களவுக்கலை
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2026
பார்வையிட்டோர்: 74
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கருகருவென்று மயங்கிக் கொண்டு வந்தது, பொழுது. பொழுது அடைந்த மேலடி வானத்து மேகங்கள், சாம்பல் பூத்த தீக்கங்காகக் கனன்று கொண்டிருந்தது.
ஆடுகளையெல்லாம் தொழுவத்துக்கு முன்னால் உள்ள பட்டியில் அடைத்துப் படல் கதவைச் சாத்தினான், முத்தன். சுற்றிலும் மஞ்சணத்திக் கம்புகளை ஊன்றி, அகத்திக் குச்சிகளைக் குறுக்காகக் கட்டி, இலந்தை முள்களைப் பரத்திக் கட்டி… அமைக்கப்பட்ட பட்டி, திறந்தவெளி அடைப்பு.
தரையெல்லாம் பச்சைப் பசேலென நிறத்தில் உலர்ந்து கிடந்தது. சாணமும் மூத்திரமும் விழுந்து சகதியாக்கப்பட்டு, பருத்தி மார்க்குச்சிகளால் வழித்து அள்ளப்பட்டது. தினம் தினம் நாலுகூடை குப்பை சேரும். அந்தப் குப்பை மணம் இவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.
இப்ப அடைத்திருக்கிற செம்மறிகள், நிலைகொள்ளாமல் ஓடித் தவிக்கின்றன. ‘சுதந்திரமாக விடமாட்டீகளா’ என்பது போல ஏக்கமாகக் கனைக்கின்றன. கத்துகின்றன. ஒரே கூவல்காடு.
பட்டிக்குள்ளேயே சுற்றுவதும், ஒன்றையொன்று துரத்துவதும், புகார் தொனியில் கனைப்பதுவுமாக ஆடுகள். செவலையும், வெள்ளையுமான ஆடுகள்.
எல்லா ஆடுகளையும் பரவலாகப் பார்த்தான். ‘எல்லா செம்மறிகளும் வந்து விட்டனவா’ என்ற பருந்துப் பார்வை.
கள்ளக்கண்ணு, ஓட்டை மூக்கு, கிழிந்த காது, வவுறு வெள்ளை,வால் கறுப்பு, உடைந்த காது, கோணக்கால்… முன்னங்கால் செவலை… தொடைக் கறுப்பு…
‘ம்ம்ம்… எல்லாம் இருக்குதுக’ என்று நினைத்துக் கொள்கிற முத்தனுக்குள் ஒரு சின்ன திருப்தி. தொழுவத்திற்குள் குப்புறக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த ஆட்டுக் கூட்டைத் தூக்கி, முட்டுக்கம்பால் முட்டுக் கொடுத்து நிறுத்தினான். ஆட்டுக் கூட்டுக்குள் கிடந்த குட்டிகள், இளங்கனைப்புகளுடன் வெளியேறி… தத்தம் ‘தாய்’களைத் தேடிற்று.
தொழுவத்துப் பரணைப் பார்த்தான். காய்ந்த கொழைகூட இல்லை. குட்டிகளுக்கு கொழை வேணும்.
‘எங்காச்சும் போய் களவாங்கணும். எங்க போகலாம், எந்தத் திக்குலே போகலாம்?’ குறுக்கு யோசனைக்குள் நிறைய புஞ்சைகள் வந்து போயின.
கந்தைய நாயக்கர் புஞ்சையில் அகத்திக் கொழையும், ஆமணக்கங் கொழையும் ஒடிபடாமல் மொதப்பாகக் கிடக்கிற ஞாபகம். இருட்டுக்குள் ஒடித்தாலும், ஒரு நிமாண்ட் நாழியில் ஒரு முழுத்த கட்டு சேர்ந்துவிடும்.
குட்டிகள் தாய்கள் மடியில் முட்டி முட்டி மோதுகின்றன, ஆவல் பறப்புடன். பாசக் குழைவு.
கொழையைக் கட்டுகிற நூல் கயிறை இடுப்பில் கட்டிக் கொண்டான். ‘தீ’படத்துலே ரஜினி மாதிரி இருக்கும்’ என்று நினைத்துக் கொள்வதில், ஒரு பெருமிதம்.
கோனார் வீட்டுக்கு வந்தான். கோனார் வீட்டம்மா வட்டில் நிறைய சோறும் குழம்பும் ஊற்றி வைத்தாள். உண்டு முடித்த கையோடு பால் ஊற்றின தேயிலைத் தண்ணீர். குடித்து முடித்து விட்டு… “கொழைக்குப் போறேம்மா” என்றான்.
‘தீ’ படம் இப்பத்தான் பார்த்திருந்தான். துறைமுகத் தொழிலாளியாக ரஜினி. பாரம் தூக்குகிற கயிறை இடுப்பில் கட்டியிருக்கிற ரஜினி. மடித்து தோளில் போட்டிருக்கிற ரஜினி. மாமூல் கேட்பவர்களை அடித்து, விளாசுவதுவும்… நூல் கயிற்றினால்தான்.
கிழிந்த கைலிக்குமேல் இவனும் நூல்கயிறு கட்டியிருப்பதைத் தடவிப் பார்த்துக் கொண்டான். அதை மறைக்கிற பச்சை நிற பனியன். அதுக்குமேல் அரைக்கைச் சட்டை.
கந்தைய நாயக்கர் புஞ்சை, ஊருக்கு மேற்கில் இருக்கிறது. ரொம்பத் தூரத்தில் இருக்கிறது. தென்னந்தோப்புக்கும் அந்தப் பக்கம். வழிநெடுக சீமைக்கருவேல மரங்கள். முள்புதர். பாம்புகள் நடமாட்டம் ஜாஸ்தி.
இருட்டு என்பது ஆட்டுக்காரனுக்கு பகல் மாதிரி. மூச்சு விடுகிற மாதிரி, பழகிப் போனது. டயர் செருப்பு காலுக்குக் காவல். காலுக்குக் கண் இருக்கிறமாதிரி, முள்காட்டு ஒற்றையடிப் பாதையில் தடுமாற்றமில்லாமல் நடக்கிற நடையின் துரிதம்.
இவன் மனசெல்லாம், நேற்று பார்த்த சினிமா ஓடிக் கொண்டிருக்கிறது. ரஜினியின் பாய்ச்சல். ஜெய்சங்கருடன் மோதுகிற வேகம். காளையை மடக்குகிற வீரம்.
பார்வதி “கதை சொல்றா… கதை சொல்லுறா… கதையைச் சொல்லுறா…” என்று இன்று பகல் முழுக்கக் கெஞ்சித் தவித்தாள். சின்னப்பிள்ளைமாதிரி, விடாமல் நச்சரித்தாள்.
“இப்ப… பெறவு… இந்தா… அந்தா’ என்று இழுத்தடித்து ஏமாற்றி விட்டான். அவளை அப்படி ஏங்க வைத்து, தவிக்க வைப்பதில் இவனுக்கொரு திருப்தி. ஆண்கர்வ நிறைவு.
பக்கத்து ஊர்க்காரி, பார்வதி. வெள்ளாடுகளையும் ஒரு பசுவையும் பற்றிக் கொண்டு வருவாள். முழுத்த குமரி. இருபதுக்கும் மேலே நாலைந்து வயது. பதினேழு வயது, முத்தனுக்கு.
‘ஏலேய், போலேய்’ என்றுதான் சொல்லுவாள்.
“ஏலேய்… நீ கதை சொன்னா… அப்படியே அச்சு அசலா இருக்குடா. நேர்லே சினிமா பார்க்குற மாதிரியே இருக்குடா” என்று அவள் ரசித்த பரவச மகிழ்ச்சியில் திணறித் தவிப்பாள். ஆர்வக்கிளர்ச்சியுடன் ரசிப்பாள்.
இவனது செம்மறிகளையும் அவள் பார்த்துக் கொள்வாள். தப்புகிற கள்ள ஆடுகளைக் கண்காணித்து, கல்லெறிந்து மடக்குவாள்.
இவனைக்கூட எப்பவாச்சும் உறங்கச் சொல்வாள்.
“ஏலேய்… நீ சினிமா பாத்து கண்ணு முழிச்சிருக்கே. நா பாத்துக்கிடுதேன். நீ சித்தே ஒறங்கு.”
தின்பண்டம் கொண்டு வந்திருப்பாள். தெரியாமல் மறைத்து வைத்திருப்பாள். சாயங்கால நேரம், வயித்துப்பசி உயிரைக் கிள்ளும். மனசும் வயிறும் கிடந்து தாகத்தால் தவிக்கிற அந்த நேரம் பார்த்து…
“ஏலேய்… இந்தா… காரச்சேவும், தேங்காச்சில்லும்… தின்னு, பசி அடங்கும்.”
“ஒனக்கு?”
“வேண்டாம்.”
“ஒனக்கும் பசிக்கும்லே?” “இல்லே…”
அவள் பொய் சொல்கிறாள் என்பது தெரியத்தான் செய்யும், அதைக் கிண்டிக்கிளறத் தோன்றாது. இவனது பாலக வயது. வயிற்றுப் பசி. மடக்கிப் பிடித்து சேவை நொறுக்கித் தின்பான். சின்னவனுக்குரிய தின்பண்ட மோகம்.
அவனது பாலக முகம். நாசிக்கு அடியில் செவலை படிந்த பூனை ரோமங்கள். சேவை அரைத்து
சேவை அரைத்து மெல்லுகிற உதடுகளுடன் சேர்ந்து மீசை ரோமங்கள்.
‘இவன்… சின்னப்பயலா, விடலைப்பயலா?’
அவளுக்குள் மெல்லிசாக அரும்புகிற புதிய குறுகுறுப்பு. அதற்கும் காரணமிருக்கிறது.
முத்தன் கதை சொல்வதில் மகா பெரிய கில்லாடி. ரசிக்கிற மாதிரி சொல்லுவான். ரசித்துச் சொல்லுவான். ரசனையுடன் சொல்வான்.
“எழுத்து ( டைட்டில்) போட்டு முடிஞ்சவுடனே… ஒரு பாதம் ஓடியாரும். சின்னப்புள்ளையோட பாதம். அவனை வெரட்டிக்கிட்டு வர்ற பெரியாளுக பாதங்கள். இவனோட பாதத்துலே, கல்லு எத்தும். ரத்தம் வரும். கசியுற ரத்தத்தோட ஓடுற பாதம். அவன் கால். அவன் டவுஷர். ஓடியார்ற சிறுவன் கையிலே, ஒரு பன்ரொட்டி, அவனை வெரட்டி வர்ற பெரியாளுக. ‘திருடன், திருடன்’னு அவங்கபோடுற கூச்சல்.
உச்சி மேடா உயரமா ஒரு ரோட்டுலே ஏறுறான். அவுங்களும் துரத்துறாங்க… உச்சிமேடான ரோட்டுலே ஏறுற போது… அவனோட சின்னப் பாதங்கதான் தெரியுது.
இறங்கு ரோட்டுலே ஓடுறப்ப… அந்தச் சின்ன பாதம், பெரிய பூட்ஸ் காலாகுது. பேண்ட் ஓடுது. பெல்ட் ஓடுது. சட்டை ஓடுது. கையிலே பன்ரொட்டியில்லே. சூட்கேஸோட ஓடிக்கிட்டிருக்கிற எம்.ஜி.யார்.”
இப்படிச் சொல்லுகிறபோது பார்வதி மனசுக்குள் எம்.ஜி.யார் தெரிவார். அவள் மனசுக்கும் எம்.ஜி.யாரின் பெருமூச்சு கேட்கும். அவன் கதை சொல்கிற தீவிரம். அவனே ரசித்துச் சொல்கிற உக்கிரம். அப்படியே காட்சியை அணுஅணுவாக வார்த்தைகளாலேயே விவரிக்கிற வேகம்.
சில சமயம் நடித்தே காட்டுவான். சண்டைக் காட்சியில் எம்.ஜி.யார். மாதிரியே பாவனை செய்வான். குதிப்பான். தாவுவான். கைபாய்கிற வேகம். எதிரில் வரும் கையைத் தட்டிவிட்டு, குத்துவிடுகிற கை.
தத்ரூபமாக செய்து காட்டுவான். எம்.என். ராஜம், சரோஜாதேவிகளுடன் எம்.ஜி.ஆர்… காதலாக உரையாடுகிற காட்சிகள், எம்.ஜி.ஆர் டூயட் பாடுகிற ஸ்டைல். காதல் வசனங்களைப் பேசுகிற பாணிகளை -கெஞ்சலாக – கொஞ்சலாக நடித்துக் காட்டுவான். அச்சு அசலாக அப்படியே.
“சரோஜாதேவி நெஞ்சுலே இப்படி தலைவைச்சு சிரிப்பாரு.” இவன் பார்வதி மார்பில் முகம் புதைப்பான். சற்றே கூடுதலாக அழுத்துவான்.
காட்சிக்கும் அப்பால்… அவனது நாடி கூடுதலாக அழுத்தப்படுவதாக ஓர் உணர்வு. அவனது உதடுகள் கூடுதலாகப் பதிவதாக ஓர் உணர்ச்சி, இவளுக்குள் ரகசியக் குறுகுறுப்பில் மனசு.
வசனமும், கொஞ்சலும் முடிந்து விட்டது. முகத்தை எடுக்காமல் வைத்திருந்த நொடிகள். நெஞ்சில் புதைத்த முகத்தால்,ஓர் அழுத்து அழுத்தியதில் ஒரு விடலைத்தனம்.
எல்லாம்… இவளது ஆழ்மன உணர்வுக்கிள்ளல். அவனிடம் மாற்றமா? தனது ஏக்கமே, அவன் அப்படிச் செய்வதாகக் கற்பிதம் செய்கிறதா?
முகத்தை எடுத்த கணத்தில்… அவன் கண்ணில் ஒரு கபட நிழல் தெரிந்து மறைந்ததை கவனித்து விட்டாள்.
இவளது மனப்பிரமையல்ல…
அவனது மீசை ரோமச் சேட்டைதான். சந்தேகமில்லை. விடலைக் குறுகுறுப்புதான்.
இவனது மனசின் கபட நிழலை… கண்ணில் அவள் பார்த்து விட்டாள் என்பதை முத்தனும் உணர்ந்து கொண்டான்.
இப்போது அதை நினைத்து நினைத்து குறுநகை செய்து கொள்கிற முத்தன். அவள் நெஞ்சில் முகம் வைத்து அழுத்தியபோது, இவனுக்குள் ஒரு நடுக்கமும், சிலிர்ப்பும் ஓடிப் பரவியதை இப்போதும் நினைத்து சிரித்துக் கொள்கிறான்.
கந்தைய நாயக்கர் புஞ்சையை விட்டு வெளியேறுகிறபோது, கொழைக் கட்டின் பாரம் தாங்காமல் அவனது கழுத்து நடுங்கியது. நெஞ்சுக்குள் மூச்சு முட்டியது. நடையை எட்டிப் போட்டு… குட்டோட்டமாக ஓடினான். வியர்த்துக் கொட்டியதில், பனியன் ‘தொப், தொப்’ பென்று நனைந்து விட்டது.
அந்த மூச்சுத் திணறலிலும் நினைத்துக் கொண்டான், ‘சினிமாவுக்குப் போகணும்’ என்று.
ஒரே போஸ்டர்தான் அந்த ஊரில் ஒட்டியிருந்தது. அது வண்ணச்சுவரொட்டி. போதையேற்றுகிற படம். கனத்த மார்பகத்தில் பாதி வெளித் தெரிய, ஒருக்களித்துச் சாய்ந்திருக்கிற பெண்ணின் உதட்டுக் கடிப்பில் காமவெறி. பக்கத்தில் வெற்று முதுகுடன் ஒரு வாலிபன். முறைகேடான படமென்று சொல்கிற சுவரொட்டி.
இவனுக்குள் ஆர்வப்படபடப்பும், பயப்பரபரப்புமாக ஒரு மனத்திணறல். ‘பார்த்தேயாக வேண்டும்’ என்கிற விடலைத்தன ஆசை. இனம் புரியாத மர்ம உலகத்து ஜன்னலைத் திறந்து பார்த்துவிடத் துடிக்கிற ஆழ்மன மீசைக் குறுகுறுப்பு.
கொழைக்கட்டைத் தொழுவத்திற்குள் போட்டான். வெளிப்பானைத் தண்ணீரில் ஒரு காக்காக் குளிப்பு போட்டான். வேறு கைலியையும், சட்டையும் போட்டுக் கொண்டான்.
கோனார் வீட்டம்மாவிடம் தலையைச் சொறிந்தான்.
“என்னலே?”
“துட்டு வேணும்.”
“என்னத்துக்கு?”
“வாங்கித் திங்க.”
“சாப்புட்டேல்லே?”
மௌனக் கபடமாக தலைகுனிந்தான் முத்தன். வீட்டம்மா தந்த ரூபாய் நோட்டை மடித்து, பைக்குள் வைத்துக் கொண்டான். வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டான்.
எட்டு கிலோ மீட்டர் தூரம். நினைத்தால், மலைப்பாக இருக்கிறது. மலைப்பை அடித்து விரட்டுகிறது, கனத்த மார்பகத்தின் மதர்ப்பு. கள்ளச் சினிமா கள்ளக்கலை.
இப்படிப் படம் இவன் பார்த்ததேயில்லை. எம்.ஜி.யார் படம் ரஜினிபடம், அஜீத் படம், விஷால் படம் பார்த்திருக்கிறான். சிவாஜி, கமல் படங்களும் பார்த்திருக்கிறான் நிறைய்ய்ய.
தைர்யமாகப் போய் உரிமையோடு படம் பார்த்து, வெளிப்படையாக வெளியே வந்த படங்கள். இது ‘வேறு’ மாதிரிப் படம், போவது தெரியாமல் போகணும். ரகசியமாக முகம் மறைத்துப் போகணும். திருட்டுத்தனம் வேணும். கபடம் வேணும். கள்ளப்புத்தி வேணும். கள்ளப்பண்பாடு.
ரெண்டாவது ஷோ. அந்த டூரிங் தியேட்டரில் அடித்துப் பிடித்து நெருக்கியடிக்கிற கூட்டம். ஒரு பெண்கூட கிடையாது. எல்லாம் ஆண்கள் கூட்டம். அலைமோதுகிற கூட்ட ஆரவாரம்.
முத்தன் மணல் கூட்டி, உயரமாக்கி உட்கார்ந்து கொண்டான். நா உலர்கிறது. மனசின் நடுக்கம். குற்ற உணர்வின் உறுத்தல். பதற்றம். அவன் கண் பூராவும் திரையில்.
எழுத்து ஓடியது. ஏதோ வேற்று மொழி எழுத்து.
கடற்கரை, மணல்பெருவெளி. ஒற்றையாக நடந்து வருகிற பெண்மணி. ஜட்டியுடன் கடலலையில் குதித்து விளையாடுகிற இளைஞர்கள் இருவர். அவர்களையே… அவர்களது ஒவ்வொரு அழகின் வனப்பையே… நின்று ரசிக்கிற அவள்.
அவர்கள் அழைக்க… சேலையைக் களைகிற பெண்மணி. ஜட்டியும் பிராவும் மட்டுமே மிஞ்ச… வெட்கப்பட்டு தயங்க… அவர்கள் அழைக்க… அலைக்குள் இறங்கும் அவள். அவர்களது காமக்களியாட்டம். பார்த்தால்… அது வீடியோ காட்சி. அதையே பார்த்து மனம் கிறுகிறுக்கிற வேலைக்காரி. அவளை நெருங்குகிற பணக்கார இளைஞன்.
இப்படியே படம் முழுக்க… முறைகேடான மோகத்தினவுகள். முத்தனுக்கு மூச்சுத்திணறல். அவன் உடம்பெல்லாம் வெப்பப் பரவல். தகிக்கிற மனசு. பணக்காரன் மேய்கிற வேலைக்காரி. சிறுவனை மயக்குகிற நடுவயசுக்காரி… கிழவன் மடியில் ஓர் இளம்பெண்… வாலிபனுடன் சல்லாபிக்கிற அரைக்கிழவி. முறைகேடுகளைத் திரைப்படமாக்கி… திரைப்படமே முறைகேடாகி…
ஒரு மணி நேரத்தில் படம் முடிந்துவிட்டது. இவன் பேய் பிடித்தவனைப்போல உயிரறுந்து போயிருந்தான். சைக்கிளில் ஊர் வந்தான். சினிமாவையே நினைக்கிற மனசு. அந்தக் காட்சிகளையே திரும்பத் திரும்ப நினைத்து திளைக்கிற சந்தோஷம். மனப் போதை. லாகிரி கிறுகிறுப்பு. கள்ள உணர்வுகள்.
மறுநாள்.
கரிசல்காட்டில் செம்மறியாடுகள் மேய்கின்றன. பார்வதியும் வெள்ளாடுகளும் பசுவுமாக வந்தாள்.
பார்வதி வழக்கம்போலத்தான் இருக்கிறாள். சாயம் போன நைலக்ஸ்சேலை, சேலைக்குச் சம்பந்தமில்லாத கலரில் ஜாக்கட். எண்ணெயில்லாத செம்பட்டையான தலைமுடி. மனசைத் திணறடிக்கிற இளமைக்கட்டுடல்.
ஆனால்… இவன் வழக்கம் போலில்லை. காய்ச்சல் கண்டவனைப்போல ஒரு முக மாற்றம். நெஞ்சையே ‘குர்ர்’ரென்று பார்க்கிற மனநிற மாற்றம். தடுமாற்றம்.
“என்னடா… தூக்குச் சட்டியும், தண்ணிப் பாட்டிலும் எங்க இருக்கு?”
“மஞ்சணத்தி மரத்துலே… தொங்க விட்டிருக்கேன்.”
“நானும் மாட்டிருதேன்.”
மரத்தை நோக்கிப் போகிற அவளது இடுப்புச் சதை. பின்புறத் தோற்றம். அவளை அப்படியே துணியில்லாமல் நினைத்துப் பார்க்கிற மனக்குரூரம்.
“ச்சீச்சீ… அசிங்கம்… தப்பு… பாவம்…”
அவனுக்குள் அவனையே காறித் துப்பிக்கொள்கிறான். குரூர மனத்தாவலை செருப்பால் அடித்துக் கொள்கிறான். பார்வதி கிட்டத்தில் வருகிறாள்.
“என்னலே… நேத்து சினிமா பாக்கப் போனீயா?’
அவனுக்குள் திணறல். தவிப்பு. நா உலர்வு.
“இல்லே… போகலே… சினிமாவுக்குப் போகலே.”
“ஏண்டா… பொய் சொல்லுதே?’
“பொய்யா?”
“ஆமா. நீ சைக்கிள்லே போனதை எங்க ஊர்க்காரரு பாத்துருக்காரு. வந்து சொன்னாரு…”
“ம்ம்ம்…”
“என்ன படம் பாத்தே? கதை சொல்றா… எப்பவும்போல, பாத்த சினிமாவைச் சொல்லுடா… சொல்றா…”
சிறுபிள்ளை மாதிரி கெஞ்சுகிற அவளைப் பார்க்கிற முத்தன், ஒரு சாயலாக ஊன்றிய கம்பில் உடம்பின் பாரத்தைப் போட்டு நிற்கிற அவனிடம் கிட்டத்தில் வந்து நிற்கிறாள், உரசுகிற மாதிரி.
“சொல்றா… படத்தைச் சொல்றா.”
அவளையே குறுகுறுவென்று பார்க்கிறான். அவளது உறுப்புகளையே வெறிக்கிறான். வேறு எங்கோ பார்வை. நகர்த்துகிறான். கள்ளச்சினிமாவால் கரைந்து, குலைந்துபோன முத்தன்.
“இந்தப் படத்தைச் சொல்ல முடியாது…”
“ஏம்லே?”
“சொன்னா… நீ என்னை அடிப்பே. வைது திட்டுவே.”
“அதெல்லாம் சொல்ல மாட்டேன்லே. திட்ட மாட்டேன்லே.”
“மாட்டேன். சொல்ல மாட்டேன்… அசிங்கமாயிருக்கும்.”
“பாத்த சினிமாவைத்தானே சொல்லப் போறே? ஊரு ஒலகம் பூராவும் பாத்த படத்தைத்தானே சொல்லப் போறே? சொல்றா…”
“என்னாலே முடியாது. தப்பு. பாவம், அசிங்கம்.”
“அதெல்லாம் ஒண்ணுமில்லே. சும்மா சொல்லு… எதாயிருந்தாலும் பரவாயில்லே… பாத்த படத்தை, அப்படியே சொல்லு…”
அவனது தயக்கமும், மறுப்பும் போலி. பொய், சொல்லத்தான் ஆசை. சொல்லி… அவளை மயக்கத்தான் ஆசை.
அவனது தயக்கத்திலும், மறுப்பிலும் உள்ள போலித்தனத்தையும் பொய்மையையும் அவளும் உணராமலில்லை.
“சொல்றா… சொல்றா… பார்த்ததை அப்படியே சொல்றா…”
“சொல்லியிருவேன்…?” மிரட்டும் பாவனையில் அவன். சம்மதச் சிரிப்பாக அவள் புன்னகை.
வழக்கம்போல… நடிப்பும் பாவனையுமாக சொல்ல ஆரம்பித்தான். கைலியைக் கீழே நழுவவிட்டான்.
கம்பை மரத்தில் சாய்த்து வைத்தான். சட்டை, பனியன், டவுஷரைக் கழற்றினான். ப்ரவுன்கலர் ஜட்டியுடன் அவன்.
“என்னாலே… இந்தக் கூத்து? ஏம்லே முண்டமா நிக்கே?” விகல்பமில்லாதவளைப்போல இயல்பாக பார்வதி.
“படத்தைச் சொல்லணும்லே?”
“ம்… சொல்லு… சொல்லு”
“சொல்லவா… நிறுத்திக்கிட வா?’
அவனது பார்வை. கூரிய பார்வை. அவளைக் குடைந்து ஊடுருவுகிற பார்வை. விடலைப்பார்வை.
வார்த்தையின் அர்த்தத்துக்கும் அப்பால் ஒன்றை உணர்த்தி… கேட்கிற கேள்வி.
கேள்விக்கும் அப்பாலுள்ள அந்தரங்கத்தை அவளும் உணர்ந்தாள். உதட்டின் உலர்வு. கண்களின் அலை பாய்வு. மனநடுக்கத்தை மீறிய திரேக மொழி.
“சொல்றா.”
“நைஸான வெள்ளைத்துணியை மட்டும் சுத்திக்கிட்டு பாத்ரூமுக்குள்ளே வாரா. வேற துணி எதுவுமில்லே. பூத்தூவலா அவா மேலே தண்ணி வுழுது. நைஸ் துணி நனைஞ்சவுடனே… எல்லாம் அப்படியே தெரியுது…”
“எப்படி தெரியுது?”
அவள் பார்வை, அவனது மீசையில் நிற்கிறது. உதட்டுக்கு மகுடமாக உட்கார்ந்திருக்கிற பூனை ரோமங்கள். வாலிபமாக மாறிக் கொண்டிருக்கிற சிறுவனின் உருமாற்றம். அவளது கேள்வியிலிருந்த அவளது புதிர்மனசு.
“இப்படித்தான் தெரியுது.”
என்று சொல்லிக்கொண்டே அவளது சேலையை விலக்குகிற அவனது வலதுகை.
மதிய வெயிலின் தகிப்பு தெரியாமல், கரிசல் தரிசில் மேய்கிற ஆடுகள். புற்களை ‘பர்ருச், பர்ருச்’ சென்று கடிக்கிற செம்மறிகள். பசியும் பதைப்புமான மேய்ச்சல்.
வேப்பமரத்து நிழலில் வேலிமரத்துப் புதர் மறைப்பில் பரஸ்பரம் ஒருவரையொருவர் மேய்கிறதைப் பார்க்க இயலாமல் மேகத்துக்குள் ஒளிகிற சூரியன்.
– ஜூலை 2009, வடக்குவாசல்.
– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அந்நியம்
மேலாண்மை பொன்னுச்சாமி
September 24, 2026
மனமாற்றம்
கல்பனா ராஜகோபால்
September 24, 2026
கூண்டை விட்டு வெளியே வா
ஸ்ரீ.தாமோதரன்
September 24, 2026
