மரணக்கணியின் முதல் தோல்வி






மேடையில் கார்த்திக் நுழைந்தவுடன், அரங்கில் கை தட்டல் கிளம்பியது. சில நொடிகளுக்குப் பின் அரங்கம் அமைதியானவுடன், கார்த்திக் மைக்கை நோக்கி குனிந்தான். “என்னுடைய மரணக்கணி அல்காரிதத்தின் கணக்குப் படி என் வாழ்க்கை இன்னும் பத்து வருடங்களில் முடிந்து விடும்.” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு தன் பேச்சை ஆரம்பித்தான்.
அரங்கில் ஒரு அதிர்ச்சி அலை பரவியது. அங்கங்கே சலசலவென்று ஒரு முணுமுணுப்பு கிளம்பியது.
முப்பது வயதான கார்த்திக் ஒரு உலகப் புகழ் பெற்ற கணித மேதை. ஐந்து வருடங்களுக்கு முன் அவன் கண்டு பிடித்த மரணக்கணி அல்காரிதம் உலகில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மரணக்கணி ஒரு சிக்கலான நரம்பியல் வலைப்பின்னல். ஒரு மனிதன் இறக்கும் நாளை நூறு சதவீதம் துல்லியத்துடன் கணிக்கக்கூடிய சக்தி அதற்கு இருந்தது. ஒரு மனிதனின் மரபணு குறியீடுகள், விரிவான மருத்துவ வரலாறுகள், வாழ்க்கை முறைகள், சுற்றுச் சூழல் வெளிப்பாடு பதிவுகள், மன அழுத்த அளவுகள், குடும்ப நல வழித் தொடர்கள் என்று பல்வேறு வகையான தகவல்களை உள் வாங்கி அவன் சாகும் தருணத்தை மிகச் சரியாக கணக்கிட்டு விடும்.
கூட்டத்தின் முணுமுணுப்பு நின்றவுடன், கார்த்திக் பேச்சை தொடர்ந்தான். “நான் மரணக்கணியை உருவாக்கிய போது, மனித குலத்துக்கு அது ஒரு வரப் பிரசாதமாக இருக்கும் என்று தான் நினைத்தேன். ஆனால் இன்று திரும்பிப் பார்க்கிறபோது, நான் சமுதாயத்தில் பயத்தையும் விரக்தியையும் விதைத்து விட்டேன் என்று தான் தோன்றுகிறது. மாபெரும் தீங்கிழைக்கக்கூடிய ஒரு அரக்கனை நான் உருவாக்கி விட்டேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் மரணக்கணியை குளோபல் டெக் நிறுவனத்திற்கு விற்றேன். அந்த நேரத்தில், அது என் வாழ்க்கையின் உச்சக்கட்டம் என்று நினைத்தேன். உலகில் ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான பேர்கள் மாரடைப்பினாலும் புற்று நோயினாலும் இறந்து போகிறார்கள். இந்த தகவல் முன்பே தெரிந்தால் அவர்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்து தங்கள் வாழ்கை முறையை மாற்றிக் கொண்டு மரணத்திலிருந்து தப்பிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் நடந்தது என்ன? குளோபல் டெக் நிறுவனம் என் அல்காரிதத்தை ஒரு உலகளாவிய கண்காணிப்பு கருவியாக மாற்றியது. அதை ஒரு வணிகப் பொருளாக மட்டுமே பார்த்தது. அதை நான் முதலில் எண்ணியதை விட அதிகமாக விரிவுபடுத்தி பெரும் புகழையும் பணத்தையும் சம்பாதித்தது.
ஒரு நபர் எப்போது இறப்பார் என்று தெரிந்தவுடன் அவர் இந்த சமுதாயத்தால் உடனே புறக்கணிக்கப் படுகிறார். ஐந்து வருடங்களில் மரணம் என்று மரணக்கணி சொல்லி விட்டதால் ஆயுள் காப்பீடு எடுக்க முடியாமல் அவதிப்பட்ட இளைஞர்கள் எத்தனை பேர்? திருமணம் செய்து கொள்ள முடியாமல் தவித்த ஆண்கள் எத்தனை பேர்? மூன்றே வருடங்களில் அவர்கள் இறந்து விடுவார்கள் என்பது தெரிந்தால் யார் அவர்களுக்கு பெண் கொடுப்பார்கள்? தகுதி இருந்தும் வேலை கிடைக்காமல் தவித்த பட்டதாரிகள் எத்தனை பேர்? இரண்டு வருடங்களில் இறக்கப் போகும் நபர்களுக்கு எந்த நிறுவனம் வேலை கொடுக்கும்? எல்லாரும் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். மரணக்கணியை உருவாக்கியத்தின் மூலம் அவர்கள் பலரின் எதிர்காலத்தையும் நிம்மதியையும் நான் கொன்று விட்டேன்.
வாழ்க்கை என்பது ஒரு கணித சமன்பாடு அல்ல. அது நம்பிக்கையும் அன்பும் கனவுகளும் நிறைந்தது. அவை அத்தனையையும் நான் குழி தோண்டிப் புதைத்து விட்டேன்.
இதை எல்லாம் சரி செய்வதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது,” என்று சொல்லி நிறுத்தினான் கார்த்திக். அவன் குரலில் சிறிய மாற்றம் தெரிந்தது. “மனித குலத்தின் மீதுள்ள மரணக்கணியின் பலமான பிடியை விடுவிக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.” அவன் முகத்தில் கசப்பான புன்னகை தோன்றியது. “ஒரு மனிதன் இறக்கும் தருணத்தை மரணக்கணி மிகச் சரியாக மிகத் துல்லியமாக கணக்கிடும் என்று எல்லோரும் உறுதியாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையை உடைப்பது தான் ஒரே வழி.”
அரங்கில் உள்ள அத்தனை பேரும் அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, கார்த்திக் தன் கோட் பாக்கட்டில் கை விட்டு ஒரு சிறிய பொருளை எடுத்தான். ஓரத்தில் நின்று கொண்டிருந்த பாதுகாப்பு காவலர் என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து ஓரடி எடுக்கும் முன்பே அந்தப் பொருளை தன் நெற்றியில் வைத்து அழுத்தினான்.
ஒரு ரிவால்வர் வெடித்த சத்தம் அரங்கும் முழுவதும் எதிரொலித்தது.
அதுதான் மரணக்கணி முதல் முறையாக தோல்வியடைந்த தருணம்.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |