மாங்காய்த் தலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 837 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டு பிச்சைக்காரர்கள் அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். மனிதனுடைய தர்ம சிந்தனையைத் தூண்டி வளர்த்து நிலைக்கச் செய்யும் பிரசாரத்தை ஒரு மாதமாக ஒருவன் செய்து வந்தான். நாச்சி ஒரு குரங்காட்டி. அவனிடம் இருந்தது பெண் குரங்கு. குரங்குக்குப் பாவாடை, ரவிக்கை எல்லாம் உண்டு. பெண் குரங்காக இருந்தாலும் லங்காப் பட்டணம் தாண்டும்; மாடு மேய்க்கும்; பிசாசு ஆடும்; மாமியார் வீட்டுக்குத் தண்ணீர் கொண்டு வரும். அப்பொழுது நடுவழியில் பானையைப் போட்டு உடைத்து விடும் காட்சி மிகவும் தமாஷாய் இருக்கும். அந்த வேடிக்கைக்கு அடுத்த படியாகக் குரங்கு கையை நீட்டும் அதில் காசு நிரம்பாமல் போகாது. 

மற்றொரு பிச்சைக்காரன் ஊருக்கு வந்து மூன்று மாதங்கள் ஆயின. ஆனால் அவனிடம் குரங்கு இல்லை. குரங்கைவிட விநோதமான ஒன்றை வைத்திருந்தான். அதை ஒரு பிராணி என்று தான் சொல்ல வேண்டும். நாலடி உயரந்தான் இருக்கும். தலை மாங்காய்த்தலை; தேங்காய்த்தலை என்றும் வைத்துக் கொள்ளலாம். சாமியார் மாதிரி மொட்டை உடம்பெல்லாம் விபூதியைத் தண்ணீரில் கரைத்துப் பூசி இருக்கும். நெற்றியை அடைத்து ஒரு பெரிய தென்கலை நாமம் போட்டிருக்கும். வயிற்றை அடைத்தும் ஒன்றிருக்கும். உடம்பெல்லாம் சதைப்பற்று இல்லாமல் ஓணான் மாதிரி இருக்கும். இடுப்பில் ஒரு லங்கோடு, அது பேசாது. ஏதோ சத்தம் செய்யும். அந்தப் பிராணியை எல்லாரும் பார்த்து இருக்கலாம். அதைக் கடைக்குக் கடை கொண்டு போய் நிறுத்தினாலே போதும்; கும்பல் சேர்ந்து விடும். குரங்கு மாதிரி சேஷ்டை செய்து கத்தினால் கேட்பானேன்? கடை வியாபாரத்துக்கு வந்த இடைஞ்சலைத் தவிர்க்க வென்றே கடைக்காரன் காசு கொடுத்து விரட்டி விடுவான். இந்த விநோதப் பிராணியை வைத்திருக்கும் பேச்சிக்கு என்ன பஞ்சம்? குரங்காட்டியை விடப் பணக்காரன். 

இந்த இரண்டு பிச்சைக்காரர்களும் ஆற்றங்கரை மண்டபத்தில் தான் தங்கி இருந்தார்கள். பகல் முழுவதும் ஊர் சுற்றிப் பிச்சை எடுப்பது, சாயங்காலமாக ஆற்றங்கரைக்கு வந்து சுள்ளி, சிப்பிகளைப் பொறுக்கிச் சோறு பொங்கித் தின்பது, பிறகு உலகத்தின் மாயையை பற்றிப் பாடுவது, பேசுவது இது தான் நிகழ்ச்சி முறை. ஆனால் ஒரு வித்தியாசம்; பேச்சி, சோறு தின்ற பிறகு நாள் தவறாமல் கஞ்சாக் குடிப்பான் பணக்காரப் பிச்சைக்காரன் அல்லவா? குரங்காட்டி இரண்டிலே மூன்றிலே பீடி குடிப்பான். மற்றபடி அவர்கள் ஒற்றுமையாகத் தான் இருந்தார்கள். 

இந்த ஒற்றுமைக்கு உலை வைத்தது மாங்காய்த் தலை. அதற்குப் பேச வாய் இல்லாவிட்டாலும் தின்ன வயிறு உண்டு என்பது பேச்சிக்குத் தெரியவில்லை. அதனால் தான் வினை விளைந்தது. மாங்காய்த் தலையைக் கடைத்தெரு வழியாக ஒரு தரம் அழைத்துச் சென்றால் ஒரு பத்து வாழைப்பழமோ எதுவோ கிடைக்காமல் இருக்காது. இதெல்லாம் மாங்காய்த் தலைக்கு இனாம் என்ற உண்மை அந்தப் பிராணிக்கு எப்படியோ தெரியும். பேச்சி மட்டும் உணரவில்லை. இல்லாவிட்டால் அவ்வளவையும் அந்தப் பிராணிக்கே கொடுத்து விடமாட்டானா? அவன் அப்படிச் செய்வதில்லை. ஒன்றிரண்டு கொடுப்பான். இன்னொன்று என்று பிராணி கையை நீட்டினால் அதன் கையைப் பிடித்துக் தள்ளுவான். பிடிவாதம் பிடித்தால் அடித்து விடுவான். இருந்த போதிலும் பழத்தையெல்லாம் பேச்சியால் தின்று விட முடியுமா? 

இந்த வரும்படியைச் சாக்கிட்டுத்தான் வெற்றிலை பாக்குக் கடைச் சூரப்பன் பழக்கமானான். கடைத்தெரு மூலையில் ஒரு பெட்டிக்கடையில் சாமான் ஒன்றும் அதிகமாக இல்லை. வெற்றிலை, பாக்கு, பழம், புகையிலை, சுருட்டு, பீடி, சர்பத் பாட்டல், பெட்ரூம் விளக்கு, தெருப்புழுதி இவ்வளவுதான். ஊருக்கு வந்த புதிதில், மாங்காய்த் தலையைக் கூட்டிக் கொண்டு சாயங்காலமாக ஆற்றங்கரைக்குத் திரும்பும் பொழுது பேச்சியிடம் இருபது வாழைப்பழம் இருந்தன. என்ன செய்வதென்று புரியவில்லை. சூரப்பன் பெட்டிக்கடை தென்பட்டதும், “ஐயா, வாழைப்பழம் வேணுமா?” என்று கேட்டான். பிச்சைக்காரனையும் மாங்காய்த் தலையையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சூரப்பன் வேண்டாமென்று தலையை ஆட்டினான். 

“குடுக்கிறதைக் குடுங்க” 

“ஒரு அணாத் தருவேன்.” 

“காலணா சேர்த்துக் குடுங்க.” 

வாங்கும் பொருளின் விலை சூரப்பனுக்குத் தெரியும். அதில் என்ன லாபம் வரும் என்றும் தெரியும். ஆகையால் ஒரு காலணா சேர்த்துக் கொடுத்து வாங்கிக் கொண்டான். 

அன்று முதல் பேச்சி, சூரப்பன் கடைக்குச் சாயங்காலமாக வரத் தவறுவதில்லை. என்ன சாமான் அன்றன்று கிடைக்கிறதோ அதைச் சூரப்பன் கடையில் போட்டு விட்டு ஓரணாவோ இரண்டணாவோ வாங்கிக் கொண்டு போய் விடுவான். 

இந்தப் பழக்கத்தினால் ஒரு பேரங்கூட அவர்களுக்குள் தகைந்து விட்டது. பேச்சி, தான் தினம் சம்பாதிக்கும் சாமான்களைக் கடையில் போடுவதுடன் சம்பாதிக்கும் காசையும் கொடுத்து விட வேண்டியது. சூரப்பன் காண்டிராக்டராக ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் வீதம் அவனுக்குக் கொடுத்து விட வேண்டியது. தினசரி சம்பாத்தியம் கூடுதலாய் இருந்தாலும் குறைவாய் இருந்தாலும் பேச்சிக்கு அதில் சம்பந்தம் இல்லை. பேச்சிக்கு இந்த ஒப்பந்தம் பிடித்துவிட்டது. அப்படித் தான் இரண்டு மாதமாக நடந்து வந்தது. 

குரங்காட்டி வந்த பிறகு தான் சிக்கல் உண்டாயிற்று. குரங்காட்டி தினசரி வேடிக்கை காட்டி விட்டுச் சாயங்காலமாக ஆற்றங்கரைக்கு வருவான். ஓர் ஆணியில் குரங்கைக் கட்டிப் போட்டுவிட்டு அன்றைக்குக் கிடைத்த பட்டாணிக் கடலையையோ பழத்தையோ அதன் முன் போடுவான். அது தின்று கொண்டிருக்கும். அவன் சோறாக்கத் தொடங்குவான். அநேகமாக இதே வேளைக்குப் பேச்சி தன் வேடிக்கைப் பிராணியுடன் திரும்பி விடுவான். வந்தவுடனே குளித்துவிட்டுச் சேறாக்கும் வேலையைக் கவனிப்பான். மாங்காய்த்தலை விட்ட இடத்திலேயே நின்று கொண்டிருக்கும்; அல்லது பழந்துணி மாதிரி சவுங்கிப் போய்க் கிடக்கும். 

குரங்காட்டி வந்த ஒரு வாரம் வரையில் எவ்வித மாறுதலும் இல்லை. அதற்குப் பிறகு ஒரு நாள், பேச்சி, சோறாக்கி முடித்து விட்டு மாங்காய்த் தலையை நோக்கி வந்தான். மாங்காய்த் தலையைக் காணவில்லை. ஒரு விநாடி திகைத்துப் போய்விட்டான். பிறகு மண்டபத்துக் கோடித்திருப்பத்தில் குரங்காட்டி சோறாக்கும் இடத்துக்குப் போய் பார்த்தான். மாங்காய்தலை குரங்கின் அருகில் உட்கார்ந்து பட்டாணிக் கடலையைத் தின்று கொண்டிருந்தது. பேச்சி, மாங்காய்த் தலையைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு தன்னிடத்துக்குத் திரும்பினான். இந்த மாதிரி சம்பவம் அதற்குப் பிறகு சகஜமாகி விட்டது. 

இதிலிருந்து பேச்சிக்கும் நாச்சிக்கும் இடையே உள்ளூற ஒரு புகைச்சல் உண்டாகிவிட்டது. ஏதோ மந்திரம் போட்டு மாங்காய்த் தலையை நாச்சி கலைப்பதாகப் பேச்சி நினைத்தான். நாச்சிக்கு வேறு விதத்தில் குறுகுறுப்பு உண்டாயிற்று. குரக்குக்குப் போட்டிருக்கும் உணவுப் பொருள்களை எல்லாம் தினம் தவறாமல் மாங்காய்த்தலை தின்று விடுவதில் நாச்சிக்கு மனம்  இல்லை. அதற்குக் கிடைப்பதை அதற்குப் போடாமல் கஞ்சாப் புகையாக்கிவிடும் வேலையை அவன் வெறுத்தான். ஆனால் அதற்காகச் சண்டை போட முடியுமா? 

எனவே குரங்காட்டி மண்டபத்துக்கு வருவதைத் திடீரென்று நிறுத்தி விட்டான். ஆற்றுக்குத் கீழண்டைப் பக்கத்திருந்து பிரிந்து செல்லும் ஒரு வாய்க்காலின் கரையில் அரசமரத்தடியில் தங்க ஆரம்பித்தான். குரங்காட்டி ஊரை விட்டுப் போய்விட்டான் போல் இருக்கிறது என்று தான் பேச்சி முதலில் நினைத்தான். ஒரு வாரத்துக்குப் பிறகு தற்செயலாகப் பேச்சி, மாங்காய்த் தலையுடன் வாய்க்கால் கரை ஓரமாக வர நேர்ந்த பொழுது தான் உண்மை தெரிந்தது. 

“ஊரை விட்டுப் போயிட்டேன்னு அல்ல நினைச்சேன்! அண்ணன் தம்பி சண்டை வந்தாச் செய்வாங்களே. அந்த மாதிரி செஞ்சுட்டியே!” 

“நானும் நீயும் அண்ணன் தம்பியா?” என்று நாச்சி சிரித்தான். குரங்காட்டி உண்மையைச் சொல்லவில்லை. வெறுமனே பேசி மெழுகி விட்டான். 

அதற்குப் பிறகு பல தரம் அந்த வழியே மாங்காய்த் தலையை அழைத்துக் கொண்டு பேச்சி போய் வந்தான். குரங்காட்டி அங்கே தான் இருந்தான். மாங்காய்த் தலைக்கு அந்த வழியே போவதில் விருப்பம் இருப்பது போல் கூடப் பேச்சிக்குப்பட்டது. காரணம் மட்டும் விளங்கவில்லை. 

பத்து நாள் கழிந்திருக்கும். வழக்கம் போல் பகலில் சம்பாதித்து விட்டுச் சாயங்காலமாகப் பேச்சி ஆற்றங்கரை மண்டபத்தில் சோறாக்கித் தின்றான். பிறகு மாங்காய்த் தலைக்கும் போட்டுவிட்டுத் தூங்கிப் போனான். 

மறுநாள் காலை எழுந்தபோது திக் என்றது. மாங்காய்த் தலையைக் காணவில்லை. முதல் இல்லாவிட்டால் எப்படித் தொழில் செய்ய முடியும்? மண்டபத்தை விட்டு இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்தான்; காணவில்லை. ஒரு யோசனை தோன்றிற்று. வேகமாக வாய்க்கால் கரைக்குப் புறப்பட்டான். நினைத்தபடிதான் இருந்தது. குரங்கின் அருகில் மாங்காய்த்தலை வாழைப்பழத் தோலை தின்று கொண்டிருந்தது. பேச்சிக்கு அளவு கடந்த கோபம் வந்து விட்டது. 

“ஏண்டா திருட்டுப் பயலே, ஏண்டா இவனைக் களவாண்டுக்கிட்டு வந்தே?” என்று குரங்காட்யைச் சண்டை பிடிக்கத் தொடங்கினான். குரங்காட்டி பதிலுக்குச் சண்டை பிடிக்கவில்லை. 

“நானா களவாண்டுக்கிட்டு வந்தேன்? பைத்தியமா? நேத்து ராத்திரி பாதி ஜாமத்திலே நான் எளுந்திரிச்சேன். பார்த்தால் என் குரங்குக்குப் பயக்கத்திலே இந்த மாங்காய்த்தலையும் படுத்துக் கிடந்துச்சு. அது எப்போ வந்துச்சு, எப்படி வந்துச்சுன்னு எனக்குத் தெரியாது. சத்தியமாச் சொல்றேன். நீ அழைச்சுக்கிட்டுப் போயிடு…’ 

இதைக் கேட்டதும் பேச்சிக்கு கெட்ட கோபம் வந்து விட்டது. ஒரு சுள்ளியை எடுத்து மாங்காய்த் தலையை இரண்டு வாங்கு வாங்கினான். மாங்காய்த்தலை முகத்தைச் சுளித்துக் கொண்டு ஏதோ ஒரு மாதிரியான சத்தத்தைக் கிளப்பிற்று. அதிகமாக அடிக்கவும் பயம், மாங்காய்த்தலையின் கையைப் பேச்சி பிடித்தான். அது நகரவில்லை; நகருவதாகவும் தெரியவில்லை. இழுத்துக் கொண்டு நடக்க முயன்றான். தொப்பென்று கீழே விழுந்து படுத்துக் கொண்டு விட்டது. தூக்கி நிறுத்த முயன்றான். கையைக் கடித்தது. 

பேச்சிக்குப் பெருத்த பயம் உண்டாக்கிவிட்டது. மெதுவாக தாஜா செய்து பார்த்தான். மாங்காய்த் தலை கடிக்கும் ரீதியிலேயே இருந்தது. 

“இதுக்கு என்னவோ கோவம்” என்றான் நாச்சி. 

“அது என்ன எழவோ! எனக்கு ஒண்ணுமே புரியல்லே. ஆறு வருசத்துக்கு முந்தி ஒரு பொம்புள்ளே வந்து சேந்தா. அவளோட மவன் இது. இதை அவளுக்குப் பிடிக்கவே இல்லே. சொல்லாமெ கொள்ளாமெ ஒரு நாள் ராத்திரி இதை விட்டுட்டு ஓடிப் போயிட்டா. அப்பவே பிடிச்சு இதை வச்சுப் புழைச்சுகிட்டு வாறேன். அதுக்கு முந்தி ஒன்னைப்போல நானும் குரங்காட்டிதான். இப்போ என் பொழப்பு என்ன ஆறது?” 

“ஆனா இது ஒன் மவன் இல்லையா? அதுதான் ஒட்டாமெ இருக்குது. போவுது; என்ன மூழ்கிப்போச்சு” 

“அது தான் புரியல்லே. நல்லா இருந்தா நாலு போட்டு இழுத்து விட்டு போயிடலாம். அடிச்சா வாயை விட்டுச்சுன்னா? என் பொழப்பு என்ன ஆவறது?” 

“நான் ஒண்ணு சொல்றேன்; கேளு. என் குரங்கை உன்கிட்டக் குடுத்துடறேன். பொழப்பு நடந்து போகும், கஞ்சாப் பிடிக்க முடியாது. நான் இதை வச்சுகிடறேன்.” 

பேச்சி யோசித்தான். வேறு வழி தோன்றவில்லை. குரங்கைப் பிடித்துக் கொண்டு போய்விட்டான். 

அன்று சுற்றினதில் இரண்டு படி அரிசியும் நாலணாக் காசும் பேச்சிக்குக் கிடைத்தன. வழக்கம் போல் சூரப்பன் கடைக்கு முன்பு போய் நின்றான். 

கடைக்காரன் திகைப்புடன் பார்த்தான். “ஏண்டா குரங்காட்டி ஆயிட்டே? அது எங்கே?” என்று கவலையுடன் விசாரித்தான். 

பேச்சி நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டு அரிசியையும் காசையும் கீழே வைத்தான். 

சூரப்பன் பெரிய கில்லாடி, இனிமே பழைய பேரம் நடக்காது. தம்பி, அது மாங்காய்த் தலையோடே போயிடுச்சு. ஒம் பேரிலே ஏழு ரூபாய் அதிகம் பத்து ஆயிடுச்சு. அதுக்காக இதை இன்னிக்கு எடுத்துக் கிடறேன். பாக்கியைக் கொண்ணாந்து வச்சுட்டு ஊருக்குப் போ என்று சொல்லிவிட்டுக் குரங்கைப் பிடித்துப் பந்தற்காலில் கட்டிப் போட்டான். 

“நான் பணம் கொடுக்கணுமா? இருக்காதே” என்றான் பேச்சி திகிலுடன். 

“அப்போ நான் பொய்க்கணக்கு எழுதி வச்சிருக்கிறேன் என்கிறாயா?” 

சூரப்பனைப் பற்றிப் பேச்சிக்கு நன்றாகத் தெரியும். 

“அவ்வளவு இருக்காதேன்னுதான் சொன்னேன். நீங்க தான் சொல்றீங்களே, பணத்தைக் குடுத்துட்டு ஊருக்குப் போறேன்’ ஹனுமார் அறியச் சத்தியம்.” 

“அந்தச் சத்தியம் கித்தியம் எல்லாம் நமக்கு வேணாம். மரியாதையாகக் காசைக் கீழே வச்சுடு. அவ்வளவு தான்.” 

“நான் எப்படிச் செய்வேனுங்க? குரங்கைக் கூடப் பந்தக்காலிலே கட்டிப் போட்டுட்டீங்களே!” என்று சொல்லிக் கொண்டே கையெடுத்துக் கும்பிட்டான். 

“அப்போ நான் சொல்றதைக் கேளு. நாளைக்கு நான் ஒரு மனு எழுதித் தாரேன், பெரிய மேஸ்டிரிட் ஆபீசுக்கு நாளைக் காலை பத்து மணிக்கு வா, நானும் வாறேன். பிராது குடுக்கிற பேரெல்லாம் குடுக்கலாம்ன்னு வில்லை போட்ட சேவுகள் ஒத்தன் கத்துவான். அப்போ இந்தக் கடுதாசை எஜமான் கிட்டக் கொண்டு போய்க் கொடு. பிறகு அங்கேயே இரு எஜமான் கூப்பிட்டுக் கேப்பாரு. என்கிட்ட இருந்த ஆளைத் திருடிக்கிட்டுப் போயிட்டான்; என் பொழப்பே மண்ணாயிடுச்சுன்னு அழு. அப்புறம் பாறேன்.” 

“பிச்சைக்காரனுக்கு இதெல்லாம் என்னாத்துக்குங்க?”

“அப்பொ மாங்காய்த் தலைக்குப் போடற நாமத்தை எனக்குப் போடப் பாக்கிறே!” 

பேச்சிக்கு ஒன்றும் பதில் சொல்லத் தெரியவில்லை. காலையில் கடைக்கு வறேனுங்க. நீங்க சொல்றதைச் செய்யறேன்.” 

“சரி, குரங்கைப் பிடிச்சுகிட்டுப் போ” என்று சூரப்பன் உத்தரவு கொடுத்தான். 

பேச்சி குரங்கைப் பிடித்துக் கொண்டு வாய்க்கால் கரை வழியே போனான். வாய்க்கால் கரையில் அரசமரத் தடியில் நாச்சியையோ மாங்காய்த் தலையையோ காணவில்லை. வியப்பாக இருந்தது. அப்படியே தன் மண்டபத்துக்குக் குரங்கை அழைத்துக் கொண்டு போய்ச் சோறாக்கித் தின்றான். பிறகு அவர்கள் எங்கே போய் இருப்பார்கள் என்ற கவலை பேச்சியைத் தொளைத்தது. இரவில் ஒரு தரம் போய்ப் பார்த்தான். அப்பொழுதும் காணவில்லை. பிச்சைக்காரர்கள் தங்கக் கூடிய ஒவ்வோர் இடத்தையும் சலித்துப் பார்த்தான். எங்கும் காணவில்லை. மிகவும் அயர்ந்து திரும்பும் போது ஒரு பெருமாள் மாட்டுக்காரன் விஷயத்தைச் சொன்னான். அவர்கள் காலையில் அடுத்த ஊருக்கு ரெயிலில் போய்விட்டதாகச் சொன்னான். 

இந்தத் தகவலைக் கேட்டதும் பேச்சிக்கு உயிரே போய்விட்டது. நேரே கடைத் தெருவுக்குப் போய்ச் சூரப்பனிடம் விஷயத்தைத் தெரிவித்தான். 

“என்னைப் பிடுச்சுக்கோன்னு திருடன் எதிர்த்தாப் போல உக்காந்திருப்பானா? காலையிலே மனுக் குடுக்கணும்னேன். சரி இன்னே இப்போ அழிச்சுப் பேசத் தந்திரம் பண்றே” என்று சூரப்பன் உறுமினான். 

“ஐயோ சாமி, அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. நீங்க சொல்றபடி நாளைக்கு வந்தூடறேனுங்க” என்று கும்பிடு போட்டு விட்டுப் போய்விட்டான். 

மறுநாள் காலை பத்து மணிக்குப் பெரிய ‘மேஸ்டிரிட்’ கோர்ட்டு வாசலில் சூரப்பனும் பிச்சைக் காரனும் கூட்டத்தில் தென்பட்டார்கள். பேச்சி கையில் ஒரு மனு இருந்தது. கோர்ட்டுச் சேவகன் வழக்கம் போல் மும்முறை கூவினான். பேச்சி விழித்துக் கொண்டு இருந்தானே ஒழிய நகரவில்லை. சூரப்பன் முதுகில் கையைக் கொடுத்து முன்னே தள்ளிவிட்ட பிறகு தான் பேச்சி விழிப்படைந்து மனுவைக் கொண்டு போய் மாஜிஸ்டிரேட்டிடம் கொடுத்தான். மாஜிஸ்டிரேட் அவனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு மனுவை வாங்கி வைத்துக் கொண்டார். பிறகு மாஜிஸ்டிரேட் ஒவ்வொரு நபராகக் கூப்பிட்டு ஏதோ கேள்விகள் கேட்பதும் உத்தரவு போடுவதுமாக இருந்தார். பேச்சிக்கு ஒன்றும் விளங்கவில்லை. சுவரில் சாய்ந்தாலுங்கூடக் குற்றம் என்று நினைத்துக் கொண்டோ என்னவோ கால் கடுக்க நின்று கொண்டிருந்தான். 

மாஜிஸ்டிரேட் பேச்சியைக் கூப்பிட்டார். பேச்சி கைகால் நடுங்க முன்னே போய் நின்றான். மாஜிஸ்டிரேட் கேள்விகள் கேட்க இவன் பதில் சொல்லிக் கொண்டு வந்தான். சூரப்பன் கோர்ட்டுக்கு வெளியே ஜன்ன லண்டை நின்று கொண்டு இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான். ஆகையால் நடந்ததை நடந்தபடி சொல்லாமல் சூரப்பன் சொல்லிக் கொடுத்த பாடத்தை பேச்சி ஒப்பித்தான். மாஜிஸ்டிரேட் போலீஸ்காருக்கு ஆங்கிலத்தில் ஏதோ உத்தரவிட்டார். சூரப்பனுக்கோ பேச்சிக்கோ ஒன்றும் புரியவில்லை. வில்லைக் சேவகன் பேச்சியை வெளியே போகலாம் என்று ஜாடை காட்டினான். பேச்சி வெளியே வந்து வாதாமரத்தடியில் சூரப்பனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தான். அப்பொழுது இரண்டு போலீஸ்காரர்கள் வந்து விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். சொன்னதெல்லாம் சூரப்பன்தான். “உடனே ரெயிலில் புறப்பட்டுப் போய் அந்த ஆளைக் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவு” என்று சொல்லி விட்டுப் பேச்சியை அழைத்துக் கொண்டு அவர்கள் ரெயிலில் கிளம்பி விட்டார்கள். 

அடுத்த ஊரில் மாங்காய்த் தலை ஒரு கும்பலின் நடுவில் நின்று கொண்டிருந்தது. போலீஸ்காரர்கள் அதை நாச்சியுடன் அழைத்துக் கொண்டு மறுநாள் மாஜிஸ்டிரேட்டின் முன் ஆஜர் செய்தார்கள். அந்த ஆளைப் பார்த்த பிறகு தான் வழக்கின் விசித்திரத்தன்மை மாஜிஸ்டிரேட்டுக்கு விளங்கிற்று. சட்டப்படிக்கு உள்ள சிக்கல்களும் விளங்கின. 

“ஏய், உன் பேர் என்ன?” 

மாங்காய்த்தலை நின்று கொண்டிருந்தது. மாஜிஸ்டிரேட் இரண்டு மூன்று தடவை கேட்டார். பதிலைக் காணவில்லை. 

“ஊமை வேஷம் போடச் சொல்லிக் கொடுத்திருக்கிறானா?” 

“இல்லிங்க, அது பேசாது” என்றான் பேச்சி. 

“இதை யார் வச்சுக்கிறது. கேஸ் முடியும் வரையில்?”

“எஜமான் சொல்படி” 

நாச்சியிடமே மாங்காய்த் தலையை ஒப்படைத்து விட்டு ஒரு வாரம் கழித்து விசாரணையை ஒத்திப் போட்டார் மாஜிஸ்டிரேட். 

ஒரு வாரம் கழித்து நடந்த விசாரணையில் பேச்சி தரப்பில் சூரப்பன்தான் சாட்சி. எதிரி நாச்சிக்கு சாட்சியும் இல்லை; வக்கீலும் இல்லை. ஆனால் பேச்சிக்கு ஒரு வியப்படைந்தார். சூரப்பன் சாட்சியத்தைக் கேட்ட பிறகு தான் அவருக்கு உண்மை புலப்பட்டது. கேஸ் முடிவதற்கும் அவர் தீர்ப்பு எழுதுவதற்கும் வெகு நேரம் பிடிக்கவில்லை. மாஜிஸ்டிரேட் செய்த தீர்ப்பு இது தான். 

“இது ஒரு விநோதமான வழக்கு. சாதாரணமாகச் சொத்துரிமையிலிருந்து ஸிவில் குற்றங்கள் கிளைப்பதுண்டு. அதுபோலவே கிரிமினல் குற்றங்களும் கிளைப்பதுண்டு. மனிதனுடைய அகந்தையிலிருந்தும் குற்றங்கள் பிறப்பதுண்டு. சொத்தோ அகந்தையோ இல்லாத ஒரு பிச்சைக்காரன் மற்றொரு பிச்சைக்காரன் மீது வழக்குத் தொடுத்திருப்பது வெகு தமாஷாய் இருக்கிறது. தன்னிடம் இருந்து மாங்காய்த் தலையை எப்படியோ மயக்கி நாச்சி திருடிக் கொண்டு போய்விட்டான் என்று பேச்சி குற்றம் சாட்டுகிறான். 

“மாங்காய்த்தலை, பேச்சியின் மகனோ மற்ற விதமான உறவினனோ என்று சொல்வதற்கில்லை. பேச்சியுடன் சிநேகம் கொண்ட ஓர் இரண்டுங் கெட்டானின் பிள்ளை. அந்தத் தாயே இந்த மாங்காய்த் தலையை பேச்சியிடம் விட்டுவிட்டுச் சொல்லாமல் இரவில் ஓடி விட்டாள். அதை வைத்துக் கொண்டு இவன் வயிறு வளர்த்து வருகிறான். பேச்சியைக் ‘கார்டியன்’ என்று சட்டப்படிச் சொல்லிவிட முடியாது. 

“அது எப்படி இருந்தாலும் எதிரி மயக்கி அழைத்துக் கொண்டு போய்விட்டான் என்பதற்கு எவ்வித ருசுவும் இல்லை. இந்த வழக்கின் உண்மை, வாதி தரப்பு இரண்டாவது சாட்சியான சூரப்பனின் வாக்கு மூலத்திலிருந்து வெளிப்படுகிறது. சூரப்பன் ஒரு பிரபல கே.டி. அவன் நடத்தி வரும் வெற்றிலை பாக்கு கடை ஒரு வேஷம். எந்தச் சாக்கிட்டாவது பணம் சம்பாதிக்கப் பார்ப்பது தான் அவன் தொழில். சில முதலாளிகள் வண்டிமாடு வைத்துக் கொண்டிருப்பவர்கள். சொந்தத்தில் வண்டி மாடு வைத்துக் கொள்ள முடியாத ஏழைகள் இந்த வண்டிமாட்டை வாடகைக்கு ஒட்டிச் சென்று பிழைப்பை நடத்துவதுண்டு. வண்டிக்காரன் நாள் முழுவதும் சம்பாதிப்பதை முதலாளியிடம் கொண்டு போய்க் கொடுத்துவிட வேண்டும். முதலாளி, வண்டிக்காரனுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பளத்தைத் தினசரி கொடுத்து விடுவான். இந்த மாதிரி ஒப்பந்தத்தைச் சூரப்பன் பேச்சியிடம் செய்து கொண்டதன் விளைவு தான் இந்த வழக்கு. மாங்காய்த்தலை போய் விட்டால் தன் கடைக்கு வந்து கொண்டிருக்கும் பொருள்கள் வராமல் போய் விடுமே என்ற எண்ணந்தான் இந்த வழக்கு ஜோடிப்புக்குக் காரணம். எதிரியின் வாக்கு மூலத்தில் கண்டிருப்பது முழுதும் உண்மை என்று தெரிகிறது. பேச்சி மாங்காய்த் தலைக்கு இழைத்து வந்த துரோகத்தை அந்த மாங்காய்த்தலை உணர்ந்து, தானாகவே நாச்சியிடம் போய்விட்டதென்று நம்புவதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன. மாங்காய்த்தலையைப் பேச்சி திரும்ப அழைத்துக் கொண்ட போவதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என்றும், குரங்கைப் பேச்சி திருப்பிக் கொடுத்து விட்டால் போதும் என்றும் வாக்குமூலத்தில் சொல்லியிருப்பது ஒன்றே இவ்வழக்கை முடிவு செய்யப் போதுமானது. வாதியின் வழக்கு ருசுவாகவில்லை. வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.” 

தீர்ப்புச் சொல்லி முடிந்த பிறகு மாஜிஸ்டிரேட் நாச்சியைப் பார்த்து, “உன் ஆளை அழைத்துக் கொண்டு போகலாம். கேஸைத் தள்ளிவிட்டேன்” என்றார். 

பிச்சைக்காரர்களுக்குக் கோர்ட்டின் நடவடிக்கையைப் பற்றி என்ன தெரியும்? நாச்சியும் பேச்சியும் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள். கோர்ட்டுக்குச் சேவகன் மாஜிஸ்ரேட் கேஸைத் தள்ளினதைப் போல இவர்களை வெளியே தள்ளின பிறகு தான் இவர்களுக்கு விஷயம் விளங்கிற்று. 

“பேச்சி, குரங்கை என் கிட்டே கொடுத்தூடு. இந்த ரோட்டோடே ஒடனே அடுத்த ஊருக்குப் போயிடறேன். ஒன் மாங்காய்த் தலையை நீயே வச்சுக்க” என்றான் நாச்சி. 

சூரப்பன் இந்தப் பேச்சை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தான். வேகமாக ஒரு கான்ஸ்டேபிள் வந்தான். 

“ஏ சூரப்பா, இந்த மாங்காய்த் தலைப் பிச்சைக்காரன் வழிக்கு இனிமேல் போனியோ அவ்வளவு தான் என்று மாஜிஸ்டிரேட் சொல்லச் சொன்னார். பாத்துக்கோ” என்றான். 

“எனக்கு அவன்கிட்டே வேலை ஏதுங்க!” என்றான் சூரப்பன். 

“அதே காபி ஓட்டல் வாசலிலே கட்டி இருக்குப்பாரு ஒன் குரங்கு. பிடிச்சுக்கிட்டுப் போ” என்று பேச்சி சொல்லவும், குரங்கைப் பிடித்துக் கொண்டு நாச்சி புறப்பட்டு விட்டான்.

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *