஈடுபடுத்தினேன். அவருக்கு இது நல்ல வடிகாலா இருக்கு. பொளந்து கட்டறாரும்மா.

வீணா : மண்ணாங்கட்டி. அண்ணன் அப்படி சொன்னாருன்னா அதையே சவாலா எடுத்துக்கிட்டு அவர் அளவுக்கு ஒஹோன்னு வளர்ந்து காட்டணும். இப்படி வருமானத்துக்கு வழி இல்லாத ட்ராமால நடிச்சு நேரத்தையும் உடம்பையும் வீணாக்கறாரு. அதுக்கு நீங்க தூபம் போடறீங்களா… உடந்தையா?

மாரி : இல்லம்மா அவருக்கு ஒரு டைவர்ஷன் வேணும்னு தான்….

வீணா : என்னங்க பொல்லாத டைவர்ஷன்… ஒருத்தர் ஒரு சொல் சொல்லிட்டாங்கன்னா அந்தஸ்தை உயர்த்திக் காட்டணும் வருமானத்தையும் செல்வத்தையும் பெருக்கிக் காட்டணும். உன்னை விட பெரிய ஆளாகப் போறேன் பார்னு கர்ஜிக்கணும்.

மாரி : அண்ணாமலை ஸ்டைலா…ஆதவா கேலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோன்னு சொல்லணுமா?

வீணா : என்னது…..

மாரி : இல்லம்மா கவிஞர்கள் சொல்லி இருக்காங்களே எல்லா மழைத்துளியும் முத்தாகாதுன்னு

வீணா : ஏன் திருவள்ளுவர் சொல்லி இருக்காரே. வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வுன்னு… அதெல்லாம் உங்களுக்கு ஞாபகத்துக்கு வராதா…. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்… தெரியதா?

மாரி : நீங்க நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்க.

வீணா : என்ன…

மாரி : இல்லம்மா. படிச்ச தமிழ் இலக்கியத்தை மறக்காமல் ஞாபகம் வெச்சிருக்கீங்களே. சரியான நேரத்துல சொல்லி அடிக்கறீங்கன்னு சொல்ல வந்தேன்.

வீணா : உங்க கூட பழகறவங்ககிட்ட அதை எல்லாம் எடுத்துச் சொல்லமாட்டீங்களே… கலை கத்தரிக்காய், நாடக நடிப்பு வேஷம்…னு கவைக்கு உதவாத வழியில இழுத்துக்கிட்டு போங்க. உங்க வாழ்க்கைதான் ஏனோ தானோன்னு முடிஞ்சு போச்சு. பழகற இளைஞர்களையும் அதே பள்ளத்துக்கு இழுக்கறீங்களே… நியாயமா?

மாரி : உங்கள் குற்றச்சாட்டை நான் வண்மையாகக் கண்டிக்கறேன்.

வீணா : வக்கணையா செந்தமிழ்ல பேசி பிரயோசனம் இல்ல. முதல்ல ஒங்க புதிய நண்பரைத் திருத்தி நல்வழிப் படுத்துங்க. அவரோட பொருளாதாரத்தை உயர்த்தப் பாருங்க.

மாரி : அப்பத்தான் நீங்க தாரம் ஆவீங்களா அவருக்கு…? வீணா : பெண்களோட வார்த்தைக்கு குதர்க்கமான அர்த்தம் கற்பிக்கல்லேன்னா ஆண்களுக்கு தூக்கம் வராது.

மாரி : Men are from Mars Women are from Venus

வீணா : என்ன சொல்றீங்க…

மாரி : அந்த டைட்டில்ல ஒரு இங்க்லீஷ் புக் இருக்கு ஜான்கிரேன்னு அமெரிக்கர் எழுதிய நான் ஃபிக்ஷன் வாசிச்சுப்பாருங்க.

வீணா : நீங்க படிச்சுக் கெட்டது போதாதுன்னு எனக்கும் சொல்றீங்களா… வாழக்கைக்கு எது உபயோகமோ அதை செய்யுங்க. மத்தவங்களையும் செய்யச் சொல்லுங்க. நான் வரேன். நீங்களும் இனிமேலாவது உருப்பட முடியுமான்னு பாருங்க.

மாரி : யங் லேடி. மனசுல பட்டது தப்போ சரியோ போல்டா பேசறீங்க என்னுடைய பாராட்டுக்கள்.

வீணா : யாருக்கு வேணும் உங்க பாராட்டு. கபீர் துடிப்பா மாறியாகணும். வளர்ச்சி பத்தியே சிந்திக்கறவறா இருக்கணும். ஒரு வாரம்தான் உங்களுக்கு டைம். நீங்க மாத்தியாகணும் அவரை ஒரு புது மனுஷனா…. உபயோகமான விஷயங்களைப் பத்தி மட்டுமே யோசிக்கற மனுஷனா செய்யற மனுஷனா மாத்தியாகணும்.

மாரி : இது என்ன வம்பாய் போச்சு. எனக்கு ஒரு வாரம் கெடு வைக்கறீங்க….? நான் என்ன சாமியாரா… தண்ணீர் தெளிச்சு மந்திரம் சொல்லி மாத்திட முடியுமா… முனைப்பு ஆர்வம், வாய்ப்பு, சந்தர்ப்பம், சூழ்நிலை உழைப்பு அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட விஷயம் எல்லாம் கூடி வரணும் ஜெயிக்கறதுக்கு…. தெரிஞ்சுக்கங்க மேம் வீணா

வீணா : அதெல்லாம் எனக்குத் தெரியாது. கபீர் மாறி யாகணும். அந்த மாற்றத்தை நீங்க ஏற்படுத்தணும்.

மாரி : ஏன் நான் அதை செய்யணும்?

வீணா : நீங்கள்தானே ட்ராமா வேஷம்னு இழுத்துக்கிட்டு வந்தீங்க. இப்ப ஆளை மாத்த வேண்டியது ஒங்க பொறுப்பு… இல்லேன்னா…

மாரி : இல்லேன்னா என்ன…? என்ன பண்ணுவீங்க?

வீணா : கபீரை விட்டுட்டு ஒங்களைக் கல்யாணம் பண்ணிக்கிடுவேன் வயசானவர்ன்னு பார்க்காமல்.. அப்படி பண்ணிக்கிட்டா எல்லா மீடியாவுலயும் நாம வருவோம் இருபத்தைந்து வயது இளம்பெண் வீணா, வீணாப் போன அறுபது வயது மாரியைக் கரம் பிடித்தார்னு போடுவாங்க.

மாரி : வேணாம். என்னை சம்சார சாகரத்துல இழுக்காதீங்க…

வீணா : சாகரம்ன்னா…

மாரி : ம்… அது ஒரு பலகாரம். நீங்க போங்க. நான் கபீருக்கு எடுத்துச் சொல்றேன். என் வாழ்க்கையோட விளையாடாதீங்க.

வீணா : அந்த பயம் இருக்கட்டும். (போகிறாள்)

(திரை)

– தொடரும்…

– மேடைகளைச் சுற்றி (நாடகம்), பதிப்பாண்டு: 2022, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *