மாலவல்லியின் தியாகம்






(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27
இருபத்தைந்தாவது அத்தியாயம்
இவள் ஒரு அனாதை!
சிறு மலைக் குன்றுகளும் மரங்களும் நிறைந்த அந்தப் பகுதிகளிடையே குதிரைமேல் ஏறிச்சென்றாலும், முன்னால் சென்ற மனிதர்களைத் துரத்திச் செல்வது மிகக் கடினமாகத்தான் இருந்தது. முன்னால் சென்ற அவர்கள் தங்களுக்குப் பின்னால் இருவர் குதிரைமீதேறித் தங்களைத் துரத்திக் கொண்டு வருவதை யறிந்து மலைக் குன்றுகளிடையே மறைந்து மறைந்து செல்லத் தொடங்கினர். அவர்கள் கைப்பிடியில் சிக்கிய பெண் அலறித் துடித்த வண்ணமே இருந்தாள். பிருதிவீபதியின் குதிரைக்கு வெகு தூரத்துக்குப் பின்னால் சந்தகரின் குதிரை வந்து கொண்டிருந்தது. குதிரையில் வேகமாகச் சென்ற பிருதிவீபதிக்கு முன்னால் ஓடோடி மலைக் குன்றுகளுக்கிடையே பதுங்கிச் செல்லும் மனிதர்களின் உருவமும், அவர்கள் உடையும் அவர்கள் கையில் வைத்திருந்த தீப்பத்த வெளிச்சத்தில் நன்கு தெரிந்தன.

அவர்கள் அணிந்திருந்த உடையிலிருந்து அவர்கள் போர் வீரர்களாகவோ அல்லது அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருக்க வேண்டுமென்பதை உணர்ந்து கொண்டான். அவர்கள் இடையில் உறையிலிடப்பட்ட நீண்ட வாள் தொங்கிக் கொண்டிருந்தது. இந்த நிசி வேளையில் ஆயுதங்களோடு இருக்கும் இவர்களோடு எவ்வித ஆயுதமும் இல்லாதிருக்கும் தன்னால் போரிட்டுச் சமாளிப்பது கடினம் என்றே அவனுக்குத் தோன்றியது. இருப்பினும் ஒரு பெண்ணைப் பலாத்காரமாகத் தூக்கிச் செல்லும் அவர்களை எளிதில் விட்டுவிடவும் அவனுக்கு விருப்பமில்லை. மேடும் பள்ளமுமான அந்த இடத்தில் தன் குதிரையை அதி வேகமாகச் செலுத்தினான். பிருதிவீபதி கிட்டத்தட்ட அவர்களை நெருங்கிய சமயத்தில் முன்னால் சென்றவர்கள் தங்கள் கையிலுள்ள தீப்பந்தங்களை அவிழ்த்து விட்டு இருளில் மறைய முயற்சித்தனர். ஆனால் அவர்கள் எண்ணம் பலிக்கவில்லை. பிருதிவீபதியின் குதிரை ஒரே பாய்ச்சலில் அவர்கள் இருக்கும் இடத்தை யடைந்து விட்டது. அச்சமயத்தில் பிருதிவீபதி அங்கிருந்த ஒருவனின் தீப்பந்தத்தைக் குதிரை மீது இருந்தபடியே ‘லபக்’கென்று பிடுங்கிக்கொண்டான். தீப்பந்தங்களைக் கையிலேந்திய மற்றவர்கள் அப்பொழுதுதான் வீ சி எறிந்தனர். பிருதிவீபதியின் கையில் இருந்த தீப்பந்தத்தின் ஒளியில் அங்கிருந்த நால்வரின் முகங்களும் நன்கு தெரிந்தன. அவர்களில் மூவர் போர் வீரர்கள்போல உடை அணிந்திருந்தனர். ஒருவன் புத்த பிக்ஷு கோலத்தில் இருந்தான். அவன்தான் தன் தோளில் பெண்ணின் கையையும் காலையும் கெட்டியாகப் பிடித்த வண்ணம் தோளில் சுமந்து நின்றான். அந்தப் பெண் அவன் இரும்புப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளபிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள். பிருதிவீபதிக்கு முன்னால் வந்து கொண்டிருந்த சந்தகரின் குதிரை துள்ளிக் குதித்துப் பெண்ணை சுமந்து கொண்டிருந்தவன் மேல் மோதியது.
திடீரென்று தன்மீது குதிரை வந்து மோதவே அவன் நிலை கலங்கிப் போய் அந்தப் பெண்ணைத் தன் பிடியிலிருந்து கை நழுவ விட்டான்.

அவனுடைய பிடியிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்கவே சட்டென்று அந்தப் பெண் அவ்விடத்திலிருந்து ஓடத் தொடங்கினாள். சந்தகர் தாம் ஏறிக் கொண்டு வந்த குதிரையை அவருடைய சாமர்த்தியத்தால் அந்த மனிதன் மீது மோதும்படியாகச் செய்யவில்லை. அந்தக் குதிரைக்கே அப்போதொரு வெறி பிடித்திருந்தது. அது ஓர் நிலையில் நிற்காமல் முன்னும் பின்னுமாக வந்து துள்ளிக் குதித்து அங்கு நின்றவர்கள் மீதெல்லாம் மோதி அவர்களைக் கீழே தள்ளியது. சந்தகரும் தம் குதிரையை அடக்க எவ்வளவோ பிரயத்தனம் செய்தார். வெறி பிடித்த அந்தக் குதிரையின்மீது உட்கார்ந்திருக்கவே அவருக்கு மிகுந்த பயமாக இருந்தது. குதிரையினால் மோதுண்டு கீழே விழுந்த வீரர்கள் மறுபடியும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எழுந்து ஓட யத்தனித்தனர். பம்பரம் போல் சுற்றிச் சுற்றி முன் கால்கள், இரண்டையும் தூக்கித் தூக்கிப் பல மூலைகளிலும் சென்று மோதும் சந்தகரின் குதிரை, விழுந்த இடத்திலிருந்து எழுந்தவர்கள் மீதே மோதி அவர்களைக் கீழே தள்ளியது. அந்தக் குதிரை பிருதிவீபதி விற்றிருந்த கம்பீரமான குதிரையை மாத்திரம் நெருங்கவில்லை. ஒரு கையில் தீப்பந்தத்தோடு இருந்த பிருதிவீபதி சட்டென்று கீழே குதித்து ஒருவனுடைய இடையில் தொங்கிக் கொண்டிருந்த உறையிலிருந்த கத்தியைச் சடாரென்று உருவி எடுத்துக் கொண்டு குதிரைமீது தாவி உட்கார்த்தான். அடுத்த நிமிடம் கேட்க வேண்டுமா?
வாளோடு குதிரைமீது வீற்றிருந்த அவனோடு போர் செய்வது கடினம் என்றெண்ணி அப் போர் வீரர்கள் மூலைக் கொருவராகத் தலைதெறிக்க ஓடத் தொடங்கினர். யாரை விட்டாலும் புத்த பிக்ஷு கோலத்திலிருந்த மனிதனை எளிதில் விட்டுவிடப் பிருதிவீபதி விரும்பவில்லை. அவன் குதிரையிலிருந்த வண்ணமே தன் கையிலிருந்த தீப்பந்தத்தைச் சந்தகரிடம் கொடுத்து விட்டு ஓடத் தலைப்பட்ட பிக்ஷுவை நெருங்கி அவன் போர்த்திக் கொண்டிருந்த சீவர ஆடையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
அந்தச் சமயம் வெறி கொண்ட சந்தகரின் குதிரையும் தன் உபயமாக அந்தச் சன்னியாசியின் மேல் வந்து மோதியது. பிருதிவீபதி அந்த பிக்ஷு தன் பிடியிலிருந்து ஓடி விடாத வண்ணம் அச் சீவர ஆடையை நன்றாக முறுக்கிப் பிடித்துக் கொண்டு தீப்பந்தத்தை அவன் முகத்துக்கு எதிராக நீட்டும்படி சந்தகரைக் கேட்டுக் கொண்டான்.
பாவம்! சந்தகரின் குதிரையும் அப்பொழுதுதான் தன் வெறி தீர்ந்தது போல் சிறிது அமைதியாக இருந்தது. அந்தத் தீபத்தின் ஒளியில் அந்த புத்த பிக்ஷு யாரென்று பிருதிவீபதி முக ஜாடையிலிருந்து தெரிந்துகொண்டான்.
“ஓகோ, தாங்களா! அடிகள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு அனாவசியமாக உடம்பை வாட்டிக் கொள்ளும் காரணம் தான் எனக்குப் புரிய வில்லை. காவிரிப்பூம் பட்டினத்தை விட்டு அடிகள் திருப்பான்மலைக்கு எப்போது வந்ததோ? அடிகளைத் தரிசித்ததில் மிகவும் சந்தோஷம். அடிகளை இப்படியே விட்டு விடுவது மரியாதை யில்லை யென்று நினைக்கிறேன். அடிகளிடம் எத்தனையோ விசாரிக்க வேண்டியிருக்கிறது. இப்படியே வரலாம்” என்று சொல்லிக் கழுத்தில் முறுக்கியிருந்த சீவர ஆடையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு குதிரையைத் தட்டினான். அதுவும் கம்பீரமாக நடந்தது. பிருதிவீபதியின் பிடியிலிருந்து விலக முடியாத புத்த பிக்ஷுவும் தலை குனிந்த வண்ணம் குதிரையின் வேகத்துக்குத் தக்கபடி ஓடவேண்டியிருந்தது. சந்தகரும் அந்த பிக்ஷு தப்பித்து ஓடாத வண்ணம் இடையே அவனை நடக்க வைத்து மற்றொரு பக்கத்தில் தம் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்தார்.
பிருதிவீபதி சந்தகரைப் பார்த்து, “அடிகளாரைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்காது?” என்றான்.
“அடிகளார் ஒரு பெண்ணை அனாயாசமாகத் தூக்கிச் செல்வதில் சமர்த்தர் என்பது வரையில் தெரியுமே தவிர அவர்களைப் பற்றி வேறென்றும் தெரியாது எனக்கு!” என்றார் சந்தகர்.
“இது தெரிந்தவரையில் சரிதான். இதிலிருந்து அடிகளாரின் ஒவ்வொரு நடத்தையும் இப்படிப்பட்டதாகத் தானிருக்கும் என்று தாங்கள் தாராளமாக நம்பலாம்!” என்றான் பிருதிவீபதி.
“நம்பாமல் என்ன செய்வது? சீவர ஆடையை உத்தேசித்து மாத்திரம் எதையும் நாம் நம்பாமல் விட்டு விடுவது மூடத்தனமாகும். அடிகளார்க்குப் பெண்களென்றால் அவர்களிடம் தனி அபிமானம் ஏற்பட்டு விடும் போலிருக்கிறது! அந்த அன்பின் காரணமாக அவர்களைத் தோளில் சுமந்து செல்லக் கூட அடிகளார் சித்தமா யிருப்பார்போலிருக்கிறது. நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் அடிகளார் ஏற்கெனவே தங்களுக்கு அறிமுகமானவர் போலல்லவா தோன்றுகிறது?” என்றார் சந்தகர் வியப்போடு.
”எனக்கு மாத்திரம் அறிமுகமானவரில்லை; உங்களுடைய நண்பர் பூதுகனுக்குக்கூட அறிமுகமானவர்தான். அடிகளார் சமுத்திர ஸ்நானம் செய்யும் விஷயத்தில் உங்கள் நண்பர் பூதுகர் மிகவும் உதவி செய்திருக்கிறார். அவர் செய்த அந்த உதவியை அடிகளார் என்றுமே மறப்பதற்கில்லை” என்றான் பிருதிவீபதி.
”ஓகோ! அப்படியா? என் நண்பன் பூதுகனுக்கு வேண்டியவரென்றால் எனக்கும் வேண்டியவராகத்தானிருக்கும்!”
“இப்பொழுதுதான் உங்களுக்கு வேண்டியவராகி விட்டாரே !… உங்களுடைய குதிரை வந்தவுடனே அடிகளிடம் தானே தன் பார்வையைச் செலுத்தியது. ஆஹா! அது எவ்வளவு ஆவலாக அடிகளார் மீது வந்து மோதியது?” என்றான் பிருதிவீபதி.
“அடிகளார் மீது ஏற்பட்ட அன்பு சில நிமிட நேரம் என் குதிரையை வெறியாகத்தான் பிடித்து ஆட்டியது. போகட்டும். உலக இருளைத் துடைக்க வந்த போதி மாதவரின் புண்ணிய சீடராகி, தீப்பந்தம் பிடித்துக் கொண்டு மலைப் பிரதேசங்களிலெல்லாம் வந்து அனாதைப் பெண்களை ஆதரிக்கும் பெரு நோக்கத்தோடு அகற்றிக் கொண்டு போக நினைக்கும் அடிகளார் எந்த ஊரோ? அடிகளாரின் நாமதேயம் என்னவோ?” என்றார் சந்தகர்.

அந்த இரண்டு குதிரைகளுக்கு மிடையில் நடந்த புத்த பிக்ஷு கலங்கமாலரையர் தான் என்பதை நாம் விளக்கத்தேவை யில்லையல்லவா? இருப்பினும் கலங்கமாலரையரைப் பற்றிச் சந்தகர் தெரிந்து கொள்ள வேண்டாமா? பிருதிவீபதி சொன்னதிலிருந்து சந்தகருக்கு ஓரளவு விளங்கியது. இருப்பினும் அந்த புத்த பிக்ஷுவினுடைய ஊர், பெயர் முதலிய வைகளைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது.
அந்நிலையில் கலங்கமாலரையர் தம் நாமதேயத்தைத் தாமே சந்தகரிடம் சொல்லுவாரா? அவர் சந்தகரின் கேள்விக்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் மெளனமாக நடந்து கொண்டு வந்தார்.
பிருதிவீபதி சிரித்துக் கொண்டே, “துறவு நிலையில் உள்ளவர்களுக்கு ஊரேது. பேரேது? இப்படிப்பட்ட உண்மையான துறவிகளை நாம் ஊரும் பெயரும் தெரிந்து கொண்டுதான் அழைக்க வேண்டுமென்று அர்த்தமில்லை!” என்று சொல்லிக் கொண்டே வரும்போது முன்பு எங்கிருந்து கிளம்பினார்களோ, அதே இடத்துக்கு வந்து சேர்த்தனர். ஒரு மலைக் குகை வாசலில் அந்த புத்த பிக்ஷுவின் பிடியிலிருந்து தப்பிய பெண் தரையில் விழுந்து கிடந்த ஒரு வயதானவரை மெதுவாகத் தூக்கிக் குகைக்குள் அழைத்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
பிருதிவீபதியும் சந்தகரும் குதிரையை நிறுத்தினர், குதிரை மீதிருந்த சந்தகர் கீழே இறங்கிக் கீழே கிடந்த வயதான மனிதரைக் கவனித்தார்.பக்கத்திலிருந்த குகையில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி அந்தப் பெண்ணின் முழு உருவத்தையும் எடுத்துக் காட்டியது.
அந்தப் பெண்ணுக்குச் சுமார் இருபது வயது இருக்கலாம். நல்ல அழகி. காவி நிறமுடைய புடவையை அணிந்திருந்தாள், அவளுடைய நீண்ட கேசம் எண்ணெய் தடவி ஒழுங்குபடுத்தப்படாமல் தோளில் விழுந்து கிடந்தது. அவள் அழகான கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. அவள் துயரம் நிறைந்த தழுதழுத்த குரலில், ”தெய்வம் போல வந்து காப்பாற்றிய உங்களுக்கு இறைவன் பேரருள் புரியட்டும்” என்றாள்.
அப்பொழுதுதான் மெதுவாக எழுந்து உட்கார்ந்த வயோதிகரும் கையைத் தூக்கி அவர்களை ஆசீர்வதித்தார். அடிபட்டுக் கீழே விழுந்த அம்மனிதர் மிகவும் வயதானவர். அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கலாம். மொட்டைத் தலையும் எலும்போடு ஒட்டிய மெலித்த தேகமும் அவர் நெடு நாட்களாகத் தவக்கோலம் கொண்டிருந்த ஒரு மனிதர் என்பதை மிக எளிதாக எடுத்துக் காட்டியது. அந்த மலைக் குகைகள் நிறைந்த இடத்தில் ஜைன முனிவரும் அந்தப் பெண்ணும்தான் தனிமையில் வசித்து வந்திருக்கவேண்டு மென்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். அழகும் யௌலனமும் கொண்ட ஒரு பெண்ணைக் கெட்ட எண்ணத்துடன் வஞ்சனையாகக் கடத்திக் கொண்டு செல்லத்தான் அந்தப் பௌத்த பிக்ஷுவும் முயற்சி செய்திருக்க வேண்டும் என்று எளிதாக விளங்கியது.
பிருதிவீபதி அந்த புத்த பிக்ஷுவைத் தன்பிடியிலிருந்து விடாமல் அவனைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு வந்து அந்த முனிவரின் காலடியில் தள்ளி, “நீ செய்த கொடிய பாவத்துக்குப் பெரியவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள், அதற்குப் பின்தான் உனக்கு அளிக்க வேண்டிய தண்டனையை நான் அளிக்க வேண்டும். உன்னைப் போன்ற துறவு வேடத்தில் புகுந்த துரோகிகளை ஒழித்துக் கட்டினால்தான் மதம், சமூகம், நாடு இவைகள் எல்லாம் காப்பாற்றப்படும்” என்றான்.
அந்தப் பெண்ணின் முதுகில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்திருந்த முனிவர் மெதுவான குரலில், “நான் மன்னிப்பதற்கு எதுவும் இல்லை. இந்த உலகில் யாவரும் தாங்கள் செய்த பாபத்துக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள். நம்மை இம்சித்தவர்கள் என்பதற்காக இவரை நாம் இம்சிக்க வேண்டாம். இவரைத் தண்டிப்பது உங்கள் கடமையாகத் கருதினாலும் அவரை மன்னித்து விடுங்கள். உலகில் மோகச் சுழலில் சிக்குவதே குற்றம், அந்தச் சுழலில் சிக்கியவர்கள் செய்யும் காரியம் ஒவ்வொன்றும் மேலும் மேலும் செய்யும் குற்றமாகத்தான் இருக்கும். அவரை விட்டு விடுங்கள். என்னை யார் இம்சித்திருந்தாலும் அதற்காக அவர்களை இம்சைக்குள்ளாக்க விரும்பவில்லை” என்று கூறினார்.
அந்த ஜைன முனிவர் சொல்லியபடி கலங்கமாலரையரை மன்னித்து அனுப்பப் பிருதிவீபதிக்கு இஷ்டமில்லை. அவன் வேறு வேடத்தில் இருந்தாலும் பாதகமில்லை. அவன் துறவு வேடத்தில் புருந்து கொண்டு இத்தகைய காரியங்களைச் செய்தால் அவன் அயோக்கியனிலும் அயோக்கியன் என்று தான் சொல்ல வேண்டும். இவனை இப்படியே விட்டு விடுவது தருமமா? தன்னைப் போன்றவர்களுக்கு இது கடமையுமல்ல என்று நினைத்தான் பிருதிவீபதி.
சந்தகரும் அப்படித்தான் நினைத்தார். “நீங்கள் மன்னிக்கலாம். ஆனால் நாங்கள் அவனை மன்னிக்கத் தருமம் இடம் கொடுக்காது. உலகைப் பிடித்து அரிக்கும் இத்தகைய விஷக் கிருமிகளை உடனடியாகக் கழித்துவிட வேண்டும். ஒரு விஷக் கிருமியினால் எத்தனையோ விஷக் கிருமிகள் உற்பத்தியாகலாமல்லவா? இதை மனித சமூகமும் நாடும் தாங்காது” என்றார்.
அரிஷ்டநேமி என்ற அந்த ஜைன முனிவர், “இந்த உலகில் கெட்ட வழியிலேயே சென்ற மனிதன் நல்ல வழியில் திருந்தவும் இடமுண்டு, தான் செய்த கெடுதலான காரியங்களுக்குரிய தண்டனைகளை அவன் உணர்ந்து விட்டால் மறுபடியும் அந்தக் காரியங்களைச் செய்ய அவன் தலைப்பட மாட்டான், நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன், பகைவனிடமும் கொஞ்சம் கருணை காட்டிப் பாருங்கள். தான் செய்த அடாத காரியத்துக்காகத் தன்னைத் தண்டிக்காமல் மன்னித்த பெருந்தன்மையையாவது எண்ணி அவன் சீர்திருந்தட்டும்!” என்று எடுத்துரைத்தார்.
அதற்கு மேல் அந்த முனிவரின் வார்த்தையைத் தட்டுவதில் அவர்களுக்குப் பிரியமில்லை. ஒருநாள் தன் வார்த்தையைக் கேட்டு அப்பூதுகன் அதே புத்த பிக்ஷுவை மன்னித்து அனுப்பியதை எண்ணினான். ஆனால் இன்று அதே பிக்ஷு மறுபடியும் அடாத குற்றங்களைச் செய்திருக்கிறான். தன் வார்த்தையைக் கேட்டுப் பூதுகன் எப்படி மன்னித்து அனுப்பினானோ, அதேபோல ஜைன முனிவரின் வார்த்தையைக் கேட்டு இந்த பிக்ஷுவை மன்னித்து அனுப்பி விடத் தீர்மானித்தான், சந்தகரு ம் இந்த பிக்ஷுவுக்கு நற்புத்தி புகட்டி அனுப்பி விடத்தான் வேண்டும் என்று தீர்மானித்தார். ஆயினும் அந்த ஜைன முனிவருக்கும், அவரைச் சார்ந்திருக்கும் பெண்ணுக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்படாத வரையில் இந்த பிக்ஷுவை மன்னித்து அனுப்புவது உசிதமாகாது என்றுதான் அவருக்குப் பட்டது. இன்று இவனை மன்னித்து அனுப்பி விட்டால் மறுநாள் அவன் மற்றவர்களுடன் வந்து அம்முனிவருக்கும் இந்தப் பெண்ணுக்கும் துன்பம் விளைவிக்கலாமல்லவா? அதோடு இந்த புத்த பிபிக்ஷுவோடு வந்தவர்கள் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று ஓடி விட்டனர். அவர்களே மறுபடியும் வந்து சமண முனிவருக்கும் இந்தப் பெண்ணுக்கும் இடையூறை ஏற்படுத்தலாமல்லவா? ஆகையால் இந்த புத்த பிக்ஷுவை எளிதாக விட்டுவிடுவது அவ்வளவு நன்மை யாகாது என்று அவர் எண்ணினார்.
அவர் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர்போல், “இவனை மன்னித்து விடலாம். ஆனால் அதற்கு இது சந்தர்ப்பமில்லை. இவளை நாம் காஞ்சீபுரம் வரையில் அழைத்துச் சென்று இவனைப் பற்றிச் சொல்லி இவனைப் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதுதான் நல்லது. அப்படிச் செய்யப் படாத வரையில் மறுபடியும் என்றாவது ஒரு நாள் இன்று செய்த பெருங் கொடுமைகளையே செய்யும் துணிச்சல் உடையவனாகி விடுவான்!” என்றார்.
இவைகளை யெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பிக்ஷு தணிவான குரலில், “என்னை மன்னித்து விடுங்கள், நான் இத்தகைய பிசகைச் செய்யத் துணிய வில்லை. ஆனால் பல்லவச் சக்கரவர்த்தியின் ஒன்று விட்ட சகோதரனான சிம்ம வர்மன்தான் இத்தகைய காரியங்களைச் செய்யும்படி என்னைத் தூண்டினான். நான் காஞ்சியைச் சேர்ந்தவனல்ல! தஞ்சையைச் சேர்ந்தவன். என்னை நீங்கள் மன்னித்து விட்டீர்களானால் நான் என்னுடைய ஊருக்குச் சென்று விடுவேன். மறுபடியும் இங்கு வந்து யாரையும் இம்சிக்கவே மாட்டேன்!” என்று உறுதி கூறினான்.
சந்தகர் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே, “ஓகோ! நீங்கள் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் தானா? அப்படி வாருங்கள் வழிக்கு! தஞ்சை மாநகரைச் சேர்த்தவரா? இப்பொழுது புரிந்து விட்டது, திடீரென்று இல்லற தருமங்களில் எல்லாம் வெறுப்புற்றுத் துறவற மார்க்கத்தில் புகுந்த மகா தீரராகிய கலங்கமாலரையர் தாங்கள் தானே? தாங்கள் ஏதோ அரசியல் சூழ்ச்சிக்காகத்தான் புத்த பிக்ஷுவாகி யிருப்பதாகச் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அந்த அரசியல் சூழ்ச்சிகளோடு பெண் பித்து கொண்டும் புத்த பிக்ஷுவாகி யிருக்கும் விஷயம் இப்பொழுதுதான் விளங்கியது. உங்களைத்தான் பூதுகன் கடலில் குளிப்பாட்டி அலசி எடுத்தானா? அவன் அவ்வளவு அலசி எடுத்தும் இன்னும் உங்கள் புத்தியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்கு அப்படியேதானிருக்கிறது! போகட்டும். இப்பொழுது நீங்கள், இந்த இடத்திலேயே நிற்கவில்லை, நேராக உங்களுடைய ஊராகிய தஞ்சைமாநகருக்கே சென்று விடுகிறேன் என்கிறீர்கள், இல்லையா? ரொம்ப நல்லது. நீங்கள் தஞ்சை மாநகருக்குச் செல்வதில் எவ்வித ஆட்சேபணையுமில்லை. ஆனால் இப்படிச் சீவர ஆடை அணிந்த கோலத்தில் உங்களை எந்த இடத்துக்கும் அனுமதிக்க எனக்கு விருப்பமில்லை. இதோ நான் என் வெள்ளையான மேல் வஸ்திரத்தைத் தருகிறேன். உங்கள் சீவர ஆடையை அகற்றிவிட்டு இதை உடுத்திக் கொண்டு நீங்கள் செல்லலாம். இப்பொழுது உங்களுக்கு நாங்கள் அளிக்கும் தண்டனை இதுதான். மறுபடியும் புத்த துறவிகளுக்கு உரிய சீவர ஆடையில் உங்களை நாங்கள் எங்கே பார்க்க நேர்ந்தாலும் மலையிலிருந்து உருட்டி மகா பரிநிர்வாணத்துக்கு வழி காட்டுவோம்!” என்று சொல்லித் தாம் போர்த்தியிருந்த வெள்ளை வஸ்திரத்தை எடுத்துக் கலங்கமாலரையரிடம் வீசி எறிந்தார்.
“சரி! இதுவும் ஒரு சரியான தண்டனைதான். இதனால் புத்த சமயமும் பிழைக்கும்!” என்று சொல்லிவிட்டுத் தன் கைகளை நீட்டி, சீவர ஆடைகளைக் களைந்துவிட்டு அந்த ஆடையை அணிந்து கொள்ளும்படி கலங்கமாலரையருக்கு உத்தரவிட்டான் பிருதிவீபதி.
கலங்கமாலரையனும் வெட்கித் தலை குனிந்த வண்ணம் மறைவான இடத்துக்குச் சென்று தன் சீவர ஆடைகளைக் களைந்து வெண்ணிற ஆடையை யணித்து கொண்டு, அச் சீவர ஆடையைக் கொண்டு வந்து வைத்தான்.
சந்தகர் சீவர ஆடையைக் கையில் எடுத்துக் கொண்டு, “இனி நீங்கள் போகலாம்!” என்றார். கலங்கமாலரையன் தலை குனிந்தவண்ணம் மெதுவாக அங்கிருந்து நடந்து இருளில் மறைந்தான்.
அரிஷ்டநேமி என்ற அந்த ஜைன முனிவர் ”அவனை இவ்வளவோடு மன்னித்து அனுப்பியதில் எனக்கு மிகுந்த திருப்தி. அவன் என்னை இம்சித்ததற்காக அவனை இம்சிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பெருந்தன்மையோடு ஒரு நல்ல காரியம் செய்தீர்கள், துறவியின் உடையில் அலையும் சில கயவர்களுக்குப் பாடம் கற்பிக்க இது ஒரு சிறந்த முறை, எந்தச் சமயத்தீனரா யிருந்தால் என்ன? துறவிகள் என்பவர்கள் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களிடமே இப்படிப்பட்ட அக்கிரமமும் ஊழலும் வளருமானால் அப்புறம் தருமம் எங்கே நிலைப்பது? உத்தமரான பல்லவ சக்கரவர்த்தி நந்திவர்மர் தீவிர சைவராயினும் ஜைன சமயத்தின் மீதோ புத்த சமயத்தின் மீதோ துவேஷம் கொண்டவர் இல்லை. தார்மீக வழியைப் பின் பற்றி நடப்பவர். ஆனால் அவருடைய ஒன்று விட்ட சகோதரனான சிம்ம வர்மன் ஜைன சமயத்துக்குத் தன்னால் எவ்வளவு இழுக்கு ஏற்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்து கொண்டு வருகிறான். இதை நான் ஏன் உங்களுக்குச் சொல்லுகிறே னென்றால் நீங்கள் இருவரும் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களா யிருப்பினும் இவ்வுலகில் நேர்மையையும் நியதியையும் காப்பாற்ற விரும்பும் வாலிபர்களாகத் தோன்றுகிறீர்கள் என்ற காரணத்தினால்தான்” என்றார்.
“நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கிறது. ஜைன சமயத்தவனாகிய சிம்மவர்மன் உங்களைப் போன்ற துறவியின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு பெண்ணைக் கடத்திச் செல்ல புத்த சமயத்தவன் என்று வேஷம் போடும் ஒரு துறவியின் உதவியை நாடினானால் இந்த இருவர்களாலும் இவ்விரு சமயங்களுக்கும் ஏற்பட்டுள்ள களங்கத்தைப் பற்றி நாம் என்ன சொல்வது? நானும் சமண சமயத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் தருமத்தை விற்று எதையும் நிலைநாட்ட விரும்பும் எவனையும் இவ்வுலகில் விட்டு வைக்க நான் விரும்பவில்லை. சிம்மவர்மன் சமண சமயத்தினனானதே தன்னுடைய சகோதரனின் பெருமை பொருந்திய அரசைச் சதி செய்து கவிழ்த்துத் தான் அச் சிங்காதனத்தைக் கைப்பற்றிக் கொள்ளத்தான் என்கிற ரகசியத்தை உங்களுக்கு நான் சொல்லி வைக்கிறேன். இன்று பல்லவ சக்கரவர்த்தி நந்திவர்மருக்கு உற்ற துணையாக இருக்கும் அரசர்களான இராஷ்டிரகூட மன்னர் அமோகவர்ஷரும் கங்கதேசத்து அரசர் ராஜமல்லரும் தீவிர சமண சமயத்தினர். இந் நிலையில் பொறாமை கொண்ட சிம்மவர்மன் தானும் ஒரு சமணனாகி, எவ்வகையிலாவது மத துவேஷத்தைக் கிளப்பி அவர்கள் நட்பைக் குலைக்கப் பார்க்கிறான். இதற்காக இப்படிப்பட்ட சிறு சூழ்ச்சிகள் செய்து மன்னனின் பெயருக்கு இழுக்கை உண்டாக்க நினைக்கிறான்” என்றான் பிருதிவீபதி.
“இந்த பெண்ணைத் தங்களிடமிருந்து கடத்திச் செல்லச் செய்த சூழ்ச்சியிலும் ஏதோ அந்தரங்கம் இருக்கிறது. இந்தப் பெண் யார்..?” என்றார் சந்தகர்.
தன்னைப் பற்றிச் சந்தகர் விசாரித்ததும் அங்கு நின்றுகொண்டிருந்த பெண் மிகவும் வெட்கமடைந்தவளாக அங்கிருந்த சிறு மலைக் குகைக்குள் சென்றாள்.
அரிஷ்டநேமி என்ற அந்த முனிவர் ஒரு பெருமூச்சு விட்டார். “இந்தப் பெண்ணுக்கு நான் வைத்த பெயர் சுரேசி. இவள் ஒரு அனாதை. இவள் கதையே வேறு….” என்றார்.
இருபத்தாறாவது அத்தியாயம்
சுகேசியின் கதை
“நான் கூட அப்படித்தான் நினைத்தேன். துறவி நிலையிலுள்ள தங்களைப் போன்றவர்களின் வாழ்க்கையில் இம்மாதிரி சிறு பந்தங்களும் ஏற்படுவதற்குக் காரணம் இருக்குமானால் அது ஏதோ கருணையின் காரணமாகத்தானே இருக்க வேண்டும்?” என்று கேட்டார் சந்தகர்.

“அப்படித்தான். எங்கு ஜீவ ஹிம்சை ஏற்படுகிறதோ அங்கு அதைத் தன் உயிரைக் கொடுத்தேனும் தடுப்பதுதான் அர்ஹதர்களின் முக்கியமான கொள்கையாகிறது. ஜீவன்களிடம் பேரன்பு காட்டிக் காப்பாற்றுவதைவிடத் தவம் வேறில்லை என்பதைத் தான் ஜைன சமயமும் வற்புறுத்துகிறது. நான் சோழ நாட்டில் திருப்புறம்பயத்துக்குச் சமீபமாக இருந்த சமயத்தில் அங்கு சுடுகாட்டில் காபாலிகன் ஒருவன் காளிக்குத் தினந்தோறும் உயிர்களைப் பலியிடுவதாக அறிந்தேன். அதைத் தடுத்து அந்த ஜீவனைக் காப்பாற்ற முயற்சி எடுத்துக் கொள்ள என்னால் முடியாது போயிற்று. எப்படியாவது அவனிடமிருந்து ஒரு ஜீவனையாவது காப்பாற்றினால் தான் மனம் ஆறுதலடையும் எனத் தோன்றியது. ஒருநாள் இரவு ஐந்தாறு வயதுடைய ஒரு சிறுமியைக் கொண்டு வந்து காளிக்குப் பலியிட அவன் முயற்சி செய்தான். அங்கு ஒளிந்து கொண்டிருந்த நான் அவனுடைய முயற்சியைத் தடுத்துச் சிறுமியைக் காப்பாற்றலாம் என்றெண்ணி இருந்தேன். அவன் அச்சிறுமியை அங்கிருந்த ஒரு மரத்தில் பிணைத்துக் கட்டி விட்டுப் பூசைக்குரிய சாமான்களைச் சேகரிப்பதற்காகச் சென்றான். அந்தச் சமயத்தில் மரத்தோடு பிணைக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமியை விடுவித்து அவளைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்து விட்டேன். அந்தக் குழந்தையை விசாரித்து அவள் பெற்றேர்களைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களிடம் குழந்தையை ஒப் படைத்து விடலாம் என்று நினைத்து அவளை விசாரித்ததில் ‘அப்பா, அம்மா’ என்பதைத் தவிர வேறு விவரம் எதுவும் சொல்லத் தெரியவில்லை. அதிலிருந்து அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு எனக்கு வத்து விட்டது. அவளுக்கு உரிய கல்வியைப் போதித்து அவளை ஒரு சிறந்த பெண்ணாக இன்று வரையில் வளர்த்து விட்டேன். உலகத்தில் எந்த பந்தத்திலும் கட்டுப்படாத எனக்கு இச் சிறிய பந்தம் மிகுந்த மன வியாகூலத்தை அளிக்கிறது. உலகத்தில் ஒரு ஜீவனைக் காப்பாற்றுவதே ஒரு பெரும் பொறுப்பாக இருக்கிறது. சிறு குழந்தைப் பருவத்தில் அவளுக்குச் சிறு இன்னல் சூழ்ந்தது போல் கன்னிப் பருவத்தில் வளர்ந்து நிற்கும் அவள் உயிருக்கு நேற்றும் ஒரு இன்னல் சூழ்ந்தது. இவ்வளவு நாட்களும் கவலையோடு பல கிராமங்களிடையே அவளைக் காப்பாற்றியதும் மறுபடியும் அவளுடைய ஜீவனுக்கு ஆபத்து நேர்ந்திருப்பதைக் கண்டு என் மனம் பொறுக்கவில்லை. மூர்க்கர்கள் கையிலிருந்து அவளைப் பாதுகாக்க எவ்ளவோ பாடு பட்டேன். முடியவில்லை. நல்ல சமயத்தில் நீங்கள் இருவரும் அவளைக் காப்பாற்றவும் என் மனத்துக்கு நிம்மதி ஏற்படுத்தவும் தெய்வம் போல வந்தீர்கள். நீங்கள் வந்திராவிட்டால் அவள் இறந்திருப்பாள். என் ஜீவனை நானும் போக்கிக் கொண்டிருப்பேன். இனிமேல் என்னுடைய கவலையெல்லாம் அவளை ஒரு இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான். நல்ல சுபாவம் உள்ளவர்களாகத் தோன்றும் நீங்கள் இவ்விஷயத்தில் ஏதேனும் உபகாரம் செய்யக் கூடுமானால் மிக்க சந்தோஷமுடையவனாக இருப்பேன்” என்றார்.
சந்தகர் பிருதிவீபதியின் முகத்தை பார்த்தார். பிருதிவீபதி முகத்தை சந்தகரின் முகத்தை பார்த்தான். இப்படிப் பட்ட அழகும் குணமும் நிறைந்த பெண்ணை ஏற்றுக் கொள்ள நல்ல மனிதர்கள் இல்லாமல் போய் விட மாட்டார்கள். தாங்கள் இந்த பொறுப்பை இந்த வாலிபரிடம் ஒப்படைப்பதை விடத் வேறென்றுமில்லை என்றார் சந்தகர் பிருதிவீபதியைச் சுட்டிக்காட்டியபடி.
பிருதிவீபதி சந்தகர் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறார் என்பதை உணர்ந்து இருப்பினும் அழகும் குணமும் உணர்ந்து அந்தப்பெண்ணின் வாழ்க்கையை முடிவு செய்யும் பொறுப்பை ஏற்று கொள்வதில் பிசகில்லை என்றுப் பட்டது. அரச குமாரன் மனம் வைத்தால் அப்பெண்ணை சிறப்புமாக ஒரு நல்ல ஆடவருக்கு மணம் செய்து வைத்துவிட முடியாதா? அவன் ஜைன முனிவருக்கு ஆறுதல் சொல்லும் தோரணையாக, “நீங்கள் கவலைப் படாதீர்கள். அப் பெண்ணைப் பற்றிய கவலையை எனக்கு விட்டுவிடுங்கள். நாங்கள் இப்பொழுது காஞ்சீபுரம் செல்கிறோம். அங்கே எங்களுக்கு உள்ள காரியங்களை முடித்துக் கொண்டு திரும்பும்போது இந்தப் பெண்ணை நான் அழைத்துப் போகிறேன். அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்றான்.
”இவ்வளவு தயாள குணம் பொருந்திய உனக்கு என் ஆசீர்வாதம். உன்னைப் பற்றிய விருத்தாந்தங்கள் எனக்கொன்றும் தெரியாது. இருப்பினும் நான் அருமையாக வளர்த்த சுகேசியை ஒரு நல்ல மனிதர் கையில் தான் ஓப்படைத்தோம் என்ற தைரியம் என் மனத்தில் ஏற்பட்டு விட்டது. அதிலும் ஒரு ஜைன சம்பிரதாயக்காரன் கையில்தான் ஒப்படைத்தோம் என்பது மன ஆறுதலை அளிக்கிறது. உன்னோடு பழகியதிலிருந்து நீ வாக்குறுதி தவறமாட்டாய் என்றே நம்புகிறேன். நீ யார்? உன் பெயரென்ன என்பதை இனிமேலாவது தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்” என்றார் அரிஷ்டநேமி.
பிருதிவீபதி தான் யார் என்ற உண்மையைச் சொல்லி முனிவரைத் திகைப்படையச் செய்ய விரும்பவில்லை. அந்த மகானிடம் பொய் சொல்வதும் பெரிய அபசாரம்தான். இருப்பினும் அந்தச் சமயத்தில் அவன் தன்னை யாரென்று காட்டிக் கொள்ள விரும்பவில்லை யாதலால் பொய் சொல்லத்தான் வேண்டியிருந்தது. அவன் பணிவான குரலில், “நான் கங்கபாடியைச் சேர்த்தவன். என் பெயர் வீரவிடங்கள், ஒரு போர்வீரன்” என்று கூறினான்.
“போர்வீரன்தான். ஆனால் சாதாரணப் போர் வீரனில்லை, ஒரு காலத்தில் தேசத்தையே கட்டியாளும் யோக்கியதை நிறைந்த போர்வீரன். அவனைப் பற்றி யல்லவா கேட்டீர்கள்? நான் என்னைப் பற்றியும் உங்களிடம் சொல்லிக் கொள்ளுகிறேன். சோழ மண்டலத்தைச் சேர்ந்த கோடீச்சுவரத்திலுள்ள சோதிடன், சந்தகன் என்று என்னைச் சொல்லுவார்கள். நான் சாத் தன் சக்தி பூஜை செய்பவன். பராசக் தியே முழுமுதல் தெய்வமாகக் கொண்டு எல்லா மதத்தின் நல்ல கொள்கைகளையும் ஆதரிக்கக் கூடியவன். இந்தப் போர் வீரனின் ஜாதகம் என்னுடைய கையிலிருக்கிறது. நல்ல ராஜயோக ஜாதகம். ஒருகாலத்தில் இவன் அரியணை ஏறி ஒரு நாட்டை ஆளும் யோக்கியதை யடையப் போகிறான். இவனிடம் உங்கள் புத்திரியின் வாழ்வை ஒப்படைப்பது ஒரு பெரிய பாக்கியம்தான்” என்று சொன்னார் சந்தகர்,
மிகுந்த மன ஆறுதலைப் பிரதிபலிக்கும் மகிழ்ச்சி அந்த ஜைன முனிவரின் முகத் தில் தோன்றியது. “எல்லாம் அர்ஹத்பரமேஷ்டியின் பேரருள்தான்!” என்று கூறினார்.
அவர்கள் நெடுநேரம் வரையில் பேசிக் கொண்டிருந்ததால் இரவு நேரம் நகர்ந்து பொழுது விடியும் நேரத்துக்கு அறிகுறியாகக் கீழ் வானில் வெள்ளி எழுத்து மின்னியது. ”எங்களால் உங்களது நித்திரையும் குலைந்து விட்டது. பொழுது விடியும் நேரம் நெருங்கி விட்டது. நீங்கள் இருவரும் இன்னும் சிறிது நேரம் தூங்கினால் காலைப் பிரயாணத்தின் போது களைப்பு தட்டாமல் இருக்கும்” என்றார் ஜைன முனிவர்.
”இன்னும் சிறிது நேரத்தில் பொழுது விடியப் போகிறது. பொழுது விடிந்தவுடன் நாங்கள் புறப்படப் போகிறோம். அதற்குள் தூக்கம் போடுவதினால் பலன் என்ன? காஞ்சிக்கு இங்கிருந்து பத்து கல் தூரம்தானே இருக்கும்? அதனால் எங்களுக்குச் சிரமம் ஏதும் ஏற்படப் போவதில்லை” என்றான் பிருதிவீபதி. அவன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே கீழ்வானில் சூரிய கிரணங் களின் ஒளி எழுந்தது.
“உங்களை வெறும் வயிற்றோடு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. சமீபத்தில் உள்ள சுனையில் பல் தேய்த்துக் கைகால்களைக் கழுவிக் கொண்டு வாருங்கள். நான் கொஞ்சம் பழங்கள் தருகிறேன். அவைகளைச் சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்றார் அந்த ஜைன முனிவர்.
அவ்விருவரும் அவருடைய வார்த்தையைத் தட்ட முடியாதவர்களாய்ச் சமீபத்திலுள்ள சுளைக்குச் சென்றனர். அவர்கள் சென்றதும் அம்முனிவர் குகைக்குள்ளிருந்த சுகேசியைக் கூப்பிட்டு “உன்னைப்பற்றிய கவலை எனக்கு அனேகமாகத் தீர்த்து விட்டது. நீ செய்த அதிர்ஷ்டம்தான், ஒரு நல்ல வாலிபன் உனக்குக் கிடைத்து விட்டான். இங்கு வந்த இருவர்களில் யௌவனமாகவும் அழகாகவும் ஒரு வாலிபன் இருக்கிறானே. அவன்தான் உன் வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்திருக்கிறான். உனக்கு, நான் அதிகம் சொல்ல வேண்டாம். அவனுடைய அன்புக்குப் பாத்திரமாகி அவனுக்குப் பணி விடை செய்வதில் பற்றுதலும் பக்தியும் கொண்டவளாகத் திகழ வேண்டும். அவன் கங்கபாடியைச் சேர்ந்தவனம். ஜைன மதப் பற்றுதல் உள்ளவனாம், நீ மிகவும் புத்திசாலி. மனைவிக்குரிய தரும விதிகளை நான் உனக்கு உபதேசிக்க வேண்டாம். இருப்பினும் நீ கணவனுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று உனக்கு நான் சொல்லி இருக்கிறேன். உன் மனத்துக்கு அவனைப் பிடித்திருக்குமென்று நினைக்கிறேன். உன் மனத்துக்குப் பிடிக்காவிடில் அதையும் சொல்லி விடு” என்றார்.
“தங்கள் ஆசிர்வாதம், எனக்குப் பூரண சம்மதம்தான்” என்றாள் சுகேசி சிறிது வெட்கத்தோடு. அந்தச் சமயத்தில் சுனைக்குச் சென்றிருந்த பிருதிவீபதியும் சந்தகரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் முனிவர் சுகேசியைப் பார்த்து, “இருவரையும் சிறிது ஆகாரம் செய்து கொண்டு போகும்படி வேண்டிக் கொண்டிருக்கிறேன். நீ அவர்களுக்காகக் கொஞ்சம் பழங்கள் கொண்டு வா” என்று கட்டளை யிட்டார்.
பிருதிவீபதியும் சந்தகரும் அவ்விடத்துக்கு வந்ததும் அம்முனிவர் அவர்களை ‘வாருங்கள்’ என்று உபசரித்து அம்மன்க் குகைக்குள் அழைத்துச் சென்றார். வெளியே பார்த்தால் அது சிறியமலையில் குடையப்பட்ட குகை போலத் தோன்றினாலும் உட்புறத்தே ஒரு சிறு கட்டடம் போல் காட்சியளித்தது. அந்த மலைப் பிரதேசத்திலுள்ள குன்றில் குடையப்பட்ட ஜைன ஆலயமும் அதை யொட்டி ஜைன முனிவர்கள் வசிப்பதற்காகக் குடையப்பட்ட குகை போன்ற ஆசிரமங்களும் ஜைன் மதத்தில் மிகவும் பற்றுள்ளவனாயிருந்த மகேந்திர பல்லவனால் நிர்மாணிக்கப் பட்டவை. அக்காலத்தில் சிறு சிறு குகைகளில் நூற்றுக்கணக்கான ஜைன சன்னியாசிகள் வசித்து வந்தார்கள். ஆனால் மகேந்திர பல்லவன் ஜைன மதத்திலிருந்து சைவ மதத்தைத் தழுவியதும் ஜைன மதத்தின் பலம் குன்றியது. அந்த மலைப் பிரதேசத்திலிருந்து முனிவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
பல வருடங்களுக்குப் பின் அங்குள்ள ஜைன ஆலயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு அரிஷ்டநேமி என்ற அந்த ஜைன முனிவர் மாத்திரம் அங்குள்ள குகையைத் தம்முடைய ஆசிரமமாக அமைத்துக் கொண்டு அங்குள்ள ஜைனாலயத்தையும் கவனித்து வரலாயினர். அவருக்கு உதவியாக அவருடைய வளர்ப்புப் பெண் சுகேசி இருந்தாள். அவர் அங்கு வசிக்க ஆரம்பித்த பின் அந்த இடத்துக்கும் ஒரு மகிமை ஏற்பட்டது. ஜைன சமயத்தைச் சேர்ந்த பலர் அவ்விடத்தை ஒரு புண்ணிய க்ஷேத் திரம் போல் எண்ணி அந்த முனிவரையும் அந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள மூாத்தியையும் தரிசித்து விட்டுப் போகலாயினர்.
வயதான அம் முனிவரும் அழகும் யௌவனமும் பொருந்திய அப் பெண்ணும் மனித சஞ்சாரமேயற்ற மலைப் பிரதேசத்தில் வசிப்பது பிருதிவீபதிக்குச் சிறிது ஆச்சரியத்தைத்தான் அளித்தது. ஒரு முனிவர் இங்கு இருப்பது தகுதியே. அனால் அழகு நிறைந்த ஒரு யௌவன நங்கை அப்படிப்பட்ட இடத்தில் எப்படி இருக்கிறாள்? வாழ்க்கையில் உலக இன்ப சுகங்களில் ஆசை கொள்ளாமல் துறவு மார்க்கத்திலுள்ளவர்களுக்குச் சிச்ரூஷை செய்து வாழ்வை அடக்கமாக நடத்திக் கொண்டு போகும் பெண்ணைப் பற்றி என்ன சொல்வது? இப்படிப்பட்ட பெண்களும் உலகில் இருக்கிறார்களே யென்று எண்ணி அவன் மனம் சிறிது இளகியது. “நீங்கள் மனித சஞ்சாரமே இல்லாத இந்த இடத்தில் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
“எங்களுக்குத் தகுதியான இடம் என்று கருதும் இடங்களில் இருப்பதில் எங்களுக்கு என்ன துன்பம் இருக்கப் போகிறது? நேற்று இரவு சில வஞ்சக நெஞ்சமுள்ள மனிதர்களால் ஏற்பட்ட துன்பத்தைத், தவிர இங்கு புலிகளும் பாம்புகளும் கூட எங்களுக்குத் தீமை நினைப்பதில்லை” என்றார் அரிஷ்டநேமி.
“அப்படி யென்றால் இங்கு புலிகளும் பாம்புகளும் அதிகமென்று சொல்லுங்கள்” என்றார் சந்தகர்.
”அதிகம்தான். இவைகள் இன்னும் அதிகமானால் கூட அவைகளினம் கெடுதல் ஏதுமில்லை. ஒரு சில கொடூர புத்தியுள்ள மனிதர்கள் வாழும் ஜன சமூகத்தினிடையே வாழ்வதைவிட இங்கு வாழ்வது எவ்வளவோ மேலானது” என்றார்.
“அது உண்மை” என்ற சந்தகர் அவருடைய வார்த்தையை ஆமோதிப்பவர் போல் சொல்லி விட்டு, “தங்களுடைய பூர்வீக ஸ்தலம் எதுவோ?” என்று கேட்டார் பணிவாக.
“நானும் சோழ நாட்டைச் சேர்த்த உறையூர் வாசிதான். சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய அவ்வூரின் பெருமை குறைந்தவுடன் இங்கு வந்தேன் நான். இன்று பாண்டியர் வசத்தில் இருக்கிறது அந்த நகரம்” என்றார்.
அம் முனிவர் பூர்வாசிரமத்தில் சோழ நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அதிலும் மிகச் சிறந்த ஊராகிய உறையூரில் இருந்தவர் என்பதை அறிந்ததும் சந்தகருக்கு உள்ளத்தில் ஒரு உவகையும் அவரிடம் முன்னிலும் அதிகப் பற்றும் ஏற்பட்டன.
“நீங்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டதும் என் மனம் பூரிப்பு அடைகிறது. தங்களைப் போன்றவர்களை ஈன்ற அந்நாடு மிகச் சிறப்புடையதுதான். என்றோ உலகெலாம் புகழ் பிரகாசித்த சோழவள நாடு இன்றுள்ள நிலையைப்பற்றி நினைத்துப் பார்த்தால் மிகவும் சங்கடத்துக்கு உள்ளாகத்தான் நேருகிறது. என் மனம் விட்டு இந்தத் துயரத்தை உங்களிடம் ஏன் சொல்லுகிறேனென்றால் நீங்களும் அப் பொன்னான பூமியில் பிறந்து வளர்த்தவர்கள் என்பதால்தான். இன்று தெற்கிலும் வடக்கிலும் வெற்றிக் கொடி நாட்டி அரசாண்டு வரும் பாண்டியர்களும் பல்லவர்களும் தாழ்ந்தோர்கள் என்ற அர்த்தத்தில் நான் இதைச் சொல்ல வில்லை. என்ன இருப்பினும் ஒரு வீட்டைச் சொந்தக்காரனே இருந்து பாதுகாப்பதிலும் மற்றவர்களிருந்து பாதுகாப்பதிலும் வித்தியாசமில்லையா? உலகெங்கும் காணமுடியாத பொன் விதைத்தால் பொன் ‘விளையும் பூமியின் சிறப்பையும் அங்கு வசிக்கும் மக்களின் பூரண நலத்தையும் பாண்டியர்களோ, பல்லவர்களோ பரிவோடு நின்று கவனிக்க முடியவில்லை என்பதுதான் என் குறை. ஆதிபத்தியத்தைப் பெருக்கும் நோக்கத்திலேயே எப்பொழுதும் கவலை செலுத்தும் பாண்டியர்களும் பல்லவர்களும் சோழநாட்டு மக்களைப்பற்றி நினைக்கவே சந்தர்ப்பமில்லை. அதோடு மட்டுமில்லை. இவ்விரு நாட்டினரும் தங்கள் பலாபலங்களைக் காட்டிக்கொள்ளத் தகுந்த போர்க் களமாகத்தான் சோழ நாட்டைக் கருதுகின்றனர். பயிர் வளமும் கலைவளமும் செறிந்த அப்புண்ணிய பூமி இன்று இரத்த ஆறுகளையும் பிணக்குவியல்களையும் தாங்கும் இரணபூமியாகி விட்டது. இந்நாட்டில் பஞ்சமும் நோயும் இன்று ‘வருகிறேன், நாளை வந்து விடுவேன்’ என்று எச்சரிக்கை செய்வதுபோல் காத்திருக்கின்றன…”என்றார் சந்தகர்.
இதைக் கேட்டதும் அந்த ஜைன முனிவர் மிகத் துக்கமும் ஆத்திரமும் நிறைந்த குரலில், “இதையெல்லாம் நான் உணர்கிறேன். உணர்த்து என்ன பயன்? காலம் சுழல்கிறது. அதன் ஓட்டத்தில் எவ்வளவோ மாறுதல்கள், என்னைப் போலத் துறவற நோக்கம் கொண்டவர்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்ட வர்கள்; மறுபடியும் உலகச் சுழல்களைப் பற்றியும் நினைக்க அருகதை அற்றவர்கள். சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி நினைத்தால் மனத்தில் ஒரு ஆதங்கம் ஏற்படுகிறது. ஆனால் என்னைப் போன்றவன் நினைக்க வேண்டிய சாம்ராஜ்யமே வேறு, உங்களைப் போன்ற வாலிபர்கள் தியாக புத்தியுள்ளவர்கள், வீரநெஞ்சு உள்ளவர்கள், மன உத்வேகத்துடன் நாட்டுக்காக ஏதேனும் உங்கள் கடமை என்றெண்ணிச் செய்தால் அதை எண்ணித்தான் நான் சந்தோஷப்பட முடியும்.அதற்கு என் ஆசீர்வாதம்” என்றார்.
அவர்கள் இப்படியே பேசிக் கொண்டிருக்கும்போது, சுகேசி சில பழ வகைகளைக் கொண்டு வந்து பிருதிவீபதியின் எதிரிலும் சந்தகரின் எதிரிலும் வைத்து விட்டுச் சற்று மறைவான இடத்தில் போய் ஒதுங்கி நின்றாள்.
பிருதிவீபதியும் சந்தகரும் தங்கள் எதிரே வைக்கப்பட்டிருந்த பழங்களை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார்கள். முனிவர் ஆவலோடு அவர்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மறைவான இடத்தில் நின்ற சுகேசி ஆர்வமும் ஆவலும் நிறைந்தவளாய்ப் பிருதிவீபதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பாவம்! நேற்று இரவு போராட்டத்தில் சிக்கித் துடித்த அந்த உள்ளம், இன்று ஏதோ ஆனந்த சாகர அலைகளிடையே துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. அவள் வாழ்க்கையில் ஒரு புது எண்ணம், ஒரு புதிய கனவு, அதன் மீது எத்தனை யெத்தனையோ கற்பனைக் கோட்டைகள் எழுந்தன. வாழ்நாள் முழுவதும் ஒரு துறவியின் பாதுகாப்பில் வளர்ந்த அவள் மனம் ஏதோ பெரிய கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை அடைந்து இன்ப வாழ்வில் சிறகடித்துப் பறக்கப் போகிறோம் என்ற நினைவில் திளைத்தது. அவள் உள்ளத்தில் ஆனந்தம் கரை புரண்டோடியது. சந்தகர் பழங்களைச் சுவைத்துக் கொண்டே, “நீங்கள் சொல்வதுபோல் என்னைப்போன்ற வாலிபர்கள் இந்நாட்டில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதற்காக ஏதேனும் செய்ய முயல்கிறோம். ஏதோ ஒரு கனவு-கரிகாலனும் செங்கணானும் வாழ்ந்த பொன் நாட்களை நாங்கள் காணாவிட்டாலும் அவர்கள் சிறப்பும், அவர்கள் செய்த விந்தைகளும் எங்கள் மனத்தைவிட்டு அகலாமல் இருக்கின்றன. கடந்துபோன அப்புனிதநாட்களைப் போல் எங்கள் வாழ்நாளில் நாங்கள் முன்னாலோ பின்னாலோ காணாவிட்டாலும் எங்கள் சந்ததியாராவது கண்டு மகிழ வேண்டுமென்ற அடிப்படையில் தான் நாங்கள் இருக்கிறோம். இதோ இருக்கும் என் நண்பர் கங்க நாட்டைச் சேர்ந்தவர். பல்லவ மன்னருக்கு உற்ற துணையாளராக இருக்கும் இவருக்கு எங்களுடைய முயற்சிகள் பிடிக்காமல் இருக்கலாம். எங்கள் முயற்சியை பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் செய்யும் முயற்சியாகக் கூடக் கருதலாம். ஆனால் எங்கள் நாட்டுப் பற்று, எங்கள் நாட்டு மக்கள் உன்னதமான நிலையில் வாழ வேண்டுமென்ற ஆவல் இவைகள் எங்கள் மனத்தில் ஏற்படுவது சகஜம்தான் என அவர் உணர்த்து கொள்ளாம லிருக்க மாட்டார்” என்றார். பிருதிவீபதியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இவ்வாறு சந்தகர் பேசினார்.
பிருதிவீபதி சிரித்தான். “உங்கள் நாட்டுப் பற்றையோ உங்கள் மக்கள் உன்னத நிலையை யடைய வேண்டும் என்பதற்காக நீங்கள் செய்யும் காரியங்களையோ தகாது என்று தான் கருத மாட்டேன். அது ஒவ்வொரு நாட்டு மக்களிடமும் இயற்கையாக உள்ளது. இன்று சிதைந்துபோய்க் கிடக்கும் சோழ நாட்டை ஒன்றுபடுத்தி அதை ஒரு மன்னனின் ஆட்சிக் குள்ளாக்குவதை நான் என்றும் விரும்புகிறேன். எனக்கும் சோழ நாட்டின் பெருமை எத்தகையதென்று தெரியும். அதையாண்ட மன்னர்களின் பெருமையும் சாமர்த்தியமும் எத்தகையது என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். நான் ஒரு சாதாரணப் போர்வீரன், ராஜ விசுவாசமுள்ளவன். என்னைப் போன்றவன், எங்கள் மன்னருக்கும்,. பல்லவ மன்னருக்கும் உள்ள நட்பையும் சம்பந்தத்தையும் அறியாமலிருக்க முடியாது. நாங்கள் பல்லவ சாம்ராஜ்யத்துக்குப் பாதகம் ஏற்படும் எவ்வழியிலும் நாட்டம் செலுத்தினோமானால் அது பெரிய நட்புத் துரோகமாகிவிடும்” என்றான்.
“நான் பல்லவ பன்னருக்கு எப்பொழுதமே தீங்கிழைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டதில்லை. ஆனால் எங்கள் நாட்டில் இன்றைய நிலைமையையும் மக்களின் மனே நிலையையும் நான் எடுத்துக் கூறத்தான் வேண்டி யிருக்கிறது. எப்பொழுதாவது சமயம் நேர்ந்தால், நீங்கள் உண்மை நிலையை உணர்ந்தவர்களா யிருந்தால் எங்களுக்காகக் கொஞ்சம் பரிந்து பேசும் நிலைமை ஏற்படுமல்லவா? அதற்காகச் சொன்னேன்” என்றார் சந்தகர்.
“சந்தர்ப்பம் நேர்ந்தால் நிச்சயமாக நான் அதைச் செய்வேள்” என்றான் பிருதிவீபதி.
“நண்பரே! உங்கள் சமூக ஆசார சீலராக விளங்கும் இம் மகா முனிவர் எதிரே எனக்குக் கொடுத்த வாக்குறுதி யொன்றே போதும். அதற்கு என் நன்றி ! உங்களைப் போன்றவர்கள் அதை நிச்சயம் மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்!'” என்று கூறினார் சந்தகர்.
“என்னுடைய வாக்குறுதியை ஒரு நாளும் நான் மறக்கமாட்டேன். உங்களோடு நான் நண்பரானதிலிருந்து உங்களுடைய உன்னத இலட்சியங்களையும் உயர்வான குணங்களையும் நான் அறிந்திருக்கிறேன். சோழ நாட்டு மக்களின் குணமும் இதயமும் எப்படிப்பட்டதாக இருக்குமென்பதை உங்களோடும் பூதுகரோடும் பழகியதிலிருந்து என்னால் அறிந்துகொள்ள முடித்தது. இதனால் உங்கள் நாட்டு மக்களின் நலனைக் கருதி எதையும் செய்ய நான் சித்தமாயிருக்கிறேன்” என்றான் பிருதிவீபதி.
இவ்விருவருடைய சம்பாஷணையிலும் தம் கவனத்தைச் செலுத்தி வந்த அரிஷ்டநேமி மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தவராக, “நண்பர்களென்றால் இப்படியல்லவா இருக்கவேண் டும்? மனமொத்த நண்பர்கள் வாழும் இடம் தெய்விகம் நிறைந்த இடமாகும். அவர்கள் உள்ளத்தில் உருவாகும் சித்தனைகள் உலகில் நல்லெண்ணங்களைப் பரப்பப் பெரிதும் உதவியாயிருக்கும். தனி மனிதனின் சாதனை யெல்லாம் ஓரளவுக்குள் நிற்பதாகவே முடியும். ஆனால் ஆப்த நண்பனின் உறுதுணையோடு நிற்கும் மனிதன் எதையும் இயக்கும் இணையற்ற சக்தியைப் பெற்று விடுதிறன். நீங்கள் இருவரும் அறிவிலும் அநுபவத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள். எப்படியோ அர்ஹத்பரமேஷ்டியின் அருளால் உங்கள் எண்ணங்களெல்லாம் சித்தியாகட்டும்” என்றார். அவர் மனத்திலே தோன்றிய ஆனந்தம் சொற்களில் பரிணமித்தது.
கிழக்கே வானில் எழுந்த சூரியனின் சுடரொளி அம்மலைக்குகை வாசலில் வீசியது. இருள் பிரிவதற்கு முன்பு அந்தப் பிரதேசம் புதிதாக வருபவர்களுக்கு மிகவும் பயங்கரமான தோற்றத்தை யளித்திருந்தால் வியப்பில்லை. இப்பொழுது காலைக் கதிரவனின் ஒளிபட்டு அந்தப் பிரதேசமே ஒரு புது உலகமாக விளங்கியது. மனித சஞ்சாரமற்ற அவ்வனப் பகுதியில் காலை நேரத்து இளம் வெய்யில் பிரவேசித்துப் புத்துயிர் ஊட்டியது. குன்றின் குகையில் குடைந்தெடுத்து வடிக்கப்பட்டிருந்த தெய்வ வடிவங்கள் கூட இருளிலிருந்து வெளிப்பட்டு, உயிர்ச் சிற்பங்களாகத் தோற்றமளித்தன. கதிரவனின் வரவுக்காகக் காத்திருந்தவை போல், செடி கொடிகளும், மரங்களும் காலைக் காற்றில் இலேசாக ஆடித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டன. பூரணமாகப் பொழுது விடிந்து விட்டதற்கு அறிகுறியாகப் பட்ஜொலங்கள் பலவித இனிய குரலில் கூவின.
பிருதிவீபதியும் சந்தகரும் தங்கள் ஆகாரத்தை முடித்துக்கொண்டதும் பிரயாணத்துக்குச் சித்தமானார்கள். அவர்களை வழியனுப்புவதற்காக அம் முனிவரும் பின் தொடர்ந்தார். பிருதிவீபதியும் சந்தகரும் ஒரு மரத்தில் கட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்து, அவைகளைப் பிரயாணத்துக்குத் தயார் செய்வதுபோல் அவைகளின் முதுகில் தட்டினர்; அவ்வளவுதான்! அடுத்த கணம் அந்தக் குதிரைகள் கம்பீரமாகக் கனைத்துக் கொண்டு எழுந்து நின்றன. அவைகளின் மீது அவர்கள் ஏறி உட்கார்ந்தனர். குதிரைகளும் கம்பீரமாகப் புறப்படத் தொடங்கின.
அரிஷ்டநேமி முனிவர் தம் இரு கரங்களையும் தூக்கிக் குதிரைகளில் அமர்ந்துள்ள அவ்விருவரையும் ஆசீர்வதிதார். குதிரைகள் கம்பீரமாகப் புறப்பட்டன. குதிரைகள் மீது கம்பீரமாக வீற்றிருந்த பிருதிவீபதி அக்குகை வாசலைப் பார்த்தபோது அங்கே சுகேசி நின்று கொண்டிருந்தாள். அழகே உருப்பெற்று வந்ததைப்போல் தெய்வமங்கை யாகக் காட்சியளித்தாள். காலைக் கதிரவனின் பொன் ஒளிபில் அவள் சௌந்தரியம் பூரணப் பொலிவோடு ஒளிர்ந்தது.
பிருதிவீபதியைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அவள், தன்னை அவன் நோக்கியதைக் கண்டதும் சிறிது வெட்கித் தலை குனிந்த வண்ணமே ஒரு புன்முறுவல் பூத்தாள். பாவம். அவள் சிரிப்பிலும் பார்வையிலும் பிருதிவீபதி எதைக் கண்டானோ? அவன் இதயத்தில் அந்தச் சமயத்தில் ‘சுரீ”ரென்று ஏதோ தைப்பதைப் போன்ற உணர்ச்சிதான் ஏற்பட்டது.
இருப்பத்தியேழாவது அத்தியாயம்
இந்தப் புத்தி எதற்கு?
சந்தகர் அமர்ந்திருந்த குதிரையும் பிருதிவீபதி ஏறியிருந்த குதிரையும் ஓர் இரவு ஏற்பட்ட பழக்கத்தினால் மிகவும் ஒற்றுமை அடைந்து விட்டதுபோல் ஒன்றோடொன்று போட்டி போடாமல் ஒன்றுக்கொன்று வீட்டுக் கொடுக்கும் பாவனையாக முன்னும் பின்னுமாக ஓடிக் கொண்டிருந்தன. திருப்பான்மலையை விட்டுப் புறப்பட்டதிலிருந்து சந்தகரும் பிருதிவீபதியும் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவருமே ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பவர்போல் தோன்றினர். எவ்வளவு நேரம்தான் அவர்கள் பேசாமலேயே வரமுடியும்? கரடுமுரடான மலைப் பிரதேசங்களைத் தாண்டி இரண்டு புறமும் மரங்கள் அடர்ந்த பாதைக்கு அவர்கள் குதிரைகள் வந்து சேர்ந்தது. காஞ்சி நகருக்குச் சமீபமாக வந்து விட்டதைத்தான் குறிப்பிட்டது. இவ்வளவு நேரம் குதிரையில் வந்தபடியே யோசனையில் ஆழ்ந்திருந்த பிருதிவீபதி அப்பொழுதுதான் ஏதோ யோசித்து முடிவு செய்தவன்போல், “நண்பரே! வரும்போது நாம் திருப்பான்மலையில் சிறிது நேரம் தங்க நேர்ந்தது ஒருவிதத்தில் தரும சங்கடமான பொறுப்பை நம் தலையில் சுமத்திக் கொண்டது போல் முடிந்தது” என்றான்.

பிருதிவீபதி எதைக் குறித்து அப்படிச் சொல்கிறான் என்பதைப் புரிந்து கொண்டும். புரிந்து கொள்ளாதவர் போல் சிரித்துக் கொண்டே, “நாம் அப்படிப்பட்ட பெரும் பொறுப்பு எதையும் ஏற்றுக் கொண்டதாக நான் நினைக்கவில்லை” என்றார் சந்தகர்.
“ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதைப் பெரும் பொறுப்பாக நீங்கள் கருதாதது ஆச்சரியம் தான்” என்றான் பிருதிவீபதி.
சந்தகர் சிரித்தார். “இந்த உலகத்தில் இன்பத்தை நிரப்புகிறவர்கள் பெண்களே தான். ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் ஒரு ஆண் என்றும் அதைத் துன்பமாகவோ பராமுகமாகவோ கருதியதில்லை. வாழ்வின் இன்பத்தைச் சுமந்து செல்வதாகவே கருதுகிறார்கள்” என்றார்.
”அது தான் மாயை, அதில் நாம் சிக்கி உழல்கிறோம். நீங்கள் அந்தப் பெண்ணின் வாழ்க்கைப்பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டதை மிகத் தவறாகக் கருதியிருக்கிறீர்கள்” என்றான் பிருதிவீபதி.
“நான் ஒன்றும் தவறாகக் கருதவில்லை. சாதாரணமாக அப்படிப்பட்ட யௌவனமும் பேரழகும் பொருந்திய ஒரு பெண்ணின் வாழ்வை மலர்விக்க ஒரு ஆண் பிள்ளை முயன்றானானால் அதைத் தவறாகக் கருதுகிறவன் பெரிய முட்டாளாகத்தான் கருதப்படுவான்” என்றார் சந்தகர்.
”இப்பொழுது நீங்கள் பேசுவதிலிருந்து என்னைப் பற்றித் தவறாகப் பேசுகிறீர்கள் என்றுதான் நான் கருதவேண்டி யிருக்கிறது” என்றான் பிருதிவீபதி.
“ஒவ்வொரு மனிதனின் இதயமும் எதை இயற்கையாகக் கருதுமோ அந் நிலையில் நான் என் இதயமும் கருதியது. உலகம் ஒப்புக் கொள்ளாத அளவுக்கு இதயத்தில் எழும் கருத்துக்கள்தான் இயற்கைக்கு மாறான தாகும். அதைத்தான் வித்தியாசமாகவோ தவறாகவோ கருத முடியும். வயது முதிர்ந்த வரும் அனுபவ ஞானியுமான ஜைன முனிவர் இயற்கையாகத் தம் மனத்தில் எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறாரோ அத்தகைய கருத்தைத்தான் நானும் கொண்டிருக்கிறேன். அவர் தம் வளர்ப்புப் பெண்ணின் வாழ்வை ஒரு தகுந்த யௌவன புருஷரிடம் ஒப்படைத்ததாகக் கருதுகிறார். நானும் அப்படித்தான் கருதுகிறேன். இதில் என்ன தவறு இருக்கப் போகிறது?” என்றார் சந்தகர் பரிகாசமாகச் சிரித்துக் கொண்டே.
“மறுபடியும் நீங்கள் இருதய பூர்வமாகத் தவறு செய்கிறீர்கள். என்னுடைய மன நிலையை நீங்கள் அறிந்து கொள்ளவில்லை..” என்றான் பிருதிவீபதி.
“உங்கள் மன நிலையைப் பற்றித் தாங்கள் ஆயிரம் சொல்லலாம். உங்கள் மன நிலையைப் பற்றித் தாங்கள் சொன்னால்தான் தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இயற்கையாக மனம் எதை நினைக்குமோ, அதைத் தான் நானும் நினைக்கிறேன். அந்த முனிவரும் நினைக்கிறார்” என்றார் சந்தகர்.
”நான் அந்தப் பெண்ணின் வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் பற்றி நீங்கள் இருவருமே ஏதோ தவறாகத்தான் கருதுகிறீர்கள்” என்றான் பிருதிவீபதி.
“உங்கள் மன நிலை எனக்குத் தெரியாத வரையில் எங்கள் கருத்து தவறானது என நாங்கள் கருதவே மாட்டோம். தங்கள் மனத்தை அறிந்த பின்னும் தாங்கள் ஏதோ தவறாகக் கருதுகிறீர்கள் என்று தங்களிடம் அனுதாபம் காட்ட நேருமே தவிர, எங்கள் கருத்து தவறானது என நாங்கள் ஒப்புக் கொள்ள முடியாது” என்றார் சந்தகர்.
“அப்படி யென்றால் நான் அந்தப் பெண்ணிடம் காதல் கொண்டுள்ளேன், அப்பெண்ணின் வாழ்வை அம்முறையிலேயே ஏற்றுக் கொள்ளச் சம்மதித்துள்ளேன் என்றுதானே கருதுகிறீர்கள்?”
“ஆமாம்! அக்கருத்துத்தான் மனதில் எழுகிறது.”
“இயற்கையாக எழந்தாலும் அது மிகவும் தவறு.”
“தவறு என்று சொல்லி விட்டதினால் ஒப்புக் கொண்டுவிட முடியாது. நீங்கள் தான் இந்தக்காரியத்தில் தவறாக நடந்து கொள்ளுகிறீர்கள் என்றுதான் நான் சொல்லுவேன்”.
“நான் அந்தப்பெண்ணின் வாழ்க்கை நலனைப் பாதுகாப்பதற்காக ஒப்புக் கொண்டது அவளை ஒரு நல்ல வாலிபனுக்கு மணம் செய்து வைக்கலாம் என்ற கருத்தில்தான்”.
“நல்ல கருத்துத்தான். ஆனால் அதை விளக்காமல் விட்டு விட்டதுதான் தாங்கள் செய்த பெரும் தவறு. உங்களைப் போன்ற வாலிபர் கையில் ஒரு பெண்ணை ஒப்படைப்பவர் இயற்கையாக எக்கருத்தில் ஒப்படைப்பார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளாமல் போனதுதான் ஒரு விபரீதம். எந்த நோக்கத்தில் அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள்ளுகிறோம் என்று விளங்காமல் போனதுதான் அதைவிடப் பெரிய விபரீதம்” என்றார் சந்தகர்.
”என் குற்றத்தை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அந்தப் பெண் நாள் புறப்படும்போது என்னைப் பார்த்த பார்வை என் மனசைத் தொட்டுக்கிளறி விட்டது. அப்பொழுதுதான் ஏற்பட்டுள்ள பிழையை நான் உணர்ந்தேன். அவள் என்னைப் பற்றி ஏதோ தவறாகக் கருதுகிறாள் என்றே நினைக்கிறேன்” என்றான் பிருதிவீபதி.
”பாவம்! அவள் உங்கள் மீது காதல் கொண்டு விட்டாள் என்பதை உங்கள் பார்வையின் மூலமாகவே அறிந்து கொண்டு விட்டீர்கள் போலிருக்கிறது. அந்த இடத்தில் அவள் மீது தவறு சொல்வதில் பயனில்லை. இயற்கையாக ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களைப் போன்ற யௌவனமும் அழகும் பொருந்திய வாலிபரைக் கண்டால் இத்தகைய கிளர்ச்சி ஏற்படுவது சகஜம், அதிலும் தாங்கள் அவளுடைய வாழ்க்கை நலனைக் கவனிப்பதாக ஏற்றுக் கொண்ட பின் அவளுடைய கனவுக் கோட்டை உயர்ந்ததில் தவறு ஒன்றுமில்லை. தவிர, தங்களைப் போன்ற இளவரசர்கள் அவளைப் போன்ற யௌவனமும் அழகும் கொண்ட பெண்ணின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது பெரும் பாரமாகாது. ஒவ்வொரு அரசர்கள் எவ்வளவோ பெண்களைத் தங்கள் காதல் கிழத்திகளாக அமைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் தாங்கள் மறந்து விடக் கூடாது” என்றார் சந்தகர்.
“தங்கள் கருத்து தவறு. என் மனம் மாலவல்லியைத் தவிர எந்தப் பெண்ணையும் கருதாது ” என்றான் பிருதிவீபதி.
“நீங்கள் அவ்வளவு பிடிவாதம் காட்டக் கூடாது. இந்த மனசைக் கொஞ்சம் விரிவுபடுத்திக் கொண்டால் அதில் பல பெண்களுக்கு இடமளிக்க கூடிய வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். மாலவல்லி வேண்டுமானால் உங்கள் மனசிலுள்ள உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்ளட்டும். மற்றவர்களைக் கீழே உள்ள ஆசனங்களில் அமர்த்துங்கள். வாழ்க்கைக்காகப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம். உபகார சிந்தையோடு ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளலாம். உறவு முறையில் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளலாம். அதுவும் தங்களைப் போன்ற ராஜகுமாரர்கள் பல காரணங்களுக்காகப் பல பெண்களைக் கலியாணம் செய்து கொள்ளலாம்” என்றார் சந்தகர்.
“நீங்கள் ஏதோ என்னைப் பரிகாசம் செய்கிறீர்கள் என்று தான் நினைக்கிறேன். நீங்கள் என் நிலையில் இருந்தால் தெரியும்…” என்றான் பிருதிவீபதி.
“உங்கள் நிலையில் இல்லாததுதானே துரதிர்ஷ்டம். இப்படித் தாடியும் மீசையும் வைத்துக் கொண்டு பைத்தியக்கார னைப் போல் திரியும் சோதிடனாகிய என்னை எந்தப் பெண் காதலிக்கப் போகிறாள்…?” என்றார் சந்தகர் இலேசாகச் சிரித்துக் கொண்டே.
“ஏன் இந்தப் பெண்ணையே நீங்கள் கலியாணம் செய்து கொண்டால் என்ன?” என்றான் பிருதிவீபதி.
“கலியாணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவள் என்னை மனத்தால் கருத வில்லையல்லவா? அவள் உங்களிடம் தானே மயங்கி யிருக்கிறாள் என்பதை அறிந்து கொண்ட பின் அவளை எப்படி நான் மனத்தால் நினைக்க முடியும்?” என்றார் சந்தகர்.
“எனக்கு எல்லாவற்றையும்விட அப் பெண்ணின் தவறான அபிப்பிராயத்தை எப்படி மாற்றப் போகிறேம் என்பது தான் விளங்கவில்லை. உண்மையாகவே தான் மாலவல்லியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனத்தால் நினைக்க முடியாத நிலையில்தான் இருக்கிறேன்.”
“அதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் தங்களைப் போன்றவர்கள் உபகார் சிந்தையோடாவது வேறொரு பெண்ணை அங்கீகரிக்கக் கூடாதா?” என்று கேட்டார்.
“உபகாரசிந்தை இருக்குமானால் அப் பெண்ணை வாழ்க்கையோடு பிணைத்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. அவளுடைய நல் வாழ்க்கைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாமல்லவா?” என்றான் பிருதிவீபதி.
“உங்களுக்கு வாழ்க்கைத் துணையாவது தான் அவளுக்கு நல்வாழ்வு அளிக்கு மென்று அந்தப் பெண் கருதியிருந்தால் நீங்கள் நல்வாழ்வு என்று கருதுவது வெறும் போலித்தனமாகத்தானே இருக்கும்? இதைப் பற்றி அதிகம் வளர்த்துவதில் பயனில்லை. அம் முனிவரிடம் தாங்கள் அப் பெண்ணின் வாழ்க்கைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியதும், அம் முனிவர் அதை இயற்கையாகத் தாங்கள் மணவாளனாகப் போகிறீர்கள் என்று கருதித்தான் மகிழ்ச்சியடைந்தார். இதை அறிந்ததும் அப்பெண் தங்களிடம் மனத்தை விட்டுத் தடுமாறியதையும் நான் அறிந்து கொண்டேன். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் தவறாக எடுத்துக் கொண்டு விட்டதாக எண்ணித் தாங்கள் அதைச் சிதைக்க நினைத்தால் அது விபரீதமாக முடியும். தாங்கள்தான் அந்த வாக்குறுதியிலிருந்து தவறியதாக உலகம் கருதும். இதைப் பற்றிய கவலையைப் பின்னால் யோசித்துக் கொள்வோம். இந்தப் பேச்சுப் போக்கிலேயே நாம் காஞ்சி நகரை அடைந்து விட்டோம் எனக் கருதுகிறேன். இனிமேல் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று திட்டம் வகுப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும்” என்றார் சந்தகர்.
”ஆம்! முதலில் பூதுகர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். நான் அரண்மனை விருந்தினராக இருந்து கொண்டு கூடியவரையில் அங்குள்ளவர்களோடு பழகி உளவு தெரிந்து கொள்கிறேன். நீங்கள் வெளியிலிருந்து உளவு தெரிந்து கொள்ளுங்கள். நாம் இருவரும் அடிக்கடி சந்திக்க வேண்டிய இடத்தை நிர்ணயம் செய்து கொள்வோம்” என்றான் பிருதிவீபதி.
“சரி! எனக்குக் காஞ்சி நகரில் அதிகப் பழக்கம் இல்லாததால் நீங்கள் தான் நாம் சந்திக்கும் இடத்தைக் குறிப்பிட வேண்டும்” என்றார் சந்தகர்.
“இந்நகரில் வெளியூரிலிருந்து வந்த யாத்திரீகர்கள் தங்குவதற்காகப் பெரிய விடுதி ஒன்று உள்ளது. அங்கே நீங்கள் இருங்கள். அங்கு நடு மத்தியான வேளையில் நாம் சந்திப்போம். ஏனென்றால் காலையிலும் மாலையிலும் நாம் இடங்களைச் சுற்றிப் பார்த்துத் தெரிந்து வசதி இருக்கும்” என்றான்.
அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே காஞ்சி நகரின் வீதிகளை அடைந்தனர்.
அழகான மாளிகைகள் நிறைத்த அகன்ற வீதியில் குதிரையேறி வரும் அவ்விருவரும் பிறருடைய கண்களைக் கவரக் கூடியவர்களாகத்தான் இருந்தனர். அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த அரண்மனை ஊழியர்கள் கம்பீரமான குதிரை மீது அமர்ந்து வரும் பிருதிவீபதிக்குத் தங்கள் வணக்கத்தைச் செலுத்தினர். இதிலிருந்து அவனை அரண்மனை ஊழியர்கள் நன்கு அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சந்தகர் உணர்ந்தார். பிருதிவீபதி தன் குதிரையை நகரில் யாத்திரீகர்கள் தங்கும் விடுதிக்குச் செலுத்தினான். அவ்விடுதியின் பாதுகாப்பாளர் பிருதிவீபதியைக் கண்டதும் எழுந்து ஓடிவந்து வணங்கி நின்றார். பிருதிவீபதி கம்பீரமான குரலில், “இவர் என்னுடைய நண்பர், குடந்தைக் கோடீச்சுவரத்தைச் சேர்ந்தவர். சோதிட சாஸ்திரத்தில் வல்லவர். இவரைச் சந்தகர் என்று சொல்லுவார்கள். இவர் சில நாட்கள் இந்த விடுதியில் தங்கி இருக்க ஆசைப்படுகிறார். விடுதியில் அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுங்கள்” என்றான்.
விடுதியின் பாதுகாப்பாளர், “தங்கள் உத்தரவுப்படி ஒரு குறைவும் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளுகிறேன்” என்று கூறினார்.
உடனே பிருதிவீபதி சந்தகரைப் பார்த்து, “நான் சென்று வருகிறேன். நீங்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினால் இவ் விடுதியிலுள்ளவர்கள் மூலமே அரண்மனைக்குச் சொல்லி அனுப்பினால் போதும். அல்லது அவர்கள் மூலமாக அரண்மனைக்கு வந்து நீங்கள் என்னைச் சந்திக்கலாம்” என்று சொன்னார். பிறகு அந்த விடுதிப் பாதுகாப்பாளரைப் பார்த்து. “இவர் என்னை எந்தச் சமயத்தில் அரண்மனையில் வந்து பார்க்க நினைத்தாலும் தக்க மனிதர் மூலம் அவருக்கு வேண்டிய சௌகர்யங்களை உடனடியாகச் செய்யத் தவறாதீர்கள்” என்றான். உடனே பிருதிவீபதி சந்தகரிடம் விடைபெற்றுக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
சந்தகர் குதிரையிலிருந்து இறங்கியதும் விடுதிப் பாதுகாப்பாளர் அங்கிருந்த வேலைக்காரன் ஒருவனிடம் குதிரையைப் பத்திரமாக லாயத்தில் கட்டும்படி உத் தரவிட்டார். பிறகு சந்தகருக்கு உபசார வார்த்தைகள் சொல்லி விடுதிக்குள் அழைத்துக் கொண்டு போனார்.
சந்தகர் அவ் விடுதியில் குளித்து விட்டுக் காலை உணவும் அருந்திவிட்டு வந்தார். நகரில் எங்கே செல்லலாம் என்பதைப் பற்றிக் கவலை உள்ளவராக, விடுதிப் பாதுகாப்பாளரிடம் பேசிச் சில விவரங்கள் அறிந்துகொள்ள நினைத்தார்.
“இப்படிப்பட்ட பெரிய நகரங்களில் வெளியூரிலிருந்து வரும் யாத்திரீகர்கள் தங்குவதற்காக வசதியான விடுதிகள் இருப்பது பெரிதல்ல. ஆனால் அதை ஒழுங்காக நிர்வகிப்பவர்களின் சாமர்த்தியத்தில்தான் எல்லாமிருக்கிறது. நானும் எவ்வளவோ நகரங்களுக்குச் சென்றிருக்கிறேன். எவ்வளவோ விடுதிகளில் தங்கி இருக்கிறேன். ஆனால் இவ்வளவு சௌகரியங்கள் உள்ள விடுதியொன்றை இப்பொழுதுதான் என் வாழ்நாளிலேயே பார்க்கிறேன். இதெல்லாம் உங்களுடைய நிர்வாகத் திறமையினால் ஏற்பட்டதுதான் என்று கருதுகிறேன்” என்றார் முகஸ்துதியாக.
விடுதிப் பாதுகாப்பாளருக்கு இதைக் கேட்டதும் பேரானந்தத்தால் உடல் சிலிர்த்தது! பாவம்! அவர் நம்மை இவ்வளவு புகழ்ச்சியாகக் கூறும் எவரையும் பார்த்ததில்லை போலிருக்கிறது.
”ஆமாம்! வஞ்சனை இல்லாமல் உழைக்கிறேன். வந்தவர்களை உபசரிக்கிறேன். என்னைப்போல் பொறுப்போடு யாரும் காரியம் செய்ய மாட்டார்கள். ஆனால் இங்கு வந்து தங்கும் யாத்திரீகர்களும் இந்த விடுதியை நடத்தும் நிர்வாகியின் பொறுப்பை உணர்ந்திருக்க வேண்டும். கிடைத்த சௌகர்யங்களைப் பெற்றுத் திருப்தி அடையாமல் தூற்றிக் கொண்டு போகிறவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? எனக்குத் தெரிந்த வரையில் உங்கள் சோழ நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் எல்லாவற்றையும் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சில நாட்களுக்குமுன் உங்கள் நாட்டிலிருந்து தான் வந்தார் ஒரு வாலிபர். அவர் கொஞ்சம் நாஸ்திக குணம் கொண்டவர் போல் பேசினாரே தவிர, மற்றப்படி அவர் மிகவும் குணமுள்ளவராக நடந்து கொண்டார்” என்று கூறினார்.
“அப்படியா? அப்படி யார் எங்கள் நாட்டிலிருந்து நாஸ்திக வாதம் பேசுகிறவர்கள் வந்திருப்பார்கள்? அவர் பெயர் என்னவென்று சொன்னார்?”
”அவர் தம் பெயர் பூதுகர் என்று சொன்னார். குடந்தைக்குச் சமீபமுள்ள திருப்புறம்பயத்தைச் சேர்ந்தவரென்றும் சொன்னார்” என்றார் விடுதிப் பாதுகாப்பாளர்.
“அந்தப் பாவி இங்கேயும் வந்து விட்டானா? அவன் எத்தகைய தற்குணம் படைத்தவனாக இருந்தாலும் இருக்கட்டும். அவன் பேசும் நாஸ்திக வாதம் மாத்திரம் எனக்குப் பிடிப்பதில்லை. இந்த உலகத்திலே கடவுளே இல்லையென்றும், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று சொல்லுகிறவர்களையும் அடைத்து வைக்க ஒரு விநோதமான சிறைச்சாலை ஏற்படுத்த வேண்டும். அவர்களால் இந்த நாட்டுக்கு எவ்வளவு தீங்கு தெரியுமா? அவன் இங்கு எதற்காக வந்தானாம்? யாரையாவது பார்க்க வேண்டுமென்று உங்களை விசாரித்திருப்பானே?” என்றார் சந்தகர்.
“ஆமாம். விசாரித்தார். இங்கு குடந்தையிலிருந்து வந்திருக்கும் இசைக் கணிகை தேனார்மொழியாளின் மாளிகை எது என்று கேட்டார். நான் சொன்னேன். அவள் அவருக்கு ஏதாவது தெரிந்தவளாய் இருப்பாளோ?” என்றார் விடுதிப் பாதுகாப்பாளர்.
“அவன் மிகவும் பெண் மோகம் பிடித்தவன். அவன் எந்த ஊர் வந்தாலும் பெண்களைப் பற்றி விசாரிப்பதில் தான் கவனம் செலுத்துவான்…!”
“அடடே! இப்படிப்பட்ட கெட்ட சுபாவம் கொண்டவரா அவர்? இப்படிப் பட்டவர்கள்தான் மிகவும் நல்லவர்கள் போல வேஷம் போடுகிறர்கள். அதிருக்கட்டும்! நீங்கள் பிரபல சோதிடர் என்று தெரிந்து கொண்டேன். நான் கூட உங்களிடம் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டு மென்ற ஆவல். என் ஜாதகப்படி சனி பகவான் அஷ்டமத்தில் இருக்கிறார்“ என்றார். சந்தகர் இடைமறித்து, “இருக்கட்டும். இருந்துவிட்டுப் போகட்டும். நான் இப்பொழுது அவசரமாக வெளியே செல்ல வேண்டும். கவலைப் படாதீர்கள். போய் விட்டு வந்து உங்கள் ஜாதகத்தையும் பார்த்து விடுகிறேன்” என்று சொல்லிக் கிளம்பினார்.
அந்த விடுதி நிர்வாகியும் சந்தோஷமாக விடை கொடுத்து அனுப்பினார்.
அங்கிருந்து கிளம்பிய சந்தகர் தேனார்மொழியாளின் வீட்டை விசாரித்துக் கொண்டு போக நினைத்தார். ராஜசபையில் பிரசித்தமான பாடகியாக இருக்கும் அவள் மாளிகையைக் கண்டு பிடிப்பதா கடினம்? இரண்டொருவரிடம் விசாரித்துக் கொண்டு சீக்கிரத்திலேயே அவர் தேனார் மொழியாளின் மாளிகையை அடைந்தார்.
அந்த அழகான மாளிகையின் முற்றத்தோடு கூடிய தாழ்வாரத்துக்கு அவர் வந்தபோது அங்கு ஒரு ஆசனத்தில் தனியாகத் தேனார்மொழியாள் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவள் போல் உட்கார்ந்திருந்தாள். கீழே அழகான வீணையொன்று வைக்கப்பட்டிருந்தது. தீவிரமாகச் சிந்தனையிலிருந்த தேனார்மொழியாள் யாரோ வந்திருக்கும் அரவம் கேட்டதும் சட்டென்று திரும்பிப் பார்த்தபோது, சந்தகர் நிற்பதைக் கண்டு சிறிது பதற்றம் அடைந்தவளாக எழுந்து நின்றாள்.
சந்தகர் அவளிடம் எப்படிப் பேசுவது என்று நினைப்பதற்குள். “நீங்கள் யார்? எங்கே வந்தீர்கள்?” என்றாள் தேனார் மொழியாள், அதிகாரமும், கோபமும் நிறைந்த குரலில்.
“நான் சோழ நாட்டைச் சேர்ந்தவன். காஞ்சீபுரத்துக்குத் தான் வந்தேன்….” என்றார் சந்தகர்.
சந்தகர் பதில் அவளுக்குச் சிறிது அடக்க உணர்ச்சியை ஏற்படுத்தியது. தான் விறைப்பாகக் கேட்ட கேள்விக்கு அவர் தணிவாகப் பதில் சொன்னாலும் அந்தப் பதில் ஏதோ விஷமித் தன்மை கொண்டது போலிருந்ததால் அவரிடம் கொஞ்சம் அமைதியாகவே பேச வேண்டும் என்ற அபிப்பிராயத்துக்கு வந்தாள்.
“தாங்கள் இங்கு வந்த காரணம் என்னவோ?” என்றாள் அவள் மெதுவாக.
“நான் ஒரு சோதிடன். கோடீச்சுவரத்துச் சோதிடன் சந்தகன் என்று கேள்விப்பட்டிருக்கலாம். நான் தொழில் விஷயமாகக் காஞ்சீபுரம் வந்தேன். சோழநாட்டில் இப்பொழுது ரொம்பவும் பஞ்சம். தொழில் துறையில் வருமானம் கெட்டு விட்டது. செல்வம் கொழிக்கும் பல்லவ சாம்ராஜ்யத் தலைநகருக்கு வந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று எண்ணி வந்தேன். பல சீமான்களைப் பார்த்துக் கொண்டு வருகிறேன். அப்படியே தங்களையும்…” என்று சொல்லி நிறுத்தினார் சந்தகர்.
கோடீச்சுவரத்துச் சோதிடர் சந்தகர் என்பதைக் கேட்டதும் தேனார்மொழியாள் முன்னிலும் அதிக பயமும் பக்தியும் கொண்டவளாக, “நீங்கள்தானா அந்தக் கோடீச்சுவரத்துச் சந்தகர்? மிகவும் சந்தோஷம். உட்காருங்கள்” என்று அவரை உபசரித்து அங்கிருந்த ஆசனமொன்றில் உட்காரச் சொன்னாள்.
அவர் அந்த ஆசனத்தில் கம்பீரமாகக் கால் மேல் கால் போட்டு உட் கார்ந்து அவள் முகத்தை உற்றுப் பார்த்தார். அந்த முகக் குறியிலேயே அவளுடைய உள் அந்தரங்கத்தைத் தெரிந்து கொண்டவர் போல், “இந்த உலகத்தில் பதவி, செல்வம், புகழ் எல்லாம் உள்ளவர்களுக்கு ஒரு குறை இல்லாமல் இருப்பதில்லை. அவர்கள் விரும்பும் எல்லாவற்றையுமே சர்வேசுவரன் அவர்களுக்குக் கொடுத்து விடுவதில்லை. அதற்குத்தான் இந்த ஒன்பது கிரகங்களை வைத்திருக்கிறான். இந்த ஒன்பது கிரகங்களில் எட்டு கிரகங்கள் அவர்கள் வாழ்க்கைக்குச் சாதகமாக இருந்து ஒன்று மட்டும் சிறிது கெடுதலை உண்டாக்கினால் கூடப் போதும். அவர்கள் வாழ்க்கையில் பாக்கியமாகக் கிடைத்த எல்லாச் சாதனங்களும் பாழாகி விடும். மனித வாழ்வில் ஒரு கிரகம் உயர்ந்த பதவியைக் கொடுக்கிறது. இன்னொரு கிரகம் வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் எல்லாவற்றையும் கொடுக்கிறது. மற்றொரு கிரகம் நோயற்ற திடவாழ்வைக் கொடுக்கிறது. பிரிதொரு கிரகம் புத்தியை வளர்க்கிறது. இப்படிப் பல கிரகங்கள் பல நன்மைகளைச் செய்தாலும் ஒரு கிரகம் அவர்கள் மனோ இச்சையைக் குலைத்து விட்டால் போதும். இத்தனையும் வீணாகி விடும். உதாரணமாக, வாழ்வில் பொன், பொருள், பூஷணம் எல்லாமிருக்கலாம். ஆனால் ஒரு ஆண் தான் விரும்பிய பெண்ணையோ அல்லது ஒரு பெண் தான் விரும்பிய ஆணையோ அடையாவிட்டால் வாழ்வில் கிடைத்த இத்தனை சாதனங்களும் வீணாகி விடுகின்றன. ஒரு காதலனை விரும்பி அவனை அடையக் கொடுத்து வைக்காத பெண்ணுக்கு ஏராளமான ஆடை ஆபரணங்கள் இருந்தாலும் அவைகளை அணிந்து கொள்ளப் பிரியப் பட மாட்டாள். என்னவோ உங்களுக்கு உள்ள மனோ விசாரம் எதுவாக இருக்கும் என்று நான் ஆராய்ச்சி செய்து கவனிக்கவில்லை. இருப்பினும் தங்களைப் பார்த்தவுடனேயே இப்படிச் சொல்லும் படி எனக்குத் தோன்றியது.”
தேனார் மொழியாள் அப்படியே அயர்ந்து விட்டாள். ஒரு மனிதரைப் பார்த்தவுடனே அவருடைய மனச் சஞ்சலங்களை எடுத்துச் சொல்லும் சோதிடரை இப்பொழுதுதான் தன் வாழ் நாளில் அவள் பார்த்தாள்.
அவள் மிகவும் பணிவான குரலில், “சுவாமி, தாங்கள் சொல்லியது முற்றிலும் உண்மை. நான் இப்பொழுது அந்நிலையில்தான் இருக்கிறேன். வாழ்க்கையில் எது இருந்தாலென்ன? சுகம் இல்லை. இந்த மனத்தில் அந்தரங்கமான உண்மைகள் எவ்வளவோ உண்டு. அரச சமூகத்தில் பழக்கம் இருந்ததால் பல உண்மைகள் தெரிந்து கொண்டிருக்கிறேன். முக்கியமாக, பத்துநாட்களுக்குமுன் ஒருவர் வந்தார். சோழ நாட்டைச் சேர்ந்தவர்தான்-வாலிபர். இவ்வளவு நாளும் இல்லாமல் எப்படியோ என் மனம் அவரிடம் லயித்து விட்டது. வெட்கத்தை விட்டு, என் அபிப்பிராயத்தை அவரிடம் சொன்னேன். அந்த உத்தம புருஷர் என் வார்த்தைகளுக்கு இணங்க வில்லை. அவரை எப்படியேனும் என் வசமாக்கிக் கொள்ள வேண்டுமென்று என் மனம் துடித்தது. அதற்கு ஏதேனும் முயற்சி செய்யலாம் என்று யோசிக்கும் தறுவாயில் அவர் பல்லவ சேனாதிபதி உதய சந்திரனால் பிடிக்கப்பட்டு எங்கோ சிறையில் வைக்கப் பட்டிருக்கிறார் என்று அறிந்து கொண்டேன்…” என்று சொல்லிக்கொண்டே வரும்போது, சந்தகர் திகைப்படைந்தார்,
ஆனால் அதை வெளியிட்டுக் கொள்ளாது, “நிறுத்துங்கள். உங்களுக்கு நான் அல்லவா சோதிடம் சொல்ல வந்திருக்கிறேன்? நடந்த கதையை யெல்லாம் நீங்களே சொல்லி விட்டால் நான் என்ன சொல்வது? போகட்டும்-உங்கள் உணர்ச்சி அப்படி இருக்கிறது. நான் வரும்போதே. உங்களைப் பார்த்த போதே. உங்கள் உள் அந்தரங்கத்தையும் மனப்போராட்டத்தையும் அறிந்து கொண்டு விட்டேன். உங்களுக்கு ‘அவர் விடுதலையாவாரா? அவர் விடுதலையான பின் உங்கள் ஆசை நாயகராவாரா’ என்பதுதானே கேள்வி?” என்று சொல்லிச் சட்டென்று தரையில் உட்கார்ந்து தம்முடைய சோதிடப் பையை எடுத்து ஒரு பிடி சோழியை வைத்துப் பிரித்து எண்ணத் தொடங்கினார்.
“ஆமாம் – முதலில் அவர் விடுதலை ஆனால் போதும், அப்புறம் அவரை அடைவது என்னுடைய சாமர்த்தியம்” என்றாள் தேனார்மொழியாள்.
சந்தகர் அவள் வார்த்தையைக் காதில் வாங்கிக் கொண்டே சோழிகளை எண்ணி முடித்துவிட்டு, ‘தங்கள் மனத்தைக் கொள்ளை கொண்ட அந்த மகா புருஷர் ஒரு பெரிய அரசாங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே குற்றவாளியாகி யிருக்க வேண்டும். இல்லையா?” என்றார்.
“ஆமாம்! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அவர் இந்நகருக்கு வந்தது அரசாங்க அதிகாரிகளுக் கெல்லாம் தெரிந்திருக்கிறது” என்றாள் தேனார்மொழி.
“அவர் பகிரங்கமாக வந்ததினால் அரசாங்க அதிகாரிகளெல்லாம் தெரிந்து கொள்ளும்படி நேரிட்டது. அவர் எதற்கும் அஞ்சாத மகாபுருஷர். இல்லையா? சரி! மற்ற விஷயங்களையும் சொல்லுகிறேன். பாருங்கள்” என்று சொல்லி விட்டு, மறுபடியும் சோழிகளைப் போட்டு எண்ணிப் பார்த்து விட்டு, “அந்த மனிதர் மிகவும் படித்தவராகவும் இருக்க வேண்டும். அதோடு கடவுளைப் பற்றிய உண்மைகளில் பற்று இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இதெல்லாம் சரி தானே?” என்றார்.
“சரிதான். அத்தனையும் உண்மை” என்றாள் அவள் ஆர்வத்தோடு.
“சரி! அப்படியென்றால் அவருடைய பெயரையும் சொல்லி விடுங்கள். அதைச் சொன்னால் பெயர் ராசியைக் கொண்டு சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்” என்றார் சந்தகர்.
“அவர் பெயரா? பூதுகர்” என்றாள் தேனார்மொழியாள் வெட்கத்துடன்.
சந்தகர் கலகலவென்று ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்துவிட்டு, “அவன் பிரசித்தி பெற்ற நாஸ்திகனாயிற்றே? கடவுளை எதிரே கொண்டு வந்து காட்டினாலும் கூட இவர் கடவுள் இல்லையென்று சத்தியம் செய்து சொல்கிறவனாச்சே. மகா பாபம்! இத்தகைய மனிதரிடமா மனத்தைப் பறிகொடுத்து விட்டு இப்படித் தவியாய்த் தவிக்கிறீர்கள்? இந்தப் புத்தி உங்களுக்கு ஏன் அம்மா?” என்றார்.
(முதல் பாகம் முற்றிற்று)
– மாலவல்லியின் தியாகம் (தொடர்கதை), கல்கி வார இதழில் 1957-01-13 முதல் 1957-12-22 வரை வெளியானது.
– கி.ரா.கோபாலனின் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ‘மாலவல்லியின் தியாகம்’ தொடரின் கடைசி பத்து அத்தியாயங்களையும் எழுதி முடித்தார் கல்கியில் மற்றொரு உதவி ஆசிரியராக இருந்த ஸோமாஸ்.