மணல்வெளி அரங்கு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினக்குரல்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 16, 2025
பார்வையிட்டோர்: 500 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

படார் என்று ஒரு அதிர்வு. வாசற்புறக் கதவு தான் தட்டப்பட்டது. தொடர்ந்து தடார் தடார் தான். 

திடுக்குற்று விழித்ததால் மனதில் அதிர்வு உண்டாகி இருந்தது.இரவு சாப்பிட்ட சாப்பாடு சமிபாடு அடையாமல் நெஞ்செரிப்பது போல உணர்வு. 

உடல் தெப்பமாய் வியர்வையில் நனைந்திருந்தது. ரேபிள் பான் வேலை செய்யவில்லையா? நைற் லாம்ப் கூட இல்லையே கரண்ட் கட்டா? எப்போது தான் கரண்ட் சரியாக வரப்போகிறது. 

உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஒழுங்காக வாக்களித்தது தான் மிச்சமா? 

மீண்டும் படபட. அதைவிட வேறு சத்தமில்லை. வந்தவர்கள் யாராக இருக்கும். கட்டிலைவிட்டு எழும்ப சங்கடமாக இருந்தது. போர்- வைக்குள் என்னவோ சரசரத்தது. பாம்பா? பூச்சியா? 

லைட் இருக்கும் துணிவில் ரோச்லைட்டை கவனமில்லாது விட்டது தப்புத்தான். போர்வையைத் தூக்கி எறிந்தால் அது கதவோரமாக போய் விழுந்தது. விழும் போது கதவோரத்து ஸ்ரூலில் இருந்த கிளாஸ் ஒன்றையும் கூடவே கொண்டு சென்றது. கிளாஸ் “கலீர்’ என்று சீமெந்து நிலத்தில் மோதியது. கட்டிலில் இருந்து ஏதோ ஒன்று சரசரவென்று கீழே குதித்து மறைந்தது. 

மீண்டும் வெளிக்கதவு தடதட என்றது. எதைப் பார்ப்பது. 

கட்டிலிலிருந்து சரசரத்ததையா? அல்லது உடைந்த கிளாசையா? வாசலில் தட்டப்படுவதையா? 

மனைவி பிள்ளைகள் வீட்டில் இல்லாமல் போனது அப்போது உறைத்தது. 

மனைவியின் கட்டில் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருந்தது. தலையணை போர்வைகள் கண்களுக்குப் பழக்கப்பட்ட இருளில் அவை பளபளத்தன. எல்லாம் புதிசுகள். பழைய வாழ்க்- கையுடன் பழையவையும் போய்விட்டன. கட்டில் மாத்திரமா? வீட்டுத் தளபாடம், குசினி தட்டு முட்டுச் சாமான்கள், அம்மி குழவி, முக்கியமாக அரிவாள். சுவர்கூட வெள்ளை. புதிய வெள்ளை. தாமரை வெள்ளை. 

தடார், தடார் முன்பைவிட வேகமாக கட்டிலை விட்டு இறங்கி தரையில் கால் வைக்கச் சில் என்றது. கால்கள் ஏன் இப்படி? வெளியே மழை பெய்து நிலம் குளிர்ந்து விட்டதா? அல்லது வியர்வைதானா? 

யன்னல்-கதவு என்று எல்லாவற்றினையும் இறுக மூடிக்கொண்டு ‘பான்’ காற்றில் மாத்திரம் நம்பிக்கை வைத்து படுத்தால் இப்படித்தான் வியர்க்கும். இரவு எத்தனை மணிக்கு கரண்ட் கட்டானது? என்னதான் செய்தாலும் வெளிக்காற்று வருவதற்கு ஏதாவது வழி பண்ணத்தான் வேண்டும். 

கால்களை அழுத்தமாக வைத்து நடந்து மேசையில் இருந்த ரேடிய மணிக்கூட்டில் நேரத்தைப் பார்க்கப் பன்னிரண்டு ஐந்து. 

இரவு பன்னிரண்டு ஐந்து. 

ஐயகோ இது பேய்கள் உலாவும் நேரம் அல்லவா? பேய்களை அடக்கி வைத்த ஒரு காலத்தில் இப்படியான நேரங்களில் திருவிழாக்கள் பார்த்து விட்டு வந்தது உண்டு தான். ஆனால் இப்போது பேய்கள் உலாவுகின்றனவே. சென்ற வாரம் கூட குஞ்சியாச்சி தங்கள் ஊர் புளியடி பேய் சேட்டை விட்டதாகச் சொன்னாவே. 

குஞ்சியாச்சியின் பேய்க்கதை பகிடியானது அல்ல. குஞ்சியாச்- சியின் பேத்தியார் பேயா, முனியா என்னவோ ஒன்று அடித்துத்- தானே செத்தவவாம். அது ஒரு ருசியான கதை. 

ஒரு நாள் பகல் பன்னிரண்டு மணி உச்சி வெய்யில். செம்மண் தரை தோசைக்கல்லாய் சுட்டதாம்: கருவாடு வாங்கி கடகத்துக்குள் வைத்துக் கொண்டு குஞ்சியாச்சியின் பேத்தியார் வந்து கொண்- டிருந்தார். 

புளியடிக்கு வரும்போது முதுகில் ஓங்கிப் பளார் என்று அறை விழுந்தது. வாயாலும், மூக்காலும் ரத்தம் கக்கியபடி பேத்தியார் செத்துப் போய் இருந்தார். கருவாட்டுக்காக முனி குஞ்சியாச்சியின் பேத்தியாரைப் பலி எடுத்து விட்டது. 

அது அந்தக்காலம். வெள்ளைக்காரன் ஆட்சி செய்த காலம். இப்போது வெள்ளைக்காரனைத்தான் கலைத்தாகி விட்டதே. பேய்களின் சேட்டைகளைத்தான் கலைக்க முடியவில்லை. கடைசியில் பேய்களுடன் சமரசம் தான். 

உடல் வியர்வை முன்பைவிட அதிகமாக இருந்தது.ஏன் இப்படி வியர்க்கிறது? “எட கோதாரி” உடம்பில் ‘ஸ்வெற்றர் இரவு பனியும் இல்லை, குளிரும் இல்லை.பிறகு ஏன் இதனைப் போட்டேன். கொஞ்சக் காலமாய் இப்படித்தானே. தேவையில்லாத எத்த- னையோ விடயங்கள். 

கதவு உடைபடுவது போல் இடிபட்டது. இனியும் பொறுத்தால் உடைத்து விடுவார்கள். அதற்கு ஏன் இடம் கொடுப்பான். நான் ஒன்றும் பிரச்சினையான ஆள் இல்லைத்தானே? என்னுடைய வீட்டுக்கதவையும் உடைத்து விட்டதாக ஏன் காலையில் செய்தி பரவ வேண்டும். 

ஸ்வெற்றரைக் கழற்றிக் கொண்டு அறைக்கதவைத் திறந்தேன். ஏகமாய் வியாபித்திருந்த இருளின் அணைப்பில் இருந்த குளிர் காற்று பெண்மை கலந்த சுகத்துடன் தழுவிக் கொண்டது. எவ்வளவு ஆனந்தம். 

வீட்டின் வாசலின் ஒரு ஜன்னல் பூட்டப்படாமல் இருந்தது. அத- னூடாகத் தான் இந்தக் காற்று. வெளிக்காற்றுக்கு இவ்வளவு வல்லமை உண்டா? 

வெளி வாசற் கதவடியில் பெரிதாக அமளி. கதவு தட்டப்படும் ஓசை இன்னமும் நிற்கவில்லை. யார் ஆட்கள் எத்தனை பேர் வந்திருப்- பார்கள்? 

சிகரெட் குடிக்க வேணும் போல இருந்தது. வந்தவர்களிடம் சிகரெட் இருக்கலாம். நிச்சயம் தருவார்கள். நெருப்பும் தருவார்கள். என்றாலும் அச்சமாக இருந்தது. என்னில் பிழையேதும் இல்லை. இருந்தாலும் அது ஏன் தலை காட்டுகின்றது. நின்று நிதானித்து கைகளைப் பிசைந்து முகம் துடைத்து கணைகளை அழுத்தி பிறகு வெளிக்கதவைத் திறந்தால் “மடார்” என அடித்தது வெளிக்காற்று. குளிர்மையும், மென்மையும் கலந்து சிலிர்க்க வைத்தது. முன்முற்- றத்து மல்லிகையின் மணம் அந்தக் காற்றில் கலந்திருந்தது. எனினும் மல்லிகையின் மணத்தைவிட வேறு ஒரு மணமும், நான் மூக்கைத் துடைத்தேன். முன்பை விட அதிகமாகியது. ஒரு வகைப் பச்சை மணம். பச்சை இரத்த மணம். 

கதவு திறக்கப்பட்டதால் அவர்கள் சற்று விலகி நின்றார்கள். ஐந்து பேரா, ஆறு பேரா தெரியவில்லை. அதற்கு அப்பாலும் அவர்கள் நீளமாக நிற்பது போல இருந்தது. வெளிவாசல் கேற் இரண்டும் ஆவென்று பிளந்திருந்தன. 

பெரிய பூட்டுப் போட்டுப் பூட்டிய கேற் அது. எப்படித் திறந்து கொண்டது. அதனை உடைத்துக் கொண்டா இவர்கள் வந்திருக் கிறார்கள்? ஏன் இப்படிச் செய்தார்கள்? 

நிச்சயமாக உடைத்து எறியப்பட்ட பூட்டை எடுத்து ஒளிக்க வேண்டும். இல்லாவிட்டால் கேற்றை உடைத்து விட்டார்கள் என்ற கதை பரவி விடும். காலையில் விடுப்புப் பார்க்கக் கூட்டம் வந்துவிடும். 

விளக்குமாற்றினை எடுத்துக்கூட்டி இவர்கள் வந்த சுவடுகளைக் கூட அழித்து விட வேண்டும். ம், எதற்கு வந்திருக்கிறார்கள் இவர்கள்? 

எல்லோரும் தெரிந்தவர்கள். வழக்கமாக சந்திப்பவர்கள். காலை வணக்கம், மாலை வணக்கம் சொல்பவர்கள். இடம் இருந்தால் தங்கள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு போய் விடுவார்கள். நல்ல அயலவர்கள். நண்பர்கள். 

ஆட்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவர்களிடம் வெவ்வேறு வகையான கைக்கருவிகள். அதில் ஒன்றும் பிழையில்லை. தொழில் செய்பவர்கள் தொழில் கருவிகளை வைத்திருப்பார்கள் தானே.

“ஐயா வணக்கம்” என்றான் முன்னால் வந்த ஒருவன். அவன் சிரிப்பது பற்களில் தெரிந்தது. பற்கள் கூட வெள்ளை. 

“வணக்கம்” 

“உங்களிட்டைத்தான் ஒரு அலுவல்” என அவன் பவ்வியமாகச் சொன்னான். நான் அந்தப் பவ்வியத்தினுள் கரைந்து போனேன். 

“சொல்லுங்கோ கனநேரமாய் கதவைத் தட்ட வைச்சிட்டேனே” “இல்லை ஐயா” 

“தயவு செய்து மன்னிக்க வேணும். நித்திரையில் இருந்து விட்டேன். நேற்றே சொல்லியிருந்தால் நித்திரைக்குப் போகாமல் காத்துக் கொண்டிருந்திருப்பேன்” என்றேன் மெய் மறந்து. வியர்வை ஆறி உடல் இயல்பாகி இருந்தது. 

“நாங்கள் உங்கடை சகோதரங்கள் ஐயா. உங்களுக்காக உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள்” 

“மெத்தச் சந்தோசம். என்ன அலுவல்?” 

:நீங்கள் எங்களோடை வரவேணும்” 

இப்பவா என்ற எனது குரலில் இருந்த தடுமாற்றத்தினை கடவுளே அவர்கள் உணர்ந்திருக்கக்கூடாது. உணர்ந்தால் நான் தங்களைச் சந்தேகம் கொள்வதாக நினைத்து விடுவார்கள். அது சரியில்லை. 

“ஓமோம்.இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும் தானே. அதற்கு இடையில் சில அலுவல்கள் இருக்கின்றது. 

“சரி போவோம்” 

“வாங்கோ” என்றான் ஒருவன். 

“உங்களை இந்த நேரத்தில் கஷ்டப்படுத்திறதுக்கு மன்னிக்க வேணும்” என்றான் மற்றவன். 

“அதனால் என்ன பரவாயில்லை” 

வீட்டின் வாசலில் இருந்து கேற்றடி வரை அவர்கள் இரு பக்கமும் வரிசையாக நின்றார்கள். பார்க்க சந்தோஷமாக இருந்தது. அதன் மத்தியில் நடக்க கம்பீரமாகவும் தெரிந்தது. 

தெருவுக்கு வந்தோம். அவர்கள் கூட நடந்தார்கள். தெருவில் இரு மருங்கும் நீண்ட வரிசையாக அவர்கள். அவர்கள் தான். 

கருமேகத்தில் சிறைப்பட்டிருந்த நிலவு அச்சம் நீங்கி வெளிவந்தது. இடிந்த கட்டிடங்கள் ஒரு பெரிய கட்டிடமும், நிச்சயம் எரிந்த நூலகம் இல்லை. முகம் அழிந்த மனிதர்கள் போல தெரிந்தன கட்டிடங்கள். ஆனால் எல்லாம் வெள்ளையாக? 

இரவு எப்போதும் போல மாறாமல் இரவுப் பூச்சிகள், வண்டுகளின் சப்தங்களுடனும் காற்றின் அணைப்புடனும் முயங்கிக் கொண்டிருந்தது. 

தெரு முற்றும் துறந்த முனிவனாய் எவ்விதமான உணர்வும் இல்லாமல் நீண்டு கிடந்தது. வழக்கமான பாதையா? புதிய பாதையா என்பது தெரியவில்லை. கேட்பதும் சரியில்லை. 

சரிந்த சுவர்கள். அழிந்த வீடுகள் மத்தியிலே நிதானமாய் தெருவின் முடக்குகளில் சிறிய சிறிய கூடுகள் வெள்ளைப் புறாக்கள் மாத்திரம் பக்குவமாய் சீவிக்கப் பொருத்தமாய். 

கனவு கண்டது போல தெரு மறைந்து போய்விட்டது. 

“கெதியாய் நட” என்றான் ஒருவன். 

வீட்டின் அறைக்கதவு உட்பட வீடு எதையுமே பூட்டாமல் வந்தது ஞாபகத்திற்கு வந்தது. 

காலில் மணல் சொரசொரவென்று இருந்தது. கொஞ்சம் ஈரலிப்பு பெருவெளி மணல்வெளி, சிறு சிறு பூண்டுகள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெளி பிரமாண்டமானதாய் விரித்துப் பரந்து தெரிந்தது. காலில் செருப்பு எதுவுமே போடாமல் வந்ததன் பலன் கிடைத்தது. சுருக்கென்று எதுவோ காலில் குத்தியது. தொடர்ந்து வலி நடையை நிறுத்திக் காலில் என்ன குத்தியது என்று பார்க்க முடியவில்லை. நெருஞ்சி முள்ளாக இருக்குமா? மனம் கேட்காமல் குனிந்து பார்த்தால் அது முள் இல்லை. அதைவிட கொஞ்சம் பெரிதாக என்ன அது? 

“தொடாதே அதை. பிறகு ஒரு காலத்தில் யாருக்காவது ஆராச்சிக்கு உதவும்” என்றான் ஒருவன். 

நிலவு கலந்த இருளில் வெளி, குளத்து நீர் போல பளபளத்தது. பாசிகள் போல தட்டுத்தட்டாய் சில அடையாளங்கள் ஒன்று நூறா ஆயிரமா? 

“நில்லு” என்றவன் அப்பால் போனான். 

இதழ் கோடியில் ஏதோ ஒன்று ஊர்ந்தது போல இருந்தது. கையால் வாயைத் துடைத்தேன். உப்புக் கசிந்தது. மண்ணைத் தொட்ட கையா? கண்ணீரா? 

நான் மாத்திரம் அல்ல என்னைப் போல் பலர் அழைத்து வரப்பட்டிருப்பது ஆச்சரியமாய் இருந்தது. எல்லோரும் நண்பர்களா? 

தூரத்தில் ஒரு வாகனம் இரையும் சத்தம் கேட்டது. அதன் லைட் வெளிச்சத்தில் றோட்டுக்குக் குறுக்காக அமைந்திருந்த வளைவின் நிழல் விரிந்து படுத்தது. 

அணிவகுத்து வந்தவர்கள் கைக்கருவிகளுடன் அரை வட்டம், முழுவட்டம், தீபோட்டு ஆடத் தொடங்கினார்கள். மணல்வெளி ஒரு பெரிய அரங்கமாக மாறியது. 

– தினக்குரல் 27-12-1998.

– மணல்வெளி அரங்கு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மாசி 2002, தேசிய காலை இலக்கிய பேரவை, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *