மறுபிறவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 146 
 
 

பள்ளி வேனில் அமர்ந்திருந்த. ஏழாம் வகுப்பு மாணவி ப்ரீத்தி, தீவிர சிந்தனையில் இருந்தாள்.

இருவாரங்களுக்கு முன் புதியதாய் வேலைக்கு சேர்ந்த வேன் டிரைவர் கந்தனைப் பற்றிய சிந்தனை தான் அது.

அவனது நடவடிக்கைகள் சரியில்லாற் போல தோன்றியது.குடியிருப்பு பகுதி யில் மாணவி களை வேனில் ஏற்றும்போது  பெற்றோர் எதிரில் மிக பவ்யம் காட்டும் கந்தன், பள்ளியில் மாணவிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் மிக மட்டமாக நடந்து கொள்வது நன்கு அவளுக்குப் புரிந்தது.

வேனின் படிகளில் பாதி இடத்தை அடைத்தபடி நின்று, பெண் பிள்ளைகளை உராய்வதும், தேவையில்லாமல் தொட்டுப் பேசுவதும் எரிச்சலாக இருந்தது ப்ரீத்திக்கு.

ஆறு முதல் பதிமூன்று வயதுக்குட்பட்ட மாணவிகளே அந்த வேனில் தினம் பயணிப்பவர்கள், சில குழந்தைகளுக்கு தொடுதலைப் பற்றிய பிரக்ஞை இல்லா நிலை, புரிந்தோருக்கு இதைப் பற்றி என்ன சொல்ல, எப்படி சொல்ல, யாரிடம் சொல்ல,, எனப் பல தயக்கங்கள். ஆனால்  இதையெல்லாம் தாண்டிய நிலையில் இருந்தது ப்ரீத்தி மட்டுமே. குட் டச், பேட் டச் பற்றிய விழிப்புணர்வு அவளிடம் அதிகம் இருந்ததே, இதைப் பற்றி யோசிப்பதற்கான காரணி யாக இருந்தது.

இன்று  இதற்கெல்லாம் முடிவு  கட்டிவிடத் தீர்மானம் கொண்டாள்.

வேன் பள்ளியில் வந்து  நின்றது.

மாணவிகள் ஒவ்வொரு வராக இறங்கத் தொடங்கினர். கந்தனின் நடவடிக்கையும் ஆரம்பமாயின.

குண்டு சோனியாவை தோள்பட்டையைப் பிடித்தாற் போல் இறக்கினான்.

அது பிடிக்காது முகத்தை சுழித்த சோனியா, விடுங்க அங்கிள் நானே இறங்கறேன், என்றதும், நீ விழுந்துடுவேன்தான பிடிக்கறேன் என கந்தன் சொல்வதை கவனித்தவாறே கடைசியாக இறங்கினாள் ப்ரீத்தி.

அங்கிள், உங்களுக்கு பாப்பா இருக்கா? என்று கேட்ட ப்ரீத்தாவை வினோதமாக பார்த்த கந்தன்.

ரெண்டு வயசு பாப்பா இருக்கு, ஏன்?

கேட்டவனை ஒருமுறை  அழுத்தமாகப் பார்த்த ப்ரீத்தா, பின் பேசத் துவங்கினாள்.

பாப்பாவை ஸகூலில் சேர்க்கும் போது, நீங்களே கொண்டு போய் விட பார்த்துக்கோங்க, இந்த மாதிரி ஸ்கூல் வேன்ல ஏத்தாதீங்க, ஏன்னா உங்கள மாதிரி ஆளுங்க குழந்தைன்னு கூட பார்க்காம கண்ட இடத்துல தொடுவாங்க…

திக் என்று அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான் கந்தன்,

என்ன அங்கிள் அப்படி பார்க்கறீங்க?எங்களுக்கு எதுவும் புரியாதுன்னு நினைச்சிங்களா? இதையெல்லாம் எங்க அப்பா, அம்மா கிட்ட, இல்ல இந்த ஸ்கூல்ல கம்ப்ளயின்ட் பண்ண முடியும், ஆனா என்ன நடக்கும், உங்கள வேலைய விட்டு தூக்குவாங்க, கொஞ்ச நாள் கழிச்சி வேறு வேலை கிடைக்கும், அங்கயும் இத கண்டிப்பா தொடருவீங்க. நான் என்ன நினைக்கறேன்னா, இதை பெரியவங்க கிட்ட சொல்லி உங்க வேலையை தூக்கறதவிட, நானே இதை உங்ககிட்ட பேசி உங்க மனசில இருந்து இந்த கெட்ட எண்ணத்தை தூக்கணும்ன்னு நினைச்சேன்.

ஒரு ஆணிற்கு பெண்குழந்தை இல்லாமல் இருக்கலாம்,  அக்கா, தங்கை  உறவு கள் கூட இல்லாமல் இருக்கலாம், ஆனா, கட்டாயம் ஒரு பெண்தானே ஆணைப் பெற்றிருக்க முடியும். பார்க்கிற பெண்களில் அம்மாவின் பிம்பத்தை தேடினால், சத்தியமா இந்த மாதிரி தொட தோணூமா?

இனிமேயாவது உங்க கிட்ட மாற்றத்தை பார்க்காலாம்னு நம்புறேன்.

சொல்லிவிட்டு தன்னை கடந்து போகும் ப்ரீத்தியை முழுதாகப் பார்க்க இயலாமல், கண்ணீர் கண்களை மறைத்தது கந்தனுக்கு,

தூரத்தில் இருந்த இன்னொரு டிரைவர் கத்தினான். 

கந்தா, இன்னாபா அங்கியே மலச்சிப்போய் நிக்கற?

மலைச்சிப் போய் நிக்கல, மறுபிறவி எடுத்து நிக்கறேன், தனக்குத்தானே சொல்லியபடி கண்ணீரை அழுத்தமாகத் துடைத்தான் கந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *