கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2026
பார்வையிட்டோர்: 1,742 
 
 

அந்த செய்தியை கேட்டதும் அதிர்ந்து போனார் குமாரவேல், எத்தனையோ சிரமப்பட்டு கடன் வாங்கி அருமை மகள் வனிதாவுக்கு திருமணம் செய்து வைத்தார்.மாப்பிள்ளை ஏதோ பிசினஸ் செய்கிறார் கைநிறைய பணம் புழங்குவதால் கவலை வேண்டாம் என்று தரகர் அடித்து கூறியிருந்தார். ஓரிரு இடங்களில் விசாரித்துப் பார்த்தார் குமாரவேல், பி.எஸ்சி. முடித்த வனிதாவுக்கு பல இடங்களிலிருந்து வரன்கள் வந்தாலும் எதுவுமே ஒத்து வரவில்லை.ஆனால் தரகர் ராமநாதன் பார்த்து   சொன்னபிறகு எல்லாம் சரியாக இருந்தது. அதை நம்பித்தான் திருமணத்தையும் தடபுடலாக நடத்தினார்.

தன் சக்திக்கு மீறிய செலவு என்றாலும் கவலைப்பட வில்லை. அப்படி சிறப்பாக நடத்திய திருமணம் அது.
இன்று…கேட்ட செய்தியைத்தான் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. காலையில் ஆபீசுக்கு செல்லும் வழியில் பழைய நண்பர் நமசிவாயத்தை எதேச்சையாக பார்த்தார். மகள் விசாரித்தவர் பத்திரிகை கொடுக்காதது பற்றி கோபித்துக்கொண்டார்.  மாப்பிள்ளையை பற்றி கேட்டவர் குமாரவேலிடம் கூறியது அதிரச் செய்தது.

“என்னப்பா இது… இருந்தும் இருந்தும் அந்த இடத்தில் உன் மகளை கொடுத்திருக்கியே?” என்றார் நமசிவாயம்.

“என்ன சொல்றே நமசி?” -குமாரவேல்.

“ஆமாப்பா… அந்த மாப்பிள்ளை சரியான குடிகாரனாச்சே…எப்படி ஏமாந்தே?” நமசிவாயம் சொன்னதும் அப்படியே உறைந்தார் குமாரவேல்.

ஆபீசுக்கு விடுப்பு போட்டு விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடமும் விவரத்தை கூற ஏக அதிர்ச்சி… ஒரு முடிவுக்கு வந்தவராய் மகளை பார்க்க கிளம்பினார்.

கதவை தட்டியதும் திறந்தது மாப்பிள்ளையின் அம்மா மங்களம்.
“அடடே… சம்மந்தியா? வாங்க…வாங்க. என்ன திடீானு. எப்படியிருக்கீங்க” என்று ஏகப்பட்ட வரவேற்பு. கொடுத்து பேசினாள்.

அதற்குள் வனிதா முகமெல்லாம் பரவசமாக

“அப்பா.. வாங்க” என்று ஓடோடி வந்தாள்.

குமாரவேல் நெஞ்சுக்குள் பெரும் பாரம். மகளை விசாரித்தார்.

“வனிதா போய் காபி கொண்டு வா” என்றார் மாமியார் மங்களம்.

“அப்புறம் சம்பந்தி.. என்ன விஷயம்?”

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார்.

“என்ன… சொல்லுங்க.”

“இப்படி உண்மையை மூடி மறைச்சி என்னை ஏமாத்திட்டீங்களே… இது உங்களுக்கே நல்லாயிருக்கா?” என்றார் குமாரவேல்.

“என்ன ஏமாத்தினோம்… புரியலையே?” – மங்களம்.

“உங்க மகன் குடிகாரர்னு சொன்னாங்க… அதை எப்படி தாங்கிக்குவேன்?”

“அது வந்து இப்ப திருந்திட்டான்….நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லே” என மழுப்பினாள்.

அப்போது மக்கள் வனிதா காபி கொண்டு வந்து அப்பாவுக்கு கொடுத்தாள்.

மகளைப்  பார்த்து வேதனை அடைந்தார் குமரவேல்.

அவர் முகத்தைப்பார்த்த வனிதா,

“அப்பா நீங்க பேசுவதை நான் கேட்டுட்டு இருந்தேன். நீங்க சொல்ற மாதிரி ஆரம்பத்திலே இருந்தது நிஜம்தான்.
எல்லோரும் சொல்ற மாதிரி ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்த தவிப்பு இருக்கும்தான். நான் சராசரி பெண்ணா இருக்க விரும்பல. முதலில் கஷ்டமா இருந்துச்சு.. சரி குடிகாரர்னு நினைச்சு நான் வீட்டுக்கு வந்தா நீங்க எத்தனை நாள் பார்த்துப்பீங்க..அதே மாதிரி ஊர் உலகம் என்ன சொல்லும்” மகள்  பேசுவதைக் கேட்டு அதிர்ந்தார்.

“நீ என்னம்மா சொல்றே..?” என்றார் குமரவேல்.

“அப்பா..நான் ஒரு முடிவு எடுத்தேன். எனக்கு தெரிஞ்சவங்க போதை மறுவாழ்வு மையம் பத்தி சொன்னாங்க. நான் அதை விசாரிச்சு என் வீட்டுக்காரரை மெதுவா அழைச்சிட்டு போனேன். முதலில் வர மறுத்தார். பிறகு வந்தார். ஒரு மாசம் கஷ்டமா இருந்திச்சி. பிறகு சரியாயிட்டு. அவரும் திருந்திட்டார். அதனால் இது பெரிய விஷயமா நான் எடுத்துக்கல. என்ன மன்னிச்சிடுங்க அப்பா” என்றாள். அப்போது மாமியார் மங்களம், மாப்பிள்ளை அனைவரும் வந்து குமரவேல் முன் நின்றனர்.

“சம்பந்தி நீங்க நல்ல பெண்ணை எங்க குடும்பத்துக்கு அனுப்பி இருக்கீங்க. அதனாலே இதை உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு வனிதா சொன்னா…தயவு செஞ்சு எங்களை மன்னிக்கணும்.” என்றதும் குமரவேல் “மன்னிப்பே வேண்டாம். நான் வரேன்.” என்றவாறு புறப்பட்டார்.

– அக்டோபர் -1998, ராணி வார இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *