மனம் இன்னும் ஓயவில்லை

0
கதையாசிரியர்: ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 26, 2024
பார்வையிட்டோர்: 2,098 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இஸ்தோப்புச் சுவரில் சாய்ந்தபடி கந்தசாமி உட்கார்ந்திருந்தார். அவர் தோட்டத்தில் பென்சன் வாங்கிக் கொண்டு வீட்டில் இருக்கிறவர்…… கட்டுமஸ்தான உடல் அறுபது வயதின் நடுப் பகுதியில் இருக்கிறார். மானிறமானவர். அவரது தொங்கு மீசையைப் போல அந்த நரைத்த தாடியிலும் கறுப்பு மயிர்கள் கோடு கோடுகளாய் தொங்கின. அவர் கட்டியிருக்கும் அந்தப் பழைய வேட்டி….. தூசியும் அழுக்கும் நிறைந்து செம்பட்டையாய் காட்சி தந்தது. மேலுடம்பைப் போர்வையால் போர்த்தியிருந்தார். பச்சைக் கறுப்பு நிறங்களில் பட்டை போட்ட அந்தப் போர்வை முழுக் கறுப்பாகவே இருந்தது. 

அவரது வாழ்க்கையில் இன்று, இன்னொரு பொழுதும் புலர்ந்தது. காலத்தின் சுமை அவரை ரணமாய் வருத்தியது. லயத்தில் ஆடும்…. சின்னஞ்சிறுசுகளின் கூச்சலும் கும்மாளமும் பீறிட்டுப் பாயும் பீலித் தண்ணீரின் இரைச்சலும் அவரது ‘நிஷ்டையை’க் குலைக்க முடியவில்லை! அவர் ஆழ்ந்த மௌனத்தில் குந்தியிருந்தார். ஆடிக் குதிக்கும் அந்தச் சிறுசுகளின் மத்தியில் அவர் ஒரு தூசு! 

பாதி மூடிய கண்களால் அங்கே கும்மாளமடிக்கும் ‘கொலவாரிகளை’ நோட்டமிட்டார். அற்பசீவன்கள்! என்ன….. புதிய தலைமுறை….! “பொறந்து….. வளந்து……. தலயெழுத்து.. அப்புறம் அடுத்தவனுக்கு ஊழியஞ் செஞ்சி…. கடைசியில் மண்டையப் போடுற கூட்டம்…! ஒரு பொறவி!” அவர் எண்ணத்தில் இப்படியொரு தத்துவம் அந்தத் தோட்டச் சிறுசுகளின் தலைவிதியைச் சாடுகிறது! 


வாசக்கூட்டி முத்தான் சரியாக பத்து மணிக்கெல்லாம் ‘லயத்து ரவுண்டு’ வந்து விட்டான். லயத்தின் ஒரு தொங்கலிலிருந்து வேலையை ஆரம்பிக்கின்றான். கந்தசாமியின் லயத்துக்கு வந்ததும் வழக்கம் போல கதையில் இறங்கிடுவான். 

“பெரியவரே! இன்னக்கி எப்படி…? ஒடம்பு தேவலாங்கலா…” 

“என்னாத்த தேவலாம்…? ஒடம்பு நேத்தவுட மோசமாத்தான் இருக்கு….. ராத்திரி நேரத்துலத் தான் மூட்டு வலி ரொம்ப வருத்தம் குடுக்குது.ஆ…. ஆ…. சாமீ! சாமீ! இறுமல் வேற தொந்தரவு குடுக்குது…. இதுனால மத்தவங்களுக்கும் தொந்தரவும்….. எரிச்சலும்! என்னா பண்றது..?” 

கிழவனார் முத்தானிடம் சலித்துக் கொண்டார். முத்தான் வைத்தியம் சொன்னான். 

“படுக்கப் போறதுக்கு முன்னுக்குக் கொஞ்சம் கருப்பந் தைலத்த எடுத்து தடவுங்க…. மூட்டுக்கு மூட்டு நல்….ல்…. ல்….லா..பெல…ம்…ம்…..மா………. சூடு பறக்கத் தேய்ங்க….! சொல்லி வச்ச மாதிரி வடவா….பயவுட்டு வலி கிலியெல்லாம் பறந்து போயிரும்! இருமலுக்கு நம்ம மருந்துக் காரங்க கிட்ட ஏதாவது வாங்கிட்டு வந்து தர்றேன்.” முத்தான் ஆறுதல் சொன்னான். 

கந்தசாமிக்கு மெல்லிய சிரிப்பு இழையோடியது. 

“ஆமாம்பா! சரியா சொன்னே……..மருந்துக் காரனப் பத்தி! மருந்துக்காரன் பேரச் சொன்ன….. 

“எல்லா எழவும் ஞாவகத்துக்கு வருது! அவென் எல்லா விசாதிக்கும் ஒரே மஞ்சக்கலர் ‘தண்ணி’ வச்சிருப்பான்! நாங்க சின்ன வயசுல அந்தத் தண்ணிய ‘சர்வ சஞ்சீவி’ன்னு கிண்டல் பண்ணுவோம்! இந்தக் காலத்துப் பசங்க…. அத ‘சுடு தண்ணி மருந்து’ன்னு சொல்றாங்க! எந்தம்பி முத்து! இனிமே எனக்கு என்னாத்துக்கு மருந்து…..? எனக்கு வயசு போய்க் கிட்டு இருக்கு…. இதுக்கெல்லாம் இனிமே மருந்து கெடையாது!” 

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க பெரியவரே! வெள்ளக்காரன்களுக்கு ‘வயசு போற’ கதையே கெடையாது! அவன் எழுவது வயசுல்ல கல்யாணங் கட்டுறான்!” 

“அது அவென் திங்கிற தீனி….. வாழ்ற வாழ்க்கயப் பொறுத்தது! நா ….. என்னாத்த சாப்புடுறேன்….? காலையில பகலைக்கு …. ராத்திரிக்கு… ஒரே காஞ்ச அரிசியும் கோசாக் கீரையும்!” முகத்தைக் கோணிக் காட்டினார் கந்தசாமி. 

“நீங்க சொல்றதும் உண்மைதான்! இருந்தாலும் ஒங்க ஒடம்பக் கொஞ்சம் ஒழுங்கா வச்சிருக்கிறதுக்கு ஏதாச்சும் சத்தான சாப்பாடு சாப்புடத்தான் வேணும்!’ 

“பன்னெண்டு ரூபாவுல ஒருத்தன் என்னாத்த சாப்புட முடியும்?”

அவர்களின் சம்பாஷணை இடையில் முறிந்தது. பெரிய துரை ‘லயத்து விஜயம்’ செய்ய வருகிறார்….! முத்தான் பெரியதுரையை விட்டு மெல்ல நழுவினான்…! 

மேட்டு லயத்தில் நாய்கள் குறைக்கின்றன. குப்பை மேட்டில் கிடந்த நாய்களெல்லாம் தங்கள் ‘வேலைகளை’ அப்படியப்படியே போட்டு விட்டு லயத்தைச் சுற்றி ஓடுகின்றன. 

பிள்ளைகள் சந்து பொந்துகளில் நுழைந்து ஓடுகின்றனர். ஓட்டத்திலும் ஓட்டமாய் பாட்டோடு ஓடுகின்றனர்! 

“தொரே தொரே தொரே!” 

லயங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக பெரிய துரை சின்னத்துரையோடு ராஜநடை நடந்து வருகிறார். 

வாட்டசாட்டமான உயர்ந்த உருவம். அறுவது வயதைத் தாண்டிய மனிதர். 

கந்தசாமியார் வாசலுக்கு வந்ததும் ‘சலாம்’ வைக்கிறார். ‘சலாங்க பெரியதுரே!’ 

”சலாம் கந்தசாமி! எப்படி? ஒனக்கு இப்போ வயசாச்சு இல்லையா…?” 

“ஆமாங்க தொரே! வேலவெட்டி இல்லாமலே எனக்கு வயசு போய்க்கிட்டு இருக்கு!” 

“ஒனக்கு வேல செய்ய முடியாதுன்னு டொக்டர் சொல்றது தானே?’ 

“தொரே! இந்தக் கை ரெண்டுக்கும் இன்னமும் சக்தி இருக்குது. வேல குடுத்துப் பாருங்க தொரே!’ 

“அது முடியாது கந்தசாமி….! நீ மூளைக்கு மிஸ்டேக் பண்ணிக்கிட்டு இருக்குது!…..இல்லாட்டிப் போனா யாருசரி ஒங்கட தலையை மாத்தியிருக்குது ! இப்போ ரொம்ப ரொம்ப புள்ளைகள் பொடியன்மார்கள்… வளந்து வாறதுதானே? அவங்களுக்கு நான் வேல பாத்துக் குடுக்க வேணுந்தானே? நீ மாதிரி வயசாள்கள் சின்ன ஆள்களுக்கு இடம் குடுக்க வேணும்!’ 

“அது சரிங்க தொரே! ஆனா… என்னவுட வயசுல கூடின… ஆளுக வேல செய்றாங்களே…..?” 

“அப்படி ஒண்ணும் இல்லே! நான் செக் பண்ணிப் பாத்தது!”‘ 

”தொரே! என் சீவியக் காலம் முழுவதும் ஒழைச்சிக் குடுத்தேன்…. இந்தத் தோட்டத்துல மத்தவங்களவுட நான் நல்ல முறையில கவ்வாத்து வெட்டியிருக்கேன் ….. 

கானு வெட்டியிருக்கேன்….. முள்ளு குத்தியிருக்கேன். இப்ப என் நெலமையப் பாருங்க……… நா வேல செஞ்சி ஒரு வருசத்துக்கு மேலாச்சு……..எங்கையில ‘காப்பு’ காச்சிருக்கிறதப் பாருங்க! இன்னமும் அப்படியே இருக்கு……! வயித்துப் பாட்டுக்கு ரொம்ப கஷ்டம்… சீவியத்த ஒட்டுறதுக்காவது ஏதாவது கொஞ்சம் குடுங்க! நீங்க குடுக்கிற……. பென்சன் காசு…. பன்னெண்டு ரூவால்ல என்னாப் பண்ண முடியும் தொரே?” 

“ஒன் மகனும் மகளும் இப்போ…. ஒன்னை கவனிக்க வேணும்! நீ அவங்கள நல்ல மாதிரி வளத்ததுதானே?’ 

“ஒங்களுக்கு ஒழைச்சிக் குடுக்கத்தானை அவங்கள வளத்தெடுத்தேன்! எந்தொழில் அவங்களுக்கு பாரம் குடுத்தேன்! இனிமே ஒருநாளும் அவங்களுக்கு சொமையா நா இருக்க மாட்டேன்…. தொரே” 

“கந்தசாமிக்கு…… கடையில ஏதாவது வேல தேடிக் கொள்ள முடியாதா?” பெரிய துரை கேட்டார். 

“பெரிய தொரே! என் சீவியம் முழுக்க வெள்ளைக்காரன் தோட்டத்துல வேல செஞ்சிட்டு இப்பப் போய் கடைசி காலத்துல…. கடையில வேல செய்ய முடியுங்களா? ஒரு நாளும் கடகாட்டு வேலைக்குப் போக மாட்டேன்” கந்தசாமி தன் உயரத்துக்கேற்ப நிமிர்ந்து நின்றார். 

பெரியவரும் சின்னத் துரையும் வியப்போடு அவரைப் பார்த்தார்கள். “கிழட்டுப் பிசாசுக்கு வீராப்பு! இன்னம் இவன் உடம்புல இரத்தம் இருக்கு! பெரியதுரை முணுமுணுத்தார். ‘யெஸ் சார்! பழைய மனுசன்கள்ல இவன் ஒரு ஆள் தான் பாக்கி! ஹி ஸ த லாஸ்ட்’ சின்னத்துரை சொன்னார். ஐ யேம்…… கிளேட்! இந்த பொந்தில் ஒருத்தனாவது மிஞ்சியிருக்கானே” பெரிய துரை தொடர்ந்து கதைத்தார். “நல்லது…… கந்தசாமி ஒன்பென்ஷன் பத்தி கம்பெனிக்கு எழுதி……. சீக்கிரம் பதில் சொல்றேன்” 

“நீங்க தான் எனக்கு தொரே! ஒங்களுக்குத் தான் ஒழைச்சிக் குடுத்தேன்!” 

“ஆமா அது பத்தி எனக்கு சந்தோஷம்” ஆனா…. லண்டன்ல ஒரு தொரே இருக்கார் நான் அவருக்கு எழுதி உத்தரவு வாங்க வேணும்” என்றவர் சின்னத்துரையோடு கிளம்பினார். 

அவர்கள் சென்று மறையும் வரை கந்தசாமி வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்……… 

“லண்டன்ல…. ஒரு தொரை இருக்கானாம்! ஹும் லண்டன்ல…! பெரிய துரையின் புதுக் கதை அவர் மனதை நெருடியது. புலம்பிக் கொண்டு இஸ்தோப்புக்கு வருகிறார்……. கோழிக் குடாப்பின் மேல் சாய்ந்து படுத்துக் கொள்கிறார்…….. 

பெரிய துரையுடன் சரிக்குச் சரியாக நேர் நின்று கதைத்ததில் மனம் கொஞ்சம் சங்கடப் பட்டது. இருந்தாலும் இன்று அவரிடம் மனம் திறந்து கதைத்ததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டார். நீண்ட காலமாக அவர் மனதை வருத்திக் கொண்டிருந்த சுமையை இன்று கொஞ்சம் இறக்கி வைத்துவிட்டதாய் உணர்ந்தார். ஆனாலும் என்ன பிரயோசனம், ஓர் ஆறுதலுக்காவது அவரிடமிருந்து ஒரு உறுதியான வார்த்தையைப் பெறமுடியாமல் போய்விட்டதே! 

மெனேஜர் துரை நினைத்தால்……. அவரால் செய்ய முடியாதது ஒன்னுமில்லை. 

“அவரு அப்படி ஏன் சொல்லணும்? அவரும் நானும் லண்டன்ல இருக்கிற தொரைக்கிட்ட வேல செய்ற மாதிரி….. பேசினாரே………?” கந்தசாமி தலையைப் போட்டுக் குடைந்து கொண்டார். 

இவ்வளவு காலமாய் அவர் தனக்குத் தெரிந்த ஒரு துரையிடமே வேலை செய்து வந்திருக்கிறார்……. ஆனால் இப்போது? முன்பின் தெரியாத ஒருவனுக்குத் தன் வாழ் நாள் முழுவதையும் வீணாக்கியிருக்கின்றோம் என்று கேள்விப்படுகிறார்! இதை இவரால் ஜீரணித்துக் கொள்ள முடிய வில்லை. 

அவருக்கே அவர் மேல் ஒரு பரிவும் பச்சாதாபமும்……. விரக்தியும் ஏற்பட்டது. 

கந்தசாமியைப் போன்ற ஓர் உழைத்துக் கொடுத்தவன் கலங்கக் கூடாது…….! 

ஜீவியத்திலேயே இப்படியானவொரு நிர்க்கதியான நிலைமைக்கு அவர் தள்ளப் படவில்லை. அவர் மனம் தளர்ந்தது. வெறுமை ஆட்கொண்டது. 

அந்தக் கோழிக் குடாப்பின் மேலே அவர் தூங்கியும் தூங்காமலும் வதைப்பட்டுக் கிடந்தார். 

மாலை நேரம் ஆறு மணி. 

வேலை முடிந்து பெண்கள் வெறுங் கூடைகளோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் உழைப்புக்காக காடு மேடுகள் ஏறி….. இறங்கிச் சுமை சுமையாய் முதுகில் ஏந்திய கொழுந்துகளைக் கொட்டி நிறுத்து விட்டு….. வெற்றுக் கூடைகளை நடைக்கேற்ப அசைய விட்டு…… ஒய்யாரமாய் வீடு திரும்பும் பெண்களின் லாவணியம் கவித்துவமானது….! 

கந்தசாமியின் மகளும் மருமகளும் ஸ்தோப்புக்குள் நுழைகிறார்கள். 

“அப்பா! பகலைக்கு சாப்பிட்டீங்களா?” மகள் கேட்கிறாள். ‘இல்லம்மா’ பெரியவர் மெதுவாகப் பதில் சொல்கிறார். 

வேலை விட்டு வந்த நேரம்….. பெண்களின் சுறுசுறுப்பு இரவுச் சாப்பாட்டுக்குக் குடும்ப வேலைகள் ஆரம்பம்……. அந்தி நேரத்து லயன்கள் ஆரவாரமாக இருக்கின்றன. எங்குமே துடிப்பான செயற்பாடுகள். 

பீலிக்கரையில் பெண்களின் கலகலப்பு…. ‘கை கால்’ கழுவிக் கொண்டும் தேய்த்துக் கொண்டும் பிள்ளைகளைக் கூப்பிட்டுக் கொண்டும்……அலை மோதும் வேளை……..! ஆண்கள் வெறும் மேலோடு இஸ்தோப்புனுள் நுழைவதும் வெளியே போவதுமாக…. ஆர்ப்பரிக்கும் அந்தி நேரம். 

நாய்களும் கோழிகளும் வீடு திரும்பித் தங்கள் மூலைகளில் அடங்குகின்றன. 

இரவின் அணைப்பில் விளக்குகள் சிரிக்கின்றன. வரிசையாய் இருக்கும் லயன் வீடுகளில் கதகதப்பும்….. வெதுவெதுப்பும் இதம் தருகின்றன.

இஸ்தோப்பின் இரு பக்கங்களிலும் தொங்கும் சாக்குத் திரைகளைக் கீழே இறக்கி விடுகிறாள் கந்தசாமியின் மகள். காற்றும் மழையும் தாக்காதபடி பெரியவரைக் காக்கும் மறைப்பாக அந்தப் படங்குத் திரைகள் தொங்குகின்றன… 

சாக்கை இறக்கி விட்டவள் போத்தல் லாம்பைக் கொண்டு வந்து சுவரில் மாட்டுகிறாள். உலர்ந்த கம்பளியை கோழிக் குடப்பின்மேல் விரித்துப் பெரியவருக்கு படுக்கை ஒழுங்கு செய்கிறாள். 


இரவு எட்டு மணி. ‘இஸ்டோர்’ வேலை முடிந்து மகன் வருகிறான். காம்பிராவுக்குள் நுழையமுன்னே.. இஸ்தோப்பு சாக்குத் திரையை நீக்கி, எட்டிப் பார்க்கிறான். 

“அப்பா!” 

“மகென்! ஏம்பா…….. இவ்வளவு சொணக்கம்…..?” 

“கடைசி சாக்கு…… ரொம்ப சொணங்கி வந்திச்சுப்பா!’ “நல்லது…….. சாமீ…. போயி…. சாப்பாட்டக் கவனி!’ 

கந்தசாமியின் சாப்பாடு வழக்கம் போல இஸ்தோப்பில் வைக்கப் பட்டிருக்கிறது. 

அவர் மெல்ல…. மெல்ல சோற்றை உருட்டி ஒவ்வொரு பிடிக்கும் ஒருதரம் நின்று…… நின்று… விழுங்கினார். சாப்பிட்டு முடிந்தது. வெற்றிலை போட்டுக் கொண்டார். 

லயங்கள். மரண அமைதியில் மூழ்கின்றன. அவர் படுக்கையில் சாய்கிறார். காற்றுப் பலமாக வீசுகிறது… சாக்குத் திரைகள் போராடுகின்றன. தகரக் கூரையில் மழை மேளம் கொட்டுகிறது. 

மழையின் இரைச்சலும் நனைந்த மண்ணின் சேற்று நெடியும் அவரின் மனத்துயரை மேலும் கிளறின. பழைய ஞாபகங்கள் நிழலாடின. அந்த நடுநிசியில் கடந்த காலங்கள் படம் கீறுகின்றன. முப்பது வருசங்களுக்கு முன்னால் அவர் தன்னையே பார்க்கிறார்! 

காக்கி கால்சட்டை வெள்ளை பனியன்….. இடுப்பைச் சுற்றிச் சிவப்பு நிறத்தில் இடைவார் கட்டியிருக்கும், ஒரு இளம் கவ்வாத்துக்காரன்! மத்தியானம் ஒரு மணிக்கெல்லாம் இரு நூற்றைம்பது மரம் கவ்வாத்து வெட்டி விடுவான். ‘கணக்கு’ முடிந்ததும் நேரே கொழுந்து மடுவத்தை நோக்கி சம்சாரத்தைப் பார்க்கப் போயிடுவான். 

அங்கே கருங்குதிரைக் குட்டியைப் போல மதாளித்து வளர்ந்த இளமைச் செழிப்போடு கமலம் காத்திருப்பாள்! 

“நீ இன்னமும் வூட்டுக்குப் போகல்லியா….?” 

“இப்ப கொஞ்சத்துக்கு முன்ன தான் ……. கொழுந்து நிறுத்தேன்!’ 

“சரி……. வூட்டுக்குப் போவோம்…. நீ நேரத்தோட மலைக்கும் போகணுமில்லீயா………?” 

இருவரும் புதிதாகக் கல்யாணம் முடித்த ஜோடிகளைப் போல நடந்து கொள்வார்கள். கரகரத்த குரலில் இனிக்க இனிக்க கதை பேசிக் கொண்டு பாதை நெடுக பவனி வருவார்கள்! வீட்டுக்கு வந்ததும் உடல் அலம்பிக் கொண்டு அடுப்பங்கரையில் ‘பலவாக்கட்டையில்’ நெருக்கி உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவார்கள்! ஒருவரையொருவர் ஒட்டிக் கொண்ட உடல் சூட்டில் கந்தசாமி குளிர் காய்வான்…. இறுக்கமான அன்பின் பிணைப்பில் அவன் இன்பம் காண்பான். 

அது தான் வாழ்க்கை! ‘காதல் என்பது நிலவைப் போன்றது. தென்றலைப் போன்றது. அது மாளிகைக்கு மட்டுமல்ல மண் குடிசைக்கும் வரும்’ என்ற உண்மை அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு நித்தியமாயிருக்கிறது……….! 

கமலமும் கந்தசாமியும் குழந்தை குட்டிகளைக் கண்டார்கள். அவர்கள் பாசம் பகிர்ந்து கொள்ளப் பட்டன. 

கமலம் குடும்பத் தலைவியானாள். குடும்பப் பொறுப்பை அவள் ஏற்றுக் கொண்டாள். பெயரளவில் தந்தையான கந்தசாமி தாயாய் தாரமாய் இருந்து செயல்படும் அவளுக்கு பெருந்துணையாக நின்றான். மனைவி, பிள்ளைகள் என்ற குட்டி உலகத்துக்குள் தன்னைச் சிறை வைத்துக் கொண்டான். வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால்….இரவு நித்திரைக்குப் போகும் வரை மனைவி, பிள்ளைகளைச் சுற்றி வருவான். ஞாயிற்றுக் கிழமை ஓய்வு நாளிலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பாள். வெளி உலகம் அவனுக்குப் பூஜ்யம். குடும்ப வாழ்க்கை அத்துணை இன்பமயமாகியது! வாழ்க்கையில் வசந்தம் எப்போதும் வீசுவதில்லை. அங்கே துயரமும் ஒரு அத்தியாயமாகும் என்பதை மனிதன் ஏனோ மறந்து விடுகிறான். 

பத்து வருசத்துக்கு முன்பு இனம் புரியாத ஒரு பயங்கரக் காய்ச்சல் அந்தத் தோட்டத்தை உலுக்கியது…. அந்த துரதிஷ்டம் நடந்தது. கந்தசாமியின் மகனும் மகளும் அடுத்தடுத்து காய்ச்சலில் விழுந்தார்கள். ‘தண்ணி வெண்ணி’ ஓய்வு ஒழிச்சல் என்று எதுவுமே பாராமல் அவர்களுக்குப் பணிவிடை செய்வதிலேயே உழன்று போனாள். பிள்ளைகள் குணமாகியதும் அவள் படுக்கையில் வீழ்ந்தாள். காய்ச்சல் அவளை ஜெயித்தது. 


அந்த மங்கலான ஒளியில் கமலத்தின் முகம் தோன்றியது. கந்தசாமியின் இளமைக் காலத்து கமலம்….! சிறுமியாய்க் குமரியாய் – மங்கையாய்ப் பொலிந்த வதனம்….! 

தன்னைக் கொல்லும் அந்தச் சித்திரத்தைப் பார்க்க முடியாமல் மறுபக்கம் புரண்டு படுத்தார். 

அந்த இரவு அவருக்கு ஒரு நாளுமில்லாம மனச் சோர்வை கொடுத்தது. தூரத்தே….. தொழிற்சாலை காவல்காரன் தட்டும் மணியோசை கேட்கிறது. கண்கள் சோர்ந்து விட்டன. தூக்கம் அவரை அரைவணைக்கிறது. 

இரவும் நித்திரை கலைந்தது. வைகறைப் பொழுதில் அரும்பிய அமைதி ‘பிரட்டுத்தப்பு’ சத்தத்தோடு மெல்ல அகன்றது. 

பெரியவர் துள்ளி எழும்புகிறார். ஹும்! பிரட்டுக் களத்துக்குப் போய் அவரால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை என்பதை உணர்கின்றார். 

அவரது வாழ்க்கையில் இன்று இன்னொரு பொழுதும் புலர்ந்தது…….! 

– ஆங்கில தொகுதி: The pensioner, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.

– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *