மதியாதார் தலைவாசல்
(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்ன சார், இவரை ஒரு மனுஷரென்று நினைத்து நாம் பார்க்க வந்தால், அவர் நம்மை உட்காரவாவது சொன்னாரா? நேற்று வரைக்கும் தாசில்தாராக இருந்தவர் தானே ஸார்? இன்று சிரஸ்தேதார் ஆனவுடன் தலையில் கிரீடமா ஏறிவிட்டது? நானுந்தான் மாஜிஸ்திரேட் ஆகப்போகிறேன். சிரஸ்தேதார் ஆக எத்தனை நாளாகும்? மனுஷனை மனுஷன் மதிக்க வேண்டும் ஸார்” என்றார் அப்பாதுரை முதலியார்.
நாகராஜபுரம் தாசில்தாராக இருந்த கண்ணபிரான் முதலியார் அன்றுதான் ஜில்லா ஹுஜூர் சிரஸ்தேதாராக வந்திருந்தார். அன்றைத் தினம் காலையில் அப்பாதுரை முதலியாரும், குமாரசாமிப் பிள்ளையும் எலுமிச்சம்பழம், பூமாலை முதலியவைகளுடன் அவரைப் பார்க்கச் சென்றிருந்தார்கள். அங்கு நடந்த சம்பவத்தைப் பற்றித்தான் அப்பாதுரை முதலியார் மேற்கூறியவாறு குமாரசாமிப் பிள்ளையிடம் சொன்னார்.
“என்ன இருந்தாலும் உத்தியோக கர்வம் கொஞ்சம் இருக்கத்தானே செய்யும்?” என்றார் குமாரசாமிப் பிள்ளை.
“இந்தச் சிடுமூஞ்சி முகத்தில் நான் இனி விழிக்கப் போவதில்லை. நம் வேலை உண்டு, நாம் உண்டு. ஒருவனிடத்தில் போய் நாம் ஏன் ஸார் கையைக் கட்டிக் கொண்டு நிற்கவேண்டும்? மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்” என்றார் அப்பாதுரை முதலியார்.
ஆனால் குமாரசாமிப் பிள்ளையின் சித்தாந்தம் வேறு. மிதிக்கும் காலை முத்தமிட்டால்தான் கலியுகத்தில் காரியம் சாதிக்கலாம் என்பது அவருடைய கொள்கை. திறமையையோ புத்தி சாதுர்யத்தையோ இந்தக் காலத்தில் யார் பார்க்கிறார்கள்? எல்லாம் ஆட்களைக் ‘குல்லா’ப் போடுவதிலும், ‘காக்காய்’ பிடிப்பதிலுந்தான் காரியம் இருக்கிறது என்று அவர் அடிக்கடி சொல்வது வழக்கம்.
மறுநாள் காலை சிரஸ்தேதார் ஆபீஸ் காகிதங்களைப் பார்த்துக் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு, கையில் இளம் வெற்றிலைக் கட்டுடன் குமாரசாமிப் பிள்ளை வீட்டிற்குள் நுழைந்தார். சிரஸ்தேதார் அவரைப் பார்த்து, “என்ன ஓய், எங்கு வந்தீர்?” என்று கேட்டார். “ஒன்றுமில்லை இ…இ…இ… என்று தந்த வரிசைகளைக் காட்டினார் குமாரசாமிப் பிள்ளை.
“எங்கு வந்தீர்? சும்மா சொல்லுமேன்?”
“ஒன்றும் இல்லை. காய்கறி வாங்குவதற்காகச் சந்தைக்குப் போயிருந்தேன். நல்ல வெற்றிலையாக இருந்தது. எஜமானுக்காக ஒரு கட்டு வாங்கிக் கொண்டு வந்தேன் என்றார். ஏறக்குறைய நாற்பது வயசாகி மாதம் 68 ரூபாய் சம்பளம் வாங்கும் மேல் வகுப்புக் குமாஸ்தாவாக இருந்தபோதிலும். மேல் உத்தியோகஸ் தர்களை ‘எஜமான்’ என்று அழைப்பதற்குக் குமாரசாமிப் பிள்ளை கொஞ்சமும் கூசுவதில்லை. இன்று ஓர் ‘எஜமான் விதைத்தால் நாளை ஒன்பது எஜமான்’ அறுக்கலாம் என்பது அவருடைய எண்ணம்.
“எங்கே! வெற்றிலை ரொம்ப நன்றாய் இருக்கிறதே!” என்றார் சிரஸ்தேதார்.
அவருடைய முகத்தில் ஒரு புன்சிரிப்புத் தோன்றியது. “எஜமானுக்கு ஸ்பெஷலாக….” என்று இழுத்தார் குமாரசாமிப்பிள்ளை
“நம்ம வீட்டு வேலைக்காரப் பயல்களுக்கு இந்த மாதிரி வெற்றிலை வாங்கத் தெரியவில்லையே!”
“எஜமானுக்கு நானே தினந்தோறும்…”
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ஐயா. நீர் அந்தக் கடையை நம்ம பயலுக்குக் காட்டிவிட்டால், அவன் தினமும் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறான்” என்றார் சிரஸ்தேதார்.
அன்றைத் தினத்திலிருந்து நாள் தவறாமல் சிரஸ்தேதார் வீட்டிற்கு வெற்றிலைக்கட்டு போய்க் கொண்டிருந்தது. அதனுடன் அந்த அந்தப் பருவத்தில் விற்கும் பழங்களும் காய்கறிகளும் அவ்வப்போது போய்க் கொண்டிருக்கும். ஆபீஸ் நேரங்களில் பீஸ் நேரங்களில் கண்ணபிரான் முதலியார் எங்காவது மலஜல பாதைக்கு வெளியே கிளம்பினால், “எஜமான் வெயிலில் போகிறீர்களே!” என்று குமாரசாமிப் பிள்ளை அவருக்குக் குடை பிடித்துக் கொண்டு செல்வார்.
இங்ஙனம் மாதங்கள் சில சென்றன. நாராயணபுரம் தாலுகா தாசில்தாராக இருந்த ராமகிருஷ்ண ஐயர் திடீரென்று வாய்வுக் குத்தினால் இறக்கவே, ஒரு மாஜிஸ்திரேட்டுப் பதவி காலி விழுந்தது. ரெவினியூ, அக்கவுண்ட், கிரிமினல் பரீக்ஷைகளெல்லாம் தேர்ச்சி பெற்றவர்களில் ஸீனியர் குமர்ஸ்தாவாகிய அப்பாதுரை முதலியாருக்கே அந்தப் பதவி கிடைக்குமென்று குமாஸ்தாக்கள் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். ஆனால் இரண்டு மூன்று தினங்களுக்கு அப்புறம் குமாரசாமிப் பிள்ளையை பரமன்குடி டெபுடி தாசில்தாராகவும், பரமன்குடி டெபுடி தாசில்தாரை நாராயணபுரம் தாசில்தாராகவும் நியமித்து உத்தரவு வந்தபொழுது யாவரும் பிரமித்துப் போனார்கள்.
குமாரசாமிப் பிள்ளை கிரிமினல் பரீக்ஷை தேறா விட்டாலும் மிகவும் திறமையான நிர்வாகஸ்தரென்றும், அப்பாதுரை முதலியாருக்கு நிர்வாகத் திறமை போதாது என்றும், கலெக்டருக்குக் ‘கான்பிடென்ஷியல் நோட்’ எழுதிக் குமாரசாமிப் பிள்ளையை மாஜிஸ்திரேட் பதவிக்குச் சிரஸ்தேதார் சிபார்சு செய்திருந்தார்.
பரமன்குடியில் குமாரசாமிப் பிள்ளை வீட்டு வாசலில் ரெவினியூ இன்ஸ்பெக்டர்களும், ஆபீஸ் குமாஸ்தாக்களும் நின்றுகொண்டு வேலைக்காரனிடம், எஜமான் இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் உள்ளிருந்த குமாரசாமிப் பிள்ளை புன்சிரிப்புக் கொண்டார். அவர் விதைத்த விதை இப்போது பலன் கொடுக்க ஆரம்பித்து விட்டதல்லவா!
இதே சமயத்தில் அப்பாதுரை முதலியாரின் விஷயம் வேறு. ஒரு மோட்டார் லைசென்ஸ் பேப்பர் எழுதி வைப்பதற்குச் சில நாட்கள் தாமதமாகி விட்டது. “என்ன முதலியார்! உத்தியோகஸ்தர்கள் மாதிரி சரியாய்ப் பதினொரு மணிக்கு ஆபீசுக்கு வந்தால் வேலை நடக்குமா? என்ன இருந்தாலும் நீர் குமாஸ்தாதானே? எட்டு மணிக்கே ஆபீசுக்கு வந்தால்தான் காரியம் நடக்கும்” என்றார் சிரஸ்தேதார்.
– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 7, 2025
பார்வையிட்டோர்: 75
