மூடுதிரை
கதையாசிரியர்: புலோலியூர் செ.கந்தசாமி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: July 2, 2025
பார்வையிட்டோர்: 520
(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“டேய் சண்முகம்! எழும்படா கழுதை. விடிய விடியத் துரைக்கு இன்னும் தூக்கம் தீரயில்லை…. ஆங்…..”.
பாதி ஏளனமும், பாதி அதிகாரமும் கலந்து தெறித்த கணக்கப் பிள்ளை கனகலிங்கத்தின் அதட்டல் சண்முகத்தின் செவிப்பறையில் நாராசமாக முட்டி மோதி அவனை விழிக்க வைக்கிறது.
“ம்: ஊஹூம்….” என முனகியபடியே போர்வையை மேலும் சற்று இறுக்கமாக இழுத்துப் போர்த்தவன் பாதி நைந்து போன அந்த மாச்சாக்கில் புரண்டு படுத்து: கணக்கப்பிள்ளையை அவன் உதாசீனம் செய்தான்.
கனகலிங்கத்தின் நெஞ்சில் ஆத்திரம் மண்டியது “விடிந்து இவ்வளவு நேரமாகியும் எழுந்து வரவும் காணோம்: எழுப்பினால் கூட உசும்பிகிறான் இல்லையே!”
என மனதிற்குள் புழுங்கியவர் “பாரன் அவற்றை திமிரை ! இது என்ன கொப்பன் வீடு என்று நினைப்போ. நேரத்திற்கு எழும்பி தன் காரியங்களைத் தான் கவனிக்காமல் …… இனித் திருப்பள்ளியெழுச்சி பாட நான் வர வேணுமோ? வரட்டும் முதலாளிகிட்டே சொல்லி….”
கனகலிங்கத்தின் கீழுதடு பற்களுக்குள் சிறைப்பட்டு அவதிப்பட்டது.
“என்ன சொல்லப் போறியள்?”
படுத்திருந்த நிலையில் தலையைப் பக்கவாட்டில் நிமிர்த்தி கண்களைக் கூசி வினவினான் சண்முகம். அந்த நோக்கில் எத்தனை ஏளனம்! அவன் குரலில் தான் எவ்வளவு நையாண்டி!
“நீர் மறுகதை பேச வெளிக்கிட்டு விட்டீர் என்ன? முதலாளி வரட்டும், உனக்கு காட்டி வைக்கிறன். ஓ..”
“ஓ முதலாளி வரட்டும் பார்ப்போம் “ இது சண்முகம்.
இதர சிப்பந்திகளின் முன்னிலையில் சண்முகம் தன்னை அவமதித்த ஆத்திரத்தில் நிலை கொள்ளாமல் கறுவிக்கொண்டே விறுவிறுப்பாகக் கடையின் முன்பக்கம் சென்ற கனகலிங்கம் பணம் வைக்கும் இரும்புப் பெட்டிக்கு நேர் மேலே சுவரில் மாட்டப்பட்டிருக்கும் சட்டம் போட்ட பெரிய வினாயகர் படத்திற்கு பூ வைத்து, ஊதுபத்தி கொளுத்தி, கற்பூரம் ஆராதனை காட்டி, பின் நெற்றியில் விபூதி அணிந்து, பொட்டிட்டுக் கல்லாப்பெட்டியின் அருகில் சாவகாசமாக அமருகிறார்.
பதினைந்து வருடங்களுக்கு முன், பதினைந்து வயதுச் சிறுவனாக வாரிவிடப்படாத தலையும், குழி விழுந்த விழிகளும், முட்டி வயிறும், வற்றிய உடம்புமாக அந்தக் கடைக்கு எடுபிடி வேலைக்காரனாக வந்து சேர்ந்த கனகுப் பொடியனைக் கண்டு இந்தப் பூனையும் பால் குடிக்குமோ?” என எவரும் நாக்கை வளைத்தனர். அப்படி வெகுளி என்ற அடைமொழியைச் சுமந்து கொண்டு உலகம் தெரியாப் பயிராக அந்தக் கடையில் நுழைந்தவன். இப்போது கணக்கப்பிள்ளை என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்திருக்கிறான் என்றால் வியாபாரத்தின் நெளி சுளிவுகளைக் கற்றறியும் சாமர்த்தியமும் கடின உழைப்பும் விடாமுயற்சி தான் காரணம்.
முதலாளியின் மனமறிந்து அதற்கேற்றவாறு பிற்பாட்டுப் பாடக் கற்றுக் கொண்ட கனகலிங்கத்தை கணக்கப்பிள்ளையாக்கி கல்லாப்பெட்டியில் அவர் அமர்த்தியதில் ஆச்சரியமில்லைத்தான்.
கனகலிங்கத்திற்கோ புதிய பதவி தலைக்கனத்தை ஏற்றிவிட்டது. விற்பனையாளரிடம் கண்டிப்பும் கறாரும் காட்ட ஆரம்பித்தான். முதலாளி அவரிடம் கடை நிர்வாகத்தை ஒப்படைத்துவிட்டு ஊருக்குச் செல்லும் போதெல்லாம் கனகலிங்கத்தின் அதிகாரம் ஆட்சி செலுத்தும். கணக்கப்பிள்ளை தன் இஷ்டப்படி சிப்பந்திகளை ஆட்டி வைக்க முற்பட்டான்.
அவனுடைய கெடுபிடி தாங்காது, அந்தக் கடையில் வேலைக்கு நிற்கத் தமக்குச் சரிப்பட்டு வராதென வேலையை உதறிவிட்டுச் செல்பவர்கள் பலர்.
கடையின் முன்கதவுகளை மாலை ஐந்து மணிக்கே அடைத்துச் சட்டத்திற்கே மூடுதிரையிட்டாலும் உள்ளே வேலைகள் இயந்திரகதியில் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அன்றன்று லொறியில் வந்து இறக்குமதியான பொருட்களை ரகம் பிரித்து அடுக்கிவைப்பது, கணக்கெடுப்பது, விலை குறிப்பது. புகையிலைச் சுருட்டுகளுக்குக் கோடாத் தோய்ப்பது. வெற்றிலைக்குத் தண்ணீர் தெளித்து அடுக்குவது போன்ற இத்தியாதி வேலைகளில் மத்தியில் சிப்பந்திகள் பம்பரமாய்ச் சூழல்கையில், கேவலம் மாசம் முடிவில் அவர்கள் வரவில் எழுதப்படப் போகும் ஐம்பதோ அறுபதோ ரூபாகாசுக்காகத்தான் இந்த ஆட்டமெல்லாம் என்னும் வேதனை பார்ப்போர் நெஞ்சில் வண்டல் மண்ணாய்ப் படியும்.
சண்முகம் ஆறு மாதங்களின் முன் இந்தக் கடைக்கு வேலைக்காகப் புறப்பட்டு வந்தபோது, ” அடே சண்முகம் ! போயும் போயும் உந்தக் கடையிலேயா வேலைக்குப் போகிறாய். முதலாளி ஆள் படு கறார் பேர்வழி : காசு கறக்க மாட்டாய் இலேசிலே” எனத் தெரிந்தவர்கள் இடித்துரைத்த போதெல்லாம்.
“விடுங்கோடா வெட்டிப் பேச்சை: நாங்கள் சரியாக நடந்தால் எல்லாம் தானே சரிவரும் “ என மறுத்துரைத்துவிட்டு வந்து வேலையற்றவனுக்கு இங்கே என்னவென்றால்…..? சத்தியம் ஒழுங்கு கண்ணியம் இவையெல்லாம் வர்த்தகத்தைப் பொறுத்தளவில் வெறும் பேச்சாகிப் போய்விட்டதைக் கண்டு வெறுப்படைந்தான்.
முதல் நாளிரவு லொறியில் வந்த மா மூட்டைகளைச் சுமந்ததால் உடம்பு முழுவதும் மூட்டு மூட்டாய் வலிக்க எழுந்திருக்கவும் தெம்பில்லாதவனாய்ப் படுத்திருந்த சண்முகத்தை கணக்கப்பிள்ளை கனகலிங்கம் தன் கால் பெருவிரலால் சுறண்டி எழுப்பிய ஆத்திரத்தில் ஏதோ இரண்டு வார்த்தைகள் கணக்கப் பிள்ளைக்குச் சூடாக கொடுத்துவிட்டான். “ ஏதோ முறுக்கிக் கொண்டு போகிறாரே ! போகட்டும் … போகட்டும்…” என முணுமுணுத்தபடி நீட்டி நிமிர்ந்து படுத்தான் சண்முகம்.
எதிர்சுவரில் ஆணியில் தொங்கிய சட்டையின் பைக்குள் இருந்து தலையை நீட்டி அவன் கவனத்தை ஈர்த்து கடந்த தினம் அவனுக்குத் தாயிடமிருந்து வந்த கடிதம், பெற்றவளின் நினைவு நெஞ்சில் படர உடல் வலியிலும் பார்க்க உள்ளத்து வலி மீறி வர கண்கள் பனித்தன.
அடிக்கடி மீண்டும் படிக்க வேண்டும் என்ற துடிப்பு உழுந்து கடிதத்தை எடுத்தவன் மீண்டும் படுக்கையில் சாய்ந்தபடியே வாசிக்கலானான். பக்கத்து வீட்டுப் பரமேஸ்வரிப் பெட்டையின் முத்து முத்தான கையெழுத்தில் அன்னையின் பிரலாபங்கள்.
“…பட்சம் மறவாத அருமைமகன் சண்முகத்திற்கு ! ஆண்டவன் கிருபையால் இவ்விடம் ஏதோ இருக்கிறோம். இரண்டு வருடக் குத்தகைக் காசு கொடுபடவில்லை என்ற காரணத்தால் தோட்டத் தரையெல்லாம் கல்வீட்டு மாணிக்கர் வேறு யாருக்கோ பயிர்ச் செய்கைக்குக் கொடுத்துவிட்டாராம். கொப்பருக்கும் இந்தவாட்டி தொழில் இல்லை. எனக்கும் கால்வாதம் குத்திக் கரச்சலாய் இருக்கு. செலவுப் பாடு மிகவும் திண்டாட்டமாய் இருக்கடி அப்பு. ஏதோ உன்னாலை இயன்றதை அனுப்பு.
“பெற்றவன் உடல்நலமின்றி இருக்கிறாள். செலவிற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறாளோ. ஐயோ! நேரில் போய் பார்க்காவிட்டாலும் சிறிதளவு பணம் அனுப்பினாலும் அவர்களுக்கு ஆறுதலாக இருக்குமே !” என்ற நினைப்பே நெஞ்சில் கனக்கின்றது.
எப்பொழுதாவது பணம் என்று கேட்கப் போனால் முதலாளி ருத்திர மூர்த்தியாகி விடுவார். “அடேய் சண்முகம் ! உன்ர காசை நான் கொண்டு ஓடவில்லை ! உனக்கு மாசா மாசம் காசைத் தந்தால் வாலிப முறுக்கிலை காசை விரயமாக்கி விடுவாய். கடைசியிலை அது உனக்கு ஒரு முதலாகச் சேரட்டும். நீ வியாபாரத்தைப் பழகி ஒரு முதலும் சேர்த்துவிட்டால் பின்பு உனக்குத்தானே நல்லது….” என்று நயமாகவும் தந்திரமாகவும் கண்டிப்பாகவும் பேசி அவனைத் திருப்பி அனுப்பிவிடுவார்.
சிப்பந்திகளுக்குச் சம்பளத்தை மாதாமாதம் கொடுத்து கணக்குத் தீர்த்து விட்டால். இடையில் சொல்லாமல் கொள்ளாமல் அவர்கள் கம்பி நீட்டி விடுவார்களே என்ற பயமும், சம்பளப் பணம் கொடுபடாமல் கடையில் இருந்தால், ஒரு முதலாகச் சேர்ந்து கடைக்கு இலாபம் பெருகிக் கொண்டிருக்குமே என்ற எண்ணமும்தான் முதலாளிக்கு!
“சரி சரி பொறுத்துப் பார்க்கலாம். முதலாளியுடன் சச்சரவுப்பட்டுக் கொண்டு போய் வீட்டில்தான் என்ன செய்வது பார்க்கலாம்” என்று ஒரு நெட்டுயிர்ப்பிலே கவலைகளை ஊதித் தள்ளிவிட்டு மீண்டும் காரியங்களைக் கவனிக்கச் சென்றுவிடுவான்.
கடிதத்தை மடித்து மீண்டும் சட்டைப் பைக்குள் திணித்த சண்முகம். சாரத்தையும், பனியனையும் எடுத்துச் சுருட்டிக் கொண்டு குளத்தடிக்குச் சென்றான். படிக்கட்டில் உடைகளை வைத்துவிட்டுப் பல் துலக்கிய வண்ணம் புடவை தோய்க்கும் கல்லின்மேல் அமர்ந்து விட்டான். எண்ணக் குமிழிகள் வெடித்துச் சிதறின.
இனி மாதாந்தம் முதலாளியிடம் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்..
எப்படியும் இல்லை இல்லை என்று போனாலும் ஒரு முன்னூறு ரூபா காசு என் கணக்கில் தேறும். இந்த ஆறுமாதங்களுக்குரிய சம்பளப் பணத்தில். ஒருமுறை ஊருக்குப் போகும்போது ஐம்பது ரூபா வேண்டியிருக்கிறேன். ஒருமுறை பாரம் தூக்கிச் சுழுக்கி நோவுக்கு மருந்து கட்ட ஒரு பதினைந்து ரூபா வேண்டியிருக்கிறேன்.. மீதி ஒரு இருநூறாவது இருக்கும். முதலாளி வரட்டும் முழுப் பணத்தையும் வேண்டி ஊரில்பட்ட கடன் எல்லாம் தீர்த்து விட வேணும். அம்மாவிற்கு ஒரு சேலை. அப்புவுக்கு வேட்டி… அம்மாவின்ர காது கூட மூளியாக இருக்கு. ஒரு சோடி தோடு வாங்க வேணும். இன்னும் … இன்னும்… அவள் பரமேஸ்வரிக்கு ஒரு முத்துமாலை…
பரமேஸ்வரி ! அந்தக் கள்ளி ! அவள் அன்று தனியாக இருந்தபோது என்னைக் கல்யாணம் கட்ட சம்மதமா என்று கேட்டதற்கு என்ன சொன்னாள்.
அத்தான் நான் தையல் வேலை செய்து வீட்டில் இன்னும் ஆடோ, மாடோ. கோழியோ வளர்த்து சீவியத்தைக் கொண்டிழுக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கு. இருந்தாலும் நீங்கள் ஒரு கெளரவமான தொழிலில் ஈடுபடுங்கள். கழுத்தை நீட்டுகிறேன் என்று நயம்பட அவள் சொன்ன வார்த்தைகள்.
இம்முறை ஊருக்குப் போய் “இப்போ என்ன சொல்கிறாய்?“ என்று அவளைக் கேட்பேன்.
அவள் வாய்ப் பேச்சிற்கு இடமின்றி நாணத்தால் தலைகுனிந்து நிற்பாள். இல்லை வெட்கத்தில் ஓடுவாள்… நான் பின்னே ஓடி அவளைப் பிடித்து…
திடீரென உடல் இலேசாகி இரு இறக்கைகள் முளைத்து ஆகாயத்தில் பறப்பதுபோலவும் வெண்முகிற் கூட்டங்களுக்கிடையே சர்வாலங்கார பூஜிதையாகி பரமேஸ்வரி தன்னை எதிர் கொண்டழைப்பது போலவும் ஏதோ ஒரு சுகானுபவ லயிப்பில் ஆழ்ந்து போய் கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த வேளை…
“என்னடா சண்முகம்! யோசனை பலமாயிருக்கு?” என்ற சச சிப்பந்தியான துரையின் குரல் அவனை யதார்த்த உலகிற்கு அழைத்து வந்தது.
குளிக்கவும் மறந்து யோசனையில் ஆழ்ந்துவிட்டதை அப்பொழுதுதான் உணர்ந்த சண்முகம் இல்லை துரை ! என்னுடைய நிலைமையை நினைக்கத்தான்.”
“அட…. கவலையை விட்டுடா! துன்பம் என்றால் உனக்கு மட்டும்தான் என்று எண்ணுகிறாயா?”
என் மனமறிய நான் ஒருவருக்கும் தீங்கிழைத்தது கிடையாதே! எனக்கு ஏன் இந்தச் சோதனை … எப்படியும் எனக்கு ஒரு எதிரி முளைத்துவிடுகிறானே…, இப்பொழுது கணக்கப்பிள்ளை ரூபத்தில்….
“எப்படியடா காரியத்தைக் கவனிப்பது? என் மனச்சாட்சிக்கு விரோதமாக என்னால் செயல்பட முடியவில்லையே துரை !”.
துரை பல சமாதானங்கள் சொன்னான். ஏனோ துரையின் சமாதானங்களை சண்முகத்தால் ஏற்க முடியவில்லை. “சரி அப்பா ! இது தீராத தலைவலி. நம் இருவருக்குள்ளும் தீர்ந்துபோகும் பிரச்சனை அல்ல. இதற்கு ஒரு விடிவை நாம். நாமாகவே ஏற்படுத்த வேண்டும்” பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுக் குளத்தில் இறங்கி நீரில் அமுங்கினான்.
இப்பொழுடிதல்லாம் கனகலிங்கம் சண்முகத்துடன் பேசும்போது அளந்துதான் பேசுவார். அவனிடம் கதை கொடுத்து வீணாக மூக்குடைபட வேண்டி வருமேயெனப் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். “முதலாளி வரட்டும்” என அவரின் உள்மனம் கறுவிக் கொண்டிருந்தது.
திடீரென ஒருநாள் இரவு, யாவரும் வேலையை முடித்துக் கொண்டு தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் வேளை யாரோ கதவில் தட்டும் ஓசை கேட்டது. முதலாளிதான் வந்துவிட்டார். இப்பொழுதெல்லாம் முதலாளி சொல்லாமல் கொள்ளாமல் அகால வேளைகளில் வந்திறங்குவது சகஜமாகிவிட்டது. அதற்குக் காரணம் அவர் கள்ளக் கடத்தலில் ஈடுபட்டிருப்பதுதான் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
முதலாளி வந்துவிட்டார். ஒரு பிரளயமே நடக்கப் போகிறது. கனகலிங்கத்தின் குற்றப் பத்திரிகை வாசிப்பில் ஒரு பூகம்பமே ஏற்படும். அதன் பிரதிபலிப்பாகத் தன் சீட்டும் கிழிபட்டுவிடும் என ஏங்கிக் கொண்டிருந்த சண்முகத்திற்கு கனகலிங்கத்தின் நீண்ட மௌனம் வியப்பையூட்டியது. கதை வெளிப்பட்டால் எங்கே தன் திருகு தாளங்களும் அம்பலமாகிவிடுமோ என்ற பயம்தான் அந்த மௌனத்திற்குக் காரணமோ!
கனகலிங்கம் முதலாளி முன்னிலையில் சண்முகத்துடன் இன் முகத்தில் உரையாடுவதும். முதலாளியிடம் குழைவதும் சண்முகத்தின் மனதில் இனமறியாத குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் விளைவித்தது. ஏன் இந்த அமைதி?
அன்று முதலாளி பகல் ஆகாரத்தை முடித்துக் கொண்டு சாவகாசமாகச் சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருக்கும் வேளை சண்முகம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான்.
“முதலாளி ! நான் ஊருக்குப் போய் வர வேணும்”
“ம்… போயிற்று ஆறு நாட்களிலை திரும்பி வந்திடவேணும் விளங்கிச்சிதோ?”
“ஓம் முதலாளி”
“நீ வரத் தவறினால் வேறே ஆளை உன்னுடைய இடத்திற்குப் போட்டிடுவன்”.
“இல்லை முதலாளி கட்டாயம் வந்திடுவன்…”
“ம்…ம்…. பிறகென்ன நிண்டு முழிகிறாய்?”
“முதலாளி எனக்கு வரவேண்டிய காசு…”
“காசோ? எவ்வளவு வேணும்!”
“இருநூறு ரூபா தேவை”
“இருநூறோ? என்ன கணக்கிலை! என்ன பகிடி பண்ணுகிறீரோ?”
“ஏன் முதலாளி? ஆறு மாசம் எழுபத்து ஐந்து ரூபாய்க் கணக்கின்படி பார்த்தாலும்..”
“என்ன கணக்கிலை எழுபத்தைந்து ரூபா? ஐம்பதுதான் போட்டிருக்கு..நீ உடுப்புகள் எடுத்திருக்கிறாய்….”
சண்முகத்திற்கு நா எழ வில்லை. கடையில் வேலைக்கு வரும்படி தன்னை ஆசைகாட்டி அழைத்தபோது முதலாளி பேசிய தேன் சிந்தும் வார்த்தைகளும் இப்பொழுது அவர் பேசும் தோரணையும் நினைத்தால் இனாமாக ‘வேட்டி, ஷேர்ட்’ எல்லாம் முதலாளி எடுத்துக் கொடுத்ததாக மகிழ்ந்திருந்த அவனுக்கு அதன் விலையைக் கூடச் சம்பளத்தில் கழிக்கப் போவதாக முதலாளி சொன்னதும் விரக்தியில் அவன் குன்றிப் போய்விட்டான்.
என்ன இழவோ தருவதைத் தரட்டும் என அவன் யோசித்துக்கொண்டே தனது உடுப்புப் பெட்டியை எடுத்துத் துணிகளை அடுக்குவதில் முனைந்தான்.
“சண்முகம் ! நீ இப்போ போய் “கே.வீ.எஸ் ” கடையிலை உழுந்து வந்திருக்கா என்று பார்த்துக் கொண்டு. கந்தோருக்குப் போய் இந்தக் கடிதத்தையும் தபாலில் சேர்த்துவிடு” என்று ஒரு கடிதத்தை நீட்டினார் அங்கு வந்த கணக்கப்பிள்ளை கனகலிங்கம்.
“எங்கே கொஞ்சம் தாமதித்தால் கூட என்ன வில்லங்கங்கள் விளையுமோ?” என்று பயந்த சண்முகம் அடுக்கிக் கொண்டிருந்த உடுப்புக்களை அப்படியே விட்டது விட்டபடி கடிதத்தையும் பெற்றுக் கொண்டு புறப்பட்டான்.
சண்முகம் எல்லா விபரங்களையும் முடித்துக்கொண்டு வர இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகி விட்டது. கடைக்குள் பிரவேசித்த சண்முகத்திற்கு அங்கு நிலவிய சூழ்நிலை அச்சத்தை ஊட்டியது. அவனைக் கண்டதும் “இங்கே வாடா திருட்டு றாஸ்கல் ! என்று முதலாளி போட்ட கர்ஜனையில் அதிர்ந்து போய் முதலாளியின் முன் சர்வாங்கமும் பதற நின்று விழித்தான். அவரின் கண்கள் கொவ்வைப்பழமாய்ச் சிவந்திருந்தன. உதடுகள் மேவிச் சடைத்துத் தொங்கும் மீசை துடிக்க முகத்தில் அத்தனை விகாரம் ஏன்? கரங்களைப் பின்னால் கட்டிய படி முன்னும் பின்னும் உலாவிக் கொண்டிருந்த முதலாளியைக் கண்டதும் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது என்பதை ஊகிக்க சண்முகத்திற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
“டேய் கழுதை! உண்மையைச் சொல்லிப் போடு!” முதலாளியின் கர்ஜனை கடையின் “சீலிங்” முகட்டையும் முட்டி மோதி எதிரொலித்தது.
“என்ன சொல்லுறியள் முதலாளி?” என்றான் சண்முகம் நெற்றியைச் சுருக்கியபடி.
“ஒண்டும் தெரியாத மாதிரி மாயம் கொத்தாதை. நீ தானே எடுத்தனி?”
“எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன நடந்தது முதலாளி?” என்றவன் பார்வையை சுற்று முற்றும் மேய விட்டான்.
சக சிப்பந்திகளின் பீதி கலந்த முகங்கள் அவனுக்கு இன்னும் குழப்பத்தை கொடுத்தனவே தவிர ஒன்றும் விளங்குவதாயில்லை. கணக்கப்பிள்ளை கனகலிங்கம் ஏதோ “சிட்டைகளைப்” புரட்டியபடி முதலாளியின் பக்கத்தில் பவ்யமாக நின்றார்.
திடீரென சண்முகத்தின் உடுப்புப் பெட்டியைத் தன் பக்கம் இழுத்த முதலாளி அதற்குள் அடுக்கப்பட்டிருந்த உடுப்புக்களை வாரி வீசி எறிந்தார். பெட்டியின் அடியில் ஒரு வேட்டி மடிப்பிற்குள்…..
காசுக்கற்றைகள் !
ஐயோ! இது யார் செய்த வேலை? கணக்கப்பிள்ளை கனகலிங்கம் கண்ணில் ஏளனம் தெறிக்க… கொடுப்புக்குள் சிரித்தபடி பெருமிதம் பொங்கப் பார்த்தான்.
“நான் அப்பொழுதே நினைத்தேன். இவன்தான் பணத்தை எடுத்திருப்பான் எண்டு” என்றார் கணக்கப்பிள்ளை.
“ஐயோ! நான் பணத்தை எடுத்தேனா?”
“நீ கையும் களவுமாக அகப்பட்டுவிட்டாய். காசு இரண்டாயிரம் காணவில்லை. இதிலே அறுநூறு இருக்கு. மீதியை என்ன செய்தாய் உண்மையைச் சொல்லும்?”
“ஐயோ! முதலாளி நான் ஒன்றும் அறியேன். இது யார் செய்த சதியோ… கடவுளே!” சண்முகம் கதறினான். தலைமயிரைப் பிய்த்தான்: மன்றாடினான். அவனுடைய கதறல் யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை.
“பொலிசைக் கூப்பிடப் போகிறேன் உண்மையைச் சொல்லு” என்ற முதலாளி “போன்” அருகில் போய் நின்றார்.
கணக்கப்பிள்ளை இடைமறித்தார். சண்முகம் பக்கம் திரும்பி, “தம்பி ! உண்மையைச் சொல்லு! சொன்னால் இவ்வளவோடு முடிந்து போகும் அல்லது பொலிசு வழக்கு என்று … ” ஏதோ சமரசம் பேசுபவர் போல கணக்கப்பிள்ளை சண்முகத்திடம் தயவாகச் சொல்லப் போக சண்முகம் அவரை வெறித்துப் பார்த்தானே ஒரு பார்வை. கணக்கப்பிள்ளை பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டார்.
சண்முகம் புதிய துணிவோடு நின்றான்.
“தம்பி! இந்த நாயின் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளு” எனக் கர்ஜித்தார் முதலாளி.
சண்முகம் அலட்சியமாய்ச் சிரித்தான்.
“அந்தச் சிரமம் உங்களுக்கு வேண்டாம்” என்று விறைப்பாகச் சொன்னவன் துணிகளைப் பொறுக்கியெடுத்துப் பெட்டிக்குள் திணித்துக்கொண்டு சக சிப்பந்திகளுக்கு மௌன மொழியில் விடை பகர்ந்தவன். பெட்டியை எடுத்துக் கொண்டு வெளி வாசலைத் தாண்டிப் பாதையில் இறங்கினான்.
ஏதோ எண்ணியவனாக நின்று திரும்பியவன் காலையும், மாலையும் தொழும் அந்த வினாயகரை நோக்கினான். கண்கள் பனித்தன. மறுகணம் விறு விறுவெனப் பாதையில் இறங்கி நடந்தான்.
அப்போது விநாயகர் படத்தின் பின்னால் மறைத்து வைத்திருந்த ஆயிரத்து நானூறு ரூபாவையும் அப்புறப்படுத்தும் வழியைத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார் கணக்குப்பிள்ளை கனகலிங்கம்.
– கற்பகம், 1971.
– என்னுயிர் நீ தானே! (சிறுகதைத் தொகுதி), முதலாம் பதிப்பு: மார்கழி 2018, கவிதா நிலையம், தும்பளை.