மேடைகளைச் சுற்றி




(2022ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காட்சி 3-4 | காட்சி 5-6 | காட்சி 7-8
ஐந்தாம் காட்சி

(மேடையின் பின்னணியில் துப்பறியும் நிபுணர் மாரி அவர்களின் மணி விழா வாழ்த்துரைக் கூட்டம் என்ற பதாகை வைக்கப்பட்டிருக்கிறது. மேடையில் நாற்காலிகளில் இரண்டு பேர் அமர்ந்திருக்கின்றனர். உரை மேசை அருகே ஒல்லியான உடல்வாகு கொண்ட ஒருவர் நின்று கொண்டு பேசத் தொடங்குகிறார். அவர்தான் விழா நாயகன் மாரி)
மாரி : அனைவருக்கும் வணக்கம். அடியேனுக்கு அறுபது வயதாகிவிட்டது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை ஏன் என்றா ல் நான் என்றும் மனதளவில் இளமையாக இருப்பவன். எனக்கு வயதாகி விட்டது என்பதைப் பிறர் சொல்லித்தான் நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். இது போன்றதொரு நிகழ்ச்சி எல்லாம் வேண்டாம் என்றுதான் நான் சொன்னேன். ஆனால், அன்புக்குரிய காவல்துறை அதிகாரி ராஜவேலன் அவர்களும் சேனாபதி என்னும் என் நண்பனும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்நிகழ்ச்சிக்கு என் மீது அன்பும் பரிவும் கொண்டு நேரத்தை ஒதுக்கி இந்த மாலைப்பொழுதில் வருகை தந்துள்ள அனைவரையும் வருக வருக வரவேற்பதில் பெருமை அடைகிறேன். நெகிழ்ந்து போகிறேன். மிக்க நன்றி. இப்போது மதிப்பிற்குரிய ராஜவேலன் IPS அவர்கள் உரை ஆற்றுவார்கள்.
(ராஜவேலன் உரைமேசை அருகே நின்று பேசுகிறார்)
ராஜவேலன் : அனைவருக்கும் வணக்கம். மாரி இல்லையேல் காரியம் இல்லை என்று கூறுவார்கள். அது மழையைச் சிறப்பிக்க கூறப்பட்ட வார்த்தைகள். நம்முடைய மாரி இல்லாவிட்டால் எங்களுக்கு காரியம் ஓடாது. பார்ப்பதற்கு தோற்றத்தில் அந்த காலத்தில் புகழ்பெற்ற தேவன் அவர்களின் துப்புறியும் சாம்பு போலவே இருக்கிற இவர் எங்களுக்கு பல கேஸ்களில் துப்பு கொடுத்திருக்கிறார். துப்பறியும் சாம்புவுக்கு காக்கை உட்கார பனம்புழம் விழுந்த கதையாக எல்லாமே அவர் கையில் தானாக வந்து விழும். ஆனால், நம்முடைய மாரி தம்முடைய புத்தி கூர்மையைப் பயன்படுத்தி துப்பு தரக் கூடிய வல்லமை படைத்தவர். இரண்டு நாட்களுக்குள் ஒரு பிரச்சினைக்குத் துப்பு கொடுத்துவிட்டு அடுத்தது என்ன என்று கேட்பார். One man army. இப்படி ஒரு நபர் இராணுவமாக தமிழ் நாட்டில் பல துறைகளில் பலபேர் ஜொலிக்கிறார்கள். எனக்கு உள்ள வருத்தம் எல்லாம் இவர்களுக்கு எல்லாம் legacy இல்லையே. பின்பற்றுபவர்கள் இருந்தால் இவர்கள் காலத்திற்குப் பின்னும் இவர்களைப் போன்றவர்கள் ஆற்றும் பணி தொய்வில்லாமல் தொடரும் அல்லவா…?
குரல் : அவரை ரொம்ப தூக்கி வெச்சுப் பேசறீங்களே. நான் சொல்ற விஷயத்துல துப்பு கண்டுபிடிச்சுத் கொடுப்பாதா… ரெண்டே நாள்ல…
ராஜவேலன் : மணி விழா நாயகருக்கு சவால் விடும் நபர் யார் ஆக இருந்தாலும் இங்கு மேடைக்கு வந்து பேசுங்கள். உங்களுடைய சவாலை மாரி அவர்கள் ஏற்பார். முடித்துக் காட்டுவார்.
(மேடையின் இடப்பக்கத்திலிருந்து எழில் வருகிறான்)
எழில் : அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் எழில். மக்கள் தொண்டன். எனக்கு வேண்டியவருக்கு ஒரு சிக்கல். மற்றவருடைய குடும்ப வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்பதால் இங்கே அவையில் கூறமுடியாது. அவரிடம் தனிமையில் தெரிவிக்கிறேன்.
மாரி : என் மீது நம்பிக்கை வைத்துள்ள காவல் துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி. என்னிடம் எழில் தம்பி விஷயத்தை விவரித்ததும் அவருக்கு வேண்டியவருடைய சிக்கலைத் தீர்த்து வைக்க முயல்வேன் என்று உறுதிகூறுகிறேன்.
(கரவொலி)
(மாரிக்கு மேடையில் அமர்ந்துள்ளவர்கள் சால்வை அணிவிக்கிறார்கள். மாரி பதில் மரியாதை செய்கிறார். நிகழ்ச்சி ஒருவழியாக முடிகிறது. மேடையில் அமர்ந்தவர்கள் கலைந்து செல்கிறார்கள். எழிலும், மாரியும் மட்டும் இப்பொழுது மேடையில் நிற்கிறார்கள்)
மாரி : சொல்லுங்க, எழில்.
எழில் : மன்னிச்சிடுங்க. என் பேச்சு தோரணை ஒரு மாதிரியா இருந்திச்சா…
மாரி : அதெல்லாம் ஒண்ணும் இல்ல. என்ன பிரச்சினை ஓங்க நண்பருக்கு…?
எழில் : சார், நான் இந்திய மக்கள் கட்சித் தொண்டன் நாங்க எல்லாம்….
மாரி : முத்துராஜன் கோஷ்டியில இருக்கீங்க…
எழில் : எப்படி சார் கரெக்ட்டா சொல்லிட்டீங்க…
மாரி : மேல சொல்லுங்க.
எழில் : நான் சொல்லாமலே நீங்களே சொல்லிடுவீங்க போல இருக்குதே.
மாரி : நீங்களே சொல்லுங்கள் தம்பி.
எழில் : ஆதவன்னு எங்க குரூப்ல இருக்காரு.
மாரி : கன்ஸ்ட்ரக்ஷன், வாட்டர் சப்ளைன்னு நாலைந்து பிசினெஸ்ல ஓகோன்னு இருக்காரே அவர்தானே…
எழில் : அவர்தான் சார், அவரோட தங்கச்சி வீணா அவரோட காதலி மீனா ரெண்டு பேரையும் கடத்திட்டாங்க சார். நாலு நாளாச்சு ஒண்ணும் தெரியல.
மாரி : ஆதவனுக்கு கடத்தினவங்களோ கடத்தப்பட்டவங் களோ போன் பண்ணலையா?…
எழில் : இல்லீங்க சார்.
மாரி : (புன்னகை பூக்கிறார்)
எழில் : இந்த புன்னகைக்கு என்ன அர்த்தம்?
மாரி : அது இல்ல. இவ்வளவு சின்ன வயசுல பிஸினெஸ்ல கொடி கட்டிப் பறக்கறாரு. கட்சியில முத்துராஜன் குரூப்ல முக்கியபுள்ளியா இருக்காரு. பணபலம் அடியாள் பலம் இதெல்லாம் இருந்துமா அவரால கண்டு பிடிக்க முடியலைன்னு நெனச்சேன்.
எழில் : இதையேதான் எல்லோரும் கேட்கறாங்க. நீங்களும் கேட்காதீங்க. சிக்கலைத்தீர்த்து அவங்கள மீட்கணும். இதோபாருங்க ஆதவன் அவரு சிஸ்டரு லல்வரு மூணுபேரும் இருக்கிற போட்டோ.
மாரி : எல்லாம் தயாரா வெச்சுகிட்டுத்தான் சவால் விட்டீங்க போல. சரி. ஒங்க நம்பர் கொடுங்க. நான் கூப்பிடறேன்.
எழில் : சார் சவால் சார். இரண்டே நாள்ல நீங்க ஆளுங்கள கண்டு பிடிக்கணும். என் கிட்ட ஒப்படைக்கணும். இந்தாங்க என் கார்டு.
மாரி : ஒப்படைக்கறதைப் பத்தி எல்லா வாக்கு தர முடியாது. எங்கே இருக்காங்கறதை சொல்லிடுவேன். அப்புறம் ஒங்க பாடு ஆதவன் பாடு. சரி எனக்கு என்ன தருவீங்க?
எழில் : நாங்க ஆட்சிக்கு வந்ததும் துப்பறியும் வாரியம் ஒண்ணு உள்துறையில அமைக்கச் சொல்லி ஒங்கள தலைவரா ஆக்கிடறேன்.
மாரி : ஒங்க தொண்டர்களுக்குள்ள பேசிக்கறா மாதிரி என் கிட்ட பேசாதீங்க.
எழில் : என்ன சார் நம்பிக்கை வரமாட்டேங்குது. ஆதவன் கிட்ட போய் சொன்னா அவர் ஏன்யா என் குடும்ப மானத்தைப் பறக்க விட்டேன்னு அடிப்பாரு ஒண்ணும் பேராது. எனக்கு ஒரு DTP சென்ட்டர் இருக்குது. அதை ஒங்களுக்கு கொடுத்துடறேன்.
மாரி : ஏன் ஒங்களால சரியா நடத்த முடியலையா….
எழில் : ஆமாம். சார். உண்மை எல்லாம் வரவழைக்கறீங்க. சவாலுக்கு ஒத்துக்கிட்டீங்க இல்ல கமிஷனர் எதிரே. கண்டுபிடிங்க ஒங்களுக்கு நல்ல மரியாதை செய்யறோம்.
மாரி : நல்ல மரியாதைன்னா ஒங்க மொழில வேற அர்த்தம் சொல்வாங்க இல்ல. என் உடம்பு தாங்காதே. வயசாயிருச்சே.
எழில் : சார். ஏதேதோ ஏன் நெனக்கறீங்க? இந்த கேஸ்ல சக்சஸ் பண்ணுங்க. ஒங்க பேரை நான் மெட்ராஸ் சிட்டி முழுக்க பரப்பறேன். ஃப்ளக்ஸ் வைக்கறேன்.
மாரி : ஃப்ளக்ஸுக்கு காசு நான் கொடுக்கணும். அப்படித்தானே..
எழில் : கரெக்ட். கற்பூரம் மாதிரி இருக்கீங்க. வரட்டுமா… ஏற்கனவே நாலு நாளாயிடுச்சு. இன்னும் ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுடுங்க…. வரேன்.
(மாரி விழிக்கிறார்)
(திரை)
ஆறாம் காட்சி
(பாரதி நகர் திருவள்ளுவர் இலக்கியக் கழகத்தின் சார்பில் நடைபெறும் சமூக நல்லிணச்கக் கூட்டம் என்ற பதாகை பின்னணியில் இருக்கிறது. பேச்சு மேடையில் மூவர் அமர்ந்திருக்கின்றனர். உரைமேசை அருகே அருகே ராஜவேலன் பேசுகிறார்)
ராஜவேலன் : வணக்கம். பாரதி அனைவருக்கும் நகரில் நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கிற, விரும்பத்தகாத சில சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துள்ளது மனத்திற்கு வருத்தத்தை அளிக்கிறது.
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திருவள்ளுவர் நற்பணி மன்றம் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இங்கு வருகை தந்துள்ள பெரியவர்கள் ஏழுமலை சுவாமிகள். சமூக சேவகர் ஜனாப் ரகீம்பாய், அருட்தந்தை ஜேம்ஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமூக நல்லிணக்கமே முக்கியம் என்பதை தங்கள் உரை மூலம் இவர்கள் நம் அனைவருக்கும் எடுத்துரைப்பார்கள். முதலில் ஏழுமலை சுவாமிகளைப் பேச அழைக்கிறேன்.
ஏழுமலை சுவாமிகள் : (உரைமேசை அருகே நின்று பேசுகிறார்)
எங்கும் உள்ள இறைவன் அனைவரையும் காத்தருளட்டும். நம்முடைய வழிபாட்டுச் சமயங்கள் மாறுபடலாம். ஆனால், நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எனவே, சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான போக்குகளுக்கு நாம் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் என் அருளாசிகள். இறைவன் என்றும் உங்களுடன் இருப்பார். இங்கு வருகை தந்துள்ள சமூக சேவகர் ஜனாப் ரகீம்பாய் அவர்களுக்கும் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களுக்கும் என் வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் மூவரும் இணைந்து இருப்பதுபோல் நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். சமூக நல்லிணக்கம் பேண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
(குரல் : பாரதி நகரின் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளை ஏன் அழைக்கவில்லை கமிஷனர்?)
ஏழுமலை சுவாமிகள் : காவல்துறை அதிகாரி சட்டம் ஒழுங்கு பராமரிப்பவர் மட்டும் அல்ல. சமூக நல்லிணக்கத்தை விரும்புபவரும் கூட நாங்கள் அழைத்துத்தான் அவர் இங்கே வந்துள்ளார். இந்தக் கூட்டத்திற்கு அனுமதி அளித்ததுதான் அவருடைய பணி. மேடையில் பேச அழைக்க வேண்டியவர்களை நான்தான் முடிவு செய்தேன்.
(குரல் : அப்படியானால் மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்து கூட்டம் நடத்தும் துணிச்சலை சாமியாருக்கு யார் கொடுத்தார்கள்..?)
ஏழுமலை சுவாமிகள் : இது கேள்வி பதில் நிகழ்ச்சி அல்ல. இடையூறு செய்யாதீர்கள். மக்கள் குழுமி உள்ளார்கள். நிகழ்ச்சியை நடத்த விடுங்கள். இந்நிகழ்ச்சிக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் தொடர்பு இல்லை.
(இப்போது ‘கோரஸ்’ ஆக பல குரல்கள் ஒலிக்கின்றன: நிகழ்ச்சியை நிறுத்துங்கள். உடனே.)
ஏழுமலை சுவாமிகள் : குரல் கொடுத்து நிகழ்ச்சியைத் தடுக்க நினைக்கிற அன்பர்கள், மேடைக்கு வந்து தங்கள் எண்ணத்தைக் கூற வேண்டும். அதை விட்டு விட்டு இப்படி குரல் கொடுப்பது அழகல்ல. ஆண்மையும் அல்ல.
(சாமியாருக்கு கோபம் வருது பாருப்பா என்று குரல் ஒலிக்கிறது.: நாங்க வரமாட்டோம். ஆம்பிளைங்க நாங்க அனுப்புற ஆயுதம் வருது பாருங்க. கமிஷனரும் பார்க்கட்டும்)
(கற்களும் சோடா பாட்டில்களும் மேடையை நோக்கி பறக்கின்றன. காவலர்கள், ஏழுமலை சுவாமிகள், ஜனாப் ரகீம்பாய், அருட்தந்தை ஜேம்ஸ் ஆகியோரை பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர். அதையும் மீறி ஒரு கல், ஏழுமலை சுவாமிகளின் மண்டையில் பட்டு இரத்தம் பீறிடுகிறது.)
ராஜவேலன் பேசுகிறார் : பொதுமக்கள் கூடியுள்ள இடத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுபவர்களைக் காவல்துறை சும்மா விடாது. கை கட்டி வேடிக்கை பார்க்காது.
(ஜனாப் ரகீம்பாயும், அருட்தந்தை ஜேம்ஸும் வருகின்றனர் )
ரகீம் : சமூக விரோதிகள் பெரியவர் ஏழுமலை சுவாமிகளின் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.
ஜேம்ஸ் : இந்த சமூக விரோதிகளுக்கு கர்த்தர் கண்டிப்பாக தக்க தண்டனை தருவார். ஏழுமலை அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு வருகிறது. எனதருமை பாரதி நகர் வாழ் குடிமக்களே. உங்கள் மனதைக் கலைக்கும்படி பேசி சமூக நல்லிணத்தைக் குலைப்பவர்களின் பேச்சுக்கு செவி சாய்க்காதீர்கள். இது போன்ற வன்முறைக் கும்பலின் கொட்டம் ஒடுங்கும் ஒழியும் காலம் விரைவில் தோன்றும்.
ரகீம் : இறைவன் அதற்கு துணை புரிவான்.
(இப்பொழுது மீண்டும் மேடையை நோக்கி கற்கள் பறக்கின்றன.)
ராஜவேலன் : பெரியவர்கள் ஜனாப் ரகீம்பாய் அவர்களும் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களும் இங்கிருந்து செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். (இருவரும் செல்கின்றனர்.) சமூக நல்லிணக்கக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்குக்கு சவால் விட்டு ஓடிக் கொண்டிருப்பவர்களை காவல்துறை உடனடியாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் என்று உறுதியளிக்கிறேன். பொது மக்களே. இடையூறுகள் ஏற்பட்டதன் காரணமாக கூட்டத்தை இந்த அளவில் முடித்துக் கொள்ளலாம் என்று ஏற்பாட்டளர்கள் கூறுகிறார்கள். எனவே விடை பெறுவோம். வணக்கம். நன்றி. (மக்கள் கலைந்து செல்லும் குரல்கள். உதவி ஆணையர் வீரநாராயணன் வருகிறார். சல்யூட் அடிக்கிறார்.)
ராஜவேலன் : என்ன மிஸ்டர் வீரநாராயணன். நாம் இருக்கும்போதே இப்படி ஆயிடுச்சே.
வீரநாராயணன் : திட்டம் போட்டு எல்லாம் வரலை சார். திடீர்னுதான் கூடி இருக்காங்க. நிகழ்ச்சியை நடத்த விடக் கூடாதுன்னு எய்ம் பண்ணி காரியத்தை சாதிச்சுட்டாங்க. ஆனா லோக்கல் ஆளுங்க இல்ல சார்.
ராஜவேலன் : இதுமாதிரி நிகழ்ச்சிகள்ல மக்கள் பிரதிநிதிகளைக் கூப்பிட வேண்டிய அவசியம் என்ன? இது மாதிரி எவ்வளவோ நிகழ்ச்சி நடந்துகிட்டுதானே இருக்கு.
வீரநாராயணன் : நீங்க முக்கிய பேச்சாளரா வந்தது தானால் உங்க எதிரேயே வன்முறை செய்யணும்னு செஞ்சு இருப்பாங்க சார்.
ராஜவேலன் : சரி. பேசிக்கிட்டு இருக்காதீங்க. உடனே அவனுங்களை பிடிக்கப்பாருங்க.
வீரநாராயணன் : ஏற்பாடு பண்ணி இருக்கேன் சார்.
(மாரி வருகிறார்)
ராஜவேலன் : வாங்க மாரி. இங்க நடந்த கூத்து எல்லாம் பார்த்தீங்களா…
மாரி : பார்த்தேன் சார். இந்தாங்க இந்த கூல்ட்ரிங்க்ஸ் குடிங்க.
(ராஜவேலன் குளிர் பானத்தை வாங்கிப் பருகுகிறார்.)
ராஜவேலன் : சரி. வீரநாராயணன். நீங்க அவங்கள பிடிக்கணும் உடனடியா.
வீரநாராயணன் : சரிங்க சார். வரேன் சார்.
(வீரநாராயணன், சல்யூட் அடித்து புறப்படுகிறார்)
மாரி : இதை நான் எதிர்பார்த்தேன் சார்.
ராஜவேலன் : நீங்க எதிர்பார்தீங்கன்னா முதல்லேயே சொல்லி யிருக்கலாம் என்கிட்ட. அலர்ட் ஆக இருந்திருக்கலாமே.
மாரி : அது இல்லீங்க அய்யா. ஏழுமலை சுவாமிகளுக்கு த்ரெட் இருக்குன்னு கேள்விப்பட்டேன். இங்க நடக்கும்னு எதிர்பார்க்கலே.
ராஜவேலன் : என்ன சொல்றீங்க? வீரநாராயணனும் கலாட்டா பண்ணது லோக்கல் ஆளுங்க இல்லேன்னு சொன்னாரு.
மாரி : இவங்க மூணு பேரும் ஒரு வருஷத்துக்கு முன்னால பூவனம்ங்கற கிராமத்தில தொழிற்சாலையில சைல்ட் லேபர் பயன்படுத்திக்கிட்டு வந்ததுக்கு எதிரா இயக்கமே நடத்தி மக்களைத் திரட்டி அந்த ஆலைகளுக்கு சீல் வெச்சாங்க. மகளிருக்கு சுய உதவிக் குழுக்கள், ஆடவர்களுக்கு சுயவேலைவாய்ப்புன்னு தொடங்க வெச்சாங்க. அந்த ஆலை அதிபர் செல்லதுரையோட வேலைதான் அது. ஏழுமலை சுவாமிகள் தீவிரமா இருந்து மத்த ரெண்டு பேரையும் கூட்டு சேர்த்துகிட்டாரு. மக்கள் மனசை மாத்தினாரு.
ராஜவேலன் : இவங்க மூணுபேரும் முதல்லயே ஒண்ணா இருந்த செயல்பட்டவங்களா… எனக்குத் தெரியாது. சுவாமிகள் கிட்ட பேசும்போது அவரும் எதுவும் சொல்லலை.
மாரி : சொல்ல மறந்திருக்கலாம். வந்தவங்க செல்லதுரைங் கறவரோட அடியாட்கள்.
ராஜவேலன் : அடபாவிங்களா.. அவங்கள் பிடிச்சு கவனிக்கறேன் பாருங்க. அதை விடுங்க. நான் பார்த்துக்கிறேன். சுவாமிகளுக்கு முதல் உதவி கொடுத்தாங்களா? அவரோட இடத்தக்கு அழைச்சுட்டுப் போய்ட்டாங்க இல்ல.
மாரி : போய்ட்டாங்க சார். அவருக்கு பாதுகாப்பு இருந்தால் நல்லா இருக்கும்.
ராஜவேலன் : இப்பவே அங்கே இரண்டு பேரை அனுப்பி வைக்க சொல்றேன். ஆதவன் கதை என்ன ஆச்சு…?
(வீரநாராயணன் வருகிறார். சல்யூட் அடிக்கிறார்)
ராஜவேலன் : சொல்லுங்க..
வீரநாராயணன் : சார். ஒங்க செல் லைன் போகலையாம். ஒங்க டாட்டர் எனக்கு மெஸேஜ் அனுப்பி இருக்காங்க.
ராஜவேலன் : என்ன?
வீரநாராயணன் : அது வந்து… ஒங்க பாதரை அட்மிட் பண்ணி இருக்காங்களாம் தென்றல் மருத்துவமனலை…
மாரி : சார் உடனே போங்க சார்.
ராஜவேலன் : போறேன் மாரி. இது ரெண்டாவது அட்டாக்.
மாரி : ஒண்ணும் ஆகாது சார். நீங்க போய் பாருங்க உடனே.
ராஜவேலன் : வாங்க வீரநாராயணன் போகலாம்.
வீரநாராயணன் : யெஸ் ஸார்.
மாரி : சார். சுவாமிகளுக்கு செய்யுரிட்டி….
ராஜவேலன் : நினைவுப்படுத்திட்டீங்க அந்த மூணு பேருக்குமே பாதுகாப்பு கொடுத்துடலாம்.
வீரநாராயணன் : யெஸ் சார். ஏழுமலை சுவாமிகள், ரகீம்பாய், ஜேம்ஸ் மூணு பேருக்கும் உடனே செக்யுரிட்டி அரேஞ்ச் செஞ்சுடறேன் சார்.
மாரி : தாங்கஸ் சார். நானும் வரட்டுமா ஹாஸ்பிட்டலுக்கு.
ராஜவேலன் : வாங்க. பேசிகிட்டே போகலாம்.
(மூவரும் செல்கின்றனர்.)
(திரை)
– தொடரும்…
– மேடைகளைச் சுற்றி (நாடகம்), பதிப்பாண்டு: 2022, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |