மனமாற்றம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 1,780 
 
 

திடீரென்று முருகனுக்கு நெஞ்சு வலி வந்ததால் துயறுற்றாள் அவன் மனைவி பவானி.  முருகன் மேஸ்திரியாகவும், பவானி சித்தாளாகவும் ஒரு காண்ட்ராக்டர் கீழ் வீடு கட்டும் வேலை செய்பவர்கள்.  எப்போதெல்லாம் காண்ட்ராக்டர் அழைக்கிறாரோ அப்போதெல்லாம் தவறாமல் ஆஜராவார்கள்.  ஒரு நாள் கூட விடுப்பு  எடுக்காமல் அவர்கள் வேலை செய்வதால் காண்ட்ராக்டருக்கு அவர்களை ரொம்பவேப் பிடித்துப் போயிற்று. 

கங்கா மருத்துவமனையில் உடனே சேர்க்கப்பட்டான் முருகன். வலியால் அவஸ்தைப் பட்டவனுக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பதாக பரிசோதனைகள்  உறுதி செய்தன!  அதனால் அவனுக்கு ‘ பை பாஸ்’ சர்ஜரி உடனடியாகச் செய்ய வேண்டும் ; அதற்கு 2 லட்சம் ரூபாய் செலவாகும் என்று டாக்டர் பத்ரிநாத் கூறியதும் அதிர்ச்சியுற்றாள் பவானி.  ஏற்கனவே எக்ஸ்ரே, ஸ்கேன் இவற்றுக்காக சில ஆயிரங்கள் செலவு செய்தாயிற்று. இப்போது மேற்கொண்டு லட்சங்கள்! ஆனாலும் புருஷன் உயிர் முக்கியம்;  அதனால், கொஞ்சமும் யோசிக் காமல் சிறுக சிறுக சேமித்து வாங்கி தன்  கழுத்தில் போட்டிருந்த தங்கச் செயினை விற்றாள்.  மேற்கொண்டு கடனாக  காண்ட்ராக்டரிடம் பணம் வாங்கினாள்.  டாக்டர் சொன்ன 2 லட்சம் ரூபாய் தேறியது.  அதை  மருத்துவமனையில் கட்டினாள் பவானி.  பணம் மருத்துவமனை கணக்கில் சேர்க்கப்பட்டது. 

உடனே அடுத்த கட்ட நடவடிக்கைகளாக இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தம், இன் னும் சில  பரிசோதனைகளும் சரிபார்க்கப்பட, அவைகள் திருப்திகரமாக இருந்ததால்  மறுநாள் அறுவைச் சிகிச்சை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.  பவானி சரியாக உண்ணாமலும் ,  உறங்காமலும் அச்சத்தில் உழன்றாள். மனதில் தோன்றிய கடவுள் களையெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தாள். 

அன்று காலை அறுவைச் சிகிச்சைக்காக முருகனை அழைத்துச் சென்றனர் மருத்துவமனை சிப்பந்திகள். பவானியை ரிசப்ஷன் ஹாலில் காத்திருக்கச் சொன்னார்கள். தன் புருஷனின் அறுவைச் சிகிச்சை நல்லபடியாக நடக்க வேண்டுமே என்கிற திக் திக் மனதுடன் இருக்கையில் சரியாக அமர முடியாமல் வேர்த்து விறு விறுத்துப் போய்  தத்தளித்துக் கொண்டிருந்ததாள். 

ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு களேபரமே நிகழ்ந்தது ! ஆம், அறுவைச் சிகிச்சை நடக்காமலே முருகன் இறந்து போனான். மேஸிவ் ஹார்ட் அட்டாக் ! பத்ரிநாத் மனசு உடைந்துபோனார். அறுவைச் சிகிச்சை செய்து முருகனை தேற்றிவிடலாம் என எண்ணம் கொண்டிருந்தவர் நம்பிக்கையில் மண் விழுந்தது.  சேதி கேள்விப்பட்ட  பவானி அழுது புரண்டாள். அவளைத் தேற்ற படாது பாடு பட்டனர் செவிலியர்கள். 

இதுவரை இந்த மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லை.  அறுவைச் சிகிச்சைக்கு முன்னரே ஒரு நோயாளி இறந்து போனது பெரும் துயரை  அளித்தது டாக்டருக்கு!அதனால் பவானி கட்டின பணம் ரூபாய் 2 லட்சத்தையும் திருப்பிக் கொடுப்பதுதான் சரி என்று நினைத்தார் பத்ரிநாத். 

உடனே மருத்துவமனையின் சொந்தக்காரர் தணிகாசலத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை விலாவரியாக கூறினார்  பத்ரிநாத். கடைசியில் பவானி கட்டிய மொத்தப் பணத்தையும்  திருப்பிக் கொடுப்பதுதான் முறை  என்று அடித்துச் சொன்னார். 

அனைத்தையும் காது கொடுத்து கேட்ட தணிகாசலம், ” டாக்டர், ரிஃபண்டெல்லாம் பண்ண வேண்டாம். கட்டிய பணம் அப்படியே இருக்கட்டும், ”  என்றார் கொஞ்சமும்  மனிதாபிமானம் இல்லாமல். 

டாக்டருக்கு கோபம் வந்தது. 

“பாவம் ஸார் ! எவ்வளவு கஷ்டப்பட்டு அந்தப் பெண் பணம் கட்டியிருக்கா தெரியுமா? தன் கணவனின் ஆபரேஷன் நல்ல படியாக முடிந்து,  உடல் தேறி வீட்டுக்குப் போகலாங்குற அவளோட நம்பிக்கையில் இடி விழுந்த மாதிரி சம்பவம் நடந்திருக்கு.  ஆபரேஷன் நடக்காமல் போனதால் பணத்தை நாம் உடனடியாக திருப்பிக் கொடுப்பது தான் முறை! கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க.” என்றார் விடாப்பிடியாக. 

“அவசரப்படாதீங்க. நான் புறப்பட்டு வந்து அந்தப் பெண் கிட்ட பேசறேன்.அதுவரை பொறுமையாயிருங்க.” 

ஃபோனை அணைத்த டாக்டருக்கு கோபம் கோபமாக வந்தது. கங்கா ஆஸ்பத்திரியின் தினசரி வருமானமே பல லட்சங்கள் தேறும்!  இதில் 2  லட்ச ரூபாய் ஒன்றும் பெரிய தொகை கிடையாது.  அதுவும் ஆபரேஷனுக்காக கட்டிய பணம். ஆபரேஷனே நடக்கவில்லை. பணத்தை திருப்பிக் கொடுப்பதுதான் சரி !  டாக்டர் மனது புழுங்கித் தவித்தது. 

அடுத்த அரை மணி நேரத்தில் காரில் வந்திறங்கிய தணிகாசலம் விடு விடுவென்று நடந்து சென்று பத்ரிநாத் அறைக்குள்  நுழைந்தார். 

எழுந்து நின்று , ” வாங்க ஸார் !” என இருகரம் குவித்து வரவேற்று எதிர் இருக்கை யில் அமர வைத்தார் டாக்டர்.  மேலும் தொடர்ந்தார்.

” ஸார், அந்த பவானியும் அவள் புருஷன் முருகனும் ஒரு காண்ட்ராக்டர் கீழ் வீடு கட்டும் வேலை செய்பவர்கள்.  வாரக் கூலியில் குடும்பம் ஓடறது.  ரொம்பவேக் கஷ்டப் பட்டு ஆபரேஷனுக்காக  2 லட்சம் ரூபா கட்டியிருக்கா. ஆபரேஷன் நடக்காத பட்சத்தில் நாம அந்தப் பணத்த வச்சிக்கிறது நியாயமில்லே ஸார் ! அந்தப் பணத்த திருப்பித் தந்தால் அவளுக்கு ரொம்பவே உதவியா இருக்கும்…” 

தலை கவிழ்ந்தபடி சில நொடிகள் யோசனை செய்தார் தணிகாச்சலம். பிறகு நிமிர்ந்து, ” அந்த பவானிய வரச் சொல்லுங்க. ” என்றதும்,  டாக்டர் காலிங் பெல்லை அழுத்தி நர்சை வரவழித்தார். நர்சிடம் பவானியை அழைத்து வரும்படி கூறினார்.

அடுத்த சில நிமிடங்களில் பவானி அழுகை குறையாமல் தளர்ந்த நடையுடன் டாக்டர் அறைக்குள் நுழைந்தாள். அவள் பார்வை தரையை நோக்கி இருந்தது.

பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தார் தணிகாசலம்.  பவானியைப் பார்க்க பார்க்க அவர் மூளையில் மின்னலடித்தது.  அப்போது நடந்தது நியாபகத்தில் வந்தது! 

இரண்டு வருடம் முன்னால் கங்கா மருத்துவமனையின் முதல் மாடி கட்டப்பட்டுக் கொண்டிருந்த நாளன்று  கையில் பிரீப் கேஸூடன் தணிகாசலம் வந்தார். பவானியும் முருகனும் மற்றவர்களுடன் வேலை செய்து கொண்டிருந்தனர். பிரீப் கேஸை தரையில் வைத்த தணிகாசலம் காண்ட்ராக்டரிடம் பேசியபடியே நடந்து சென்றார். 

பிறகு மறதியால் பிரீப் கேஸை எடுக்க மறந்து அப்படியே புறப்பட்டுச் சென்றுவிட்டார். 

நேரம் ஆக ஆக முதலாளி வராததால் பிரீப் கேஸைப் பார்த்து கவலைப்பட ஆரம்பித்தாள் பவானி. பிறகு தன் புருஷன் காதைக் கடித்து விஷயத்தைச் சொல்ல திடுக்கிட்ட முருகன் உடனே பிரீப் கேஸை எடுத்துக் கொண்டு பவானியோடு சைக்கிளில் தணிகாசலம் வீட்டுக்குச் சென்றான். 

முருகன் நீட்டிய பிரீப் கேஸைப் பார்த்ததும் முகம் மலர்ந்து பெற்றுக் கொண்டார் தணிகாசலம்.  அப்போதுதான் அந்த பிரீப் கேஸின் நியாபகமே வந்தது  அவருக்கு. 

“என் பெண் ஜாதி பவானிதான் இத கண்டுச்சுங்க.   அய்யா , உள்ளாற இருக்குற தெல்லாம் சரியாயிருக்கான்னு பார்த்துக்குங்க. ” 

மென்மையாகச் சிரித்தவர், “அவசியமில்லை முருகா!  ஆனாலும் நான் வேற விஷயத்துக்காக திறக்கறேன்.” என்றவர் திறந்து பார்க்க பத்து ஐநூறு ரூபாய் கட்டு எந்த விதச் சேதமும் இல்லாமல் அப்படியே இருப்பது தெரிந்தது.  

“முருகா, உள்ள இருக்கறது என்னன்னு  தெரியுமா? அஞ்சு லட்ச ரூபாய் பணம் ! இதை அப்படியேக் கொண்டு வந்து சேர்த்த உங்க ரெண்டு பேரையும் எவ்வளவு பாராட்டி னாலும் தகும்!  உங்களைப் போல நாணயஸ்தர்களை பார்க்கிறது அபூர்வம்..” என்றவர், ஒரு கட்டை எடுத்து முருகனிடம் நீட்டினார்.  “வாங்கிக்க முருகா ! உன்னோட நேர்மைக்கும் நாணயத்துக்கும் உகந்த பரிசு!” 

தலையைச் சொரிந்து கொண்ட முருகன், “அய்யா, என்னை மன்னிச்சிடுங்க. பரிசெல்லாம் வேணாமுங்க. பொட்டி ஒங்களதுன்னு சொல்லிச்சு பவானி.  அத்தச் சேர்க்கலாமுன்னு கொண்டு வந்தேனுங்க.  அவ்வளோதான் சாமி..” பணம் வாங்க மறுத்த முருகன், ” என்னத் தப்பா நெனைக்காதீங்க. நாங்க வரோம். ” என கூறிவிட்டு பவானியுடன் புறப்பட்டுச் சென்றான்.  

அன்று முருகன் நினைத்திருந்தால் பணத்தை அமுக்கியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை.  இன்று அவன் சர்ஜரிக்காக கட்டிய பணம். முருகனும் போய் சேர் ந்து விட்டான் சர்ஜரி நடக்காமலே.  பணத்தை திருப்பிக் கொடுப்பதுதான் முறை எனப் பட்டது தணிகாசலத்துக்கு. 

பவானியை போகச் சொல்லி விட்டு டாக்டரை தீர்க்கமாய் பார்த்தார். 

“டாக்டர், நீங்கள் சொல்வதும் நியாயம்தான். கூட்டிக் கழித்துப் பார்க்கறபோது உங்கள் முடிவு சரியெனப் படுகிறது. ரூபாய் 2 லட்சத்தையும் திருப்பிக் கொடுத்துடுங்க. அதோடு, மேற்கொண்டு ஒரு லட்சமும் சேர்த்து 3 லட்சமாக தந்துடுங்க.  முருகனின் ஈமச் சடங்குகளுக்கு உபயோகமாயிருக்கும், ” என்றவர் எழுந்து டாக்டருடன் சென்று ஐஸ் பெட்டியில் வைத்திருக்கும் முருடன் உடலருகே போய் நின்றார். இரண்டு நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்திவிட்டு நகர்ந்தார் தணிகாசலம். 

தணிகாசலத்தின் திடீர் மனமாற்றம், அவரின் இறுதி மரியாதை செலுத்தியிருக்கும்  அந்தச் செயல் – இவற்றின் காரணம் புரியாமல் விழித்தார் டாக்டர். ஆயினும் பணம் மேலும் ஒரு லட்சத்துடன் பவானிக்கு கிடைக்க இருப்பது ஆசுவாஸமாயிருந்தது பத்ரிநாத்துக்கு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *