கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 12, 2025
பார்வையிட்டோர்: 849 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது அசைந்தது. அசைவில் இருந்து உயிர் என்று தெரிந்தது. வெண் கருமையும் சாம்பலும்பூசிய நிறம். பொட்டாய், புள்ளியாய், சிலசமயம் ஒளிக்கீற்றாய் வேகம் கொண்டது. கண்ணில் பட்டும் படாமலும் நொழுந்தியது. கணப்பொழுதுகளில் அங்கு, இங்கு என எங்கும் வியாபகங்கொண்டது. 

எங்களுக்கு முதலில் அது என்ன என்பதே தெரியாமல் இருந்தது. 

“மூஞ்சூறுக் குஞ்சு போலை…” மனைவி கூறினாள். 

‘குஞ்சா… குட்டியா…?” நான் குழம்பினேன். 

“மூஞ்சூறு பகலிலை வராது. இது பகலிலையும் ஓடித்திரியுது. எலிக்குஞ்சாய்த்தானிருக்கும்.” 

“எதெண்டாலும், சனியன் வெட்டிக் கொட்டி, எச்சில் படுத்திப்போடுது. இந்தா, இந்த அடுக்குப் பெட்டியை வெட்டி, ரவையை உருசி பாத்திருக்குது. இந்த ‘பிளாஸ்ரிக்’ டப்பாவைக்கூட வெட்டிப்போட்டுது. புழுங்கல் அரிசி இருந்த பொலித்தீன் பையையும் நன்னிப்பாத்திருக்குது…” 

“எல்லாத்தையும் வெளியிலை போட்டா இப்பிடித்தான் நடக்கும். ‘பான்ரிக் கபேர்டிலை’ எடுத்துவையும்.” 

“ஒரு பூனைக் குட்டியாவது வேணுமப்பா…” அவள் விநயமாகக் கேட்டாள். 

“வரதனிட்டையும்… பாஸ்கரனிட்டையும் சொல்லியிருக்கிறன்…” “பெட்டைக் குட்டி எண்டாலும் பரவாயில்லை… அது வந்தாத்தான் இந்தப் பீடை ஒழியும் போலை…” 

“பெரிய எலியள் இரை எடுக்க இரவிலைதான் வரும். இது விருத்தெரியாமல், இரவு பகல் பாராது பரபரக்குது…” 

“ஒரு குஞ்சல்ல, ஒரே அளவிலை ஒரு கிளைகாலி இருக்கும் போலை…எலி ஒரு சூலிலை ஒம்பது பத்துச் சுமக்குமாம்…” 

அதை அருகில் இருத்தி, அதனுடைய பொசு பொசு உடம்பையும், வட்டக் கண்களையும், சிப்பிக்காதுகளையும் பட்சமாய்த் தொட்டுத் தொட்டுப் பார்த்துப் பேசவேண்டும் போலிருந்தது எனக்கு. கருமையாய் நீண்டு, கூர்மை கொள்ளும் வால் மட்டும் ஏனோ அருவருப்புத் தருவதாயிருந்தது. 

“ஸ்ரீச்… ஸ்ரீச்… ஸ்ரீச்…” 

“எலி கிறீச்சிடுகுது.” 

“இல்லை ரதி…. ஏதோ சிரிப்புச் சத்தம் மாதிரி..” அவள் என்னை ஒரு மாதிரிப் பார்த்தாள். 

நான் செவிப்புலனைக் கூர்மைப்படுத்திக் கொண்டேன். எலி என்னுடன் ஆரவாரமாய்ப் பேசியது: 

“பட்சமாய் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துப் பேசவேணுமா…? இது, புளுகு. பொய். என்னைக் காணும் போதெல்லாம் உன்ரை மனசு விகாரப்பட்டு, கொலை வெறி கொள்ளுது. கையிலை அகப்படுற தடி தண்டோடை கோணங்கித்தனமா, கையையும் காலையும் உதறியபடி, எனக்குப் பின்னாலும் முன்னாலும் ஓடித்திரியிறை… .. இத்தனைக்கும் நீ பெரிய.. படிச்ச மனிசன்..” 

ரதியைப் பார்த்தேன், அவள் மௌனமாக இருந்தாள். 

எலி பேசியது உறுதியானதும், மெலிதான பய உணர்வு என்னுள் ஜிவ் எனப் பற்றிப் படர்ந்தது. உடல் லேசாக வெடவெடத்தது. 

மீளவும், ‘ஸ்ரீச்… ஸ்ரீச்… ஸ்ரீச்…’

“ஒரு அவிழ்.. ஒரு பருக்கை…அதுக்குத்தானே… இப்பிடி ஆலாய்ப் பறக்கிறன்… கண்டும் காணாமை இருந்தாலென்ன? இந்தச் சின்ன.. இத்தினி வயித்துக்குத் தானே இந்தப் பாடெல்லா…” 

முன்னால் வந்து, கால்களைத் தூக்கித் தனது சின்ன வயிற்றை எக்கிக் காட்டியது. ஒரு குழந்தையாகிக் கெஞ்சியது. 

“அதுக்கு, இத்தனை கிரிசை கெட்டதனமான ஆர்ப்பாட்டமா…? போற இடம் வாற இடமெல்லாம் மூத்திரமும் புளுக்கையுமாய்…” 

“என்ன பிசத்தலப்பா… யாரோடை கதை..?” 

என் பிரமையை அவள் கலைத்தாள். 

நாளும் பொழுதும் எலி பற்றிய எண்ணந்தான் மனசை ஆக்கிரமித்துக் கொண்டது. தெருவில் காலாற நடக்கும்போதும், வழியில் காணும் நண்பனுடன் கதைக்கும்போதும், தற்செயலாய்க் கண்ட அழகியின் கீழ்க்கண் ஜாடை மதுரத்தில் திழைக்கும்போதும், ஒதுக்கம் கொண்டு, உள்ளொடுங்கி உறையும் போதும் = எலியின் உரசலும், சொரசொரப்பும், ஈரக்கசிவும் பிணத்தைத் தொட்டதான உணர்வையே என்னுள் ஏற்படுத்தியது. 

நான் அவசர அவசரமாக பான்ரியைத் திறந்து, ஒரு பிடி அரிசியை எடுத்து, பாத்ரூம் சுவரோடும், ஸ்டோர்ரூமுக்கு முன்னாலும், தண்ணீர்க் குழாயின் கீழும் தூவினேன். 

அதைப் பார்த்த அவள் கூறினாள்: 

“நல்ல யோசனையப்பா.. கொஞ்சம் பிழிஞ்ச தேங்காய்ப்பூவும் வைக்கலாம். வந்து கொறிச்சுப் பாத்திட்டுப்போயிடும்.. அங்கை இங்கை எண்டு ஓடி வீட்டை அசிங்கப்படுத்தாது…”

“கொறிச்சிட்டுப் போகுதோ, இல்லை இன்னும் நாலைக் கூட்டிக்கொண்டு வந்து குடும்பம் நடத்துதோ…ஆருக்குத் தெரியும். காலையிலை தான் பார்க்கவேணும்.” 

இரவுச் சாப்பாடு ஆனதும், படிப்பதற்கோ, எழுதுவதற்கோ ஆர்வம் ஏதுமில்லாமல் படுக்கையில் சரிந்தேன். நுளம்புத் தொல்லைக்கு மோட்டீன் கொயில் கூடக் கொழுத்தவில்லை. அயர்ந்து போன சமயம் பார்த்து எனது இடது விலாப்புறத்தைத் தழுவியபடி, ஏதோ குறுகுறுத்தது. அருவருப்புடன் எழுந்து, ரோச்சை அடித்துப் பார்த்தேன். படுக்கையில் அந்தச் சின்னஞ் சிறு தவ்வல். கண்கள் பளிச்சிட, வெட்டும் பற்கள் முன்துருத்த, என்னைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரித்தது. நான் அதைத் தாக்குவதற்கு எதை எடுக்கலாம் என மல்லாடியபோது, அது, “உனக்கும் பெப்பே, உன் அப்பனுக்கும் பெப்பே..” எனக் கூறியபடி, கட்டிலில் இருந்து குதித்து, இறங்கி ஓடியது. 

ரதியைப் பார்த்தேன், அவள் அயர்ந்து தூங்கியபடி… பகல் முழுவதும் அடித்துக் கொடுத்த அலுப்பு அவளுக்கு. ‘பாவம் அவள்’ என நினைத்துக் கொண்டேன். 

படுக்கை விரிப்பை மாற்றிப் போட்டுப் படுத்துக் கொண்டேன். நரைத்த புகைமூட்டத்தினுள் ஒடுங்கிப்போனதான மயக்கம். தெளிவில்லாத நிலை. மந்திர வசப்பட்டவன் போல எழுந்து நடந்தேன். காற்றில் மிதப்பது போல இருந்தது. கால்களை எட்டி எட்டிப் போட்டபடி நடந்தேன். ஏதோ ஈர்ப்பு விசையின் மையப்புள்ளியுள் இழுத்து வீசப்பட்டதான தவிப்பு. பின்னால் ரதியும் அள்ளுண்டு வந்தாள். சிறகடிக்கும் பட்டாம் பூச்சியின் பரவசம் அவளுக்கு. தோற்றத்திலும் அவள் அப்படித்தானிருந்தாள். 

அந்த ஒளிக்கீற்று அடுக்களைப் பக்கம் இருந்துதான் வந்தது. பான்ரிக் கபேர்ட்டுக்கு மேலாக, கிழக்குச் சுவரோரம் பொன்னொளிர் சோதிப் பிரபை; அதன் நடுக்கொள்ள, இரண்டு மதர்த்த எலிகள், தழுவியபடி. எலிகள் புணர்ந்து நான் பார்த்ததில்லை. ஆர்வத்துடன் அணுகினேன். மிக நெருக்கமாய்ச் சென்று பார்த்தபொழுது, அவ் எலிகளின் உடலில் மெலிதான அதிர்வு, முயக்க மதர்ப்பு, இனிய அனுபூதிநிலை. திடீரென என்னுள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது. கொலை வெறியுடன் அங்கும் இங்கும் ஓடினேன். கதவுத் தடுப்புச் சட்டம்தான் கையில் கிடைத்தது. ஒரு அசுரபலத்துடன் ராஜசுகத்தில் திழைத்திருந்த அந்த எலிகளின் மீது வீசி எறிந்தேன். 

மின்னலாய்ப் பேரொளி. பலத்த ஓசையுடன் பக்கத்தில் ஏதோ விழுந்தது போல… ‘பொம்மர் பொழிந்த குண்டா…? ஷெல்லா… புரிபடாமல் தவித்த பொழுது, எனது உடல் பிளவுபட்டு, குருதிக் கலவையுடன், துண்டு துண்டாக நாலா பக்கமும் சிதறியது. 

சதைக் குவியலாய்க் கிடந்த என்னை ரதி வாரி எடுத்து, மடியில் போட்டபடி கதறி அழுதாள். 

“நான் என்ன பாண்டுவா..? அவள்… அவள் குந்தியா… அல்லது மாத்ரியா..? எலிகள் ரிஷியும் ரிஷி பத்தினியுமா..?” 

புகைமூட்டம் லேசாக நீங்க, சுயம் புரிந்தது. வியர்வையில் உடம்பு தெப்பமாய் நனைந்திருந்தது. பக்கத்தில் ரதி எதுவித சலனமும் இன்றித் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது வலது கரம் மட்டும் எனது மார்பில் விழுந்து கிடந்தது. 

அதிகாலையில் மீளவும் அயர்ந்தபொழுது, திரும்பவும் கனவுகள். சற்று வித்தியாசமான காட்சிகள். 

அது நமது ஊர் மாதிரி இல்லை. அனந்தமூர்த்தியின் சமஸ்காராவில் வரும் அக்கிரகாரம் மாதிரி இருந்தது. எங்கு பார்த்தாலும் எலிகள் பொத்துப் பொத்தென்று விழுந்து செத்துக் கொண்டிருந்தன. நாரணப்பா மாதிரி ஒரு உருவம் பிணமாகக் கிடந்தது. அவனுக்குப் பக்கத்தில் சுடரும் பொற்குடம் போல, தலைவிரி கோலத்தில் சந்திரி. மறுகணம் காட்சி மாறியது. நாரணப்பா அல்ல அது; எனது உடல் கிடப்பது போலவும், எனது மனைவி ரதி அருகிருந்து புலம்புவது போலவும் இருந்தது. பக்கத்திலும் அழுகுரல். ‘யாரது குணமா..? வரதனா… சுகிர்தாவா… சாந்தியா..? உயிர் மாய்ந்த உடல்கள் தூரம் தூரமாய், உருத்தெரியாமல் சிதைந்து, வடிவம் கெட்டுக் கிடந்தன. 

பட்டவேம்படி வைரவர் கோவில் பக்கம் கோவில் பூசகர் கிடந்தார்; கனிந்து, கரைந்து, வெடித்த வெள்ளரிப்பழம்போல. திருமணமாகாதவர், யாரோ ஒருத்தி அவருக்கு அருகாக அழுது புலம்பியபடி… ‘அவரது காதலியா? அல்லது அல்லது..? எல்லாமே குழம்பிய நிலையில். ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது, எலிகளால் கொள்ளை நோய் ஊருக்குள் வந்துவிட்டது என்பதுதான் அது. 

‘இது எப்படி… எப்படிச் சாத்தியமாகியது…? எலிகள் ஒன்றாய்… பத்தாய்..நுறாய்… ஆயிரமாய்… ஒருபேரலையாய்… எள்ளுப்பொட்டை மணற்பரப்பில் கொட்டியது போல, ஊருக்குள் படை எடுத்து விட்டனவா…?” 

சிறிசாயும் பெரிசாயும் விஸ்வரூபம் கொண்டும் – கோணங்கித் தனமான தொள தொள அங்கிகளுடன், கனத்த பூட்சுகள் தடதட எனச் சப்திக்க, எரிதழல் உமிழும் கைத்தடிகளைச் சுழற்றியபடி நடந்தன. விடைத்துப்பருத்த தமது விதைகளைக் கால்களில் தாங்கியபடி, எதிர்படும் எல்லாப் பெண் எலிகளையும் தேடித் தேடி மடக்கிப் புணர்ந்தன. புணர்ச்சியால் எங்கும் இரத்தக் கசிவும் மரண ஓலமுமே மிஞ்சியது. ஒரு பக்கம் பிணங்கள் விழுந்து கொண்டிருந்தன. எலிகளும் கூடவே அதீத புணர்ச்சியால் செத்து மடிந்தன. 

இது கொள்ளை நோய்தான். 

வீட்டின் முன்னால், பின்வளவில், அரசடியில், மதவடியில், மில்லடியில், மடத்தடியில், இலந்தை வனத்தில், பட்டவேம்படியில், சாட்டி மாதாகோவில் பக்கமாக உருமாறி, வெடித்து, தயிர் வெள்ளையாய்… கட்டி மஞ்சளாய்… சீழ்வடிய நெளியும் புழுக்களுடன் உடல்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. 

‘நமது வாழ்வை, வளத்தை, ஊரின் அழகை, அடையாளங்களை அனைத்தையுமே துடைத்து, வழித்துத் தடம் தெரியாமல் நாசப்படுத்தத்தான் இந்தக் கொள்ளை நோய் இங்கு வந்ததா…?” 

நான் நிலை குலைந்து, மனம் பதறியபோது, காட்சி மீளவும் மாறியது. 

அமைதியான நீர்ப்பரப்பு. சிற்றலைகளின் சிறு நடனம். தெளிவும் துல்லியமும் நிறைந்த அந்த நீர்ப்பரப்பு – அதன் அடித்தளம் வரை பளிங்கியது. எங்கோ வானத்தில் இருந்து விழுந்த நீர்த்திவலை பேட்டை நினைத்துப் பரவசித்த ஆண் பறவையின் ஸ்கலிதத்துளியா அது நீர்ப்பரப்பைச் சலனித்தது. அத்திவலை தோற்றுவித்த நீர்வளையம் பெரிதாகியது. அதனுள்ளே ஒன்று. அதனுள் இன்னொன்று, அடுத்து ஒன்று எனப் பல நீர்வளையங்கள். அவற்றைப் பிளந்தபடி வெள்ளிப் பந்து, பாதரச உருண்டை, பூமிப்பந்துபோல, அதன் மேலாக, அவன், அந்த அழகன் தோன்றினான். எல்லாமே கண்கட்டுவித்தை போல இருந்தது. 

அவன் உயரமாய் ஒடிசலாய் இருந்தான். பார்த்ததும் பட்சம் கொள்ளும் தோற்றம். இறுக்கமான சிவப்பு ஆடை அணிந்திருந்தான். தலைப்பாகை மட்டும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அவனது அகன்ற கண்களில் பிரியமான பார்வையின் இங்கிதம். உதடுகள் சிவந்து கிடந்தன. முழந்தாளுக்குக் கீழாகச் சரிந்து வழிந்து கிடக்கும் கரங்கள். மீசையில்லாததால் பெண்மையின் நளினமும் லாவகமும் அவனில் தோய்ந்து கிடந்தது. அவனது வலது கரம் நீளமான, சற்று அடிப்பாகம் வளைந்த – இசைக்கருவி ஒன்றைத் தாங்கி இருந்தது. 

சதாகாலமும் அவனது உதடுகள் ஏதோ மந்திரத்தை உச்சாடனம் செய்தபடி இருந்தன. 

நீர்ப்பரப்பில் இருந்து அவன் தரைக்கு வந்தான். அவனது கவர்ச்சியில் வசப்பட்ட நான், அவனை அண்மித்தவேளை கண்களைச் சிமிட்டியபடி, எனது பதிலெதையும் எதிர்பாராதவனாய், தனது இசைக்கருவியை வாசிக்கத் தொடங்கினான். 

அவனது வாத்தியத்திலிருந்து அமிர்த வர்ஷமாய் இசை பொழிந்தது. மின்னொளிர் வெள்ளிப் பூக்களாய், பசுந்தளிரின் பனிக்குளிரின் சொடுக்கலாய், சிறு சிட்டின் அடிவயிற்று மென்சிறகின் மென்தழுவலாய் எங்கும் இசை பொம்மியது. 

என்ன அதிசயம்! அவனது அந்த இசையின் பிணிப்பில் ஈர்க்கப்பட்ட எலிகள், தமது பொந்துகளில் இருந்து தொகை தொகையாக வெளிவந்தன. அவ்வெலிகள் வெவ்வேறு பருமனில், வெவ்வேறு நிறங்களில் இருந்தன. 

வெள்ளை, சாம்பல், சாம்பல் கலந்த வெள்ளை, கறுப்பு, கபிலம், இளமஞ்சள், கரும்பச்சை, கரும்பச்சையில் கபிலப்புள்ளிகள் என… 

அவன் ஊரின் பிரதான வீதிகள், ஒழுங்கைகள், கை ஒழுங்கைகள், தோட்டம், துரவு, வயல், வரப்பு, வெட்டைகள், பனந்தோப்புகள், பற்றைக்காடு என எல்லா இடங்களிலும் உலா வந்தான். ஊரில் உள்ள எலிகள் எல்லாமே அவன் பின்னால் வரிசை கட்டின. அவனது இசையில் மயங்கி அவன் பின்னால் திரண்டன. குறிப்பாகப் படையினர் பொதிந்த காப்பரண்களை -அண்டிய வளைகளில் இருந்துதான் அதிக அளவில் வந்தன. 

அவ்வெலிகளில் சில, நடக்கமுடியாமல் தடம் தப்பி -நடை போட்டன. அவை வல்லடி வம்பில் காயப்பட்டவை போலும். சில இளசுகள் அவனது இசைக்கேற்ப நடனமிடவும் செய்தன. சில ஆண் எலிகளும் பெண் எலிகளும் காமவசப்பட்டவையாய் ஒன்றை ஒன்று தழுவியபடி நடந்தன. எலிகள் மட்டுமா…? நானும் அவனது நாத வெள்ளத்தில் கிறங்கி, அவனுடன் அள்ளுண்டு சென்றேன். அவனது வேகத்துக்கு என்னால் ஈடுகொடுத்து நடக்கமுடியவில்லை. இருந்தும் விடாக் கண்டனாய் அவனைத் தொடர்ந்தபடி கேட்டேன்: 

“நீங்கள் ஹம்லின் நகரத்துப் பைட்பைப்பரா…? 

“முட்டாளே… என்னைத் தெரியவில்லை..! நா… நான் உங்கள் ஊரவன்தான்…..இந்த ஊரின் வாழ்விலும், வளத்திலும், அழுத்தும் துயரிலும் கலந்து கரைபவன் நான்…” 

என்று கூறியபடி பொங்கிப் பொங்கிச் சிரித்தான். அவனது சிரிப்பொலி அவனது இசை ஒலியுடன் போட்டி போட்டது. 

அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது. ஜல தாரையின் பிரவாகம் கண்முன்னே கரைபுரண்டது. ஒதுங்கி நின்ற எனது கால்களையும் தழுவியபடி நீர் வெள்ளிக் கீற்றாய் பாய்ந்தது. அந்த ஆற்றின் இரு மருங்கும் அடர்ந்த காட்டு மரங்கள், மூர்க்கமான வளர்ச்சி காட்டி, புடைத்துப் பருத்து வசீகரித்தன. அம்மரங்களின் இருள் அடர்ந்த இலைகளில் இருந்து ஒளி கசிந்து, துளித்துளியாய் தரையில் சிந்தியது; பொன்கட்டியாய் உறைந்தது. என் ஸ்பரிசம் பட்டுப்பனி நீராய் உருகி மாயமாய் மறைந்தது. 

புலன்களை மீறிய போதையில் நனைந்து நான், ஸ்தம்பித்துப் போனேன். எலிகளுடன் அந்த இசைவாணனும் ஆற்றில் இறங்கியதைப் பார்த்தேன். ஏகனாய் தோன்றியவன், அனேகனாய்க் காட்சி தந்தான். ஒன்றன் பின் ஒன்றாய், அவனும் எலிகளும் மாறி மாறி நீர்ப்பரப்பில் இறங்கி மறைவதைப் பார்த்தபடி நின்றேன். 

அந்த இசைஞனை மீளவும் பார்க்கவேண்டும் போலிருந்தது. இசையை மீளவும் கேட்க வேண்டும் போலிருந்தது. அழுத்தமாய் உடன் இருந்த ஏதோ ஒன்று விலகியதான பரிதவிப்பு. 

திடீரென விழிப்புக் கொண்டு, எழுந்து உட்கார்ந்து கொண்டேன். எல்லாமே பொய்யாய்ப் போனது போலிருந்தது. அந்த மன இறுக்கத்தில் இருந்து விடுபட்டவனாய், மனதில் கிளர்ந்த ஒரு வகை வன்மத்துடன், பகைமை உணர்வுடன் ‘இன்று அந்த எலிக்குஞ்சுக்குச் சுவர்க்க பிராப்திதான்..’ என்று கறுவியபடி, கதவுச் சட்டத்தையும் ரோச்சையும் எடுத்துக் கொண்டேன். அடுக்களைப் பக்கம்தான் கால்கள் நகர்ந்தன. அடுக்களைக் கதவை மெதுவாகத் திறந்து, ரோச்சை அடித்துப் பார்த்தேன். கறுத்த மணிக் கண்கள் பளபளக்க, அந்தக் குஞ்சு எலி பான்ரிக்கபேர்ட் பக்கமாக இருந்தது. புகட்டை நோக்கி அது தாவியது. ஏதோ காரணம் பற்றி, ரதி சப்புப் பலகைக் துண்டுகள் சிலவற்றைப் புகட்டின்மேல் போட்டிருந்தாள். 

புகட்டில் சுவருடன் அவை சாத்தப்பட்டிருந்தன. அதனுள் அந்த எலி ஒழித்துக்கொண்டது. கையில் இருந்த சட்டம் சப்புப்பலகைத் துண்டின் மீது விழுந்தது. பலகையை அகற்றிப் பார்த்தேன். கட்டை விரல் அளவுகூட அது இருக்கவில்லை. சடுதியில் அதற்கு முடிவுவந்துவிட்டது. வாய்வழி ஒரு துளி இரத்தம் வேறு கசிந்திருந்தது. திடீரென மனசை சுயவெறுப்பு கவ்விக் கொண்டது. அதேசமயம் ‘செய்தது சரி.. சரி என்று உள்ளிருந்து ஏதோ அரற்றவும் செய்தது. 

“மரணம் வந்த உடனே எலி விறைத்துவிடுமாப்பா… இங்க அது கிடக்கிற கோலத்தைப் பாருங்க…” 

கூறியபடி ரதி அந்தச் செத்த எலியை எடுத்து வீட்டின் பின் வளவுப் பக்கமாக வீசினாள். 

அந்த எலிக்குஞ்சின் பொசுபொசு உடலும் வட்டக் கண்களும் சிப்பிக் காதுகளும் சிதைந்து என் அடி மனதில் உறைந்துபோனதான உணர்வே என்னுள் மிஞ்சியது. 

சமையல் அறையில் இருந்து ரதி விழுந்தடித்தபடி வெளியே ஓடிவந்தாள். 

“ஒண்டில்லை அப்பா… இங்க இன்னும் இரண்டு குஞ்சுகள் ஓடுதுகள்..” 

எனக்குத் திகைப்பாக இருந்தது. ‘நம்மால் முடியாத காரியம் இது’ என மனசு மட்டும் சொல்லிக் கொண்டது. 

– மல்லிகை, ஜூலை 1999.

– புதியவர்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2006, பொன்னி வெளியீடு, சென்னை.

க.சட்டநாதன் க.சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர். நவீன கலை இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சட்டநாதன், மார்க்ஸிம் கோர்க்கி, ஆன்டன் செக்காவ், புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியவர்களைத் தன் இலக்கிய ஆதர்சங்களாகக் கருதுகிறார். இவரது முதல் சிறுகதை ‘நாணயம்’ 1970-ல் 'வீரகேசரி' இதழில் வெளிவந்தது. 1972-74 காலப்பகுதியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *