மன வெளிச்சம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 11, 2025
பார்வையிட்டோர்: 2,443 
 
 

காலையில் கண் விழித்த போது அறை முழுவதும் நிறைந்திருந்த பளிச்சென்ற வெளிச்சமே சூரியன் உதயமாகி மணி பத்து இருக்குமெனச்சொல்ல, பாயிலிருந்து மெல்ல எழுந்த நிகா, கண்களின் ஓரங்களிலிருந்த கண் பூலையை சேலை தலைப்பில் துடைத்தவாறு உடைந்த ஜன்னல் கதவை ஓரமாகத்தள்ளி வைத்து வெளியில் பார்த்தாள்.

அப்போது தோட்டத்திலிருந்த வயலில் கணவன் சிகு, வேலை ஆட்களுடன் வேலை ஆளாக களையெடுத்துக்கொண்டிருந்ததைக்கண்டு ஓடிச்சென்று குடிசை வீட்டின் தகரக்கதவைத்திறந்து வெளியில் சென்றவள், அடுப்பு சாம்பலை எடுத்து வேகமாக பல் துலக்கிக்கொண்டு, காட்டிற்குள் சென்று காலைக்கடன்களை முடித்து விட்டு, குளிக்க விறகு அடுப்பில் காயவைத்திருந்த தண்ணீரை பக்கெட்டிலிருந்து எடுத்துக்கொண்டு ஓலையால் படல் கட்டியிருந்த குளியலறைக்குள் சென்று குளித்தாள்.

சாணத்தால் மெழுகியிருந்த மண் வாசலில் நின்று மைகோதியால் தலை முடியை சூரிய வெளிச்சம் சுள்ளென படுமாறு விரித்து தட்டும் போது பக்கத்தில் கட்டுத்தரையில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு சிறு நீர் கழித்ததோடு, தனது வாலைச்சுருட்டி சிறுநீரை தன் மேல் படுமாறு விசிறியடிக்க, ‘கோமியம் ஆசீர்வாதம்’ என ஏற்று குளித்த உடம்பில் பட்டு வெளிவந்த நாற்றத்தை நறுமணமென ஏற்றுக்கொண்டாள்.

அடுப்பறைக்கு வந்து சமைக்கலாம் என பார்த்த போது விறகு அடுப்பில் தனல் தகதகத்தது. இட்லி சட்டியை திறந்து பார்த்த போது இட்லி வெந்த நிலையில் ‘என்னை சாப்பிடு’ என அழைப்பது போலிருந்தது. 

சிறிய பாத்திரத்தில் தக்காளி சட்னி வைத்திருந்ததை சுண்டு விரலில் எடுத்து நாக்கில் வைக்க, புளிப்புடன் சுவையாக இருந்ததால் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே தட்டில் இட்லியைப்போட்டு, சட்னி தொட்டு சுவைத்த போது மிகவும் திருப்தியாக இருந்தது.

அதிகாலையிலேயே எழுந்து இவ்வளவு வேலைகளையும் கணவன் தனக்காக முடித்து வைத்திருந்ததை நினைத்து பூரித்துப்போனாள்.

மல்லிகைப்பூப்போன்ற நிறத்தில் உள்ள சுவையான இட்லியை தன் தாய் கொடுத்து இதுவரை சாப்பிட்டதில்லை. தக்காளி சட்னி இனிப்பாகத்தான் இருக்கும். இவ்வளவு புளிப்பான சட்னியை இது வரை சுவைத்ததில்லை. ‘நாட்டுத்தக்காளி, உரம் போடாதது, உடம்புக்கு நல்லது’ என நேற்று காட்டில் பறித்த போது கணவன் சொன்னது ஞாபகம் வந்தது.

வாழ்க்கை முறையே மொத்தமாக மாறியிருந்தது.

இருபத்தைந்து வயது வரை காலில் ஷூ போடாமல், வீட்டை விட்டுச்சென்றதில்லை. வீட்டிற்குள்ளேயே ரப்பர் செருப்பு அணிந்திருப்பாள். காரில் தான் பயணம் இருக்கும். அப்படிப்பட்டவள் வெறும் காலில் வயலில், வரப்புகளில், புள்ளிலும், முள்ளிலும் கால் வைத்து நடக்கத்துணிவு கொடுத்தது ஒன்று மட்டும் தான். அது தான் காதல்.

சிகுவை சந்திப்பதற்கு முன் யாரிடமும், முக்கியமாக ஆண்களிடம் பேசவே கூச்சப்படுபவள், சிகுவிடம் மனதை பறிமாறிக்கொண்டாள். அதன் பின் அவனைத்தவிர ஒருவரையும் அவளுக்குப்பிடிக்கவில்லை. ராமன் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி என்பது போல படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொண்டு தனது வசதி மிக்க நாகரீக வாழ்க்கையைத்துறந்து, உறவுகளைத்துறந்து சாதாரண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்திருந்தாள்.

அங்கே மாடி வீடு, இங்கே குடிசை வீடு. அங்கே தேக்கு கட்டில், பஞ்சு மெத்தை. இங்கே பாயும், தலையணையும். அங்கே விலையுயர்ந்த கார் இருந்தது. இங்கே ஏரோட்டப்பயன் படும் மாடுகளை வைத்து ஒட்டும் கட்டை வண்டி பயணம். ஆனால் மகிழ்ச்சி என்பது மட்டும் மனம் நிறைந்திருந்தது இங்கு தான். 

அங்கு வெறுப்பு, வெறுமை, தனிமை வாட்டியது. தாயில்லாத பெண்ணாக தந்தையின் வளர்ப்பு வெறுமையைக்கொடுத்திருந்தது. மன வெறுமையை விட பண வறுமை மேல் என்பதில் உறுதியாக இருந்தாள். அதனால் சிகுவின் வறுமை அவனை அவளால் வெறுக்கச்செய்ய முடியவில்லை.

நகரத்திலுள்ளவர்களின் பேச்சு வார்த்தைக்கும், பழக்கவழக்கங்களுக்கும், கிராமத்தில் வாழ்பவர்களின் பேச்சு வார்த்தைக்கும், பழக்கவழக்கங்களுக்கும் நிறையவே வித்தியாசம் இருந்ததைப்புரிந்தவள்,  இரண்டு பக்கங்களிலுமுள்ள குறைகளை ஒதுக்கி நடைமுறைக்கேற்ற நிறைகளை ஏற்று வாழப்பழகிக்கொண்டாள். 

ஊரிலிருக்கும் குடும்பத்துப்பெண்களெல்லாம் ஏதாவது சந்தேகம் என்றால் நிகாவை கேட்டு செய்யும் நிலையில் இருந்தனர்.

தனது திருமணத்திற்கு அழைக்க வந்திருந்த கயாவை வரவேற்று கயிற்றுக்கட்டலில் பெட்சீட் விரித்து அமரச்சொன்னாள். உட்கார்ந்ததும் கட்டில் கயிறு ஓரடி கீழே இறங்க அதிர்ச்சியில் உறைந்து போன தோழி “என்னடி இது? உனக்கு என்னடி ஆச்சு? உன்னோட வசதிக்கு இந்த நிலைமை தேவையா? வசதியில்லாதவரை கல்யாணம் பண்ணினதுக்கு வசதியில்லாம வாழனம்னு ஆரு சொன்னது உனக்கு? இப்ப ஒரு கால் பண்ணு உன்னோட காலடில பத்துப்பேர் இருப்பாங்க. கோயம்புத்தூர்லயே நெம்பர் ஒன் தொழிலதிபரோட பொண்ணுடி நீ…. கோபிலயே கடைக்கோடில இருக்கிற ஏழை விவசாயோட வாழ்ந்திட்டிருக்கே….?”

“பேசி முடிச்சிட்டியா…? இன்னும் ஏதாச்சும் பாக்கி இருக்கா….? அமராவதியோட அப்பா, சோழ சாம்ராஜ்யத்தோட மன்னர். அவரை விட என்னோட அப்பா பெரிய ஆள் கிடையாது. அவளுக்கு அம்பிகாபதியப்புடிச்ச மாதிரி எனக்கும் நம்ம கூட காலேஜ்ல படிக்க வந்த சிகுவப்புடிச்சுப்போச்சு. படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிகிட்டோம். அவரு வேலைக்கு போகமுடியாது. விவசாயம் தான் பண்ணுவேன்னு சொன்னாரு. எனக்கும் மாடு, கோழி, ஆடு, வயல்னு இந்த வாழ்க்கை புடிச்சுப்போச்சு. இந்தப்பிறப்ப நகரத்துல தான் கழிக்கனம்னு ஏதாச்சும் சட்டம் இருக்கா? நமக்கு சந்தோசம் கொடுக்கிறவங்க கூட கழிக்கிறது தான் சரின்னு நெனைக்கிறேன். கண்ணுக்கு வெளிச்சமா தெரியறவங்களோட வாழறத விட மனசுக்கு வெளிச்சமா தெரியறவங்களோடதான் வாழனம்” என தனது உள்ளத்திலிருந்ததை உள்ளபடியே தனது தோழியிடம் நிகா சொன்னதை மறுக்க முடியாமல் ஆமோதித்து, அவள் கொடுத்த மோரை வாங்கிக்குடித்து விட்டு பத்திரிக்கை வைத்து விட்டு ‘நம் வாழ்க்கை கண் வெளிச்சமா? மன வெளிச்சமா?’ என யோசித்தவளாய் தான் வந்த காரில்  ஏறிக்கிளம்பினாள் கயா.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *