பரிதியைக் கண்ட பனி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
இணைய வெளியீடு: November 13, 2026
முதற்பதிப்பு: 2001
பார்வைகள்: 42 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குப்பை லோரி சிராங்கூன் கார்டன் சாலைகளில் மெதுவாக வலம் வருகிறது. அதைத் தொடர்ந்து அண்ணாமலை ஓடியாடி வேலை செய்கிறார். சாலைகளில் இருமருங்கிலும் வீட்டு வாசலை ஒட்டி, குப்பைத் தொட்டிகள் இருக்கின்றன. அண்ணாமலை அவற்றை எடுத்துத் தோளில் வைத்துக் கொண்டு ஓடுகிறார். குப்பை லோரியின் அகன்ற வாயிலில் குப்பையைக் கொட்டுகிறார். சுமையுந்து அதைத் தன் பெரு வயிற்றுக்குள் திணித்துக் கொண்டே நகர்ந்து செல்கிறது.

ஓட்டைக் குப்பைத் தொட்டியிலிருந்து ஒழுகிய முடைநாற்ற நீர் அண்ணாமலையைக் குளிப்பாட்டி விடுகிறது. அவர் நனைந்து விடுகிறார்.

“தின்னுட்டு மிச்சமீதியைப் பையில் கட்டிப் போடாமல் அப்படியே ஓட்டைக் குப்பைத் தொட்டியில் போட்டிருக்கிறாங்களே! ச்சே…!” என்று அண்ணாமலை எத்தனையோ தடவை இப்படிச் சொல்லி இருக்கிறார்.

ஆனால் அன்று அவர் வாய் அடைத்து விடுகிறது. காரணம் அவர் மனநிலை சரியில்லை. அது வெந்து கொண்டிருக்கிறது.

“நான் நினைத்தபடி நடக்கவில்லேைய! தலைக்கு மேல் உயர்ந்துவிட்ட பிள்ளையின் நிலை இப்படி ஆகிவிட்டதே!” என்று தன் மகன் திருமேனியை நினைத்து அவர் கண்ணீர் சிந்துகிறார்.

அவருக்காகக் குப்பை லோரி இரக்கப்படவில்லை; இதயமற்ற அந்த எஃகு இயந்திரம் சென்று கொண்டே இருக்கிறது.

அண்ணாமலை குப்பைத் தொட்டியை எடுத்துக்கொண்டு ஓடுவதும், குப்பை லோரியில் கொட்டுவதும், வெறும் குப்பைத் தொட்டியை மீண்டும் கொண்டு போய் அதே இடத்தில் வைப்பதுமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். மூச்சுவிடக் கூட நேரமில்லை.

காலை ஐந்து மணி முதல் பத்தரை மணி வரை “உசு” என்று உட்காரக்கூட வில்லை. உடல் களைத்து விடுகிறது. இரத்த வியர்வை சிந்துகிறார்.

குப்பை லோரி தன் பெரு வயிற்றை நிறைத்துக் கொண்டதும் அதை இறக்க எரி ஆலையை நோக்கி விரைந்து செல்கிறது. அண்ணாமலையோ தம் சுமையை இறக்க வழி தெரியாமல் தவித்தபடி லோரியின் கம்பித் தடுப்பைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். வியர்த்துவிட்ட மேனியில் காற்றுப் படுகிறது. உடல் குளு குளு வென்றிருக்கிறது. ஆ ஆனால் மனம் வெந்து கொண்டிருக்கிறது.

வேலை முடிந்ததும் அங் மோ கியோவில் இருக்கும் தம் வீட்டுக்குச் செல்கிறார்.

எரிந்து கொண்டிருந்த வயிற்றுத் தீயை அணைக்க வேண்டும் போல் இருக்கிறது.பசி வயிற்றைக் கிள்ளுகிறது. சாப்பாட்டுக்கு முன் அமர்கிறார். வயிற்றைக் காயப்போடக் கூடாது என்பதற்காக ஏதோ பெயரளவுக்குச் சிறிது அள்ளிப் போட்டுக் கொள்கிறார்.

திருமேனியின் நினைவு அவரை வாட்டிக்கொண்டே இருக்கிறது. போதாக் குறைக்கு, “டொண்… டொண்…” என்ற மேல் மாடியில் கல்லுரலில் இடிக்கும் இரைச்சல். எரிச்சலோடு எழுந்து வரவேற்பு அறைப் பக்கம் செல்கிறார்.

அவருக்கு அங்கும் அமைதி கிடைக்கவில்லை. ஒரு மூலையில் கப்பல் கவிழ்ந்து விட்டதைப் போல் அவர் மனைவி கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருக்கிறாள்.

மனைவியின் கவலை அவர் மனத்தை மேலும் கரைக்கிறது. ஆறுதல் சொல்வது எப்படி என்று வழியறியாது தவிக்கிறார்.

சன்னல் வழி வெளியே பார்வையை ஓடவிடுகிறார். வெளியே வெயில் ஆட்சி புரிகிறது. “வெயில் கொளுத்துகிறதே என்று பார்த்தால் முடியாது” என எண்ணியபடி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

கீழ்த் தளத்தில் உள்ள மிதிவண்டியை எடுத்துக்கொண்டு அந்தியில் செய்யும் தோட்ட வேலைக்குச் செல்கிறார். தோட்ட வேலை செய்யும் வீடு சிராங்கூன் கார்டனில் தான் இருக்கிறது.

மிதிவண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது. அவர் மனம் மகன் திருமேனியைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது.

“இரவு ஒரு மணி வரை கண் விழித்து விழுந்து விழுந்து படிப்பானே! படுடா காலையில் படித்துக் கொள்ளலாம் என்றால், ‘படிக்காவிட்டால் நான் தேர்வில் கோட்டை விட்டு விடுவேன் அப்பா’ என்பானே…! இவ்வளவு நாளும் அவன் படித்த படிப்புப் பாழாய்ப் போடுச்சே…!” இப்படி அவர்மனம் நினைக்கும் போது கண்களில் அருவி தானாகக் கொட்டுகிறது.

“அப்பா நீங்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பாடுபட்டு உழைக்கிறீங்க.. எங்களைப் படிக்க வைக்கிறீங்க.. நான் படிப்பை முடிச்சுட்டு வேலைக்குப் போனதும் உங்களை உட்கார வச்சுச் சாப்பாடு கொடுப்பேன் அப்பா! நீங்கள் எதுக்கும் கவலைப் படாதீங்க அப்பா…!” என்று திருமேனியின் அசரீரி ஒலிக்கிறது.

“என் உடம்புக்கு ஒண்ணுன்னா என் மகன் துடிச்சுப் போவானே! தலைவலித் தைலம் தேய்ப்பதும், நேரா நேரம் மாத்திரை எடுத்துக் கொடுப்பதுமாக இருப்பானே” என்று அவர் உதடுகள் படபடத்தன. பொங்கிக் கொண்டு வரும் அழுகையையும் கண்ணீரையும் அவரால் அடக்க முடியவில்லை. வாய்விட்டுக் கதறி அழவேண்டும் போல் இருக்கிறது. மிதிவண்டியை ஒட்டிக்கொண்டே ஒரு கையால் தலைப்பாகையாகக் கட்டியிருந்த துவாலையை அவிழ்க்கிறார்; வாயில் வைத்துக் கடித்துக் கொண்டு அழுகிறார்! அழுதும் மனம் ஆறுதல் அடையவில்லை. அது அதே அச்சில் மிதிவண்டிச் சக்கரமாகச் சுழன்று கொண்டே இருக்கிறது.

தோட்ட வேலை செய்யும் வீட் ைஅடைந்ததும் மிதி வண்டியை நிறுத்துகிறார். அந்த வீட்டு நாய் அன்பாக வாலை ஆட்டிக் கொண்டு ஓடிவருகிறது. எப்போதும் நாயிடம் அன்பு காட்டி விளையாடும் அண்ணாமலை அன்று விளையாடவில்லை.

நாய் இரக்கத்தோடு அவரைப் பார்க்கிறது.

அவர்புல் வெட்டும் இயந்திரத்தை எடுத்து வழக்கம்போல் புல் வெட்டுகிறார். அவர் பார்வை முன்னால் தெரியும் புல்லில் இருக்கிறது. இயந்திரம் முன்னோக்கிச் செல்கிறது. அவர் மனமும் முன்னோக்கிப் பார்க்கிறது. ஒரு கிழமைக்கு பேசிக் கொண்டிருந்தது முன் அம்பலவாணருடன் நினைவுக்கு வருகிறது. அம்பலவாணர் வேறு யாருமில்லை. அந்த வீட்டுக்காரர்.

“இனிமேல் எதுக்குப் படிக்கணும்! படித்தது போதும். இனி வேலைக்கு அனுப்ப வேண்டியதுதான். வேலைக்குப் போனதும் சூட்டோடு சூடா அவனுக்குக் கால்கட்டுப் போட்டுட வேண்டியதான்” என்று நீ சொல்வது சரியில்லை அண்ணாமலை! உன் மகன் திருமேனியைக் கேட்டு அவன் விருப்பம் என்ன என்பதை அறிந்து அதை நிறைவேற்றப் பாரு; அதான் நல்லது! என்கிறார் அம்பலவாணர்.

“நான் கேட்கிறதுக்கு முன்னாலேயே ‘தொடர்ந்து படிக்கப் போறேன், பட்டம் வாங்கப் போறே’ ன்னு சொல்லுறான்! பெரிய படிப்புப் படிக்க வைக்க என்னால் எப்படி அய்யா முடியும்? அப்படியே படிக்கவைத்தாலும் அவன் படிச்சுப் பட்டம் வாங்கிறது எப்போ? வேலைக்குப் போறது எப்போ? என் வீட்டுக்காரியும் ‘அவனைக் கலியாணக் கோலத்தில் பார்க்க வேணும்ன்னும், ஆசைப்படுறா!” என்கிறார் அண்ணாமலை.

“மகன் படிச்சுப் பட்டம் வாங்க வேண்டும். அதைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்றும் ஆசைப்படு, அண்ணாமலை! உன் மகன் பட்டம் வாங்கும் அந்தக் காட்சியை நீ பார்க்க வேண்டாமா? அந்தக் காட்சியைப் பார்த்துட்டீனா அதைவிட இந்த உலகத்தில் வேறே என்னப்பா இருக்கு? “தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறாரே! முதலில் உன் மகனைப் படிக்க வை! படித்த பிறகு கலியாணம் காய்ச்சி செய்து வை! அதான் நல்லது! உன் மகன் மேல் படிப்புப் படித்துவிட்டால் உன் வீட்டுக்கும் படித்த மருமகள் தேடிக்கிட்டு வருவாள்! அது மட்டுமில்லேப்பா, நீ கொஞ்சம் அக்கறை எடுத்து உன் மகன் திருமேனியைப் படிக்க வைத்திட்டீனா நீ உன்னுடைய தலைமுறையையே தலையெடுக்க வைத்தவனாவே! அது முன்னுக்கு வந்துவிடும். உனக்குப் பிறகு உன் பரம்பரையில் படிக்காதவங்களே இருக்க மாட்டாங்க! இப்போ நீ உன் மகன் கண்ணை மட்டும் திறந்து வைப்பதாக நினைக்காதே அண்ணாமலை! உன் பரம்பரைக்கே நீ கண்திறந்து வைத்து, வழியும் காட்டுறே! கல்விச் செல்வந்தான் அண்ணாமலை நம் வழித்தோன்றல்களுக்கு நாம் தேடி வைக்கும் பெரிய சொத்து. நாம் நம் பரம்பரைக்கே செய்யும் பெரிய முதலீடு” என்றவாறு அம்பலவாணர் அவர் முகத்தைப் பார்க்கிறார்.

‘எனக்கும் படிக்க வைக்க ஆசைதான் அய்யா! ஆனால் பணம் – காசு வேணுமே!”

“அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நான் இருக்கிறேன்! உன் மகன் படிப்புக்காக எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்” என்று அம்பலவாணர் சிரிக்கிறார்! அவருக்கு அப்போது “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்….. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது. அதே நேரத்தில் கடந்த இருபது ஆண்டாகத் தம் வீட்டில் தோட்ட வேலை செய்துவரும் அண்ணாமலைக்கு உதவி செய்வதற்குரிய வாய்ப்புக் கிடைத்ததை நினைத்தும் அம்பலவாணர் மகிழ்ச்சி அடைகிறார்.

அண்ணாமலைக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. கைகூப்பியபடி,” அய்யா நீங்க நல்லா இருக்கணும் அய்யா என் மகனுக்குச் சட்டை துணிமணி யெல்லாம் வாங்கிக் கொடுத்தீங்க! இப்போ படிப்புக்கே பணம் கொடுக்கிறேன்னு சொல்லுறீங்க! இதைக் கேட்கும் போது என் மனம் குளுகுளுன்னு இருக்கு அய்யா! இந்த உதவியை என் தலை மண்ணுக்குப் போகிற வரைக்கும் மறக்கவே மாட்டேன் அய்யா! என் பிள்ளைகள் தலைமுறைக்கும் மறக்கமாட்டாங்க அய்யா!” என்கிறார்.

அண்ணாமலை உணர்ச்சி வயப்பட்டதால் அவர் உடல் புல்லரிக்கிறது. கண்களில் இன்பக் இன்பக் கண்ணீர் மல்கி கன்னங்களில் உருண்டு உதட்டில் பட்டு இனிக்கிறது. உயிர் அணுக்கள் அத்தனையும் இன்புறுகின்றன! மகிழ்ச்சியில் அவர் மனம் திளைக்கிறது. ‘இனிமேல் எப்படியும் என் மகன் திருமேனி படித்துப் பட்டம் வாங்கிவிடுவான்’ என்று அகம் மகிழ்கிறார்.

தோட்ட வேலை முடிந்ததும் இந்த இனிய செய்தியைச் சொல்ல வீட்டுக்கு மிதிவண்டியில் விரைகிறார். திருமேனி சிறார் பள்ளியில் படிக்கும்போது எடுத்த புகைப்படம் அவர் கண்முன் தெரிகிறது. தலையில் தொப்பி வைத்துப் பட்டம் வாங்குவது போன்ற காட்சி! அதை நினைத்து மகிழ்கிறார்.

வீட்டை நெருங்கியதும், மிதிவண்டியில் இருந்தபடியே ஐந்தாவது மாடியில் உள்ளதம் வீட்டை அண்ணாந்து பார்க்கிறார். அவர் வீட்டு வாசலில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் கூடி நிற்பது தெரிகிறது. என்னவாக இருக்கும்? கேள்வி எழுகிறது!

ஓடிக் கொண்டிருக்கும் மிதிவண்டியிலிருந்து இறங்கி, அதனுடன் நாலைந்து அடி ஓடிச்சென்று வண்டியை நிறுத்திவிட்டு மின்தூக்கி இருக்கும் இடத்தை நோக்கி விரைகிறார்! மின் தூக்கிக்குக் காலநேரம் தெரியவில்லை! அது பத்தாவது மாடியில் நிற்பதை எண் கண்சிமிட்டி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. பொத்தானை அமுக்கிவிட்டு நிற்கிறார்! மின்தூக்கி வரும்வரை அவரால் நிற்க முடியவில்லை. பொறுமை இழந்தவராய் படிக்கட்டுகளில் விடுவிடு என்று ஏறி, ஆளோடியில் ஓடி, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வீட்டை அடைகிறார்.

பிள்ளைகள் அழுதுகொண்டிருக்கின்றனர். அவர்களுள் மூத்தமகள்,

“அப்பா அண்ணனை இப்பத்தான் எம்பிளன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு போறாங்க. அம்மாவும் கூடவே போயிருக்கிறாங்க. அண்ணன் கீழே நடந்து வந்த போது நாலாவது மாடியில் இருந்து பூந்தொட்டி… அண்ணன்தலையில் விழுந்திடுச்சு அப்பா…” என்று தேம்பித் தேம்பி அழுதவாறு அவர் நெஞ்சில் தீயை அள்ளிக் கொட்டுகிறாள்.

அதைச் செவிமடுத்ததும் அவர் உள்ளம் வேகுகிறது. டாக்சியை அமர்த்திக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து செல்கிறார்.

அங்கு மருத்துவமனையில், வார்டுக்கு முன், விசிப்பலகையில் அழுத கண்ணீருடன் அமர்ந்திருக்கும் மனைவியைப் பார்க்கிறார். அவர் மனம் நெகிழ்கிறது. அவளும் பார்க்கிறாள். அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனம் உளைகிறது.

“பத்தரை மாத்துப் பசும்பொன் பேச்சு மூச்சு இல்லாமல் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாங்க… என் கண்மணியைப் பத்து மாதம் சுமந்து பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுதுங்க….!” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அவள் குருதிக் கண்ணீரைக் கொட்டுகிறாள். அவள் விடும் கண்ணீ அண்ணாமலை நெஞ்சத்தைக் கசக்கிப் பிழிகிறது. கண்ணீரை வடிக்கிறார். அக்காட்சி அருகில் இருந்தோர் நெஞ்சத்தையும் உலுக்குகிறது.

அண்ணாமலையையும் அவர் மனைவியையும் அவர்களால் அமைதிப்படுத்த முடியவில்லை.

“என் மகனைப் பார்க்கணும்!” என்கிறார் அண்ணாமலை.

“யாரும் இப்போது பார்க்க முடியாது! உள்ளே விடமாட்டாங்க. தலையில் ஆப்ரேசன் செய்யணும் என்றும், ஒரு வாரத்துக்குப் பிறகுதான் எதுவும் சொல்ல முடியும் என்றும் மருத்துவர் சொல்லியிருக்கிறார்” என்கிறார் அருகில் நிற்பவர்.

அண்ணாமலை நெஞ்சில் ஆயிரமாயிரம் ஈட்டிகள் பாய்கின்றன.

அன்று முதல் அவருக்கு அமைதியில்லை! வாழ்க்கையே பொருளற்றதாகி விடுகிறது. துன்பம் அவரை ஆட்கொள்கிறது.

உணவு கொள்ளவில்லை. உறக்கம் வரவில்லை. இப்படி ஒரு கிழமை நகர்கிறது.

அண்ணாமலை புல் வெட்டுவதை நிறுத்திவிட்ட இயந்திரத்தைப் பிடித்தபடி கற்சிலையாக நிற்கிறார். நாய் அவரைப் பார்த்து “ளொள் ளொள்” என்று குரைக்கிறது. அதுவும் அவர் காதில் விழவில்லை.

வீட்டுக்குள் இருந்து சன்னல் வழியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்த அம்பலவாணர் மனம் தாழாமல். மெதுவாகத் தோட்டத்துப் பக்கம் வருகிறார். அருகில் வந்ததும், “அண்ணாமலை…” என்று தோளில் கையைப் போடுகிறார்.

துன்பக் கடலில் மூழ்கிக்கிடந்த அண்ணாமலையின் மனம் “ம்…” என்று விடுபடுகிறது. ததும்பி நிற்கும் கண்ணீரில் தத்தளிக்கும் சிவந்த விழிகளால் அம்பலவாணரைப் பார்க்கிறார்.

அம்பலவாணருக்கும் கண் கலங்குகிறது. துக்கம் தொண்டையை அடைக்கிறது. உமிழ்நீரைக் கூட்டி விழுங்குகிறார். பிறகு தொண்டைக் கரகரப்பைப் போக்கிக் கொண்டு, “அண்ணாமலை நீ சிறு பிள்ளையைப் போல அழுதுகிட்டே இருக்கிறாயே! உன் மனைவி மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீயே இப்படி அழுதால் எப்படியப்பா?” என்கிறார் அம்பலவாணர்.

“திருமேனி என்னை அழவச்சிட்டானே அய்யா..ஒரே மகன் ஒருகிழமையா நினைவு திரும்பாமல் கிடக்கிறானே அய்யா….! எனக்குப் பயமாக இருக்கு அய்யா! எங்கே என் மகன் இனி இப்படியே…” என்ற அண்ணாமலைக்கு அதற்கு மேல் சொல்ல வாய் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது.

ஆறுதல் கூற வந்த அம்பலவாணர் நெஞ்சமும் உருகுகிறது. அதைக் காட்டிக் கொள்ளாமல் “கவலைப்படாதே!” என்று சொல்ல நினைக்கிறார். ஆனால் சொல்ல நா எழவில்லை!

வந்த வழியே திரும்பி வீட்டை நோக்கி நடக்கிறார். சற்று தொலைவு சென்றதும் அண்ணாமலையின் கண்களுக்குத் தெரியாமல் தம் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார். புறங்கையைக்கட்டிக் கொண்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்தபடி துக்கத்தை மென்று விழுங்குகிறார். நீண்ட பெருமூச்சு வெளியேறுகிறது. சிறிது நேரம் கழித்து மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மீண்டும் அண்ணாமலையிடம் வருகிறார்.

“அது சரி இன்னிக்கு ஏன் வேலைக்கு வந்தே?” என்று கேட்கிறார்.

“வீட்டிலேயும் இருக்க முடியலேயே அய்யா. என் மனைவி எந்த நேரமும் ஒப்பாரி வைத்துக்கிட்டு இருக்கிறாள். அதான் அவள்கண்ணில் படாமல் இப்படி வந்திட்டேன்!”

“சரி சரி புறப்படு. திருமேனியைப் போய்ப் பார்த்துட்டு வருவோம்!” என்று அம்பலவாணர் கார் நிற்கும் இடத்தை நோக்கி நடக்கிறார்.

இருவரும் மருத்துவமனைக்குச் செல்கின்றனர்.

அவர்கள் “வார்டை” அடைந்து திருமேனி படுத்திருக்கும் அறையை நெருங்கும்போது எதிரே தள்ளு வண்டி வருகிறது. அது சடலம் போர்த்தப் பட்ட வண்டி. அந்த வண்டியைப் பணிப்பெண்கள் தள்ளிக் கொண்டு வருகின்றனர்.

அதைப் பார்த்ததும், “ஒரு வாரம் கழித்துத்தான் எதுவும் சொல்ல முடியும்ன்னு டாக்டர் சொல்லி இருக்கிறாரே!” என்று அண்ணாமலை மனம் எண்ணித் துடிக்கிறது.

“அய்யா” என்றவாறு அம்பலவாணரின் முகத்தைப் பார்க்கிறார்.

அம்பலவாணருக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவரையும் இனம் புரியாத அச்சம் ஆட்கொள்கிறது. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “ஏன் பதறுரே? எல்லாம் நல்லபடியா நடக்கும் வா”

இருவரும் நடையை எட்டிப் போட்டு உள்ளே செல்கின்றனர்.

திருமேனியின் படுக்கைக்கு அருகில் போய் நின்று பார்க்கின்றனர்.

ஆள் அரவம் கேட்டதும் திருமேனியின் இமைகள் மெல்ல விரிகின்றன. கண் மலர்ந்து அம்பலவாணரையும், அண்ணா மலையையும் பார்க்கிறான். அருள் முகத்தையும், அன்பு முகத்தையும் பார்ப்பதுபோல் இருக்கிறது. கைகூப்பியபடி எழ முயல்கிறான்.

“சும்மா படுத்திருப்பா…..!” என்று அம்பலவாணர் கையமர்த்தியபடி சொல்கிறார்! அவர் குரலில் அன்பொழுகிறது; அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது! குறுநகை புரிகிறது!

அண்ணாமலை உதடுகளில் புன்னகை மின்னுகின்றது. கண்ணின் கரு விழிகளில் இன்பக் கண்ணீர் மல்க, மகனையே அன்புடன் கூர்ந்து பார்க்கிறார். அவர் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த பளு பறக்கிறது; பன்னீர் சிந்துகிறது!

– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

சிங்கை மா.இளங்கண்ணன்2 1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய  தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர்     (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *