மணம் வீசும் மலர்…!
கதையாசிரியர்: மா.பிரபாகரன்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 16, 2025
பார்வையிட்டோர்: 91

முதன்மை கல்வி அலுவலர் பள்ளி ஆய்விற்காக வந்திருந்தார். அவர் சிறப்பு விருந்தினர் என்பதால் அவருக்கு அரங்கத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் மாணவர்கள் மத்தியில் அவர்களின் உடல் மற்றும் உள்ள நலன் குறித்து உரையாற்றினார். அப்போது அங்கிருந்த கரும்பலகையில் இருவரிப் பாடல் ஒன்றை எழுதியவர் “இது என்ன வகை அணி இலக்கணத்தைச் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா? அது எப்படி என்று விளக்கமுடியுமா? யாராவது முன்வாருங்கள்!”- என்றார்.
திவ்யாவிற்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும். அவள் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவி. எழுந்து செல்ல எத்தனித்தாள். எப்படி என்று விளக்கச் சொல்கிறாரே…? இத்தனை பேர் கூடி நிற்கும் இந்த அரங்கத்தில் என்னால் தெளிவாகப் பேச முடியுமா…? ஒருவேளை ஏதேனும் தவறாக உளறிக் கொட்டி விட்டால் அனைவரின் நகைப்பிற்கும் ஆளாக வேண்டி வருமே? திவ்யாவிற்கு பயம் வந்தது. உடல் நடுங்கியது. அவள் தயங்கிக் கொண்டிருந்த வேளையில் சித்ரா எழுந்து முன்னால் சென்று விட்டாள். சித்ராவும் இவள் வகுப்புதான்.
“வாரிக்களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும் போரில் நின்று பொலிவாகும்!”- என்று தான் எழுதியதை ஒரு முறை உரக்க வாசித்தவர் “எங்கே சொல் பார்க்கலாம்!”- என்றார்;.
“இது இரட்டுற மொழிதல் அணி வகையைச் சேர்ந்தது! ஒரு சொல் அல்லது தொடரில் இரு பொருட்கள் வரும்படி பாடப்படும் பாடலை இரட்டுற மொழிதல் அணி என்பர்! இப்பாடலில் கூறப்படும் இரு பொருட்கள் யானை மற்றும் வைக்கோல்! இங்கே களம் என்பது யானைக்குப் போர்களம் வைக்கோலுக்கு நெற்களம்! கோட்டை யானைக்கு அரண்மனை கோட்டை வைக்கோலுக்கு நெற்கோட்டை! போர் யானைக்குச் சண்டை வைக்கோலுக்கு வைக்கோல்; போர்! இப்பாடலின் பொருள் போர் களத்தில் சண்டையிடும் யானை அரண்மனைக் கோட்டையில் வைத்துப் பாதுகாக்கப்படும்! நெற்களத்தில் அடிக்கப்படும் வைக்கோல் நெற்கோட்டையில் வைக்கோல் போரில் இருத்தப்படும்! இவ்வாறு இரட்டுறமொழிதல் அணியை சிலேடை அணி என்றும் சொல்வர்;;;;!”- என்று தெளிவுபட பதில் சொன்னாள் சித்ரா.
“ரொம்ப நல்லாச் சொன்ன! உன் பேரென்ன?”- என்று அவளைப் பற்றி விபரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின் மாணவர்கள் பக்கம் திரும்பி
“ஓரிரு வார்த்தைகள் தாய்மொழியில் பேச எழுதவே பலர் தடுமாறும் சூழ்நிலையில் இப்படி ஒரு தெளிவான பதிலை ஒரு சிறுமியிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை!”- என்றவர் தனது கைப்பைiயிலிருந்து ஒரு மசிப்பே னாவை எடுத்து அவளுக்குப் பரிசளித்தார். அதோடு நில்லாமல் அவர் கைதட்டி ஆரம்பித்து வைக்க தலமைஆசிரியர் மற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் என்று ஒட்டுமொத்த அரங்கமும் கைதட்டி அவளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தது.
அப்பா அலுவலகம் விட்டுவந்தார். திவ்யாவின் முகத்தைப் பார்த்தே அவள் அழுதிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டார். “என்ன விஷயம்?”- கேட்டார் அவர். திவ்யா பள்ளியில் நடந்ததைச் சொன்னாள்.
“எனக்கு அவர் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியும்பா! இது எங்க இலக்கணப் பாடப்பகுதில வர்ற செய்யுள்தான்! அம்மாகிட்ட இதை நான் பலமுறை ஒப்பிச்சிருக்கேன்!”- என்றாள் அவள்.
“பிறகு ஏன் பதில் சொல்லல?”- அப்பா கேட்டார். இதற்கு திவ்யாவிடம் இருந்து பதில் வரவில்லை. அமைதியாக இருந்தாள்.
“சரி விடு! இதைப் பெருசா நினைச்சு வருத்தப்படாத! அடுத்த சந்தர்ப்பத்துல பாத்துக்கலாம்!”- என்றார் அவர்.
ஆனால் திவ்யாவால் அதை அத்தனை எளிதில் விட்டுவிட முடியவில்லை. ஒரு ஓரத்தில் அந்த நிகழ்வு அவள் மனத்தை அரித்துக் கொண்டுதான் இருந்தது. சித்ரா எத்தனை பெருமிதத்துடன் மேடையிலிருந்து இறங்கி வந்தாள்? ஒட்டு மொத்த அரங்கமும் கரவொலியில் அதிர்ந்ததே? இந்த பரிசும் பாராட்டும் எனக்குக் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சித்ராவை வகுப்பறையில் பார்க்கும் போதெல்லாம் திவ்யாவின் மனத்தில் பொறாமைத் தீ எழுந்தது. திவ்யா அந்த சம்பவத்தை நினைத்து மனம் புழுங்குகிறாள் என்பதை அப்பா புரிந்து கொண்டார். தக்க சமயத்தில் நல்லது சொல்லி அவளுக்குப் புரிய வைக்கவேண்டும் என அவர் எண்ணிக்கொண்டார்.
ஒருநாள் மாலை வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து அவள் அப்பாவோடு பேசிக் கொண்டிருந்தாள். அப்போது அவளின் தம்பி இரண்டு காட்டு மலர்களைக் கொண்டு வந்து தந்தான்.
“இதைத் தலைல வைச்சுக்கோ அக்கா!”- என்று சொல்லி விட்டுப் போனான். இளம் பச்சைநிறம் வெளிர் நீலநிறம் என இரண்டு பூக்களும் மிக அழகாக இருந்தன. சற்றே பெரியபூக்கள் என்பதால் இரண்டில் ஒன்றை மட்டும் ஒரு சமயத்தில் தலையில் சூடிக் கொண்டால்தான் நன்றாக இருக்கும். திவ்யா பச்சை வண்ணப்பூவை கீழே வைத்து விட்டு நீல வண்ணப்பூவைச் சூடிக்கொண்டாள்.
“ஏன் அது அழகாத்தான இருக்கு? அதை ஏன் தலைல வைச்சுக்கல?”- அப்பா கேட்டார்.
“அழகாத்தான் இருக்கு! ஆனா அதுல வாசனை இல்லையே?”- என்றாள் திவ்யா. அப்பா சிரித்தார். அவர் கேட்டார்.
“திவ்யா என்னைத் தலைல வைச்சுக்கலைன்னு இந்தப் பூ வருத்தப்பட்டா நீ அதை ஏத்துக்குவியா?”
“அதெப்பெடி பூ வருத்தப்படும்?”
“ஒரு பேச்சுக்குத்தான் கேக்குறேன்!”
“இரண்டுல எது பெஸ்டோ அதைத்தான நான் தலைல வைச்சுக்க முடியும்?”
“அப்படீன்னா நிராகரிக்கப்பட்ட பச்சைப்பூதான் நீ! தலைல வைச்சுக்கிட்ட நீலப்பூதான் சித்ரான்னு சொன்னா ஏத்துக்குவியா?”- என்றார் அப்பா.திவ்யா திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.
“என்னப்பா சொல்ல வர்றீங்க நீங்க?”
“முதன்மைக் கல்வி அலுவலர் கேட்ட கேள்விக்கு உனக்கும் பதில் தெரிஞ்சுச்சு! சித்ராவுக்கும் பதில் தெரிஞ்சுச்சு! பூக்கள் பெற்ற நிறம் மாதிரி இது நீங்கள் பெற்ற கல்வி! அவ பதில் சொன்னா நீ பதில் சொல்லலை! நிறத்தை பெற்ற பூக்கள் மணத்தால் பிறரை ஈர்ப்பது மாதிரி இது தான் கற்ற கல்வியை திடம்பட எடுத்துரைப்பது! நிறத்தோடு மணமும் இருந்த பூவை நீ தலைல வைச்சுக்கிட்ட! இது பூவுக்கு நீ கொடுத்த அங்கீகாரம்! சபை கூச்சம் இல்லாம பதில் சொன்ன சித்ராக்கு பரிசும் பாராட்டும் கிடைச்சது! இது அவளுக்குக் கிடைச்ச அங்கீகாரம்! இதுல நீ வருத்தப்படுறதுக்கு என்ன இருக்கு திவ்யா? –என்றார் அப்பா. அவரே சற்று இடைவெளி விட்டு “இதுல இன்னொரு உண்மை என்னன்னா உனக்கு அந்தக் கேள்விக்குப் பதில் தெரியும்ங்குறதே வந்திருந்த விருந்தினருக்குத் தெரியாது!”- என்றார். திவ்யா அமைதியாக இருந்தாள். அவள் சிந்திக்கிறாள் என்பது புரிந்தது.
“சபைக் கூச்சம்ங்குறது எல்லோருக்கும் இருக்குற விஷயம்தான்! இது காலப்போக்குல சரியாயிரும்!’- என்றார் அப்பா.
“நான் பயிற்சி செய்வேன்! விரைவில் மணம்வீசும் மலரைப் போன்று பிறரை எனது கல்வியால் வசீகரிப்பேன்!” – என்று மனத்தில் உறுதி பூண்டாள் திவ்யா.
– 19.09.2015, தினமணி – சிறுவர்மணி
![]() |
எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க... |
