மூடுதிரை
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2026
பார்வையிட்டோர்: 228
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
என்ரை தங்கன்
இன்னும் வரேல்லையே
ஒரு மாதமாகப் போகுது.
ஐயோ!
என்ரை தங்கனுக்கு
என்ன நடந்ததோ?
ஏன் இன்னும்
என்ரை ராசன்
வரேல்லை?
என்ரை செல்லனைப் பற்றி
எதுவித தகவலும்
எங்களுக்கு தெரியவில்லையே.
தங்கமலரின் மனதில்
ஏக்கம், பயம்.
தங்கமலர்தவிப்பு.
தங்கமலர் தங்கராசனை
திருமணம் செய்து
ஒரு வருடந்தான்.
அவர்களின் திருமணம்
காதல் திருமணம்.
ஆறு வருடக் காதல்
தங்கராசனுக்கு
இருபத்தி நாலு வயது
தங்கமலருக்கு
இருபத்தொரு வயது
தங்கமலர் அழகில் பேரழகி.
தங்கம் நிறத்தில் தங்கம்
குணத்திலும் தங்கம்தான்.
தங்கம் தற்பொழுது ஆறுமாதக்
கர்ப்பிணி.
தங்கராசனுக்கு
கட்டுக்கோப்பான உடற்கட்டு.
உறுதியான உள்ளம்.
துடிப்பான விடலை.
முற்கோபி.
சத்திய வேட்கை அவனுக்கு
கடுமையான உழைப்பாளி.
உழைப்பால் உயர வேண்டும்
என்ற வெறி தங்கனுக்கு
செழிப்பான செம்மண் தோட்டம்.
பத்துப் பரப்புத்தான்.
சிறுதானியம், காய்கறி
அரைவாசித்தறையில்
காசுப்பயிர் மிகுதி நிலத்தில்
மாறி மாறி வெங்காயம்,
உருளைக் கிழங்குச் செய்கை
‘விவசாய விற்பனைப்பொருள்
விற்பனைச் சங்கத்தில் ‘
உறுப்பினன் தங்கன்
கடந்த இரண்டு வருடங்களாய்
விதை உருளைக் கிழங்கு
விவசாயிகளுக்கு
போக காலத்தில் கிடைக்கவில்லை
விதை கிழங்கு
நேரகாலத்துக்கு வந்தது.
ஆனால்
உரிய காலத்தில் கிடைக்கவில்லை.
போகம் தப்பித்தான் விதை கிழங்கு
விவசாயிகளுக்கு கிடைப்பு.
காரணம் கேட்டால்.
போர்க்காலச் சூழ்நிலை.
சங்கச் செயலாளரும், தலைவரும்
சாக்குப் போக்குச் சொல்லி
தப்பித்துக்கொள்ளல்.
சங்கப் பொதுக்கூட்டம்
இரண்டு வருடங்களாய்
வைக்கவேயில்லை.
காரணம் கேட்டால்
அதற்கும்
போர்க்காலச் சூழ்நிலை சாட்டு.
‘விவசாய விளைபொருள்
விற்பனைச் சங்கத்தில்‘
இருநூற்று எண்பதுபேர்
உறுப்பினர்கள்.
இருநூற்று அறுபது
உறுப்பினர்கள் ஒப்பமிட்டு
பொதுக்கூட்டத்திற்கு
கோரிக்கை.
இன்று சங்க பொதுக்கூட்டம்.
கூட்டம் ஒன்பது மணிக்கு.
கூட்டம் முடிய,
இரவு பதினொரு மணியானாலும்
இப்ப பயப்பிடத் தேவையில்லை
இலங்கை இராணுவத்தை முகாமுக்குள்
முடக்கி வைச்சாச்சு.
இந்தியன் ஆமி தான்
இராப் பகலாய் ரோந்து.
இந்தியன் ஆமி
எங்கடை நண்பனாச்சே.
இந்தியன் ஆமி
எங்களைப் பாதுகாக்கத்தான்
இலங்கைக்கு வந்தது.
இயக்கங்கள் எல்லாம்
அப்பிடித்தான் சொல்லுதுகள்.
இலங்கை அரசாங்கமும்
அப்பிடித்தான் சொன்னது.
இப்பதான் எங்களுக்கு
நிம்மதி.
இன்னும் கொஞ்ச நேரத்தில்
கூட்டம் தொடங்கிவிடும்.
இண்டைக்கு
இரண்டத்தா ஒரு முடிவு
வரத்தான் போகுது.
கந்தசாமியாக்களின்ரை
கபட நாடகம் இண்டைக்கு
அம்பலமாகப் போகுது.
சங்க உறுப்பினர்கள் நம்பிக்கை.
‘கந்தசாமி அண்ணை எப்ப கூட்டம்?”
கந்தசாமியைத் தங்கன் கேட்டான்.
‘போன மாதம்
கூட்டம் வைச்சாச்சே.
உனக்கு தெரியும் தானே.
பிறகென்ன கூட்டம்?’
கிண்டலாய் கந்தசாமி.
‘என்ன எங்களை
பேக்காட்டிறியா?
போன மாதம் நீ வைச்ச கூட்டம்.
உற்பத்திக் குழுக்கூட்டம்.
நாங்கள் கேட்கிறது.
விவசாய சங்கப் பொதுக்கூட்டம்’
தங்கராசன்.
வரியத்துக்கு ஒரு முறைதான்
வருடாந்தப் பொதுக்கூட்டம்
வைக்கிறது வழக்கமாச்சே.
இப்பென்ன கூட்டம்’
கந்தசாமி.
‘விவசாய விளைபொருள்
விற்பனைச் சங்கத்தின்
வருடாந்தப் பொதுக்கூட்டம்
வைச்சு மூண்டு வரியமாச்சு ‘
தங்கராசன் குறுக்கீடு
தம்பி தங்கராசா
இப்ப போர்க்கால சூழ்நிலை.
கண்ட நிண்ட நேரமெல்லாம்.
கூட்டம் போடேலாது.
இது உனக்கு நல்லாய் தெரியும்.
அப்ப நீ ஏன் அந்தரப்படுகிறாய்?
அதுமாத்திரமில்லை.
கூட்டம் வைக்கிறதெண்டால்
பொடியளிட்டை
அனுமதி எடுக்கவேணும்.
அவையளுக்கு நேரமில்லை.
இப்ப போர்க்கால சூழ்நிலை
கூட்டம் போடுறதை
பிறகு பாப்பம்
கந்தசாமி சொல்லி
நழுவப் பார்க்கிறான்.
‘சங்க நடவடிக்கையள்
சம்பந்தமாய் கன பிரச்சினையள்
தீர்க்க வேண்டிக் கிடக்கு.
பொதுக்கூட்டத்திலை
தான் இந்தப் பிரச்சினையள்
பேசித் தீர்க்கவேணும்.
கூட்டத்தைக் கெதியாய்
கூட்டு கந்தசாமி.
கூட்டம் கூட்டிறதுக்கு
பொடியளிட்டை ஏன்
அனுமதி எடுக்கவேணும்?
இது எங்கடை சங்கப்
பிரச்சினைகள்.
பொதுக்கூட்டத்திலை தான்
சங்கப் பிரச்சினைகள்
எல்லாத்தையும்,
நாங்கள் தான் பேசித்
தீர்க்கவேணும்.
பொடியளிட்டை ஏன்
நாங்கள் போகவேணும்?’
தங்கராசன்
வெட்டிப் பேசுகிறான்.
‘நீங்கள் கொஞ்சப்பேர்
கேட்டால்
கூட்டம் வைக்க வேணுமோ? *
கந்தசாமி
‘கந்தசாமி அண்ணை,
இது எங்கடை சங்கம்.
பொதுமக்களின்ரை சங்கம்.
விவசாயம் செய்யிற
பொதுமக்களின்ரை சங்கம்.
சங்கம் பற்றிய எந்த முடிவும்
சங்க உறுப்பினரால்தான்
எடுக்க முடியும்.
எடுக்க வேண்டும்
உங்களைப்போல’
இரண்டொருவரல்ல
தங்கராசன் வலியுறுத்தல்
‘சங்க உறுப்பினர்களிலை
அரைவாசிப்பேருக்கு மேலை
கூட்டம் வைக்க வேணுமெண்டு
எழுத்திலை தந்தால்தான்
நாங்கள் கூட்டம் வைப்பம்.
நீங்கள் செய்யிறதை செய்யுங்கள்.
செருக்குடன் கூறுகிறான்.
கந்தசாமி.
‘அண்ணை கந்தசாமி
எங்கடை சங்கத்திலை
இருநூற்று அறுபத்தைஞ்சு பேர்
உடனடியாய் கூட்டம்
வைக்க வேணுமெண்டு
இந்த மகஜரில் கையொப்பம்
போட்டிருக்கினை.
இப்ப
போர்க்காலச் சூழ்நிலையில்
சிவில் நிர்வாகம்
தமிழ் பிரதேசங்களிலை
இல்லை எண்டு எங்களுக்கு
நல்லாய் தெரியும்.
அப்படியிருந்தும் நாங்கள்
எங்கடை நடவடிக்கைகளை
முறைப்படி செய்யிறம்.
அதனாலை தான் நாங்கள்
இந்த மகஜரிலை ஒரு பிரதி
கூட்டுறவு ஆணையாளருக்கு,
மற்றொரு பிரதி
அராசங்க அதிபருக்கு
அனுப்பி வைச்சிட்டம்.
இந்தா உனக்கு
மூலப்பிரதி.
இப்பென்ன சொல்லுறாய்
கந்தசாமி அண்ணை?
இப்ப வருடாந்தப் பொதுக்கூட்டம்
எங்களுக்குத் தேவையில்லை
அவசரப் பொதுக் கூட்டத்துக்கு
மூண்டு நாள் முன்னறிவித்தல் போதும்.
அவசரப் பொதுக் கூட்டத்தை
கெதியாய் கூட்டு கந்தசாமி’
தங்கராசன் வற்புறுத்தல்
கந்தசாமிக்கு
நாடி விழுந்து போச்சு.
அவசரப் பொதுக் கூட்டத்துக்கு
அறிவித்தல் குடுத்தாச்சு.
இன்று இரவு ஒன்பது மணிக்கு
பொதுக்கூட்டம்.
இரவு ஒன்பது மணியாச்சு.
சங்க உறுப்பினர்களும்
வந்தாச்சு.
இருநூற்று ஐம்பதுக்கு
மேற்பட்ட உறுப்பினர்கள்
பிரசன்னம்.
இனம் தெரியாத
இரண்டு விடலைகளும்
இரண்டு மோட்டார்
சைக்கிள்களும் பிரசன்னமாயிருக்கின்றனர்.
‘யாராயிருந்தாலென்ன
எங்கடை விசயத்திலை
தலையிடாமல் இருந்தால் போதும்
தங்கராசன் தனக்கு தானே
கூறிக் கொள்கிறான்
‘வந்தவை கூட்டத்தைப்
பார்த்திட்டு போகட்டும்
கூட்டம் ஒழுங்காய்
நடந்தால் போதும்” தங்கராசன் மனதிற்குள்
கூடியிருந்த மக்கள் மனங்களில்
பல்வேறு கேள்விகள். ‘விதை
உருளைக் கிழங்கு எத்தினை அந்தர்கள்
இரண்டு வரியமும்
எங்கடை சங்கத்துக்கு
வந்தது?
வந்த விதை கிழங்கு
சங்க அங்கத்தவர்களுக்கு
சரியாக பங்கீடு செய்யப்பட்டதா?
சங்க அங்கத்தவர்கள்`அல்லாத
வெளியாருக்கு
விதை கிழங்கு கொடுக்கப்பட்டதா?’
பல்வேறு கேள்விகள்
மக்கள் மனதில்.
மக்களின் இந்தக் கேள்விகளுக்கு
நிர்வாகத்தினரால் சரியான
பதில்கள் கொடுக்கப்படுமா?
மக்கள் மனங்களில்
இக்கேள்விகள் முட்டி மோதல்.
‘கேள்விகளை யார் கேட்பது?
கேள்வி கேட்பவனுக்கு சரியான
மனத்துணிவு வேணும்
யார் கேட்கப் போகின்றான்
பொறுத்திருந்து பாப்பம்’ மக்கள்
மனதில் ஆவல். கூட்டம் தொடங்குகின்றது.
தலைவர் ஒரு சில வார்த்தைகள் கூறிமுடிக்கின்றார்.
செயலாளர் கந்தசாமி
அமைதியாய் இருக்கின்றார்.
இரண்டு விடலைகளும்
எல்லாவற்றையும்
அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.
தலைவருக்கும் செயலாளருக்கும்
நிம்மதி.
செயலாளர் அறிக்கை சமர்ப்பிப்பு.
செயலாளரின் அறிக்கையிலும்
பல்வேறு விடயங்கள்
கூறப்படவில்லை.
முக்கிய விடயங்கள்
மூடி மறைப்பு.
பொருளாளர் அறிக்கையிலும
ஒரே குழறுபடி
சங்க உறுப்பினர்களுக்கு
பெரும் அதிருப்தி கூட்டத்தை முடிக்க தலைவர் முயற்சிப்பு.
‘செயலாளரின் அறிக்கையில் முக்கிய விடயங்கள் பல
சொல்லப்படவில்லை
சொல்லப்பட வேண்டிய பல விடயங்கள்
தற்செயலாய் தவறிவிட்டனவா?
அல்லது வேண்டுமென்றே
மூடி மறைக்கப்பட்டுள்ளனவா? தங்கராசனின்
கேள்விக்கணைகள்
செயலாளரை நோக்கி
‘எத்தனை தடவைகள்
விதை கிழங்கு
எங்கடை சங்கத்துக்கு
வந்தது?‘
தங்கராசன்
மூண்டோ நாலு தடவைகள்*
சரியாய் சொல்லு கந்தசாமி’ கந்தசாமி மெளனம்
‘கந்தசாமி அண்ணை
இதென்ன சில்லறைக் கடை வியாபாரமா?
இது சங்க விவகாரம்.
இதெல்லாம் சங்கப் பதிவேட்டிலை
பதிஞ்சு வைக்கவேணும் விதை கிழங்கு
எத்தினை தடவைகள்
வந்தன?
யார்யாருக்கு பங்கீடு
செய்யப்பட்டது? என்ற விபரங்கள்
எங்கடை சங்க பதிவேட்டிலை
பதிஞ்சிருக்கவேணும் ஏன் பதியேலை?
‘ தங்கராசா தொடர்ந்து கேள்விக்கணைகளை
தொடுக்கின்றான்.
‘முதல் இரண்டு தடவைகளும்
வந்த விதை கிழங்கு
ஆராருக்கு குடுக்கப்பட்டது?
விபரத்தைச் சொல்லு
செயலாளர் கந்தசாமி
அவர்களே?‘
பதிலில்லை
‘அந்தக் கிழங்குக்கு
என்னாச்சு?
அதுக்கான விபரங்கள்
எங்கடை சங்கப் பதிவேட்டிலை
எந்த இடத்திலும் இல்லை. இதுக்கான
விளக்கத்தை சங்கச் செயலாளரும்,
தலைவரும்
இந்தச் சபைக்கு
சொல்லித்தானாக வேண்டும்.
தலைவரும், செயலாளரும்
மௌனம்.
கடைசியாய் இரண்டு தடவைகள்
வந்த விதை கிழங்கு,
எத்தினை நாட்களின் பின்
எங்கடை விவசாயிகளுக்கு
பங்கீடு செய்யப்பட்டது? விதை கிழங்கு வந்து
ஒரு மாதத்துக்கு பின்தான் எங்கடை
விவசாயிகளுக்கு பங்கீடு
செய்யப்பட்டது ஏன் இந்தத் தாமதம்?
விதை கிழங்கு வந்து
இரண்டு மூன்று நாட்களில்
எங்கடை சங்க உறுப்பினர்களுக்கு
ஏன்பங்கிடப்படேல்லை போகம் தப்பி கிழங்கு நட்டால்
என்னவாகும்?
இது திட்டமிடப்பட்ட
சதிச்செயல்.
பண்ணைகளுக்கு எப்பிடி
விதை கிழங்கு கிடைச்சது?
பண்ணைகளில் விளைஞ்ச கிழங்கு
சந்தைக்கு வந்து
விற்பனையாகும் வரை
எங்கடை கிழங்கு சந்தைக்கு வரக்குடாது.
ஒரு மாதம் பிந்தித்தான்
எங்கடை கிழங்கு
விளைந்து
சந்தைக்கு வந்தது.
இந்த ஒரு மாத இடைவெளியில்
பண்ணைகளில் விளைந்த கிழங்கு உச்சவிலை
பண்ணைச் சொந்தக்காறருக்கு
அதிகலாபம்.
அதுமாத்திரமல்ல
கடைசி இரண்டு தடவைகளும் ஒரு மாதம்
பிந்தித்தான் எங்களுக்கு பங்கிடப்பட்டது.
ஏன் இந்தத் தாமதம்? ஒரு மாதம் விதை
கிழங்கு இருப்பில் இருந்ததால்
விதை கிழங்கு சூடேறி
அழுகல் நோய் பிடித்துவிட்டது.
இதை மூடிமறைக்கத்தான் இரவிரவாய் எங்களுக்கு
விதை கிழங்கு பங்கிடப்பட்டது. எங்கள்
தோட்டங்களில் விதை கிழங்கு நாட்டிய கையோடை
அடைமழையும் வந்து
தொடர்ந்து பெய்தது.
போகம் தப்பி மழை காலத்தில்
எங்கள் தோட்டத்தில்
நாட்டிய விதை கிழங்கெல்லாம்
அழுகி நாசமாகிவிட்டது. இதனால் இரண்டு
வரியமாய்
பாரிய நட்டம்
இதற்கு யார் பொறுப்பு? இதற்கு
சரியான விளக்கத்தை தலைவரும் செயலாளரும்
இந்த சபைக்கு தந்துதானாகவேண்டும்.
‘தங்கராசா,
உனக்கு விளக்கம் வேண்டுமா?
கூட்டம் முடிஞ்ச பிறகு
நாங்கள்
சரியான விளக்கம் தாறம், இப்ப நீ பேசாமலிரு
கூட்டத்தைக் குழப்பாதை ‘ வந்திருந்த
இனந்தெரியாத விடலைகளில் ஒன்று
விறைப்பாய் கூறியது. சபையில் சலசலப்பு.
தருணம் பார்த்திருந்த தலைவர்
கூட்டத்தை
முடித்து வைத்தார்.
தங்கராசா
வா இஞ்சை’
விடலைகளில் ஒன்று கூப்பிடுகின்றது
நீ வா இஞ்சை ‘
தங்கராசன் செல்கின்றான்.
‘ஏறு இந்த மோட்டார் சைக்கிள்ளை ‘
‘ஏன் நான் உன்ரை
மோட்டார்சைக்கிள்ள ஏறவேணும்’
‘உனக்கு விளக்கம் தானே
வேணும் ஏறு சைக்கிளை ‘
‘முடியாது இப்ப இஞ்சை விளக்கத்தைச் சொல்லன்’
‘ஏறடா”
தங்கராசனை
விடலைகளிலை ஒன்று
பலாத்காரமாய் தன்ரை
மோட்டார்சைக்கிளில்
ஏற்றுகின்றான்.
விடலைகள் இரண்டும்
தங்கராசனை கூட்டிச் செல்கின்றனர்.
‘ஒரு மாதமாகப் போகிறது என்ரை
தங்கன் வரேல்லை‘ அவனைப் பற்றி
ஒரு தகவலும் தெரியேல்லையே
தங்கராசனின் மனைவி
தங்கமலர்
தன் கணவனைத் தேடி இயக்கங்களின்
ஒவ்வொரு முகாமாய் ஏறி இறங்குகின்றாள்.
இராப் பகலாய் அவள் கணவனைத்
தேடி அலைகின்றாள்.
‘தங்கராசன் என்றொரு ஆள்
எங்கடை முகாமில்
இல்லை.
அப்பிடி ஒரு ஆள்
இஞ்சை வரேல்லை.
அப்பிடி ஒரு ஆளைப்பற்றி
எங்களுக்கு
ஒண்டும் தெரியாது
தங்கமலர் சென்ற
ஒவ்வொரு முகாமிலும்
இதே பதில்தான்.
மாத முடிவில்
தங்கமலருக்கு
வெள்ளைச் சேலை
ஒன்று வந்தது!
தங்கமலர் அழுது குழறவில்லை.
பொங்கி எழுகின்றாள்
தங்கமலர்.
வெள்ளைச் சேலையை
தீயிட்டு எரிக்கின்றாள்.
குமுறிக் கொந்தளிக்கும் தங்கம்
கண்ணகியாய்
புயலாய் பாய்கின்றாள்
நீதி கேட்டு.
நீதி கிடைத்தது
தங்கத்துக்கு
‘தமிழினத்துரோகி’
என்ற அட்டை
கழுத்தில் தொங்க, நெற்றியில்
‘பொட்டு வைக்கப்பட்டு.
விளக்குக் கம்பத்தில்
தொங்குகின்றாள் தங்கமலர்.
– காலவெள்ளம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: செப்டம்பர் 2010, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |