மேடைகளைச் சுற்றி




(2022ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன்னுரை

உலகமே ஒரு நாடகமேடை நாம் அனைவரும் நடிகர்கள் என்று ஆங்கில இலக்கியப் பேராசான் ஷேக்ஸ்பியர் சொல்லிச் சென்றார். நாடகமே உலகம் என்றும் சொல்லப்படுவது உண்டு.
இன்று நாம் அன்றாட வாழ்வில் காணும் பல்வேறு விதமான மேடைகளைக் களமாகக் கொண்டு ‘மேடைகளைச்சுற்றி…’ என்ற இந்த நாடகம் உருவாக்கப் பட்டுள்ளது.
இதில் சமகாலத்தைச் சித்தரித்துக் காட்டும் காட்சிகள் உள்ளன. மனித உணர்வுகள் உள்ளன. இவற்றின் ஊடாக ஒவ்வொரு கதைப் பாத்திரத்திற்கும் ஒரு கதை உள்ள ாது.
இந்த நாடகம் வாசகர்களுக்கு விருந்தாகும் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன். நன்றி.
தமிழ்த்தேனீ (எஸ்.மதுரகவி)
காணிக்கை
மூன்றாம் தமிழாம் நாடகத் தமிழைப் பேணிப் பாதுகாக்க இன்று அயராமல் உழைத்து கொண்டிருக்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும்.
குறிப்பு
இந்த நாடகத்தில் தோன்றும் பாத்திரங்களும் சம்பவங்களும் சூழ்நிலையும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
காட்சி 1-2 | காட்சி 3-4
முதற்காட்சி
(திரை எழுகிறது. மேடையில் விளக்குகள் ஒளிர்கின்றன. பின்னணியில் இந்திய மக்கள் கட்சி மூத்த நிர்வாகி முத்து ராஜன் இல்லத் திருமண வரவேற்பு மணமக்கள் திருநிறைச் செல்வி மல்லிகை திருநிறைச் செல்வன் குணாளன் என்று எழுதப்பட்ட பதாகை இருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை. அதற்கான ஏற்பாடுகளுக்காக ஒரு சிலர் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். இரண்டு உரை மேசைகள் வலப்பக்கத்தில் ஒன்றாகவும் இடப்பக்கத்தில் ஒன்றாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேடையின் வலப்பக்கத்திலிருந்து இளம் மங்கை ஒருத்தியும் பருத்த தேகம் கொண்ட வயதான ஆடவரும் வருகின்றனர். இளம் மங்கையின் பெயர் மலர்க்கொடி. அந்த ஆடவர் வேறு யாருமல்ல அவர் தான் முத்துராஜன். மலர்க் கொடி, சின்னத் திரை புகழ் அறிவிப்பாளர். நன்றாக தன்னை அலங்கரித்துக் கொண்டு மலர்ந்த முகத்துடன் காணப்படுகிறாள்; முத்துராஜன் பதற்றத்துடன் காணப் படுகிறார்.)
முத்து : இந்தாம்மா இந்த பெல் வைச்சுக்கோ.
மலர் : இது எதுக்கு மாமா?
முத்து : காரணமாத்தான், நம்ம கட்சி ஆளுங்கள பேச வைக்கணும். இல்லாட்டா முகம் சுளிப்பான். மேடை கிடைச்சா போதும். மணிக்கணக்கா பேசி பயிற்சி பேசி பயிற்சி எடுத்துப்பாங்க. எல்லாருக்கும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல கொடுக்காதே. பெல் அடிச்சிடு. பெல் அடிப்பேன்ங்கறதையும் நீயே நாசுக்கா சொல்லிடு…. ஏடாகூடமாகப் பேசினாலும் பெல் அடிச்சிடு.
மலர் : சரி மாமா….
(விளக்குகள் ஒருசில நிமிடங்கள் அணைந்து மீண்டும் ஒளிர்கின்றன. இப்பொழுது ஏற்பாடுகள் தயார் ஆக இருக்கின்றன. மணமக்கள் இரண்டு உரை மேசைகளுக்கு இடையே அமர்ந்திருக்கன்றனர். மலர்க்கொடி, வலப்பக்க உரை மேசை அருகே நின்று பேசுகிறாள்)
மலர்க்கொடி : முத்தமிழுக்கு முதற்கண் வணக்கம் கூறி நற்றமிழரை பொன்மாலைப் பொழுதில் இங்கு காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இல்லறத்தில் இன்று இணைந்த இளஞ்சோடி மல்லிகை குணாளன் தம்பதியரை வரிசையில் நின்று வாழ்த்திய நெஞ்சங்களைக் கண்டு பூரித்துப் போனேன். முத்துராஜன் ஐயா அவர்கள் அடியேனுக்குத் தூரத்துச் சொந்தம். மாமன் முறை. எனவே, மாமன் வீட்டு திருமண வரவேற்பு நிகழச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்பளித்த மாமனுக்கும் அத்தைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கட்சித் தொண்டர்கள் சிலர் மணமக்களை வாழ்த்திப் பேச விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது வாழ்த்து மேடை. திருமண வரவேற்பு மேடை. அதனைக் கவனத்தில் கொண்டு சிற்றுரையாகப் பேசவும். தங்கள் உரையை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் மணி ஒலிக்கும். நிறுத்திக் கொண்டு அடுத்தவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பொழுது இந்திய மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகி முத்துராஜன் அவர்கள் வரவேற்புரை ஆற்றுவார்.
(இடப்பக்க உரை மேசை அருகே முத்துராஜன் வந்து நிற்கிறார். செருமிக் கொண்டே பேசத் தொடங்குகிறார்)
முத்து : என்னுடைய அருமைப்புதல்வி மல்லிகையின் திருமண வரவேற்புக்கு வருகை புரிந்திருக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் திரையுலகப் பிரமுகர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் என் உயிருக்கு உயிரான கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி. நான் இரகசியமாகத் திருமணத்தை ஊரில் நடத்தி விட்டு சென்னையில் வரவேற்பு வைபவத்தை நடத்துகிறேனாம். இப்படி எல்லாம் புரளி கிளப்பி விடுகிறார் ஒருவர். யார்? மாற்றுக்கட்சிக் காரர்களா? எதிரிகளா? இல்லை இல்லை. நமது கட்சியின் நட்சத்திர மேடைப் பேச்சாளரே இந்த வம்புக் பேச்சை வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கிறார். என்னுடைய தாயாருக்கு தள்ளாத வயது. அவர் முன்னிலையில் மாலை மாற்றித் திருமணம் நடத்தி அழைத்து வந்தேன். இதில் என்ன தவறு? கட்டுப்பாடு மிகுந்த நமது கட்சியில் இப்படி எல்லாம் பேச்சு எழக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டவே கூறினேனே தவிர இந்த நல்ல வேளையில் யார் மீதும் புகார்ப்படலம் வாசிக்க நான் விரும்ப வில்லை. அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறேன். என் மருமகள் தங்கமான மங்கை மலர்க்கொடி, சின்னத் திரை மூலமாக உங்களைக் கவர்ந்தவர். அவர்கூறியதுபோல் வரிசையில் நின்று வாழ்த்தியதற்கு நன்றி. வாழ்த்துரை வழங்குவோரும் அது போல் பொறுமை காத்துப் பேசிச் செல்ல வேண்டுகிறேன். நன்றி.
மலர்க்கொடி : நன்றி மாமா அவர்களே, அவையில் என் உறவைக் குறிப்பிட்டுக் கொண்டாடியதற்கு நன்றி. முத்துராஜன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து வாழ்த்துரை நேரம். இல்லறமாகிய நல்லறத்தில் இணைந்த இந்த இளஞ்சிட்டுகளை வாழ்த்துவதற்கு ஒவ்வொருவராக அழைக்கிறேன். அந்தப் பக்கத்தில் உள்ள உரை மேசை அருகே நின்று பேச வேண்டுகிறேன். திருவாளர் கோவை மணி கொங்கு மண்ணின் மணி வாருங்கள்.
மணி : மலர்ந்த முகம் கொண்ட மலர்க் கொடிக்கு நன்றி. அனைவருக்கும் வணக்கம். பொருத்தமான தம்பதியர் இந்த அந்தி மாலைப் பொழுதிய நம் வாழ்த்துப் பெற பொறுமையுடன் காத்திருக்கிறார்கள். நான் மாற்றுக் கட்சிக்காரர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமண மேடைகளில் எல்லாம் வாழ்த்து சொற்பொழிவு ஆற்றப்போய் நம்மை தூற்றிக் கொண்டிருக்கிறார்கள். வேண்டாம் நாங்கள் தூற்ற ஆரம்பித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். சொல்லம்பால் எங்களைத் துளைக்க முடியாது. சுவரோடு மோதி தலையை உடைத்துக் கொள்ளா தீர்கள். கட்டுப்பாடு உள்ளவர்கள் என்பதால் அமைதி காக்கிறோம்.
மலர்க்கொடி : (மணி அடிக்கிறாள்)
மணி : மணிக்கே மணியா? என் அன்புக்குரிய தலைவனின் குடும்பவிழாவில் எனக்கு பேச உரிமை இல்லையா….
(மலர்க்கொடி மீண்டும் மணி அடிக்கிறாள்)
மணி : பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழட்டும் மணமக்கள் என்று வாழத்துகிறேன். நன்றி. (வேண்டாவெறுப்புதொனி)
மலர்க்கொடி : ஆதவன், வாருங்கள் அனைவரும் திரும்பி பார்க்கும் விதத்தில் உடை அலங்காரம் செய்து கொண்டுள்ள இளைஞரே வாருங்கள், பேசுங்கள்.
ஆதவன் : இளம்மங்கை மலர்கொடியாருக்கு நன்றி. பணக் காரன் வீட்டு ஜன்னலுக்கும் உடை உண்டு. ஏழைச்சிறுவனுக்கு உடை இல்லை என்னும் இந்த சமூக ஏற்றத் தாழ்வை எண்ணி எண்ணி நான் கவலை கொள்ளாத நாளில்லை. இருப்பினும் திருமண விழாவுக்கு இப்படி வரவேண்டும் என்பதால்தான் இந்த உடை. தோழி… மன்னிக்கவும். சகோதரி சுட்டிக் காட்டியதால் இந்த சிறு விளக்கம். நான் என்றும் ஏழைப் பங்காளன் எங்கள் அண்ணன் முத்துராஜனைப் போலவே. மரத்தை வெட்ட வந்த கோடரி போல் நம் அண்ணனின் நிழலில் இருந்தவர்கள் அவருக்குப் பள்ளம் பறிக்கிறார்கள். சிறுநரியைக் கண்ணி வைத்துப் பிடிக்க முடியும். சிங்கத்தைப் பிடிக்க முடியுமா? அப்படிப்பட்டவர்களுக்கு கேடு காலம் வரப் போகிறது.. நான் எச்சரிக்கிறேன்… (மலர்க்கொடி மணி அடிக்கிறாள்)
வாழ்த்துரை மேசையில் மணி அடித்தல் என்பதை நான் ஏற்க மாட்டேன். பேசிக் கொண்டே இருந்தால் என்ன செய்வீர்கள்….? குண்டு கட்டாகத் தூக்கிச் செல்வீர்களா?
(இரண்டு வாட்டசாட்டமான இளைஞர்கள், ஆதவனைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்)
மலர்க்கொடி : கவிதை எழுதும் பெண்மணி காவியமாய்த் திகழும் காவ்யா. வாருங்கள். பகருங்கள் தங்கள் வாழத்துரையை.
காவ்யா : அனைவருக்கும் வணக்கம். சுற்றமும் நட்பும் சூழ்ந் திருக்க பெற்றவர்கள் மகிழ்ந்து பூரித்திருக்க உற்ற துணையைக் கரம் பற்றி ஆடவனும் மங்கையும் அமர்ந்திருக்கும் இந்தத் திருமண வரவேற்பு மேடையே நல்லறமாகிய இல்லறத்தின் நுழைவாயில். இங்கே வாழ்த்த வருபவர்களில் சில பேர் வம்பாய் வார்த்தைகள் உதிர்ப்பதுண்டு மணமக்களை வாழ்த்த மட்டுமே வாய் திறப்பது நன்று என்பதை யார்தான் புரிய வைப்பது இவர்களுக்கு. மணமக்களே! வாழ்க பல்லாண்டு! ஒருவருக் கொருவர் அன்பைப் பொழிந்து எல்லா நலன்களும் பேறுகளும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். நன்றி.
மலர்க்கொடி : நீங்கள் புரிய வைத்து விட்டீர்கள் காவ்யா எதைப் பேச வேண்டும் எதைப் பேசக்கூடாது என்பதைக் கூறிவிட்டீர்கள். நன்றி. இப்பொழுது கவிஞர் தேவன் வருகிறார்.
தேவன் : கை குலுக்கி வாழ்த்தி விட்டுச் சென்றவர்கள்தான் வாழ்த்து மேடையில் மீண்டும் பேச வருகிறார்கள். திரைப்பாடல் ஒன்றில் பாடுகிறார்களே அரைத்தமாவு, துவைத்த துணி, அதையே நாமும் செய்வதா?… அவர்கள் பாவம் முத்துராஜன் அவர்களே… அவர்களை அமரவைத்து பேச்சைக்கேட்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பேச்சுப்பட்டறையா நடத்துகிறீர்கள்…? புதிய தம்பதிகளை வதைப்பது தகுமா?… என்றெல்லாம் கேட்க நினைத்தேன். ஆனால், தொகுத்து வழங்க தேவதையைப்போல் மலர்க்கொடி நின்று கொண்டு பேச அழைக்கும்போது யாருக்குத்தான் இந்தத் திருமண வைபவ மேடையில் பேசியே தீர வேண்டும் என்று ஆசை பிறக்காது? மலர்க்கொடியின் பெற்றோர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட அழகான கொடியைப் பெற்றெடுத்ததற்கு. மணி அடித்து விடாதீர்கள். அனைவருக்கும் வணக்கம். நான் எதையும் மறைப்பதில்லை கொட்டி விடுவேன். அதனால் சில மணித்துளிகள் பேச்சு வேறு திசையில் சென்று விட்டது. மன்னிக்கவும். மல்லிகை என்னும் பூங்கொடியைக் கரம் பற்றிய எங்கள் மாப்பிள்ளை குணாளன் அவர்களே. தங்களுக்கும் எங்கள் குலவிளக்கு மல்லிகைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் மருத்துவர் என்று சொன்னார்கள். இன்றைய தேதியில் கல்வியும் மருத்துவமும்தான் எட்டா உயரத்தில் இருக்கின்றன. நாங்கள் வந்தால் பார்த்துக் கொள்ளுங்கள். சொல்லி வைத்தேன்.
(மலர்க்கொடி மணி அடிக்கிறாள்)
மலர்க்கொடி : அரசன் அவர்களே வாருங்கள். வயதில் மூத்தவர் ஆசியுரை வழங்குங்கள்.
அரசன் : மூத்த நிர்வாகி முத்துராஜனின் திருமகளின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மகள் பிறந்தபோது அதே மருத்துவ மனையில்தான் இவரும் பிறந்தார். எனவே இவரும் என் புதல்வியே மல்லிகையின் இல்லறத்தில் நறுமணம் வீச நீடுழி வாழ வாழ்த்துகிறேன். நன்றி.
மலர்க்கொடி : பக்குவமான வார்த்தைகளை வாழ்த்துரையாக வழங்கிய பாங்குக்குத் தலைவணங்குகிறேன். திருமதி. விசாலாட்சியை அழைக்கிறேன்.
விசாலாட்சி : வணக்கம். நான் மேடை ஏறிப்பேசினாலே அதிரடியா இருக்கும்னு சொல்வாங்க. இது நம்ப அண்ணனோட குடும்ப திருமண வரவேற்பு மேடை. என்னோட பாணியில எதுவும் அதிரடியா அதிரடியா பேசமாட்டேன் பயப்படாதீங்க. ஒரு அதிமேதாவி கவிஞர்ன்னு சொல்லிக்கிட்டு வந்தான். அதான் கியுல நின்னு கைக்குலுக்கினீங்களே… இப்ப ஏன் தனியாக பேச்சு வேறன்னு கேட்க நெனச்சானான். இவங்களப்பார்த்துட்டு மனசு மாறிட்டானாம். நம்ம கட்சியைக் கெடுக்கறதே இந்த மாதிரி ஆளுங்கதான். ஒரு பொண்ணப் பார்த்து பொது மேடையில இப்படி பேசலாமாங்கற அடிப்படை நாகரிகமே தெரியாதா… மனசுல இருக்கிறது எல்லாம் கொட்டிடுவானாம். உளறிக் கொட்டிட்டுப் பேச்சைப் பாருங்க…
(தேவன் கோபத்துடன் விசாலாட்சி அருகே வருகிறார். முத்துராஜன் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறார்)
(மலர்க்கொடி மணி அடிக்கிறாள்)
விசாலாட்சி : என்னம்மா இது. உனக்கு சப்போர்ட்டாக பேசினா மணி அடிக்கறே.. நண்பர்களே… மங்கல நிகழ்ச்சில கலகம் ஏற்படுத்தணும்னு நான் நெனக்கல. குடும்பவிழாவுல குழப்பத்தை விளைவிக்கணும்னு நான் நெனக்கல. எப்படி நடந்துக்கக்கூடாதுங்கறதுக்காக உங்களுக்குச் சொன்னேன். மற்ற மூத்த நிர்வாகிகள் குடும்ப விசேஷத்திற்க்குப் போனா இப்படி எல்லாம் நடந்துக்காதீங்க. மணமக்களுக்கு வாழ்த்துக்கள். சுற்றமும் நட்பும் சூழ வாழ்க.
மலர்க்கொடி : விரும்பத்தகாத பேச்சுகளைப் பேசினால் விரும்பத்தகாத மறுவினைகள் ஏற்படும். கண்ணியமான முறையில் பேசி கட்சியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும். நான் இப்படி சொல்லவில்லை. முத்துராஜன் அவர்களின் வேண்டுகோள் இது. சின்னத்தம்பி அவர்களைப் பேச அழைக்கிறேன்.
சின்னத்தம்பி : கைகுலுக்கி விட்டால் போதுமா? மனம் குளிர அவர்கள் செவி குளிர கணீர் என்று வாழ்த்து சொல்ல வேண்டும். விலைவாசி போல் வாழ்வில் இருவரும் உயரங்களைத் தொட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சேமிக்கத் தொடங்குங்கள் நாளைமுதல். உங்கள் குழந்தைகளின் படிப்புக்காக. நன்றி.
மலர்க்கொடி : அரிய ஆலோசனையும் வாழ்த்தும் சொன்ன சின்னத்தம்பிக்கு நன்றி. இப்பொழுது சைதாப்பேட்டை லாரன்ஸ் வருகிறார்.
லாரன்ஸ் : விசாலாட்சி அக்கா சொன்ன விதம் தப்பா இருக்கலாம். சொன்ன பாயின்ட் கரெக்ட். மேடை கிடச்சுதுன்னு என்ன வேணா பேசலாமா… அச்சம் விட்டவன் அம்பலம் ஏறுவான்ங்கறது பழமொழி. சபைக் கூச்சம் ஸ்டேஜ் ஃபியர் இல்லாம மேடையில பேசிப் பழகிட்டா என்ன வேணா பேசிடலாமா? அவை நாகரீகம் தெரிய வேண்டாமா? இடம் பொருள் ஏவல் வேண்டாமா? கூச்சம் இல்லேன்னா பேச முடியுங்கறதுக்காக அடுத்தவங்க காது கூசும்படியா பேசிடாதீங்க… (தேவன் திட்டிக்கொண்டே அருகில் வருகிறார்) (மலர்க்கொடி மணி அடிக்கிறாள்)
லாரன்ஸ் : மணமக்கள் இருவரும் வாழ்வில் பின்னிப் பிணைந்து நலன்களும் செல்வமும் பிள்ளைகளும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
(உரைமேசை அருகே தேவன் வந்து நிற்கிறார்)
தேவன் : அண்ணே, நிறுத்துங்க. வாழ்த்துப்பேச்சு நிகழ்ச்சியை. ஆளாளுக்கு என்னைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்களப் பார்த்து தேவதை அழகா இருக்கீங்கன்னு சொன்னது தப்பா… முன் விரோதத்தை வெச்சுகிட்டு இந்த மேடையில் என்மேல காண்டு காட்டுறாங்க. நீங்க வேடிக்கை பார்க்கறீங்க. (நகர்கிறான்)
மலர்க்கொடி : தேவன் அவர்கள் ஏதோ வாய் வார்த்தையாகப் பேசினார். யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. கட்சித்தொண்டர்கள் குடும்ப நிகழ்ச்சியில் இப்படி கலாட்டா ஏற்படுத்துவது தமக்கு வருத்தத்தை அளிப்பதாக முத்துராஜன் அவர்கள் தெரிவிக்கிறார். எனவே, வாழ்த்துரை நேரம் இத்துடன் நிறைவு செய்யப்படுவதாக தெரிவிக்கிறார். விருந்து தயாராக இருக்கிறது. வருகை புரிந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் வயிறார உணவு உண்டு தாம்பூலம் பெற்றுச் செல்லுமாறு முத்துராஜன் குடும்பத்தாரின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, தம்பதிகள் பல்லாண்டு சகல பாக்கியங்களுடன் வாழந்திட இறைவனை வேண்டுகிறேன். வணக்கம்.
(திரை)
இரண்டாம் காட்சி
(மேடையில் அலுவலக வரவேற்பறை போன்ற அமைப்பு. சுவர்க் கடிகாரம் இரவு எட்டு மணியைக் காட்டுகிறது. அங்குள்ள சோபாவில் மலர்க்கொடி அமர்ந்திருக்கிறாள். மேடையின் வலப்பக்கத்திலிருந்து ஆதவன் வருகிறான். மலர்க்கொடி எழுந்து நிற்கிறாள்,)
ஆதவன் : வாங்க. வணக்கம். உள்ளே போகலாமா…. ரொம்ப டிஸிபிளீன்ட் ஆபிஸ் என் கேபினைக் கூட ஆறு மணிக்கு மூடிடுவாங்க வேலை இல்லேன்னா. நாம இங்கேயே பேசுவோம். உட்காருங்க.
மலர்க்கொடி : எழுத்தாளர் நிரஞ்சனிக்கு நடத்தற பாராட்டு விழா நிகழ்ச்சிய தொகுத்து வழங்கணும் டிஸ்கஸ் பண்ணனும் அழைச்சுக்கிட்டு வந்தாங்க. நீங்க வர்றீங்க.
ஆதவன் : அதான் என் ஆபிஸ்னு சொன்னேன் இல்ல. ரஞ்சனிக்குப் பாராட்டு விழா நிகழ்ச்சி பத்தி பேசணும்னு சொன்னாதான் நீ வருவ…
மலர்க்கொடி : மிஸ்டர் என்ன மரியாதை மாறுது…
ஆதவன் : மாறத்தானே செய்யும். வரவேண்டியது எல்லாம் வந்துட்டா மனுஷன் எப்படி வேணா மாறுவான்…
மலர்க்கொடி : நான் போறேன்… (செல்ல எத்தனிக்கிறாள்) ஆதவன் : நீங்க போக முடியாது மேம். இந்த பில்டிங்கே என்னோடது. லிஃப்ட் ஆஃப் பண்ணியாச்சு. படில போனாலும் எங்க ஆளுங்க கூட்டிகிட்டு வந்துடுவாங்க.
மலர்க்கொடி : யார்கிட்ட விளையாடுறேன்னு தெரியுதா?
ஆதவன் : இதெல்லாம் பழைய வசனம். டிவி செலி ப்ர்ட்டின்னா கொம்பு முளைச்சுடுமா உங்களுக்கு எல்லாம். ஏ.சி ஓடுது டிவி இருக்கு. நீங்க ஒர்க் பண்ற டிவி சேனல் கூட வரும். பார்த்துகிட்டு இருங்க.
மலர்க்கொடி : என்னைக் கடத்திக்கிட்டு வந்திருக்கியா…
ஆதவன் : அப்படி எல்லாம் நான் சொல்லவே இல்லையே நீயேதான் வந்திருக்க. எங்க கண்காணிப்பு கேமிரால அது பதிஞ்சு இருக்கு… ஒன்ன ஒண்ணும் பண்ண மாட்டேன். நான் காமக் கொடூரன் கிடையாது. இப்ப அதுக்கு எல்லாம் கடுமையான சட்டம் வரப் போகுது. என்னோட சுண்டு விரல் கூட உன் மேல் படாது. அது தவிர தெரிஞ்சோ தெரியாமலோ அன்னிக்கு சகோதரின்னு சொல்லிட்டேன். சகோதரிய நான் தொட மாட்டேன். என் தங்கச்சி வளர்ந்து பெரியவள் ஆனதுக்கு அப்புறம் அவளைத் தொட்டதே இல்ல நான்.
மலர்க்கொடி : அப்படிப்பட்ட உத்தம சிகாமணி ஏன் என்னை இங்க அடைச்சு வெச்சிருக்கணும்?
ஆதவன் : காரணம் நீங்க எல்லாம் நிகழ்ச்சி பத்தி மட்டும்தான் திங்க் பண்ணுவீங்க. எங்க மனசுல ஆயிரம் விஷயம் ஓடும் ஒரே நேரத்தில். அன்னிக்கு அந்த நிகழ்ச்சில என்னைப் பேச விடாமல் பெல் அடிச்சே.
மலர்க்கொடி : பிசினஸ் நடத்தறே அவர் சொன்னாரு நான் செஞ்சேன் இது கூட புரியாதா?
ஆதவன் : இரும்மா. உன்ன அம்மான்னு கூப்பிடப் பிடிக்கல. உட்கட்சியில் அவருக்கு எதிரா வேலை நடக்கறதுங்கறத அவரோட தொண்டர்களுக்கு சொல்லணுங்கற நல்லெண்ணத்துல பேசினா அடியாட்களை வெச்சு தூக்கிக் கொண்டு போய் வெளியே விட்டாரு. எத்தனை பத்திரிகைக்காரங்க வெவ்வேறு கட்சி ஆளுங்க பொம்பளங்க முன்னால என்னை அவமானப் படுத்தினாரு இல்ல அவர் வந்து மன்னிப்பு கேட்கணும். மலர்க்கொடி : அதுக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்? எனக்கு ஒன்பது மணிக்கு லைவ் புரொக்ராம் இருக்கு… (ஆதவன் அவளுடைய மொபைலைக் கைப்பற்றுகிறான்) ஆதவன் : ஓங்க மாமனுக்கு போன் பண்ணியிருக்கேன் வரட்டும். சுமூகமாக முடியட்டும் தர்றேன்.
மலர்கொடி : என்னைப் பகடைக் காயா பயன்படுத்தறியா. நான் உன்னை சும்மா விட்டு விட்டுவனா…
ஆதவன் : நான் எதையும் யோசிக்காம காரியத்துல இறக்குவேனா? இயற்றமிழ்ச் சங்க அறக்கட்டளை ஆபீஸ் இதுதான். நான்தான் புரவலர். தலைவர் முத்துராஜன். நாம் நலிந்த நிலையில் இருக்கும் எழுத்தாளர் நிரஞ்சனிக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியை எப்படி நடத்தறதுன்னு பேசிக்கிட்டு இருக்கப்போகிறோம்.
(ஆதவனின் மொபைல் ஒலிக்கிறது)
(முத்துராஜனின் குரல் ஒலிக்கிறது)
யோவ். அந்தப் பொண்ண எதுவும் பண்ணிடாதேய்யா.
ஆதவன் : நான் எதுவும் பண்ணலே நீ வந்து மன்னிப்பு கேளு. தூக்கிட்டுப் போன அந்த இரண்டு தடியன்கள் கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும். காலம் கடத்தாதே. சொன்ன வேலையைச் செய். பொண்ணக் கூட்டிகிட்டுப் போ.
முத்துராஜன் : நான் வந்துகிட்டு இருக்கேன். (குரல்) மலர்க்கொடி : புத்திசாலித் தனமா அவர ஒன் வழிக்குக் கொண்டு வந்துட்டியா என்னைக் காரணம் காட்டி.
ஆதவன் : ஒன்னைப் பகடைக் காயா பயன்படுத்தி ஆனா உருட்ட எல்லாம் இல்ல. தொடவே இல்லயே.
மலர்க்கொடி : அவர் இன்னொரு சந்தர்ப்பத்தில உன்னை வீழ்த்தமாட்டாரா…?
ஆதவன் : வீழ்த்தாம எப்படி இருப்பாரு? நான் பட்ட அவமானத்துக்கு இது பரிகாரம். அவருக்கு சொந்தம்ங்கறதால நீயும் வேணும். கட்சியில என்னையும் அவர் பகைச்சுக்க முடியாது. அதான் அலறி அடிச்சுகிட்டு ஒடி வர்றாரு. உன்னை இந்த ஸீன்ல இழுக்காம காரியத்தை சாதிச்சு இருக்கலாமேன்னு நீ நெனக்கலாம். ஆனா. அகம்பாவத்துல இருக்கற அவரை இறங்க வைக்கிறதுக்கு உன்னை வெச்சுத்தான் கேம் ஆடணும். காலம் இருக்கிற இருப்புல… என்னென்னவோ ஆகுது இளம் பெண்களுக்கு அதெல்லாம் நெனச்சு பயப்படுவாரு அவரு. நாளைக்கு என் தங்கச்சிக்கு ஒண்ணுன்னா இப்படி கால்ல விழணும்னா நானும் யோசிக்காம விழுந்திடுவேன்.
(கதவைத் திறக்கும் ஓசை. மேடையின் வலப் பக்கத்திலிருந்து முத்துராஜனும் அவருடைய ரண்டு அடி ஆட்களும் வருகின்றனர்.)
ஆதவன் : வாங்க சார். நடந்து வந்தது வியர்த்துக் கொட்டுது. உட்காருங்க. ஏ.சி.ரூம்தான்.
(முத்துராஜன் அமர்கிறார்)
முத்துராஜன் : என்னய்யா. இப்படி அமர்க்களம் பண்றே…
ஆதவன் : பின்ன… நான் உங்களுக்கு குழி பறிக்கறான் உட்கட்சியில் அதை உங்க குரூப் தொண்டர்களுக்கு சொன்னாதானே அவனுங்க எச்சரிக்கையா இருப்பான். அதுக்குப் போய் தூக்கிட்டு போவீங்கலான்னு கேட்டா… தூக்கிட்டுப் போய் வெளியே விடறீங்க. என்ன நெனச்சுட்டு இருக்கீங்க…?
முத்துராஜன் : நீ விட்டா பேசிக்கிட்டே இருப்ப. என் குரூப் மட்டும்தான் எல்லாரோட அங்க இருந்தானா.. குரூப் ஆளுங்களும் வந்திருந்தாங்க. உன்னை ஆஃப் பண்ண எனக்கு வேறு வழி தெரியல..
ஆதவன் : என்கிட்ட சூசகமா சொல்லியிருக்கலாமே. கிட்ட வந்து காதைக் கடிச்சிருந்தா கூட நான் புரிஞ்சுகிட்டு சமாளிச்சிருப்பேன் இல்ல.
முத்துராஜன் : நான் ஜாடை காட்டினேன். சைகை செஞ்சேன். நீ எதையும் கவனிக்கல. சரி. நடந்தது நடந்துபோச்சு. என்னை மன்னிச்சிடு. மனசுல வைச்சுக்காதே. மறந்திடு.
(அடியாட்களிடம் ஜாடை காட்டுகிறார்)
(அடியாட்கள் தெரியாம செஞ்சிட்டோம் மன்னிச்சிடுங்க ஐயா என்று ஆதவனின் பாதத்தைத் தொடுகின்றனர்.)
முத்துராஜன் : சரி. மலர்க்கொடிய அனுப்பு.
ஆதவன் : தாராளமா. தாங்க்ஸ் மேம். போய்ட்டு வாங்க. மனசுல வெச்சுக்காதீங்க நீங்களும். இந்தாங்க ஒங்க மொபைல். முத்துராஜன் : மலர்க்கொடிய என் கார்ல ஏத்தி அனுப்புங்க. நாம் ஆட்டோல போய்க்கலாம். மலர் மன்னிச்சிடும்மா. (அடியாட்களுடன் மலர்க்கொடி செல்கிறாள்)
முத்துராஜன் : யோவ். மலர்க்கொடியோட அப்பனும் ஆத்தாவும் என்னை எங்க பார்த்தாலும் காரித்துப்புவாங்க எம்மேல.
ஆதவன் : ஒங்க அகம்பாவத்தைக் கக்க வைக்கறதுக்கு இதுதான் வழி தலைவரே.
முத்துராஜன் ஒவ்வொரு வினைக்கு ம் எதிர்வினை இருக்கும்பா… என்னை கார்னர் பண்ணி மன்னிப்பு கேட்க வெச்சுட்டோம்னு சந்தோஷத்துல இருக்கியா…
ஆதவன் : இல்ல முத்துராஜா சந்தோஷத்துல மிதக்கிறேன். ஒங்களால வளர்ந்த ஆளு தான் நான். அதுக்காக என் சுயமரியாதை மேல என் ஈகோ மேல கை வைச்சு சீண்டிப் பார்த்தா சும்மா இருப்போமோ… வயசானவருக்கு அவ்வளவுன்னா யங்ஸ்ட்டர்ஸ் மூளை துருப்புடிச்சு இருக்குமா… சரி இதைக் கொண்டாடணும் நான் போய் மதுபானம் எடுத்துக்கிட்டு வர்றேன். கலந்துக்கறீங்களா…
முத்துராஜன் : என்னைச் சீண்டிப் பார்த்தா என்ன நடக்கும்னு புரிஞ்சுப்ப.. வரேன்.
(முத்துராஜன் செல்கிறார்)
(ஆதவனின் மொபைல் ஒலிக்கிறது)
ஆதவன் : என்னம்மா… சொல்லுங்க. நான் இன்னிக்கு வீட்டுக்கு சீக்கிரம் வந்துடுவேன். எப்ப வருவேன்னு கேட்டு நச்சரிக்காதீங்க.
குரல் : அது இல்லப்பா வீணாவைக் கடத்திட்டாங்கப்பா. ஆதவன் : என்னம்மா… ஃபிளாட்ல செக்யுரிட்டி எல்லாம் இருக்கும்போது வீட்டுக்கு உள்ளே யார் வந்தாங்க…?.
குரல் : அவ ஃப்ரெண்டு வந்தா. அவளோட பேசிக்கிட்டே தெருவுல போனா… எங்க நான் போனான்னு பாக்க வர்றதுக்குள்ள என் கண்ணு முன்னாடியே கார்ல ஏத்திக்கிட்டு கடத்திட்டுப் போய்ட்டாங்க.
ஆதவன் : வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கவேண்டியது தானே. ஒங்கள எல்லாம் வெச்சுக்கிட்டு என்ன செய்வேன்… கார் நம்பர் பார்த்தீங்களா…
குரல் : அதெல்லாம் பார்க்கலைப்பா. எனக்கு கையும் ஓடல. காலும் ஓடலை.
ஆதவன் : சரி. போனை வையுங்க. நான் வீட்டுக்கு வர்றேன். (மீண்டும் ஆதவனின் மொபைல் ஒலிக்கிறது)
குரல் : ஆதவனா….
ஆதவன் : யாரு….
குரல் : நான்தான் சரஸ்வதி தேவி….
ஆதவன் : சொல்லுங்க மேடம்… வேற ஏதோ நம்பர்லேந்து வர்றீங்க…
குரல் : என் மொபைல் வேலை செய்யல. மீனாவை யாரோ கடந்திட்டாங்கப்பா… என்னப்பா காதலியைத் கடத்திட்டாங் கன்னு சொல்றேன். ரீஆக்ஷன் இல்லாம இருக்கே…
ஆதவன் : அதிர்ச்சியில இருக்கேன். எப்படி….எப்ப…மேடம்… குரல் : இப்பத்தான் நைட்டூட்டிக்குக் கிளம்ப தெருவுல போய் ஆட்டோவ கூப்பிட்டா. அதுக்குள்ள ஒரு கார்ல வந்த ஆளுங்க அவளை இழுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க….
ஆதவன் : சரி. நான் என்ன செய்யறதுன்னு யோசிக்கிறேன். அங்கே வர்றேன்.
குரல் : சீக்கிரம் வா.
ஆதவன் : (முத்துராஜனுடன் மொபைலில் பேசுகிறான்) சார்.
முத்துராஜன் : (குரல்) சொல்லுய்யா என்ன…
ஆதவன் : என் தங்கச்சியையும் லவ்வரையும் கடத்திட்டீங்களே சார். சார். ப்ளீஸ் அவங்கள ஒண்ணும் பண்ணிடாதீங்க.
முத்துராஜன் : (குரல்) யோவ். என் என்ன… நான் போய் இதெல்லாம் செய்ய முடியுமா… வம்புல மாட்டிவிடாதே.
ஆதவன் : சார். ஒங்களப் பத்தி தெரியாமல் ஒங்களால வளர்ந்த நான் மோதிட்டேன் மன்னிச்சிடுங்க சார்.
முத்துராஜன் : (குரல்) அண்ணேன்னு சொல்வீங்க. அய்யான்னு சொல்லுவீங்க தலைவரேன்னுன்னுவீங்க ஒருமையில பேசுவீங்க இப்ப சாரா… எனக்கும் அதுக்கும் தொடர்பு இல்ல. எனக்கு என் பிரச்சனையே ஆயிரம் இருக்குது. உனக்குத்தான் இந்த சின்ன வயசுல பணபலம் படைபலம் எல்லாம் வந்திருச்சு இல்ல. நீயே பார்த்துக்கோ.
ஆதவன் : அய்யா….
முத்துராஜன் : (குரல்) உன் தலைவலிக்கு நீதான்பா மாத்திரை சாப்பிடனும் வெச்சுடறேன்.
ஆதவன் : என்ன செய்வேன் இப்ப… உடனே பழி வாங்கிட் டாரு இவுரு ..
(திரை)
– தொடரும்…
– மேடைகளைச் சுற்றி (நாடகம்), பதிப்பாண்டு: 2022, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |