முடிவில் தொடங்கும் கதைகள்





(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கூடத்துச் சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய படத்தை உற்று நோக்கியபடியே அமர்ந்திருந்தான் மஹ்ரூப். பொன் வண்ணச் சரிகை மின்னும் கருநிறத் துகில் போர்த்த கஃபதுல்லாஹ்… அதைச் சூழவும் எறும்புகளைப்போல் வெண்ணிற ஆடை மனிதர்கள்… என்ன அழகு…! கருமையை மிஞ்சும் வெண்மை…!
மாலை மயங்கி இருள் கவ்விக்கொண்டிருந்தது. அதிகாலையிலே எழுந்த வியாபாரத்துக்குக் கிளம்பிச் சென்ற போதும் வெறுங்கையுடன் திரும்பி வந்த எரிச்சல் நெஞ்சில் வியாபித்து நின்றது.
மனைவி கொண்டுவந்த சூடான தேநீரை அருந்தி விட்டு எழுந்தான். வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை இவன் வெளியே போகிறான் என்பதை உணர்ந்து, ஓடிவந்து காலைக் கட்டிக்கொண்டது.
தூக்கி இரு கன்னங்களிலும் முத்தமிட்டுவிட்டு, அழும் குழந்தையை பின்னால் நின்ற மனைவியிடம் எரிச்சலுடன் நீட்டினான். தெருவில் இறங்கினான்.
மஃரிப் தொழுகைக்கான (மாலைநேர வழிபாடு) பாங்கோசை கேட்டது. நடையை விரைவாக்கினான்.
இம்முறையும் உம்ராவுக்குச் (முஸ்லிம்கள் மக்கா சென்று நிறைவேற்றும் வழிபாடு ) சென்று வந்தால் என்ன? திடுமென யோசனை தோன்றிற்று. டல்லடிக்கும் வியாபாரம், துரத்தும் தொலைபேசி அழைப்புகள், திரும்பிவிட்ட காசோலைகள், மனைவியின் தொணதொணப்பு, குழந்தையின் நடுநிசிக் கதறல்.. இவை யாவற்றையும் விட்டு இரண்டு வாரங்களுக்கு நிம்மதியாக இருக்கலாமே….
சென்ற ரம்ழானில் உம்ராவை நிறைவேற்றச் சென்று இருமலுடன் திரும்பி வந்தாலும்கூட மக்காவில் பெற்ற சுகானுபவம்! மீண்டும் எப்போது காணலாம் அந்த இறை இல்லத்தை….?
விரைந்து பள்ளிவாசல் படி கடந்து தொட்டியில் இருந்த நீரில் (அங்க சுத்தி ) செய்துவிட்டு ஸப்புடன் (தொழுகைக்கான வரிசையுடன்) இணைந்துகொண்டான். மஃரிப் தொழுகையை நிறைவேற்றி முடித்தபோது இம்முறை உம்ராவுக்குச் சென்றே தீருவது என்ற எண்ணம் உறுதியாயிருந்தது.
வங்கியில் எடுத்த பணம் ரூபா ஐம்பதினாயிரத்தையும், கடவுச்சீட்டையும் எடுத்துக்கொண்டு தனக்குப் பிரியமான அந்த ஹஜ் முகவர் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டி ருந்தான் மஹ்ரூப். முன்பு இரு தடவைகள் ஹஜ் யாத்திரையை மேற் கொண்டதும், சென்ற ரம்ழானில் உம்ராவை மேற்கொண்டதும் இதே ‘ஸஹ்ரா ட்ரவல்ஸ்’ ஊடாகவே.
இந்த முகவர்கள் குளிரூட்டப்பட்ட தங்குமிட வசதி களையும், சுவையான உணவு வகைகளையும் பிரமாதமாக ஏற்பாடு செய்வார்கள். கட்டணம் கொஞ்சம் அதிகம் தான். மீதியை பிறகு தரலாம்.
இரண்டு தினங்களுக்கு முன்னால் பேச்சுவாக்கில் மனைவியிடம் தனது தீர்மானத்தைத் தெரிவித்திருந்தான். அமீனா அவனைவிட இறை பக்தி மிக்கவள். எனினும்கூட, அவனது தீர்மானத்திற்கு திடீரென்று அவளால் உடன்பட முடிய வில்லை.
நடுநிசியில் விழித்தெழுந்து தந்தையைத் தேடும் குழந்தைக்கு என்ன பதில் சொல்லி சமாதானப்படுத்துவது என்ற திகைப்பே முதலில் எழுந்தது அவளுக்கு. ஒன்றிரண்டு நாட்களா? பதினைந்து நாட்கள்..!
எனினும், அவளது பயபக்தி வென்றது. “அவர் மக்காவிலிருந்து கொணர்ந்தது” என்று மற்ற பெண்களிடம் காட்டி மகிழத்தக்க பொருள்கள் பரிசாகக் கிடைக்கும் என்ற நப்பாசையும், ‘அமீனாட புருஷன் நாலு முறை மக்காவுக்குப் போனவருடி” என்று தன் முதுகுக்குப் பின்னால் பிற பெண்கள் பேசிக்கொள்ளும்போது ஏற்படுகின்ற பெருமிதமுமாக அவளைக் கிளர்த்த, இறுதியில் “அல்லாட பாதையில போறதுக்கென்ன?” என்று ஒப்புதல் கொடுத்துவிட்டாள்.
செலான் வங்கிக்கு எதிரே செல்கின்ற வீதியில் திரும்பி நடந்தான். வீதியின் முனையில் ‘ஸஹ்ரா ட்ரவல்ஸ்’ அமைந்திருக்கிறது.
சந்தடியற்ற வீதி. கெகிறாவையில் மிக அழகான இடம் இந்தப் பகுதிதான். இரு மருங்கிலும் நிழல் மரங்கள். சுட்டெரிக்கும் வெயிலில்கூட சுகமாக நடந்து செல்லலாம்.
இளைஞர்களும் யுவதிகளும் சாரிசாரியாகப் போய்க் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் ஆங்கில மொழி கற்பிக்கின்ற தனியார் நிலையம்.
“ஹலோ” என்ற குரல் கேட்டுத் திரும்பினான். நஜீபுல்லாஹ்! ‘English Academy’ எனப் பெயர் குறிக்கப்பட்ட அந்தக் கட்டடத்தின் நுழைவாயிலுக்கருகே நின்று கொண்டி ருந்தான்.
நஜீபுல்லாஹ் சுற்றுவட்டாரத்தில் பிரபலமான ஆங்கில மொழி ஆசிரியன். அரசாங்க உத்தியோகத்தைக் கைகழுவி விட்டு தனியார் துறையுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டவன். கம்பீரமான இளைஞன். ஏறக்குறைய மஹ்ரூபின் வயது. நண்பனும்கூட.
“என்ன இந்தப் பக்கம்?”
மஹ்ரூப் விஷயத்தைச் சொன்னான். நீண்ட நாட் களாகக் காணாதிருந்த ஒரு நெருங்கிய உறவினனைக் கட்டித் தழுவுவது போல அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான் நஜீபுல்லாஹ்.
முதுகிலே செல்லமாகத் தட்டி “சென்ற முறையும் போனாய்தானே?” என்று கேட்டான்.
“போனேன்தான். ஆனா ஒவ்வொரு வருஷமும் போய்ப் பாக்கணும்போல இருக்கு…”‘
அவனது கைகளைப் பற்றியபடியே சேர்ந்து நடந்தான் நஜீபுல்லாஹ்.
“ஏன் அப்படி?”
நண்பனுடன் பேசுவதற்காகத் தனது நடை வேகத்தைக் குறைத்துக்கொண்டவனாக மஹ்ரூப் சொன்னான்.
”ஒவ்வொரு வருஷமும் மக்காவுக்குப் போகணும்டா. அது ஒரு பேராசை மாதிரி. போனதும் முதல் தடவையா கஃபாவைப் பாக்குற சந்தோஷம் இருக்கே… அத வார்த்தையால சொல்ல முடியாதுடா…”
இரு வினாடிகள் அந்த அபூர்வ அனுபவத்தில் மௌனமாகத் திளைத்தபின் தொடர்ந்தான்.
“உனக்குத் தெரியுமா? போனமுறை உம்ரா போன நேரம் ஒருவரை சந்திச்சேன். டியூனீசியாவுல இருந்து வந்தவர். நாப்பது வருஷமா தொடர்ந்து உம்ராவுக்கு வந்து போறாராம்…”
நஜீபுல்லாஹ் மெல்லிசாய்ச் சிரித்துக்கொண்டான். பொது விளையாட்டு மைதானத்தைக் கடந்து இருவரும் நடந்துகொண்டிருந்தார்கள். முற்பகல் வெயில் சுரீரென உறைக்கத் தொடங்கியிருந்தது. மைதானத்தின் ஓரங்களில் நின்றிருந்த பென்னம் பெரிய வாகை மரங்கள் இராட்சத குடை பிடித்திருந்தன.
இளம் ஆண்களும், பெண்களும் நேரகாலம் மறந்து மரங்களுக்குக் கீழே உட்கார்ந்திருந்தார்கள். யாருமே சந்தோஷமாக இல்லை. எதைப்பற்றியோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
“டியூட்டரிகளுக்கு வாற மெஜாரிட்டி கேஸஸ் இப்படித் தான்….”
திடுமென நஜீபுல்லாஹ் சொன்னான். மஹ்ரூப் ஆமோதிப்பது போல தலையை ஆட்டிக்கொண்டான்.
“ஆரம்பத்துல சந்தோஷமா இருப்பாங்க. போகப் போக எல்லாம் தேய்ஞ்சி போயிரும். இவங்கட ப்ரெண்ட்ஷிப் ஒரு வருஷம்கூட நீடிக்கிறதில்ல…”
“அதுசரி, நீ கல்யாணம் பண்ணுற ஐடியா இல்லையா?”
“வை நொட்? இந்த வருஷம் பார். ஜாம் ஜாம் ஜாம்….” இருவரும் கலகலத்துச் சிரித்தார்கள்.
“பக்கத்து வீட்டான் பசித்திருக்க வயிறு நிரம்ப சாப்பிடுறவன் உண்மை முஸ்லிம் இல்ல. உனக்குத் தெரியுமா?”
பேச்சு திசை மாறியதை எதிர்பாராத மஹ்ரூப் அதிசய மாக அவனைப் பார்த்தான்.
“நீ கையில வெச்சிருக்கிற இந்தப் பணத்தக்கொண்டு ஹஜ்ஜைவிட, உம்ராவைவிட மேலான எத்தனையோ விஷயங்களைச் செய்யலாம். ஏழைகள், அனாதைகள், பலவீனர்கள், விதவைகள், அகதிகள்… இவங்களுக்கு உதவணும்டு நீ நெனச்சிப் பாத்ததில்லையா….”
“நா மட்டும் தனிச்சி என்ன செய்யப் போறேன்…?”
மஹ்ரூபின் பேச்சில் லேசான தடுமாற்றம்.
“ஒவ்வொரு முறையும் ஹஜ் செய்யப்போற இருபது லட்சம் மக்களுக்கு மத்தியில மூணு லட்சம் பேர் மட்டும் தான் முதல் தடவையா ஹஜ் செய்யிறாங்க. மத்த எல்லாருமே ரெண்டாவது, மூணாவது தடவை மக்காவுக்குப் போறவங்க.”
“உனக்கு அதெல்லாம் வெளங்காது நஜீப், ஒவ்வொரு வருஷமும் மக்காவுல காலடி வெக்கிறதுக்கும், கஃபாவைக் கண்ணால் காணுறதுக்கும் நாங்க படுற பாடு…” என்று சலித்துக்கொண்டான் மஹ்ரூப்.
“ஹஜ் வாழ்க்கையில ஒரு தடவதானே கடமை….? உம்ரா அப்படிக்கூட இல்லையே.. அது கட்டாயமான கடமை இல்ல. இப்படி நீங்க எல்லாம் பதறியடிச்சுக்கொண்டு ஹஜ்ஜூன்டும், உம்ரான்டும் போகும்போது முதல் தடவையா மக்காவுக்குப் போயி கஃபாவைக் கண்ணால பாக்கணும்டு ஆசைப்படுற மத்த ஹாஜிகளுக்கெல்லாம் எத்தனை சிரமம் …? அளவுக்கு மீறிய நெருக்கடியால நோயாளிகளும். வயசாலி களும் படுற கஷ்டங்களப்பத்தி கொஞ்சம் நெனச்சிப்பாரு…”
ஏதோ மக்காவுக்கு நேரில் சென்று இறையில்லமான கஃபதுல்லாஹ்வை நேரில் தரிசித்தவன்போன்று அவன் பேச, மஹ்ரூப் மேலும் வியப்புடன் அவனைப் பார்த்தான்.
“மருத்துவம்… கல்வி… சமூகசேவை… அப்படிக்கூட போக வேணாம். பசியாலயும்,பட்டினியாலயும் கஷ்டப்படுற இந்த ஊர்ல உள்ள சாதாரண மக்களப்பத்தியாவது நீ ஏன் யோசிச்ச தில்ல…? இவங்கள சந்தோஷப்படுத்த நீ எடுக்கிற சின்ன முயற்சிக்குக்கூட பெரிய கூலி இருக்கே…! இதெல்லாம் விட்டுட்டு குடும்பத்தையும், உன்னையும் கஷ்டப் படுத்திக் கொண்டு மக்காவுக்குப் போய்த்தான் நீ அல்லாஹ்வை அடையணுமா? நீ வெச்சிருக்கிற இந்தப் பணத்த பத்து பேருக்கு பங்கிட்டுக்கொடுத்தா பத்து குடும்பங்கள் சந்தோஷமா வாழாதா? உன்னை வாழ்த்தாதா…? ”
கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக்கொண்டே நஜீபுல்லாஹ் வந்துகொண்டிருந்தான்.
எதிரே சுமார் இருபது அடி தூரத்தில் முகவர் நிலையம். மஹ்ரூப் கையில் இருந்த பணம் கனப்பதை உணர்ந்தான்.
– மல்லிகை, மே 2003.
– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.