மகாலட்சுமி





(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மோகி திடீரென்று “உம்”மென்று ஆகிவிடுவாள். (ஆகி விடுகிறாளா? ஆகிக்கொள்கிறாளா?) அவள் உம்மணாமூஞ்சி இல்லை; அப்படி இருந்தால் பரவாயில்லை. பிறவியிலேயே அது ஒரு மலர்ச்சியான முகம்.
அவள் உம்மென்று ஆகிவிட்டால் அவனால் தாங்கிக்கொள்ள இயலாது. நிலாவை மேகம் மறைத்த ஒரு மங்கல்போல் அவனுள்ளும் மனசு இருட்டிவிடும்.
எதைக்கொடுக்கிறது, எதைக் கொடுத்தால் அந்த முகத்தில் பிரகாசத்தைத் தரிசிக்கலாம்? இப்படிச் சமயங்களில் அவளை நெருங்கவே தயக்கமாக இருக்கும். பயமாகக்கூட இருக்கும்.
ஒரு காலைமட்டும் ஊன்றி, அதுவும் பெருவிரலைமட்டுமே ஊன்றி நின்றுகொண்டு, மறுகாலை ரட்டணக்கால் போட்டு கைகள் இரண் டையும் தலைக்குமேல் கூப்பி, தபஸ் செய்யும் அர்ச்சுனன் படம் அவன் மனசுக்குள் நிழலாடும். இதழ்நலுங்காமல் சிரித்துக்கொள்வான் உள்ளே.
தாங்கமுடியாத வெக்கை மாறி, சரமாரியாகப் பெய்யும் குளிர்ந்த பெருந்துளி மழையைப்போல் கொஞ்ச நேரத்தில் அவள் குழந்தையை எடுத்துக் கொஞ்ச ஆரம்பிக்குபோது வீடே களைகட்டிவிடும். மோகி சிரித்தால் சூழலே சிரிக்கும். அப்போது அவன் ரப்பர்க் கொடியின் வெடித்த நெற்றிலிருந்து காற்றில் மிதக்கும் பஞ்சுவிதையாகி விடுவான்.
முகத்தில் அவளுக்கு நாடி அமைந்துள்ள விதம் அவள் சிரிக்கும் போது இதுவும் சிரிக்கிறாற்போல் தோன்றும். பெண்களுக்குப் பொது வாக நாடி மட்டும் வடிவாக அமைவது இல்லை. பிரம்மன் இதுவரை எத்தனை பெண்களைப் படைத்தும் இன்னும் அவனுக்குப் பெண் ணுக்கு நாடியை அமைக்கத் தெரியவில்லை. மோகிமாதரி தற்செயலாக அமைந்தால்தான் உண்டு.
மோகியின் மூக்கின் கீழும் மேல்உதட்டுக்கு மத்தியிலும் வெண்டைக்காயில் உள்ளதுபோல் ஒரு அழகிய வடிவான பள்ளம் இருக்கும். சிரிப்பை அடக்கிப் புன்னகையாக்கி, புன்னகைக்குள் சிரிப்பு அடங்காமல் பொங்கும்போது அந்தப் பள்ளம் பார்க்க இன்னும் அழகாய் இருக்கும்.
பாரதநாட்டில் நடக்கும் தொண்ணூற்றாறு திருமணங்களைப் போலவே அவர்களுடையதும் நடந்தது. கல்யாணத்துக்குமுன் மோகியை அவன் பார்த்ததே இல்லை. அவளும் அவனைப் பார்த்ததும் இல்லை. “அம்மியைச் செய்த தச்சன் குழவியையும் எங்காவது செய்து தான் வைத்திருப்பான்” என்ற சொலவடைக்கு ஏற்ப, அவனைப் படைத்த பிரம்மன் மோகியையும் ஒரு ஊரில் செய்துதான் வைத்திருந்தான்.
கல்யாணத்து அன்று பெரும்பாலான மணமக்களுக்குத் தோன்று வதுமாதரியே அவர்களுக்கும் ஒருவரை ஒருவர் எங்கேயோ பார்த்த முகமாகவே தெரிந்தது. இது, மாப்பிள்ளையையும் பெண்ணையும் சிங்காரிக்கிற ஒரேவித முறையினாலும் இருக்கலாம் ஒருவேளை !
நீண்ட நேரச் சடங்குகளினால் ஆயாசம் அடைவதற்குப் பதிலாக மணமக்கள் உற்சாகமே அடைவார்கள். ஆனால்… சந்தர்ப்பம் ஏற்பட்ட போது மோகி தன்னுடைய விரலில் மோதிரத்தைத் திருத்துவதுபோல ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். அப்பொழுது சடங்குகள் முக்காலே அரைக்கால் மும்மா காணிவீசம் முடிவடைந்திருந்தது. சிறிசுகள், பொடிசுகள் அவர்கள் இருவரையும் மொய்த்துக்கொண்டு ஒருவித இன்பத் தொந்தரவுகள் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதுகள் இல்லாமல் இருந்தால் தேவலையே என்றும் இருந்தாலும் தேவலைதான் என்றும் இருந்தது.
மோகியின் தங்கை ஒருத்தி; வயசு எட்டு ஒன்பது இருக்கும், தன் னுடைய அக்கா ‘பெண்ணுக்கு இருக்கும்’ அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். தான் விளையாட்டில் பெண்ணுக்கு இருந்தவிதம் சரிதானா என்றும் இனி விளையாடினால் எப்படி யெல்லாம் இருக் கணும் என்றும் நினைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள்.
மோகி தன் தங்கையிடம் ரகசியக் குரலில், “காலெல்லாம் வலிக் கிறது உக்காந்து, உக்காந்து” என்று சொன்னாள். உடனே அதை இவள் அவனுடைய காதோரம் வந்து “பாவா, அக்காவுக்கு உக்காந்து காலெல் லாம் வலிக்கிறதாம்” என்று சொன்னாள். நெருங்கி உட்கார்ந்திருந்த மோகியிடமே சொல்லுவதுபோல இவளிடம் இருவருக்கும் கேட்கும் தொனியில் “முடிஞ்சுதே; இனி கொஞ்சந்தானே!” என்று சொன்னான். இப்பொழுது அவர்களை ஊஞ்சல் பலகையில் உட்காரவைத்து மெது வாக ஆட்டிக்கொண்டே ஸ்ரீராமனையும் சீதாதேவியையும் வாழ்த்திப் பாடும் தெலுங்குப் பாடல் ஒன்றைப் பாட ஆரம்பிக்கும் வேளை.
இப்படியாக மோகி அந்த வீட்டுக்கு வந்த அன்றே அவனைத் தன் வசம் எடுத்துக்கொண்டாள்.
அவர்களில் பெண்ணுக்குப் பரிசம் போடுகிற வழக்கம்; நிச்சய தாம்பூலத்து அன்று பெண்ணை மாப்பிள்ளைக்கு பேசி முடிவு செய்து தாம்பூலம் மாற்றிக்கொள்வார்கள். பின்னொரு நல்ல நாளில் இரவு நேரத்தில் மாப்பிள்ளை வீட்டாரும் சுற்றத்தாரும் பெண்ணின் வீட்டுக்குப்போய் முடிப்புடன் வாசலில் வந்து நிற்பார்கள். பெண் வீட்டார் அவர்களை ஆரத்தி எடுத்து அவர்களுக்கு இருபுறமும் தரையில் சென்னீர் கொட்டி இந்தச் சென்னீர் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்தது; அதில் பருத்திக் கொட்டையும் கிள்ளிப் போட்ட வெற்றிலைத் துணுக்குகளும் மிதக்கும் – பின்பு வீட்டினுள்ளே அழைத்துக்கொண்டு செல்வார்கள்.
பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் கொண்டுவருகிற பரிச முடிப்பில் அவர்களவர்கள் சக்திக்கு ஏற்ப பொருள்கள் இருக்கும்.
மோகிக்கு மாப்பிள்ளை வீட்டார் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் பத்துப்பவுனில் நகையும் வெற்றிலை, தேங்காய், பூ, பழம், சந்தனம் முதலிய மங்கல வஸ்துக்களோடு பெண்ணுக்கு அவர்கள் தரும் பட்டாடைகளும் அடங்கிய முடிப்பைக் கொடுத்தார்கள்.
முடிப்பை ஏற்றுக்கொண்ட மோகியின் பெற்றோர்கள் மாப்பிள்ளை வீட்டாருக்குப் பருப்புச்சோற்று விருந்து** அளித்தார்கள்.
கல்யாணத்துக்கு முதல்நாள் மோகியை வில்வண்டியில் ஏற்றி அந்தப் ‘பொண்ணுவண்டி’யின் முன்னும் பின்னும் பலவண்டிகள் வர, மாப்பிள்ளையின் ஊருக்கு அழைத்துவந்தார்கள். மாப்பிள்ளைக்குச் சம்பந்தகாரரும் மோகி வீட்டாருக்குத் தாயாதியுமான ஒருவருடைய வீட்டில் பெண்ணையும் அவளைச் சேர்ந்தவர்களையும் இருக்கச் செய்தார்கள்.
முகூர்த்தத்துக்குமுன் பெண்ணைப் பல்லக்கில் ஏற்றி மேளதாளத் தோடு ஊர்வலமாக மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்து கல்யாணம் செய்வித்தார்கள். தாலிகட்டி முடிந்தவுடன் மோகி யின் கணவன் அவளுடைய பாதத்தைத் தொட்டு அம்மியின்மேல் தூக்கிவைத்தான். மணமகள் மோகிக்குப் புரோகிதர் அருந்ததி நட்சத்திரத்தைக் காண்பித்து, சதி அருந்ததியின் கதைச் சுருக்கத்தைத் தெலுங்கில் சொன்னார்.
அவர்கள் கழுத்தில் மணமாலையோடும் கையில் கட்டிய கங்கணத்தோடும் அவர்களுடைய தொழுவுக்குப் பக்கத்தில் நடந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் மோகியின் உடன்பிறந்த தம்பி தார்க்கம்பையும் உழவு வடத்தையும் தனது தோளில் போட்டுக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து வந்தான். அங்கே ஏற்பாட்டின் படி தச்சன் மஞ்சள் பூசிய புதிய ஒரு சிறு கைக்கலப்பை ஒன்றை வைத்துக்கொண்டு நின்றிருந்தான். புரோகிதர் தச்சனிடமிருந்த கலப்பையை வாங்கி புதுமாப்பிள்ளையிடம் கொடுத்தார். அவன் அதை வாங்கித் தரையில் கீய்த்து உழுதான். மோகி அதில் நவ தானியங்களை விதைத்துத் தண்ணீர் தெளித்தாள்
மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில் மூணுமாச விருந்தும் தலை தீபாவளியும் முடிந்தது. இருவரும் அவனுடைய வீட்டிற்குத் திரும்பினார்கள். அப்பொழுது மோகி மசக்கையாக இருந்தாள். புருஷன் வீட்டின் பூரண கவனத்தையே தனது பக்கம் திருப்பி விட்டாள்! வாந்தியும் ஆயாசமும் ஓங்கரிப்பும் உணவு செல்லாமையும், “ஐயோ இப்படியாகிவிட்டாளே; இந்த உடம்பு இதைத் தாங்குமா?” என்று மிக இரக்கம் கொள்ளும்படியாக இருந்தாள்.
கல்யாணத்துக்கு முந்தி அவன் மற்றப் புருஷன்மார்களைப் பார்த்து, “பொண்டாட்டிக்குச் சொல்ற வார்த்தை கேட்கிற பயல்கள்” என்று கேலி செய்தவன்தான். அனேகமாக எல்லாப் பெண்டுகளையும் போலவே மோகியும் நேரத்துக்கு மருந்து மாத்திரை சாப்பிடாதது மட்டு மல்லாமல் மருந்தைப் புறக்கணிக்கும் குணமும் கொண்டவள். ஆகவே அவன்தான் அவளுக்கு நேரம் கண்டு மாத்திரைகள் கொடுக்கவேண்டி யிருந்ததோடு அவளைத் ‘தாங்கவும்’ வேண்டி யிருந்தது. “சாப்டுடா, டேய்” என்று சொல்லுவான்! இப்படி அவளை ஆண்பாலாக்கிக் கொஞ்சுவது இப்படிச் சமயங்களிலும் அந்த ரங்கத்தின்போதும் அவளுக்கும் இதமாக இருக்கும்; அவனுக்கும் சுகமாக இருக்கும்.
மோகியை வீட்டு வேலைகளிலிருந்து விடுவித்தார்கள். அவளு டைய இஷ்டத்துக்காக மட்டும் தோட்ட வேலைகளை பார்க்க அனுமதித்தார்கள். புளித்த பசலைக்கீரை இலைகளையும் சிரிமாவின் தழைகளையும் வண்டல் கரிசல் மண்ணையும் தின்பதற்கு இது வசதியாக இருந்தது.
பல வாரங்கள் உணவு என்ற ‘பிறப்பே’ இல்லாமல் அவள் கரிசல் மண்ணையே தின்று வாழ்ந்ததுதான் ஆச்சரியம். மோகியின் தாய் ‘உண்டாகி’ இருக்கும்போதும் இந்தக் கரிசல் மண்ணையே தின்றாள். மோகியின் பாட்டியும் அப்படியே. இந்த மண், கருவிலேயே அவர்கள் ரத்தத்தில் கலந்துவிடுகிறது.
மெலிந்துபோனாலும் மோகி தெளிவாகவும் கண்களில் பிரகாசமும் கொண்டு விளங்கினாள். இப்பொழுதெல்லாம் அவனுக்கு அவள் அன்னியமாகிவிட்டாளோ என்று தோன்றும். தின்பண்டத் துக்காக ஏங்கும் குழந்தையின் மனநிலையில் அடிக்கடி இருக்கவேண்டி யதிருந்தது அவனுக்கு.
மோகியின் இந்த நடப்புகளையெல்லாம் பாராட்டாமல் சாதாரண மாக நடந்துகொண்ட ஒரே ஆள் அந்த வீட்டில் அவளுடைய அத்தை ஒருத்திதான்! அவளுக்குத் தெரியும் இதெல்லாம்!
ஏழாவது மாசம் மோகியைக் கொண்டுபோய்த் தாய் வீட்டில் விட்டுவிட்ட மூன்று மாதங்களுக்குப்பிறகு, பெண்குழந்தை பிறந்திருப் பதாகத் தாக்கல் வந்தது. வீட்டில், எங்கும் ஒரே கொண்டாட்டம். தலைப்பிள்ளை பெண்ணாகப் பிறக்கவேண்டும் என்ற அவர்களது வழக்கப்படி பெண்குழந்தையே பிறந்துவிட்டது. இந்தப் பூமியின் விவசாய அமைப்புக்கு அவளுடைய உறுதுணையில்லாமல் ஒன்றும் நடக்காது; உழைப்பில் இங்கே பெண் பங்காளி. என்ன குறைவு இனி அவர்களுக்கு.
குழந்தைக்கு மூன்று மாதங்கள் நிறைந்தவுடன் மோகியையும் குழந்தையையும் புருஷன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
மோகி வீட்டாரின் குலதெய்வமான தேசம்மாவின் பெயரையே குழந்தைக்கு இட்டார்கள். அந்தக் குலதெய்வம் பல தலைமுறைகளாக இப்படிப் பல பெண்கள் உருவத்தில் வந்து அவர்கள் குடும்பத்துக்கும் அவர்கள் குலத்தொழிலுக்கும் பாடுபட்டுப் பேருதவி செய்திருக்கிறது.
அதோ ஏழு மாசம் நிறைந்த குழந்தை தேசு ஆனந்தமாகத் தாய் மடியில் அமர்ந்து வயிறு நிறைய அமிர்தப் பால் உண்ணுகிறாள். குழந்தை உண்டதுபோக மீதிப்பாலை மண் சுவரில் பீய்ச்சிவிடுகிறாள் மோகி. பல வெண் நூல் இழைகளாகப் பாய்ந்து மண் சுவரை நனைக்கிறது பால்.
மோகி குழந்தையைக் கொஞ்சுகிறாள். குழந்தை சிரிக்கிறது; தாய் சிரிக்கிறாள். பூமியும் சிரிக்கிறது.
**பருப்புச்சோற்று விருந்து இந்த விருந்தில் சாதத்தில் பருப்பும் நெய்யும் விட்டுப் பரிமாறப்பட வேண்டும். காரம், புளிப்பு இட்ட எதுவும் இடம் பெறக்கூடாது.
– சுதேசமித்திரன், 1972.
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க... |