முத்துக்களை மோசடி செய்த வழக்கு

0
கதையாசிரியர்: ,
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்:
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாணிக்கம் என்பவரிடம் இரண்டு நல்முத்துக்கள் இருந்தன. அவை இரண்டும் விலை மதிப்பு உடையவை. நீண்ட நாட்களாக அவைகளை அவர் காப்பாற்றி வந்தார். 

ஒருமுறை அவர் வியாபார விஷயமாக வெளியூர் செல்ல நேரிட்டது. அந்த இரண்டு நல்முத்துக்களையும் வீட்டில் வைத்து விட்டுச் செல்ல அஞ்சினார். தாம் இல்லாத சமயத்தில் திருடர் எவராவது வீட்டில் புகுந்து அந்த நல்முத்துக்களைத் திருடிக்கொண்டு போய் விடக் கூடுமென நினைத்தார். எனவே அவர் தம்முடைய நண்பனான கேசவன் என்பவனிடம் சென்றார். 

“கேசவா, நான் வியாபார விஷயமாக வெளியூர் செல்கிறேன். என்னிடம் இரண்டு நல்முத்துக்கள் இருக்கின்றன. அவற்றை உன்னிடம் கொடுத்து வைத்துவிட்டுப் போகிறேன்” என்று கூறியவாறே இரண்டு நல்முத்துக்களையும் கேசவனிடம் கொடுத்தார் மாணிக்கம். 

மாணிக்கம் வியாபார விஷயமெல்லாம் முடிந்து ஊருக்குத் திரும்பி வந்தார். வந்ததும் கேசவனிடம் சென்று தாம் கொடுத்துச் சென்ற நல்முத்துக்களைத் திரும்பக் கொடுக்குமாறு கேட்டார். 

“நல்முத்துக்களா? யாரிடம் கொடுத்தாய்? கனவு ஏதாவது கண்டுவிட்டு வந்து உளறுகிறாயா?” என்று கேட்டான் கேசவன். 

தம்முடைய நண்பன் இவ்விதம் நடந்து கொள்வான் என்று மாணிக்கம் கனவிலும் நினைக்கவில்லை. இனி அவனிடம் பேசி எந்தவிதப் பயனும் இல்லை என்று நினைத்து மாணிக்கம் நேரே மரியாதைராமனிடம் சென்றார். கேசவன் தன்னை ஏமாற்றி விட்டதைக் கூறினார். 

“அய்யா, உங்கள் வழக்கில் நான் எப்படித் தீர்ப்பு வழங்க முடியும் ? நீங்கள் நல்முத்துக்களைக் கேசவனிடம் கொடுத்தபோது பார்த்ததாகச் சாட்சிகள் கூட இல்லை. அப்படி இருக்கும்போது கேசவனிடமிருந்து எப்படி நல்முத்துக்களை வாங்க முடியும் ? நீங்கள் வீட்டுக்குப் போங்கள். வேறு உபாயம் ஏதாவது செய்வோம் என்று கூறி மாணிக்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் மரியாதைராமன். 

மறுநாள் ஓர் ஆள் அனுப்பிக் கேசவனைக் கூட்டி வரச் சொன்னான் மரியாதைராமன். 

கேசவன் வந்ததும் அவனிடம் ஒரு சிறு பேழையைக் கொடுத்தார். அதற்குள் நிறைய முத்துக்கள் இருந்தன. 

“என்னிடமிருந்த முத்துமாலையின் சரம் அறுந்து விட்டது. நீங்கள் முத்துக்களைக் கோர்ப்பதில் நிபுண ரென்று கேள்விப்பட்டேன். இதில் 100 முத்துக்கள் உள்ளன. இதை மாலையாகக் கோர்த்து வந்து கொடுங்கள்” என்றான் மரியாதைராமன். 

கேசவன் மரியாதைராமன் கொடுத்த பேழையுடன் வீட்டுக்கு வந்தான். பேழையை ஒரு பெட்டியின் மேல் வைத்துவிட்டு அவசரமாகக் கொல்லைப்புறம் சென்றான். 

திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பேழை கீழே விழுந்திருந்தது. அப்பொழுதுதான் ஒரு பூனை அறையில் இருந்து வெளியேவந்து கொண்டிருந்தது. பெட்டிக்குமேல் உள்ள பால் உரிக்காகப் பூனை தாவும்போது பேழை விழுந்திருக்க வேண்டுமெனக் கேசவன் நினைத்தான். 

உடனே கீழே விழுந்து சிதறிக் கிடந்த முத்துக்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து எண்ணினான். 98 முத்துக்கள் இருந்தன. ‘அய்யோ, நீதிபதி 100 முத்துக்கள் கொடுத்தனுப்பினாரே! அவற்றில் 2 குறைகிறதே! எங்கே போயிருக்கும்’ என்று வீடெல்லாம் ஓர் இடம் பாக்கி விடாமல் தேடினான். கடைசி வரையில் 2 முத்துக்கள் கிடைக்கவில்லை. 

‘இப்பொழுது நாம் 98 முத்துக்களை மட்டும் அவசரமாகக் கோர்த்து எடுத்துப்போய்க் கொடுத்தால் 2 முத்துக்களை நாம் திருடிக் கொண்டோமென்று நீதிபதி கடுமையான தண்டனை விதிப்பாரே! இந்தத் தண்டனையில் இருந்து தப்புவது எப்படி?’ என்று நினைத்த கேசவனுக்கு மாணிக்கத்திடம் மோசடி செய்து அபகரித்த இரண்டு முத்துக்களின் நினைவு வந்தது. 

உடனே அந்த இரண்டு முத்துக்களையும் எடுத்துச் சரத்தில் கோர்த்து 100 முத்துக்கள் கொண்ட மாலையாக ஆக்கி விட்டான் கேசவன். 

மறுநாள் கேசவன் முத்துமாலையைக் கொண்டு போய் மரியாதைராமனிடம் கொடுத்ததும் முதல் வேலையாக மரியாதைராமன் முத்துக்களை எண்ணத் தொடங்கினான். 

“நல்லவேளையாக, நாம் நம்மிடம் இருந்த முத்துக்களைச் சேர்த்துக் கோர்த்து வந்தது நல்லதாகப் போய் விட்டது!” என்று கேசவன் நினைத்தான். 

முத்து மாலையிலுள்ள முத்துக்களை எண்ணி முடித்த மரியாதைராமன் தன் பக்கமிருந்த காவலர்களிடம், “இவனைக் கைது செய்யுங்கள்” என்றான். 

காவலர்கள் மரியாதைராமனின் ஆணைப்படி கேசவனைக் கைது செய்யச் சென்றனர். 

“நான் ஒரு பாவமும் அறியேன். நீங்கள் கொடுத்த முத்துக்களையும் மாலையாகக் கோர்த்து வந்திருக்கிறேன்” என்றான் கேசவன். 

“இல்லை. நான் உன்னிடம் கொடுத்தது 98 முத்துக்கள்தான். அப்படியிருக்க இந்த மாலையில் மேற்கொண்டு 2 முத்துக்கள் எப்படி வந்தன என்ற விவரத்தை நீ சொல்லாவிட்டால் உனக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்றான் மரியாதைராமன். 

தண்டனைக்குப் பயந்த கேசவன் மாணிக்கத்திடம் மோசடி செய்து 2 முத்துக்களை அபகரித்துக் கொண்ட தையும், அவைகளையே மாலையில் கோர்த்து எடுத்துக் கொண்டு வந்ததையும் கூறினான். 

அவன் வாயாலேயே உண்மையை வரவழைத்த மரியாதைராமன் மாலையில் அதிகப்படியாகக் கோர்த் திருந்த 2 முத்துக்களை மாணிக்கத்திற்குத் திரும்பக் கொடுத்ததுடன், கேசவனுக்கு ஏமாற்றிய குற்றத்திற்காகத் தண்டனையும் கொடுத்தான். 

– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.

பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்)  மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும்.  புகழ்மிகு கதையிலக்கியங்கள் :  விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *