கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 25, 2025
பார்வையிட்டோர்: 797 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கல்முனை சாய்ந்தமருதைச் சேர்ந்த என்.ஏ.தீரன் (ஆர்.எம். நௌஷாத்) 1960ல் பிறந்தவர். தபால் அதிபராகத் தொழில் புரியும் இவர், பேராதனைப் பல்கலைக் கழக வெளிவாரிப் பட்டப் படிப்பின் முதற் கலைமாணி கல்வித் தகைமையுடையவர். கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகிறார். பிரான்ஸ் (தினக்குரல்) தமிழ்ஒலி வானொலியின் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசும் சான்றிதழும், பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசும் (தங்கப் பதக்கம்) பெற்றுள்ளார். 

இவரது முகவரி:-தபால் அலுவலகம், கல்முனை. 

பேரு….? 

முகம்மது யூஸுப் அப்துல்லா. 

ஊரு? 

காங்கேயன் ஓடை. மட்டக்களப்பு. 

என்ன விஸயமா வந்தீங்க? 

ஸேர்! போன மாசமும் வந்தநான். அங்கயீனருக்கான உதவிக் காசி வெசயமா… ந்தாயிருக்கு ஸேர் பைல் நம்பர்… 

ஙா… செரி… செரி.. ஆனா உங்கட பைலில ‘டயக்னஸிஸ் கார்ட்’ ல்லையே… 

காட்டா? போன மாசந்தானே ஸேர் ரெண்டு ‘ரிப்போட்டு’ ‘செட்டிகட்டு குறையுது ண்டு கொண்டு வந்து தந்துட்டன் ஸேர்! 

ஓம். அது சரி… ஆனா அதுல ‘எப் ஐ போம்’, ‘பேத் சீ’, ஜீயெஸ் ரெக்கமன்டன்ஸ்’ ‘பொலிஸ் என்ட்ரி’ எல்லாம் சரி. ஆனா ‘டயக்னஸிஸ் கார்ட்’ ல்லை. 

அப்பிடியெண்டா….? 

‘ஒஸ்பிற்றல்’ல அனுமதிச்சதுக்கு தாற ரிப்போர்ட்டு! ‘டயக்னஸிஸ் கார்ட்’ 

அதுக்கு நான் என்ன ஸேர் செய்யனும்? 

ஒஸ்பிற்றல்ல எடுக்கனும். எடுத்துட்டு வாங்க. 

ப்ப எப்பிடி ஸேர் எடுக்கிற? ஊருக்கு போய் வெரணும். ரெண்டு மூணு கௌமயாயிடும் ஸேர். 

அதுக்கு நான் என்ன செய்யிற? கார் ஒண்டு பிடிச்சித்தரவா? போய் எடுத்துட்டு அடுத்த கெளம ல்லாட்டால் அடுத்த மாதம் வாங்க!’ 

அடுத்த மாசமா? என்ன ஸேர் இது? கை வெளங்காத என்னப் போட்டு ப்பிடி அலைய வெய்க்கறீங்க… எம்பத்தாறு எனக்கலவரத்தில என்ட கை பிஞ்சி பறந்த ஸேர்! பாருங்க ஸேர்! 

என்ன மடத்தனமா பேசறீங்க? மிஸ்டர்! ‘டயக்னஸிஸ் கார்ட் ல்லாம் ‘மெற்றர’ எப்பிடி’ சப்மிற்’ பண்ற? ‘எக்கவுண்டன்’ மூலக் கொதியன். 

‘பைல்’ மூஞ்சிக்கு வெரும். எறிவான்! உனக்கென்ன? எனக்குத்தானே? 

செரி..செரி…கோவிக்காதீங்க ஸேர். எடுத்திட்டு வாறன் 

பேரு..? 

முகம்மது யூஸுப் அப்துல்லா. 

ஊரு….? 

காங்கேயன் ஓடை. மட்டக்களப்பு. 

எப்ப நடந்த? 

எம்பத்தாறாமாண்டு. எனக்கலவரத்துல ஐயா! 

எங்க? 

ஊருலதான் ஐயா. 

அதில்ல… எந்த ஒஸ்பிற்றல்ல மொதல்ல இருந்த நீர்? 

ஞ்சதான்..ஏத்தி உட்டாங்க ஐயா. 

திகதி தெரியுமா? 

எம்பத்தாறு ஏப்புரல் பதினாறு ல்லாட்டி பதினேழு. 

தேடனும். எப்ஆர்ஐ முழுதும் தேடனும். ‘சப்ஜெக்ட் கிளார்க்’ லீவு. அடுத்த கிளம வாங்க……. 

அடுத்த கிளமயா? எனக்கி அவிசிரமா வேணும் ஐயா. நாளைக்கி கொழும்புக்கு அனுப்பனும். 

அதுக்கு நான் என்னப்பு செய்யிற ? நீர் முந்தி வந்திருக்கனும்! 

முந்தி அங்க கேக்கல்ல ஐயா. 

அங்க கேக்காததுக்கு நானா பள்ளி ? அடுத்த கௌம வாருமன்! 

கொஞ்சம் அவிசிரம் ஐயா! எனக்கலவரத்துல என்ட தகப்பன்காரன் மீன் யாவாரத்துல போனவரு கடத்தி மௌத்தாய்ட்டாரு. அவரத் தேடிப்போன எடத்துல எனக்கி ஆமிக்காறன் வெடி வெச்ச. ந்தப் பார்ங்க ஐயா……ந்தக்கய் பிஞ்சி பறந்துட்டு ஐயா. 

ப்படி ஆயிரம் புராணம் கேட்டுட்டன். எண்பத்தி ஆறாம் ஆண்டு எண்டால் எப்ஆர்ஐ பாக்கனும். அதுக்கு ஏஓ வேனும் அப்பு சப்ஜெக்கு செய்யிற 

அடுக்கிறவள்ச்சி லீவு. வரிசத்துக்கு மூணு எண்டல்லே 

ஐயா, காலப் புடிச்சன். அங்கயினர் காசி எடுக்க மூணு வரிசமா அலைறன். கொஞ்சம் எரக்கம் காட்டுங்க ஐயா. நான் கை வெளங்காதவன். -இனக்கலவரத்துல நீரும் முன்னுக்கு நிண்டிருப்பீர். ஆருகண்டா? அதவிடும். ப்ப எடுக்க ஏலாது. ஆள் லீவு கண்டியோ? உமக்கு அவிசிரமா டெம்பரரியா வேணுமெண்டா’ ஒஸ்பிற்றல் பொலிஸ்’ ரிப்போட்டிலயும் இருக்குமப்பு. அங்க போய் எடும். கெதியா ஓடுமன்! 

நீங்க தெரமாட்டிங்களா ஐயா? 

தமுள்ளதானே சொன்ன நான்! ‘சப்ஜெக்ட்டு க்ளாக் மெற்றினிற்றி லீவு’ எண்டு. ஏஓ தான் அந்த வேல பாக்குறவர். சைன் பன்றவரு. நான் ல்லப்பு. இடத்தக் காலி பண்ணு அப்பு. 

அவரு…ஏஓ எப்ப வெருவாரு 

அது அவரின்ர பெண்டிலுக்கெல்லோ தெரியும்? பருத்தித்துறையில இருக்கினம். கேட்டுச்சொல்லவே? 

ஒஸ்பிற்றல் பொலிஸ் எங்க ஐயா இருக்கி? 


நம…? நம..? பேரு……….? 

முகம்மது யூஸுப் அப்துல்லா. மாத்தயா! 

கம….? ஊரு…? 

காங்கேயன் ஓடை. வெற்றிக்களோ மாத்தயா! 

கவதா மே சிதுவுனே…? 

‘சிங்குளம்’ தெரியா மாத்தயா! 

ஹெட்ட எண்டகோ! 

எம்பத்தாறு எனக்கலவரத்துல… ஊருல… 

மே மச்சாங்! பொட்டக் எண்டகோ! மெயாகென் டிக்க அஹன்ன! 

அந்த மாத்தயாவுக்கு தமுள் வௌங்குமா மாத்தயா? 

அடோ, ஆர்டா நீ…கைல என்னடா பொல்லு? 

கய் ஒண்டு ல்ல மாத்தயா… எம்பத்தாறு எனக்கலவரத்துல…. 

ப்ப நீ வந்த என்னடா வள்ளா? 

இதப் பாருங்க மாத்தயா…. இந்த டைக்னிஸ் ரிப்போட்டு வேணும். மினிஸ்ற்றியில கேக்காஹ… அங்கயீனருக்கான…. 

ஏய்… வள்ளா! இது ஒஸ்பிற்றல்ல எடு ஓய்! 

ஒஸ்பிற்றல்ல சொணங்குமாம் மாத்தயா…ஒரு மாசம் போவ்மாம். ஆள் லீவாம். எனக்கி அவிசிரமா வேணும். ஞ்சயும் ‘கொப்பி’ எடுக்கலாம் ண்டு….

வள்ளா! நீ ஒஸ்பிற்றல்ல வந்த ‘டேட்டும்’ டைமும்தான் ஞ்ச எடுக்கலாம்.

செரி மாத்தயா…அவிசிரமா அது வேணும். …ண்டைக்கே எடுக்கலாமா மாத்தயா? 

.ண்டைக்க எடுக்கலாம்டா வள்ளா! நில்றா அப்பிடிப் போயி! 

செரி மாத்தயா! நான் அங்கயீனன். கடத்தின வாப்பாவத் தேடிப் போய் ஆமிக்காரன், வெடி வெச்ச…. 

‘கொட்டி’யா சுட்ட எண்டு சொல்றா வள்ளா! 

செரி மாத்தயா….ப்ப எண்ட ந்த ரிப்போட்டக் கொஞ்சம்…. 

ரிப்போட்டுல சைன் பண்ற ஓஐஸி அந்தா குடிச்சிட்டுப் படுக்கான். போய் எளுப்பி சைன் கேப்பியாடா வள்ளா? புடிச்சி மத்தக் கய்ய முறிச்சி ரிமாண்டுல போட்டு மூத்திரம் பருக்குவான். ம்ம்ஞ்ஞ்ம்……….? 

அப்ப நாளக்கி வெரயா மாத்தயா…

ப்ப போடா வள்ளா… பளயாங் ஹூத்தோவ்! 


பேரு….? 

முகம்மது யூஸுப் அப்துல்லா. சேர்! 

என்ன வெசயமா வந்தீங்க….? 

அஞ்சாறு வரிசமா அலைறன் சேர். அங்கயீனருக்கான ஒதவிக் காசி வெசயமா……..ந்த பைல் நம்பரு………. 

ங …… சரி….சரி…நீ அனுப்பின ரிப்போர்ட் ஸேர்க்குலர்ல கேட்ட

ரிப்போர்ட் இல்ல. நாங்க கேட்டது டயக்னஸிஸ் கார்ட். ஆனா இது

‘ஓபீட்டி’என்ட்ரி ஓஐசி ஸைன் பண்ணிச் சரிவராது. அப்படியெண்டா இத உறுதிப்படுத்தி டொக்டரும், ரெஜிஸ்ட்டாரும் ப்ராங் பண்ணி கவுண்டர் சைன் பண்ணணும். என்ன மடத்தனம் இது? 

தெரியா ஸேர்! அவங்க இது போதும் எண்டாங்க. ‘கை’ ஒண்டு இல்லாத நான்.. 

டயக்னஸிஸ் கார்ட் வேணும்! 

அப்ப…. நான்….? 

எடுத்துட்டு அடுத்த கிளம வாங்க. 


பேரு….? 

முகம்மது யூஸுப் அப்துல்லா… 

ஊரு…? 

காங்கேயனோடை. மட்டக்களப்பு. எம்பத்தாறு எனக்கலவரத்துல… 

– கலாபூஷணம் புலோலியூர் கே.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகள். தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன்.

– சிறைப்பட்டிருத்தல் (ஞானம் பரிசுச் சிறுகதைகள் 2006), முதற் பதிப்பு: டிசம்பர் 2006, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *