முன்னேற்றம்….!





(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவன் ஒரு சிறு வீட்டில் குடியிருந்தான். முன்னால் இரண்டு அறைகள்; பின்புறத்தில் ஓர் முற்றம்; அதில் சிறிய ஓர் நெசவுதறி. அதற் கப்பால் ஓலையால் வேயப்பட்ட -அவரைப்பந்தல் போன்ற ஓர் சமையலறை. சீலனூரில் அவன் நூற்கும் நூலும், அவன் நெய்யும் துணிகளும் மிகவுஞ் சிறந்தவை. முன்னே மகமதியச்சக்கரவர்த்தி அவுரங்கசீப்பின் இளையபுதல்வி ராஜசபையில் போதிய அளவு ஆடை கட்டவில்லை என்று கர்ச்சித்தபோது அவள் தான் 40 முழப்புடவை கட்டியிருந்ததாகச் சொன்னது இவன் மூதாதையர் நெய்த ‘மஸ்லின்’ துணி என்று அவன் பெருமையோடு சொல்லுவது வழக்கம். தன் முன்னோர்கள் வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியா வந்து குடியேறினார்களாம். அன்று தொட்டு பரம்பரையாக அதேதொழில் நடைபெறுகிறது. தன் தொழிலைக் கௌரவமாக நடத்துவதிலும் வர்த்தக முறையில் நாணயமாக நடப்பதிலும் அவனைப்போல் ஒருவரும் கிடையாது. ஆடம்பரமாவது வீண் விளம்பரமாவது அவனுக்குப் பிடிக்காது. துணிகள் வேண்டுமென்றால் அவனிடம் முன்னாடியே சொல்லிவிட வேண்டும். ஆளுக்கு ஏற்றமாதிரி துணி நெய்து கொடுப்பான். அவசரப்பட்டு மட்ட ரகமான துணிகளை ஒருபோதும் நெய்வதில்லை. தான் கொடுப்பதாகச் சொன்ன தவணையை ஒருபோதும் தவறியதுமில்லை. நெசவுத் தொழிலில் அவன் மனைவி காமாட்சியே அவனுக்கு உதவி. வீட்டில் தன் இருகுழந்தைகளைக் கவனிக்கும் வேலையோடு அவனோடு கூட ஒத்தாசையாக நூல் நூற்பது மாத்திரமன்றி நெசவுக்குக்கூட உதவி செய்வாள்.

நான் வேறு எவரிடத்திலும் துணி வாங்குவது கிடையாது. என் மனைவிக்குப் புடவைகள், குழந்தைகளுக்குச் சட்டைத்துணிகள் எல்லாம் அவனிடம்தான் வாங்குவேன். என் மனைவியை கூட்டிப் போகும்போது அவன் உடனே ‘காமு,காமு என்று தன் மனைவியைக் கூப்பிடுவான். அம்மாவுக்குப் புது தினுசுப்புடவை வேண்டுமாம் என்பான். அவள், போன முறை கனகாம்பரம் உடலும், அரக்குக்கரையும், பங்களுர் தலைப்பும் போட்டோம். இம்முறை மேகவர்ண நூல் இருக்கிறதே. அதில் உடல் போட்டு மஞ்சட்கரை போடலாமே. உங்கள் நிர்மலாவுக்கு நல்ல கறுப்பில் பாவாடை தைத்தால் நல்லது. சிவப்புத் தேகத்திற்கு எடுத்துக் காட்டும்” என்பாள்.
அவன் துணிகள் சீக்கிரம் கிழிவதே இல்லை. விலையோ மிகக் குறைவு. அதிகலாபம் சம்பாதிப்பது அவன் வழக்கமில்லை. என் மாமாதான் முதல்முறை என்னை அவனிடம் அழைத்துச் சென்றார். அவன் அப்போது நெய்த பட்டுக்கரை வேஷ்டியை இன்னும் நாம் மறக்கவில்லை. மாதம் ஒரு முறையாவது நான் அவனிடம் செல்வது வழக்கம். அவனிடம் பேசும் போதெல்லாம் அவன் தான் ஒரு பெரிய குடும்பத்தில் அதிக செல்வத்தோடு பிறந்தவன்போல கௌரவமாக நடந்து கொண்டான். தன் கஷ்டங்களை வறுமையைப் பொறுமையோடு சகித்து வந்தவன்போலத் தோன்றியது.
மூன்றுமாதங்களாக அவனிடம் நான் போகவில்லை. துணிகள் கிழிந்தால்தானே போகவேண்டும். என் மனைவிக்கோ வரவர அவன் கர்நாடகப் புடவைகள் பிடிக்கவில்லை. ஜெர்மன் சாயங்களும் ஜப்பான் பட்டுக்களும் எடுத்துக்காட்டும் மாதிரி ஏழை நெசவுகாரன் துணி காட்டுமா? ஆனால் நான் மாத்திரம் அவனிடமே துணிகள் வாங்கிவந்தேன். நான் ஒருமுறை அவனிடம் சென்றபோது அவன் வீட்டிலில்லை. அவன் மனைவி மாத்திரம் வந்து வாடிய முகத்துடன் ‘உட்காருங்கள்.ன் அனேக நாட்களாக உங்களைக் காணவில்லை. அம்மா சவுக்கியமாக இருக்கிறார்களா? அவர் வெளியே போயிருக்கிறார். குழந்தை கிருஷ்ணனுக்கு ஐந்துநாளாய் ரொம்ப ஜூரம். நானும் கைமருந்து எவ்வளவோ செய்து பார்த்தேன். கேட்கவில்லை. டாக்டரை அழைத்துத்தான் ஆகவேண்டுமென்று தோன்றியது. அவர் டாக்டரை அழைத்துவரப் போயிருக்கிறார். இரண்டு நாளைக்கு முன்பே யோசனை பண்ணியிருந்தால் டாக்டர் வந்து பார்க்கும் சார்ஜ் மிஞ்சி இருக்கும்” என்றாள். அவளின் வாடிய முகத்தையும். வீட்டின் மங்கலான விளக்கையும் பார்க்க எனக்கு மனதில் சொல்லமுடியாத துயரம் ஏற்பட்டது. அப்பொழுது அவன் தொங்கப்போட்ட முகத்துடன் வீட்டுக்கு வரப் பிரியப்படாதவன் போல வந்தான். முகத்தில் ஒருகவலை சூழ்ந்துகொண்டிருந்தது. அவன் குரல் தழுதழுத்தது.
“அடி. காமாட்சி! 15 ரூபாய் இல்லாமல் டாக்டர் வரமாட்டாராம். தனக்கு இப்போது வேலை அதிகமாம். விசாலத்துக்கு வந்து பார்த்ததிற்கே நாம் ஒன்றும் கொடுக்கவில்லையாம். இலவச வயித்தியம் செய்யும் டாக்டர் தானல்ல என்று கடுகடுத்த முகத்தோடு சொன்னார். நான் என்ன செய்வேன்!’ என்று சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்தாள். வாருங்கள் ஐயா, உங்களுக்கு என்ன வேண்டும்? அனேக நாட்களாகக் காணோமே?” என்று கேட்டான்.
“ஐயா! மில்துணி மலிவாகவும் நயமாகவும் கிடைக்கின்றதே என்ன பகட்டு! கண்ணைப்பறிக்கும் நிறங்கள்! கையில் தொட்டால் என்ன வழவழப்பு! துணியின் உழைப்பையும் அதின் அழகையும் யார் கவனிக்கிறார்கள்! என் கையால் நெய்யும் துணியில் என் இருதயத்திலிருக்கும் ஆன்மாவின் ஓர் பங்கும் அடங்கியிருக்கிறது என்று நான் சொன்னால், என்னைப் பயித்திய ஆஸ்பத்திரியிலல்லவோ சேர்ப்பார்கள். ஏழை நெசவுத்தொழிலாளி இருந்தா லென்ன இறந்தாலென்ன! மில்துணி சீக்கிரம் கிழிந்தபோதிலும், கட்டுவதற்கு என் துணியைப்போல சிறப்பில்லாமலிருந்தாலும் அவர்கள் விளம்பரமும் வியாபாரமுறையுமே போதுமே! துண்டுப்பத்திர விளம்பரங்களிலென்ன சினிமாப் படங்களிலென்ன, பேப்பர்களிலென்ன எங்கே பார்த்தாலும் விளம்பரங்கள்! அந்தத் துணி கட்டாதவன் காட்டுப்பிராணி என்ற எண்ணம் வரும்படியான விளம்பரங்கள்! ஐயோ! தவிர நான் அந்த முதலாளிகளைப் போல, திண்டிவனம் ஜமீன்தாரருக்கு வேஷ்டி சப்ளை’ செய்கிறேனா? ஏன் சில மில்கள் கவர்னர்களுக்கும் அரசர்களுக்குங்கூட துணிகள் கொடுக்கின்றனவாம். சீலனூரிலேயே மூன்று மில்கள் உண்டாகிவிட்டனவே! எங்களுக்கு இனி ஏதையா பிழைப்பு? ஏன், ஆதி காலத்தில் எங்கள் முன்னோர்களின் கட்டை விரல்களைப் பொறாமையினால் வெட்டிவிட்டதாகச் சரித்திரம் கூறுகிறதே! இந்தக் கஷ்டத்திலும் அந்தக் கஷ்டம் பரவாயில்லை ஐயா!” என்று தன் மனத்துயரத்தை வெளிப்படுத்தினான்.
கிருஷ்ணன் ஜுரவேகத்தில் ஏதோ உளறுகிறான்” என்று மனைவி திடுக்கிட்டுக் கூப்பிட அவன் உள்ளே போக எத்தனித்தான். நான் 50ரூபாயை அவனிடம் கொடுத்து “இரண்டு ஜோடி நூறாம் நம்பர் வேஷ்டியும், என் மனைவிக்கு இரண்டு பதினாறு முழப் புடவைகளும். பாவாடைத்துணி பத்து கஜமும் வேண்டும். பாக்கிப்பணம் அனுப்புகிறேன்” என்று கூறிவிட்டு என் வீடு சேர்ந்தேன்.
அந்த இரண்டு மாதத்திற்கு முன் அவன் கொடுத்த வேஷ்டி சட்டென்று உட்காருகையில் நடுவில கிழிந்தது எனக்கு ஆச்சரியம். அவன் வீட்டிற்கு நான் போனவுடன் அவன் வெளியே வந்தபோது நான் அவனை அடையாளமே கண்டுபிடிக்க முடியவில்லை. தலைமயிர் முழுவதும் ஒரே நரைப்பாக இருந்தது. வாட்டமே குடிகொண்ட முகம். ஒருவாரம் பட்டினி இருந்தவன் போன்ற தோற்றம்.
“ஐயா! துணி ஏதாவது வேண்டுமா? பருத்தி விலை இப்போது குறைந்திருக்கிறது. சீக்கிரம் ஏறிவிடுமாம். நல்ல பட்டுநூல்கள் சாயம்போட்டு வைத்திருக்கிறேன். அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் ஏதாவது வேண்டுமா?” என்றான்.
“நீ போனமுறை தந்த வேஷ்டிகளில் ஒன்று உட்காரும்போது நடுவில் கிழிந்துவிட்டது….” என்று சொன்னவுடன். அவன் முகத்தைப் பார்த்தேன். அதற்கு மேல் சொல்ல நாவெழவில்லை. ஏன் அவனிடம் இதைச் சொன்னேன் என்று மனவருத்தம் மேலிட்டது.
“காமு. காமு! இங்கே வா!” என்றான். அவள் வந்தவுடன் ஐயாவுக்குக் கொடுத்த நூறாம் நம்பர் வேஷ்டி எப்போது நெய்தோம் நூல் எப்படி நூற்றாய்? உனக்கு இப்போது வேலை சரியாக ஓடுவதில்லையோ?… ஆ! உன்மேல் தப்பில்லை; கிருஷ்ணன் சாகக்கிடக்கும் போது அவர் 50 ரூபாய் கொடுத்தாரே, அப்பொழுது நான் நெய்த வேஷ்டிதானே; ஏன் கிழிந்தது?…” என்று சொல்லி மனத்தில் ஏதோ ஆலோசனை செய்தான். அவன் மனைவி “அந்த நூல் நாம் நூற்கவில்லையே. யாரிடமோ வாங்கி வந்தோமல்லவா? தவிரவும் கிருஷ்ணன் சாகும்நாள் யாரோ ஒருவரை அந்த வேஷ்டியில் பாதி நெசவு செய்யச் சொன்னீர்களே!” என்று மெதுவாக வருத்தத்தோடு சொன்னாள். இந்தமாதிரி ‘உண்மையே கடவுள் என்ற குடும்பத்தில் ஏன் வீணாக அவர்கள்படும் வருத்தத்தோடு இன்னும் மனவருத்தத்தைக் கூட்டினேன் என்று எண்ணினேன். “ஒருவேளை பலகையில் உட்கார்ந்தபொழுது ஆணிமாட்டிக் கிழித்திருக்கும் என்று சொல்லிப்பார்த்தேன். அது பயன்படாமல் போயிற்று.
“அதைக் கட்டாயம் அனுப்புங்கள் ஐயா. வேறு வேஷ்டி நான் கொடுக்கிறேன். என்மேல் முழத் தப்பு. வேறு நூல் வாங்கியதும் தப்பு. வேறு ஆள்களை நம்பினதும் தப்பு. அதனால்தான் கிருஷ்ணனைக் கடவுள் அழைத்துக் கொண்டார்போலும்…” என்றான். அவன் கண்களில் நீர் ததும்பிற்று. அவன் மனைவி ஒன்றும் பேசாமல் நின்றாள். ‘அதற்கு அவசரமில்லை அப்பா! மில்வேஷ்டிகள் கிழிவதில்லையா? யாரிடம் போய் அதை நான் சொல்லிக்கொள்ள முடியும்? எனக்கு அங்கவஸ்திரம் நாலு வேண்டும். வேஷ்டி நாலு ஜோடி; பாவாடைகளுக்குத் துணி…. இந்தா ஐம்பது ரூபாய்” என்று அவன்கையில் வைத்துவிட்டு வீடு திரும்பினேன். வேஷ்டிகளும் அங்க வஸ்திரங்களும் பெட்டி நிறைய இருந்தும் ஏன் அவ்வளவு ஏராளமாக அவனிடம் நெய்யச் சொன்னேனென்று அப்போது நான் நினைக்கவில்லை.
“அந்த மில் வேஷ்டி என்ன புது தினிசாக இருக்கிறது! கரை என்ன ஒய்யாரம்! என்ன வழவழப்பு! ஆனால்… அது ரொம்ப நாளைக்கு உழைக்காது. கட்டுக்கடை நூல். சீக்கிரம் ‘பட் பட்’டென்று கிழியும்” என்று பின்னால் ஒரு குரல் கேட்கத் திரும்பிப்பார்த்தேன். அவன் குரல்தான். உடனே அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. எலும்புந் தோலுந்தான். அவன் முன்னால் இந்த வேஷ்டி கட்டிவந்ததே எனக்கு வெட்கமாக இருந்தது. ”உன்னிடம் வர அவகாசம் இல்லை அப்பா! என் நண்பன் கல்யாணவீட்டிற்குப் போவதற்கு வேஷ்டிஇல்லை. இதை வாங்கவேண்டி வந்தது. வீட்டிற்குப் போகலாமா? எனக்குத் துணி அதிகம் வேண்டும். என் தங்கை புருஷன் வந்திருக்கிறார். அவரும் என்னைப் போல கையால் நூற்று நெய்த துணிதான் கட்டுகிறார்’ என்றேன்.
ஏன் நான் மில் வேஷ்டி வாங்கியதும், தங்கை புருஷன் வந்ததும் இவனிடம் சொல்ல வேண்டும்? வேஷ்டி நெய்பவன் தானே! அவன் வேஷ்டியைக் கட்டினால் அவனுடன் உறவாடவேண்டுமா? ஹக்கிங்காம் மில் மானேஜரிடம் சுகதுக்கம் ஏன் நான் விசாரிப்பதில்லை?
“வீடு இல்லை ஐயா, எனக்கு அதெல்லாம் விற்றாய்விட்டது!”
“என் மனைவிக்குத் துணி… “
“இப்போ நான் புடவைகள் நெய்வதில்லை ஐயா. கிருஷ்ணனோடு காமாட்சியும் போய்விட்டாள். எனக்குப் புடவை மாதிரிகள் என்ன தெரியும். கண்ணும் மங்கலாய் விட்டது. விசாலம் மாத்திரந்தான் குடிசையிலிருக்கிறாள். என் தறியைக்கூட விற்றுவிட்டேன். துணிகளுக்கு ஆட்கள் அவ்வளவு வருவதில்லை. இப்போது தறி வாடகைக்கு வாங்கித்தான் வேலை. நம்வேலை இனி நிலைக்காது. பரம்பரையாக நெய்துவந்த தொழில் என்னோடு அற்றுப்போகும். கிருஷ்ணன் புண்ணியம் செய்தவன் எனக்குப்பிறகு அவன் நெசவுத் தொழிலை எப்படிச் செய்வான்? அவன் அங்கே ஈஸ்வரனுக்கு ஆடைகள் அழகாக நெய்யட்டும்! இங்கே விளம்பரமும் யந்திரமும்தான் கடைசியாக நிலைபெறும். அது கிடக்கட்டும். உங்களுக்கு என்ன வேணும் ஐயா!”
“வேஷ்டி நாலு ஜோடியும் துண்டுகள் எட்டும் போட்டுக் கொடு” என்று சொல்லி என் வீடு திரும்பினேன்.
முப்பது நாளாய் நான் ஊரில் இல்லை. ஏதோ காரியமாக அயலூர் சென்றிருந்தேன். திரும்பி வீடு வந்ததும் என் மனைவி, ஒரு பெண் பத்து நாட்களுக்கு முன்பு 4 ஜோடி வேஷ்டிகளும். துண்டுகளும் கொடுத்துவிட்டு பாக்கி பணம் 25ரூபாய் கொடுத்ததாகச் சொல்லி. பாக்கி 25 ரூபாய் தரும்படி கேட்டாள். அவள் முகம் வாட்டமாகவும் கண்ணின் பார்வை யதார்த்தமாயும் இருந்தபடியால் உங்களை கேட்காமலே கொடுத்துவிட்டேன்” என்றாள். இது எனக்கு அளவிலா ஆச்சரியமாயிருந்தது. அதுவரையில் அவன் பணமே கேட்டது கிடையாது. நான்தான் கொடுப்பது வழக்கம். எப்போது கொடுப்பேனோ அப்போது வாங்கிக் கொள்வான். ‘ஏன் இப்படிச் செய்தான் பணமுடைதானோ?’ என்று எண்ணி அவன் வீடு சென்றேன்.
அவன் வீட்டில் வேறு யாரோ இருந்தார்கள். சமையலறைக் குடிசை மூடப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்தவர்களைக் கேட்டேன். விசாரித்ததில் சாப்பாடில்லாமல் தன் பெண்ணை எப்படியோ போஷித்துவிட்டு ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதாகச் சொன்னார்கள். திடுக்கிட்டேன்; கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டேன். “நீங்கள் அவனுக்கு உறவினரா? என்று பக்கத்திலுள்ளவர்கள் கேட்டதற்கு.”ஆம். உறவினரைவிட நெருங்கிய சொந்தம். என்னை மரியாதையாகத் துணிகட்டச் செய்தவன் அவன்!’ என்றேன். அவர்கள் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தார்கள்!
– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, திருகோணமலை.