மனசுக்குள் மத்தாப்பு







கவிதா அந்த வீட்டில் வேலைக்குச் சேர்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது
பாத்திரம் துலக்குவது. வீட்டைப் பெருக்குவது. துணி துவைப்பது என்று வழக்கமான வேலை தான் ஓரளவு சம்பளத்துடன் தினம் சாப்பாடும் தருகிறார்கள்.
மாலையில் வேலை முடிந்து மீதியிருந்த பழைய சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனாள் கவிதா.
கணவன் எங்கு போனானோ தெரிய வில்லை. குழந்தை பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.
குழந்தையை தூக்கி வந்து சாப்பாடு கொடுத் தாள். சாப்பாட்டில் சிறிய தங்க மோதிரம் மின்னியது. இது எப்படி வந்தது ? அவளுக்குள் குழப்பம்.
எஜமானி அம்மாவின் குழந்தை சோற்றில் கையைவிட்டு விளையாடிய போது மோதிரம் தவறிவிட்டது அவளுக்கு தெரியாது.
என்ன செய்வது என்று யோசித்தவள் எழுந்தாள்-நேராக வேலை செய்யும் வீட்டுக்கு புறப்பட்டாள்.
அங்கே – எஜமானி அம்மா மங்களம் கணவனிடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“என்னங்க.. நம்ம குழந்தை கையில் கிடந்த மோதிரத்தை காணல… எங்கே தேடியும் கிடைக்கல… வேலைக்காரிகிட்ட கேக்கவும் யோசனையா இருக்கு.”
“ஏன் அவகிட்ட கேட்க வேண்டியதுதானே.. அதிலேன்னா யோசனை…”
“இல்ல.. அவ நேர்மையானவள்! இருந்தம் மோதிரம் இடச்சா நம்ம கிட்ட கொடுத்திடுவா. ஒருவேளை கஷ்டத்தை நினைச்சி வித்து காசாக்கிட்டா என்ன பண்றது..”
இதைக் கேட்ட கவிதா திடுக்கிட்டாள்.
“உங்க அன்புக்கு நன்றிம்மா. ஏழைங்கன்னா எதுவும் செய்வாங்கனு நினைக்கிறீங்க. வறுமையில் இருந்தாலும் நேர்மையானவங்க… உங்க குழந்தை மோதிரத்தை வித்து நாங்க அரிசிச் சோறு சாப்பிட்டு பாவத்தை கொட்டிக்க வேண்டாம். உங்களுக்கு என் மேல முழு நம்பிக்கை இல்லை. அதனால நான் மனநிம்மதியோட வேலை பார்க்க முடியாது. இனியாவது மற்றவங்க மனசை புரிஞ்சுக்க பழகுங்க. இந்தாங்க மோதிரம்!” என்று மங்களத்தின் கையில் திணித்துவிட்டு கவிதா விருட்டென வெளியேறினாள்.
கணவனும் மனைவியும் அவளை மலைப்பாய் பார்த்தனர்.
– ராணி, 28-01-2001.