மீன்களைத் தின்ற ஆறு
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆத்துப் பீலிக்கு குளிக்கப் போவதென்றால் உள்ளம் பூத்து விடும் சிங்க மலையடிவாரத்தில் இருந்து கீழிறங்கும் ஆறு, அதன் ஆழம், சலனமின்றிப்பாயும் தனித்துவம் வார்த்தைகளில் அடங்காது. குளிர்ந்துக் கிடக்கும் ஆற்று நீரை அள்ளி முகத்தில் அறைந்தால் போதும் எல்லா அசதியும் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.
சிறு நதியாய் பாய்ந்து வரும் ஆறு சில இடங்களில் குட்டையாய் தேங்கி நிற்கும். நதியின் பாதையில் குறுக்கிட்டு கிடக்கும் கருங்கற்கள் தெளிந்த ஆற்று நீரில் தன் முகம் காட்டும் போது அதை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. நதியின் இரு மருங்கும் வளர்ந்து நிற்கும் கருபந்தேயிலை மரங்கள் நதிக்கு இன்னும் பலமூட்டின.
சனி ஞாயிற்றுக் கிழமைகளில் என்றால் ஆத்துப் பீலியில் கூட்டத்துக்கு குறைவிருக்காது. கொலனி சனம் கூடி விட்டால் ஆறு தன் அமைதியை இழந்து விடும். ஆங்காங்கு உள்ள கிடங்குகளில் அவரவர் தம் அழுக்குகளை கரைத்துப் போனாலும் ஒருபோதும் அழுக்காகாத நதி எத்தனை யதார்தப் பாடங்களைச் சொல்லித்தருகிறது என்று நினைக்கும் போதெல்லாம் அதன் மீது மரியாதை கூடும்.
பருவத்தில் பெய்யும் மழை எப்போதாவது பெரு வெள்ளமாய் பெருக்கெடுத்துப் பாயும் நாட்களில் நதி காவிச் செல்லும் அழுக்குகளை கண்டால் நெஞ்சு கணக்கும். எவ்வளவு சுலபமாய் நம் அழுக்குகளை நதியின் தலையில் சுமத்தி விடுகிறோம்.
மழை வெள்ளத்துக்கு மறுநாள் ஆத்துப்பீலிக்கு போகவில்லை என்றால் சிவாவுக்கும் ராசுவுக்கும் தலையே வெடித்து விடும். மறுநாள் ஆறு வெள்ளையடிக்கப்பட்ட வீடு போல அவ்வளவு சுத்தமாக இருக்கும் அன்று வழமைக்கு மாறாக அதிகமான நேரத்தை ஆற்றில் கழிப்பது இருவருக்கும் புதிதல்ல பால்யத்தில் இருந்து வளர்ந்த நெருக்கம் இருவரையும் இணைபிரியாமல் இணைத்திருந்தது. பேசிக்கடந்த துாரத்தை விடவும் பேசாமல் கிடக்கும் பாலியல் ரகசியங்களை எல்லாம் ஆத்துப்பீலியில் ஆதங்கமாய் கொட்டித் தீர்த்துக் கொள்வர்.
ஆண் பெண் உறவுப் பற்றி பேசுவதற்கும் கதைப்பதற்கும் ராசு பேரார்வமாய் இருப்பான் நாளுக்கு நாள் பூக்கும் சந்தேகங்களை கேட்டுத்துறுவி எடுத்துவிடுவான். சிவாவும் மாத்ரபூதம் டொக்டர் கணக்காய் அவன் சந்தேகங்களை அவப்போது தீர்த்து வைப்பான். சில நேரங்களில் பேசுவதற்கும் கேட்பதற்கும் கூச்சப்படுகின்ற விடயங்களைக் கூட நாகூசாமல் கேட்டுவிட்டு அசடு வழிய நிற்பான் ராசு. அப்போதெல்லாம் சிவாவுக்கு தெரியாது ராசு கௌரியோடு காதலில் ஆழ்ந்திருப்பது.
பெண்ணுடல் பற்றிய ரகசியங்களை எல்லாம் கேட்டறிவதிலும் தேடி வாசிப்பதிலும் ராசு மும்முரமாய் இருப்பான். அது பற்றி என்னக் கேட்டாலும் லெக்ஷர் பண்ண சிவா ரெடியாக இருப்பான்.
பாடப்புத்தகங்களை வாசிக்கிறார்களோ இல்லையோ பலான விடயங்களை வாசிப்பதில் குறை வைக்க மாட்டார்கள் எல்லோரும் ஓ.எல். பாஸ் பண்ணி ஏ.எல் போக தயாராகிக் கொண்டிருந்தப் போதுதான் ராசு கௌரியை இழுத்துக் கொண்டு ஓடியது தோட்டத்தில் எல்லோருக்கும் பெருமதிர்ச்சியை தந்தது.
அதன் பின்பு காலம் தன் இயல்பில் ஓடிக் பத்து வருடங்களை கடந்திருந்தது.
ஆத்துப்பீலிக்கு போகும் வழியில் உள்ள புல்லுக்காணில்தான் வரிச்சிசுவரால் ஏறிநிற்கும் ஒற்றை அறையொன்றை அமைத்திருந்தான் ராசு. அருகில் சலசலத்துப்பாயும் ஆறும் ஒற்றையறை மண் குடிசையும் அதைச் சுற்றி வளர்ந்துக்கிடக்கும் கோரைப்புற்களும் உள்ளத்தில் படிந்த ஒப்பற்ற ஓவியமாய் மனசை நிறைக்கும்.
ஓவ்வொரு முறையும் ராசு வீட்டைத்தாண்டி ஆத்துப்பீலிக்கு போகும் போதெல்லாம் சிவாவின் தலையைக் கண்டால் போதும் அம்மாளும் அப்புக்குட்டியும் பழைய பெயிண்ட் வாளிகளோடு ஆத்துக்குகிளம்பி விடுவார்கள். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை பாறை இடுக்குகளில் ஒழிந்து வாழும் மீன்களை பிடித்து விளையாடுவதில் அவர்களுக்கு அப்படியொரு மகிழ்ச்சி மீன் கிடைக்காதப் போது கோலாட்டம் பிடிப்பதும் இல்லையென்றால் சேற்றுப்பகுதியில் கிடக்கும் கொரத்தை மீன்களைப்பிடித்து மகிழ்வதும் வழமையாகி இருந்தது.
ராசுவுக்கு பின் அவர்கள்தான் பழைய உறவை மீண்டும் புதுப்பித்து தந்தார்கள்.அப்புக்குட்டி அசப்பில் அப்படியே ராசுவை உரித்து வைத்துக் கொண்டு வந்திருந்தான். தோற்றத்தில் மட்டுமல்ல பேச்சிலும் கூட நறுக்கு தெரித்தாற்போல வெட்டு ஒன்று துண்டு இரண்டெனப் பேசிவிடுவான்.
ஆத்துப்பீலிக்கு வந்து விட்டால் மீன்பிடிக்கும் ஆர்வம் சிவாவையும் தொற்றிக் கொள்ளும். அப்போதெல்லாம் அப்புக்குட்டியும் அம்மாளும் அவனின் சகநண்பர்களாகி விடுவார்கள். சாரத்தை விரித்து பிடித்து ஒரு பக்கத்தை நீரினுள் அமிழ்த்தி மறுபக்கத்தை உயர்த்திப் பிடித்துக் கொள்ள வேண்டும் அப்புக்குட்டிதான் மேலிருந்து மீன்களை விரட்டி வருவான்.
மீன்கள் சரியாக சாரத்துக்குள் வந்து விழுந்ததும் சாரத்தை சுருட்டி துாக்கி எடுத்து விட வேண்டும் கண்ணில் எண்ணையை ஊற்றிக்கொண்டு மீன்களை விரட்டிவரும் அப்புக்குட்டி சாரத்தை விரித்துப் பார்க்காமலே அதற்குள் எத்தனை மீன்கள் இருக்கின்றன என்று சொல்லி விடுவது சிவாவுக்கு வியப்பாக இருக்கும்.
தோட்டத்தில் இருந்து விலகிக் கிடக்கும் ராசு வீட்டை அம்மாளு, அப்புக்குட்டியின் சத்தங்கள் மட்டுமே நிறைக்கும். ராசு பொழப்புத் தேடி கொழும்பில் கிடந்தான். மாதமொருமுறை வந்துப் போகும் போதெல்லாம் அம்மாளு அப்பாவின் பிரிவுக்காய் அதிகம் அழுவாள். அப்போதெல்லாம் அதிகமான நாட்கள் அவள் தன் துக்கத்தை மீன் பிடித்துத்தான் தீர்த்துக் கொள்வாள்.
அங்கு பிடிக்கப்படும் மீன்களை அப்புக்குட்டி தன் வீட்டு கிணற்றில் கொண்டு வந்து விட்டு விடுவதால் இப்போது அவன் வீட்டு கிணற்றில் அதிகமான மீன்கள் பரவியிருந்தன.
கொழும்பில் சில்லறைக் கடையொன்றில் வேலை பார்க்கும் ராசுவுக்கு மாதமொரு முறை வீட்டுக்கு வராவிட்டால் தலை வெடித்து விடுமாற் போலிருக்கும். ஒரு மாதமாய் சிறுகச் சிறுக சேமிக்கும் கனவுகளோடுதான் கொழும்பில் இருந்து பஸ் ஏறுவான். கொழும்பில் பஸ் ஏறி விட்டான் என்றால் அவனுள் கிளர்ந்தெழும் பட்டாம் பூச்சிகளை அவனால் கணக்கிட்டுக் கொள்ள முடியாது. இளமை பொலிவோடு இருக்கும் கௌரியை நினைத்து விட்டாலே மனசு நெகிழ்ந்து விடும். பிரிவு தரும் துயரம் வளர்க்கும் தீக்கு கௌரி வார்க்கும் நீர் பாலைவன கானலென அமைந்து விடுவதால் ராசு உள்ளுக்குள் புழுங்குவான். ஒவ்வொரு முறையும் நடுச்சாமத்தில் வீட்டுக்கு வருவதும் மறுநாள் நடுச்சாமத்தில் கொழும்புக்கு ஓடுவதும் அவனுள் விரக்தியை விதைத்திருந்தது.
கொழும்பில் இருந்து வீட்டுக்கு வந்தால் ஒற்றையறையில் எல்லோரும் ஒன்னுமன்னாய் இருப்பதை பெரும் அசௌகரியமாய் உணர்வான். கழுத்தை இறுகக் கட்டிகொண்டு பல்லி போல் அவன் மார்போடு துாங்கிக் கிடக்கும் அப்புக்குட்டியும் அப்பாவோடு யார் துாங்குவது என்று போராடி களைத்து ஒருபுறம் துாங்கிக் கிடக்கும் அம்மாளுவையும் சமாளிப்பதற்கே அரையிரவை செலவழிக்க வேண்டிவரும் அப்போதெல்லாம் சிறுகச் சிறுக சேமித்து வருவதைக் கொண்டு வீட்டைக் கொஞ்சம் இழுத்துக் கட்டிவிட்டால் அம்மாளுக்கு தனியறை கொடுக்க வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் கனவாக வளர்ந்திருந்தது.
ராசு குடும்பம் தோட்டத்தில் பேர் போன குடும்பம் சீனி கங்காணி குடும்பம் என்றால் தோட்டத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சீனி கங்காணியின் வாரிசுகள் ஒவ்வொருவராய் குடும்பமாகி வம்சம் தழைத்தளவுக்கு வீடு தழைக்க வில்லை கடைக்குட்டிதான் ராசு. இது இப்படி இருக்கும் போதுதான் கௌரியோடு காதலில் கிடந்து அவளை கைப்பிடித்தான்.லயத்தின் சரி நடுமத்தியில் அமைந்து விட்ட வீட்டை விசாலப்படுத்த முடியாத வலியை சீனி கங்காணி தோட்ட நிர்வாகத்தை வசவுகளால் தாக்கி சமாதானமடைந்ததோடு தன் காலத்தை கழித்திருந்தார்.
ராசுவின் வேகம் பற்றி சொல்லவும் வேண்டுமா? குடும்பமான நாளில் இருந்து ஆங்காங்கு தலைகாட்டிய முரண்பாடுகள், உள்ளுக்குள் வைரமாய் விழுந்த ஆக்ரோசம் ஒரு நாள் தீர்க்க முடியாத முரண் பாடாய் குடும்பத்தின் பிணைப்பை சிதைத்தெறிந்தது. அது உள்ளுக்குள் வளர்த்த வைராக்கியம் ஒரு இரவில் வரிச்சி சுவராய் ஏறி ஒற்றை அறையுடன் உரு கொண்டெழுந்தது.அன்று முதல் அவ் ஒற்றையறையே அவர்களின் தாம்பத்தியத்திற்கு நிழல் இரைக்கத் தொடங்கியது.
ஒற்றை அறையின் அறுவடையே அம்மாளும் அப்புக்குட்டியும்.
கண்ணில் காணும் தின்பண்டங்களை எல்லாம் வாங்கிக் கட்டிக் கொண்டு தோள் கணக்க ஹட்டனில் வந்து இறங்கினாலும் உள்ளத்தில் பூத்துக் கிடக்கும் சந்தோசங்களால் எல்லாவற்றையும் மறந்து அவன் கால்கள் வீட்டை நோக்கி நகரும். அப்போதெல்லாம் விறுவிறுவென வளர்ந்து நிற்கும் அம்மாள் பற்றி நினைத்தால் உள்ளுக்குள் பயம் மூழும்.
கொழும்பில் இருந்து வீட்டுக்கு வரும் போதெல்லாம் வீட்டு வளவுகளில் மண்டிக்கிடக்கும் புல் பூண்டுகளை அழித்து சுத்தப்படுத்துவதும் அந்தி சாயும் நேரத்தில் ஆத்துப் பீலிக்கு குளிக்கப் போவதும் வழமையாகி இருந்தது. ராசுவும் கௌரியும் பேசிப் பேசிப் தீராத எல்லா கதைகளையும் ஆத்துப்பீலி அறிந்திருந்தது.
ஆத்துப்பீலிக்கு போகும் வழியில் உதிர்ந்துக் கிடக்கும் ஒடி விறகுகளை பொறுக்கிக் கொண்டே வந்து எல்லாவற்றையும் ஒரு இடத்தில் நிறைத்து விட்டுத்தான் உடுப்புகளை கழுவத் தொடங்குவார்கள். அப்போது அம்மாளும் அப்புக்குட்டியும் வேறெரு உலகில் சஞ்சரித்திருப்பர். அது வண்ண மீன்களால் வடிவமைக்கப்பட்ட உலகம்.
ஆனப் பாறையைச் சுற்றி கீழிறங்கும் நதி சற்று உயரத்தில் இருந்து இறங்கிப் பாய்வதால் பாறை இடுக்கில் செருகப்பட்டிருக்கும் வாழை மட்டையின் வழி இறங்கும் நீர் சோவென இரையும். ஆத்துப் பீலிக்கு அந்தப் பக்கம் மீன் பிடித்து திரியும் அம்மாளும் அப்புக்குட்டியும் கூப்பிடும் வரை இந்தப் பக்கம் வரார் என்பது அவர்களின் நம்பிக்கையாய் இருந்தது.
மீன்களின் உலகம் அம்மாளு அப்புக்குட்டியினுள் மிக விசாலமாகப் பரவியிருந்தது. அன்றும் மற்றொரு மழைநாளுக்கு மறுநாள் வழமை போலவே சிவாவும் குளிக்க கிளம்பி இருந்தான். அம்மாளும் அப்புக்குட்டியும் அவனுக்கு முன்னால் ஆற்றை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். ஆனால் வழமைக்கு மாறாக அவர்களின் கைகளில் மீன்களைத் தாங்கும் வாளிகளை காணவில்லை.
நேற்று பெய்த மழை ஆத்துப்பீலியின் அழுக்குகளை அழகாய் கழுவியிருந்தது. தெளிந்தோடும் நீரில் நீந்தித் திரியும் மீன்கள் சிவாவின் ஆர்வத்தை தூண்டி விட்டுக் கொண்டிருந்தன. அம்மாளுவையும் அப்புக்குட்டியையும் அப்போது அங்கு காணவில்லை.
ஆத்துப்பீலி கிடங்கை விட்டால் அதிக மீன்கள் கிடைக்கும் கிடங்கு ஆனப்பாறை கிடங்குதான். என்பது எல்லோருக்கும் தெரியும். பாறையின் ஒரு அந்தத்தில் இருந்து மறு அந்தத்தை அடைந்து ஆனப்பாறை பள்ளத்துக்கு தாவிக் குதித்தப் போது சிவா அதிர்ச்சியில் உறைந்துப் போனான்.
அப்புக்குட்டியை கீழே போட்டு அவன் மீதேறி படுத்துக் கொண்டு தன் பிட்டத்தை தீவிரமாய் இயக்கிக் கொண்டிருந்தாள் அம்மாள் உடல் நடுங்கி வெலவெலத்துப் போக குப்பென வியர்த்துக் கொட்டியது அவனுக்கு அவனை சற்றும் எதிர்பார்த்திராத அம்மாளின் கண்ணில் பயம் வழிந்துக் கொண்டிருந்தது. அப்புக்குட்டி அவள் பாவாடைக்கு பின்னால் ஒழிந்து நின்றான்.
அதிர்ச்சியில் தொண்டை விக்கித்துப் போய் நின்ற அம்மாளுவின் காது சிவாவின் விரல்களில் சிக்கி நசுங்கிக் கொண்டிருந்தது. வலி தாளா அவள் கண்களில் நீர் கசிந்திருந்தது. ஆவேசமாய் அவன் கையை விலத்தி ”எங்கப்பா இப்பிடித்தான் அம்மாவுக்கு செய்வாரு நீங்க பாக்கல” என்று கோபமாய் கூறி விட்டு அப்புக்குட்டியை கூட்டிக் கொண்டு ஆத்துப்பீலியை கடந்து ஓடிக் கொண்டிருந்தாள். ஆனப்பாறை கிடங்கில் உடலை லேசாக்கி கைகளை அகல விரித்து மிதந்துக்கிடந்தான் சிவா.சில்லென கிடக்கும் ஆற்று நீர் வழமைக்கு மாறாக சுட்டது.
சலசலத்துப்பாயும் ஆறும் ஒற்றையறை மண் குடிசையும் அதைச் சுற்றி வளர்ந்துக் கிடக்கும் கோரைப்புற்களும் நிறம் மங்கிய ஓவியமென அவன் உள்ளத்தை அரித்தது.
இத்தனைக்காலம் ஆறு வளர்த்து வந்த மீன்களை தின்று விட்டதாய் மனசு கனத்தது.
– ‘தீ’ ஆண்டு மலர்
– மீன்களைத் தின்ற ஆறு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 2016, பெருவிரல் கலை இலக்கியா இயக்கம், இலங்கை.
![]() |
சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: July 6, 2025
பார்வையிட்டோர்: 1,004
