முப்லி
கதையாசிரியர்: பே.செல்வ கணேஷ்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள் புனைவு
கதைப்பதிவு: November 6, 2025
பார்வையிட்டோர்: 68

(அறியப்படாத விலங்கின் கதை)
முன்னோர் காலத்தில் காட்டில் முப்லி என்கிற விலங்கு கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது அதனுடைய தோற்றம் பார்ப்பதற்கு முயலுக்கும் எலிக்கும் நடுவில் உள்ள ஒரு புதுவித விலங்குப் போல் தோன்றும், அதன் உருவமோ சிறியதாகவும் அல்லாமல் பெரியதாகவும் அல்லாமல் சமமான அளவில் இருக்கும் அந்த விலங்குகளின் கூட்டத்தில் ஒன்றுதான் இக்கதையின் குட்டி நாயகன் பஜ்ஜூ, பஜ்ஜுவானது தனது சகோதர, சகோதரிகளுடன் ஓடுவதும், விளையாடுவதுமாக மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. அப்படி ஒருநாள் தனது சகோதர சகோதரிகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது, அதனால் நமது பஜ்ஜூ ஒளிந்துக்கொள்வதற்காக ஒரு குகைக்குள் ஒளிந்துக் கொண்டது. அப்படி ஒளிந்துக்கொண்டிருக்கும் போது அங்கு ஏதோ ஒரு சத்தம் கேட்டது. அதனைக் கேட்ட நமது பஜ்ஜூ தனது காதை உன்னிப்பாக்கி அது என்ன சத்தம் என்று கேட்டது அப்போது அதன் காதிற்கு ஒரு பெண் “என்னைக் காப்பாற்றுங்கள்,என்னைக் காப்பாற்றுங்கள்”என்று கூச்சலிடுவது போல் கேட்டது, யாரோ ஒரு பெண் ஆபத்தில் மாட்டியுள்ளார்கள் என்பதை உணர்ந்து சத்தம் வந்த திசையை நோக்கி சென்றது. அந்த பெரிய குகையினுள் ஒரு சிறு குகை இருந்தது அதிலிருந்து தான் அந்த சத்தம் வந்துக் கொண்டிருந்தது அதனால் பஜ்ஜூ அந்த சிறிய குகைக்குள் சென்றது சென்றதும் அது பார்த்த காட்சியால் அது அதிர்ச்சியில் உறைந்துப் போய் நின்றது ஏனெனில் அங்கு ஒரு குட்டிப் பெண் மான் ஒன்று கயிறால் இருக்கி கட்டப்பட்டிருந்தது அதுதான் உதவிக்கும் அழைத்துக்கொண்டிருந்தது பஜ்ஜூவைப் பார்த்ததும் அதனிடம்,
“ஓ! குட்டி முப்லியே என்னை எப்படியாவது இதிலிருந்து காப்பாற்று”
என்று கெஞ்சியது அதனைப் பார்த்த பஜ்ஜூ அந்த மானிடம்,
“உன்னை ஏன் கட்டிப்போட்டார்கள்? யார் உன்னை கட்டிப் போட்டார்கள்?”
என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது
“ஐயோ! கேள்விக் கேக்காமல் என்னை அவிழ்த்து விடு இல்லையென்றால் அந்த அரக்கனிடம் நாம் மாட்டிக்கொள்ள நேரிடும் அதனால் சீக்கிரமாக அவிழ்த்து விடு!, நான் எல்லாம் உனக்கு விளக்கமாக பிறகு கூறுகிறேன்”
என்று கூற பஜ்ஜூவும் அது ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டியுள்ளதாக உணர்ந்து அதனை கட்டிவைத்திருந்த கயிறை தனது வாயால் கடித்து அறுத்தது அதுவும் கட்டிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியுடன்
“ரொம்ப நன்றி முப்லியே!சரி சரி வா நாம் சீக்கிரம் வெளியே சென்று விடுவோம்”
என்று கூறி அதனை வெளியே அழைத்துச் சென்றது.வெளியே வந்ததும் குட்டி முப்லியான பஜ்ஜூ அந்த மானிடம் கேட்டது
“இப்போது சொல் உன்னை யார் கட்டிப் போட்டார்கள்?”
“ம், சொல்கிறேன் எனது பெயர் பில்லி, ஆனால் நீ நினைக்கலாம் நான் ஒரு மான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன் என்று ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் ஒரு யானையின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருகிறேன், நான் பிறந்ததிலிருந்து அந்த யானையிடம் தான் வளர்ந்து வருகிறேன் எனக்கு அப்பா, அம்மா கிடையாது நான் பிறந்த குட்டியிலிருந்து என்னை அந்த யானைதான் வளர்த்து வந்தது, எனக்கு அம்மா அப்பா இல்லாத குறையை அந்த யானை தான் தீர்த்து வந்தது”
என்று சொல்லும்போதே அதன் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
“ஏன் அழுகிறாய்?”
“ஒருநாள் நான் காட்டில் உள்ள ஆற்றில் நீர் அருந்திக்கொண்டிருக்கும்போது வேட்டையாடுவதற்காக அங்கு வந்த இளவரசர் என்னை பார்த்ததும் அவர் வைத்திருந்த அம்பால் என்னை தாக்கினார் அந்த அம்பானது எனது காலை பதம் பார்த்தது ஆனால் எப்படியோ அந்த வலியை தாங்கிக் கொண்டு எனது இருப்பிடத்திற்கு சென்று நடந்தவைகளை எல்லாம் என்னை அரவணைத்து வந்த யானையிடம் கூறினேன் அப்படி நான் கூறிக்கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது யாரென்று பார்த்தால் அந்த இளவரசர் தான். என்னை தேடி என் இருப்பிடத்திற்கே வந்துவிட்டான், அப்போதும் என்னை தாக்க முயற்சி செய்தான். அதனால் எனது தந்தை (யானை) என்னைக் காப்பாற்றுவதற்காக இளவரசரை தாக்கிவிட்டு என்னை அந்த இடத்திலிருந்து விரைவாக கூப்பிட்டுச் சென்று விட்டார், பிறகு ஒரு இடத்தில் வைத்து என் அடிபட்ட காலிற்கு அங்குள்ள மூலிகை செடிகளால் வைத்தியம் செய்தார் எனது தந்தை. அப்போது தான் எங்களுக்கு இன்னொரு பிரச்சினையும் காத்துக் கொண்டிருந்தது, தந்தத்தால் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த இளவரசரை அவர்களது வீரர்களின் உதவியுடன் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் இறந்துவிட தனது மகனின் இந்த நிலைமைக்கு காரணம் ஒரு யானையும், மானும் என்பதறிந்த அந்த இளவரசரின் தந்தையும்,அந்நாட்டு மன்னருமான வேதன் மகாராஜா அவரது மகனை தாக்கிய யானையையும், அதற்கு காரணமாக இருந்த என்னையையும் அரண்மனைக்கு உயிருடன் கூப்பிட்டு வருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனைக் கேட்ட அவரது பணியாட்கள்,வீரர்கள் என அனைவரும் எனது அப்பாவைத் தேடி காட்டிற்குள் இறங்கினர், என்னைக் காப்பாற்ற நினைத்த எனது அப்பா தானாகவே முன்வந்து அவர்களிடம் சரணடைந்தார். அவர்களும் எனது அப்பாவைப் பிடித்துக் கொண்டு அவர்களது அரண்மனைக்கு கூட்டிச் சென்றுவிட்டனர், மேலும் என்னையும் பிடிக்க வேண்டும் என்று அந்த அரசர் ஆணையிட்டதால் என்னையும் பிடிக்க சில ஆட்களை அனுப்பினார், அவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இந்த குகையினுள் தஞ்சம் புகுந்துக் கொண்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக இங்கேயே தங்கியிருந்த ஒரு அரக்கனிடம் மாட்டிக் கொண்டேன், அவனது பசிக்கு நான் தான் இறையாக கிடைத்துள்ளதால் என்னை சமைப்பதற்காக தேவையான விறகு, காய் போன்றவற்றை எடுப்பதற்காக என்னை கட்டிப்போட்டுவிட்டு வெளியே சென்று விட்டான்,அந்த நேரத்தில் தான் நீ என்னை காப்பாற்றினாய்”
என்று அதன் நீண்ட வாழ்க்கை வரலாற்றையே கூறி முடித்தது,இதையெல்லாம் கேட்ட பஜ்ஜூ அந்த குட்டி மானான பில்லியிடம்
“நீ சொல்வதை பார்த்தால் மிகப்பெரிய பிரச்சினையில் மாட்டியிருக்கிறாய் என்று தோன்றுகிறது, இப்போது அடுத்து என்ன செய்யப்போகிறாய்?”
“அரண்மனையில் மாட்டிக்கொண்டுள்ள எனது அப்பாவை நான் காப்பாற்ற வேண்டும், ஆனால் எப்படி காப்பாற்ற போகிறேன் என்றுதான் எனக்கே புரியவில்லை”
“கவலைப்படாதே நண்பா! உனது அப்பாவைக் காப்பாற்ற நான் உதவி செய்கிறேன்”
“ஆனால் எப்படி?”
“முதலில் நாம் அரண்மனையை அடைய வேண்டும் அப்போது தான் உனது தந்தையை எப்படி காப்பாற்றுவது என்று யோசனை கிடைக்கும்,சரி வா விரைவாக செல்லலாம்”
என்று பில்லியை கூட்டிக்கொண்டு அந்த அரண்மனையை நோக்கி கிளம்பியது.
அப்படி அந்த அரண்மனையை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்தபோது அந்த குட்டி மானான பில்லி குட்டி முப்லியிடம்
“சரி!என்னைப் பற்றி நான் எல்லாம் சொன்னேன் ஆனால் உன்னைப் பற்றி நீ எதுவும் சொல்லவில்லையே?”
என்று வினவியது.
“ஓ! நான் என்னைப் பற்றி சொல்ல மறந்துவிட்டேன்,சரி சொல்கிறேன்.எனது பெயர் பஜ்ஜூ நான் தான் எனது குடும்பத்திலேயே பிறந்த நான்காவது முப்லி,எனது சகோதர,சகோதரிகளுடன் விளையாடும்போது தான் உன்னை இங்கு கண்டுப்பிடித்தேன்,இவ்வளவு தான் என்னைப் பற்றிச் சொல்வதற்கு”
“ஐயையோ!அப்போது நீ என்னுடன் வந்துவிட்டால் உனது குடும்பத்தார்கள் உன்னை தேட மாட்டார்களா?”
“தேடுவார்கள் தான் ஆனால் அவர்களிடம் இதைப் பற்றிச் சொன்னால் உன்னுடன் அனுப்பமாட்டார்கள்,சரி சரி விரைவாக நட”
என்று கூறி அதன் நடையை வேகப்படுத்தியது.பிறகு சிறிது நேரம் கழித்து பில்லி பஜ்ஜூவிடம்
“உனது இனத்தார்கள் அழிந்து வருவதாக கேள்விப்பட்டேனே,அது உண்மையா?”
“ஆம் உண்மைதான்,எல்லாவற்றிற்கும் காரணம் இந்த நாட்டின் அரசரான வேதன் மகாராஜாவால் தான் எங்கள் இனமே அழிந்துக்கொண்டிருக்கிறது”
“அவர் என்ன செய்தார்?”
“என்ன செய்தாரா?முப்லி என்கிற விலங்குகளான நாங்கள் பார்ப்பதற்கு முயலையும் எலியையும் கலந்து செய்ததுபோல் உள்ளதால் இந்நாட்டு அரசரான வேதன் மகாராஜா எங்களைப் பிடித்து இந்நாட்டிற்கு வரும் வேற்றுநாட்டவருக்கு விற்றுவிடுவார்,அவர்களோ எங்களை கூண்டில் அடைத்து ஒரு பிராணியாக வளர்க்க ஆரம்பிப்பார்கள்”
“இதில் வருத்தப்படுவதற்கு என்ன?”
“நான் கூறுவதை முழுதாக கேள்!பிராணியாக வளர்க்க ஆரம்பித்த எங்களை பிறகு அவர்களுக்கு வேலை செய்யும் வேலைக்காரராக மாற்றிவிடுவார்கள்அதுவும் துன்புறுத்தி,மிரட்டி,சித்ரவதை செய்து…இதனால் பலர் அவர்களிடமிருந்து தப்ப முடியாமல்,சித்ரவதையில் சிக்கி தங்களது உயிரை அவர்களாகவே நீத்துக்கொள்கின்றனர்,மேலும் எங்களை விற்றதற்கு இந்த அரசர் பணமும் பெற்றுக் கொள்வார்,இப்போது எஞ்சியிருப்பது நானும் எனது குடும்பமும் மட்டுமே,பலர் அரசரிடம் சிக்கி விற்கப்பட்டுவிட்டனர்,நாங்களும் எப்போது இவரிடம் சிக்கப்போகிறோமோ?,மேலும் இந்த வேதன் எனது தங்கையையும் பிடித்துவிட்டார் அவளை அரண்மனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாகவே அவரிடமிருந்து தப்பித்த எனது தங்கை ஓடி ஒளிந்துக்கொள்வதற்கு முன் அவர் வைத்திருந்த கத்தியால் என் கண்முன்னே அவளை குத்தி கொன்றுவிட்டான்,”உன்கூட வந்ததால்தான் எனது மகள் போய்விட்டாள்”என்று எனது அப்பாவும் அம்மாவும் என்னிடம் பேசுவதை விட்டுவிட்டார்கள்,அதனால் நான் தொலைந்தே போனாலும் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்தான்”
என்று வருத்தத்தோடு கூறியது,இவர்கள் இப்படியே பேசிக்கொண்டே ஒரு வழியாக அவர்கள் எப்படியோ நகரின் மையத்தை அடைந்தனர்,வானமும் இருட்டிவிட்டதால் அங்கேயே ஒரு இடத்தில் தங்க முடிவு செய்தனர்,அதன்படி அங்குள்ள ஒரு சிறிய வீட்டின் அருகில் ஒரு சிறிய சந்து போல் இருந்தது அதில் அந்த குட்டி மானான பில்லியும்,குட்டி முப்லியான பஜ்ஜூவும் யார் கண்ணுக்கும் தெரியாதபடி மறைவாக தங்கிக்கொண்டனர்.அப்போது அருகில் யாரோ ஒருவர் பேசும் குரல் கேட்டது
“நான் என்ன செய்வேன் கடவுளே,நீ தான் எனக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டும்”
என்று யாரோ ஒரு இளைஞன் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருக்கும் சத்தம் பஜ்ஜுவுக்கு கேட்டது,அதனால் அது சற்று எழுந்து கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கும் அந்த இளைஞனிற்கு தெரியாமல் அவனது அருகில் சென்றது.
அப்போது தான் அது மற்றுமொன்றையும் கவனித்தது அது என்னவெனில் அந்த இளைஞனிற்கு சற்று அருகில் ஒரு கொட்டில் இருந்தது அதில் ஒரு யானையும் அடைக்கப்பட்டிருந்தது அப்போது அதன் மனதில் “ஒருவேளை பில்லியின் தந்தைதான் இந்த யானையோ?” என்று தோன்றியது எனவே பில்லியை எழுப்பி அந்த யானையைக் காட்டியது பில்லியும் அது தனது தந்தை தான் என்று உறுதி செய்தது.
பில்லிக்கு தனது தந்தையைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு அந்த கொட்டிலை நோக்கி “அப்பா” என்று கத்திக்கொண்டே ஓடியது,பஜ்ஜூ எவ்வளவு தடுத்தும் அவள் அதையும் மீறி அந்த கொட்டிலின் அருகில் சென்றது,பில்லியைப் பார்த்ததும் கொட்டிலில் அடைப்பட்டிருந்த யானைக்கு ஏக சந்தோஷமாக இருந்தது அதனைக் கண்ட அந்த இளைஞனும்,
“ஓ! இது தான் உனது மகளா?”
என்று அந்த யானையிடம் கேட்டான், அதற்கு அந்த யானையும் “ஆமாம்” என்பதுபோல் தலையை ஆட்டியது, அப்போது மான் அதன் தந்தையான யானையிடம்,
“அப்பா! இது யாரப்பா?”
என்று இளைஞரை சுட்டிக்காட்டி கேள்வி கேட்டது, அதற்கு அந்த யானையோ,
“இவர் பெயர் ரதீரா,இவர் அரசரின் பணியாட்களில் ஒருவர் என்று சொல்லலாம், மிகவும் நல்ல மனிதர்”
என்று கூறியது,பிறகு அந்த இளைஞன் அந்த யானையை நோக்கி
“என்ன மிகவும் மகிழ்ச்சியா?”
என்று கேட்க அதற்கு அந்த யானையும் தலையசைத்தது, பிறகு பில்லியைப் பார்த்து
“உனது அப்பா உன்மேல் எவ்வளவு அக்கறை வைத்துள்ளார் என்று தெரியுமா?இளவரசரை தாக்கிய உனது அப்பாவை அரசர் பிடித்ததிலிருந்து எனது கண்காணிப்பில் தான் இருந்துவருகிறார்,உன்னை கண்டுப்பிடித்து இந்த கோட்டைக்கு அழைத்து வந்து உனது கண்முன்னால் உனது அப்பாவை கொல்ல வேண்டுமென்று அரசர் ஆணைப் பிறப்பித்திருந்ததால் உனது அப்பாவை உயிரோடு எனது கண்காணிப்பில் வைத்திருக்கச் சொன்னார்கள்,இன்று வேறு உன்னை பிடிப்பதற்கு அரசர் ஆட்களை அனுப்பியிருந்ததால் உனது அப்பா மிகவும் வருத்தப்பட்டார்,என்னால் உனது அப்பாவை விடுவிக்கவும் முடியாது அப்படி நான் விடுவித்தது தெரிந்தால் எனது கதையை அரசர் முடித்துவிடுவார்,அதனால் தான் என்ன செய்வேனென்று தெரியாமல் கடவுளிடம் புலம்பிக்கொண்டிருந்தேன் அந்நேரத்தில் தான் நீயும் வந்தாய்”
என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனுக்கு அருகில் இருந்த செடி ஒன்று அசைந்தது,அவனும் என்னவென்று திரும்பிப் பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்தான் ஏனெனில் அங்கு நின்றுக்கொண்டிருந்தது நம்ம பஜ்ஜூ ,அதனைப் பார்த்ததும் அந்த இளைஞன் ஏதோ சொல்ல வருவதற்குள் பில்லி பஜ்ஜூவைப் பார்த்துவிட்டு
“ஹே! நண்பா பஜ்ஜூ எனது அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் நீ இருப்பதே மறந்துவிட்டேன்”
என்று கூறி தனது தந்தைக்கு பஜ்ஜூவை அறிமுகப்படுத்தியது, அதனையெல்லாம் கேட்ட பில்லியின் தந்தையான யானை,
“ஓ! உனக்காக அவன் இவ்வளவு தூரம் வந்திருக்கிறானா,எனது மகளுக்காக நீ இவ்வளவு தூரம் பயணம் செய்ததற்கு மிக்க நன்றி!”
என்று கூறி அதற்கு தனது நன்றியை தெரிவித்தது
“இருக்கட்டும் தந்தையே நீங்கள் கிடைத்துவிட்டீர்கள் அல்லவா அதுவே எனக்குப் போதும்!”
பிறகு பில்லியை நோக்கி,
“இனி உன் தந்தையுடன் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு செல்லலாம் பில்லி!”
“ஆனால் எப்படி?இவர்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசர் கூறியுள்ளாரே!எனக்கும் இவர்களை விடுவிக்க ஆசைதான் ஆனால் அப்படி நான் விடுவித்தால் எனது உயிரே பறிப்போவதற்கான வாய்ப்புள்ளது”
“எனக்கு ஒரு யோசனை உள்ளது ரதீரா அவர்களே!”
“என்ன யோசனை?”
“சொல்கிறேன் ஆனால் அதற்கு முன் இவர்களை விடுவியுங்கள் பிறகு நான் அந்த யோசனையை கூறுகிறேன்”
என்று கூற அதற்கு அவனோ அவர்களை விடுவிக்க தயங்கினான்,அவன் தயங்கியதைப் பார்த்த பஜ்ஜூ,
“என்னை நம்பி அவர்களை விடுவியுங்கள் ரதீரா,நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்”
என்று கூறவும் அவனும் சரியென்று கொட்டிலில் அடைப்பட்டிருந்த யானையை விடுவித்தான் கொட்டிலிலிருந்து வெளியே வந்ததும் தனது மகளை தனது தும்பிக்கையால் கட்டித் தழுவிக்கொண்டது அதனைக் கண்டு ரதீராவும்,பஜ்ஜூவும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்,பிறகு பஜ்ஜூவின் அருகில் வந்து
“நண்பா!எங்களைக் காப்பாற்ற நீ என்ன யோசனை வைத்துள்ளாய்?”
“அதை என்னால் உன்னிடம் கூற முடியாது நண்பா!”
“ஆனால் ஏன்?”
“புரிந்துக்கொள் நண்பா!முதலில் இங்கிருந்து தப்பிச் செல்லுங்கள்,நாங்கள் இங்கிருந்து சமாளித்துக் கொள்கிறோம்”
“நீ கூறுவதை வைத்துப் பார்த்தால் ஏதோ விபரீதமான செயலை செய்யப்போகிறாய் என்று நினைக்கின்றேன்”
“அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நீ உனது தந்தையை அழைத்துக்கொண்டு இங்கிருந்து செல்”
என்று மிகவும் கட்டாயப்படுத்திக் கூறவும் அதுவும் மனம் இல்லாமல் பஜ்ஜூவை பார்த்துக் கொண்டே தனது தந்தையை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றது,செல்வதற்கு முன் பில்லியையும்,அவளது தந்தையையும் ஒருமுறை கட்டி அணைத்துக் கொண்டது,அவர்கள் சென்றதும் ரதீராவை நோக்கி தனது யோசனையை கூற ஆரம்பித்தது,அதனைக் கேட்ட ரதீரா சிறிது தயங்கினான் பிறகு அந்த யோசனைக்கு சம்மதித்தான்.
அந்நாட்டு மன்னரான வேதன் அரசசபையை கூட்டியிருந்தார்,அவையிலிருந்தோர் அனைவரின் முகத்திலும் பயம் தெரிந்தது,வேதனின் முன் ரதீரா நின்றுக்கொண்டிருந்தான் அவனுக்கு அருகில் பஜ்ஜூவும் ஒரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது,பிறகு வேதன் மகாராஜா ரதீராவை நோக்கி
“அன்று இரவு என்ன நடந்தது என்று கூறு ரதீரா”
“கண்டிப்பாக அரசே!அன்று இரவு நான் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தேன் அப்போது வெளியில் ஒரு சத்தம் கேட்டது என்னவென்று பார்ப்பதற்காக நான் மெதுவாக கதவைத் திறந்துப் பார்த்தேன் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன் ஏனெனில் நமது வீரர்களை வைத்து பிடிக்க நினைத்த,அந்த யானையின் அரவணைப்பில் வாழ்ந்த அந்த மான் தனது தந்தையைத் தேடி என்னுடைய இடத்திற்கே வந்துவிட்டது உடனே சுதாரித்துக்கொண்ட நான் அதனை பிடிப்பதற்காக எனது வலையை எடுத்து அதனை நோக்கி எறியும் போது ஒரு மிகப்பெரிய ஜந்துவானது அந்த மானை கபக்கென்று பிடித்து ஒரே வாயில் முழுங்கிவிட்டது பிறகு கொட்டிலில் அடைப்பட்டிருந்த அவ்வளவு பெரிய யானையையும் ஒரேயடியாக விழுங்கிவிட்டது இதையெல்லாம் பார்த்து ஸ்தம்பித்து நின்றுக்கொண்டிருந்த என்னை நோக்கி அந்த ஜந்துவானது வர ஆரம்பித்தது,அதனிடமிருந்து தப்பிப்பதற்காக நான் ஓடினேன் ஆனால் அதுவோ விடாமல் துரத்திக்கொண்டு வந்தது அப்போதுதான் நான் ஒன்றை கவனித்தேன் அந்த ஜந்துவின் கையில் ஒரு கோல் ஒன்று இருந்தது அதனை வைத்துதான் அது தாக்கிக்கொண்டிருக்கிறது என்பதறிந்து அதனிடமிருந்து அந்த கோலை கைப்பற்றினேன்,அதனிடமிருந்து கைப்பற்றியதும் அந்த ஜந்துவானது கீழே விழுந்து இந்த முப்லியாக மாறிவிட்டது,அது முப்லியாக மாறியதும் உடனே அதனைப் பிடித்து விட்டேன்”
என்று ஒரு பொய்க்கதையை கூறினான்,இவன் கூறிக்கொண்டிருக்கும்போதே அரசரின் பணியாட்கள் இருவர் வந்து
“ஆம் அரசே!இவன் கூறியது போல் அந்த ஜந்துவிடம் சண்டைப்போட்டதற்கான அடையாளமாக பல பொருட்கள் சேதமடைந்துள்ளன,மேலும் இவன் அடைத்து வைத்திருந்த யானைக்கொட்டிலும் உடைக்கப்பட்டுள்ளன”
என்று கூறியும் அரசரின் மனதோ ரதீரா கூறியதை நம்ப மறுத்தது,பிறகு தனது பணியாட்களிடம்
“இந்த ஜந்து வைத்திருந்ததாக சொல்லப்படும் அந்த கோலைக் கொண்டு வாருங்கள்!”
என்றதும் அவர்களும் அதனை கொண்டு வந்தார்கள்,அதனை வாங்கி சுற்றியும் முற்றியும் பார்த்தார் அரசர்
“அரசரே!அந்த கோலை மட்டும் இந்த முப்லியிடம் கொடுத்துவிடாதீர்கள் எனக்குத் தெரிந்து அந்த கோல் அதனிடம் இருக்கும்போது தான் அது மிகப்பெரிய ஜந்துவாக மாறிவிடுகிறது”
என்று அரசரிடம் இவன் கூறிக்கொண்டிருக்கும் போதே சிறையில் இருந்த பஜ்ஜூ தான் மறைத்து வைத்திருந்த ஒரு இலைக்கொத்தை தனது வாயில் போட்டு மென்றது,ஆனால் அதனை யாரும் கவனிக்கவில்லை.
பிறகு அந்த சிறையிலுள்ள கம்பியினூடாகவே அந்த கோலை பஜ்ஜூவிடம் கொடுத்தார் அரசர்,அந்த கோலை வாங்கிய பஜ்ஜூவின் உடலில் சிறிது நேரம் ஆகியும் எவ்வித மாற்றமும் ஏற்படாததால் ரதீராவை நோக்கி
“என்ன ரதீரா?ஏதோ ஜந்தாக மாறிவிடும் பந்தாக மாறிவிடும் என்று கூறிக்கொண்டிருந்தாய் ஒன்றும்…”
என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் அருகில் திரும்பிப் பார்த்தார் பார்த்தவரின் கண்ணில் மரணபயம் தெரிந்தது,ஏனெனில் சிறையில் இருந்த பஜ்ஜூ கீழேப் பார்த்து குனிந்தபடி வெறிக்க வெறிக்க பார்த்தபடி உறுமிக்கொண்டிருந்தது,அதன் உடலில் உள்ள முடிகளோ சீறிட்டு நின்றது,அதன் கண்கள் சிவப்பாக மாறத்தொடங்கியிருந்தன,என்ன நடக்கிறதென்று யோசிப்பதற்குள் தான் சிறையிலிருந்த அந்த கம்பியைப் பிடித்து இறுக்கியது அது இறுக்கியதில் அந்த கம்பிகள் அனைத்தும் சுக்கு நூறாக உடைந்து தெறித்தன சிறிது நேரத்தில் அதன் உடல் பெரியதாக ஒரு ராட்சஸ வடிவில் மாறத் தொடங்கின,ஏதோ விபரீதம் என அறிந்துக்கொண்ட அரசர் இரண்டடி பின் எடுத்து வைக்கவும் திடீரென்று சிறையிலிருந்த பஜ்ஜூ பாய்ந்து அரசரின் கழுத்திலேயே தாக்கியது,தாக்கியதில் வலி தாங்க முடியாமல் சரிந்து விழுந்தார்,அதனைப் பார்த்த அரண்மனைக் காவலர்கள் மற்றும் பணியாளர்கள் பஜ்ஜூவை தாக்குவதற்கு முயற்சி செய்தனர் ஆனால் அவர்களின் தாக்குதலிலிருந்து தப்பித்த பஜ்ஜூ தன்னை தாக்கிக்கொண்டிருந்த வீரர்களில் இருவரை தனது கையால் நசுக்கி தூக்கி எறிந்தது,பிறகு கோட்டையை ஒருவழியாக்கிவிட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு ஓடியது,அங்கிருந்த அனைவரும் அதற்கு பயந்து சுவரோடு ஒட்டிப்போயிருந்தனர்,எப்படி முப்லியாக இருந்தது இவ்வளவு பெரிய ராட்சத மிருகமாக மாறியது என அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை ரதீராவைத் தவிர.
அந்த ராட்சத மிருகமாக மாறியிருந்த பஜ்ஜூவை நோக்கி ஓடத்தொடங்கினான் அப்படி ஓடிக்கொண்டிருக்கும்போது அவன் நினைவில் நேற்று பஜ்ஜூ கூறிய யோசனைதான் வந்துப்போயின.
நேற்று நடந்தது என்னவெனில்
அரசரிடம் ரதீரா பஜ்ஜூ ஜந்துவாக மாறியதாக ஒரு கதையை கூறினான் அல்லவா அந்த கதையை அரசரிடம் கூறச்சொல்லியதே பஜ்ஜூதான் அதுதான் பஜ்ஜூ நேற்று இரவு ரதீராவிடம் கூறிய யோசனையே ஆனால் இந்த பொய்க்கதையை அரசரிடம் கூறு என்று ரதீராவிடம் கூறியதற்கு அவனோ
“ஆனால் இந்த கதையை அரசரிடம் கூறினால் கண்டிப்பாக நம்பமாட்டார்”
“ஆம்.நம்பமாட்டார்தான் அதற்குதான் அவரை நம்ப வைப்பதற்கு வேறு ஒரு யோசனையும் உள்ளது”
“என்ன யோசனை?”
“காட்டில் ‘குறிமல்’ என்று ஒரு செடி உள்ளது இது மிகவும் ஆபத்தான செடி,இதனை சிறிது நாம் மென்றாலே போதும் நம் உடலில் ஒருசில வேதிவினைப்புரிந்து நம் உடலில் ஒரு சில மாற்றத்தை ஏற்படுத்தி நம்மை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிவிடும் சொல்லப்போனால் ஒரு ராட்சத மிருகம் போல் மாற்றிவிடும் அது மனிதரானாலும் சரி அல்லது என்னைப் போல் உள்ள விலங்குகளானாலும் சரி,மேலும் இதனைப் பயன்படுத்துவதால் நம் மனதையும்,அறிவையும் மழுங்கச் செய்து நம்மை ஒரு ஆக்ரோஷமான மிருகமாக மாற்றிவிடும்”
“சரி அரசரை நம்ப வைப்பதற்கும் நீ கூறுகிற இந்த விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்?”
“நான் கூறியதுபோல் அந்த ஜந்துவின் கதையை நீ அரசரிடம் கூறு மேலும் அந்த ஜந்துவிடம் ஒரு கோல் இருப்பதாகவும் அந்த கோலை வைத்துத்தான் நான் ஜந்துவாக மாறுகிறேன் என்பது போல் நீ அரசரிடம் கூற வேண்டும் அந்த கோலை அதனிடமிருந்து பிடுங்கிய பிறகு தான் அது முப்லியாக மாறியது என்று நீ அரசரிடம் கூற வேண்டும் ஆனால் எப்படியும் அரசரோ அதனை நம்பாமல் நான் ஜந்துவாக மாறுகிறேனா என்று சோதனை செய்வதற்காக என்னிடம் அந்த கோலை கொடுப்பார் அந்நேரத்தில் நான் கூறிய அந்த ‘குறிமல்’ இலைக்கொத்தை மென்றுவிடுகிறேன் அப்போது என் உடலில் மாற்றம் ஏற்பட்டு எனக்குள் ஒரு மிருக குணம் நுழைந்துவிடும் அதனை வைத்து அவர்களிடம் தப்பித்துவிடலாம் சொல்லப்போனால் அரசரின் கதையையே முடித்துவிடலாம்,ஆனால் இந்த இலையை உண்பதால் என் உயிருக்கு ஆபத்துதான் ஆனால் எங்களது இனத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லை!”
“அரசரின் கதையை முடித்துவிடப்போகிறாயா?”
என்று வாயைப் பிளந்துக்கொண்டு கேட்டான்.
“ஆம்,எங்களது இனத்தை பிடித்துக்கொண்டு வேற்றுநாட்டவரிடம் விற்பது அரசரின் பணியாளான உனக்குத் தெரியாதா என்ன?அவன் விற்பதோடு பலப்பேரை சித்ரவதை செய்து கொல்லவும் செய்தான்,எனது பாசமிக்க தங்கையையும் கொன்றான் அப்படிப்பட்ட கொடிய மனதுடைய அந்த வேதன் மகாராஜாவை கொல்ல வேண்டும் என்பது தான் எனது பல நாள் கனவு,இச்சந்தர்ப்பத்திற்காகத்தான் நான் காத்துக்கொண்டிருந்தேன்,ஆனால் எனது குடும்பத்தார்களோ அது உன்னால் முடியாத காரியம் என்றனர்,அப்போதுதான் அந்த பில்லி என்கிற மானைச் சந்தித்தேன்,அப்போதுதான் அவன் எங்களை மட்டுமல்லாமல் காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் இடைஞ்சல் கொடுத்து வருகிறான் என்று புரிந்தது அப்போதே முடிவு செய்துவிட்டேன் வேதனை பில்லியுடன் பயணம் செய்து கொல்ல வேண்டுமென்று,அந்த குறிமல் செடியை சாப்பிட்டால் எனக்கு சாவு நிச்சயம்தான் ஆனால் எனது இனத்தைக் காப்பாற்ற வேண்டுமெனில் இதை செய்துதான் ஆகவேண்டும்,அப்போது தான் எங்களது இனம் உயிர் பிழைக்கும்”
“ஆனால் உன் உயிரை பணயம் வைத்து…”
“இப்போது பேசுவதற்கு நேரமில்லை,நான் கூறியது போல் அரசரிடம் கூறு அதுவும் அந்த கோலை வைத்துதான் நான் ஜந்துவாக மாறுகிறேன் என்று அரசரிடம் கூறு”
என்று கூற அவனோ
“ஆனால் ஏன் அந்த கோலை வைத்துதான் நீ ஜந்துவாக மாறுகிறாய் என்று கூற வேண்டும்?”
“நான் அந்த செடியை மென்றதால் தான் நான் அப்படி ஜந்துவாக மாறுகிறேன் என்று யாருக்கும் தெரியக்கூடாது அதனால் தான் அந்த கோலை வைத்து மாறுகிறதாக நீ கூற வேண்டும் அந்நேரத்தில் அரசர் அந்த கோலை என்னிடம் தருவதற்கும் நான் அந்த செடியை மெல்வதற்கும் சரியாக இருக்கும்”
என்று அது கூறிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்த ரதீராவிற்கு என்ன பேசவேண்டுமென்று தெரியவில்லை.
பிறகு ரதீராவிடம் அந்த யானைக்கொட்டிலை உடைக்கச் சொல்லியது அது ஏன் என்று ரதீராவிற்கு புரிந்திருக்கவும் செய்தது,அவன் சொல்லும் கதையை அரசரை நம்ப வைப்பதற்காக அந்த ஜந்துவிடம் சண்டைப்போட்டது போல் காட்டுவதற்காக அங்குள்ள பொருட்களை எல்லாம் சிதைத்து கொட்டிலை எல்லாம் உடைத்து நாசம் செய்தனர்.அப்படிச் செய்துக் கொண்டிருக்கும்போதுதான் பஜ்ஜூ அடுத்து ஒரு குண்டை தூக்கிப்போட்டது.
“இந்த வேதன் மகாராஜாவின் மகனை இந்த யானை தானே கொன்றது?”
“ஆமாம்!”
“ஆனால் உண்மையில் அவனைக் கொன்றது நான்தான்”
என்றதும் இவனது சப்த நாடியுமே ஒடுங்கிப் போய்விட்டதென்று சொல்லலாம்
“என்ன சொல்கிறாய்,பிறகு அந்த யானையால் தாக்கப்பட்டார் என்று கூறினார்கள்”
அதிர்ச்சி விலகாமல் கேட்க,
“ஆம், யானையால் தான் தாக்கப்பட்டார் ஆனால் அப்படி ஒன்றும் பெரிய காயமெல்லாம் இல்லை,அவர் பிழைத்திருப்பார்தான், யானையால் தாக்கப்பட்டவர் அப்படியே தட்டுத்தடுமாறி வந்துக்கொண்டிருந்தவரை நான் தான் விஷம் நிறைந்த முள்கம்பை வைத்து கொலை செய்தேன்,எங்களது இனம் அழிவதற்கு இவனும் ஒரு காரணம் என்பதால் தான் இவனைக் கொன்றேன் ஆனால் இந்த விஷயம் என்னைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது,பிறகு நான் பில்லியை சந்தித்தப்போதுதான் நான் கொன்றதற்கு பில்லியின் அப்பா சிக்கியுள்ளார் என்று புரிந்தது என்னால் சிக்கியவரை நான் மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் பில்லியுடன் பயணம் செய்து இந்த நகரத்திற்கு வந்தேன்,அப்போது தான் அரசரையும் கொல்ல வேண்டும் என்கிற யோசனை வந்தது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த “குறிமல்”செடி ஞாபகத்திற்கு வந்தது,எனது இனத்தாரை காப்பாற்ற எனது உயிரே போனாலும் பரவாயில்லை என்று தான் இந்த செடியை நான் காட்டிலிருந்து வரும்போதே கையோடு பறித்து வந்துவிட்டேன்”
என்று கூறி தான் வைத்திருந்த செடியை காண்பித்தது.
இவையெல்லாம் ராட்சத மிருகமாக மாறியிருந்த பஜ்ஜூவின் பின் ஓடிக்கொண்டிருந்த ரதீராவின் நினைவில் வந்துப்போயின,வேகமாக ஓடிக்கொண்டிருந்தவன் எதையோ பார்த்தவன் போல் நின்றான் ஏனெனில் தூரத்தில் ராட்சத மிருகமாக மாறியிருந்த பஜ்ஜூ வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் கரையில் நின்றுக்கொண்டிருந்தது,ஒரு நொடி பின்னால் நின்றுக்கொண்டிருந்த ரதீராவை பார்த்துவிட்டு ஆற்றுக்குள் குதித்தது,இங்கு என்ன நடந்தது என்று அவனுக்கே ஒரு நொடி புரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது மறுபடி பஜ்ஜூ வரப்போவதில்லை என்று.
ஆற்றில் குதித்த ராட்சத மிருகமாக மாறியிருந்த பஜ்ஜூவின் உடல் ஒரு இடத்தில் கரை ஒதுங்கியிருந்தது,அதனை தின்பதற்காக பிணந்தின்னி கழுகுகள் அந்த உடலை சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
அங்கு முப்ளி கூட்டம் அந்நாட்டு அரசர் இறந்திருந்ததால் இனி தங்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று மிகவும் சந்தோஷமாக இருந்தது,ஆனால் தங்களின் இனத்தில் உள்ள ஒருவரால் தான் நாம் சந்தோஷமாக இருக்கிறோம் என்று அவர்களுக்கு கடைசி வரை தெரியாமல் போனது.