மின்னுவதெல்லாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 93 
 
 

“அத்தை வீடு எங்கே இருக்கு…
ஆத்துக்கு அக்கரையில.”

கீதா மற்றும் லதா என்ற இரண்டு சிறுமிகள், பாடலாக உரைத்துக்கொண்டே வீதியில் விளையாடிக்கொண்டிருந்தனர் ஒருத்தி கை நிறைய ஆற்று மணலும் அதில் சொருகி வைத்த ஒரு குச்சியுடன் இருக்க அவள் கண்களை பொத்தியபடியே நடந்து வந்த மற்றொருத்தி என இருவரும் அந்த கிராமத்து வீதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். வீடுகளும் தோட்டமும் அடுத்தடுத்து அமைந்திருந்த தெருவில் ஒரு வேலிக்கருகே கையில் இருந்த மணலை வைக்க செய்தவள் கண்களை பொத்தி வைத்தபடியே திரும்ப ஆரம்ப இடத்திற்கே அழைத்து வந்தாள்.

அந்த மண் வைத்த இடம் எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டும் – விளையாட்டின் விதி அது.

அந்த வீதியில் வீடுகளும் தோட்டங்களும், கோழி கூண்டுகளும் ஒருவருக்கொன்று பக்கமாக அமைந்திருந்தன.

“போடி கீதா. போய் குச்சியை தேடி எடுத்துட்டு வா” மிதப்பாக கூறினாள் லதா. சிறிது நேரம் தேடுவது போல பாவனை செய்த கீதா.வேகமாக வேலியருகே சென்று அடையாள குச்சியை எடுத்து வந்தாள். கண்களை மூடியிருந்தவளுக்கு எப்படி சரியாக அந்த இடம் தெரிந்தது?

உன் கண்ணை பொத்தித்தானே அழைத்து செல்கிறேன் சரியாக எப்படித் தெரிஞ்சிச்சு?” என்றாள் லதா, வியப்புடன்.

“நீ யோசிச்சு பாக்கணும்! நேற்று ரொட்டிக்கடை வாசலில வைச்சாய், ”பன்” வாசனை அடையாளமா எடுத்தேன். இப்போ வேலியோரம் நித்யமல்லி பூ வாசம்; அதையே அடையாளமா எடுத்தேன்,” என்றாள் கீதா, தன்னம்பிக்கையுடன்.

“அப்போ… நீ மூக்கால பாக்கறியா?” என்று கிண்டலுடன் கேட்டாள் லதா.

“சும்மா இல்லடி! அன்னிக்கு போஸ்ட் ஆபீஸ் பக்கம் முத்திரை குத்தும் சத்தம் கேட்டது ; இரும்பு கதவு கையில் உரசியது இதெல்லாம் நீ மணலை வைக்க சொல்லும்போது அந்த இடங்களின் அடையாளமாக கவனித்துக்கொண்டேன் . கண்ணை மூடிக்கொண்டாலும் நம்மை சுற்றிலும் கவனம் இருக்கணும், அதுதான் விளையாட்டு!” என்று சிரித்தாள் கீதா.

மழை வாசம் வீசும் மாலை நேரம். வானம் இருட்டத் தொடங்கியது.

“ஏய் …. இருட்ட போகுது. மழை வரமாதிரி வேற இருக்கு. திண்ணையில் உட்கார்ந்து ஏழு கல் விளையாடலாம் வாடி” என்றாள் லதா.

“பார்த்தியா … அடுத்து உன் முறை . உன் கண்ணை பொத்தி விளையாடனும். நீ தோற்று போயிடுவ . அதனால தப்பிக்க பாக்கறியா” என்று சிரித்தாள் கீதா.

சிரித்தபடியே அவர்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்து விளையாடத் தொடங்கினர். சிரிப்பு, சண்டை, கிண்டல்—அத்தனையும் கலந்த கலகலக்கும் பசுமை குழந்தைப் பருவம்.

அப்போது திடீரென…

“பளிச்!” ஒரு வெளிச்சம் மின்னியது. இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

“அதோ பாரு… அங்கே என்னவோ மின்னுது!” என்றாள் கீதா.

“அது மின்னல் இல்லடி. மழை சாரலில் தெருவிளக்கு ஒளி விளங்கியிருக்கும். பசும் மழை தூறலில் ஒளி அந்த மாதிரி தெரிகிறது,” என்றாள் லதா.

“அல்ல, ஏய் . மின்மினி பூச்சி பறக்குதோ

“இல்ல… உடைந்த கண்ணாடி துண்டு கிடந்திருக்கும், அது மேல விளக்கு வெளிச்சம் பட்டு இப்படி தெரிகிறது.

“அதுவும் இல்ல! வேலிக்கு பக்கத்தில் புகையிலை பேப்பர் கிடந்திருக்கும், அதுல விளக்கொளி பட்டு அப்படி தெரிகிறதோ என்னவோ…”

மாறி மாறி கற்பனைகள், யூகங்கள், வாதங்கள் – முடிவில் இருவரும் சிரிப்பில் கரைந்தனர்.

அந்த ஒளிக்கீறலைப் பற்றி தீர்வில்லாமல் பேசிக்கொண்டிருந்தபோது, கீதா திடீரென ஒரு கதை நினைவு கூர்ந்தாள்:

“உனக்கு ஒன்று தெரியுமா இந்த மாதிரி இரவு நேரத்திலதான் நாகப்பாம்பு ரத்தினத்தை கக்குமாம். அந்த மாதிரி இருக்குமோ ? “அட ச்சே! அது எல்லாம் கதைகள்தான்,” என்றாலும், கடந்த வாரம் தோட்டத்தில் பார்த்த பாம்பு நினைவுக்கு வந்தது. இருவரும் சிறிது பயத்தில் உறைந்தனர்.

“வாடி….. வீட்டில போய் சொல்லலாம் ….

சும்மா இருடி. அந்தி இருட்டிலே, வேலிக்கு பக்கத்திலே ஏன் போனீங்க என்று திட்டுவாங்க. காலையில அண்ணன் கிட்ட சொல்லலாம்” என்று தீர்மானித்தனர்.. அதற்கு மேல் விளையாட்டில் ஆர்வமில்லை இருவருக்கும். இரவு சாப்பிட்டு உறங்க சென்றபின்னும் இதே நினைவுதான்.அந்த ஒளி… அவர்களின் கனவில் கூட தெரிந்தது.

மறுநாள் காலை. கொல்லைப்புறத்து கிணற்றடியில் நின்று, தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு அண்ணனை அழைத்தாள் கீதா.

“அண்ணா! நேத்து மாலை வேலிக்கிட்ட ஒரு வெளிச்சம் பளிச்ன்னு மின்னியது. நாகரத்தினம் மாதிரி இருக்கு. உங்களுக்கு இன்று அதிர்ஷ்ட நாள்!” . போய் பாருங்க:” என்றாள்

அப்படியா பாப்பா. நாகரத்தினம் கிடைக்கட்டும். பூஜை பண்ணி எடுத்துட்டு, உனக்கு பாதி ; எனக்கு பாதி என்று சிரித்தார் அந்த அண்ணன் .

அவர் அவசரமாக அந்த இடத்திற்கு சென்று, சிறிது நேரத்தில் கையை பின்னால் மறைத்து வந்தார். “ அண்ணா அங்கே என்ன இருந்தது” என்றாள் கீதா வெகு ஆவலுடன்.

ஹா….ஹா என்று சிரித்த அண்ணன் “டட்டடாங் ” என்று ஒரு நீளமான டார்ச் லைட்டை எடுத்துக்காட்டினார். “அது வேற ஒண்ணுமில்ல பாப்பா. நேற்று சாயங்காலம் மாட்டுக்கு வைக்கோல் போரிலிருந்து வைக்கோல் பிடுங்கி போட்ட போது டார்ச் லைட்ட கீழே வைத்தேன் . எடுத்துட்டு போக மறந்துட்டேன். ஆஃப் பண்ணாம இருந்துச்சு அதுக்கு மேல அணில் போல ஏதாவது ஓடியிருக்கும். அது மின்னி மின்னி உன் கண்களுக்கு தெரிஞ்சிருக்கு”.

கீதா மற்றும் லதா முகமெங்கும் சிரிப்பே.

“ஆனாலும்… உங்களுக்குள்ள கற்பனை அபாரம் பாப்பா!” என்றார் அண்ணா புன்னகையுடன்

“இருந்தாலும், டார்ச் லைட்டை நீங்க தேட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே காட்டிவிட்டோமா இல்லையா” இருவரும் சிரித்து, சமாளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *